Old/New Testament
பானையும் இறைச்சியும்
24 எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தை என்னிடம் வந்தது. இது சிறைப்பட்ட ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தின் (டிசம்பர்) பத்தாம் நாளில் நடந்தது, அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, இந்த நாளின் தேதியையும் இந்தக் குறிப்பையும் நீ எழுதிவை. ‘இந்த நாளில் பாபிலோன் அரசனது படை எருசலேமை முற்றுகையிட்டது.’ 3 இந்தக் கதையைக் கீழ்ப்படிய மறுக்கும் குடும்பத்தாரிடம் (இஸ்ரவேல்) கூறு. அவர்களிடம் இவற்றைக் கூறு, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைக் கூறுகிறார்:
“‘பாத்திரத்தை அடுப்பிலே வை,
பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்று.
4 அதில் இறைச்சித் துண்டுகளைப் போடு.
தொடை மற்றும் தோள்களில் உள்ள நல்ல கறிகளைப் போடு,
நல்ல எலும்புகளாலும் பாத்திரத்தை நிரப்பு.
5 மந்தையில் நல்ல ஆடுகளை பயன்படுத்து,
பாத்திரத்திற்குக் கீழே விறகுகளை அடுக்கு,
இறைச்சித் துண்டுகளைக் கொதிக்க வை.
எலும்புகளும் வேகும்வரை பொங்கக் காய்ச்சு!
6 “‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
இது எருசலேமிற்குக் கேடாகும்.
கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது கேடாகும்.
எருசலேம் துரு ஏறிய ஒரு பாத்திரத்தைப் போன்றது.
அத்துரு நீக்க முடியாதது!
அப்பாத்திரம் சுத்தமானதாக இல்லை,
எனவே நீ அப்பாத்திரத்திலுள்ள எல்லாக் கறித் துண்டுகளையும் வெளியே எடுத்துப் போடவேண்டும்!
அக்கெட்டுப்போன இறைச்சியில் ஆசாரியர்கள் எதையும் தேர்ந்தெடுக்க, தின்ன அனுமதிக்கவேண்டாம்.
7 எருசலேம் துருவோடுள்ள பாத்திரத்தைப் போன்றது.
ஏனென்றால் கொலைகளினால் ஏற்பட்ட இரத்தம் இன்னும் உள்ளது!
அவள் வெறும் பாறையில் இரத்தத்தைப் போட்டாள்!
அவள் இரத்தத்தை நிலத்தில் ஊற்றி அதைப் புழுதியினால் மூடவில்லை.
8 நான் அவள் இரத்தத்தை வெறும் பாறையில் வைத்தேன்.
எனவே இது மறைக்கப்படாது.
நான் இதனைச் செய்தேன், எனவே ஜனங்கள் கோபப்படுவார்கள்,
அப்பாவி ஜனங்களைக் கொன்றதற்காக அவளைத் தண்டிப்பார்கள்.’”
9 “‘எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
கொலைக்காரர்கள் நிறைந்த இந்நகரத்துக்கு இது கேடாகும்!
நான் நெருப்புக்காக நிறைய விறகுகளை அடுக்குவேன்.
10 பாத்திரத்திற்குக் கீழே நிறைய விறகுகளை அடுக்கு.
நெருப்பு வை,
இறைச்சியை நன்றாக வேகவை!
மசாலாவைக் கலந்து வை.
எலும்புகளையும் எரித்துவிடு!
11 பிறகு பாத்திரத்தைக் காலியாக்கி நெருப்பின் மேல் வை.
அதன் கறைகள் உருகத் தொடங்கும் வரை சூடாக்கு.
அதன் கறைகள் உருகிவிடும்,
துருவும் அழிக்கப்படும்.
12 “‘எருசலேம், அழுக்கினை போக்க
கடுமையாக வேலை செய்யவேண்டும்.
ஆனாலும் “துரு” போகாது!
நெருப்பு (தண்டனை) மட்டுமே துருவை அகற்றும்!
