Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
புலம்பல் 1-2

எருசலேம் அவளது அழிவிற்காக அழுகிறாள்

எருசலேம் ஒரு காலத்தில் ஜனங்கள் நிறைந்த நகரமாக இருந்தது.
    ஆனால் இப்போது, இந்த நகரம் வனாந்தரமாயுள்ளது!
எருசலேம் உலகத்தில் பெரிய நகரங்களுள் ஒன்றாயிருந்தது.
    ஆனால் இப்போது, அவள் ஒரு விதவையைப் போன்றிருக்கிறாள்.
அவள் ஒரு காலத்தில் நகரங்களில் இளவரசியைப் போன்றிருந்தாள்.
    ஆனால் இப்பொழுது அடிமையாக்கப்பட்டிருக்கிறாள்.
அவள் இரவில் பரிதாபமாக அழுகிறாள்.
    அவளது கண்ணீர் அவளின் கன்னங்களில் உள்ளது.
    இப்பொழுது யாருமே அவளைத் தேற்றுவாரில்லை.
பல நாடுகள் அவளிடம் நட்புடனிருந்தன.
    இப்பொழுது யாரும் அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை.
அவளது அனைத்து நண்பர்களும் அவளுக்கு முதுகைத் திருப்பிக் கொண்டனர்.
    அவளது நண்பர்கள் அவளின் எதிரிகளானார்கள்.
யூதா மிகவும் துன்புற்றது.
    பிறகு, யூதா சிறையெடுக்கப்பட்டது.
யூதா மற்ற நாடுகளுக்கு மத்தியில் வாழ்கிறது.
    ஆனால், அவள் ஓய்வைப் பெற்றிருக்கவில்லை.
ஜனங்கள் அவளைத் துரத்திப் பிடித்தார்கள்.
    அவர்கள் அவளைக் குறுகலான பள்ளத்தாக்குகளில் பிடித்தனர்.
சீயோனுக்குப் போகிற சாலைகள் மிகவும் துக்கப்படுகின்றன.
    ஏனென்றால், விடுமுறை நாட்களைக் கழிக்க எவரும் இனிமேல் வருவதில்லை.
சீயோனின் அனைத்து வாசல்களும் அழிக்கப்பட்டன.
    சீயோனின் அனைத்து ஆசாரியர்களும் தவிக்கிறார்கள்.
சீயோனின் இளம் பெண்கள் கடத்திக் கொண்டுப்போகப்பட்டனர்.
    இவை அனைத்தும் சீயோனுக்கு துக்கத்தை ஏற்படுத்துகிறது.
எருசலேமின் பகைவர்கள் வெற்றி பெற்றார்கள்.
    அவளது பகைவர்கள் வளமடைந்தனர்.
இது ஏன் நிகழ்ந்தது என்றால், கர்த்தர் அவளைத் தண்டித்தார்.
    அவர் எருசலேமை அவளது பல பாவங்களுக்காகத் தண்டித்தார்.
அவளது பிள்ளைகள் வெளியேறிவிட்டனர்.
    அவர்களது பகைவர்கள் அவர்களைக் கைப்பற்றி பிடித்துக்கொண்டு போனார்கள்.
சீயோன் மகளது [a] அழகு போய்விட்டது.
    அவளது இளவரசர்கள் மேய்ச்சல் இடத்தைக் கண்டுபிடியாத மான்களைப் போலானார்கள்.
    அவர்கள் பலமில்லாமல் அவர்கள் தம்மை துரத்துகிறவனை விட்டு ஓடிப்போனார்கள்.
எருசலேம் பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறாள்.
எருசலேம் தான் பாதிக்கப்பட்டு
    தன் வீடுகளை இழந்த காலத்தை நினைக்கிறாள்.
அவள் கடந்த காலத்தில் தான் பெற்றிருந்த
    இனிய காரியங்களை எண்ணிப் பார்க்கிறாள்.
அவள் பழைய நாட்களில் பெற்ற
    சிறந்தவற்றை நினைத்துப் பார்க்கிறாள்.
அவள் தனது ஜனங்கள் எதிரிகளால் சிறை பிடிக்கப்பட்டதை
    எண்ணிப் பார்க்கிறாள்.
அவள் தனக்கு உதவ எவரும் இல்லாத
    நிலையை எண்ணுகிறாள்.
அவளை அவளது பகைவர்கள் பார்க்கும்போது சிரித்தார்கள்.
    ஏனென்றால், அவள் அழிக்கப்பட்டாள்.
எருசலேம் மிக மோசமான பாவங்களைச் செய்தாள்.
    எருசலேம் பாவம் செய்ததால்,
    அவள் அழிக்கப்பட்ட நகரமானாள்.
ஜனங்கள் அவளது நிலையைக் கண்டு தங்களின் தலைகளை அசைத்து மறுதலிக்கிறார்கள்.
    கடந்த காலத்தில் ஜனங்கள் அவளை மதித்தனர். இப்போது ஜனங்கள் அவளை வெறுக்கின்றனர்.
ஏனென்றால், அவர்கள் அவளை அவமானப்படுத்தினார்கள்.
    எருசலேம் பெருமூச்சுவிட்டு பின்னிட்டுத் திரும்பினாள்.
எருசலேமின் ஆடைகள் அழுக்காயின.
    அவளுக்கு என்ன நிகழப்போகிறது என்பதைப் பற்றி அவள் எண்ணிப் பார்க்கவில்லை.
பார் நான் எப்படி காயப்பட்டேன்! அவளது வீழ்ச்சி அதிசயமானது.
    அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை.
“கர்த்தாவே! நான் எவ்வாறு காயப்பட்டேன் என்பதைப் பாரும்.
    எனது பகைவன் தன்னை எவ்வளவு பெரியவனாக நினைக்கிறான் என்பதைப் பாரும்!” என்று சொன்னாள்.

