Old/New Testament
வெட்டுக்கிளிகளின் தரிசனம்
7 கர்த்தர் என்னிடம் இதனைக் காட்டினார். அரசனின் முதல் அறுவடைக்குப் பின் இரண்டவாது விளைச்சல் தொடங்குகிற காலத்தில் அவர் வெட்டுக்கிளிகளை உருவாக்கினார். 2 வெட்டுக்கிளிகள் நாட்டிலுள்ள புல் அனைத்தையும் தின்றன. அதற்குப் பிறகு நான், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, உம்மைக் கெஞ்சுகிறேன். எங்களை மன்னியும்! யாக்கோபு உயிர்ப்பிழைக்க முடியாது. அவன் மிகவும் சிறியவன்!” என்று சொன்னேன்.
3 பிறகு கர்த்தர் இதைப்பற்றி அவரது மனதை மாற்றினார். கர்த்தர், “அந்த காரியம் நடைபெறாது” என்றார்.
நெருப்பின் தரிசனம்
4 எனது கர்த்தராகிய ஆண்டவரே, என்னிடம் இவற்றைக் காட்டினார். நான் அக்கினியாலே நியாயத்தீர்ப்புக்காகக் கூப்பிடுகிற தேவனாகிய கர்த்தரை பார்த்தேன். நெருப்பு பெரிய ஆழியை அழித்தது. நெருப்பு நாட்டை அழிக்கத் தொடங்கியது. 5 ஆனால் நான், “தேவனாகிய கர்த்தாவே, நிறுத்தும், நான் உம்மைக் கெஞ்சுகிறேன். யாக்கோபு உயிரோடு வாழ முடியாது. அவன் மிகவும் சிறியவன்!” என்றேன்.
6 பிறகு கர்த்தர் இதைப்பற்றி தம் மனதை மாற்றிக்கொண்டார். தேவனாகிய கர்த்தர், “அந்தக் காரியம் நடைபெறாது” என்றார்.
தூக்குநூலின் தரிசனம்
7 கர்த்தர் எனக்கு இதனைக் காட்டினார். கர்த்தர் ஒரு சுவரின் பக்கத்தில் தூக்கு நூலைத் தம் கரத்தில் பிடித்துக்கொண்டு நின்றார். (அச்சுவர் தூக்கு நூலினால் குறிக்கப்பட்டிருந்தது) 8 கர்த்தர், “ஆமோஸ், என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார்.
நான், “ஒரு தூக்கு நூல்” என்றேன்.
பிறகு என் ஆண்டவர், “பார், என் இஸ்ரவேல் ஜனங்களிடம் தூக்கு நூலை நான் விடுவேன். நான் அவர்களது ‘கோணல் தன்மை’ இனிமேலும் பரிசோதனையைக் கடந்து செல்ல விடமாட்டேன். நான் அந்தக் கெட்ட பகுதிகளை நீக்குவேன். 9 ஈசாக்கின் மேடைகள் அழிக்கப்படும். இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் கற்குவியல்கள் ஆக்கப்படும். நான் யெரோபெயாம் குடும்பத்தை வாளால் தாக்கிக் கொல்வேன்” என்றார்.
அமத்சியா, ஆமோசைத் தடுக்க முயல்கிறான்
10 பெத்தேலின் ஆசாரியன் அமத்சியா இஸ்ரவேலின் அரசனான யெரோபெயாமுக்கு இச்செய்தியை அனுப்பினான். “ஆமோஸ் உனக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டுகிறான். அவன், இஸ்ரவேல் உனக்கு எதிராகப் போராட முயற்சி செய்கிறான். இந்த நாடு அவனது வார்த்தைகளையெல்லாம் சகித்துக்கொள்ளாது. 11 ஆமோஸ், ‘யெரொபெயாம் வாளால் கொல்லப்படுவான். இஸ்ரவேல் ஜனங்கள் அவர்களது நாட்டிலிருந்து சிறைகளாகச் செல்வார்கள்’” என்று சொல்லியிருக்கிறான்.
12 அமத்சியாவும் ஆமோஸிடம் சொன்னான்: “தீர்க்கதரிசியே போ, யூதாவுக்குப் போய் அங்கு சாப்பிடு. அங்கே உனது பிரச்சாரத்தைச் செய். 13 ஆனால் இனிமேல் பெத்தேலில் தீர்க்கதரிசனம் சொல்லாதே. இது யெரோபெயாமின் பரிசுத்தமான இடம். இது இஸ்ரவேலின் ஆலயம்!”