13 “‘நீ எனக்கு எதிராகப் பாவம் செய்தாய்.
அதனால் பாவக்கறையோடு உள்ளாய்.
நான் உன்னைக் கழுவிச் சுத்தமாக்க விரும்பினேன்.
ஆனால் அழுக்கு வெளியேறவில்லை.
எனது கோபநெருப்பு தணியும்வரை
நான் மீண்டும் உன்னைக் கழுவ முயற்சி செய்யமாட்டேன்!
14 “‘நானே கர்த்தர், உனது தண்டனை வரும் என்று நான் சொன்னேன். நான் அது வரும்படிச் செய்வேன். நான் தண்டனையை நிறுத்தி வைப்பதில்லை. நான் உனக்காக வருத்தப்படுவதில்லை. நீ செய்த பாவங்களுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
எசேக்கியேல் மனைவியின் மரணம்
15 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 16 “மனுபுத்திரனே, நீ உன் மனைவியைப் அதிகமாய் நேசிக்கிறாய். ஆனால் நான் அவளை உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறேன். உன் மனைவி திடீரென்று மரிப்பாள். ஆனால் உனது துக்கத்தை நீ காட்டக்கூடாது. நீ உரக்க அழவேண்டாம். நீ அழுவாய். உன் கண்ணீர் கீழே விழும். 17 ஆனால் உனது துயரத்தை அமைதியாக வெளிப்படுத்தவேண்டும். உனது மரித்த மனைவிக்காக நீ உரக்க அழாதே. நீ வழக்கமாக அணிகிற ஆடையையே அணியவேண்டும். உனது தலைப் பாகையையும் பாதரட்சைகளையும் அணியவேண்டும். உனது துயரத்தைக் காட்ட மீசையை மறைக்க வேண்டாம். உறவினர் மரித்துப்போனால் வழக்கமாக மற்றவர்கள் உண்ணும் உணவை நீ உண்ண வேண்டாம்.”
18 மறுநாள் காலையில் ஜனங்களிடம் தேவன் சொன்னதைச் சொன்னேன். அன்று மாலையில் எனது மனைவி மரித்தாள். மறுநாள் காலையில் தேவனுடைய கட்டளைபடி நான் செய்தேன்: 19 பிறகு ஜனங்கள் என்னிடம் சொன்னார்கள்; “ஏன் இவ்வாறு செய்கிறீர்? இதன் பொருள் என்ன?”
20 பிறகு நான் அவர்களிடம் சொன்னேன்: “கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் 21 இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் சொல்லச் சொன்னார். எனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: ‘பார், நான் எனது பரிசுத்தமான இடத்தை அழிப்பேன். அந்த இடத்தைப்பற்றி பெருமைப்படுகிறீர்கள். அதைப்பற்றிப் புகழ்ந்து பாடுகிறீர்கள். அந்த இடத்தைப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் உண்மையில் அந்த இடத்தை நேசிக்கிறீர்கள். ஆனால் நான் அந்த இடத்தை அழிப்பேன். நீங்கள் விட்டுச்செல்லும் உங்கள் பிள்ளைகளைப் போரில் கொல்வேன். 22 ஆனால், நான் என் மனைவிக்குச் செய்ததையே நீங்கள் செய்வீர்கள். உங்கள் துக்கத்தைக் காட்ட மீசையை மறைக்கமாட்டீர்கள். ஒருவன் மரித்ததற்காக வழக்கமாக உண்ணும் உணவை நீங்கள் உண்ணமாட்டீர்கள். 23 நீங்கள் உங்கள் தலைப் பாகையையும் பாதரட்சைகளையும் அணிந்து கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துக்கத்தைக் காட்டமாட்டீர்கள். நீங்கள் அழமாட்டீர்கள். ஆனால் உங்களது பாவங்களால் நீங்கள் வீணாக்கப்படுவீர்கள். நீங்கள் உங்களது துயர ஒலிகளை ஒருவருக்கொருவர் அமைதியாக வெளிப்படுத்திக்கொள்வீர்கள், 24 எனவே எசேக்கியேல் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு, அவன் செய்ததை எல்லாம் நீங்கள் செய்வீர்கள். அந்தத் தண்டனைக் காலம் வரும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.’”