10 பகைவன் தனது கையை நீட்டினான்.
    அவன் அவளது இன்பமான அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.
உண்மையில், அவள் தனது ஆலயத்திற்குள் அயல்நாட்டவர்கள் நுழைவதைப் பார்த்தாள்,
    கர்த்தாவே, அந்த ஜனங்கள் எங்கள் சபையில் சேரமுடியாது என்று நீர் சொன்னீர்!
11 எருசலேமின் அனைத்து ஜனங்களும் தவிக்கிறார்கள்.
    அவர்கள் உணவுக்காக அலைகிறார்கள்.
    அவர்கள் தங்கள் நல்ல பொருட்களை உணவுக்காக மாற்றிக் கொண்டார்கள்.
    அவர்கள் உயிர் வாழ்வதற்காக இவற்றைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
எருசலேம் சொல்கிறது: “கர்த்தாவே என்னைப் பாரும்!
    ஜனங்கள் என்னை எப்படி வெறுக்கிறார்கள் பாரும்.
12 சாலை வழியாகக் கடந்து செல்லும் ஜனங்களே,
    நீங்கள் எனக்காக கவலைப்படுகின்றவர்களாக தெரியவில்லை.
ஆனால் என்னைப் பாருங்கள்.
    எனது வலியைப்போன்று வேறுவலி உண்டோ?
    எனக்கு வந்திருக்கிற வலியைப்போன்று வேறுவலி இருக்கிறதா?
கர்த்தர் என்னைத் தண்டித்திருக்கிறது போன்றவலி வேறு உள்ளதோ?
    அவர் தனது பெருங்கோபமான நாளில் என்னைத் தண்டித்திருக்கிறார்.
13 கர்த்தர் மேலிருந்து நெருப்பை அனுப்பினார்,
    அந்த நெருப்பு எனது எலும்புகளுக்குள் சென்றது.
அவர் எனது கால்களுக்கு வலையை விரித்தார்.
    என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்.
என்னைப் பாழ்நிலமாகப் பண்ணினார்.
    நாள் முழுவதும் நான் நோயுற்றிருந்தேன்.

14 “எனது பாவங்கள் நுகத்தைப்போன்று கட்டப்பட்டுள்ளது,
    எனது பாவங்கள் கர்த்தருடைய கைகளில் கட்டப்பட்டுள்ளது.
கர்த்தருடைய நுகம் என் கழுத்தில் இருக்கிறது.
    கர்த்தர் என்னை பலவீனமாக்கியுள்ளார்.
நான் எதிர்த்து நிற்க முடியாதபடி
    கர்த்தர் என்னை ஒடுக்குகிற ஜனங்களின் கையில் கொடுத்திருக்கிறார்.
15 கர்த்தர் எனது பலமான படை வீரர்களை மறுத்துவிட்டார்.
    அவ்வீரர்கள் நகரத்திற்குள்ளே இருந்தனர்.
பிறகு கர்த்தர் ஒரு ஜனக்குழுவை எனக்கு எதிராக கொண்டு வந்தார்.
    என்னுடைய இளம் வீரர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வந்தார்.
கர்த்தர் ஆலைக்குள்ளே திராட்சைப் பழங்களை மிதிப்பதுபோல
    யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.

