Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எரேமியா 51-52

51 கர்த்தர் கூறுகிறார்:
“வல்லமையான ஒரு காற்றை நான் வீசச்செய்வேன்.
    நான் அதனை பாபிலோனுக்கும் கல்தேயாவின் தலைவர்களுக்கும் எதிராக வீசச்செய்வேன்.
நான் பாபிலோனுக்கு அயல்நாட்டவரை அனுப்புவேன்.
    அவர்கள் பாபிலோனைத் தூற்றுவார்கள்.
அந்த ஜனங்கள் பாபிலோனிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள்.
நகரத்தைப் படைகள் முற்றுகையிடும்.
    பயங்கரமான பேரழிவு ஏற்படும்.
பாபிலோன் வீரர்கள் தங்கள் வில்லையும் அம்பையும் பயன்படுத்தமாட்டார்கள்.
    அவ்வீரர்கள் தங்கள் கவசங்களையும் கூட அணிந்துக்கொள்ளமாட்டார்கள்.
பாபிலோனிய இளைஞர்களுக்காக இரக்கம்கொள்ளாதே.
    அவளது படையை முழுவதுமாக அழித்துவிடு.
கல்தேயர்களின் தேசத்தில் பாபிலோனிய வீரர்கள் கொல்லப்படுவார்கள்.
    அவர்கள் மோசமாக பாபிலோன் தெருக்களில் காயம் அடைவார்கள்.”

சர்வ வல்லமையுள்ள கர்த்தர்
    இஸ்ரவேல் மற்றும் யூதாவைத் தனியாகக் கணவனை இழந்த விதவைப் பெண்ணைப்போன்று விடமாட்டார்.
தேவன் அந்த ஜனங்களை விட்டுவிடமாட்டார்.
    இல்லை, அந்த ஜனங்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரை விட்டு விலகின குற்றவாளிகள்.
அவர்கள் அவரை விட்டு விலகினார்கள்.
    ஆனால் அவர் அவர்களை விட்டு விலகவில்லை.

பாபிலோனை விட்டு ஓடுங்கள்!
    உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுங்கள்! தங்காதீர்கள்.
    பாபிலோனின் பாவத்தால் கொல்லப்படாதீர்கள்.
பாபிலோனின் ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக கர்த்தரால் தண்டிக்கப்படக் கூடிய காலம் இது!
    பாபிலோன் அவளுக்கு ஏற்றதான தண்டனையைப் பெறும்.
பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள தங்கக் கிண்ணத்தைப் போன்றிருந்தது.
    பாபிலோன் உலகம் முழுவதையும் குடிக்கும்படி செய்தது.
தேசங்கள் பாபிலோனின் திராட்சைரசத்தைக் குடித்தது.
    எனவே அவை புத்திமயங்கிப்போயின.
ஆனால் பாபிலோன் திடீரென்று விழுந்து உடைந்துப்போகும்.
    அவளுக்காக அழுங்கள்!
அவளது வலிக்கு மருந்து வாங்குங்கள்!
    ஒருவேளை குணம் பெறலாம்!

நாம் பாபிலோன் குணமடைய முயன்றோம்.
    ஆனால் அவளால் குணம் பெறமுடியாது.
எனவே, அவளை விட்டுவிடுங்கள்.
    நம் சொந்த நாட்டுக்கும் நம்மில் ஒவ்வொருவரும் போகவிடுங்கள்.
பரலோகத்திலுள்ள தேவன் பாபிலோனின் தண்டனையை முடிவு செய்வார்.
பாபிலோனுக்கு என்ன நேரும் என்பதையும் அவர் முடிவு செய்வார்.
10 கர்த்தர் நமக்காக காரியங்களைச் சரி செய்துள்ளார்.
    வாருங்கள், நமது தேவனாகிய கர்த்தர்
செய்திருக்கிறவற்றை பற்றி சீயோனில் எடுத்துச்சொல்லுவோம்.

11 அம்புகளைக் கூர்மைப்படுத்துங்கள்!
    கேடயங்களை வாங்குங்கள்!
கர்த்தர் மேதியருடைய அரசர்களின் ஆவியை எழுப்பினார்.
    ஏனென்றால், அவர் பாபிலோனை அழிக்க விரும்புகிறார்.
பாபிலோனிய ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை கர்த்தர் கொடுப்பார்.
எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைப் பாபிலோன் படை அழித்தது.
    எனவே கர்த்தர் அவர்களுக்குரிய தண்டனையைக் கொடுப்பார்.
12 பாபிலோன் சுவர்களுக்கு எதிராகக் கொடியை உயர்த்துங்கள்
    மேலும் காவலாளிகளைக் கொண்டு வாருங்கள்.
அவர்களின் இடங்களில் காவல்காரர்களைப் போடுங்கள்.
    இரகசிய தாக்குதலுக்குத் தயாராகுங்கள்.
கர்த்தர், தான் திட்டமிட்டப்படிச் செய்வார்.
    பாபிலோன் ஜனங்களுக்கு எதிராக எதைச் செய்வேன் என்று சொன்னாரோ அதைச் செய்வார்.
13 பாபிலோனே, நீ மிகுந்த தண்ணீருக்கு அருகில் வாழ்கிறாய்.
    நீ பொக்கிஷங்களோடு செல்வத்துடன் இருக்கிறாய்.
    ஆனால் உனது முடிவு வந்திருக்கிறது.
    உனது அழிவுக்கான காலம் வந்திருக்கிறது.
14 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தன் நாமத்தைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார்.
“பாபிலோனே, நான் உன்னைப் பல பகை வீரர்களால் நிரப்புவேன்.
    அவர்கள் வெட்டுக்கிளியின் கூட்டத்தைப் போன்றிருப்பார்கள்.
    உனக்கு எதிராகப் போரில் அவர்கள் வெல்வார்கள்.
    அவர்கள் உனக்கு மேல் நின்றுக்கொண்டு வெற்றி முழக்கம் செய்வார்கள்.”

