Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 120-122

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

120 நான் தொல்லைகளில் சிக்குண்டிருந்தபோது,
    உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் காப்பாற்றினார்!
கர்த்தாவே, என்னைப்பற்றிப் பொய் கூறியவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    உண்மையில்லாதவற்றை அந்த ஜனங்கள் கூறினார்கள்.

பொய்யரே, நீங்கள் பெறப்போவதை அறிவீர்களா?
    நீங்கள் அடையப்போவதை அறிவீர்களா?
வீரனின் கூரிய அம்புகளும்,
    சுடும் தழலும் உன்னைத் தண்டிக்கும்.

பொய்யர்களின் அருகே வாழ்வது மேசேக்கில் வாழ்வதைப் போன்றதும்
    கேதாரின் கூடாரங்களண்டையில் வாழ்வதைப் போன்றதுமாகும்.
சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு
    நான் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன்.
நான் சமாதானம் வேண்டும் என்றேன்.
    ஆனால் அவர்கள் போரை விரும்புகிறார்கள்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

121 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன்.
    ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது?
எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும்
    படைத்த கர்த்தரிடமிருந்து வரும்.
தேவன் உன்னை விழவிடமாட்டார்.
    உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார்.
இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை.
    தேவன் ஒருபோதும் உறங்கார்.
கர்த்தர் உன் பாதுகாவலர்.
    அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார்.
பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது.
    இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது.
எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார்.
    கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.
நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
    இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல்

122 ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது
    நான் மிகவும் மகிழ்ந்தேன்.
இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம்.
இது புதிய எருசலேம்.
    ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு.
    கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள்.
    அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும்.
அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள்.
    தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.

எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்.
    “உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன்.
உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன்.
    உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.”

என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக,
    இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக,
    இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன்.

1 கொரி 9

நான் ஒரு சுதந்திரமான மனிதன். நான் ஒரு அப்போஸ்தலன். நமது கர்த்தராகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன். கர்த்தரில் எனது பணிக்கு நீங்கள் உதாரணமாவீர்கள். மற்ற மக்கள் என்னை அப்போஸ்தலனாக ஒருவேளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், நீங்கள் நிச்சயமாக என்னை அப்போஸ்தலனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். கர்த்தரில் நான் ஒரு அப்போஸ்தலன் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.

சில மனிதர்கள் என்னை நியாயம் தீர்க்க விரும்புகிறார்கள். நான் இந்தப் பதிலை அவர்களுக்கு அளிக்கிறேன். உண்ணவும், பருகவும் நமக்கு உரிமை இருக்கிறது அல்லவா? நாம் பயணம் செய்யும்போது விசுவாசத்திற்குள்ளான மனைவியை அழைத்துச் செல்ல உரிமை இருக்கிறது அல்லவா? மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தரின் சகோதர்களும், கேபாவும் இதைச் செய்கிறார்கள். பர்னபாவும் நானும் மட்டுமே எங்கள் வாழ்க்கைக்கு சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. படையில் சேவை புரியும் எந்த வீரனும் தன் செலவுக்குத் தன் சொந்தப் பணத்தைக் கொடுப்பதில்லை. திராட்சையை விதைக்கிற யாரும் அதன் பழத்தை உண்ணாமல் இருப்பதில்லை. மந்தையை மேய்க்கிற எவரும் அதன் பாலைப் பருகாமல் இருப்பதில்லை.

இவை மனிதன் நினைப்பவை மாத்திரமல்ல. தேவனின் சட்டமும் அவற்றையே கூறுகின்றன. ஆம், மோசேயின் சட்டத்தில் அது எழுதப்பட்டுள்ளது “உழைக்கும் மிருகத்தை, தானியத்தைப் பிரிக்கப் பயன்படுத்தும்போது அதன் வாயை மூடாதே. அது தானியத்தை உண்ணாதபடி தடை செய்யாதே.” [a] தேவன் இதைக் கூறியபோது, அவர் உழைக்கும் மிருகங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டாரா? இல்லை. 10 இவ்வாக்கியம் நம்மைப் பற்றிக் குறிக்கவில்லையா? ஆம் வேத வாக்கியங்கள் நமக்காக எழுதப்பட்டதால் எல்லா வகையிலும் இது நம்மையே குறிக்கிறது. தம் வேலைக்கு சிறிதளவு தானியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உழுகிறவனும், தானியத்தை அறுவடை செய்கிறவனும் அந்தந்த வேலையைச் செய்யவேண்டும். 11 நாங்கள் ஆன்மீக விதையை உங்களில் விதைத்துள்ளோம். ஆகவே இந்த வாழ்க்கையில் உங்களுடைய சில பொருள்களை நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காக அறுவடை செய்யக்கூடும். இது அதிகமாக ஆசைப்படுவதல்ல. 12 பிறர் உங்களிடமிருந்து பொருளைப் பெறும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். எனவே எங்களுக்கும் நிச்சயமாய் இந்த உரிமை உண்டு. ஆனால், இந்த உரிமையை நாங்கள் பயன்படுத்தவில்லை. இல்லை, பிறர் கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படிவதைத் தடுக்காமலிருப்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் சகித்துக்கொள்கிறோம். 13 தேவாலயத்தில் பணிவிடை செய்பவர்களுக்கு உணவு தேவாலயத்தில் இருந்து கிடைக்கிறது. பலிபீடத்தில் பணி செய்பவருக்குப் பலிபீடத்தில் படைக்கப்பட்டவற்றில் ஒரு பகுதி கிட்டும். 14 நற்செய்தியை அறிவிப்போரின் வாழ்க்கைக்குரிய பொருள் அந்த வேலையிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.

