Old/New Testament
ஆலயம் கட்டும் நேரம் இது
1 அரசனாகிய தரியு ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டாம் ஆண்டு, ஆறாம் மாதம் முதலாம் தேதியிலே, கர்த்தருடைய செய்தி ஆகாய்க்கு வந்தது. இச்செய்தி செருபாபேலுக்கு உரியது. இவன் செயல்த்தியேலின் மகன். யோத்சதாக்கின் மகன் யோசுவா. செருபாபேல் யூதாவின் ஆளுநர், யோசுவா தலைமை ஆசாரியன். இதுதான் செய்தி: 2 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவதற்கான சரியான நேரம் இது அல்ல என்று ஜனங்கள் சொல்கிறார்கள்.”
3 மீண்டும் ஆகாய் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். ஆகாய், 4 “நல்ல வீடுகளில் வாழும் சரியான நேரம் இது என்று ஜனங்களாகிய நீங்கள் நினைக்கின்றீர்கள். நீங்கள் சுவரில் மரப்பலகைகள் பொருத்தப்பட்ட வீடுகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் கர்த்தருடைய வீடு இன்னும் அழிவிலிருக்கிறது. 5 இப்பொழுது, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: என்ன நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்! 6 நீ ஏராளமான விதைகளை விதைத்தாய். ஆனால், நீ குறைந்த அளவு அறுவடையையே பெற்றாய். உன்னிடம் உண்ண உணவு இருக்கும். ஆனால் அதனால் வயிறு நிறையாது. உனக்குக் குடிக்கக் ஏதாவது இருக்கும். ஆனால் முழுமையாகக் குடிக்கப் போதாது. உன்னிடம் குறைந்த அளவு ஆடை அணிய இருக்கும், ஆனால் அவை குளிர்தாங்க உதவாது. நீ குறைந்த பணத்தைச் சம்பாதிப்பாய். ஆனால் உன் பணம் எங்கே போகிறது என்று உனக்குத் தெரியாது. உனது பையில் ஓட்டை விழுந்தது போல் இருக்கும்” என்றார்.
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப்பற்றி சிந்தியுங்கள். 8 மரங்களைக் கொண்டு வருவதற்கு குன்றுகளின் மேல் ஏறுங்கள். ஆலயத்தைக் கட்டுங்கள். பிறகு நான் ஆலயத்தின்மேல் திருப்தி அடைவேன். நான் கனத்தை பெறுவேன்.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “ஜனங்களாகிய நீங்கள் பெரும் அறுவடையை எதிர்பார்த்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அறுவடைப் பொருட்களை எடுக்கப் போகும்போது அங்கே கொஞ்சம்தான் தானியம் இருக்கிறது. எனவே அந்தத் தானியத்தை வீட்டிற்குக் கொண்டுவருகிறீர்கள். பிறகு நான் காற்றை அனுப்புகிறேன். அதனை அது அடித்துச்செல்லும். ஏன் இவை நிகழுகின்றன. ஏனென்றால் நீங்கள் எல்லாரும் அவரவர் வீட்டை கவனித்துக்கொள்ள ஓடிப்போகும்போது எனது வீடு இன்னும் அழிந்த நிலையில் உள்ளது. 10 அதனால்தான் வானம் பனியை வரப்பண்ணாமல் இருக்கிறது. அதனால்தான் பூமி விளைச்சலைத் தராமல் உள்ளது.”
11 கர்த்தர் கூறுகிறார்: “நான் நிலங்களும் குன்றுகளும் வறண்டுபோகும்படிக் கட்டளை கொடுத்தேன். தானியம், புதிய திராட்சைரசம், ஒலிவ எண்ணெய், பூமி உற்பத்தி செய்கிற அனைத்தும் அழிக்கப்பட்டன. அனைத்து ஜனங்களும், அனைத்து விலங்குகளும் பலவீனமாவார்கள். மனிதரின் அனைத்து உழைப்பும் பயனற்றுப்போகும்.”
