Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆமோஸ் 1-3

முன்னுரை

இது ஆமோஸின் செய்தி, ஆமோஸ் தெக்கோவா நகரைச் சேர்ந்த மேய்ப்பர்களில் ஒருவன். ஆமோஸ் இஸ்ரவேலைப்பற்றி, யூதாவின் அரசனாக உசியா இருந்த காலத்திலும் இஸ்ரவேலின் அரசனாக யோவாசின் மகன் யெரொபெயாமின் காலத்திலும் தரிசனங்களைக் கண்டான். இது பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

சீரியாவிற்கு எதிரான தண்டனை

ஆமோஸ் சொன்னான்:
கர்த்தர் சீயோனில் ஒரு சிங்கத்தைப் போன்று சத்தமிடுவார்.
    அவரது உரத்த சப்தம் எருசலேமிலிருந்து கெர்ச்சிக்கும்.
மேய்ப்பர்களின் பசுமையான மேய்ச்சல் இடம் வறண்டு மடியும்.
    கர்மேல் மலையும் காய்ந்து போகும்.

கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் தமஸ்குவின் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காக நிச்சயம் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கீலேயாத் ஜனங்களை இரும்பு ஆயுதங்களினால் நசுக்கினார்கள். எனவே நான் ஆசகேலின் வீட்டில் நெருப்பை பற்றவைப்பேன். அந்த நெருப்பு பெனாதாதின் மிகப்பெரிய அரண்மனைகளை அழிக்கும்.

“நான் தமஸ்குவின் வாசலில் போடப்பட்டுள்ள தாழ்ப்பாளை உடைப்பேன். நான் ஆவேன் பள்ளதாக்கின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பவனை அழிப்பேன். நான் பெத்ஏதேனிலிருந்து வல்லமையின் சின்னத்தை விலக்கிப்போடுவேன். சீரியாவின் ஜனங்கள் தோற்றகடிக்கப்படுவார்கள். ஜனங்கள் அவர்களைக் கீர் நாட்டுக்குக் கொண்டு செல்வார்கள்” என்று கர்த்தர் கூறினார்.

பெலிஸ்தியர்களுக்கான தண்டனை

கர்த்தர் இதனைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக காத்சா ஜனங்களை அவர்களின் பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் நாட்டு ஜனங்களையெல்லாம் சிறைபிடித்து ஏதோமுக்குக் கைதிகளாகக் கொண்டுபோனார்கள். எனவே நான் காத்சாவின் மதிலுக்குள் நெருப்பை அனுப்புவேன். இந்த நெருப்பு காத்சாவின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும். நான் அஸ்தோத்தின் சிங்காசனத்தில் இருப்பவனை அழிப்பேன். நான் அஸ்கலோனின் செங்கோலைத் தாங்கியிருப்பவனை அழிப்பேன். நான் எக்ரோன் ஜனங்களைத் தண்டிப்பேன் பிறகு மீதமுள்ள பெலிஸ்தியர்களும் மரிப்பார்கள்” தேவனாகிய கர்த்தர் கூறினார்.

பொனிசியாவின் தண்டனை

கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: “நான் நிச்சயமாக தீரு ஜனங்களை அவர்களது பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் ஒரு நாடு முழுவதையும் சிறைபிடித்து ஏதோமுக்கு அடிமைகளாக அனுப்பினார்கள். அவர்கள் தம் சகோதரர்களோடு (இஸ்ரவேல்) செய்த உடன்படிக்கையை நினைவு கொள்ளவில்லை. 10 எனவே நான் தீருவின் சுவர்களில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்த நெருப்பு தீருவின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்.”

ஏதோமியர்களுக்கான தண்டனை

11 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் ஏதோம் ஜனங்களை அவர்களின் பல குற்றங்களுக்காக நிச்சயம் தண்டிப்பேன். ஏனென்றால் ஏதோம் தன் சகோதரன் இஸ்ரவேலை வாளோடு துரத்தினான். ஏதோம் இரக்கம் காட்டவில்லை. ஏதோமின் கோபம் இடைவிடாமல் தொடர்ந்து காட்டு மிருகங்களைப்போல இஸ்ரவேலர்களைக் கிழித்துக் கொண்டிருந்தான். 12 எனவே, நான் தேமானில் நெருப்பைப் பற்ற வைப்பேன். அந்நெருப்பு போஸ்றாவின் உயர்ந்த கோபுரங்களை எரித்துப்போடும்.”

