Old/New Testament
ஆசாரியர்களின் அறை
42 பிறகு அம்மனிதன் என்னை வட திசையின் வழியாக வெளிப்பிரகாரத்திற்கு அழைத்துப்போனான். தடைசெய்யப்பட்ட பரப்பிற்கு மேற்கேயிருந்த அறைக்கும் வடக்கே இருந்த கட்டிடத்திற்கும் போனோம். 2 வடக்கே இருந்த கட்டிடமானது 100 முழம் (175’) நீளமும் 50 முழம் (87’6”) அகலமும்கொண்டது. 3 இக்கட்டத்தில் மூன்று முன்மண்டபங்களுடைய மேல் மாடிகள் இருந்தன. 20 முழம் அளவுள்ள உள்முற்றம், கட்டிடத்திற்கும் ஆலயத்திற்கும் இடையில் இருந்தது. இன்னொரு பக்கம், அறைகள் வெளிமுற்றத்தின் நடைபாதையை நோக்கியிருந்தன. 4 அறைகளுக்கு முன்னால் ஒருவழி இருந்தது. அது உள்ளே சென்றது. இது 10 முழம் (17’6”) அகலமும் 100 முழம் (175’) நீளமும் உடையதாக இருந்தது. அவற்றின் கதவுகள் வடக்கே இருந்தன. 5-6 கட்டிடம் 3 மாடி உயரமுள்ளதாகவும், வெளிமுற்றத்தைப்போல தூண்கள் இல்லாததாலும், மேல் அறைகள் நடுமாடியிலும், முதல்தளத்திலும் இருந்த அறைகளைவிட சற்றுப் பின்னால் இருந்தன. மேல்தளம், நடுத்தளத்தையும், அடித்தளத்தையும்விட குறுகலாயிருந்தது. ஏனெனில், மேல்மாடிகள் இவ்விடங்களை பயன்படுத்தியிருந்தன. 7 வெளியே ஒரு மதில் இருந்தது. அது அறைகளுக்கு இணையாக இருந்தது. அது வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்திருந்தது. அது அறைகளுக்கு எதிரே இருந்தது. அதன் நீளம் 50 முழம் (87’6”) இருந்தது. 8 வெளிப்பிரகாரத்தில் உள்ள அறைகளும் 50 முழம் (87’6”) நீளமுடையதாக இருந்தன. கட்டிடத்தின் முழு நீளம், ஆலயத்தின் பக்கம் 100 முழம் நீளமாயிருந்தது. 9 கிழக்கே வெளிப்பிரகாரத்திலிருந்து அந்த அறைகளுக்குள் செல்லுகிற நடை அவற்றின் கீழே இருந்தது. 10 உள்ளே நுழையும் வாசல், முற்றத்தின் பக்கத்திலுள்ள சுவரின் ஆரம்பத்திலிருந்தது.
தடைசெய்யப்பட்ட பரப்பிற்கும் கட்டிடத்திற்கும் தெற்குப் பக்கத்திலும் அறைகள் இருந்தன. 11 அவைகளுக்கு முன்னால் ஒரு பாதை இருந்தது. அவை வடக்கே உள்ள அறைகள் போன்றவை. அவை அதே நீளமும் அகலமும் கொண்டவையாகவும் அதே மாதிரியான கதவுகளைக்கொண்டவையாகவும் இருந்தன. 12 கீழ் அறைகளுக்குப் போகும் நுழை வாசல் கட்டிடத்தின் கிழக்குப்பகுதியின் கடைசியிலிருந்தது. இதனால் ஜனங்கள் சுவரின் பக்கம் இருந்த பாதையின் முடிவில் திறந்தவழியாகப் போக முடியும்.
