Old/New Testament
காய்ந்த எலும்புகளின் தரிசனம்
37 கர்த்தருடைய வல்லமை என்மேல் வந்தது. கர்த்தருடைய ஆவி என்னை நகரத்திலிருந்து தூக்கி ஒரு பள்ளத்தாக்கின் நடுவிலே கொண்டுபோய்விட்டது. அப்பள்ளத்தாக்கு மரித்துப்போன மனிதர்களின் எலும்புகளால் நிறைந்திருந்தது. 2 பள்ளத்தாக்கின் வெட்ட வெளியில் அந்த எலும்புகள் மிகுதியாகக் கிடந்தன. என்னை அந்த எலும்புகள் நடுவே நடக்குமாறு கர்த்தர் செய்தார். நான் அவ்வெலும்புகள் மிகவும் காய்ந்து கிடந்ததைக் கண்டேன்.
3 பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கேட்டார்: “மனுபுத்திரனே, இந்த எலும்புகளுக்கு உயிர்வருமா?”
நான் சொன்னேன், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, உமக்கு மட்டுமே இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும்.”
4 எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் சொன்னார்: “அவ்வெலும்புகளிடம் எனக்காகப் பேசு. அவ்வெலும்புகளிடம் சொல், ‘காய்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கவனியுங்கள்! 5 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை உங்களுக்குக் கூறுகிறார். உங்களுக்குள் உயிர்மூச்சு வரும்படிச் செய்வேன். நீங்கள் உயிர் பெறுவீர்கள்! 6 நான் உங்களில் தசைநார்களையும், தசைகளையும் வைப்பேன். நான் உங்களை தோலால் மூடுவேன். பின்னர், நான் உங்களுக்குள் மூச்சுக் காற்றை வைப்பேன். நீங்கள் திரும்ப உயிர் பெறுவீர்கள்! பிறகு, நானே கர்த்தராகிய ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.’”
7 எனவே, நான் கர்த்தருக்காக எலும்புகளிடம் அவர் சொன்னது போல் பேசினேன். நான் இன்னும் பேசிக்கொண்டிருந்தபோது, உரத்த சத்தம் கேட்டது, எலும்புகள் அசைந்து ஒன்றோடு ஒன்று சேர்ந்துக்கொண்டன. 8 அங்கே என் கண் முன்னால் எலும்புகளின் மேல் தசைநார்களும், தசைகளும் சேர்ந்தன. அவற்றைத் தோல் மூடிக்கொண்டது. ஆனால் உடல்கள் அசையவில்லை. அவற்றில் மூச்சுக் காற்று இல்லை.
9 பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “எனக்காகக் காற்றிடம் பேசு. மனுபுத்திரனே, எனக்காகக் காற்றிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று காற்றிடம் சொல்: ‘காற்றே, எல்லா திசைகளிலுமிருந்து வா, மரித்த உடல்களுக்குள் மூச்சுக் காற்றை ஊது! அவர்கள் மீண்டும் உயிர்பெறட்டும்!’”
10 எனவே நான் கர்த்தருக்காகக் காற்றிடம் அவர் சொன்னதுபோன்று பேசினேன். மரித்த உடல்களுக்குள் ஆவி புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று எழுந்து நின்றார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகமிக அதிகமான பெருஞ்சேனையைப்போன்று நின்றார்கள்!
11 பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “மனுபுத்திரனே, இவ்வெலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே, இஸ்ரவேல் ஜனங்கள் சொல்கிறார்கள்: ‘எங்கள் எலும்புகள் காய்ந்துவிட்டன. எங்கள் நம்பிக்கை போய்விட்டது. நாங்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கிறோம்!’ 12 எனவே, எனக்காக அவர்களிடம் பேசு, கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று சொல்: ‘என் ஜனங்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை வெளியே கொண்டுவருவேன்! பின்னர் உங்களை நான் இஸ்ரவேல் நிலத்திற்குக் கொண்டு வருவேன். 13 என் ஜனங்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை வெளியே கொண்டு வருவேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். 14 நான் உங்களில் எனது ஆவியை வைப்பேன். நீங்கள் மீண்டும் உயிர் பெறுவீர்கள். பின்னர் நான் உங்களை உங்களது சொந்த நாட்டிற்கு வழிநடத்திச்செல்வேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நான் இவற்றைச் சொன்னேன் என்பதையும் இவை நடக்கும்படிச் செய்வேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.’” கர்த்தர் அவற்றைச் சொன்னார்.