14 பிறகு ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதில் சொன்னான். “நான் தொழில்ரீதியான தீர்க்கதரிசி இல்லை. நான் தீர்க்கதரிசியின் குடும்பத்திலிருந்து வரவில்லை. நான் மந்தையைப் பாதுகாக்கிறவன். நான் காட்டத்தி மரங்களைக் கவனித்து வருபவன். 15 நான் ஒரு மேய்ப்பன், நான் மந்தையின் பின்னால் போகிறபோது கர்த்தர் என்னை அழைத்தார். கர்த்தர், ‘போ, எனது இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூறு’ என்று என்னிடம் சென்னார். 16 எனவே கர்த்தருடைய செய்தியைக் கேள், ‘இஸ்ரவேலுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டாம். ஈசாக்கின் குடும்பத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யாதே’ என்று நீ சொல்கிறாய். 17 ஆனால் கர்த்தர் கூறுகிறார்: ‘உன் மனைவி நகரத்தில் விபச்சாரி ஆவாள். உனது மகன்களும் மகள்களும் வாளால் கொல்லப்படுவார்கள். மற்ற ஜனங்கள் உனது நாட்டை எடுத்து தங்களுக்குள் பகிர்ந்துகொள்வார்கள். நீ அயல் நாட்டில் மரணமடைவாய். இஸ்ரவேல் ஜனங்கள் நிச்சயமாக இந்த நாட்டை விட்டுச் சிறையெடுக்கப்படுவார்கள்.’”
பழுத்த கனியின் தரிசனம்
8 கர்த்தர் இதனை எனக்குக் காட்டினார். நான் கோடைகால கனியுள்ள கூடையைப் பார்த்தேன். 2 “ஆமோஸ் நீ என்ன பார்க்கிறாய்?” என்று என்னிடம் கேட்டார்.
நான், “ஒரு கோடைக்கனியுள்ள கூடை” என்றேன்.
பிறகு கர்த்தர் என்னிடம், “எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு முடிவு வந்துவிட்டது. இனி அவர்களின் பாவங்களை நான் கவனிக்காமல் விடமாட்டேன். 3 ஆலயப் பாடல்கள் மரணப் பாடல்களாக மாறும். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை கூறினார். எல்லா இடங்களிலும் மரித்த உடல்கள் கிடக்கும். மௌனமாக, ஜனங்கள் மரித்த உடல்களை எடுத்துப் போய் குவியலாக எறிவார்கள்” என்றார்.
இஸ்ரவேல் வியாபாரிகள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்கள்
4 எனக்குச் செவி கொடுங்கள்! நீங்கள் உதவியற்ற ஜனங்கள் மீது நடக்கிறீர்கள்:
நீங்கள் இந்த நாட்டிலுள்ள ஏழை ஜனங்களை அழிக்க முயற்சி செய்கிறீர்கள்.
5 வியாபாரிகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்:
“நாங்கள் தானியம் விற்க அமாவாசை எப்பொழுது முடியும்?
நாங்கள் கோதுமையை விற்கக் கொண்டு வர
ஓய்வுநாள் எப்பொழுது முடியும்?
எங்களால் விலையை ஏற்றி அளவைக் குறைக்க முடியும்.
அளவுக் கருவிகளை நமக்கு அதிகம் லாபம் கிடைக்கிற விதத்தில் மாற்றி ஜனங்களை ஏமாற்றுவோம்.
6 ஏழை ஜனங்களால் தம் கடன்களைச் செலுத்த முடியாது,
எனவே நாங்கள் அவர்களை அடிமைகளாக வாங்குவோம்.
நாங்கள் ஒரு ஜோடி பாதரட்சைக்குரிய பணத்தால்
அந்த உதவியற்ற ஜனங்களை வாங்குவோம்.
ஓ, நாங்கள் நிலத்தில் சிதறிக் கிடக்கிற
கோதுமைகளை விற்க முடியும்.”
7 கர்த்தர் ஒரு வாக்குறுதி செய்தார். அவர் யாக்கோபின் பெருமை, என்ற தமது நாமத்தை, பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார்.
“நான் அந்த ஜனங்கள் செய்தவற்றை மறக்கமாட்டேன்.
8 அவற்றால் முழு நாடும் நடுங்கும்.
இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும்
மரித்துப்போனவர்களுக்காக அழுவார்கள்.
முழு நாடும் எகிப்திலுள்ள நைல் நதியைப் போன்று உயர்ந்து தாழும்.