13 அம்மனிதன் என்னிடம், “தடைசெய்யப்பட்ட பரப்பிற்கு முன்னிருக்கிற வடபுறமான அறைகளும் தென்புறமான அறைகளும் பரிசுத்தமான அறைகள். இந்த அறைகள் கர்த்தருக்குப் பலிகள் படைக்கிற ஆசாரியர்களுடையவை. அவ்வாசாரியர்கள் இவ்வறைகளில்தான் மிகப் பரிசுத்தமான உணவை உண்பார்கள். அங்குதான் அவர்கள் மிகப் பரிசுத்தமான பலிகளை எல்லாம் வைக்கிறார்கள். ஏனென்றால், அந்த இடம் பரிசுத்தமானது. தானிய காணிக்கை, பாவப்பரிகாரபலி, குற்ற நிவாரண பலி, ஆகியவை மிகப் பரிசுத்தமான காணிக்கைகளாகும். 14 பரிசுத்தமான பகுதிக்குள் நுழையும் ஆசாரியர்கள் பரிசுத்த இடத்திலிருந்து வெளிப்பிரகாரத்திற்கு வருவதற்கு முன்பே ஆராதனை செய்யும்போது அணிந்திருந்த உடைகளைக் கழற்றி வைப்பார்கள். ஏனென்றால், அந்த உடைகள் பரிசுத்தமானவை. ஆசாரியர் ஜனங்கள் இருக்கும் பிரகாரத்துக்குப் போக விரும்பினால் வேறு உடைகளை அணிந்துகொண்டு போவார்கள்.”
ஆலயத்தின் வெளிமுற்றம்
15 அம்மனிதன் ஆலயத்தின் உள்பக்கத்தை அளந்து முடித்த பிறகு அவன் என்னை கீழ்த்திசைக்கு எதிரான வாசல் வழியாக வெளியே அழைத்துக்கொண்டு போனான். அவன் ஆலயத்தின் வெளிப்புறத்தில் சுற்றிலும் அளந்தான். 16 அவன் அளவு கோலால் கிழக்குப் பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) நீளமிருந்தது. 17 அவன் வடப் பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது. 18 அவன் தெற்குப்பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது. 19 அவன் சுற்றிக்கொண்டு மேற்குப் பகுதிக்குப்போய் அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது. 20 அவன் ஆலயத்தின் நான்கு புறங்களையும் அளந்தான். ஆலயத்தைச் சுற்றி மதில் சுவர் இருந்தது. அது 500 முழம் நீளமும் 500 முழம் அகலமுமாயிருந்தது. அது பரிசுத்தமற்ற இடத்திலிருந்து அப்பரிசுத்தமான இடத்தைப் பிரித்தது.
கர்த்தர் தமது ஜனங்களுக்கு மத்தியில் வாழ்வார்
43 அம்மனிதன் என்னைக் கிழக்கு வாசலுக்கு அழைத்துக்கொண்டு போனான். 2 அங்கே இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது. தேவனுடைய சத்தம் கடலின் இரைச்சலைப் போன்றிருந்தது. தேவ மகிமையால் பூமி பிரகாசித்தது. 3 நான் பார்த்த தரிசனம் கேபார் ஆற்றங்கரையில் கண்ட தரிசனத்தைப்போன்று இருந்தது. நான் தரையில் முகங்குப்புற விழுந்தேன். 4 கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல் வழியாக ஆலயத்தின் உள்ளே நுழைந்தது.