யூதாவும் இஸ்ரவேலும் மீண்டும் ஒன்றாகுதல்
15 கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 16 “மனுபுத்திரனே, ஒரு கோலை எடுத்து இதனை எழுதிவை: ‘இந்த கோல் யூதாவுக்கும் அதன் நண்பர்களான இஸ்ரவேல் ஜனங்களுக்கும் உரியது’ பின்னர் இன்னொரு கோலை எடுத்து இதனை எழுதிவை. ‘இந்தக் கோல் யோசேப்புக்கும் அவன் நண்பர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கும் சொந்தம். அதனுடைய பெயர்: “எப்பிராயீமின் கோல்.”’ 17 பின்னர் இரண்டு கோல்களையும் ஒன்று சேர்த்துவிடு. உன் கையில் இரண்டும் ஒன்றாக இருக்கும்.
18 “அதன் பொருள் என்னவென்று விளக்கும்படி உன் ஜனங்கள் உன்னிடம் கேட்பார்கள். 19 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவர்களிடம் சொல்: ‘நான் எப்பிராயீம் கையிலும் அவன் நண்பர்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் கையிலும் இருக்கும் யோசேப்பின் கோலை எடுத்து, அக்கோலை யூதாவின் கோலோடு சேர்த்து அவற்றை ஒரே கோலாக்குவேன். என் கையில் அவை ஒரே கோலாக இருக்கும்!’
20 “அக்கோல்களை உன் கையில் அவர்களுக்கு முன்பாகப் பிடி. நீ அக்கோல்களில் அப்பெயர்களை எழுதினாய். 21 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று ஜனங்களிடம் சொல்: ‘நான் இஸ்ரவேல் ஜனங்களை அவர்கள் சென்ற நாடுகளிலிருந்து அழைத்து வருவேன். நான் அவர்களைச் சுற்றிலுமுள்ள நாடுகளிலிருந்து சேகரித்து அவர்களது சொந்த நாட்டிற்குக் கொண்டு வருவேன். 22 நான் அவர்களை மலைகளின் தேசமாகிய இஸ்ரவேலில் ஒரே நாடாக்குவேன். அவர்கள் அனைவருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இரு நாட்டினராக இருக்கமாட்டார்கள். அவர்கள் இனிமேல் இரண்டு அரசுகளாக இருக்கமாட்டார்கள். 23 அவர்கள் இனிமேல் அருவருப்பான சிலைகளையும், விக்கிரங்களையும் வணங்கித் தங்களைத் தீட்டாக்கிக் கொள்ளமாட்டார்கள். அல்லது, வேறு குற்றங்களையும் செய்யமாட்டார்கள். ஆனால் நான் அவர்கள் பாவம் செய்த எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றுவேன். நான் அவர்களைக் கழுவிச் சுத்தமாக்குவேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.
24 “‘அவர்களுக்கு எனது தாசனாகிய தாவீது அரசனாக இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே மேய்ப்பன் இருப்பான். அவர்கள் எனது நியாயங்களில் நடந்து என் கட்டளைகளைக் கடைபிடிப்பார்கள். அவர்கள் நான் சொன்னவற்றின்படியே நடப்பார்கள். 25 நான் எனது தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்த நாட்டிலேயே அவர்கள் வாழ்வார்கள். உங்கள் முற்பிதாக்கள் அந்த இடத்தில் வாழ்ந்தார்கள். என் ஜனங்களும் அங்கே வாழ்வார்கள். அவர்களும் அவர்களது பிள்ளைகளும் அவர்களது பேரப்பிள்ளைகளும் அங்கே என்றென்றும் வாழ்வார்கள். எனது தாசனாகிய தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாயிருப்பான். 26 நான் அவர்களோடு ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்துகொள்வேன். இந்த உடன்படிக்கை என்றென்றும் தொடர்ந்து இருக்கும். நான் அவர்களது நாட்டை அவர்களிடம் கொடுக்க ஒப்புக்கொள்கிறேன். நான் அவர்கள் மேலும் மேலும் பெருக ஒப்புக்கொண்டேன். நான் எனது பரிசுத்தமான இடத்தை அங்கே அவர்களுடன் என்றென்றும் வைக்க ஒப்புக்கொண்டேன். 27 என் பரிசுத்தமான கூடாரம் அவர்களோடு இருக்கும். ஆம், நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். 28 மற்ற நாடுகளும் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள். எனது பரிசுத்தமான இடத்தினை இஸ்ரவேலர்களிடம் என்றென்றும் இருக்கச் செய்வதன் மூலம் அவர்களை எனது சிறப்புக்குரிய ஜனங்களாக்கினேன் என்பதை அவர்கள் அறிவார்கள்.’”