15 ஆனால் இந்த உரிமைகள் எதையும் நான் பயன்படுத்தவில்லை. இவற்றைப் பெற வேண்டுமென்று முயற்சி செய்யவும் இல்லை. இதை உங்களுக்கு எழுதுவதினால் என் நோக்கமும் அதுவல்ல. பெருமைப்படுவதற்குரிய காரணத்தை என்னிடமிருந்து அபகரித்துச் செல்லப்படுவதைவிட நான் இறப்பது நல்லதாகும். 16 நற்செய்தியைப் போதிப்பது நான் பெருமைப்படுவதற்குரிய காரணமல்ல. நற்செய்தியைப் போதிப்பது எனது கடமை. நற்செய்தியைப் போதிப்பது என்பது நான் கண்டிப்பாக செய்யவேண்டியது. அதைச் செய்யாமலிருப்பது எனக்குத் தீமையாகும். 17 நானே என் தேர்வுக்குத் தகுந்தபடி நற்செய்தியைப் போதித்தால் நான் ஒரு வெகுமதிக்குத் தகுதியுடையவனாகிறேன். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. நான் நற்செய்தியைப் போதிக்க வேண்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை நான் செய்கிறேன். 18 எனக்கு என்ன பலன் கிடைக்கிறது? நற்செய்தியை எங்கும் பரப்புவதே எனக்கு கிட்டும் வெகுமதி. எனவே நற்செய்தி எனக்கு வழங்குகிற “பலன் பெறுதல்” என்கிற உரிமையை நான் பயன்படுத்தவில்லை.

19 நான் சுதந்திரமானவன். யாருக்கும் உரியவன் அல்ல. ஆனால் எல்லா மனிதருக்கும் என்னை அடிமையாக்குகிறேன். என்னால் இயன்ற அளவுக்கு மக்களைக் காப்பதற்காக இதைச் செய்கிறேன். 20 யூதர்களிடம் நான் யூதனைப் போலானேன். யூதர்களை காப்பதற்காக இதைச் செய்தேன். நான் சட்டத்தின் ஆளுகைக்குக் கட்டுப்படாதவன்தான். ஆனால் சட்டப்படி வாழும் மக்களின் முன்பு சட்டப்படி வாழும் மனிதனாகவே நான் ஆனேன். சட்டத்தால் ஆளப்படுகிற மக்களைக் காப்பாற்றவே நான் இதைச் செய்தேன். 21 சட்டத்தின் கீழ் இல்லாத மக்களிடம் சட்டத்தைப் பின்பற்றாதவனாக நடந்துகொண்டேன். சட்டத்தின்படி நடவாத மக்களை காப்பதற்காக நான் இதைச் செய்தேன். (ஆனால் தேவனின் சட்டத்தை நான் மீறவில்லை. கிறிஸ்துவின் சட்டப்படியே நான் ஆளப்படுகிறேன்) 22 பலவீனமான மனிதரை அவர்கள் கர்த்தருக்கென்று ஆதாயம் செய்யும்படி பலவீனமானவனைப்போல நடந்துகொண்டேன். எல்லா மனிதர்களுக்கும் நான் எல்லாரையும்போல நடந்துகொண்டேன். எந்த வகையிலாவது மனிதர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென இவ்வாறு செய்தேன். 23 நற்செய்தியின் பொருட்டு இவற்றையெல்லாம் செய்கிறேன். நற்செய்தியின் ஆசீர்வாதத்தில் பங்குபெற விரும்பி இவற்றைச் செய்கிறேன்.

24 ஒரு பந்தயத்தில் எல்லா ஓட்டக்காரர்களும் ஓடுவது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். எனவே அதைப் போன்று ஓடுங்கள். வெற்றி பெறுவதற்காக ஓடுங்கள். 25 பந்தயங்களில் பங்கு பெறுகிறவர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொள்வர். ஒரு கிரீடத்தை வெல்வதற்காக இதைச் செய்வார்கள். கொஞ்ச காலத்தில் அழியக் கூடிய உலக ரீதியான கிரீடம் அது. ஆனால் நாம் பெறும் கிரீடமோ அழியாது நிலைநிற்கும். 26 குறிக்கோளோடு ஓடுகிற மனிதனைப் போன்று நானும் ஓடுகிறேன். காற்றோடு மோதாமல் இலக்கில் தாக்குகிற குத்துச் சண்டை வீரனைப்போல போரிடுகிறேன். 27 எனது சொந்த சரீரத்தையே நான் அடக்குகிறேன். அதை எனக்கு அடிமையாக்குகிறேன். நான் பிறருக்குப் போதித்த பின்பு நானே புறந்தள்ளி விழாதபடிக்கு (தேவனால் அப்புறப்படுத்தப்படாதபடிக்கு) இதைச் செய்கிறேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center