16 “நான் இவை அனைத்தின் நிமித்தம் அழுகிறேன்.
    எனது கண்களில் கண்ணீர் ஓடுகிறது.
எனக்கருகில் ஆறுதல் எதுவுமில்லை.
    என்னைத் தேற்ற எவருமில்லை.
எனது பிள்ளைகள் பாழான நிலத்தைப் போன்றிருக்கிறார்கள்.
    அவர்கள் அவ்வாறு இருக்கின்றனர்.
    ஏனென்றால் பகைவர்கள் வென்றிருக்கின்றனர்.”

17 சீயோன் தனது கைகளை விரித்தாள்.
    அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை.
கர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்.
    கர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு நகரத்தைச் சுற்றி வளைக்கும்படி கட்டளையிட்டார்.
எருசலேம் அசுத்தமாகியிருக்கிறது.
    அந்தப் பகைவர்களுக்கு மத்தியில் எருசலேம் அசுத்தமாயிற்று.

18 இப்போது எருசலேம் கூறுகிறாள்: “நான் கர்த்தருக்கு செவிகொடுக்க மறுத்தேன்.
    எனவே, கர்த்தர் இவற்றையெல்லாம் செய்யும் உரிமையைப் பெற்றார்.
எனவே ஜனங்களே, கவனியுங்கள்! எனது வேதனையைப் பாருங்கள்!
    எனது இளம் பெண்களும் ஆண்களும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
19 நான் எனது நேசர்களை கூப்பிட்டேன்.
    ஆனால் அவர்கள் என்னை மோசம் பண்ணினார்கள்.
எனது ஆசாரியர்களும், முதியவர்களும்
    இந்நகரத்தில் மரித்திருக்கின்றனர்.
அவர்கள் உணவுக்காக அலைந்திருக்கிறார்கள்.
    அவர்கள் உயிரோடு வாழ விரும்பியிருக்கிறார்கள்.

20 “என்னைப் பாரும் கர்த்தாவே, நான் மிக்க துன்பத்தில் இருக்கிறேன்!
    எனது உள்மனம் கலங்குகிறது!
எனது இதயம் மேலிருந்து கீழ்ப்பக்கம் திரும்பினதுபோல் உள்ளது!
    என்னுடைய கசப்பான அனுபவங்களின்
காரணமாக என் இதயம் இப்படி உணர்கிறது!
    வீதிகளில் வாள் எனது பிள்ளைகளைக் கொன்றது.
வீடுகளுக்குள் மரணம் இருந்தது.

21 “என்னைக் கவனியுங்கள்! ஏனென்றால், நான் தவித்துக்கொண்டிருக்கிறேன்.
    எனக்கு ஆறுதல் சொல்ல எவரும் இல்லை!
எனது பகைவர்கள் எல்லாரும் என் துன்பத்தைக் கேள்விப்பட்டு,
    அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.
நீர் இவற்றை எனக்குச் செய்ததால்,
    அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
தண்டனைக்குரிய காலம் வரும் என்று நீர் சொன்னீர்.
    எனது பகைவர்களைத் தண்டிப்பதாகச் சொன்னீர்.
நீர் என்ன சொன்னீரோ அதை இப்பொழுது செய்யும்.
    நான் இப்பொழுது இருப்பதுபோன்று என் பகைவரும் இருக்கட்டும்.

22 “எனது பகைவர்கள் எவ்வளவு கொடியவர்கள் எனப்பாரும்.
    எனது பாவங்களுக்கெல்லாம் எனக்கு எவ்வாறு செய்தீரோ அதே வழியில் அவர்களுக்கும் செய்யும்.
இதனைச் செய்யும்.
ஏனென்றால், நான் மேலும் மேலும் வேதனையடைகிறேன்.
    ஏனென்றால், எனது இதயம் நோயுற்றிருக்கிறது.”