இந்த நாடு தடுமாறிப் போகும்.”
9 கர்த்தர் இவற்றையும் கூறினார்:
“அந்த வேளையில் நான் சூரியனை நடுப்பகலில் மறையச் செய்வேன்.
நான் பகல் வேளையில் பூமியை இருளச் செய்வேன்.
10 நான் உங்கள் விடுமுறை நாட்களை மரித்தவர்களுக்காக ஒப்பாரி வைக்கும் நாளாக்குவேன்.
உங்கள் பாடல்கள் எல்லாம் மரித்த ஜனங்களுக்காகப் பாடப்படும் சோகப் பாடல்களாகும்.
நான் ஒவ்வொருவர் மீதும் துக்கத்திற்கான ஆடையை அணிவிப்பேன்.
நான் எல்லாத் தலைகளையும் வழுக்கையாக்குவேன்.
நான், மரித்துப்போன ஒரே மகனுக்காக அழும் ஒப்பாரியைப் போன்று ஆக்குவேன்.
இது ஒரு மிகவும் கசப்பான முடிவாயிருக்கும்.”
தேவனுடைய வார்த்தை கிடைக்காத கொடிய பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது
11 கர்த்தர் கூறுகிறார்:
“பார், தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்.
ஜனங்கள் அப்பத்துக்காகப் பசித்திருக்கமாட்டார்கள்.
தண்ணீருக்காகத் தவித்திருக்கமாட்டார்கள்.
இல்லை, கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தைகளுக்காக ஜனங்கள் பசியோடு இருப்பார்கள்.
12 ஜனங்கள் சவக்கடலிலிருந்து மத்தியத் தரைக் கடலுக்கும்
வடக்கிலிருந்து கிழக்குக்கும் அலைவார்கள்.
ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்காக
அங்கும் இங்கும் அலைவார்கள்.
ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள்.
13 அந்த நேரத்தில் அழகான ஆண்களும் பெண்களும் தாகத்தால்
பலவீனம் அடைவார்கள்.
14 அந்த ஜனங்கள் சமாரியாவின் பாவத்தின் பேரில் வாக்குறுதி செய்தனர்.
அவர்கள், ‘தாணே, உன் தேவனுடைய உயிரின் மேல் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள்.
மேலும் அவர்கள்,
‘பெயர்செபாவின் தேவனுடைய உயிரின்மேல் நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் வீழ்வார்கள்.
அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.”
பலிபீடத்தின் அருகில் கர்த்தர் நிற்கும் தரிசனம்
9 நான் என் ஆண்டவர் பலிபீடத்தின் அருகில் நிற்பதைக் கண்டேன்.
அவர், “நீ, வாசல் நிலைகள் அசையும்படி தூண்களை அடித்து,
அவற்றை அவர்கள் எல்லாருடைய தலையின் மேலும் விழ உடைத்துப்போடு.
ஜனங்களில் எவராவது உயிரோடு மீந்தால், பிறகு நான் அவர்களை வாளால் கொல்வேன்.
ஒருவன் வெளியே ஓடிவிடலாம்.
ஆனாலும் அவன் தப்பமுடியாது.
ஜனங்களில் ஒருவரும் தப்ப இயலாது.
2 அவர்கள் தரையில் ஆழமாகத் தோண்டிப் போனாலும்
நான் அவர்களை அங்கிருந்து வெளியே எடுப்பேன்.
அவர்கள் வானம் வரை ஏறிப்போனாலும்
நான் அவர்களை அங்கிருந்து தரைக்குக் கொண்டு வருவேன்.
3 அவர்கள் கர்மேல் மலையின் உச்சியில் ஒளிந்தாலும் நான் அவர்களை அங்கே காண்பேன்.
நான் அவர்களை அங்கிருந்து எடுப்பேன்.
அவர்கள் என்னிடமிருந்து ஓடிக் கடலின் ஆழத்திற்குப் போனாலும்
நான் பாம்புக்கு கட்டளையிடுவேன்,
அது அவர்களைக் கடிக்கும்.
4 அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் பகைவர்களால் கொண்டு செல்லப்பட்டால்
நான் வாளுக்குக் கட்டளையிடுவேன்.
அது அங்கே அவர்களைக் கொல்லும்.
ஆம் நான் அவர்களைக் கவனிப்பேன்.
ஆனால் நான் அவர்களுக்குத் துன்பம் தரும் வழிகளைக் கொடுப்பதற்கே பார்ப்பேனேயல்லாமல் நன்மையைத்தருவதற்கல்ல” என்றார்.