கோகுக்கு விரோதமான செய்தி
38 கர்த்தருடைய செய்தி என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, மாகோகு நாட்டில், கோகைப் பார். அவன் மேசேக், தூபால் நாட்டினரின் முக்கியமான தலைவன். கோகுக்கு விரோதமாக எனக்காகப் பேசு. 3 கர்த்தரும் ஆண்ட வருமானவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல், ‘கோகே, நீ மேசேக், தூபால் ஆகிய நாடுகளின் முக்கியமான தலைவன்! ஆனால் நான் உனக்கு விரோதமானவன். 4 நான் உன்னைக் கைப்பற்றி மீண்டும் இங்கே கொண்டுவருவேன். உனது படையில் உள்ள அனைவரையும் இங்கே கொண்டுவருவேன். நான் எல்லாக் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் திரும்பக் கொண்டுவருவேன். நான் உங்கள் வாய்களில் கொக்கிகளைப் போட்டு இங்கே திரும்பக் கொண்டுவருவேன். எல்லா வீரர்களும் தங்கள் சீருடைகளையும் கேடயங்களையும் வாள்களையும் அணிந்திருப்பார்கள். 5 பெர்சியா, எத்தியோப்பியா, லீபியா ஆகிய நாட்டுவீரர்கள் அவர்களோடு இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தம் கேடயங்களையும் தலைக்கவசங்களையும் அணிந்திருப்பார்கள். 6 கோமேரும் அவனுடைய எல்லாப் படைகளும் அங்கே இருப்பார்கள். வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களது படைகளும் இருப்பார்கள். கைதிகளாகிய கூட்டம் கூட்டமான ஜனங்களும் அங்கே இருப்பார்கள்.
7 “‘தயாராக இரு. ஆம், உன்னைத் தயார்படுத்திக்கொண்டு உன்னோடுள்ள படைகளையும் தயார்படுத்து. நீ அவர்களுக்குக் காவலனாகத் தயாராக இரு. 8 நீண்ட காலத்துக்குப் பிறகு நீ கடமைக்காக அழைக்கப்பட்டாய். பின்வரும் ஆண்டுகளில் போரிலிருந்து குணமான நாட்டிற்கு வருவாய். மலைகளுள்ள இஸ்ரவேலுக்குப் பல நாடுகளில் உள்ள ஜனங்கள் கூடித் திரண்டு திரும்பி வருவார்கள். முன்பு மலைகளுள்ள இஸ்ரவேல் மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டது. ஆனால் இந்த ஜனங்கள் பல நாடுகளிலிருந்து திரும்பி வருவார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள். 9 ஆனால் நீங்கள் அவர்களைத் தாக்க வருவீர்கள். நீங்கள் புயலைப்போன்று வருவீர்கள். நீங்கள் பூமியை மூட வருகிற இடியுடைய மேகம்போன்று வருவீர்கள். இந்த ஜனங்களைத் தாக்க நீயும் உனது படை வீரர்களும் பல நாடுகளிலிருந்து வருவீர்கள்.’”
10 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அப்பொழுது, உங்கள் மனதில் ஒரு திட்டம் வரும். ஒரு கெட்டத் திட்டத்தை நீங்கள் தொடங்குவீர்கள். 11 நீங்கள் சொல்வீர்கள்: ‘சுவர்கள் இல்லாத நகரங்களை உடைய அந்த நாட்டுக்கு (இஸ்ரவேல்), விரோதமாக நான் தாக்கப் போவேன். அந்த ஜனங்கள் சமாதானமாய் வாழ்கின்றார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள். அங்கே அவர்களைக் காப்பதற்கு எந்தச் சுவர்களும் இல்லை. அவர்களுடைய கதவுகளுக்கு எந்தப் பூட்டுகளும் இல்லை. அவர்களுக்குக் கதவுகளும் இல்லை! 12 நான் அவர்களைத் தோற்கடித்து அவர்களிடமுள்ள அனைத்து விலைமதிப்புடைய பொருட்களையும் எடுத்து வருவேன். கடந்தகாலத்தில் அழிக்கப்பட்டு, ஆனால், இப்போது ஜனங்கள் குடியேறியிருக்கும் இடங்களுக்கு விரோதமாக நான் சண்டையிடுவேன். ஆனால், ஜனங்கள் அங்கே வாழ்கிறார்கள். நான் அந்த ஜனங்களுக்கு (இஸ்ரவேல்) விரோதமாகப் போரிடுவேன். அவர்கள் பல நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டனர். இப்பொழுது அந்த ஜனங்கள் ஆடுமாடுகளும் சொத்துக்களும் வைத்திருக்கின்றனர். அவர்கள் உலகின் சாலை சந்திப்புக்களில் வாழ்கின்றனர். பலம் வாய்ந்த நாடுகள் இந்த இடத்தின் வழியாகத்தான் மற்ற பலம் வாய்ந்த நாடுகளுக்குப் போகவேண்டும்.’
13 “சேபா, தேதான், ஆகிய நகர ஜனங்களும் தர்ஷீசின் வியாபாரிகளும் அவர்களோடு வியாபாரம் செய்யும் நகரங்களும் உன்னிடம் கேட்பார்கள்: ‘நீ விலைமதிப்புடைய பொருட்களைக் கைப்பற்ற வந்தாயா? நல்ல பொருட்களைப் பறித்துக்கொள்ளவும், வெள்ளியையும், பொன்னையும், ஆடுமாடுகளையும், சொத்துக்களையும் எடுத்துக்கொள்ள உன் வீரர்களை அழைத்து வந்தாயா? இவ்விலை மதிப்புடைய பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல நீ வந்தாயா?’”
