Old/New Testament
16 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, எருசலேம் ஜனங்களிடம் அவர்கள் செய்திருக்கிற வெறுக்கத்தக்க செயல்களைப்பற்றி சொல். 3 நீ சொல்லவேண்டியது, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிற்கு இவற்றைச் சொல்கிறார்; உன் வரலாற்றைப் பார், நீ கானான் தேசத்தில் பிறந்தாய். உனது தந்தை எமோரியன்: உனது தாய் எத்தித்தி. 4 எருசலேமே, உன் பிறந்த நாளில் உன் தொப்புள் கொடியை அறுக்க யாருமில்லை, உன் மீது உப்பினைப் போட்டு உன்னைக் கழுவிச் சுத்தப்படுத்திட எவருமில்லை. எவரும் உன்னைத் துணியில் சுற்றவில்லை. 5 எருசலேமே, நீ தனிமையாக இருந்தாய். உனக்காக எவரும் வருத்தப்படவில்லை. உன்னை ஆதரிக்க எவருமில்லை. எருசலேமே, நீ பிறந்த நாளிலே உன் பெற்றோர் உன்னை வயல்வெளியில் வீசினார்கள். நீ அப்பொழுதும் பிறந்தவுடன் உன்மேலுள்ள இரத்தத்தில் கிடப்பதைப் பார்த்தேன்.
6 “‘பிறகு நான் (தேவன்) கடந்து போனேன். அங்கே நீ இரத்தத்தில் கிடப்பதைப் பார்த்தேன். நீ இரத்தத்தால் மூடப்பட்டிருந்தாய். நான் “நீ பிழைத்திரு!” என்றேன். ஆம் நீ இரத்தத்தால் மூடப்பட்டிருந்தாய். ஆனால் நான், “நீ பிழைத்திரு!” என்று சொன்னேன். 7 வயலில் வளரும் செடியைப்போன்று நீ வளர நான் உதவினேன். நீ இளம் பெண்ணானாய். நீ மேலும் மேலும் வளர்ந்தாய். உனது மாதவிலக்குத் தொடங்கியது. உனது மார்புகள் வளர்ந்தன. உனது முடி வளரத்தொடங்கியது. ஆனால் நீ அப்பொழுதும் நிர்வாணமாக இருந்தாய். 8 நான் உன்னை முழுவதாய் பார்த்தேன். நீ மணம் செய்ய தயாராக இருப்பதைப் பார்த்தேன். எனவே நான் எனது ஆடைகளை உன்மேல் விரித்து உனது நிர்வாணத்தை மறைத்தேன். நான் உன்னை மணந்துகொள்வதாய் வாக்களித்தேன். நான் உன்னோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தேன். நீ என்னுடையவளானாய்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்: 9 “‘நான் உன்னை தண்ணீரில் கழுவினேன். நான் உன் இரத்தத்தைக் கழுவினேன். உன் தோல்மீது எண்ணெய் தடவினேன். 10 நான் உனக்கு சித்திரத் தையல் வேலை பொருந்திய ஆடையைக் கொடுத்தேன்: மென்மையான தோல் பாதரட்சைகளைக் கொடுத்தேன். நான் உனக்கு மெல்லிய புடவையையும் மூடிக்கொள்ள பட்டுச் சால்வையையும் கொடுத்தேன். 11 பிறகு, நான் உனக்கு சில நகைகளைக் கொடுத்தேன். நான் உனது கைகளில் கையணியையும், கழுத்துக்கு மாலையையும் கொடுத்தேன். 12 நான் உனக்கு மூக்கு வளையத்தையும், சில காதணிகளையும், அழகான கிரீடத்தையும் கொடுத்தேன். 13 நீ உனது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் அழகாக இருந்தாய். நீ மெல்லிய புடவையையும் பட்டையும் சித்திர வேலைப்பாடுகளுள்ள ஆடைகளையும் அணிந்தாய். நல்ல உணவினை உண்டாய். நீ மிக மிக அழகுபெற்றாய். நீ அரசி ஆனாய்! 14 நீ உன் அழகில் புகழ்பெற்றாய். ஏனென்றால், நான் உன்னை அழகாகவும் மகிமையாகவும் ஆக்கியிருந்தேன்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
எருசலேம் என்னும் உண்மையற்ற மணவாட்டி