கர்த்தர் எருசலேமை அழித்தார்.

கர்த்தர் சீயோன் மகளை ஒரு மேகத்தின் கீழ் எவ்வாறு மூடி வைத்திருக்கிறார் என்பதை பார்.
    அவர் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமிக்கு எறிந்திருக்கிறார்.
    கர்த்தர் அவரது கோப நாளில் இஸ்ரவேல் அவரது பாதபீடம் என்பதை தன் மனதில் வைக்கவில்லை.
கர்த்தர் யாக்கோபின் வீடுகளை அழித்தார்.
    அவர் அவற்றை இரக்கமில்லாமல் அழித்தார்.
அவர் அவரது கோபத்தில் யூதா மகளின் [b]
    கோட்டைகளை அழித்தார்.
கர்த்தர் யூதாவின் இராஜ்யத்தையும்
    அதன் அரசர்களையும் தரையில் தூக்கி எறிந்தார்.
    அவர் யூதாவின் இராஜ்யத்தை அழித்தார்.
கர்த்தர் கோபமாக இருந்து இஸ்ரவேலின் பலத்தை அழித்தார்.
    அவர் தனது வலது கையை இஸ்ரவேலிலிருந்து எடுத்தார்.
பகைவர்கள் வந்தபோது அவர் இதனைச் செய்தார்.
    அவர் யாக்கோபில் அக்கினி ஜூவாலைப் போல் எரிந்தார்.
அவர் சுற்றிலும் உள்ளவற்றை எரிக்கிற
    நெருப்பைப் போன்று இருந்தார்.
கர்த்தர் தனது வில்லை ஒரு பகைவனைப் போன்று வளைத்தார்.
    அவர் தனது வாளை வலது கையில் ஏந்தினார்.
அவர் யூதாவினுள் கண்ணுக்கு அழகான ஆண்களை எல்லாம் கொன்றார்.
    கர்த்தர் ஒரு பகைவனைப்போன்று அவர்களைக் கொன்றார்.
கர்த்தர் தனது கோபத்தை ஊற்றினார்.
    அவர் சீயோனின் கூடாரங்களில் அதனை ஊற்றினார்.

கர்த்தர் ஒரு பகைவனைபோன்று ஆகியிருக்கிறார்.
    அவர் இஸ்ரவேலை விழுங்கியிருக்கிறார்.
அவர் அவளது அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்.
    அவர் அவளது கோட்டைகளையெல்லாம் விழுங்கினார்.
அவர் யூதா மகளின் மரித்த ஜனங்களுக்காக
    மிகவும் துக்கமும் அழுகையும் உண்டாக்கினார்.

கர்த்தர் தனது சொந்த கூடாரத்தை
    ஒரு தோட்டத்தின் செடிகளைப் பிடுங்குவதைப் போன்று பிடுங்கிப்போட்டார்.
ஜனங்கள் போய் கூடி அவரை தொழுவதற்காக
    இருந்த இடத்தை அவர் அழித்திருந்தார்.
கர்த்தர் சீயோனில் சிறப்பு சபைக் கூட்டங்களையும்,
    ஓய்வு நாட்களையும் மறக்கப்பண்ணினார்.
கர்த்தர் அரசன் மற்றும் ஆசாரியர்களை நிராகரித்தார்.
    அவர் கோபங்கொண்டு அவர்களை நிராகரித்தார்.
கர்த்தர் அவரது பலிபீடத்தையும் தனது தொழுவதற்குரிய பரிசுத்தமான இடத்தையும் புறக்கணித்தார்.
    அவர் எருசலேமின் அரண்மனை சுவர்களை இடித்துப்போடும்படி பகைவர்களை அனுமதித்தார்.
பண்டிகை நாளில் ஆரவாரம் செய்வதுபோல்
    கர்த்தருடைய ஆலயத்தில் ஆரவாரம் பண்ணினர்.
சீயோன் மகளின் சுவர்களை அழித்திட கர்த்தர் திட்டமிட்டார்.
    அவர் ஒரு அளவு கோட்டை சுவரில் குறித்து,
அதுவரை இடித்துப் போடவேண்டும் என்று காட்டினார்.
    அவர் அழிப்பதிலிருந்து தன்னை நிறுத்தவில்லை.
எனவே, அவர் அனைத்து சுவர்களையும் துக்கத்தில் அழும்படிச் செய்தார்.
    அவை எல்லாம் முற்றிலும் ஒன்றுக்கும் உதவாது அழிந்துபோயின.