14 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக கோகிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல்: ‘என் ஜனங்கள் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் வாழும்போது நீ அவர்களைத் தாக்குவதற்கு வருவாய். 15 நீ வடதிசையில் உள்ள உனது இடத்திலிருந்து வருவாய். நீ உன்னோடு பலரை அழைத்து வருவாய். அவர்கள் அனைவரும் குதிரையின் மேல் வருவார்கள். நீ பெரியதும் ஆற்றல் உடையதுமான படையாக இருப்பாய். 16 எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போரிட நீ வருவாய். நீ பூமியை மூட வரும் இடிமேகம் போன்று வருவாய். அந்த நேரம் வரும்போது, என் நாட்டிற்கு எதிராகப் போரிட நான் உன்னை அழைப்பேன். பிறகு கோகே, நான் எவ்வளவு வல்லமை உடையவர் என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும். அவர்கள் என்னை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நான் பரிசுத்தமானவர் என்பதை தெரிந்துகொள்வார்கள். நான் உனக்கு என்ன செய்வேன் என்பதை அவர்கள் பார்ப்பார்கள்!’”
17 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: “அந்நேரத்தில், முன்பு நான் உன்னைப்பற்றி பேசினேன் என்பதை ஜனங்கள் நினைவுகொள்வார்கள். நான் எனது வேலையாட்களாகிய இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தினேன் என்பதை நினைவுகொள்வார்கள். இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் முன்பு எனக்காகப் பேசினார்கள் என்பதை அவர்கள் நினைவுகொள்வார்கள், அவர்களுக்கு எதிராகச் சண்டையிட நான் உங்களைக் கொண்டுவருவேன் என்று சொன்னார்கள்.”
18 எனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: “அந்நேரத்தில் இஸ்ரவேல் நாட்டுக்கு விரோதமாகச் சண்டையிட கோகு வருவான். நான் என் கோபத்தைக் காட்டுவேன். 19 நான் எனது கோபத்திலும் பலமான உணர்ச்சியிலும் இந்த ஆணையைச் செய்வேன். இஸ்ரவேல் நாட்டில் பெரும் நில அதிர்ச்சி ஏற்படும் என்று ஆணை செய்தேன். 20 அந்த நேரத்தில், வாழுகின்ற எல்லா உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். கடலிலுள்ள மீன்கள், வானத்துப் பறவைகள், காட்டிலிலுள்ள மிருகங்கள், தரையில் ஊருகின்ற சின்னஞ்சிறு உயிர்கள், மேலும் எல்லா மனித உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். மலைகள் இடியும், மதில்கள் தரையிலே விழும், எல்லாச் சுவர்களும் தரையிலே விழும்!”
21 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “இஸ்ரவேலின் மலைகள் மேல், பட்டயத்தை கோகுக்கு விரோதமாக வரவழைப்பேன். அவனது வீரர்கள் பயந்து ஒருவரையொருவர் தாக்கி ஒருவரையொருவர் தம் வாளால் கொல்வார்கள். 22 நான் கோகை நோயாலும் மரணத்தாலும் தண்டிப்பேன். நான் கோகின் மேலும் அவனது வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த வீரர்களின் மேலும் கல் மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் பொழியச்செய்வேன். 23 பிறகு நான் எவ்வளவு பெரியவர் என்பதைக் காட்டுவேன். நான் பரிசுத்தமானவர் என்பதை நிரூபிப்பேன். நான் செய்வதை பல நாடுகள் பார்த்து நான் யாரென்பதைக் கற்றுக்கொள்ளும். பின்னர் அவர்கள் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.