புதிய ஆலயத்தில் வேலைகள் தொடங்குகின்றன
12 தேவனாகிய கர்த்தர் செயல்த்தியேலின் குமாரானாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் தலைமை ஆசாரியனும் கேட்க, பேசிட ஆகாயை அனுப்பினார். எனவே இம்மதனிதர்களும், அனைத்து ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய குரலுக்கும், அவர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவி கொடுத்தார்கள். ஜனங்கள் கர்த்தருக்கு முன்னால் பயந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
13 இச்செய்தியை ஜனங்களுக்குச் சொல்ல தேவனாகிய கர்த்தர் அனுப்பிய தூதுவன்தான் ஆகாய். கர்த்தர், “நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார்.
14 பிறகு தேவனாகிய கர்த்தர் ஜனங்கள் ஆலயம் கட்டுவதைக் குறித்து உற்சாகப்படும்படிச் செய்தார். செயல்த்தியேலின் மகனாகிய செருபாபேல் யூதாவின் ஆளுநராக இருந்தான். கர்த்தர் அவனையும் பரவசப்படும்படிச் செய்தார். யோத்சதாக்கின் மகனான யோசுவா தலைமை ஆசாரியனாக இருந்தான். கர்த்தர் அவனையும் பரவசப்படும்படிச் செய்தார். கர்த்தர் அனைத்து ஜனங்களையும் ஆலயம் கட்டு வதுபற்றி பரவசப்படும்படிச் செய்தார். எனவே அவர்களின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டத்தொடங்கினார்கள். 15 அவர்கள் தரியு அரசனின் இரண்டாம் ஆண்டு ஆறாம் மாதம் இருபத்தி நான்காம் நாள் வேலைச் செய்யத் தொடங்கினார்கள்.
கர்த்தர் ஜனங்களை உற்சாகப்படுத்துகிறார்
2 ஏழாவது மாதத்தின் இருபத்தியோராம் நாளன்று, கர்த்தரிடமிருந்து ஆகாய்க்கு ஒரு செய்தி வந்தது. 2 யூதாவின் ஆளுநரும், செயல்த்தியேலின் மகனுமான செருபாபேலுக்கும் தலைமை ஆசாரியனான யோத்சதாக்கின் மகன் யோசுவாவுக்கும், மற்றுமுள்ள அனைத்து ஜனங்களுக்கும் இவற்றைச் சொல்: 3 “உங்களில் எத்தனை பேர் இந்த ஆலயத்தைப் பார்த்து, ஏற்கெனவே அழிக்கப்பட்ட ஆலயத்தோடு ஒப்பிடுவீர்கள்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் முதல் ஆலயத்தோடு ஒப்பிடும்போது இந்த ஆலயம் ஒன்றுமில்லை என்று எண்ணுகிறீர்களா? 4 ஆனால் இப்பொழுது, ‘செருபாபேலே, அதைரியப்பட வேண்டாம்!’ என்று கர்த்தர் கூறுகிறார். ‘தலைமை ஆசாரியனாகிய யோத்சதாக்கின் மகனாகிய யோசுவாவே, அதைரியப்பட வேண்டாம்! அனைத்து ஜனங்களே, மனம் தளர வேண்டாம். இந்த வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள். ஏனென்றால் நான் உங்களோடு இருக்கிறேன்.’ சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
5 “‘நீங்கள் எகிப்தை விட்டு வரும்போது நான் உங்களோடு ஒரு உடன்படிக்கை செய்தேன். நான் எனது வாக்குறுதியைக் காப்பாற்றியிருக்கிறேன். எனது ஆவி உங்களோடு இருக்கிறது. எனவே அச்சப்பட வேண்டாம்!’ 6 ஏனென்றால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறார், ‘கொஞ்ச காலத்திற்குள்ளே, நான் மீண்டும் எல்லாவற்றையும் அசையச் செய்வேன். நான் பரலோகத்தையும் பூமியையும் அசையச் செய்வேன். நான் கடலையும் வறண்ட நிலத்தையும் அசையச் செய்வேன். 7 நான் தேசங்களையும் அசையச் செய்வேன். ஒவ்வொரு தேசத்திலிருந்தும் செல்வத்துடன் ஜனங்கள் உன்னிடம் வருவார்கள். பிறகு நான் இந்த ஆலயத்தை மகிமையால் நிரப்புவேன்.’ சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறிக் கொண்டிருக்கிறார். 8 அவர்களின் வெள்ளி முழுவதும் எனக்குச் சொந்தமானது. தங்கம் முழுவதும் எனக்குரியது. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறிக்கொண்டிருக்கிறார். 9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், ‘இந்த ஆலயம் முந்தைய ஆலயத்தைவிட மிக அழகுள்ளதாகவும், மாட்சிமை பொருந்தியதாகவும் இருக்கும். நான் இந்த இடத்துக்குச் சமாதானத்தைக் கொண்டுவருவேன்.’ சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறிக்கொண்டிருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக்கொள்!”