25-26 “மனுபுத்திரனே, நான் ஜனங்களிடமிருந்து அப்பாதுகாப்பான இடத்தை (எருசலேம்) எடுத்துக்கொள்வேன். அந்த அழகிய இடம் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்கள் அந்த இடத்தைப் பார்க்க அதிகமாக விரும்புகின்றனர். அவர்கள் உண்மையில் அந்த இடத்தை நேசிக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் நான் அந்த நகரத்தையும் அவர்களது பிள்ளைகளையும் எடுத்துக்கொள்வேன். தப்பிப் பிழைத்த ஒருவன் எருசலேம் பற்றிய கெட்ட செய்தியைச் சொல்வதற்கு வருவான். 27 அப்பொழுது அவனோடு பேச உன்னால் முடியும். நீ இனிமேலும் மௌனமாய் இருக்கமாட்டாய். இதுபோலவே நீ அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பாய். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்
25 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, அம்மோன் ஜனங்களை நோக்கி அவர்களுக்கு எதிராக எனக்காகப் பேசு. 3 அம்மோன் ஜனங்களிடம் சொல்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்! எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: எனது பரிசுத்தமான இடங்கள் அழிக்கப்பட்டபோது நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். இஸ்ரவேல் தேசம் பாழாக்கப்படுகிறபோது அதற்கு விரோதமாக இருந்தீர்கள். யூதாவின் குடும்பத்தினர் சிறைபிடிக்கப்பட்டபோது, அவர்களுக்கு விரோதமாக இருந்தீர்கள். 4 எனவே கிழக்கே உள்ள ஜனங்களிடம் உன்னைக் கொடுப்பேன். அவர்கள் உன் தேசத்தை எடுத்துக்கொள்வார்கள். அவர்களது படைவீரர்கள் உனது நாட்டில் தம் கூடாரங்களை அமைப்பார்கள். அவர்கள் உங்களிடையே வாழ்வார்கள். அவர்கள் உங்கள் பழங்களைத் தின்று உங்கள் பாலைக் குடிப்பார்கள்.
5 “‘நான் ரப்பா நகரத்தை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும் நாட்டை ஆட்டுக் கிடையாகவும் ஆக்குவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிந்துகொள்வாய். 6 கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: இஸ்ரவேல் அழிக்கப்பட்டதற்காக நீ மகிழ்ச்சி அடைந்தாய். நீ உன் கைகளைத் தட்டி கால்களால் மிதித்தாய். நீ இஸ்ரவேல் தேசத்தை கேலி செய்து அவமதித்தாய். 7 எனவே, நான் உன்னைத் தண்டிப்பேன். நீ, போரில் வீரர்கள் கைப்பற்றத்தக்க விலை மதிப்புள்ள பொருட்களாவாய். நீ உனது நிலத்தை இழப்பாய். தொலைதூர நாடுகளில் நீ மரித்துப்போவாய். நான் உனது நாட்டை அழிப்பேன்! பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.’”