15 கர்த்தர் தனது பெரும் வல்லமையைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார்.
    அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தி உலகத்தைப் படைத்தார்.
    அவர் தனது பேரறிவினால் வானத்தை விரித்தார்.
16 அவர் சத்தமிடுகையில், வானத்திலுள்ள தண்ணீர் இரைந்தது.
    அவர் பூமி முழுவதும் மேகங்களை அனுப்பினார்.
அவர் தனது சேமிப்பு அறையிலிருந்து
    காற்றைக் கொண்டுவந்தார்.
17 ஆனால் ஜனங்கள் மிகவும் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
    தேவன் என்ன செய்திருக்கிறார் என்று அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
திறமையுள்ள தொழிலாளிகள் பொய் தெய்வங்களின் விக்கிரகங்களைச் செய்தனர்.
    அவ்விக்கிரகங்கள் மாயையான தெய்வங்களே.
எனவே, அந்த விக்கிரகங்கள் அவைகளை உருவாக்கின தொழிலாளிகளின் முட்டாள்தனத்திற்கு சான்றாக இருக்கின்றன.
    அந்த விக்கிரகங்கள் உயிரற்றவை.
18 அந்த விக்கிரகங்கள் பயனற்றவை.
    ஜனங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்தனர்.
    அவை மாயை என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
நியாயத் தீர்ப்புக்கான காலம் வரும்.
    அந்த விக்கிரகங்கள் அழிக்கப்படும்.
19 ஆனால் யாக்கோபுவின் பங்கு (தேவன்) அப்பயனற்ற விக்கிரகங்களைப் போன்றவறில்லை.
ஜனங்கள் தேவனை உருவாக்கவில்லை,
    தேவனே தன் ஜனங்களை உருவாக்கினார்.
    தேவன் எல்லாவற்றையும் உருவாக்கினார்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.

20 கர்த்தர் கூறுகிறார், “பாபிலோனே, நீ எனது தண்டாயுதம்.
    நான் உன்னைப் பயன்படுத்தி தேசங்களை நொறுக்கினேன்.
    இராஜ்யங்களை அழிக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
21 நான் குதிரையையும், அதை ஓட்டுபவனையும் நொறுக்க உன்னைப் பயன்படுத்தினேன்.
    இரதத்தையும் தேரோட்டியையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
22 ஆண்களையும் பெண்களையும் நொறுக்கநான் உன்னைப் பயன்படுத்தினேன்.
    இளைஞர்களையும் முதியவர்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
    இளம் ஆண்களையும் பெண்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
23 மேய்ப்பர்களையும் ஆடுகளையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
    விவசாயிகளையும் பசுக்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
    ஆளுநர்களையும் முக்கிய அதிகாரிகளையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
24 ஆனால் பாபிலோனுக்குத் திருப்பிக் கொடுப்பேன்.
நான் பாபிலோனிய ஜனங்கள் அனைவருக்கும் திருப்பிக் கொடுப்பேன்.
    அவர்கள் சீயோனுக்குச் செய்த அத்தனை தீமைகளுக்கும் திருப்பிக் கொடுப்பேன்.
    யூதாவே, உனக்கு எதிரில்தானே நான் அவர்களைத் தண்டிப்பேன்”
கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

25 கர்த்தர் கூறுகிறார்:
“பாபிலோனே, நீ ஒரு அழிக்கும் மலை.
    நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
பாபிலோனே, முழு நாட்டையும் அழித்துவிட்டாய்.
    நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
நான் எனது கையை உனக்கு எதிராக வைப்பேன்.
    நான் உன்னைக் கன்மலையிலிருந்து உருட்டுவேன்.
நான் உன்னை எரிந்துப்போன மலையாக்குவேன்.
26 ஜனங்கள் கட்டிடத்திற்கு அஸ்திவாரம் ஆக்க பாபிலோனிலிருந்து எந்த கல்லையும் எடுக்கமாட்டார்கள்.
    ஜனங்கள் மூலைக்கல்லுக்குப் போதுமான அளவு பெரிய கல்லைக் கண்டுப்பிடிக்கமாட்டார்கள்.
ஏனென்றால், உனது நகரமானது கற்களின் குவியலாக என்றென்றைக்கும் இருக்கும்”
கர்த்தர் இவற்றைக் கூறினார்.

27 “இந்நாட்டில் போர்க்கொடியை ஏற்றுங்கள்!
    அனைத்து நாடுகளிலும் எக்காளத்தை ஊதுங்கள்!
பாபிலோனுக்கு எதிராகச் சண்டை செய்ய தேசங்களைத் தயார் செய்யுங்கள்!
அந்த இராஜ்யங்களைப் பாபிலோனுக்கு எதிராகப் போரிட அழையுங்கள்.
    ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ்.
அதற்கு எதிராகப் படை நடத்திச்செல்ல ஒரு தளபதியைத் தேர்ந்தெடு.
வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போன்ற குதிரைகளை ஏராளமாக அனுப்பு.
28 அவளுக்கு எதிராகப் போரிட தேசங்களைத் தயார் செய்.
    மேதியா தேசத்தின் அரசர்களைத் தயார் செய்.
அவர்களின் ஆளுநர்களையும் முக்கிய அதிகாரிகளையும் தயார் செய்.
    பாபிலோனுக்கு எதிராகப் போரிட அவர்கள் ஆளும் தேசங்களைத் தயார் செய்.
29 நிலமானது வலியோடு இருப்பதுப்போன்று அசைந்து நடுங்குகிறது.
    கர்த்தர் தனது திட்டப்படி பாபிலோனுக்குச் செய்யும்போது தேசம் நடுங்கும்.
கர்த்தருடைய திட்டம் பாபிலோன் தேசத்தை காலியான வனாந்தரமாக்குவதே.
    அங்கே எவரும் வாழமாட்டார்கள்.
30 பாபிலோனிய வீரர்கள் சண்டையிடுவதை நிறுத்தினார்கள்.
    அவர்கள் தங்கள் கோட்டைகளில் தங்கினார்கள்.
அவர்களின் பலம் போயிருக்கிறது.
    அவர்கள் திகிலடைந்த பெண்களைப்போன்று இருக்கிறார்கள்.
பாபிலோனின் வீடுகள் எரிந்துக்கொண்டிருக்கின்றன.
    அவளது கதவின் கட்டைகள் உடைக்கப்படுகின்றன.
31 ஒரு தூதுவன் இன்னொருவனைப் பின் தொடருகிறான்.
    அவர்கள் பாபிலோன் அரசனிடம்
அவனது நாடு முழுவதும் கைப்பற்றப்பட்டது
    என்று தெரிவிக்கின்றனர்.
32 ஆற்றைக் கடக்கும் வழிகள் எல்லாம் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
சகதியான நிலம் எரிந்துக்கொண்டிருக்கின்றன.
    பாபிலோனிய வீரர்கள் அனைவரும் அஞ்சுகின்றனர்.”