தண்டனை ஜனங்களை அழிக்கும்
5 எனது சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் பூமியைத் தொட அது உருகும்.
பிறகு நாட்டில் உள்ள ஜனங்கள் எல்லோரும் மரித்துப்போன ஜனங்களுக்காக அழுவார்கள்.
நாடானது எகிப்தின் நைல் நதி போன்று உயர்ந்து தாழும்.
6 கர்த்தர் ஆகாயங்களுக்கு மேல் தனது உயர்ந்த அறைகளைக் கட்டினார்.
அவர் பூமிக்குமேல் தன் ஆகாயத்தை வைத்தார்.
அவர் கடலின் தண்ணீரை அழைத்து
பூமியின் மேல் மழையாக அதனைக் கொட்டுகிறார்.
யேகோவா என்பது அவரது நாமம்.
இஸ்ரவேல் அழியும் என்று கர்த்தர் வாக்குறுதியளிக்கிறார்
7 கர்த்தர் இதனைச் சொல்கிறார்:
“இஸ்ரவேலே நீ எனக்கு எத்தியோப்பியர்களைப் போன்றிருக்கிறாய்.
நான் இஸ்ரவேலரை எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்தேன்.
நான் கப்தோரிலிருந்து பெலிஸ்தியரைக் கொண்டு வந்தேன்.
கீரிலிருந்து சீரியரைக்கொண்டு வந்தேன்.”
8 எனது கர்த்தராகிய ஆண்டவர் பாவமுள்ள இராஜ்யத்தை (இஸ்ரவேல்) கவனித்துக் கொண்டிருக்கிறார். கர்த்தர் சொன்னார்:
“பூமியின் முகத்திலிருந்து இஸ்ரவேலர்களைத் துடைப்பேன்.
ஆனால் நான் யாக்கோபின் குடும்பத்தை முழுமையாக அழிக்கமாட்டேன்.
9 நான் இஸ்ரவேல் நாட்டை அழிப்பதற்குக் கட்டளை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நான் இஸ்ரவேல் ஜனங்களை அனைத்து நாடுகளிலும் சிதறவைப்பேன்.
ஆனால் இது ஒருவன் மாவை ஜல்லடையில் சலிப்பது போன்றது.
அவன் ஜல்லடையில் சலிக்கும்போது, நல்ல மாவு கீழே விழுந்துவிடும்,
ஆனால் கோதுமை உமி பிடிபடும். யாக்கோபின் குடும்பத்திற்கும் இவ்விதமாகவே இருக்கும்.
10 “என் ஜனங்களிலுள்ள பாவிகள்,
‘நமக்கு எந்தக் கேடும் ஏற்படாது’ என்கிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் அனைவரும் வாளால் கொல்லப்படுவார்கள்.”
இராஜ்யத்தை மீண்டும் நிறுவுவதாக தேவன் வாக்குறுதியளிக்கிறார்
11 “தாவீதின் கூடாரம் விழுந்திருக்கிறது.
ஆனால் அந்நேரத்தில், நான் மீண்டும் அவன் கூடாரத்தை அமைப்பேன்.
நான் சுவர்களில் உள்ள துவாரங்களைச் சரிசெய்வேன்.
நான் அழிந்துபோன கட்டிடங்களை மீண்டும் கட்டுவேன். நான் அவற்றை முன்பு இருந்தது போன்று கட்டுவேன்.
12 பிறகு ஏதோமில் உயிருடன் விடப்பட்டவர்களும்,
என் நாமத்தால் அழைக்கப்பட்ட எல்லோரும் கர்த்தரிடம் உதவிக்காக வருவார்கள்.”
கர்த்தர் அவற்றைச் சொன்னார்,
அவர் அவை நடக்கும்படிச் செய்வார்.
13 கர்த்தர் கூறுகிறார்: “நிலத்தை உழுகிறவன்,
அறுவடை செய்பவனை முந்திச் செல்லும் காலம் வரும்.
திராட்சை ஆலையை வைத்திருப்பவன் திராட்சை பயிரிட்டு பழங்களைப் பறிப்பவனைத் தேடிவரும் காலம் வரும்.
இனிய மதுவானது குன்றுகளிலும்
மலைகளிலும் கொட்டும்.
14 இஸ்ரவேலே நான் என் ஜனங்களை
அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வருவேன்.
அவர்கள் அழிந்த நகரங்களை மீண்டும் கட்டுவார்கள்.
அவர்கள் அந்நகரங்களில் வாழ்வார்கள்.