அம்மோனியர்களுக்கான தண்டனை

13 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக அம்மோன் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கீலேயாத் நாட்டில் கர்ப்பிணிப் பெண்களைக் கொன்றார்கள். அம்மோனியர்கள் இதனைச் செய்து தங்கள் நாட்டு எல்லைகளை விரித்தார்கள். 14 எனவே நான் ரப்பாவின் மதிலில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்நெருப்பு ரப்பாவின் உயர்ந்த கோபுரங்களை எரித்து அழிக்கும். அவர்களின் நாட்டிற்குள் துன்பமானது சுழல்காற்றைப்போன்று வரும். 15 பிறகு அவர்களின் அரசனும் தலைவர்களும் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாகப் பிடிக்கப்படுவார்கள்”. என்று கர்த்தர் கூறினார்.

மோவாபின் தண்டனை

கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக மோவாப் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் மோவாபியர், ஏதோம் அரசனின் எலுப்புகளைச் சுண்ணாம்பில் எரித்தார்கள். எனவே நான் மோவாப் நாட்டில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்த நெருப்பு கீரியோத்தின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும். அங்கே பயங்கர சத்தமும் எக்காளச் சத்தமும் கேட்க அவர்கள் மரிபார்கள். எனவே நான் மோவாபின் அரசர்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். நான் மோவாபின் அனைத்துத் தலைவர்களையும் கொல்வேன்” கர்த்தர் இதனைக் கூறினார்.

யூதாவுக்கான தண்டனை

கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக யூதாவை அவர்களது பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்கு அடிபணிய மறுத்தார்கள். அவர்கள் அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. அவர்கள் முற்பிதாக்கள் பொய்களை நம்பினார்கள். அதே பொய்கள் யூதாவின் ஜனங்கள் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தக் காரணமாயிருந்தது. எனவே. நான் யூதாவில் நெருப்பை பற்றவைப்பேன். அந்த நெருப்பு எருசலேமிலுள்ள உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்.”

இஸ்ரவேலுக்கான தண்டனை

கர்த்தர் இதனைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக இஸ்ரவேலர்களை அவர்களது பல குற்றறங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கொஞ்சம் வெள்ளிக்காக அப்பாவி ஜனங்களை விற்றார்கள். அவர்கள் ஏழை ஜனங்களை பாதரட்சைளுக்காக விற்றார்கள். அவர்கள் ஏழை ஜனங்களை முகம் குப்புற தரையில் தள்ளி அவர்கள் மேல் நடந்தார்கள். அவர்கள் துன்பப்படுகிற ஜனங்களின் சத்தத்தைக் கேட்பதை நிறுத்தினர். தந்தைகளும் மகன்களும் ஒரே பெண்ணிடம் பாலினஉறவு கொள்கிறார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான நாமத்தை பாழாக்கி விட்டார்கள். அவர்கள் ஏழைகளிடமிருந்து ஆடைகளை எடுத்து அந்த ஆடைகளின் மேல் உட்கார்ந்து அவர்கள் பலிபீடங்களில் ஆராதிக்கிறார்கள். அவர்கள் ஏழை ஜனங்களுக்கு கடன் தந்து அவர்கள் ஆடைகளை அடைமானமாக எடுத்தார்கள். அவர்கள் ஜனங்கள் அபராதம் செலுத்தும்படிச் செய்தார்கள். அப்பணத்தில் மது வாங்கி அவர்கள் பொய் தெய்வத்தின் கோயிலில் குடித்து மகிழ்ந்தார்கள்.

“ஆனால் அவர்களுக்கு முன்பாகவே எமோரியர்களை அழித்தது நான். எமோரியர்கள் கேதுரு மரங்களைப்போன்று உயரமானவர்கள். அவர்கள் கர்வாலி மரங்களைப்போல் வைரமாயிருந்தவர்கள். ஆனால் நான் அவர்களது மேலே உள்ள பழங்களையும் கீழேயுள்ள வேர்களையும் அழித்தேன்.