5 அப்பொழுது என்னை ஆவியானவர் எடுத்துக்கொண்டு போய் உட்பிரகாரத்தில் விட்டார். கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பியது. 6 என்னிடம் யாரோ ஆலயத்திற்குள்ளிருந்து பேசுவதைப்போன்று கேட்டேன். இன்னும் அந்த மனிதன் என்னுடன் இருந்தான். 7 ஆலயத்திற்குள்ளிருந்து வந்த குரல் என்னிடம் சொன்னது, “மனுபுத்திரனே, இந்த இடத்தில்தான் எனது சிங்காசனமும் பாதபீடமும் உள்ளன. நான் என்றென்றும் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இந்த இடத்தில் வாழ்வேன். இஸ்ரவேல் வம்சத்தார் இனிமேல் என் நாமத்தைப் பாழாக்கமாட்டார்கள். அரசர்களும் அவரது ஜனங்களும் தங்கள் வேசித்தனங்களாலும் இங்கே தங்கள் அரசர்களின் உடல்களைப் புதைப்பதின் மூலமும் எனது நாமத்தைத் தீட்டுப்படுத்துவதில்லை. 8 அவர்கள், என் கதவு நிலைக்கு அடுத்து அவர்கள் கதவு நிலையை வைத்தும் தங்கள் வாசற்படியை என் வாசற்படியருகில் கட்டியும் என் நாமத்திற்கு அவமானத்தைக் கொண்டுவரமாட்டார்கள். முன்பு ஒரு சுவர் என்னை அவர்களிடமிருந்து பிரித்தது. எனவே அவர்கள் ஒவ்வொரு முறை பாவம் செய்யும்போதும் அருவருப்பான செயல்களைச் செய்யும்போதும் என் நாமத்திற்கு அவமானத்தைக் கொண்டுவந்தார்கள். அதற்காகத்தான் நான் கோபம்கொண்டு அவர்களை அழித்தேன். 9 இப்பொழுது அவர்கள் தங்கள் பாலின உறவு பாவங்களையும், தங்கள் அரசர்களின் மரித்த உடல்களையும் என்னைவிட்டுத் தூரமாய் எடுத்துச் செல்லட்டும். பிறகு, நான் அவர்கள் மத்தியில் என்றென்றும் வாழ்வேன்.
10 “இப்பொழுது, மனுபுத்திரனே, ஆலயத்தைப்பற்றி இஸ்ரவேல் வம்சத்தாரிடம் சொல். பிறகு, அவர்கள் தம் பாவங்களுக்காக வெட்கப்படுவார்கள். அவர்கள் ஆலயத்துக்கான திட்டங்களைப்பற்றி அறிந்துகொள்வார்கள். 11 அவர்கள் தாம் செய்த தீமைகளுக்காக வெட்கப்படுவார்கள். அவர்கள் ஆலயத்தின் வடிவத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளட்டும். அவர்கள் ஆலயத்தை எவ்வாறு கட்டுவது என்பதைத் தெரிந்துகொள்ளட்டும். எங்கே அதன் நுழைவாசல்களையும் எங்கே அதன் பின் வாசல்களையும் வைப்பது என்பதுபற்றி அறியட்டும். அதன் எல்லா சட்டதிட்டங்களையும் கற்றுக்கொடு. இவற்றையெல்லாம் எழுதிவை. அவர்கள் பார்த்து ஆலயத்தின் எல்லா விதிகளையும் கைக்கொள்ளுவார்கள். பிறகு அவர்களால் அவற்றைச் செய்ய முடியும். 12 இதுதான் ஆலயத்தின் சட்டம்: மலை உச்சியின் மேல் சுற்றிலும் அதன் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாக இருக்கும். இதுவே ஆலயத்தின் சட்டம்.
பலிபீடம்
13 “இவை பலிபீடத்தின் அளவுகள். இவை முழக் கோல்களால் அளக்கப்பட்டவை. பலிபீடத்தின் அடிப்பாகத்தைச் சுற்றிலும் ஒரு முழம் (1’9”) ஆழமும் ஒரு முழம் (1’9”) அகலமும் கொண்ட வாய்க்கால் இருந்தது. அதன் ஓரத்தைச் சுற்றியுள்ள விளிம்பு ஒரு சாண் (9”) உயரமாயிருக்கும். இதுதான் பலிபீடத்தின் உயரமாக இருந்தது. 14 தரையிலே இருக்கிற ஆதாரம் முதல் கீழ்நிலைமட்டும் 2 முழம் (3’6”) இருந்தது. அதன் அகலம் ஒரு முழம் (1’9”) இருந்தது. சின்ன விளிம்பு முதல் பெரிய விளிம்புவரை நான்கு முழம் அளவு (7’) இருந்தது. அதன் அகலம் 2 முழம் (3.6”). 15 பலிபீடத்தின் நெருப்பு வைக்கிற இடம் 4 முழம் (7’) உயரமாயிருந்தது. பலிபீடத்தின் ஒவ்வொரு மூலையில் ஒன்றாக 4 கொம்புகள் இருந்தன. 16 பலிபீடத்தின் நெருப்பு வைக்கிற இடம் 12 முழம் நீளமும் 12 முழம் (21’) அகலமுமாய் இருந்தன. இது சரியான நாற்சதுரம். 17 அதன் சட்டமும் சதுரமானது. அது 14 முழம் (24’6”) நீளமும் 14 முழம் (24’6”) அகலமும் கொண்டது. அதைச் சுற்றிலும் உள்ள விளிம்பு அரை முழம் (10 1/2’) அகலமாயிருந்தது. அதனைச் சுற்றியுள்ள ஆதாரம் 2 முழம் (3’6”) ஆக இருக்கும். பீடத்திற்கு போகும் படிகள் கிழக்குப்பக்கம் இருந்தன.”