33 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,
“பாபிலோன் மிதிக்கப்படும் களத்தைப்போன்று உள்ளது.
    அறுவடை காலத்தில் ஜனங்கள் பதரிலிருந்து தானியத்தைப் பிரிக்க அடிப்பார்கள்.
    பாபிலோனை அடிக்க வேண்டிய காலம் விரைவாக வந்துக்கொண்டிருக்கிறது.”

34 சீயோன் ஜனங்கள் இவ்வாறு கூறுவார்கள்,
“பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் கடந்த காலத்தில் எங்களை அழித்தான்.
    கடந்த காலத்தில் நேபுகாத்நேச்சார் எங்களைத் தாக்கினான்.
கடந்த காலத்தில் அவன் எங்கள் ஜனங்களைக் கொண்டுப் போனான்.
    நாங்கள் காலியான ஜாடியைப் போன்றிருந்தோம்.
எங்களிடமிருந்த சிறந்தவற்றை அவன் எடுத்தான்.
    அவன் பெரிய ராட்சதனைப்போன்று வயிறு நிறையும்வரை தின்றுக்கொண்டிருந்தான்.
எங்களிடமுள்ள சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு
    எங்களை எறிந்துவிட்டான்.
35 எங்களைத் தாக்க பாபிலோன் பயங்கரமானவற்றைச் செய்தது.
    அவை இப்பொழுது பாபிலோனுக்கு ஏற்படவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.”

சீயோனில் வாழ்கின்ற ஜனங்கள் அவற்றைச் சொல்வார்கள்:
“பாபிலோனிய ஜனங்கள் எங்கள் ஜனங்களைக் கொன்ற குற்றம் உள்ளவர்கள்.
    இப்பொழுது அவர்கள் தாம் செய்த தவறுக்குத் தண்டிக்கப்படுகிறார்கள்”
எருசலேம் நகரம் அவற்றைச் சொல்லும்.
36 எனவே கர்த்தர் கூறுகிறார்,
“யூதா உன்னை நான் பாதுகாப்பேன்.
    பாபிலோன் தண்டிக்கப்படும் என்பதை நான் உறுதி செய்வேன்.
    பாபிலோன் கடலை நான் வற்றச் செய்வேன்.
    நான் அவளது நீரூற்றுக்களை வற்றச் செய்வேன்.
37 பாபிலோன் அழிந்த கட்டிடங்களின் குவியலாக ஆகும்.
    பாபிலோன் காட்டு நாய்கள் வாழத்தக்க இடமாகும்.
ஜனங்கள் கற்குவியலைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
அவர்கள் பாபிலோனைப் பற்றி நினைக்கும்போது தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
    ஜனங்கள் எவரும் வாழாத இடமாக பாபிலோன் ஆகும்.

38 “பாபிலோன் ஜனங்கள் கெர்ச்சிக்கிற இளம் சிங்கங்களைப் போன்றவர்கள்.
    அவர்களது சத்தம் சிங்கக் குட்டிகளைப் போன்றிருக்கும்.
39 அந்த ஜனங்கள் வல்லமை மிக்க சிங்கங்களைப் போன்று நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
    நான் அவர்களுக்கு ஒரு விருந்துக் கொடுப்பேன்.
    நான் அவர்களைக் குடிபோதையேறினவர்களாக்குவேன்.
அவர்கள் சிரிப்பார்கள். நல்ல நேரத்தைப் பெறுவார்கள்.
    பிறகு அவர்கள் என்றென்றும் தூங்குவார்கள்.
    அவர்கள் என்றும் விழிக்கமாட்டார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

40 “பாபிலோன் கொல்லப்படுவதற்காகக் காத்திருக்கும்.
ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாடுகள் போன்றிருக்கும்.
நான் அவற்றை வெட்டுவதற்குக் கொண்டு செல்வேன்.

41 “சேசாக்கு” தோற்கடிக்கப்படும்.
பூமியிலே சிறந்ததும் கர்வமுமுள்ள நாடு எவ்வாறு சிறைப் பிடிக்கப்படும்?
    மற்ற தேசங்களில் உள்ள ஜனங்கள்
பாபிலோன் பாழாய்ப்போவதை கவனித்துப் பார்ப்பார்கள்.
    அவர்கள் பார்க்கின்றவை அவர்களைப் பயப்படுத்தும்.
42 பாபிலோன் மீது கடல் எழும்பும்.
    அதன் இரைச்சலான அலைகள் அவளை மூடும்.
43 பாபிலோன் நகரங்கள் அழிக்கப்பட்டு காலியாகும்.
பாபிலோன் வறண்ட வனாந்தரமாகும்.
    அது ஜனங்கள் வாழாத தேசமாகும்.
    ஜனங்கள் பாபிலோன் வழியாகப் பயணம்கூட செய்யமாட்டார்கள்.
44 பாபிலோனிலுள்ள பொய்த் தெய்வமான பேலைத் தண்டிப்பேன்.
    அவன் விழுங்கிய ஜனங்களை வாந்திப்பண்ணும்படி செய்வேன்.
பாபிலோனைச் சுற்றியுள்ள சுவர்கள் கீழே விழும்.
    மற்ற தேசத்தார்கள் பாபிலோனுக்கு வருவதை நிறுத்துவார்கள்.
45 எனது ஜனங்களே, பாபிலோன் நகரத்தை விட்டு வெளியே வாருங்கள்.
    உங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடுங்கள்.
    கர்த்தருடைய பெருங்கோபத்திலிருந்து ஓடுங்கள்.