கோகும் அவனது படையும் மரணமடைதல்
39 “மனுபுத்திரனே, எனக்காகக் கோகிற்கு விரோதமாகப் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று அவனிடம் சொல், ‘கோகே, நீ மேசேக், தூபால் ஆகிய இரு நாடுகளிலும் மிக முக்கியமான தலைவன்! ஆனால், நான் உனக்கு விரோதமானவன். 2 நான் உன்னைக் கைப்பற்றி இங்கே கொண்டு வருவேன். நான் உன்னை வட திசையிலிருந்து கொண்டுவருவேன். நான் உன்னை இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாகப் போரிட அழைப்பேன். 3 ஆனால் நான் உனது இடது கையிலுள்ள வில்லைத் தட்டிவிடுவேன். நான் உனது வலது கையிலுள்ள அம்புகளைத் தட்டிவிடுவேன். 4 நீ இஸ்ரவேலின் மலைகளில் கொல்லப்படுவாய். அப்போரில் நீயும் உன்னோடுள்ள படை வீரர்களும், உன்னோடுள்ள பிற நாட்டவர்களும் கொல்லப்படுவார்கள். நான் உங்களை இறைச்சியைத் தின்னுகிற எல்லாவகைப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகக் கொடுப்பேன். 5 நீ நகரத்திற்குள் நுழையமாட்டாய். நீ வெளியே திறந்த வெளியில் கொல்லப்படுவாய். நான் சொன்னேன்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
6 தேவன் சொன்னார்: “நான் மாகோகுக்கு விரோதமாகவும் தீவுகளில் பாதுகாப்பாக வாழ்கிற ஜனங்களுக்கு விரோதமாகவும் நெருப்பை அனுப்புவேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். 7 நான் எனது பரிசுத்தமான நாமம் இஸ்ரவேல் ஜனங்களிடம் தெரியும்படிச் செய்வேன். நான் இனிமேல் என் நாமத்தை ஜனங்கள் அழிக்கும்படி விடமாட்டேன். நானே கர்த்தர் என்பதை நாடுகள் அறியும். நான் இஸ்ரவேலில் பரிசுத்தமானவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். 8 அந்தக் காலம் வருகின்றது! இது நிகழும்!” கர்த்தர் இவற்றைச் சொன்னார்: “நான் பேசுகிறது அந்த நாளைப்பற்றித்தான்.
9 “அந்த நேரத்தில், இஸ்ரவேல் நகரங்களில் வாழ்கின்ற ஜனங்கள் வயல்களைவிட்டு வெளியே செல்வார்கள். அவர்கள் பகைவர்களின் ஆயுதங்களைப் பொறுக்கி அவற்றை எரிப்பார்கள். அவர்கள் எல்லா கேடயங்களையும், வில்லம்புகளையும், வளை தடிகளையும், ஈட்டிகளையும் எரிப்பார்கள். அவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு அவற்றை விறகாகப் பயன்படுத்துவார்கள். 10 அவர்கள் வயல்களில் விறகு பொறுக்குவதையோ அல்லது காடுகளில் விறகு வெட்டவோமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் ஆயுதங்களை விறகாகப் பயன்படுத்துவார்கள். அவர்கள் தம்மைக் கொள்ளையிட்ட வீரர்களிடமிருந்து விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பார்கள். தங்களிடமிருந்து நல்ல பொருட்களைச் சூறையாடியவர்களிடமிருந்து, நல்ல பொருட்களை அவர்கள் சூறையாடுவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
11 தேவன் சொன்னார்: “அந்நாளில், நான் இஸ்ரவேலில் கோகைப் புதைக்கிற இடத்தைத் தேர்ந்தெடுப்பேன். அவன், சவக் கடலின் கிழக்கே பயணக்காரர்களின் பள்ளத்தாக்கில் புதைக்கப்படுவான். அது பயணிகளின் வழியை அடைக்கும். ஏனென்றால், கோகும் அவனது படையும் அந்த இடத்தில் புதைக்கப்படுவார்கள். ஜனங்கள் இதனை ‘ஆமோன் கோகின் பள்ளத்தாக்கு’ என்று அழைப்பார்கள். 12 இஸ்ரவேல் வம்சத்தார் அவர்களை புதைத்து பூமியைச் சுத்தப்படுத்த ஏழு மாதங்கள் ஆகும். 13 பொது ஜனங்கள் அந்த பகைவீரர்களைப் புதைப்பார்கள். நானே எனக்கு மகிமைக் கொண்டுவரும், அந்த நாளில் அவர்கள் புகழடைவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றை கூறினார்.
14 தேவன் சொன்னார்: “ஜனங்கள் வேலைக்காரர்களுக்கு மரித்த வீரர்களைப் புதைக்க முழுநாள் வேலையைக் கொடுப்பார்கள். இவ்வாறு, அவர்கள் பூமியைச் சுத்தம் செய்தார்கள். வேலைக்காரர்கள் ஏழு மாதங்கள் வேலைசெய்வார்கள். அவர்கள் மரித்த உடல்களைத் தேடி சுற்றிலும் அலைவார்கள். 15 அவ்வேலைக்காரர்கள் தேடியலைவார்கள். அவர்களில் ஒருவன் எலும்பைப் பார்த்தால் அவன் அதில் ஒரு அடையாளம் இடுவான். அந்த அடையாளமானது கல்லறைக்குழி தோண்டுகிறவர்கள் வந்து அந்த எலும்பை கோகின் பள்ளத்தாக்கில் புதைக்கும்வரை இருக்கும். 16 மரித்த ஜனங்களின் நகரமானது ஆமோனா என்று அழைக்கப்படும். இவ்வாறு அவர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்துவார்கள்.”