எருசலேமின் வாசல்கள் தரையில் அமிழ்ந்துகிடந்தன.
    அவர் அதன் தாழ்ப்பாள்களை உடைத்து நொறுக்கிப்போட்டார்.
அவரது அரசன் மற்றும் இளவரசர்கள் அயல் நாடுகளில் இருக்கிறார்கள்.
    அங்கே அவர்களுக்கு இனி வேறு போதனைகள் எதுவுமில்லை.
எருசலேமின் தீர்க்கதரிசிகளும் கூட
    கர்த்தரிடமிருந்து எந்தவிதமான தரிசனத்தையும் பெறவில்லை.

10 சீயோனின் முதியவர்கள் தரையில் இருக்கின்றனர்.
    அவர்கள் தரையில் அமர்ந்து மௌனமாக இருக்கிறார்கள்.
தம் தலையில் அவர்கள் தூசியைப் போட்டனர்.
    அவர்கள் கோணியைப் போட்டுக்கொள்கிறார்கள்.
எருசலேமின் இளம்பெண்கள் துக்கத்தில்
    தலைகளைக் குனிந்து தரையைப் பார்க்கின்றனர்.

11 எனது கண்கள் கண்ணீரால் களைத்துப்போயின!
    எனது உள்மனம் கலங்குகிறது!
எனது இதயம் தரையில் ஊற்றப்பட்டதுபோன்று உணர்கின்றது!
    எனது ஜனங்களின் அழிவைக்கண்டு நான் இவ்வாறு உணர்கிறேன்.
பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது வீதிகளின் மூலைகளிலும்
    மயக்கமடைந்து கிடக்கின்றனர்.
12 அப்பிள்ளைகள் தம் தாய்மார்களிடம்,
    “அப்பமும் திராட்சைரசமும் எங்கே?” எனக் கேள்வியைக் கேட்ட வண்ணமாகவே அவர்களின் தாயின் மடியிலே மரிக்கின்றனர்.
13 சீயோன் மகளே, நான் எதனோடு உன்னை ஒப்பிட முடியும்?
    சீயோனின் கன்னிகையே, நான் உன்னை எதனோடு ஒப்பிடமுடியும்?
நான் உன்னை எப்படி ஆறுதல் செய்யமுடியும்?
    உனது அழிவானது கடலைப்போன்று அவ்வளவு பெரிதாக இருக்கிறது.
    எவரும் உன்னை குணப்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை.

14 உனது தீர்க்கதரிசிகள் உனக்காகத் தரிசனம் கண்டார்கள்.
    ஆனால் அவர்களது தரிசனங்கள் எல்லாம் பயனற்றவைகளாயின.
அவர்கள் உனது பாவங்களுக்கு எதிராகப் பேசவில்லை.
    அவர்கள் காரியங்களைச் சரிபண்ண முயற்சி செய்யவில்லை.
அவர்கள் உனக்கு செய்திகளைப் பிரசங்கித்தனர்.
    ஆனால் அவை உன்னை ஏமாற்றும் செய்திகள்.

15 சாலையில் உன்னைக் கடந்துபோகும் ஜனங்கள்
    உன்னைப் பார்த்து கைதட்டுகிறார்கள்.
அவர்கள் பிரமித்து எருசலேம் மகளைப் பார்த்து
    தலையாட்டுகிறார்கள்.
அவர்கள், “இதுதானா, ‘முழுமையான அழகுடைய நகரம்’
    ‘பூமியிலே எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பது’ என்று ஜனங்களால் அழைக்கப்பட்ட நகரம்?”
    என்று கேட்கிறார்கள்.

16 உனது எல்லா பகைவர்களும் உன்னைப் பார்த்து நகைப்பார்கள்.
    அவர்கள் உன்னைப் பார்த்து பிரமித்து தம் பற்களைக் கடிக்கிறார்கள்.
அவர்கள், “நாங்கள் அவர்களை விழுங்கியிருக்கிறோம்!
    நாங்கள் உண்மையிலேயே இந்த நாளுக்காகவே நம்பிக்கொண்டிருந்தோம்.
    நாங்கள் இறுதியாக இது நிகழ்வதைப் பார்த்திருக்கிறோம்” என்பார்கள்.