46 “எனது ஜனங்களே, பயந்து நடுங்கவேண்டாம்.
    வதந்திகள் பரவும் ஆனால் பயப்படவேண்டாம்!
இந்த ஆண்டு ஒரு வதந்தி வரும்.
    அடுத்த ஆண்டு இன்னொரு வதந்தி வரும்.
நாட்டில் நடக்கும் பயங்கரமான சண்டையைப்பற்றி வதந்திகள் இருக்கும்.
ஆள்வோர்கள் மற்ற ஆள்வோர்களுக்கு எதிராகச் சண்டையிடுவதைப்பற்றி வதந்திகள் இருக்கும்.
47 நேரம் நிச்சயம் வரும்.
    பாபிலோனில் உள்ள பொய்த் தெய்வங்களை நான் தண்டிப்பேன்.
பாபிலோன் நாடு முழுவதும் வெட்கப்படுத்தப்படும்.
ஏராளமாக மரித்த ஜனங்கள்
    அந்நகரத் தெருக்களில் கிடப்பார்கள்.
48 பிறகு பாபிலோனைப்பற்றி பரலோகமும் பூமியும் அவற்றில் உள்ளனவும் மகிழ்ச்சியுடன் சத்தமிடும்.
    அவர்கள் சத்தமிடுவார்கள்.
ஏனென்றால், வடக்கிலிருந்து படை வந்து
    பாபிலோனுக்கு எதிராகச் சண்டையிட்டது”
கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

49 “இஸ்ரவேலில் உள்ள ஜனங்களை பாபிலோன் கொன்றது.
    பூமியின் ஒவ்வொரு இடத்திலும் உள்ள ஜனங்களை பாபிலோன் கொன்றது.
எனவே பாபிலோன் விழவேண்டும்!
50 வாளுக்குத் தப்பியவர்களே,
    வேகமாக பாபிலோனை விட்டு விலகுங்கள்.
    காத்திருக்காதீர்கள்!
நீங்கள் தொலைதூர நாட்டில் இருக்கிறீர்கள்.
    ஆனால், நீங்கள் எங்கே இருந்தாலும் கர்த்தரை நினையுங்கள்.
    எருசலேமை நினையுங்கள்.

51 “யூதாவின் ஜனங்களாகிய நாங்கள் அவமானமடைகிறோம்.
    நாங்கள் நிந்திக்கப்பட்டிருக்கிறோம்.
ஏனென்றால், அந்நியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின்
    பரிசுத்தமான இடங்களுக்குள் போயிருக்கிறார்கள்.”

52 கர்த்தர் கூறுகிறார்: “நேரம் வந்துக்கொண்டிருக்கிறது,
    நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிப்பேன்.
அப்போது, புண்ப்பட்ட ஜனங்கள் வலியுடன்
    நாட்டின் எல்லா இடங்களிலும் அழுவார்கள்.
53 பாபிலோன் வானத்தைத் தொடுகின்றவரை வளரலாம்.
பாபிலோன் தனது கோட்டைகளைப் பலப்படுத்தலாம்.
    ஆனால் அந்நகரத்தை எதிர்த்து போரிடுமாறு நான் ஜனங்களை அனுப்புவேன்.
    அந்த ஜனங்கள் அவளை அழிப்பார்கள்”
கர்த்தர் இவற்றைக் கூறினார்.

54 “பாபிலோனில் ஜனங்கள் அழுதுக்கொண்டிருப்பதை நாங்கள் கேட்கமுடியும்.
    பாபிலோன் தேசத்தில் ஜனங்கள் பொருட்களை அழித்துக் கொண்டிருக்கும் ஓசையைக் கேட்கமுடியும்.
55 விரைவில் கர்த்தர் பாபிலோனை அழிப்பார்.
    அந்த நகரில் உள்ள உரத்த ஓசைகளை அவர் நிறுத்துவார்.
பகைவர்கள் இரைகின்ற அலைகளைப்போன்று வருவார்கள்.
    சுற்றிலும் உள்ள ஜனங்கள் அந்த இரைச்சலைக் கேட்பார்கள்.
56 படை வந்து பாபிலோனை அழிக்கும்.
    பாபிலோனின் வீரர்கள் கைப்பற்றப்படுவார்கள்.
    அவர்களின் அம்புகள் உடைக்கப்படும்.
ஏனென்றால், கர்த்தர் ஜனங்கள் செய்த தீயசெயல்களுக்கு தண்டனையைக் கொடுக்கிறார்.
    கர்த்தர் அவர்களுக்கேற்ற முழு தண்டனையையும் கொடுக்கிறார்.
57 நான் பாபிலோனின் ஞானிகளையும்
    முக்கியமான அதிகாரிகளையும் குடிமயக்கத்துக்குள்ளாக்குவேன்.
நான் ஆளுநர்களையும் அதிகாரிகளையும்
    வீரர்களையும்கூடக் குடிக்கச்செய்வேன்.
பிறகு அவர்கள் என்றென்றைக்கும் உறங்குவார்கள்.
    அவர்கள் எப்பொழுதும் எழமாட்டார்கள்”
அரசர் இவற்றைச் சொன்னார்.
    அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.

58 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,
“பாபிலோனின் அகலமான வலிமையான சுவர் கீழேத்தள்ளப்படும்.
    அவளது உயர்ந்த வாசல்கள் எரிக்கப்படும்.
பாபிலோன் ஜனங்கள் கடினமான வேலை செய்வார்கள்.
    ஆனால் அது உதவாது.
அவர்கள் நகரைக் காப்பாற்ற முயல்வதில்
    சோர்ந்து போவார்கள்.
ஆனால் அவர்கள் எரியும் நெருப்புக்கு எண்ணெய் போன்று ஆவார்கள்.”