17 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “மனுபுத்திரனே, எனக்காக எல்லாப் பறவைகளிடமும் காட்டு மிருகங்களிடமும் பேசு: ‘இங்கே வாருங்கள்! இங்கே வாருங்கள்! சுற்றிலும் கூடுங்கள். நான் உங்களுக்காகத் தயார் செய்து வைத்த இந்தப் பலியை உண்ணுங்கள், இஸ்ரவேலின் மலைகளில் மிகப் பெரிய பலி இருக்கும். வாருங்கள் இறைச்சியைத் தின்று இரத்தத்தைக் குடியுங்கள். 18 நீங்கள் பலமான வீரர்களின் உடல்களிலுள்ள இறைச்சியைத் தின்பீர்கள். உலகத் தலைவர்களின் இரத்தத்தை நீங்கள் குடிப்பீர்கள். அவர்கள் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக் கடாக்களுக்கும், ஆட்டுக் குட்டிகளுக்கும், வெள்ளாட்டுக் கடாக்களுக்கும், காளைகளுக்கும் சமமானவர்கள். 19 நீங்கள் உங்கள் விருப்பம்போல் கொழுப்பை எல்லாம் உண்ணலாம். நீங்கள் வயிறு நிறைய இரத்தம் குடிக்கலாம். நான் உங்களுக்காகக் கொன்ற எனது பலிகளிலிருந்து நீங்கள் உண்பீர்கள், குடிப்பீர்கள். 20 எனது மேசையில் உங்களுக்கு உண்ண நிறைய ஏராளமாக இறைச்சி இருக்கும். அங்கே குதிரைகளும், இரதமோட்டிகளும், ஆற்றலுடைய வீரர்களும், போர் வீரர்களும் இருப்பார்கள்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
21 தேவன் சொன்னார்: “நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை பிற நாட்டினரைப் பார்க்கச் செய்வேன். அந்த நாடுகள் என்னை மதிக்கத் தொடங்கும்! அவர்கள் எனது வல்லமையைப் பார்ப்பார்கள். இந்த வல்லமை அந்தப் பகைவனுக்கு எதிராகப் பயன்படுத்தியது. 22 பிறகு அந்நாளிலிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் நானே அவர்களது கர்த்தராகிய ஆண்டவர் என்பதை அறிவார்கள். 23 அந்நாடுகள் இஸ்ரவேல் வம்சத்தார் ஏன் பிற நாடுகளுக்குச் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டார்கள் என்பதை அறியும். என் ஜனங்கள் எனக்கு விரோதமாக மாறினார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே நான் அவர்களிடமிருந்து விலகினேன். நான் அவர்களை அவர்களது பகைவர்கள் தோற்கடிக்கும்படிச் செய்தேன். எனவே, என் ஜனங்கள் போரில் கொல்லப்பட்டார்கள். 24 அவர்கள் பாவம் செய்து தம்மைத்தாமே அசுத்தம் செய்துகொண்டார்கள். எனவே அவர்கள் செய்தவற்றிற்காக நான் அவர்களைத் தண்டித்தேன். நான் அவர்களிடமிருந்து விலகி அவர்களுக்கு உதவி செய்ய மறுத்தேன்.”
25 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இப்பொழுது நான் யாக்கோபு வம்சத்தாரை சிறையிருப்பிலிருந்து கொண்டுவருவேன். நான் இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோர் மீதும் இரக்கம் கொள்வேன். நான் எனது பரிசுத்தமான நாமத்திற்காக பலமான உணர்ச்சியைக் காட்டுவேன். 26 ஜனங்கள் கடந்தகாலத்தில் எனக்கு விரோதமாகச் செய்தத் தீயச்செயல்களுக்காக வெட்கப்படுவார்கள். அவர்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். எவரும் அவர்களை அச்சப்படுத்தமுடியாது. 27 நான் மற்ற நாடுகளிலிருந்து என் ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவேன். அவர்களின் பகைவரது நாடுகளிலிருந்து அவர்களை ஒன்று கூட்டுவேன். பிறகு, பல நாடுகள் நான் எவ்வளவு பரிசுத்தமானவர் என்பதைக் காணும். 28 அவர்கள் நானே அவர்களது தேவனாகிய கர்த்தர் என்பதை அறிவார்கள். ஏனென்றால், நான் அவர்களைத் தம் சொந்த வீட்டினை விட்டு நாடு கடத்தப்பட்டு சிறை இருக்கச் செய்தேன். நான் அவர்களை ஒன்று கூட்டி அவர்களது நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவந்தேன். எந்த இஸ்ரவேலனும் சிறையிருப்பில் இருக்கமாட்டான். 29 நான் எனது ஆவியை இஸ்ரவேல் வம்சத்தாரிடம் ஊற்றுவேன். அதற்குப் பிறகு, நான் மீண்டும் என் ஜனங்களைவிட்டு விலகமாட்டேன்” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
போலிப் போதகர்கள்
2 கடந்த காலத்தில் தேவனுடைய மக்கள் மத்தியில் போலியான தீர்க்கதரிசிகளும் இருந்தனர். அதே வழியில், உங்கள் குழுவிலும் போலிப் போதகர்கள் கூட இருப்பார்கள். யாரும் பார்க்காத வகையில் இப்போலிப் போதகர்கள் மோசமான போதனைகளை அறிமுகப்படுத்துவார்கள். தங்களை மீட்டுக்கொண்டவரும், தங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தவருமான எஜமானரை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். எனவே அவர்கள் விரைவில் தங்களை அழித்துக்கொள்வார்கள். 2 அவர்கள் செய்கிற தீய செயல்களில் பலரும் அவர்களைப் பின்பற்றுவார்கள். அம்மக்களினால் பிற மக்கள் உண்மை வழியைக் குறித்து தீயவற்றைப் பேசுவர். 3 அவர்களின் பேராசையால் அந்தப் போலிப் போதகர்கள் உண்மையற்ற போலியான போதனைகள் மூலம் உங்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். வெகு காலத்திற்கு முன்பே தேவன் அவர்களுக்குத் தண்டனையை அறிவித்தார். இது வெறும் அச்சமூட்டத்தக்க பேச்சு அல்ல, அவர்களின் அழிவு தயாராகக் காத்திருக்கிறது.