15 தேவன் சொன்னார்: “ஆனால் நீ உனது அழகை நம்பத்தொடங்கினாய். நீ உனது நல்ல பெயரைப் பயன்படுத்தி எனக்கு உண்மையற்றவளாக ஆனாய். உன்னைக் கடந்துசெல்லும் ஒவ்வொருவரிடமும் நீ வேசியைப்போன்று நடந்துகொண்டாய். அவர்கள் அனைவருக்கும் நீ உன்னையே கொடுத்தாய். 16 நீ உனது ஆடைகளை எடுத்து தொழுகை இடங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தினாய். நீ அந்த இடங்களில் வேசியைப்போன்று நடந்துகொண்டாய். அங்கே வரும் அனைவருக்கும் நீ உன்னைக் கொடுத்தாய்! 17 பிறகு நீ உன் அழகான, நான் கொடுத்த நகைகளை எடுத்து, வெள்ளியாலும் தங்கத்தாலும் ஆன அந்நகைகளை ஆண் உருவங்களைச் செய்யப் பயன்படுத்தினாய். நீ அவர்களோடு பாலின உறவு வைத்துக்கொண்டாய். 18 பிறகு நீ உனது அழகான ஆடைகளை எடுத்து அச்சிலைகளுக்குப் பயன்படுத்தினாய். நான் உனக்குக் கொடுத்த நறுமணப் பொருட்களையும் தூபவர்க்கத்தையும் அவ்வுருவச் சிலைகளுக்கு முன்னால் வைத்தாய். 19 நான் உனக்கு அப்பம், தேன், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன். ஆனால் நீ அவற்றை அந்த விக்கிரகங்களுக்கு கொடுத்தாய். உனது பொய்த் தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்த நீ இனிய மணப்பொருட்களை வழங்கினாய்! அப்பொய்த் தெய்வங்களிடம் நீ ஒரு வேசியைப்போன்று நடந்துகொண்டாய்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
20 தேவன் சொன்னார்: “நீ எனக்குப் பெற்ற உன் மகன்களையும், உன் மகள்களையும் எடுத்து, அவர்களைக் கொன்று அப்பொய்த் தெய்வங்களிடம் கொடுத்துவிட்டாய்! ஆனால், நீ என்னை ஏமாற்றிவிட்டு அப்பொய்த் தெய்வங்களிடம் போனபோது நீ செய்த கெட்டக் காரியங்களில் இவைச் சில மாத்திரமே. 21 நீ எனது மகன்களை நெருப்பின் மூலம் கொன்று அப்பொய்த் தெய்வங்களுக்கு பலியாகக் கொடுத்தாய். 22 நீ என்னை விட்டு விலகி பயங்கரமானவற்றைச் செய்தாய். நீ இளமையாக இருந்த காலத்தைப்பற்றி நினைக்கவில்லை. நான் உன்னைக் கண்டபோது, நீ நிர்வாணமாக இரத்தம் படிந்து கிடந்ததை நினைப்பதில்லை.
23 “அனைத்துத் தீய செயல்களுக்கும் பிறகு,… ஓ எருசலேமே, உனக்கு மிகுந்த கேடு வரும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றையெல்லாம் கூறினார். 24 “அவை அனைத்துக்கும் பிறகு அந்தப் பொய்த் தெய்வத்தை தொழுதுகொள்ள நீ மேடையைக் கட்டினாய். ஒவ்வொரு தெருமுனையிலும் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள நீ அவ்விடங்களைக் கட்டினாய். 25 ஒவ்வொரு சாலையின் முனையிலும் நீ உயர்ந்த மேடைகளைக் கட்டினாய். பிறகு நீ உன் அழகை கேவலப்படுத்திக்கொண்டாய். அவ்வழியாகப் போவோரைப் பிடிக்க அதனைப் பயன்படுத்தினாய். நீ உனது பாவாடையைத் தூக்கினாய். அதனால் அவர்களால் உன் கால்களைக் காணமுடிந்தது. பின் அம்மனிதர்களோடு வேசிகளைப்போன்று நடந்துகொண்டாய். 26 பிறகு நீ எகிப்துக்குப் போனாய். ஏனென்றால் அவனிடம் பெரிய ஆணுறுப்பு இருந்தது. எனக்குக் கோபம் ஊட்டுவதற்காக நீ அவனோடு பலமுறை பாலின உறவு வைத்துக்கொண்டாய். 27 எனவே நான் உன்னைத் தண்டித்தேன். நான் உனது சம்பளத்தின் (நிலம்) ஒரு பகுதியை எடுத்துக்கொண்டேன். உனது பகைவர்களான பெலிஸ்தருடைய குமாரத்திகள் (நகரங்கள்) அவர்கள் விருப்பப்படி உனக்கு வேண்டியதைச் செய்ய அனுமதித்தேன். அவர்கள் கூட உனது முறைகேடான செயல்களைப் பார்த்து வெட்கப்பட்டார்கள். 