எரேமியா பாபிலோனுக்குச் செய்தி அனுப்புகிறான்

59 இதுதான் எரேமியா அதிகாரி செராயாவிற்குக் கொடுத்த செய்தி. செராயா நேரியாவின் மகன். நேரியா மசெயாவின் மகன். செரயா யூதாவின் அரசன் சிதேக்கியாவோடு பாபிலோனுக்குப் போனான். இது சிதேக்கியா யூதாவின் அரசனாக இருந்த நான்காவது ஆட்சியாண்டில் நடந்தது. அப்போது, எரேமியா இச்செய்தியை அதிகாரியான செரயாவிடம் கொடுத்தான். 60 எரேமியா பாபிலோனுக்கு ஏற்படக்கூடிய பயங்கரங்களைப்பற்றி புத்தகச்சுருளில் எழுதியிருந்தான். அவன் பாபிலோனைப்பற்றி எல்லாவற்றையும் எழுதியிருந்தான்.

61 எரேமியா செராயாவிடம் சொன்னான், “செராயா, பாபிலோனுக்குப் போ, இச்செய்தியை வாசிப்பதைப்பற்றி உறுதி செய்துக்கொள். எனவே எல்லா ஜனங்களும் உன்னைக் கேட்பார்கள். 62 பிறகு சொல், ‘கர்த்தாவே, இந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொன்னீர். நீர் அழிப்பீர். எனவே மனிதர்களோ மிருகங்களோ இதில் வாழாது. இந்த இடம் என்றென்றும் காலியான அழிவிடமாக இருக்கும்.’ 63 இப்புத்தகச் சுருளை வாசித்து முடிந்த பிறகு இதில் ஒரு கல்லைக்கட்டு. பிறகு இந்தப் புத்தகச்சுருளை ஐபிராத்து நதியில் போடு. 64 பிறகு சொல், ‘இதே வழியில் பாபிலோன் மூழ்கும், பாபிலோன் என்றும் எழாது. பாபிலோனியர் மூழ்கிப் போவார்கள். ஏனென்றால், நான் இங்கே பயங்கரமானவை நிகழும்படிச் செய்வேன்.’”

எரேமியாவின் வார்த்தைகள் இங்கே முடிகிறது.

எருசலேமின் வீழ்ச்சி

52 சிதேக்கியா யூதாவின் அரசனானபோது அவனது வயது 21. சிதேக்கியா எருசலேமை பதினோரு ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் அமுத்தாள். அவள் எரேமியாவின் மகள். அவனது குடும்பம் லீப்னா ஊரிலிருந்து வந்தது. சிதேக்கியா பொல்லாப்புகளை யோயாக்கீம் போலச் செய்தான். சிதேக்கியா பொல்லாப்புகளைச் செய்வதை கர்த்தர் விரும்பவில்லை. எருசலேமுக்கும் யூதாவுக்கும் பயங்கரமானவை நேர்ந்தது. ஏனென்றால் கர்த்தர் அவர்களுடன் கோபமாக இருந்தார். இறுதியாக, கர்த்தர் அவரது பார்வையிலிருந்து எருசலேம் மற்றும் யூதா ஜனங்களைத் தூர எறிந்தார்.

சிதேக்கியா பாபிலோன் அரசனுக்கு எதிராகத் திரும்பினான். எனவே, சிதேக்கியாவின் 9வது ஆட்சியாண்டின் பத்தாவது மாதத்தின் பத்தாவது நாளில் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு எதிராகப் படையெடுத்தான். நேபுகாத்நேச்சாரோடு அவனது முழுப்படையும் இருந்தது. பாபிலோனின் படையானது எருசலேமிற்கு வெளியே முகாமிட்டது. நகரச் சுவரைச் சுற்றிலும் அவர்கள் மதிற்சுவர்களைக் கட்டினார்கள். எனவே அவர்களால் சுவரைத் தாண்ட முடிந்தது. எருசலேம் நகரமானது பாபிலோன் படையால் சிதேக்கியாவின் பதினோராவது ஆட்சியாண்டுவரை முற்றுகையிடப்பட்டது. அந்த ஆண்டின் நாலாவது மாதத்தின் ஒன்பதாவது நாளில் நகரில் பசியானது மிக அதிகமாக இருந்தது. நகர ஜனங்கள் உண்பதற்கு உணவு எதுவும் மீதியில்லை. அந்த நாளில் பாபிலோனின் படை எருசலேமிற்குள் நுழைந்தது. எருசலேமிலுள்ள வீரர்கள் வெளியே ஓடினார்கள். அவர்கள் இரவில் நகரைவிட்டு ஓடினார்கள். இரண்டு சுவர்களுக்கு இடையில் உள்ள வாசல் வழியாக அவர்கள் போனார்கள். அந்த வாசல் அரசனின் தோட்டத்திற்கு அருகில் இருந்தது. பாபிலோனின் படை நகரை முற்றுகையிட்டிருந்தபோதிலும் எருசலேம் வீரர்கள் மேலும் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்கள் வனாந்தரத்தின் வழியாக ஓடிப்போனார்கள்.

ஆனால் பாபிலோனியப்படை அரசன் சிதேக்கியாவைத் துரத்தியது. எரிகோ சமவெளியில் அவர்கள் அவனைப் பிடித்தனர். அவனோடு வந்த வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். பாபிலோன் படை அரசன் சிதேக்கியாவைக் கைப்பற்றினர். அவர்கள் அவனை ரிப்லா நகரத்திற்குக் கொண்டுபோயினர். ரிப்லா, ஆமாத் நாட்டில் இருக்கிறது. ரிப்லாவில் பாபிலோன் அரசன் சிதேக்கியா பற்றிய தீர்ப்பை அறிவித்தான். 10 ரிப்லா நகரத்தில் சிதேக்கியாவின் மகன்களை பாபிலோன் அரசன் கொன்றான். தன் மகன்கள் கொல்லப்படுவதை கவனிக்கும்படி சிதேக்கியா வற்புறுத்தப்பட்டான். பாபிலோன் அரசன் யூதாவின் எல்லா அதிகாரிகளையும் கொன்றான். 11 பிறகு பாபிலோன் அரசன் சிதேக்கியாவின் கண்களைப் பிடுங்கினான். அவன் அவனுக்கு வெண்கல சங்கிலிகளைப் போட்டான். பிறகு அவன் பாபிலோனுக்கு சிதேக்கியாவைக் கொண்டுப் போனான். பாபிலோனில் அவன் சிறையில் சிதேக்கியாவை அடைத்தான். சிதேக்கியா மரித்துப் போகும்வரை சிறையிலேயே இருந்தான்.