மோவாப் மற்றும் சேயீருக்கு எதிரான தீர்க்கதரிசனம்
8 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “மோவாபும் சேயீரும் (ஏதோம்) சொல்கின்றன, ‘யூத வம்சமானது மற்ற நாடுகளைப் போன்றது.’ 9 மோவாபின் தோள்களை நான் வெட்டுவேன். அதன் எல்லையோரங்களில் உள்ள நகரங்களை நான் எடுத்துக்கொள்வேன். தேசத்தின் மகிமையையும் பெத்யெசிமோத்தையும், பாகால் மெயோனையும் கீரியாத்தாயீமையும் எடுத்துக்கொள்வேன். 10 பிறகு நான் இந்நகரங்களை கிழக்கே உள்ள ஜனங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உன் நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள். கிழக்கே உள்ள ஜனங்கள் அம்மோன் ஜனங்களை அழிக்கும்படி நான் அனுமதிப்பேன். அம்மோன் என்று ஒரு தேசம் இருந்ததை எல்லோரும் மறந்துவிடுவார்கள். 11 எனவே, நான் மோவாபைத் தண்டிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
ஏதோமிற்கு விரோதமான தீர்க்கதரிசனம்
12 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “ஏதோம் ஜனங்கள் யூதா வம்சத்தாருக்கு விரோதமாகத் திரும்பினார்கள். அவர்கள் பழி வாங்கினார்கள். ஏதோம் ஜனங்கள் குற்றவாளிகள்.” 13 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் ஏதோமைத் தண்டிப்பேன். நான் ஏதோமிலுள்ள மனிதர்களையும் விலங்குகளையும் அழிப்பேன். நான் தேமான் முதல் தேதான் வரையுள்ள ஏதோம் நாடு முழுவதையும் அழிப்பேன். ஏதோமியர்கள் போரில் கொல்லப்படுவார்கள். 14 நான் இஸ்ரவேலர்களாகிய என் ஜனங்களைப் பயன்படுத்தி, ஏதோமைப் பழிவாங்குவேன். இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் ஏதோமிற்கு விரோதமாக என் கோபத்தைக் காட்டுவார்கள், பிறகு ஏதோம் ஜனங்கள், அவர்களை நான் தண்டித்ததை அறிவார்கள்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
பெலிஸ்தியர்களுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்
15 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “பெலிஸ்தியர்கள் பழிவாங்க முயன்றனர். அவர்கள் மிகவும் கொடூரமானவர்கள். அவர்கள் தமக்குள் கோபத்தை நீண்ட காலமாக எரியவிட்டனர்!” 16 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன், ஆம், நான் கிரேத்தாவிலிருந்து வந்த அந்த ஜனங்களை அழிப்பேன். கடற்கரையோரமாக வாழ்கிற அனைவரையும் நான் அழிப்பேன். 17 நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். நான் பழிவாங்குவேன். எனது கோபம் அவர்களுக்கு ஒரு பாடத்தை கற்பிக்கும்படி நான் செய்வேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்!”
தீருவைப்பற்றிய துக்கச் செய்தி
26 பதினோராம் ஆண்டின் முதல் தேதியில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, எருசலேமைப்பற்றி தீரு கெட்டவற்றைச் சொன்னது: ‘ஆ, ஆ! ஜனங்களைப் பாதுகாக்கிற நகரவாசல் அழிக்கப்பட்டது! நகரவாசல் எனக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நகரம் (எருசலேம்) அழிக்கப்படுகிறது எனவே அதிலிருந்து எனக்கு ஏராளமான விலைமதிப்புள்ள பொருட்கள் கிடைக்கும்!’”
3 ஆகையால் எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “தீரு! நான் உனக்கு விரோதமானவன். உனக்கு எதிராகச் சண்டையிட பல நாடுகளை அழைத்துவருவேன். அவர்கள் மீண்டும் மீண்டும் கடற்கரை அலைகளைப்போன்று வருவார்கள்.”
4 தேவன் சொன்னார்: “அந்தப் பகைவீரர்கள் தீருவின் சுவர்களை அழிப்பார்கள், கோபுரங்களை இடித்துத் தள்ளுவார்கள், நானும் அந்நாட்டின் மேல் மண்ணைத் துடைப்பேன். தீருவை வெறும் பாறையைப்போன்று ஆக்குவேன். 5 தீருவானது மீன் பிடிப்பதற்கான வலைகள் விரித்து வைப்பதற்குரிய இடமாக ஆகும். நான் இதைச் சொன்னேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “தீரு, போரில் வீரர்கள் எடுக்கத்தக்கதான விலைமதிப்புள்ள பொருளாகும். 6 அவளது மகள்கள் (சிறு நகரங்கள்), முக்கிய பிராதான நிலத்தில் போரில் கொல்லப்படுவார்கள். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்று அறிவார்கள்.”