10 “நானே உங்களை எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தேன். நான் 40 வருடங்கள் உங்களை வானந்தரத்தில் வழிநடத்தினேன். நீங்கள் எமோரியரின் நாட்டை எடுத்துக்கொள்ள உதவினேன். 11 நான் உங்கள் மகன்களில் சிலரைத் தீர்க்கதரிசிகள் ஆக்கினேன். நான் உங்களது இளைஞர்களில் சிலரை நசரேயர்களாக ஆக்கினேன். இஸ்ரவேல் ஜனங்களே, இது உண்மை” என்று கர்த்தர் சொல்லுகிறார். 12 “ஆனால் நீங்கள் நசரேயர்களை மது குடிக்கச் செய்தீர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளை தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொன்னீர்கள். 13 நீங்கள் எனக்குப் பெரிய பாரத்தைப் போன்றவர்கள். நான் பாரம் ஏற்றப்பட்ட வண்டியைப்போன்று வளைந்திருக்கிறேன். 14 என்னிடமிருந்து எவரும், வேகமான ஓட்டக்காரன் கூடத் தப்பிக்க முடியாது. பலவான்களுக்குப் போதுமான பலம் இருக்காது. படைவீரர்கள் தம்மைத்தாம் காப்பாற்றிக்கொள்ள முடியாது. 15 ஜனங்கள் வில்லோடும் அம்போடும் இருந்தும் உயிர் பிழைப்பதில்லை. வேகமாக ஓடுபவனும் தப்ப முடியாது. குதிரையில் வருகிறவர்களும் உயிரோடு தப்ப முடியாது. 16 அப்போது மிகத் தைரியமான வீரனும் ஓடிப்போவான். அவர்கள் தம் ஆடைகளை அணிந்துகொள்ளக் கூட நேரம் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்” என்று கர்த்தர் கூறினார்.

இஸ்ரவேலுக்கான எச்சரிக்கை

இஸ்ரவேல் ஜனங்களே, இந்தச் செய்தியைக் கவனியுங்கள். இஸ்ரவேலே உங்களைபற்றி கர்த்தர் இவற்றைக் கூறினார். இந்த செய்தி நான் எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த எல்லாக் குடும்பங்களையும் (இஸ்ரவேல்) பற்றியது. “பூமியில் அநேகக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் உன்னுடைய ஒரே குடும்பத்தைதான் சிறப்பான வழியில் அறிந்துகொள்ள நான் தேர்ந்தெடுத்தேன். நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, நான் உனது எல்லா பாவங்களுக்காக உன்னைத் தண்டிப்பேன்.”

இஸ்ரவேலின் தண்டனைக்கான காரணம்

இரண்டு பேர் ஒத்துப்போனாலொழிய
    ஒரே வழியில் நடக்க முடியாது.
காட்டிலுள்ள சிங்கம்,
    ஒரு மிருகத்தைப் பிடித்த பிறகுதான் கெர்ச்சிக்கும்.
ஒரு இளஞ்சிங்கம் தன் குகையில் கெர்ச்சிக்கிறது என்றால்,
    அது ஏதோ ஒன்றைப் பிடித்துவிட்டது என்று அர்த்தம்.
கண்ணிக்குள்ளே உணவு இல்லாவிட்டால்
    ஒரு பறவை தரையிலுள்ள கண்ணிக்குள் பறக்காது.
கண்ணி மூடினால்
    அது பறவையைப் பிடிக்கும்.
எக்காளம் எச்சரிக்கையாக ஊதினால்,
    ஜனங்கள் நிச்சயம் பயத்தால் நடுங்குவார்கள்.
நகரத்திற்கு துன்பம் வந்தால்,
    அதற்கு கர்த்தர் காரணமாவார்.

எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார். ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள் பயப்படுவார்கள். கர்த்தர் பேசினால் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.

9-10 நீங்கள் அஸ்தோத்தின் கோபுரங்களுக்கும், எகிப்துக்கும் போய் இச்செய்தியைக் கூறுங்கள். “சமாரியாவின் மலைகளுக்கு வாருங்கள். நீங்கள் அங்கே பெருங்குழப்பத்தைக் காண்பீர்கள். ஏனென்றால் ஜனங்களுக்குச் சரியாக வாழ்வது எப்படி என்று தெரியாது. அந்த ஜனங்கள் மற்ற ஜனங்களிடம் கொடூரமாக இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து பொருட்களை எடுத்துத் தங்கள் கோபுரங்களில் ஒளித்து வைத்தார்கள். அவர்கள் போரில் எடுத்தப் பொருட்களால் அவர்களது கருவூலங்கள் நிறைந்திருக்கின்றன.”