வேலை தொடங்கியிருக்கிறது ஆசீர்வாதம் வரும்
10 பெர்சியாவின் அரசனான தரியுவின் இரண்டாம் ஆண்டில் ஒன்பதாம் மாதம் இருபத்தி நான்காம் தேதியில், ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தருடைய வார்த்தை வந்தது.
11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், நீ ஆசாரியர்களிடத்தில் நியாயப்பிரமாணம் இதைப் பற்றி என்ன சொல்லுகிறது என்று கேட்க கட்டளையிடுகிறார். 12 “ஒருவேளை ஒருவன் தன் ஆடை மடிப்புக்குள் கொஞ்சம் இறைச்சியைக் கொண்டுபோகிறான். அந்த இறைச்சி பலிக்குரிய பகுதியாகும். எனவே அது பரிசுத்தமாகிறது. அந்த ஆடைகள் கொஞ்சம் அப்பத்தையோ, சமைத்த உணவையோ, திராட்சை ரசம், எண்ணெய் அல்லது மற்ற உணவையோ தொட்டால் பரிசுத்தமாகுமா? ஆடைப்பட்ட அந்தப் பொருட்களும் பரிசுத்தமாகுமா?”
ஆசாரியர்கள், “இல்லை” என்றனர்.
13 பிறகு ஆகாய், “ஒருவன் மரித்த உடலைத் தொட்டால் பின்னர் அவன் தீட்டாகிறான். இப்பொழுது, அவன் எதையாவது தொட்டால், அவையும் தீட்டாகுமா?” என்று கேட்டான்.
ஆசாரியர், “ஆமாம், அவையும் தீட்டாகும்” என்றனர்.
14 பிறகு ஆகாய், “தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘இந்த ஜனங்களைக் குறிக்கும் இது உண்மையாகும். அவர்கள் எனக்கு முன்னால் தூய்மையும் பரிசுத்தமும் இல்லாதவர்கள். எனவே அவர்கள் கைகளால் தொடுகிற எதுவுமே தீட்டாகும. பலிபீடத்திற்கு கொண்டு வருகிற எதுவுமே தீட்டாகும்.
15 “‘இன்றைக்கு முன்பு நடந்த இவற்றைப்பற்றி நினைத்துப்பாருங்கள். கர்த்தருடைய ஆலயத்தை நீங்கள் கட்டுவதற்கு முன் உள்ளதை நினைத்துப் பாருங்கள். 16 ஜனங்கள் 20 மரக்கலம் தானியம் இருக்குமென்று விரும்பினார்கள். ஆனால் அம்பாரத்தில் 10 மரக்கலம் தானியம்தான் இருந்தது. ஜனங்கள் 50 ஜாடி திராட்சைரசம் இருக்குமென்று விரும்பினார்கள். ஆனால் 20 ஜாடி இரசமே ஆலையின் தொட்டியில் இருந்தது. 17 ஏனென்றால், நான் உங்களைத் தண்டித்தேன். உங்கள் பயிர்களை அழிப்பதற்குரிய நோய்களை அனுப்பினேன். நான் கல் மழையை உங்கள் கைகளால் செய்தவற்றை அழிக்க அனுப்பினேன். நான் இவற்றைச் செய்தேன். ஆனால் நீங்கள் இன்னமும் என்னிடம் வரவில்லை.’ கர்த்தரே இவற்றைச் சொன்னார்” என்றான்.