தீருவை நேபுகாத்நேச்சார் தாக்குவான்
7 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் தீருவுக்கு விரோதமாக வடக்கிலிருந்து பகைவரை வரவழைப்பேன். அப்பகைவன், பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார்! அவன் பெரும்படையைக் கொண்டுவருவான். அதில் குதிரைகள், இரதங்கள், குதிரை வீரர்கள், மற்றும் ஏராளமான வீரர்களும் இருப்பார்கள்! அவ்வீரர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள். 8 நேபுகாத்நேச்சார் உனது முக்கியமான நிலத்திலுள்ள மகள்களை (சிறு நகரங்களை) கொல்வான். உன் பட்டணத்தைத் தாக்க அவன் கோபுரங்களைக் கட்டுவான். உன் நகரைச் சுற்றி மண் பாதை போடுவான். அவன் மதில் சுவர்வரை போகும் வழிகளை அமைப்பான். 9 உனது சுவர்களை இடிக்க பெருந்தடிகளைக் கொண்டுவருவான். அவன் கடப்பாரைகளைப் பயன்படுத்தி உனது கோபுரங்களை இடிப்பான். 10 அங்கு ஏராளமாக குதிரைகள் இருக்கும். அவற்றிலுள்ள புழுதி உன்னை மூடும். குதிரை வீரர்கள், வாகனங்கள், இரதங்கள் ஆகியவற்றுடன் பாபிலோன் அரசன் நகர வாசல் வழியாக நுழையும்போது எழும் சத்தத்தால் உன் சுவர்கள் நடுங்கும், ஆம், அவர்கள் உன் நகரத்திற்குள்ளே வருவார்கள். ஏனென்றால், அதன் சுவர்கள் இடித்துத் தள்ளப்படும். 11 பாபிலோன் அரசன் நகரவாசல் வழியாக நகரத்திற்குள் சவாரி செய்து வருவான். அவனது குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளை எல்லாம் மிதிப்பான். அவன் உன் ஜனங்களை வாள்களால் கொல்லுவான். உன் நகரில் உள்ள பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும். 12 உனது செல்வங்களை நேபுகாத்நேச்சாரின் ஆட்கள் எடுத்துக்கொள்வார்கள். நீ விற்க விரும்புகிற பொருட்களை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன் சுவர்களை உடைத்தெறிவார்கள், கல்லாலும் மரத்தாலுமான இன்பமான வீடுகளை அழித்துக் குப்பையைப்போன்று கடலில் எறிவார்கள். 13 எனவே, நான் உனது மகிழ்ச்சியான பாடல் ஒலியை நிறுத்துவேன். ஜனங்கள் உனது சுரமண்டல ஒலியை இனிக் கேட்கமாட்டார்கள். 14 நான் உன்னை வெறுமையான பாறையாக்குவேன். நீ மீன் பிடிக்கும் வலையைப் பரப்புவதற்குரிய இடமாவாய்! நீ மீண்டும் கட்டப்படமாட்டாய். ஏனென்றால், கர்த்தராகிய நான் பேசினேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
பிற நாடுகள் தீருக்காக அழும்
15 எனது கர்த்தராகிய ஆண்டவர் தீருக்கு இதைக் கூறுகிறார்: “மத்தியதரை கடலோரங்களிலுள்ள நகரங்கள் எல்லாம் நீ விழுகிற சப்தம் கேட்டு நடுங்கும். உன் ஜனங்கள் காயமும் மரணமும் அடையும்போது இது நிகழும். 16 பிறகு அந்நாடுகளில் உள்ள தலைவர்கள் தம் சிங்காசனத்தை விட்டு இறங்கி தம் துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் தம் சிறப்பிற்குரிய ஆடைகளை அகற்றிவிடுவார்கள். அவர்கள் தம் அழகான ஆடைகளை அகற்றுவார்கள். பிறகு அவர்கள் தம் நடுக்கமாகிய ஆடையை (பயம்) அணிந்துகொள்வார்கள். அவர்கள் தரையில் அமர்ந்து அச்சத்தால் நடுங்குவார்கள். நீ இவ்வளவு விரைவாக அழிக்கப்பட்டதை எண்ணி அவர்கள் பிரமிப்பார்கள். 17 அவர்கள் உன்னைப்பற்றி இச்சோகப் பாடலைப் பாடுவார்கள்:
“‘ஓ தீருவே, நீ புகழ்பெற்ற நகரமாக இருந்தாய்.