28 பிறகு நீ அசீரியாவோடு பாலின உறவு செய்தாய். உனக்குப் போதுமானதை பெற முடியவில்லை, நீ எப்பொழுதும் திருப்திபட்டதில்லை. 29 எனவே நீ கானான் பக்கம் திரும்பினாய், பிறகு பாபிலோனில் இருந்தும் நீ திருப்தி அடையவில்லை. 30 நீ உன்னுடைய தீய வழிகளினால் பெலவீனமடைந்தாய். பாவம் செய்வதற்கு மற்ற அனைத்து ஆண்களையும் நீ அனுமதித்தாய். நீ ஒரு வெட்கமற்ற வேசியைப்போலவே நடந்துகொண்டாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
31 தேவன் சொன்னார், “ஆனால் நீ ஒரு சரியான வேசியாக இருக்கவில்லை. ஒவ்வொரு சாலை முனைகளிலும் நீ மேடைகளைக் கட்டினாய். ஒவ்வொரு தெருமுனையிலும் நீ வழிபடுவதற்கான இடங்களைக் கட்டினாய். நீ அம்மனிதர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாய். ஆனால் நீ வேசியைப்போன்று அவர்களிடம் பணம் கேட்கவில்லை. 32 நீ சோரம் போன பெண். நீ உன் சொந்தக் கணவனை விட்டுவிட்டு அந்நிய ஆண்களோடு பாலின உறவுகொள்வதை விரும்புகிறவள். 33 பெரும்பாலான வேசிகள் பாலின உறவுக்காக பணத்தை வற்புறுத்திக் கேட்பார்கள். ஆனால் நீ உனது நேசர்களுக்கு உன்னையே கொடுத்தாய். நீ உன்னுடைய நேசர்களுக்குப் பணத்தைக் கொடுத்து உன்னோடு பாலின உறவுகொள்ள வரும்படி அழைத்தாய். 34 நீ வேசிகளுக்கு எதிர்மாறாக இருக்கிறாய். வேசிகள் வேசித்தனம் செய்ய பணம் கேட்டு வற்புறுத்துவார்கள். ஆனால் நீயோ உன்னோடு உடலுறவு வைத்துக்கொள்பவர்களுக்குப் பணம் கொடுக்கிறாய்.”
35 வேசியே, கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேள். 36 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நீ உனது பணத்தைச் செலவழித்தாய். உன்னை நேசித்தவர்களும் பொய்த் தெய்வங்களும் உனது நிர்வாணத்தைக் காணவும் உன்னோடு பாலின உறவுகொள்ளவும் அனுமதித்தாய். நீ உன் குழந்தைகளைக் கொன்றிருக்கிறாய். அவர்களது இரத்தத்தைச் சிந்தினாய். அப்போலித் தெய்வங்களுக்கு இது நீயளித்த பரிசாகும். 37 எனவே நான் உன்னை நேசித்த யாவரையும் ஒன்று கூட்டுவேன். உன்னை நேசித்த எல்லா ஆண்களையும், நீ வெறுத்த எல்லா ஆண்களையும் ஒன்று கூட்டுவேன். அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி உனது நிர்வாணத்தைப் பார்க்கும்படிச் செய்வேன். அவர்கள் உனது முழு நிர்வாணத்தையும் பார்பார்கள். 38 பிறகு நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னைக் கொலைக்காரியாகவும் சோரம் போனவளாகவும் தண்டிப்பேன். ஒரு கோபமும் பொறாமையும்கொண்ட கணவனால் பழி தீர்க்கப்படுவதுபோல் தண்டிப்பேன். 39 உன்னை நேசித்தவர்களிடம் உன்னை ஒப்படைப்பேன். அவர்கள் உனது மேடைகளை அழிப்பார்கள். அவர்கள் உன்னை தொழுதுகொள்ளும் இடங்களை எரிப்பார்கள், அவர்கள் உன்னுடைய உயர்ந்த ஆராதனை மேடைகளை உடைத்துப்போடுவார்கள். அவர்கள் உனது ஆடைகளை கிழித்தெறிவார்கள். உனது அழகான நகைகளை எடுத்துக்கொள்வார்கள். நான் உன்னை முதலில் பார்த்தபோது இருந்ததைப்போன்று அவர்கள் உன்னை நிர்வாணமாக விட்டு விட்டுப் போவார்கள். 