12 நேபுசராதான், பாபிலோன் அரசனது சிறப்பு காவல் படையின் தளபதி. அவன் எருசலேமிற்கு வந்தான். நேபுகாத்நேச்சாரின் 19வது ஆட்சியாண்டின் ஐந்தாவது மாதத்தின் 10வது நாளில் இது நடந்தது. பாபிலோனில் நேபுசராதான் ஒரு முக்கியமான தலைவன். 13 நேபுசராதான் கர்த்தருடைய ஆலயத்தை எரித்தான். அவன் எருசலேமில் அரசனது அரண்மனையையும் இன்னும் பல வீடுகளையும் எரித்தான். எருசலேமில் உள்ள ஒவ்வொரு முக்கிய கட்டிடத்தையும் எரித்தான். 14 பாபிலோனியப் படை முழுவதும் எருசலேமைச் சுற்றியுள்ள சுவர்களை உடைத்தது. அப்படை அரசரது சிறப்புப் படையின் தளபதியின்கீழ் இருந்தது. 15 நேபுசராதான், தளபதி, எருசலேமில் மீதியாக இருந்த ஜனங்களைக் கைதிகளாகச் சிறைபடுத்தினான். பாபிலோன் அரசனிடம் சரணடைந்தவர்களையும் அவன் அழைத்துக் கொண்டுப்போனான். எருசலேமில் மீதியாக இருந்த கைவினைக் கலைஞர்களையும் அவன் அழைத்துக்கொண்டுப்போனான். 16 ஆனால் நேபுசராதான் அந்நாட்டில் சில ஏழைகளை மட்டும் விட்டுவிட்டுப் போனான். திராட்சைத் தோட்டத்திலும் வயல்களிலும் வேலை செய்யுமாறு அவர்களை விட்டுவிட்டுப் போனான்.

17 பாபிலோனியப்படை ஆலயத்தில் உள்ள வெண்கலத்தூண்களை உடைத்தார்கள். கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள தாங்கிகளையும் வெண்கலத்தொட்டியையும் உடைத்தார்கள். அவர்கள் பாபிலோனுக்கு அவ்வெண்கலத்தைக் கொண்டுப் போனார்கள். 18 பாபிலோனியப்படை ஆலயத்திலிருந்து கீழ்க்கண்டவற்றைக் கொண்டுப்போனது. செப்புச் சட்டிகள், சாம்பல் எடுக்கும் கரண்டிகள், வெட்டுக்கத்திகள், கலங்கள், கலயங்கள்,ஆராதனைக்குரிய சகல வெண்கலப் பணிமுட்டுகள், 19 அரசனது சிறப்புக் காவல் படையின் தளபதி இவற்றையும் கொண்டுபோனான். கிண்ணங்கள், நெருப்புத்தட்டுகள், கலங்கள், சட்டிகள், விளக்குத் தண்டுகள், கலயங்கள், கரகங்கள், பான பலிகளின் காணிக்கை மற்றும் வெள்ளியாலும் பொன்னாலுமான எல்லாவற்றையும் அவன் எடுத்தான். 20 இரண்டு தூண்கள், கடல் தொட்டியும் அதனடியில் உள்ள பன்னிரெண்டு வெண்கல காளைகளும் நகரும் தாங்கிகளும் மிக கனமானவை. சாலொமோன் அரசன் கர்த்தருடைய ஆலயத்திற்காக செய்தான். எடை பார்க்க முடியாத அளவுள்ள வெண்கலத்தை இப்பொருட்கள் செய்ய பயன்படுத்தினான். 21 ஒவ்வொரு வெண்கலத் தூணும் 31 அடி உயரமுடையது. ஒவ்வொரு தூணும் 21 அடி சுற்றளவு உள்ளது. ஒவ்வொரு தூணும் உள்ளே வெற்றிடம் கொண்டது. ஒவ்வொரு தூணிண் சுவரும் 3 அங்குலம் உடையது. 22 முதல் தூணின் மேலிருந்த குமிழின் உயரம் 8 அடி உயரம் உடையது. அதைச்சுற்றிலும் வலைப் பின்னல்களாலும் மாதளம் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அடுத்தத் தூணிலும் மாதளம்பழ அலங்காரம் உண்டு. அது முதல் தூணைப்போன்றிருந்து. 23 மொத்தம் 96 மாதுளம்பழங்கள் தூணின் பக்கங்களில் தொங்கின. ஆக மொத்தம் 100 மாதுளம்பழங்கள் வலைப் பின்னலில் தூண்களைச் சுற்றி இருந்தன.

24 அரசனின் சிறப்புக் காவல்படை தளபதி செராயா மற்றும் செப்பனியாவை கைதிகளாகச் சிறைப்பிடித்தான். செராயா தலைமை ஆசாரியன், செப்பனியா அடுத்த ஆசாரியன். மூன்று வாயில் காவலர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். 25 அரசனின் சிறப்புக் காவல் படைத் தளபதி சண்டையிடுவோரின் மேலதிகாரியைச் சிறைப்பிடித்தான். அவர் அரசனின் ஏழு ஆலோசகர்களையும் சிறைப்பிடித்தான். எருசலேமில் அவர்கள் அப்பொழுதும் இருந்தனர். படையில் சேர்க்கின்ற எழுத்தாளனையும் அவன் பிடித்தான். அவன் நகரில் இருந்த சாதாரண ஆட்கள் 60 பேரையும் பிடித்தான். 26-27 நேபுசராதான் தளபதி இந்த அதிகாரிகள் எல்லோரையும் பிடித்தான். அவன் அவர்களை பாபிலோன் அரசனிடம் கொண்டு வந்தான். பாபிலோன் அரசன் ரிப்லா நகரில் இருந்தான். ரிப்லா ஆமாத் நாட்டில் இருக்கிறது. அந்த ரிப்லா நகரில், அரசன் அதிகாரிகளையெல்லாம் கொல்லும்படி கட்டளையிட்டான்.