18 பிறகு அம்மனிதன் என்னிடம் சொன்னான்: “மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘இதுதான் பலிபீடத்துக்கான விதிகள். இதனைக் கட்டும் நாளிலே அதன்மேல் தகனபலியிடவும் அதன்மேல் இரத்தம் தெளிக்கவும் அமைக்கப்படும். 19 நீ ஒரு இளங்காளையை பாவப் பரிகாரப் பலியாக சாதோக்கின் குடும்பத்தில் ஒருவனுக்குக் கொடுக்கவேண்டும். இந்த ஆட்கள் லேவியர் வம்சத்திலிருந்து வந்தவர்கள். அவர்கள் ஆசாரியர்களாக இருக்கிறார்கள்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்: 20 “நீ காளையின் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தின் நான்கு கொம்புகளிலும், சட்டத்தின் நான்கு கொடிகளிலும், சுற்றியிருக்கிற விளிம்பிலும் பூசி பாவநிவர்த்தி செய்யலாம். இவ்வாறு நீ பலிபீடத்தை சுத்தப்படுத்துவாய். 21 நீ பாவப் பரிகார பலிக்குக் காளையைக் கொண்டு வந்து அதை ஆலயத்திற்கு வெளியில் அதற்குரிய இடத்தில் சுட்டெரிக்கவேண்டும்.
22 “இரண்டாவது நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவப்பரிகார பலியாக பலியிடு. ஆசாரியர்கள் முன்பு காளை பலிக்குச் செய்தது போலவே இதற்கும் பலிபீடத்தைப் பரிசுத்தப்படுத்தவேண்டும். 23 நீ பலிபீடத்தை பரிசுத்தப்படுத்தின பின்பு, பழுதற்ற ஒரு இளங்காளையையும், மந்தையிலிருந்து பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் பலியாக்கு. 24 பிறகு நீ அவற்றை கர்த்தருக்கு முன் பலியிடு. ஆசாரியர்கள் அதன்மேல் உப்பைத் தூவுவார்கள். பிறகு ஆசாரியர்கள் காளையையும் கடாவையும் கர்த்தருக்குத் தகன பலியாகக் கொடுப்பார்கள். 25 ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து தினம் பாவப்பரிகாரத்திற்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவைத் தயார் செய். அதோடு மந்தையிலிருந்து ஒரு காளையையும் ஆட்டுக்கடாவையும் தயார் செய். காளைக்கும் ஆட்டுக்காடாவுக்கும் எவ்விதப் பழுதும் இருக்கக் கூடாது. 26 ஏழு நாட்களுக்கு ஆசாரியர்கள் பலிபீடத்தைச் சுத்தமாக வைத்து, சுத்திகரித்து அர்ப்பணிக்கவேண்டும். 27 அந்நாட்கள் முடிந்த பின்பு எட்டாம் நாள் முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின் மேல் உங்கள் தகன பலிகளையும், சமாதான பலிகளையும் படைக்கவேண்டும். அப்பொழுது நான் உன்னை ஏற்றுக்கொள்வேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைச் சொன்னார்.