4 தேவ தூதர்கள் பாவம் செய்தபோது, தேவன் அவர்களைத் தண்டனையின்றி விடுதலைபெற அனுமதிக்கவில்லை. தேவன் அவர்களை நியாயந்தீர்க்கிற நாள்வரைக்கும் அடைந்திருக்கும் பொருட்டு நரகத்தின் இருட்டு மூலைகளில் எறிந்தார்.
5 ஆதிகாலத்தில் வாழ்ந்த தீய மக்களையும் தேவன் தண்டித்தார். தேவனுக்கு எதிரான மக்கள் நிறைந்த உலகின் மேல் தேவன் வெள்ளம் பெருகியோடச் செய்தார். ஆனால் நோவாவையும், நோவாவோடு வேறு ஏழு பேரையும் தேவன் காப்பாற்றினார். சரியான வழியில் வாழ்வதுபற்றி மக்களுக்குப் போதித்த மனிதன் நோவா ஆவான்.
6 சோதோம், கொமோரா என்னும் தீய நகரங்களையும் தேவன் தண்டித்தார். சாம்பலைத் தவிர வேறெதுவும் இல்லாத வகையில் தேவன் அந்த நகரங்களை நெருப்பால் முற்றிலும் அழித்தார். தேவனுக்கு எதிரான மக்களுக்கு நடக்கவிருப்பதைத் தெரிவிக்கும் எடுத்துக்காட்டாக தேவன் அந்நகரங்களுக்குச் செய்தார். 7 ஆனால் தேவன் அந்நகரங்களினின்று லோத்துவைக் காப்பாற்றினார். லோத்து மிக நல்ல மனிதன். எந்தச் சட்டமுமற்ற மனிதர்களின் அநீதியான நடத்தையால் அவன் தொந்தரவுக்கு உள்ளாகி இருந்தான். 8 (லோத்து நல்ல மனிதன். ஆனால் நாள் தோறும் அவன் அத்தீய மனிதரோடு, வாழ்ந்து வந்தான். அவன் பார்த்ததும் கேட்டதுமாகிய தீய காரியங்களினால் லோத்தின் நல்ல மனம் வேதனையடைந்திருந்தது)
9 ஆம், தேவன் இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்தார். ஆகவே தமக்கு சேவை செய்கிற மக்களை எப்படி இரட்சிப்பது என கர்த்தர் அறிவார். மேலும் நியாயம்தீர்க்கிற நாள்வரை தீயவர்களைத் தண்டிப்பது எப்படி என்றும் அறிவார். 10 குறிப்பாக பாவங்களால் நிறைந்து ஊழல்கள் மலிந்த வழியைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கர்த்தரின் அதிகாரத்தை மீறுகிறவர்களுக்கும் இத்தண்டனை கிடைக்கும்.
போலிப்போதகர்கள் அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்வார்கள். மட்டுமன்றி, தங்களைக் குறித்து அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வார்கள். மகிமை மிக்க தேவதூதர்களைக் குறித்துத் தீயவற்றைப் பேசுவதற்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். 11 இந்தப் போலிப் போதகர்களைக் காட்டிலும் தேவதூதர்கள் வலிமையும் ஆற்றலும் மிக்கவர்கள். ஆனால் தேவதூதர்களும்கூட கர்த்தரின் முன்னிலையில் இந்தப் போலிப் போதகர்களைப் பற்றிக் குற்றம் சாட்டும்போது அவமானப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை.