40 அவர்கள் ஜனங்கள் கூட்டத்தைக் கூட்டி வந்து உன்மேல் கல்லை எறிந்து கொல்ல முயல்வார்கள், பிறகு அவர்கள் தம் வாள்களால் உன்னைத் துண்டுகளாக வெட்டிப் போடுவார்கள். 41 அவர்கள் உனது வீட்டை (ஆலயத்தை) எரிப்பார்கள். பிற பெண்கள் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது அவர்கள் உன்னைத் தண்டிப்பார்கள். நீ ஒரு வேசியைப்போல் வாழ்வதை நான் தடுப்பேன். நீ உனது நேசர்களுக்குப் பணம் கொடுப்பதையும் நான் தடுப்பேன். 42 பிறகு நான் கோபமும் பொறாமையும் அடைவதை நிறுத்துவேன். நான் அமைதி அடைவேன். நான் இனிக் கோபங்கொள்ளமாட்டேன். 43 ஏன் இவை எல்லாம் நிகழ்கின்றன? நீ இளமையில் எவ்வாறு இருந்தாய் என்பதை நினைக்காததால் இவையெல்லாம் உனக்கு நிகழும். நீ அனைத்து தீயச்செயல்களையும் செய்து என்னைக் கோபமூட்டுகிறாய். அதனால் நான் உன்னைத் தீயச் செயல்களுக்காகத் தண்டித்தேன். ஆனால் நீ இன்னும் பயங்கரமான செயல்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
44 “உன்னைப்பற்றி பேசுகிற ஜனங்கள் எல்லாரும் பேச இன்னுமொன்று உள்ளது. அவர்கள், ‘தாயைப் போல மகள்’ என்று சொல்வார்கள். 45 நீ உனது தாயின் மகள். நீ உனது கணவன் அல்லது குழந்தைகளைப்பற்றி கவலைப்படுவதில்லை. நீ உனது சகோதரியைப் போன்றிருக்கிறாய். நீங்கள் இருவரும் கணவனையும் குழந்தைகளையும் வெறுத்தீர்கள். நீ உனது பெற்றோர்களைப் போன்றிருக்கிறாய். உனது தாய் ஏத்தித்தி, உன் தகப்பன் எமோரியன். 46 உனது மூத்த சகோதரி சமாரியா. அவள் உனது வட புறத்தில் தன் மகள்களோடு (நகரங்கள்) வாழ்ந்தாள். உன் இளைய சகோதரி சோதோம். அவள் உனது தென்புறத்தில் தனது மகள்களோடு (நகரங்கள்) வாழ்ந்தாள். 47 அவர்கள் செய்த அனைத்து பயங்கரங்களையும் நீயும் செய்தாய். ஆனால் நீ அவற்றை விடவும் மோசமாகச் செய்தாய். 48 நானே கர்த்தரும், ஆண்டவரும் ஆவேன். நான் உயிரோடு இருக்கிறேன். என் உயிரைக்கொண்டு நான் வாக்குரைக்கிறேன். உன் சகோதரி சோதோமும் அவளது மகள்களும் நீயும் உனது மகள்களும் செய்ததுபோன்று அவ்வளவு தீயச்செயல்களைச் செய்யவில்லை.”
49 தேவன் சொன்னார்: “உனது சகோதரி சோதோமும் அவளது மகள்களும் தற்பெருமை கொண்டவர்கள். அவர்கள் அதிகமாக உண்டார்கள். அதிகமான நேரத்தை வீணாக செலவழித்தனர். அவர்கள் ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவவில்லை. 50 சோதோமும் அவளது மகள்களும் மிகவும் தற்பெருமை கொண்டவர்களாகி எனக்கு முன்னால் தீமைகளைச் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் அவற்றைச் செய்வதைக் கண்டபோதெல்லாம் நான் தண்டித்தேன்.”
51 தேவன் சொன்னார்: “நீ செய்த தீயச் செயல்களில் பாதி அளவுக்கூட சமாரியா செய்யவில்லை. நீ சமாரியாவை விடப் பல மடங்கு தீமைகளைச் செய்திருக்கிறாய். நீ உன் சகோதரிகளை விடப் பல மடங்கு பாவங்களைச் செய்திருக்கிறாய். சோதோமும் சமாரியாவும் உன்னோடு ஒப்பிடும்போது நல்லவர்களாகத் தோன்றுகிறார்கள். 52 எனவே, உனது அவமானத்தை நீ தாங்கிக்கொள்ள வேண்டும். உன்னோடு ஒப்பிடும்போது உனது சகோதரிகளை நீ நல்லவர்கள் ஆக்கிவிடுகிறாய். நீ பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறாய். எனவே, நீ அவமானப்படவேண்டும்.”