வெளிவாசல்
44 பிறகு அம்மனிதன் என்னை ஆலயத்தின் கிழக்கு வாசலுக்கு அழைத்து வந்தான். அது பூட்டப்பட்டிருந்தது. 2 கர்த்தர் என்னிடம் சொன்னார்: “இந்த வாசல் திறக்கப்படாது. இது எப்பொழுதும் பூட்டப்பட்டிருக்கும். இதன் வழியாக எவரும் நுழைய முடியாது. ஏனென்றால், இஸ்ரவேலின் கர்த்தர் இதன் வழியாக நுழைந்திருக்கிறார். எனவே இது எப்போதும் பூட்டப்பட்டிருக்கும். 3 இந்த வாசலில் உட்கார ஜனங்களின் அதிபதிக்கு மாத்திரமே உரிமையுண்டு. கர்த்தருடைய சந்நிதியில் உணவு உண்ணும்போது உட்காரலாம். அவன் வாசல் மண்டபக் கதவு வழியாக நுழைந்து அதே வழியாக வெளியேற வேண்டும்.”
ஆலயத்தின் பரிசுத்தம்
4 பிறகு அந்த மனிதன் என்னை வடக்கு வாசல் வழியாக ஆலயத்தின் முன்புறத்திற்கு அழைத்துவந்தான். நான் கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தில் நிறைந்திருப்பதைக் கண்டேன். நான் தரையில் முகம்குப்புற விழுந்தேன். 5 கர்த்தர் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, கவனமாகப் பார்! உன் கண்களையும் காதுகளையும் பயன்படுத்து. இவற்றைக் கவனி. நான் உனக்கு கர்த்தருடைய ஆலயத்தின் சகல விதிகளையும் அதன் சகல சட்டங்களையும்பற்றிச் சொல்வதைக் கவனமாகக் கேள். ஆலயத்தின் எல்லா நுழை வாசல்களையும் பரிசுத்த இடத்திலிருந்து வெளியேறும் வாசல்களையும் கவனமாகப் பார். 6 பிறகு இந்தச் செய்தியை எனக்குக் கீழ்ப்படிய மறுத்த இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடு. அவர்களிடம் சொல்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளும் போதும்! 7 நீங்கள் எனது ஆலயத்திற்குள் அந்நியரை அழைத்து வந்தீர்கள். அந்த ஜனங்கள் உண்மையாகவே விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை. அவர்கள் தம்மை எனக்கு முழுமையாகக் கொடுக்கவில்லை. இவ்வாறு நீங்கள் என் ஆலயத்தை அசுத்தம் செய்தீர்கள். நீங்கள் நமது உடன்படிக்கையை உடைத்தீர்கள். நீங்கள் அருவருப்பான செயல்களைச் செய்தீர்கள். பிறகு நீங்கள் அப்பம், கொழுப்பு, இரத்தம் ஆகிய காணிக்கைகளைக் கொடுத்தீர்கள். ஆனால், இவைகளே என் ஆலயத்தை அசுத்தமாக்கின. 8 நீங்கள் எனது பரிசுத்தமான பொருட்களைக் கவனித்துக்கொள்ளவில்லை. நீங்கள் எனது பரிசுத்த இடத்தின் பொறுப்பை அந்நியர்களிடம் விட்டுவிட்டீர்கள்!’”