எனவே யூதா ஜனங்கள் தமது நாட்டிலிருந்து பிடித்துச்செல்லப்பட்டனர். 28 நேபுகாத்நேச்சார் எத்தனை ஜனங்களைக் கைது செய்தான் என்னும் பட்டியல் இது:

நேபுகாத்நேச்சாரின் ஏழாவது ஆட்சியாண்டில் யூதாவிலிருந்து 3,023 ஆண்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

29 நேபுகாத்நேச்சாரின் 18வது ஆட்சியாண்டில் 832 ஜனங்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

30 நேபுகாத்நேச்சாரின் 23வது ஆட்சியாண்டில் நேபுசராதான் 745 பேரைக் கைது செய்து கொண்டுப்போனான்.

    நேபுசராதான் அரசனின் சிறப்புக் காவல் படையின் தளபதி.

மொத்தம் 4,600 ஜனங்கள் சிறை செய்யப்பட்டனர்.

யோயாக்கீன் விடுதலை செய்யப்படுகிறான்

31 யோயாக்கீன் யூதாவின் அரசன். இவன் பாபிலோனில் 37 ஆண்டுகள் சிறையில் இருந்தான். பாபிலோனின் அரசனான ஏவில் மெரொதாக் யோயாக்கீனுடன் இரக்கமாயிருந்தான். அவ்வாண்டில் யோயாக்கீனை சிறையைவிட்டு விடுவித்தான். இதே ஆண்டில்தான் ஏவில்மெரொதாக் பாபிலோனின் அரசன் ஆனான். ஏவில்மெரொதாக் 12வது மாதத்தின் 25ஆம் நாளன்று யோயாக்கீனை சிறையிலிருந்து விடுவித்தான். 32 ஏவில்மெரொதாக் யோயாக்கீனுடன் இரக்கமான வழியில் பேசினான். பாபிலோனில் தன்னோடு இருந்த மற்ற அரசர்களுக்குரியதைவிட கௌரவமான இடத்தைக் கொடுத்தான். 33 எனவே யோயாக்கீன் தனது சிறை உடையை நீக்கினான். மீதியுள்ள வாழ்நாளில், அரசனின் மேசையில் ஒழுங்காகச் சாப்பிட்டான். 34 ஒவ்வொரு நாளும் பாபிலோன் அரசன் யோயாக்கீனுக்கு உதவித் தொகை கொடுத்தான். யோயாக்கீன் மரிக்கும்வரை இது தொடர்ந்தது.

எபிரேயர் 9

பழைய உடன்படிக்கையின்படி வழிபாடு

முதலாம் உடன்படிக்கையானது வழிபாட்டிற்கான விதிகளை உடையது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிபாட்டிற்கான இடத்தை உடையது. இந்த இடம் ஒரு கூடாரத்துக்கு உள்ளே இருந்தது. கூடாரத்திற்குள் முன் பகுதி உள்ள இடம் பரிசுத்தமான இடம் என அழைக்கப்பட்டது. அந்தப் பரிசுத்தமான இடத்தில் ஒரு குத்துவிளக்கும், ஒரு மேஜையும், தேவனுக்குப் படைக்கப்பட்ட சிறப்பான அப்பங்களும் இருந்தன. இரண்டாம் திரைக்குப் பின்னே மிகப் பரிசுத்தமானது என அழைக்கப்படும் இடம் இருந்தது. அதில் பொன்னால் செய்த தூபகலசமும் பழைய உடன்படிக்கை வைக்கப்பட்ட பரிசுத்தமான பெட்டியும் [a] இருந்தன. அப்பெட்டி தங்கத் தகட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்பெட்டிக்குள் மன்னா வைக்கப்பட்டிருந்த தங்கப் பாத்திரமும் துளிர்த்த இலைகளையுடைய ஆரோனின் கைத்தடியும் இருந்தன. மேலும் பத்துக் கட்டளைகள் பொறித்த உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. அப்பெட்டியின் மேல் கிருபையாகிய இருக்கையை மறைத்தபடி தேவனுடைய விசேஷ தூதர்கள் இருந்தார்கள். (இப்பொழுது இவற்றைப் பற்றிய உண்மையான விபரங்களைச் சொல்லக் காலம் போதாது.)

இவ்விதத்தில் எல்லாப் பொருள்களும் ஆயத்தப்படுத்தப்பட்ட பிறகு, ஆராதனை சேவையை செய்யும் பொருட்டு ஆசாரியர்கள் முதலாம் பரிசுத்தக் கூடாரத்தில் நித்தமும் செல்லத் தொடங்குவார்கள். ஆனால் பிரதான ஆசாரியர் மட்டுமே மிகப் பரிசுத்தமான இரண்டாம் அறைக்குள் பலியின் இரத்தத்தைச் சிந்தி நுழைய முடியும். அவர் முதலில் தான் செய்த பாவங்களுக்காகக் காணிக்கை செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே அறியாமையால் மக்கள் செய்த பாவங்களுக்காக அவர் காணிக்கைகளை வழங்கவேண்டும்.

முதலாம் கூடாரம் நிற்கும் வரையிலும் மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போகும் வழியானது மூடப்பட்டிருக்கிறது என்பதைப் புலப்படுத்தவே பரிசுத்த ஆவியானவர் இவ்விரண்டு அறைகளையும் பயன்படுத்துகிறார். எல்லாமே நிகழ் காலத்தின் ஒரு அடையாளமானது. தாம் செலுத்தும் காணிக்கையாலும், பலிகளாலும் வழிபடுகிறவனின் மனசாட்சியானது முழுமைப்படுத்தப்படுவதில்லை. 10 ஏனெனில் உண்ணுதல், பருகுதல், சடங்குக் குளியல்கள் ஆகிய புற விஷயங்களைப் பற்றிய காணிக்கைகளும் பலிகளுமாகவே இருக்கின்றன. இவ்விஷயங்கள் தேவனுடைய புதிய வழி உண்டாகும் வரைக்கும் பயன்படுகின்றன.