53 தேவன் சொன்னார்: “நான் சோதோமையும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களையும் அழித்தேன். நான் சமாரியாவையும் அதனைச் சுற்றியுள்ளவற்றையும் அழித்தேன். எருசலேமே, உன்னையும் நான் அழிப்பேன். ஆனால் அந்நகரங்களை நான் மீண்டும் கட்டுவேன். எருசலேமே உன்னையும் நான் கட்டுவேன். 54 நான் உனக்கு ஆறுதல் அளிப்பேன். பிறகு நீ செய்த பயங்கரமான காரியங்களை நினைவுபடுத்துவாய். நீ அதற்கு அவமானப்படுவாய். 55 எனவே, நீயும் உன் சகோதரிகளும் மீண்டும் கட்டப்படுவீர்கள். சோதோமும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும் சமரியாவும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும், நீயும் உன்னைச் சுற்றியுள்ள நகரங்களும், மீண்டும் கட்டப்படுவீர்கள்.”
56 தேவன் சொன்னார், “முன்பு, நீ தற்பெருமை கொண்டு சோதோமைக் கேலி செய்தாய். ஆனால் நீ அவற்றை மீண்டும் செய்யமாட்டாய். 57 நீ தண்டிக்கப்படுவதற்கு முன்பும் உனது அயலவர்கள் உன்னைக் கேலிசெய்வதற்கு முன்பும் நீ அவற்றைச் செய்தாய். ஏதோமின் மகள்களும் (நகரங்கள்) பெலிஸ்தியாவும் உன்னை இப்போது கேலி செய்கிறார்கள். 58 இப்பொழுது நீ செய்த பயங்கரச் செயல்களுக்காக வருத்தப்படவேண்டும்.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
கர்த்தர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்
59 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார், “நீ என்னை நடத்தின வண்ணம் நான் உன்னை நடத்துவேன்! நீ உனது திருமண உடன்படிக்கையை உடைத்தாய். நீ நமது உடன்படிக்கையை மதிக்கவில்லை. 60 ஆனால் நான் உனது இளமையில் செய்த உடன்படிக்கையை ஞாபகப்படுத்திக்கொள்வேன். நான் என்றென்றும் தொடரும் ஒரு உடன்படிக்கை உன்னோடு செய்தேன்! 61 நான் உன் சகோதரிகளை உன்னிடம் அழைத்து வந்தேன். நான் அவர்களை உனது மகள்களாக ஆக்குவேன். அது நமது உடன்படிக்கையில் இல்லை. ஆனால் அதனை உனக்காகச் செய்வேன். பிறகு நீ உனது தீய வழிகளை நினைத்து அதற்காக அவமானமடைவாய். 62 எனவே நான் எனது உடன்படிக்கையை உன்னுடன் செய்வேன். நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய். 63 நான் உன்னிடம் நல்லபடி இருப்பேன். எனவே என்னை நீ நினைவுகொள்வாய். நீ செய்த தீமைகளுக்காக வெட்கப்படுவாய். உன்னால் ஒன்றும் சொல்லமுடியாது. ஆனால் நான் உன்னை தூய்மையாக்குவேன். நீ மீண்டும் வெட்கமடையமாட்டாய்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
17 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இக்கதையைக் கூறு. இதன் பொருள் என்னவென்று கேள். 3 அவர்களிடம் சொல்:
“‘ஒரு பெரிய கழுகு (நேபுகாத்நேச்சார்) பெருஞ் சிறகுகளுடன் லீபனோனுக்கு வந்தது.
அக்கழுகு புள்ளிகளைக்கொண்ட இறகுகளை கொண்டிருந்தது.
4 அக்கழுகு பெரிய கேதுரு மரத்தின் உச்சியை (லீபனோன்) உடைத்தது;
கானானுக்குக் கொண்டுவந்தது.
கழுகு வியாபாரிகளின் பட்டணத்திற்கு கிளையைக் கொண்டுவந்தது.
5 பிறகு கழுகு கானானிலிருந்து சில விதைகளை (ஜனங்கள்) எடுத்தது.
அது அவற்றை நல்ல மண்ணில் நட்டுவைத்தது.
அது நல்ல ஆற்றங்கரையில் நட்டது.
6 அவ்விதைகள் வளர்ந்து திராட்சை கொடியானது.
இது ஒரு நல்ல கொடி.
இக்கொடி உயரமாக இல்லை.