அவர்கள் திராட்சைகளைப் பயிரிடுவார்கள்.
அவர்கள் அவற்றிலிருந்து வரும் மதுவை குடிப்பார்கள்.
அவர்கள் தோட்டங்களைப் பயிரிடுவார்கள்.
அவர்கள் அவற்றிலுள்ள அறுவடையை உண்பார்கள்.
15 நான் என் ஜனங்களை அவர்கள் நிலத்தில் நாட்டுவேன்.
அவர்கள் மீண்டும் பிடுங்கப்படமாட்டார்கள்.
அவர்கள் நான் கொடுத்த நாட்டிலேயே இருப்பார்கள்”
என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்.
ஏழாவது முத்திரை
8 ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையை உடைத்தார். அப்போது ஏறக்குறைய அரை மணி நேரத்துக்குப் பரலோகம் முழுவதும் அமைதி ஏற்பட்டது. 2 தேவனுக்கு முன்னர் ஏழு தேவதூதர்கள் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
3 இன்னொரு தூதன் வந்து பலிபீடத்தின் அருகில் நின்றான். அவன் தூபம் காட்டும் பொற்கலசத்தைப் பிடித்திருந்தான். தேவனுடைய பரிசுத்த மக்களின் பிரார்த்தனைகளோடு பொற்பீடத்தின் மீது எரிக்கும் பொருட்டு அவனிடம் மிகுதியான தூபவர்க்கம் கொடுக்கப்பட்டது. 4 தூதனின் கையில் உள்ள கலசத்தில் இருந்து தூபப் புகையானது தேவனிடம் சென்றது. அது தேவனுடைய மக்களது பிரார்த்தனைகளோடும் சென்றது. 5 பின்பு அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்தான். பின்பு அதைப் பலிபீடத்து நெருப்பால் நிரப்பினான். பின் அதனைப் பூமியில் வீசியெறிந்தான். அதன் பிறகு அங்கே மின்னலும், இடியும், வேறு சப்தங்களும், நிலநடுக்கமும் ஏற்பட்டன.
ஏழு தூதர்களும் தம் எக்காளங்களை ஊதுதல்
6 பிறகு ஏழு தூதர்களும் தம் ஏழு எக்காளங்களையும் ஊதத் தயாரானார்கள்.
7 முதல் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது இரத்தம் கலந்த கல் மழையும் நெருப்பும் உண்டாகி பூமியிலே விழுந்தன. இதனால் மூன்றில் ஒரு பங்கு பூமியும், மூன்றில் ஒரு பங்கு மரங்களும் எரிந்துபோயின. பசும்புற்களெல்லாம் கரிந்து போயின.
8 இரண்டாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அதனால் நெருப்பு பற்றி எரிகின்ற மலை போன்ற ஒன்று கடலில் எறியப்பட்டது. எனவே கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாயிற்று. 9 கடலில் உயிர் வாழ்கின்ற உயிர்களில் மூன்றில் ஒரு பகுதி செத்துப்போனது. கப்பல்களில் மூன்றில் ஒரு பகுதி அழிந்துபோயிற்று.
10 மூன்றாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். பிறகு வானில் உள்ள ஒரு பெரிய நட்சத்திரம் தீப்பந்தம்போல எரிந்து விழுந்தது. அது ஆறுகளில் மூன்றில் ஒரு பகுதி மீதும் நீரூற்றுகளின் மீதும் விழுந்தது. 11 அந்த நட்சத்திரத்தின் பெயர் எட்டி. அதனால் தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதி எட்டியைப் போன்று கசப்பாயிற்று. அவற்றைக் குடித்த ஏராளமான மக்கள் இறந்துபோயினர்.
12 நான்காம் தூதன் தன் எக்காளத்தை எடுத்து ஊதினான். அதனால் மூன்றில் ஒரு பகுதியான சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் சேதப்பட்டன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு இருண்டது. இரவிலும், பகலிலும் மூன்றில் ஒரு பாகம் வெளிச்சம் இல்லாமல் போனது.
13 நான் கவனித்துக்கொண்டிருக்கும் போது வானில் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகின் சத்தத்தைக் கேட்டேன். அது உரத்த குரலில், “ஆபத்து, ஆபத்து, பூமியில் உயிருடன் வாழ்பவர்களுக்கு ஆபத்து. எஞ்சிய மற்ற மூன்று தேவதூதர்கள் தம் எக்காளங்களை ஊதும்போது ஆபத்து நேரும்” என்றது.
2008 by World Bible Translation Center