9 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “உண்மையான விருத்தசேதனம் செய்துகொள்ளாத அந்நியன் என் ஆலயத்திற்குள் வரக் கூடாது. இஸ்ரவேலர் மத்தியில் நிரந்தரமாக வாழும் அந்நியனும் என் ஆலயத்திற்குள் வருவதற்கு முன் விருத்தசேதனம் செய்துகொண்டு தன்னை எனக்கு முழுமையாகத் தரவேண்டும். 10 கடந்த காலத்தில் இஸ்ரவேலர்கள் என்னைவிட்டு விலகியபோது லேவியர்கள் என்னைவிட்டு விலகினார்கள். இஸ்ரவேலர்கள் தம் விக்கிரகங்களை பின்பற்றுவதற்காக என்னிடமிருந்து விலகினார்கள். லேவியர்கள் தம் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவார்கள். 11 லேவியர்கள் எனது பரிசுத்தமான இடத்தில் சேவை செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் ஆலயத்தின் வாசலைக் காவல் செய்தார்கள். அவர்கள் ஆலயத்திற்குள் சேவை செய்தார்கள். அவர்கள் பலியிடுவதற்காக மிருகங்களைக் கொன்றார்கள். ஜனங்களுக்காகத் தகன பலிகளைச் செய்தார்கள். அவர்கள் ஜனங்களுக்கு உதவுவதற்காகவும் சேவை செய்வதற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 12 ஆனால் அந்த லேவியர்கள் எனக்கு விரோதமாகப் பாவம் செய்வதற்கு உதவினார்கள்! அவர்கள், விக்கிரகங்களைத் தொழுதுக்கொள்ள ஜனங்களுக்கு உதவி செய்தார்கள்! எனவே நான் அவர்களுக்கு விரோதமாக இந்த ஆணையைச் செய்கிறேன்: ‘அவர்கள் தமது பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவார்கள்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
13 “எனவே ஆசாரியர்களைப்போன்று லேவியர்கள் காணிக்கைகளை எனக்குக் கொண்டுவரமாட்டார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான பொருட்களுக்கு அருகிலே வரமாட்டார்கள். அல்லது மிகப் பரிசுத்த பொருட்களுக்கு அருகிலும் வரமாட்டார்கள். அவர்கள் தாங்கள் செய்த அருவருப்பான செயல்களுக்காக அவமானங்களைச் சுமக்க வேண்டும். 14 ஆனால், அவர்கள் ஆலயத்தின் பொறுப்பை எடுத்துக்கொள்ள அனுமதிப்பேன். அவர்கள் ஆலயத்திற்குள் வேலைசெய்வார்கள். செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்வார்கள்.
15 “ஆசாரியர்கள் அனைவரும் லேவியர் வம்சத்திலிருந்து வந்தவர்கள். ஆனால் இஸ்ரவேலர்கள் என்னை விட்டு விலகிப் போனபோது, சாதோக்கின் குடும்பத்திலிருந்து வந்த ஆசாரியர்கள் மட்டுமே எனது பரிசுத்தமான இடத்தைக் கவனிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள். எனவே சாதோக்கின் குடும்பத்தார் மட்டுமே எனக்கு காணிக்கை கொண்டுவரவேண்டும். அவர்கள் எனக்கு முன்னே நின்று கொழுப்பையும் இரத்தத்தையும் செலுத்துவார்கள்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். 16 “அவர்கள் எனது பரிசுத்தமான இடத்திற்குள் நுழைவார்கள். எனக்கு சேவை செய்ய என் பீடத்தின் அருகில் வருவார்கள். நான் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களைக் கவனித்துக்கொள்வார்கள். 17 அவர்கள் உள் பிரகாரத்தின் வாசலுக்குள் நுழைகிறபோது சணல்நூல் ஆடைகளை அணிந்துகொள்வார்கள். அவர்கள் உட்பிரகாரத்தின் வாசல்களிலும் உள்ளேயும் ஆராதனை செய்யும்போது ஆட்டுமயிர் ஆடையை அணியக் கூடாது. 18 அவர்கள் தம் தலையில் சணல் தலைப்பாகை அணிவார்கள். அவர்கள் தம் இடைகளில் சணல் நூல் உள்ளாடைகளைக் கட்டுவார்கள். வியர்வை உண்டாக்கத்தக்க எந்த ஆடைகளையும் அவர்கள் அணியமாட்டார்கள். 19 அவர்கள் வெளிப் பிரகாரமாகிய புறமுற்றத்திலுள்ள ஜனங்களிடம் போகும்போது, தாங்கள் ஆராதனை செய்யும்போது அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி விடுவார்கள். அவற்றை பரிசுத்த அறைகளில் வைப்பார்கள். பிறகு அவர்கள் வேறு ஆடைகளை அணிவார்கள், இவ்வாறு அவர்கள் தம் பரிசுத்தமான ஆடைகளை ஜனங்கள் தொடவிடமாட்டார்கள்.