ஆனால் அது படர்ந்து பெரும் இடத்தை அடைத்தது.
அக்கொடிகளுக்கு வேர்கள் வளர்ந்தன.
சிறு கொடிகள் மிக நீளமாக வளர்ந்தன.
7 இன்னொரு பெரிய கழுகு தன் பெருஞ் சிறகுடன் இக்கொடியைப் பார்த்தது.
அக்கழுகுக்கு நிறைய இறகுகள் இருந்தன.
அத்திராட்சைக் கொடி,
இக்கழுகு தன்னைப் பராமரிக்க வேண்டும் என்று விரும்பியது.
எனவே இக்கழுகை நோக்கித் தன் வேர்களை வளர்த்தது.
அதன் கிளைகளும் இக்கழுகை நோக்கி நீண்டன.
கிளைகள் தன்னை நட்டுவைத்த நிலத்தை விட்டு வெளியே வளர்ந்தன.
திராட்சைக் கொடி இக்கழுகு தனக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என விரும்பியது.
8 திராட்சைக் கொடியானது நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.
ஏராளமான தண்ணீரின் அருகில் இது நடப்பட்டிருந்தது.
அதில் கிளைகளும் பழங்களும் வளர்ந்திருந்தன.
அது நல்ல திராட்சைக் கொடியாக இருந்திருக்கலாம்.’”
9 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்:
“அக்கொடி தொடர்ந்து செழித்து வளரும் என்று நினைக்கிறாயா?
இல்லை! புதிய கழுகு திராட்சைக் கொடியைப் பூமியில் இருந்து பிடுங்கும்.
அப்பறவை கொடியின் வேர்களை உடைக்கும்.
அது எல்லா திராட்சைகளையும் உண்ணும்.
பிறகு புதிய இலைகள் வாடி உதிரும்.
அக்கொடி மிகவும் பலவீனமாகும்.
பலம் வாய்ந்த புயத்தோடும் வல்லமை வாய்ந்த ஜனங்களோடும் வந்து
அதனைப் பிடுங்கிப்போடத் தேவையில்லை.
10 கொடியை நட்ட இடத்தில் அது வளருமா?
இல்லை! சூடான கிழக்குக் காற்று வீசும்.
அதில் அது வாடி உலர்ந்துபோகும்.
அது நட்டுவைத்த இடத்திலேயே வாடிப் போகும்.”
சிதேக்கியா அரசன் தண்டிக்கப்படுதல்
11 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 12 “இஸ்ரவேல் ஜனங்களிடம் இக்கதையைக் விவரித்துக் கூறு. அவர்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடம் இவற்றைச் சொல். முதல் கழுகு என்பது பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சார். அவன் எருசலேமிற்கு வந்தான். அரசனையும் தலைவர்களையும் பிடித்தான். அவன் அவர்களை பாபிலோனுக்குக் கொண்டு போனான். 13 பிறகு நேபுகாத்நேச்சார் அரச குடும்பத்திலுள்ள ஒருவனிடம் ஒப்பந்தம் செய்துகொண்டான். நேபுகாத்நேச்சார் அம்மனிதனை வற்புறுத்தி ஒரு வாக்குறுதியைச் செய்ய வைத்தான். எனவே அவன் நேபுகாத்நேச்சாருக்கு உண்மையாக இருப்பதாக வாக்களித்தான். நேபுகாத்நேச்சார் அவனை யூதாவின் புதிய அரசனாக ஆக்கினான், பிறகு அவன் ஆற்றல்மிக்க மனிதர்களையெல்லாம் யூதாவை விட்டு வெளியேற்றினான். 14 எனவே யூதா ஒரு பலவீனமான அரசானது. நேபுகாத்நேச்சாருக்கு எதிராகத் திரும்ப முடியாதுபோயிற்று. புதிய அரசனோடு செய்த ஒப்பந்தத்தை ஜனங்கள் பின்பற்றும்படி வற்புறுத்தப்பட்டனர். 15 ஆனால் புதிய அரசன் எப்படியாவது நேபுகாத்நேச்சாருக்கு எதிராகக் கலகம் செய்ய விரும்பினான்! அவன் உதவி வேண்டி எகிப்துக்குத் தூதுவர்களை அனுப்பினான். புதிய அரசன் ஏராளமான குதிரைகளையும், வீரர்களையும் கேட்டான். இப்பொழுது, யூதாவின் புதிய அரசன் வெற்றி பெறுவான் என்று நினைக்கிறீர்களா? இப்புதிய அரசன் போதிய ஆற்றலைப்பெற்று ஒப்பந்தத்தை உடைத்து தண்டனையில் இருந்து தப்புவான் என்று நினைக்கின்றீர்களா?”