ஜனங்கள் உன்னிடம் வாழக் கடல் கடந்து வந்தனர்.
நீ புகழோடு இருந்தாய்.
இப்போது நீ போய்விட்டாய்!
கடலில் நீ பலத்தோடு இருந்தாய்.
உன்னில் வாழ்பவர்களும் அப்படியே இருந்தார்கள்.
முக்கிய நிலத்தில் வாழ்பவர்களையெல்லாம் பயமுறுத்தினாய்.
18 இப்பொழுது நீ விழும் நாளில்
தீவுகளில் உள்ள நாடுகள் அச்சத்தால் நடுங்குகின்றன.
நீ பல குடியிருப்புக் கூட்டங்களைக் கடலோரமாகத் தொடங்கினாய்.
இப்பொழுது, நீ வீழ்ச்சியடையும் அன்று கடலோர நாடுகள் அச்சத்தால் நடுங்குவார்கள்.’”
19 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “தீரு, நான் உன்னை அழிப்பேன். நீ ஒரு பழைய வெறுமையான நகரமாவாய். அங்கு எவரும் வாழமாட்டார்கள். கடல் பொங்கி உன்மேல் பாயும்படி செய்வேன். பெருங்கடல் உன்னை மூடிவிடும். 20 நான் உன்னை மரித்த மனிதர்கள் இருக்கின்ற ஆழமான பாதாளத்திற்கு அனுப்புவேன். நீ நீண்ட காலத்திற்கு முன்னால் மரித்தவர்களோடு சேர்வாய். நீ குடியேறாமல் இருக்கும்படி தொடக்க காலம் முதல் பாழாயிருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்களோடு நான் உன்னைத் தங்கச் செய்வேன். பிறகு உன்னில் எவரும் வாழமாட்டார்கள். உயிர்கள் வாழும் இடத்தில் நீ இருக்கமாட்டாய்! 21 பிற ஜனங்கள் உனக்கு ஏற்பட்டதைப் பார்த்து அஞ்சுவார்கள். நீ முடிந்துபோவாய். ஜனங்கள் உன்னைத் தேடுவார்கள். அவர்கள் உன்னை மீண்டும் காணமாட்டார்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் சொல்வது இதுதான்.
ஜீவனுள்ள கல்லும் பரிசுத்தமான நாடும்
2 எனவே எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் விலகி இருங்கள். பொய் கூறாதீர்கள். போலியாக இருக்காதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். மக்களைக் குறித்துத் தீயன கூறாதீர்கள். இவற்றையெல்லாம் உங்கள் வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்துங்கள். 2 புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல இருங்கள். உங்களை ஆவியில் வளர்க்கும் பரிசுத்த பாலைப் போன்ற வேதவசனங்கள் மேல் பசியுடையவர்களாக இருங்கள். அதைப் பருகுவதால் நீங்கள் வளர்ந்து காப்பாற்றப்படுவீர்கள். 3 கர்த்தரின் நன்மைகளை நீங்கள் ஏற்கெனவே ருசித்துள்ளீர்கள்.