20 “இந்த ஆசாரியர்கள் தம் தலைகளைச் சிரைக்கவோ தங்கள் மயிரை நீளமாக வளர்க்கவோ மாட்டார்கள். இவ்வாறு செய்தால் அவர்கள் சோகமாய் இருப்பதாகக் காட்டும். கர்த்தருக்குச் சேவைசெய்யும்போது மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். எனவே அவர்கள் தங்கள் தலைமுடியைக் கத்தரித்துக் கொள்ளவேண்டும். 21 அவர்கள் உட்பிரகாரத்திற்குள் செல்லும்போது எந்த ஆசாரியரும் திராட்சைரசம் குடித்திருக்கக் கூடாது. 22 ஆசாரியர்கள் ஒரு விதவையையோ, விவாகரத்து பெற்றவளையோ மணக்கக் கூடாது. அவர்கள் இஸ்ரவேல் வம்சத்திலுள்ள கன்னிப் பெண்களையோ அல்லது மரித்துப்போன ஆசாரியனின் விதவையையோ மாத்திரம் மணந்துக்கொள்ளலாம்.
23 “அதோடு ஆசாரியர்கள் ஜனங்களுக்குப் பரிசுத்தமானவை எவை என்றும் பரிசுத்தமற்றவை எவை என்றும் கற்பிக்கவேண்டும். அவர்கள், எனது ஜனங்கள் சுத்தமானவை எவையென்றும், சுத்தமற்றவை எவை என்றும் தெரிந்துகொள்ள உதவவேண்டும். 24 ஆசாரியர்கள் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருப்பார்கள். எனவே, ஜனங்களை அவர்கள் நியாயம்தீர்க்கும்போது எனது சட்டங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். எனது அனைத்து சிறப்புப் பண்டிகைகளிலும் அவர்கள் என் நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையுமே கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் எனது சிறப்பு ஓய்வு நாட்களை மதித்து அவற்றைப் பரிசுத்தமாகக் கைக்கொள்ள வேண்டும். 25 அவர்கள் மரித்த உடல்களுக்கு அருகில் போய்த் தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது, ஆனால் மரித்துப்போனவர்கள் ஆசாரியரின் தந்தை, தாய், மகன், மகள், சகோதரன் அல்லது மணமாகாத சகோதரியாக இருந்தால் அவர்கள் அதன் மூலம் தீட்டடைந்தாலும் அதன் அருகில் போகலாம். 26 அது ஆசாரியனை தீட்டுப்படுத்தும். பிறகு, ஆசாரியன் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்ட பிறகு ஏழு நாட்கள் காத்திருக்கவேண்டும். 27 பிறகே அவனால் பரிசுத்தமான இடத்திற்குத் திரும்பிப் போகமுடியும். ஆனால் அவன் உட்பிரகாரத்திற்குள் ஆராதனைக்குச் செல்லும் நாளில் அவன் தனக்காகப் பாவப்பரிகாரப் பலியைக் கொடுக்கவேண்டும்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
28 “லேவியர்களுக்குரிய நிலங்களைப்பற்றியது: நானே அவர்களின் சொத்து. நீங்கள் இஸ்ரவேலில் லேவியர்களுக்கென்று எந்தச் சொத்தும் கொடுக்க வேண்டாம். நானே இஸ்ரவேலில் அவர்களின் பங்கு. 29 அவர்கள் உண்பதற்காக தானியக் காணிக்கை, பாவப்பரிகாரப் பலி, குற்றநிவாரணபலி ஆகியவற்றைப் பெறுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கென்று கொடுக்கும் அனைத்தும் அவர்களுக்கு உரியதாகும். 30 எல்லாவகை விளைச்சலிலும் உள்ள முதல் அறுவடை ஆசாரியர்களுக்கு உரியதாகும். நீங்களும் உங்களது பிசைந்த மாவின் முதல் பகுதியைக் கொடுப்பீர்கள். அது உங்கள் வீட்டிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். 31 ஆசாரியர்கள் இயற்கையாக மரித்துப்போன எந்தப் பறவைகளையோ மிருகங்களையோ உண்ணக்கூடாது. காட்டு மிருகங்களால் துண்டுத் துண்டாகக் கிழித்தெறியப்பட்டவற்றையும் அவர்கள் உண்ணக் கூடாது.