16 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரின்மேல் உறுதியாகச் சொல்கிறேன்! புதிய அரசன் பாபிலோனில் மரிப்பான். நேபுகாத்நேச்சார் இப்புதியவனை யூதாவின் அரசனாக ஆக்கினான். ஆனால் இவன் தான் நேபுகாத்நேச்சாரோடுச் செய்த வாக்குறுதியை உடைத்தான். இப்புதிய அரசன் ஒப்பந்தத்தை அசட்டை செய்தான். 17 எகிப்தின் அரசன் யூதாவின் அரசனைக் காப்பாற்ற முடியாது. அவன் வேண்டுமானால் ஏராளமான வீரர்களை அனுப்பலாம். ஆனால் எகிப்தின் பெரும் பலம் யூதாவைக் காப்பாற்றாது. நேபுகாத்நேச்சாரின் படை நகரத்தைக் கைப்பற்றுவதற்காக மண் சாலைகளையும், முற்றுகைச் சுவர்களையும் கட்டுவார்கள். ஏராளமானவர்கள் மரிப்பார்கள். 18 ஆனால் யூதாவின் அரசன் தப்பிக்கமாட்டான். ஏனென்றால் அவன் தன் ஒப்பந்தத்தை அசட்டை செய்தான். அவன் நேபுகாத்நேச்சாரோடு செய்த வாக்குறுதியை உடைத்தான்.” 19 எனது ஆண்டவரான கர்த்தர் இந்த வாக்குறுதியைச் செய்கிறார்: “எனது உயிரின்மேல், நான் யூதாவின் அரசனைத் தண்டிப்பதாக வாக்குரைத்தேன். ஏனென்றால் அவன் எனது எச்சரிக்கையை அசட்டை செய்தான். அவன் எங்கள் ஒப்பந்தத்தை உடைத்தான். 20 நான் எனது வலையைப் போடுவேன். அவன் அதில் அகப்படுவான். நான் அவனை பாபிலோனுக்குக் கொண்டு வருவேன். அவன் அங்கே தண்டிக்கப்படுவான். ஏனென்றால் அவன் எனக்கு எதிராகத் திரும்பினான். 21 நான் அவனது படையை அழிப்பேன். நான் அவனது சிறந்த போர் வீரர்களை அழிப்பேன், தப்பிப் பிழைப்பவர்களை நான் காற்றில் சிதறடிப்பேன். பிறகு நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள். நான் இவற்றை உங்களுக்குச் சொன்னேன். 22 எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைக் கூறினார்:
“நான் உயர்ந்த கேதுரு மரத்திலிருந்து ஒரு கிளையை எடுப்பேன்.
நான் மர உச்சியிலிருந்து ஒரு சிறு கிளையை எடுப்பேன்.
நானே அதனை உயரமான மலையில் நடுவேன்.
23 நானே அதனை இஸ்ரவேலின் மலையில் நடுவேன்.
அக்கிளை மரமாக வளரும்.
அது கிளைகளாக வளர்ந்து கனிதரும்.
அது அழகான கேதுரு மரமாகும்.
பல பறவைகள் அதன் கிளைகளில் அமரும்.
பல பறவைகள் அதன் கிளைகளின் அடியிலுள்ள நிழலில் தங்கும்.
24 “பிறகு மற்ற மரங்கள்,
நான் உயரமான மரங்களைத் தரையில் வீழ்த்துவேன்,
குட்டையான மரங்களை உயரமாக வளர்ப்பேன் என்பதை அறியும்.
நான் பச்சைமரங்களை உலரச் செய்வேன்.
உலர்ந்த மரங்களைத் தளிர்க்கச் செய்வேன்.
நானே கர்த்தர்.
நான் சிலவற்றைச் செய்வதாகச் சொன்னால் செய்வேன்!”