புதிய உடன்படிக்கையின்படி வழிபாடு

11 மேலும் இப்போது வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியனாகக் கிறிஸ்து வந்திருக்கிறார். (சாதாரண கூடாரத்தின் வழியே அவர் வரவில்லை). மனிதக் கைகளால் உருவாக்கப்படாத உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான கூடாரத்தின் வழியே வந்தார். அக்கூடாரமானது தேவன் உருவாக்கிய இவ்வுலகத்தின் பகுதியல்ல. 12 மேலும் மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் இயேசு நுழைந்தபோது, வெள்ளாட்டுக்கடாக்கள் மற்றும் காளைகளின் இரத்தத்தை அவர் பயன்படுத்தவில்லை. மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் நுழைய அவர் தன் சொந்த இரத்தத்தையே பயன்படுத்தினார். எல்லா காலத்திற்கும் போதுமென்கிற அளவிற்கு ஒரே ஒருமுறை தான் அவர் அதற்குள் சென்றார். இவ்வழியில் நமக்கு அவர் நித்திய விடுதலையைப் பெற்றுத்தந்தார்.

13 வெள்ளாட்டுக்கடா காளை ஆகியவற்றின் இரத்தமும் தீட்டுப்பட்ட மக்கள் மீது தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும் அவர்களைப் பரிசுத்தமாக்கிப் புறப்பரிசுத்தம் உடையவர்களாக்க முடியும். 14 இது உண்மை எனில், கிறிஸ்துவின் இரத்தம் இதிலும் மிக்க வல்லமை உள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனுக்கு இயேசு தன்னைத் தானே ஒரு முழுமையான பலியாக வழங்கினார். ஆகவே நமக்கு ஆன்மீக மரணத்தைக் கொண்டுவருகிற தீய செயல்களில் இருந்து அவர் இரத்தமானது நம் இதயத்தை சுத்தமாக்கும். ஜீவனுள்ள தேவனை வழிபடும் வண்ணம் நாம் சுத்தமாக்கப்படுகிறோம்.

15 கிறிஸ்து இறந்ததால், புதிய உடன்படிக்கையின் [b] நடுவராக அவர் ஆனார். இப்போது முதல் உடன்படிக்கையின் கீழ் செய்த தவறுகளில் இருந்து மக்களை விடுவிக்கும் கிறிஸ்துவின் மரணம் ஒன்றிருந்தது. அதனால், அழைக்கப்பட்டவர்கள் என்றென்றும் உரிமைகளைப் பெறுவர்.

16 ஒரு மனிதன் இறக்கும்போது அவன் தன் மரண சாசனத்தை விட்டுச்செல்கிறான். ஆனால் அம்மரண சாசனத்தை எழுதியவன் இறந்துபோனான் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும். 17 மரண சாசனத்தை எழுதியவன் வாழ்கிறான் என்றால் அந்த சாசனத்திற்குப் பொருள் இல்லை. அந்த சாசனத்தை அவன் இறந்த பிறகே பயன்படுத்த முடியும். 18 தேவனுக்கும் அவரது மக்களுக்கும் ஏற்பட்ட முதல் உடன்படிக்கையும் இது போலாயிற்று. இதுவும் இரத்தமில்லாமல் நன்மையடையவில்லை. 19 முதலில் மோசே சட்டத்தில் உள்ள ஒவ்வொரு கட்டளையையும் அறிவித்தான். பிறகு இளங்காளைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு மயிரோடும் ஈசோப்போடும் [c] கூட எடுத்து சட்டப் புத்தகத்தின் மேலும் மக்கள் மீதும் தெளிக்கப் பயன்படுத்தினான். 20 “தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுதான்” என்று மோசே கூறினான். 21 இவ்வாறு பரிசுத்தக் கூடாரத்தின் மேலும் மோசே இரத்தத்தை தெளித்தான். அத்துடன் வழிபாட்டிற்குரிய அனைத்துப் பொருட்களின் மீதும் தெளித்தான். 22 அனைத்தையும் இரத்தத்தால் சுத்தப்படுத்த முடியும் என்று சட்டம் சொல்கிறது. இரத்தம் இல்லாமல் எவ்வித பாவங்களும் மன்னிக்கப்படமாட்டாது.

கிறிஸ்துவின் பலி பாவங்களை நீக்குகிறது

23 எனவே பரலோகத்தில் உள்ளவற்றின் சாயலாக உள்ள இவற்றை விலங்குகளைப் பலி கொடுத்து சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் பரலோகத்தில் உள்ளவற்றிற்கு இதைவிடச் சிறப்பான பலிகள் அவசியம் ஆகும். 24 கிறிஸ்து மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போனார். ஆனால் உண்மையானதின் சாயலாக மனிதக் கைகளால் செய்யப்பட்ட இடத்திற்குப் போகவில்லை. கிறிஸ்து பரலோகத்திற்கே சென்றார். இப்போது அங்கே நமக்காக தேவனுக்கு முன் தோன்றுகிறார்.

25 ஒவ்வொரு ஆண்டும் தனக்குச் சொந்தமற்ற இரத்தத்தோடு பிரதான ஆசாரியன் மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் கிறிஸ்து தன்னையே வழங்கிக்கொள்ள வேண்டியதில்லை. 26 அப்படியானால் உலகம் உண்டானது முதல் அவர் அநேகந்தரம் இதுபோல் பாடுபட வேண்டியது இருந்திருக்கும். அவர் தம்மை தாமே பலியிட வேண்டியிருந்தது. அதனால் அவர் இந்தக் கடைசி காலத்தில் ஒரே ஒருதரம் தம்மைப் பலியிட்டார். இதன் மூலம் அவர் அனைவரது பாவங்களையும் நீக்கிவிட்டார்.

27 ஒவ்வொரு மனிதனும் ஒருமுறை மட்டுமே சாகிறான். அதன் பிறகு நியாயந்தீர்க்கப்படுகிறான். 28 ஆகையால் ஒவ்வொருவரின் பாவங்களையும் தீர்க்கும்படி கிறிஸ்து ஒருமுறை மரித்தார். மேலும் கிறிஸ்து இரண்டாம் முறையும் வருவார். பாவங்களைத் தீர்க்கும்படி அல்ல. தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அளிக்க வருவார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center