18 கர்த்தர், “இன்று ஒன்பதாம் மாதம் இருபத்திநான்காம் தேதி. நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டு முடித்திருக்கிறீர்கள். எனவே இன்றிலிருந்து என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள். 19 அம்பாரத்தில் இன்னும் தானியம் இருக்கிறதா? இல்லை. திராட்சை கொடிகள், அத்தி மரங்கள், மாதளஞ் செடிகள், ஒலிவமரங்கள் ஆகியவற்றைப் பாருங்கள். அவை பழங்களைத் தருகின்றனவா? இல்லை. ஆனால் இன்று முதல் நான் உங்களை ஆசீர்வதிப்பேன்!” என்றார்.
20 இன்னொரு செய்தி கர்த்தரிடமிருந்து ஆகாய்க்கு இம்மாதத்தின் இருபத்திநான்காம் நாள் வந்தது. இதுதான் செய்தி: 21 “யூதாவின் ஆளுநரான செருபாபேலிடம் செல்லுங்கள். நான் பரலோகத்தையும், பூமியையும் அசைப்பேன் என்று அவனிடம் சொல்லுங்கள். 22 நான் பல அரசர்களையும் அரசுகளையும் தூக்கி எறிவேன். இவ்வரசுகளின் வலிமையை நான் அழித்துப்போடுவேன். நான் இரதங்களையும், அதில் பயணம் செய்வோரையும் அழித்துப்போடுவேன். அந்தப் படை வீரர்கள் இப்பொழுது நண்பர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வரும் நாட்களில் எதிரிகளாக வாளினால் ஒருவரையொருவர் கொன்றுப் போடுவார்கள். 23 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறிக் கொண்டிருக்கிறார். செயல்த்தியேலின் மகனாகிய செருபாபேலே, நீ என்னுடைய வேலைக்காரன். நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்நேரத்தில், நான் உன்னை முத்திரை மோதிரமாகச் [a] செய்வேன். நான் இவற்றைச் செய்திருக்கிறேன் என்பதற்கு நீயே அத்தாட்சியாக இருப்பாய்!” என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொன்னார்.
மிருகத்தின்மேல் பெண்மணி
17 ஏழு தூதர்களில் ஒரு தூதன் வந்து என்னிடம் பேசினான். ஏழு கிண்ணம் வைத்திருந்த ஏழு தூதர்களில் இத்தூதனும் ஒருவன். அவன், “வா. ஒரு பிரசித்தி பெற்ற வேசிக்கு வரப்போகும் தண்டனையை உனக்குக் காட்டுவேன். அவள் திரளான தண்ணீர்களின்மேல் உட்கார்ந்திருக்கிறவள். 2 பூமியில் உள்ள அரசர்கள் அந்த வேசியோடு பாவம் செய்தார்கள். அவளது வேசித்தனமாகிய மதுவால் உலகில் உள்ள மக்கள் நிலைதடுமாறியவர்கள் ஆனார்கள்” என்றான்.
3 ஆவியானவரால் என்னைப் பாலைவனத்துக்கு அத்தூதன் கொண்டுபோனான். அங்கே ஒரு பெண் ஒரு சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மிருகத்தின்மேல் தீய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன. 4 இரத்த வண்ணத்தில் சிவப்பும் இரத்தாம்பரமுமான ஆடை அந்தப் பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டது. அவள் பொன்னாலும் நகைகளாலும், முத்துக்களாலும் தன்னை அலங்கரித்திருந்தாள். அவள் கையில் ஒரு பொன் கோப்பையை வைத்திருந்தாள். இக்கோப்பை அருவருப்பாலும், வேசித்தனமாகிய அசிங்கத்தாலும் நிறைந்திருந்தது. 5 அவளது நெற்றியில் அவளுக்குரிய பட்டப்பெயர் எழுதப்பட்டிருந்தது. அப்பட்டப் பெயருக்கு ஒரு மறைபொருளும் உண்டு. எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான்:
மகா பாபிலோன் வேசிகளுக்கும்
பூமியில் உள்ள
அருவருப்புகளுக்கும் தாய்!
6 அப்பெண் குடித்திருந்ததை நான் பார்த்தேன். அவள் தேவனின் பரிசுத்தமான மக்களின் இரத்தத்தாலும், இயேசுவின் சாட்சிகளின் இரத்தத்தாலும் நிலைதடுமாறி இருந்தாள்.