17 கர்த்தர் தான் திட்டமிட்டபடியே செய்தார்.
    அவர் எதைச் செய்வேன் என்று சொன்னாரோ அதையே செய்திருக்கிறார்.
    நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அவர் எதை கட்டளையிட்டாரோ அதைச் செய்திருக்கிறார்.
அவர் அழித்தார், அவரிடம் இரக்கம் இல்லை.
    உனக்கு ஏற்பட்டவற்றுக்காக அவர் உனது பகைவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
    அவர் உனது பகைவர்களைப் பலப்படுத்தினார்.

18 கர்த்தரிடம் உனது இதயத்தை ஊற்றி கதறு!
    சீயோன் மகளின் சுவரே, ஒரு நதியைப்போன்று கண்ணீர்விடு!
    இரவும் பகலும் உன் கண்ணீரை வடியவிடு! நிறுத்தாதே!
உனது கண்ணின் கறுப்பு விழி
    சும்மா இருக்கும்படிச் செய்யாதே!

19 எழுந்திரு! இரவில் கதறு! இரவின் முதற் சாமத்தில் கதறு!
    உனது இதயத்தைத் தண்ணீரைப்போன்று ஊற்று!
    கர்த்தருக்கு முன்னால் உன் இதயத்தை ஊற்று!
கர்த்தரிடம் ஜெபம் செய்வதற்கு உன் கைகளை மேலே தூக்கு.
    உன் குழந்தைகளை வாழவிடும்படி அவரிடம் கேள்.
    பசியினால் மயங்கிக்கொண்டிருந்த உனது பிள்ளைகள் வாழும்படி நீ அவரிடம் கேள்.
    நகரத்தின் எல்லா தெருக்களிலும் அவர்கள் பசியால் மயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

20 கர்த்தாவே, என்னைப் பாரும்!
    இந்த வழியில் யாரை நீர் நடத்தியிருக்கிறீர் என்று பாரும்!
என்னை இக்கேள்வியைக் கேட்கவிடும்; பெண்கள் தாம் பெற்ற பிள்ளைகளையே தின்ன வேண்டுமா?
    பெண்கள் தாம் கவனித்துக் கொள்ளவேண்டிய பிள்ளைகளையே தின்னவேண்டுமா?
    கர்த்தருடைய ஆலயத்தில் ஆசாரியரும் தீர்க்கதரிசியும் கொல்லப்படவேண்டுமா?
21 நகர வீதிகளின் தரைகளில் இளைய ஆண்களும்
    முதிய ஆண்களும் விழுந்து கிடக்கின்றனர்.
கர்த்தாவே, நீர் அவர்களை உமது கோபத்தின் நாளில் கொன்றீர்!
    அவர்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!

22 நீர் எல்லா இடங்களிலிருந்தும்
    பயங்கரங்களை என்மேல் வரசெய்தீர்.
பண்டிகை நாட்களுக்கு வரவழைப்பதுபோன்று
    நீர் பயங்கரங்களை வரவழைத்தீர்.
கர்த்தருடைய கோபநாளில் எவரும் தப்பவில்லை.
    நான் வளர்த்து ஆளாக்கியவர்களை என் பகைவன் கொன்றிருக்கிறான்.

எபிரேயர் 10:1-18

கிறிஸ்துவின் பலி நம்மை முழுமையாக்குகிறது

10 நியாயப்பிரமாணமானது எதிர்காலத்தில் நேரிடும் நன்மைகளைப் பற்றிய முழுமையற்ற ஒரு சித்திரத்தையே கொடுக்கிறது. அது தெளிவற்றதாக உள்ளது. அது உண்மையான விஷயங்களின் முழுச் சித்திரம் அல்ல. அது மக்களிடம் ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான பலிகளைக் கொடுக்குமாறு கூறுகிறது. தேவனை வழிபட வருகிறவர்களும் அவ்வாறே கொடுத்து வருகின்றனர். நியாயப்பிரமாணம் அவர்களை என்றும் முழுமையானவர்களாக ஆக்காது. சட்டம் மனிதர்களை பூரணப் படுத்துமானால், வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிற பலிகளும் நின்றிருக்கும். ஏனெனில் வழிபடுகிறவர்கள் ஏற்கெனவே பரிசுத்தப்படுத்தப்பட்டு அவர்கள் தம் பாவங்களுக்காகக் குற்ற உணர்ச்சி உடையவர்களாக இருக்கமாட்டார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிற அப்பலிகள் அவர்களின் பாவங்களையே அவர்களுக்கு நினைவுறுத்துகின்றன. ஏனென்றால் வெள்ளாடு, கன்று குட்டி போன்றவற்றின் இரத்தம் நமது பாவங்களை விலக்காது.