1 உலகம் தோன்றுவதற்கு முன்பே இருந்த சிலவற்றைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இதை நாங்கள் கேட்டோம், எங்கள் கண்களாலேயே பார்த்தோம், நாங்கள் நோக்கினோம். எங்கள் கைகளால் தொட்டோம். ஜீவன் தரும் வார்த்தையைக் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுதுகிறோம். 2 அந்த ஜீவன் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நாங்கள் அதைப் பார்த்தோம். நாங்கள் அதற்கான சான்றுகளைத் தரமுடியும். நாங்கள் இப்போது அந்த ஜீவனைக் குறித்து உங்களுக்குக் கூறுகிறோம். அது என்றென்றும் தொடரும் ஜீவனாகும். பிதாவாகிய தேவனோடு இருந்த ஜீவன் அது. தேவன் இந்த ஜீவனை எங்களுக்கு வெளிப்படுத்தினார். 3 எங்களோடு நீங்களும் இவற்றில் பங்குள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டுமிருக்கிற காரியங்களை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். பிதாவாகிய தேவன், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஆகியோரோடு கூடிய ஐக்கியத்தில் நாம் ஒருமித்துப் பங்கு பெறுகிறோம். 4 நம் மகிழ்ச்சி முழுமையாகும்படி இக்காரியங்களை உங்களுக்கு எழுதுகிறோம்.
தேவன் நமது பாவங்களை மன்னிக்கிறார்
5 தேவனிடமிருந்து நாங்கள் கேட்ட உண்மையான போதனை இதுவே ஆகும். அதை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். தேவன் ஒளியானவர். தேவனில் இருள் இல்லை. 6 ஆகையால் நாம் தேவனோடு நெருக்கமான உறவு உடையவர்கள் என்று சொல்லிக்கொண்டே இருளில் தொடர்ந்து வாழ்வோமானால், பிறகு நாம் பொய்யர்களாயிருக்கிறோம். அப்படியானால், நாம் உண்மையைப் பின்பற்றாதவர்களாக இருக்கிறோம். 7 தேவன் ஒளியில் இருக்கிறார். நாமும் கூட ஒளியில் வாழவேண்டும். தேவன் ஒளியில் இருப்பதுபோல நாம் ஒளியில் வாழ்ந்தால் ஒருவரோடொருவர் நெருக்கமான ஐக்கியமாக இருக்கிறோம். மேலும் அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தமானது எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குகிறது.
8 நமக்குப் பாவமில்லையென்று நாம் கூறினால் நம்மை நாமே முட்டாளாக்கிக்கொள்வதோடு, நம்மில் உண்மையும் இருக்காது. 9 ஆனால் நாம் நம் பாவங்களை ஒத்துக்கொண்டால் தேவன் நமது பாவங்களை மன்னிப்பார். நாம் தேவனை நம்ப முடியும். தேவன் சரியானதையே செய்கிறார். நாம் செய்த எல்லா பாவங்களிலுமிருந்தும் தேவன் நம்மைச் சுத்தமாக்குவார். 10 நாம் பாவம் செய்ததில்லை என்று கூறினால் அதன் மூலம் தேவனைப் பொய்யராக்குகிறோம். நாம் தேவனின் உண்மையான போதனையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
2008 by World Bible Translation Center