அவளைப் பார்த்தபோது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. 7 அப்போது தூதன் என்னைப் பார்த்து, “ஏன் அதிசயப்படுகிறாய்? நான் இவளுடைய இரகசியத்தையும், இவளைச் சுமக்கிற ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் கொண்ட அம்மிருகத்தின் இரகசியத்தையும் உனக்குக் கூறுகிறேன். 8 நீ கண்ட மிருகம் முன்பொரு காலத்தில் உயிருடன் இருந்தது. ஆனால் இப்போது அது உயிருடன் இல்லை. அது உயிரடைந்து அடித்தளமற்ற பாதாளத்தில் இருந்து ஏறி வந்து அழிவை நோக்கிப் போகிறது. இந்த உலகத்தில் வாழும் மக்கள் இம்மிருகத்தைக் காணும்போது ஆச்சரியப்படுவார்கள். காரணம் இது ஒரு காலத்தில் உயிரோடு இருந்தது பின் இராமல் போனது. ஆனால், மீண்டும் வரப்போகிறது. இம்மக்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் உலகம் தொடங்கின நாள் முதல் எழுதப்படாமல் இருக்கிறது.
9 “இதைப் புரிந்துகொள்ள உனக்கு ஞானமுள்ள மனம் வேண்டும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்துகொண்டிருக்கிற ஏழு மலைகள் ஆகும். அவை ஏழு அரசர்களுமாகும். 10 இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான். இன்னொருவன் இன்னும் வரவில்லை. அவன் வந்த பிறகு கொஞ்ச காலம் தான் உயிரோடு இருப்பான். 11 இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாம் அரசனாவான். அவன் அந்த ஏழில் ஒருவனாக இருந்து அழிவை நோக்கிச் செல்வான்.
12 “நீ பார்த்த பத்துக் கொம்புகளும் பத்து அரசர்களாகும். இந்தப் பத்து பேரும் இன்னும் தம் இராஜ்யங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை. எனினும் இந்த மிருகத்துடன் சேர்ந்து ஒரு மணி நேரம் ஆள்வதற்கு உரிய அதிகாரத்தைப் பெற்றுள்ளார்கள். 13 இவர்கள் ஒரே நோக்கம் உடையவர்கள். அவர்கள் தம் சக்தியையும் அதிகாரத்தையும் அந்த மிருகத்துக்குக் கொடுப்பார்கள். 14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடன் போர் செய்வார்கள். ஆனால் இவர்களை ஆட்டுக்குட்டியானவர் தோற்கடிப்பார். ஏனென்றால் அவர் கர்த்தர்களின் கர்த்தர், அரசர்களின் அரசர். அவர் தாம் அழைத்தவர்களாகிய தம்முடைய தேர்ந்தெடுத்தவர்களோடும், நம்பிக்கைக்குரியவர்களோடும் கூட அவர்களைத் தோற்கடிப்பார்” என்று சொன்னான்.
15 பிறகு அந்தத் தூதன் என்னிடம், “அந்த வேசி உட்கார்ந்திருக்கிற நீர்நிலைகளைப் பார்த்தாய் அல்லவா. அந்த நீர்நிலைகள் தான் உலகத்தில் உள்ள மக்கள், குடிகள், தேசங்கள், மொழிகளாக இருக்கின்றன. 16 நீ பார்த்த அந்த மிருகமும் அதன் பத்துக் கொம்புகளும் அந்த வேசியை வெறுப்பர். அவளிடம் உள்ள அனைத்தையும் அவர்கள் பறித்துக்கொண்டு அவளை நிர்வாணமாக விட்டுவிடுவர். அவர்கள் அவளது உடலைத் தின்பார்கள். அவர்கள் அவளை நெருப்பால் சுட்டெரிப்பார்கள். 17 தன் குறிக்கோளை நிறைவேற்ற, அந்த பத்துக் கொம்புகளும் விருப்பம் கொள்ள தேவன் காரணமானார். ஆளுவதற்குரிய அவர்கள் அதிகாரத்தை அம்மிருகத்துக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டனர். தேவன் சொன்னவை நிறைவேறும் காலம்வரை அவர்கள் ஆளுவார்கள். 18 பூமியின் அரசர்கள் மீது அரசாள்கிற மகா நகரமானது நீ பார்த்த பெண்ணாகும்” என்று சொன்னான்.
2008 by World Bible Translation Center