4 கர்த்தர் இயேசு ஜீவனுள்ள “தலைக் கல்லாக” இருக்கிறார். உலக மக்களால் ஒதுக்கப்பட்ட கல்லாக அவர் இருந்தார். ஆனால் தேவன் தேர்ந்தெடுத்த கல் அவர் தான். தேவனிடம் அவர் விலை மதிப்புள்ளவராக இருக்கிறார். எனவே அவரிடம் வாருங்கள். 5 நீங்களும் ஜீவனுள்ள கற்களைப் போன்றிருக்கிறீர்கள். ஓர் ஆன்மீக ஆலயத்தைக் கட்ட உங்களை தேவன் பயன்படுத்துகிறார். நீங்கள் இயேசு கிறிஸ்து வழியாக தேவன் ஏற்கத்தக்க ஆவிக்குரிய பலிகளைக் கொடுக்கும் பரிசுத்த ஆசாரியராக வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீங்கள் அப்பலிகளைக் கொடுங்கள். 6 வேதவாக்கியம் சொல்கிறது,
“பாருங்கள், நான் ஒரு விலையுயர்ந்த கல்லைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
அக்கல்லை சீயோன் என்னுமிடத்தில் வைத்தேன்.
அவரை நம்புகிற மனிதன் எப்போதும் வெட்கமுறுவதில்லை.” (A)
7 நம்புகிற மக்களுக்கு அவர் கௌரவத்துக்குரியதாகிறார். ஆனால் நம்பிக்கையற்ற மக்களுக்கோ, அவர் கட்டுபவர்கள்,
“வேண்டாமென்று தள்ளிய கல்லாகிறது.
ஆனால் அக்கல்லே மிக முக்கியமான கல்லாயிற்று” (B)
என்பதற்கேற்ப இருக்கிறார்.
8 நம்பிக்கையற்ற மக்களுக்கோ, அவர்,
“மக்களை இடறச் செய்யும் கல்லாவார்.
மக்களை விழவைக்கும் கல்லாவார்” (C)
என்பதற்கேற்ப இருக்கிறார். தேவனுடைய செய்திக்குக் கீழ்ப்படியாததால் மக்கள் இடறுகிறார்கள். அம்மக்களுக்கு தேவன் திட்டமிட்டிருப்பது இதுவே.
9 ஆனால் நீங்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நீங்கள் அரசரின் ஆசாரியர். நீங்கள் ஒரு பரிசுத்த தேசம். நீங்கள் தேவனுக்குச் சொந்தமான மக்கள். தேவன் தாம் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் சொல்வதற்காக உங்களைத் தேர்ந்தெடுத்தார். அவரது அற்புதமான ஒளிக்கு இருளிலிருந்து அவர் உங்களை வரவழைத்தார்.
10 ஒரு காலத்தில் நீங்கள் தேவனுடைய மனிதர்களாக இருக்கவில்லை.
ஆனால் இப்போது தேவனுடைய மக்களாக இருக்கிறீர்கள்.
ஒரு காலத்தில் தேவனுடைய இரக்கத்தை நீங்கள் பெறவில்லை.
ஆனால் இப்போது நீங்கள் தேவனிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுள்ளீர்கள்.
தேவனுக்காக வாழுங்கள்
11 அன்பான நண்பர்களே, நீங்கள் இந்த சமூகத்தில் வாழ்கிற அந்நியர்கள் போலவும் புதிய விருந்தாளிகள் போலவும் இருக்கிறீர்கள். உங்கள் சரீரங்கள் செய்ய விழையும் தீய காரியங்களை விட்டு விலகுமாறு நான் உங்களைக் கேட்கிறேன். இவை உங்கள் ஆன்மாவுக்கு எதிராகப் போராடுகின்றன. 12 தேவனிடம் நம்பிக்கையற்ற மக்கள் உங்களைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று இம்மக்கள் கூறக்கூடும். எனவே நல்வாழ்க்கை வாழுங்கள். அப்போது அவர்கள் உங்கள் நற்செய்கைகளைக் காண்பார்கள். அவர் வரும் நாளில் அவர்கள் தேவனுக்கு மகிமையைக் கொடுப்பார்கள்.