12 தாம் அறியாத விஷயங்களைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இம்மக்கள் காரண காரியமின்றி வெறும் உந்துதலால் செயல்படும் மிருகங்களைப்போன்றவர்கள். பிடித்துக் கொல்லப்படுவதற்காகப் பிறக்கின்ற காட்டு மிருகங்களைப்போல இம்மக்களும் அழிக்கப்படுவார்கள். 13 இந்தப் போலிப் போதகர்கள் பலர் துன்புறக் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களும் துன்புறுத்தப்படுவார்கள்.
அவர்கள் செய்ததற்கு அவர்கள் பெறும் சம்பளம் அதுவேயாகும். பகல் நேரத்தில் பெரிய விருந்துகளில் சுகித்திருப்பதையே அவர்கள் சந்தோஷமாக எண்ணுகிறார்கள். கரும் புள்ளிகளாகவும், கறைகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களோடு உணவுக்கு வரும்போது தம் தந்திரம் நிறைந்த மகிழ்ச்சிகளிலேயே ஈடுபடுவார்கள். 14 ஒரு பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் அவளை அடைய விரும்புகிறார்கள். இந்தத் தீய போதகர்கள் இந்த வகையில் எப்போதும் பாவம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வலிமையற்ற மக்களைப் பாவ வலையில் சிக்கும்படியாகச் செய்கிறார்கள். அவர்கள் தம் இதயங்களுக்கு பேராசை கொள்ளும் பயிற்சியை அளித்திருக்கிறார்கள். அவர்கள் சாபம் பெற்றவர்கள்.
15 இந்தப் போலிப் போதகர்கள் சரியான வழியிலிருந்து விலகி, தவறான வழிக்குச் சென்றார்கள். அவர்கள் பிலேயாம் சென்ற வழியைப் பின்பற்றினார்கள். பிலேயாம் பேயோரின் மகன். தவறு செய்ய மக்கள் கொடுக்கும் கூலியை அவன் நேசித்தான். 16 ஆனால் அவன் தவறு செய்வதிலிருந்து ஒரு கழுதை அவனைத் தடுத்தது. கழுதையோ பேச இயலாத ஒரு மிருகம். ஆனால் அந்தக் கழுதை மனித குரலில் பேசி அத்தீர்க்கதரிசியின் பைத்தியக்காரத்தனமான சிந்தனையைத் தடுத்தது.
17 அந்தப் போலிப் போதகர்களோ நீரில்லாத ஊற்றுக்களைப் போன்றவர்கள். அவர்கள் புயலினால் அடித்துச் செல்லப்படுகின்ற மேகங்களைப் போன்றவர்கள். அவர்களுக்காகக் காரிருள் நிரம்பிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 18 அவர்களின் பேச்சு கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் உண்மையில் அது தகுதியற்றது. அவர்கள் மக்களைப் பாவ வலைக்குள் செலுத்துகிறார்கள். பாவங்களின் செல்வாக்கில் இருந்து தப்பிக்க ஆரம்பித்திருக்கிறவர்களை அவர்கள் தவறான பாதையில் வழி நடத்துகிறார்கள். தங்கள் பாவ சரீரங்களில் மக்கள் செய்ய விரும்பும் பொல்லாப்புகளைப் பயன்படுத்தி அப்போலிப் போதகர்கள் இதனைச் செய்கிறார்கள். 19 போலிப் போதகர்கள் அம்மக்களுக்கு விடுதலையைப் பற்றி வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் போலிப் போதகர்களே இன்னும் விடுதலை அடையவில்லை. மிகவும் மோசமான பழக்கங்களுக்கு அவர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். ஒருவனை ஆக்கிரமிக்கும் பொருளுக்கு அவன் அடிமையாகிறான்.
20 உலகத்தின் தீமைகளிலிருந்து அம்மக்கள் தப்பித்து விட்டார்கள். நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்ததால் அவர்கள் தப்பித்தார்கள். மீண்டும் அத்தீமைகளிடையே அவர்கள் அகப்பட்டு பலியானால், அவர்களது இறுதி நிலமை, அவர்களுடைய முந்தைய நிலமையைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும். 21 ஆம், தமக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைப்பற்றி அறிந்து, அதன் பிறகு அதிலிருந்து பிறழ்வதைக் காட்டிலும் இத்தகைய மக்கள் சரியான வழியைப்பற்றித் தெரிந்துகொள்ளாமலேயே இருப்பது நல்லதாகும். 22 “நாயானது வாந்தியெடுத்தபின், அந்த வாந்தியையே உண்ண வரும்” மற்றும், “ஒரு பன்றியைக் கழுவிய பின்னரும், அப்பன்றி சேற்றிற்குச் சென்று புரளும்” ஆகிய பழமொழிகளைப் போன்றவை அம்மக்களின் செயல் ஆகும்.
2008 by World Bible Translation Center