ஆகவே கிறிஸ்து இந்த உலகத்துக்கு வரும்போது, அவர்,

“நீர் காணிக்கைகளையும் பலிகளையும் விரும்புவதில்லை.
    ஆனால் எனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தம் செய்தீர்.
மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகள் உம்மைச் சந்தோஷப்படுத்தாது.
    பாவநிவாரண பலிகளும் உம்மைத் திருப்திப்படுத்தாது.
பிறகு நான், ‘தேவனே! இதோ இருக்கிறேன்.
    உம்முடைய விருப்பத்தை நிறைவேற்ற வந்திருக்கிறேன்.
    நியாயப்பிரமாண புத்தகத்தில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது’ என்றேன்.” (A)

“நீர் பலிகளையும் காணிக்கைகளையும் விரும்புவதில்லை. மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகளாலும் பாவநிவாரணபலிகளாலும் நீர் திருப்தியுறவில்லை” (இந்தப் பலிகள் எல்லாம் கட்டளையிடப்பட்டிருந்தாலும் கூட) என்று முதலில் அவர் சொன்னார். பிறகு கிறிஸ்து, “தேவனே! நான் இதோ இருக்கிறேன். உம்முடைய விருப்பப்படி செய்வதற்காக வந்திருக்கிறேன்” என்றார். ஆகவே தேவன் முதலாவதுள்ள பலி முறைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து தன் புதிய வழிகளைத் தொடங்கிவிட்டார். 10 இயேசு கிறிஸ்து தேவனுடைய விருப்பப்படியே காரியங்களைச் செய்தார். அதனால் அவரது இறப்பாகிய பலி மூலம் நம்மைப் பரிசுத்தமாக்கினார். அவர் இப்பலியை என்றென்றைக்கும் போதுமான வகையில் ஒருமுறை செய்து முடித்தார்.

11 ஒவ்வொரு நாளும் ஆசாரியர்கள் நின்றுகொண்டு தமது மதச் சடங்குகளைச் செய்கின்றனர். அவர்கள் மீண்டும் மீண்டும் அதே பலிகளைக் கொடுக்கின்றனர். ஆனால் அப்பலிகள் ஒருபோதும் பாவங்களை நீக்காது. 12 ஆனால் கிறிஸ்து மக்களின் பாவங்களைப் போக்க ஒரே ஒரு முறைதான் தன்னைப் பலிகொடுத்தார். என்றென்றைக்கும் அது போதுமானதாயிற்று. அவர் தேவனுடைய வலதுபுறத்தில் அமர்ந்துகொண்டார். 13 அவர் இப்பொழுது தனது எதிரிகளைத் தன் அதிகாரத்திற்குள் கொண்டுவரக் காத்துக்கொண்டிருக்கிறார். 14 ஒரே ஒரு பலியின் மூலம் அவர் என்றென்றைக்கும் தம் மக்களை முழுமையாக்கிவிட்டார். அம்மக்களே பரிசுத்தமாக்கப்படுகிறார்கள்.

15 பரிசுத்த ஆவியானவரும் இதைப்பற்றி சொல்லியிருக்கிறார். முதலில் அவர்,

16 “பிறிதொரு காலத்தில் அவர்களோடு நான் செய்யப்போகிற உடன்படிக்கை இதுதான்.
என் சட்டங்களை அவர்கள் இதயங்களில் பதியவைப்பேன்.
    மேலும் அவற்றை அவர்களின் மனங்களில் எழுதுவேன்” (B)

17 என்று சொன்னார். மேலும்,

“அவர்களின் பாவங்களையும் அவர்கள் செய்த தீமைகளையும் நான் மன்னித்து விடுவேன்.
    மீண்டும் அவற்றை நான் நினைத்துப் பார்க்கமாட்டேன்” (C)

18 ஒரு முறை இப்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. பிறகு பலிகளுக்கான தேவை இல்லை.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center