நாம் சொல்வதைக் கட்டுப்படுத்துதல்
3 எனது சகோதர சகோதரிகளே, உங்களில் பலர் போதகர்களாகக் கூடாது. ஏனென்றால் போதிப்பவர்களாகிய நாம் மற்றவர்ளைவிட அதிகமாக நியாயந்தீர்க்கப்படுவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
2 நாமெல்லோரும் பல தவறுகளைச் செய்கிறோம். ஒருவன் எப்பொழுதும் தவறாகப் பேசாதவனாக இருந்தால் அவன் முழுமையானவனாகிறான். அவன் தனது முழு சரீரத்தையும் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றவனாகிறான். 3 நாம் குதிரைகளை அடக்கவேண்டுமானால் அவற்றின் வாயிலே கடிவாளத்தைப் போடுகிறோம். அதன் மூலம் அதன் முழு சரீரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறோம். 4 இது போலத் தான் கப்பலிலும். ஒரு கப்பல் மிகப் பெரியது; அது பெருங்காற்றால் தள்ளப்படுவது. ஆனால் சிறு சுக்கான் அந்த முழு கப்பலையும் இயக்கப் பயன்படுகின்றது. சுக்கானை இயக்குபவனுக்குக் கப்பலை எங்கே கொண்டு போவது என்று தெரியும். அவன் விரும்புகிற இடத்துக்கே கப்பல் போகும். 5 நமது நாக்கும் அப்படித்தான். அது சரீரத்தின் ஒரு சிறிய உறுப்பு. ஆனால் அது பெரிய காரியங்களைச் செய்வதைப்பற்றிப் பெருமை பேசுகிறது.
மேலும் சிறிய ஒரு நெருப்புப் பொறி எப்படி ஒரு முழுக் காட்டையே எரித்துவிட முடியும் என்பதைப் பற்றி எண்ணுங்கள். 6 மேலும் நாக்கு உண்மையில் நெருப்புப் பொறியாக இருக்கிறது. நம் சரீர உறுப்புகளின் நடுவில் தீமைகளை மூட்டிவிடுகிறது. நாக்கு தன் தீமையை சரீரம் முழுக்கப் பரப்பி நம் முழு வாழ்வையும் சிக்கலாக்கி வைக்கிறது. நரகத்திலுள்ள நெருப்பால் நாக்கு கொழுத்தப்படுகிறது.
7 மக்கள் எல்லாவகையான மிருகங்கள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன ஆகியவற்றையெல்லாம் அடக்கும் வலிமை பெற்றவர்கள். 8 ஆனால் நாவானது அடங்காததும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது. 9 அந்த நாவால் தான் நம் பிதாவாகிய கர்த்தரைத் துதிக்கிறோம். அவர் சாயலில் உருவாக்கப்பட்ட மனிதர்களையும் பழிக்கிறோம். 10 துதித்தலும் பழித்தலும் ஒரே வாயில் இருந்துதான் வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, அப்படி நடக்கக் கூடாது. 11 ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து இனிப்பும், கசப்புமான நீர் சுரக்க முடியாது. 12 என் சகோதர சகோதரிகளே, அத்திமரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே உவர்ப்பான நீரூற்று இனிப்பான நீரைக் கொடுக்காது.
உண்மையான ஞானம்
13 உங்களில் ஞானமும், விவேகமும் பொருந்திய ஒருவன் இருந்தால் தன் நன்னடத்தையின் மூலம் பணிவோடு நற்காரியங்களைச் செய்து அதை அவன் புலப்படுத்தட்டும். 14 உங்கள் இதயத்தில் கசப்பான பொறாமையும் சுயநலமும் இருந்தால், உங்கள் ஞானத்தைப்பற்றி நீங்கள் பெருமைப்பட முடியாது. அப்பெருமைப் பாராட்டுதல் உண்மையை மறைக்கிற ஒரு பொய்யாகவே இருக்கும். 15 அவ்வித ஞானம் சொர்க்கத்தில் இருந்து வருவதில்லை. சுயநல வேட்கைகளிலிருந்தும், பேய்த்தனத்திலிருந்தும் உருவாகும் இந்த உலகத்திலிருந்து அது வருகிறது. 16 எங்கே பொறாமையும், சுயநலமும் உள்ளதோ அங்கே குழப்பமும் எல்லா வகைப் பாவங்களும் இருக்கும். 17 ஆனால் மேலிருந்து வருகிற ஞானம் முதலாவதாகத் தூய்மையாக இருக்கிறது. பிறகு சமாதானமாகவும், இணக்கமுள்ளதாகவும், எளிதில் மகிழ்ச்சிப்படுத்த முடிந்ததாகவும், கருணை நிறைந்ததாகவும் பல நற்செயல்களை உருவாக்குவதாகவும் இருக்கிறது. பாரபட்சமற்றதாகவும் போலித்தன்மையற்றதாகவும் கூட இருக்கிறது. 18 சமாதானமான வழியிலே சமாதானத்துக்காக உழைக்கிற மக்கள் நீதியாகிய வாழ்வின் பலனைப் பெறுகின்றார்கள்.
2008 by World Bible Translation Center