11 எனவே கர்த்தர் சொல்கிறார்: “ஒரு பகைவன் அந்த நாட்டிற்கு வருவான். அந்தப் பகைவன் உன் பலத்தை எடுத்துப்போடுவான். நீ உயர்ந்த கோபுரங்களில் ஒளித்து வைத்த பொருட்களை அவன் எடுப்பான்.”

12 கர்த்தர் கூறுகிறார்,

“ஒரு சிங்கம் ஒரு ஆட்டுக் குட்டியை தாக்கலாம்.
    மேய்ப்பன் அந்த ஆட்டைக் காப்பாற்ற முயற்சி செய்யலாம்.
ஆனால் மேய்ப்பன் ஆட்டுக்குட்டியின் ஒரு பகுதியைத்தான் காப்பாற்றுவான்.
    அவன் சிங்கத்தின் வாயிலிருந்து இரண்டு கால்கள்
அல்லது காதின் ஒரு பகுதியை மட்டும் பிடுங்க முடியும்.
    அவ்வாறே இஸ்ரவேலின் பெரும் பாலான ஜனங்கள் காப்பாற்றப்படமாட்டார்கள்.
சமாரியாவில் வாழ்கிற ஜனங்கள் படுக்கையின் ஒரு மூலையையோ
    அல்லது ஒரு மஞ்சத்தின் மேலிருக்கும் துணியின் ஒரு துண்டையோ காப்பாற்றிக்கொள்வார்கள்.”

13 என் ஆண்டவரும், சர்வ வல்லமையுள்ள தேவனுமாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார் “யாக்கோபின் குடும்பத்தை (இஸ்ரவேல்) எச்சரிக்கை செய். 14 இஸ்ரவேல் பாவம் செய்தது. நான் அவர்களைத் தங்களுடைய பாவங்களுக்காகத் தண்டிப்பேன். நான் பெத்தேலில் உள்ள பலிபீடங்களையும் அழிப்பேன். பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டு தரையில் கிடக்கும். 15 நான் மழைக்கால வீட்டைக் கோடைகால வீட்டோடு அழிப்பேன். தந்தத்தால் ஆன வீடுகள் அழிக்கப்படும். பல வீடுகள் அழிக்கப்படும்” என்று கர்த்தர் கூறுகிறார்.

வெளி 6

ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளை உடைக்கிறார்

பின்பு ஏழு முத்திரைகளுள் முதல் முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் உடைப்பதைக் கண்டேன். அப்போது நான்கு உயிருள்ள ஜீவன்களுள் ஒன்று இடிபோன்ற குரலில் பேசத்தொடங்குவதைக் கண்டேன். “வா!” என்று சொன்னது அக்குரல். நான் பார்த்தபோது எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக் குதிரை இருப்பதைப் பார்த்தேன். அக்குதிரையில் சவாரி செய்தவன் ஒரு வில்லைப் பிடித்திருந்தான். அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. அவன் பகைவர்களை வீழ்த்துவதற்காகச் சென்றான். வெல்வதற்காகவே புறப்பட்டுப் போனான்.

ஆட்டுக்குட்டியானவர் இரண்டாம் முத்திரையை உடைத்தார். அப்போது இரண்டாவது உயிருள்ள ஜீவன் “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். பிறகு இன்னொரு குதிரை வெளியே வந்தது. அது தீ போன்ற சிவப்பு வண்ணம் கொண்டது. அதன்மேல் இருந்தவனுக்கு உலகத்தில் உள்ள சமாதானத்தை எடுத்துவிடவும், பூமியில் உள்ள மக்கள் ஒருவரை ஒருவர் கொல்வதற்குமான அதிகாரமும் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவனுக்கு ஒரு பெரிய வாளும் தரப்பட்டது.