ஒவ்வொரு மனித அதிகாரத்திற்கும் கீழ்ப்படியுங்கள்
13 இவ்வுலகில் அதிகாரமுள்ள மக்களுக்குக் கீழ்ப்படியுங்கள். இதனைக் கர்த்தருக்காகச் செய்யுங்கள். உயர்ந்த அளவில் அதிகாரம் செலுத்தும் அரசனுக்குக் கீழ்ப்படியுங்கள். 14 அரசனால் அனுப்பப்பட்ட ஆளுநர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்கள் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்கும் நல்லவற்றைச் செய்பவர்களைப் புகழ்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள். 15 எனவே புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசும் முட்டாள் மனிதர்களின் வாயை அடைக்கும் பொருட்டு நற்செயல்களைச் செய்யுங்கள். இதையே தேவன் விரும்புகிறார். 16 சுதந்திரமான மனிதரைப்போன்று வாழுங்கள். தீயன செய்வதற்கு ஒரு காரணமாக உங்கள் விடுதலையைப் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் தேவனுக்கு சேவை செய்பவர்களாகவே வாழுங்கள். 17 எல்லாருக்கும் மரியாதை செலுத்துங்கள். தேவனுடைய குடும்பத்தில் எல்லா சகோதரர்களையும் சகோதரிகளையும் நேசியுங்கள். தேவனுக்கு அஞ்சுங்கள். அரசனை மதியுங்கள்.
கிறிஸ்துவின் துன்பத்திற்கு எடுத்துக்காட்டு
18 அடிமைகளே, உங்கள் எஜமானர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இதை எல்லா மரியாதையோடும் செய்யுங்கள். நல்ல இரக்கமுள்ள எஜமானருக்குக் கீழ்ப்படியுங்கள். முரட்டுத்தனமான எஜமானருக்கும் கீழ்ப்படியுங்கள். 19 ஒருவன் எந்தத் தவறும் செய்யாதபோதும் அவன் துன்பப்பட வேண்டியதிருக்கும். ஒருவன் தேவனை எண்ணிக்கொண்டே, துன்பத்தை அனுபவிப்பானாயின், அது தேவனை சந்தோஷப்படுத்தும். 20 ஆனால் நீங்கள் செய்த தவறுக்காகத் தண்டிக்கப்பட்டால், அத் தண்டனையை அனுபவிப்பதற்காக உங்களைப் புகழவேண்டியிராது. ஆனால் நன்மை செய்வதற்காக நீங்கள் துன்புற்றால் அது தேவனுக்கு சந்தோஷம் தரும். 21 அதைச் செய்வதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் பின்பற்றும்படியாக கிறிஸ்து ஓர் எடுத்துக்காட்டை உங்களுக்குத் தந்தார். அவர் செய்ததைப் போலவே நீங்களும் செய்யவேண்டும். கிறிஸ்து உங்களுக்காகத் துன்புற்றதால் நீங்கள் துன்பப்படும்போது பொறுமையாக இருக்கவேண்டும்.
22 “அவர் பாவமேதும் செய்யவில்லை.
அவரது வாயில் எந்தப் பொய்யும் வெளிவரவில்லை.” (D)
23 மக்கள் கிறிஸ்துவிடம் தீயவற்றைப் பேசினார்கள். ஆனால் அவர் அவர்களுக்கு எந்தத் தீய பதிலையும் தரவில்லை. கிறிஸ்து துன்புற்றார். ஆனால் அவர் மக்களுக்கு எதிராகப் பேசவில்லை. இல்லை! தேவன் தன்னைக் கவனித்துக்கொள்ளுமாறு கிறிஸ்து விட்டு விட்டார். தேவன் சரியான முறையில் நியாயந்தீர்க்கிறார். 24 சிலுவையின் மேல் கிறிஸ்து தம் சரீரத்தில் நம் பாவங்களையும் சுமந்தார். நாம் பாவங்களுக்காக வாழ்வதை நிறுத்தி, நேர்மையாக வாழ்வதற்காக அவர் இதைச் செய்தார். அவரது காயங்களினால் நீங்கள் குணமாக்கப்பட்டீர்கள். 25 தவறான வழியில் சென்ற ஆடுகளைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் மேய்ப்பனாகிய ஆன்மாவைக் காக்கிறவரிடம் வந்துவிட்டீர்கள்.
2008 by World Bible Translation Center