ஆட்டுக்குட்டியானவர் மூன்றாவது முத்திரையை உடைத்தார். அப்போது மூன்றாவது உயிருள்ள ஜீவன், “வா!” என்று என்னிடம் கூறியதைக் கேட்டேன். நான் பார்த்தபோது ஒரு கறுப்புக் குதிரை வெளியே வந்தது. அதன்மேல் இருந்தவன் தராசு ஒன்றைக் கையில் வைத்திருந்தான். அப்பொழுது ஒருவகை சப்தத்தைக் கேட்டேன். அச்சப்தம் நான்கு உயிருள்ள ஜீவன்களின் மத்தியிலிருந்தே வந்தது. “ஒரு நாள் கூலியாக ஒரு படி கோதுமை. ஒரு நாள் கூலியாக மூன்று படி வாற்கோதுமை, எண்ணெயையும், திராட்சை இரசத்தையும் வீணாக்காதே” என்று கூறிற்று.

ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். அப்போது நான்காம் உயிருள்ள ஜீவன் “வா!” என்று அழைத்தது. நான் பார்த்தபோது மங்கிய நிறமுள்ள ஒரு குதிரை வந்தது. இக்குதிரையை ஓட்டி வந்தவனுக்கு “மரணம்” என்று பெயர். மேலும் அவனுக்குப் பின்னால் “பாதாளம்” நெருக்கமாய் வந்துகொண்டிருந்தது. உலகில் உள்ள கால் பங்கு மக்களின்மேல் அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. வாளாலும், பஞ்சத்தாலும் நோயாலும் காட்டு மிருகங்களாலும் மக்களைக் கொல்லும் அதிகாரத்தை அவன் பெற்றான்.

ஆட்டுக்குட்டியானவர் ஐந்தாவது முத்திரையையும் உடைத்தார். அப்பொழுது பலிபீடத்தின் கீழே தம் விசுவாசத்திற்காகவும், சாட்சி சொன்னதற்காகவும் கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களை நான் பார்த்தேன். 10 அந்த ஆன்மாக்கள் உரத்த குரலில் சத்தமிட்டன. “பரிசுத்தமும் உண்மையும் உள்ள தேவனே! எங்களைக் கொன்றதற்காக உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களை நியாயம் தீர்த்துத் தண்டிக்க எவ்வளவு காலம் ஆகும்?” என்றன. 11 பிறகு ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டன. பிறகு சிறிது நேரத்திற்குக் காத்திருக்கும்படி அவற்றிற்குச் சொல்லப்பட்டது. கொல்லப்படப்போகிற அவர்களைப்போன்ற கிறிஸ்துவின் சேவையிலுள்ள எல்லா சக ஊழியர்களும் உண்மையில் கொல்லப்படுவதுவரை அவை காத்திருக்க வேண்டும்.

12 ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையை உடைப்பதைக் கவனித்தேன். அப்போது பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. சூரியன் இருண்டது. துக்கம் கொண்டாடுகிறவன் அணிகிற ஆடைகள்போல அது கறுத்தது. நிலவு இரத்தம்போல சிவப்பானது. 13 வானத்து நட்சத்திரங்கள், புயல் காலத்தில் அத்திமரத்திலிருந்து அத்திப் பழங்கள் உதிருவது போன்று பூமியில் உதிர்ந்தன. 14 வானம் இரண்டாகப் பிளந்தது. அது தோல் சுருளைப்போல சுருண்டுகொண்டது! மலைகளும், தீவுகளும் தங்களது இடத்தை விட்டு நகர்ந்தன.

15 மக்கள் குகைகளிலும், மலைப்புறங்களிலும் ஒளிந்துகொண்டனர். அவர்களுடன் அரசர்களும், ஆள்வோர்களும், அதிகாரிகளும், செல்வந்தர்களும் இருந்தனர். அடிமைகளும் சுதந்தரமானவர்களும் அவர்களோடு ஒளிந்துகொண்டனர். 16 மக்கள் மலைகளையும் பாறைகளையும் பார்த்து “எங்கள் மேல் விழுங்கள். சிம்மாசனத்தில் இருப்பவரின் பார்வையில் இருந்தும் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும் எங்களை மறைத்துவிடுங்கள். 17 அவர்கள் தம் கோபத்தைக் காட்டுகிற தருணமாகிய மாபெரும் நாள் வந்துவிட்டது. அதனை எதிர்த்து ஒருவராலும் நிற்கமுடியாது.” என்று கூறினார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center