Old/New Testament
94 கர்த்தாவே, நீர் ஜனங்களைத் தண்டிக்கும் தேவன்.
நீர் வருகிறவரும் ஜனங்களுக்குத் தண்டனையைத் தருகிறவருமான தேவன்.
2 நீர் முழு பூமிக்கும் நீதிபதி.
பெருமையுடைய ஜனங்களுக்கு, அவர்களுக்குரிய தண்டனையைக் கொடும்.
3 கர்த்தாவே, எத்தனை காலம் தீயவர்கள் கேளிக்கைகளில் திளைத்திருப்பார்கள்?
4 எதுவரைக்கும் அக்குற்றவாளிகள்
அவர்கள் செய்த தீய காரியங்களைப்பற்றிப் பெருமை பாராட்டுவார்கள்?
5 கர்த்தாவே, அவர்கள் உமது ஜனங்களைத் தாக்குகிறார்கள்.
உமது ஜனங்கள் துன்புறும்படி அவர்கள் செய்கிறார்கள்.
6 அத்தீயோர் விதவைகளையும் இத்தேசத்தைப் பார்க்க வருவோரையும் கொல்கிறார்கள்.
பெற்றோரில்லாத பிள்ளைகளை அவர்கள் கொலை செய்கிறார்கள்.
7 அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதை கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
நிகழ்வதை இஸ்ரவேலின் தேவன் அறியார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
8 தீய ஜனங்களாகிய நீங்கள் மூடர்கள்.
நீங்கள் எப்போது உங்கள் பாடத்தைக் கற்பீர்கள்?
கொடிய ஜனங்களாகிய நீங்கள் அறிவில்லாதவர்கள்!
நீங்கள் புரிந்துகொள்ள முயலவேண்டும்.
9 தேவன் நமது காதுகளை உண்டாக்கினார்.
நிச்சயமாக அவருக்கும் காதுகள் உள்ளன.
அவரால் நிகழ்வதைக் கேட்கமுடியும்!
தேவன் நமது கண்களை உண்டாக்கினார்.
நிச்சயமாக அவருக்கும் கண்கள் உள்ளன.
அவரால் நிகழ்வதைக் காணமுடியும்!
10 தேவன் அந்த ஜனங்களை ஒழுங்குபடுத்துவார்.
தேவன் அவர்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கற்பிப்பார்.
11 ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார்.
வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார்.
12 கர்த்தர் ஒழுங்குபடுத்தும் மனிதன் மகிழ்ச்சியாயிருப்பான்.
சரியான வழியில் வாழ்வதற்கு தேவன் அவனுக்குக் கற்பிப்பார்.
13 தேவனே, குழப்பம் நேருகையில் அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
தீயோர் கல்லறைக்குள் வைக்கப்படும்வரை அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
14 கர்த்தர் அவரது ஜனங்களை விட்டு விலகுவதில்லை.
உதவியின்றி அவரது ஜனங்களை அவர் விட்டுவிடுவதில்லை.
15 நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும்,
அப்போது நல்ல, உண்மையான ஜனங்கள் வாழ்வார்கள்.
16 தீயோரை எதிர்ப்பதற்கு ஒருவனும் உதவவில்லை.
தீமை செய்வோரை எதிர்க்கும்போது ஒருவனும் எனக்குத் துணைவரவில்லை.
17 கர்த்தர் எனக்கு உதவியிராவிட்டால்
நான் மரணத்தினால் மௌனமாக்கப்பட்டிருப்பேன்!
18 நான் விழத்தயாராயிருப்பதை அறிகிறேன்,
ஆனால் கர்த்தர் தம்மைப் பின்பற்றுபவனுக்கு உதவுகிறார்.
19 நான் கவலையடைந்து கலங்கியிருந்தேன்.
ஆனால் கர்த்தாவே, நீர் எனக்கு ஆறுதல் கூறி எனக்கு மகிழ்ச்சியளித்தீர்.
20 தேவனே, நீர் அநீதியுள்ள நீதிபதிகளுக்கு உதவுவதில்லை.
ஜனங்களின் வாழ்க்கை கடினமாவதற்கு அத்தீய நீதிபதிகள் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
21 அந்நீதிபதிகள் நல்லோரைத் தாக்குகிறார்கள்.
களங்கமற்ற ஜனங்களைக் குற்றவாளிகள் எனக் கூறி, அவர்களைக் கொல்கிறார்கள்.
22 ஆனால் உயரமான பர்வதங்களில் கர்த்தர் எனக்குப் பாதுகாப்பிடம்.
என் கன்மலையான தேவன் என் பாதுகாப்பிடம்.
23 அத்தீய நீதிபதிகள் செய்த தீய காரியங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
அவர்கள் பாவம் செய்ததால் தேவன் அவர்களை அழிப்பார்.
எங்கள் தேவனாகிய கர்த்தர் அத்தீய நீதிபதிகளை அழிப்பார்.
95 வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்!
நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம்.
2 கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம்.
அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.
3 ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்!
பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார்.
4 ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை.
5 சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார்.
தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார்.
6 வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம்.
நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம்.
7 அவரே நமது தேவன்!
நாம் அவரது ஜனங்கள்.
அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம்.
8 தேவன்: “பாலைவனத்தில் மேரிபாவில் செய்தது போலவும், மாசாவில் செய்தது போலவும் அடம்பிடிக்காதீர்கள்” என்று கூறினார்.
9 உங்கள் முற்பிதாக்கள் என்னை சோதித்தார்கள்.
அவர்கள் என்னை சோதித்தபோது நான் செய்யக்கூடியவற்றைக் கண்டார்கள்.
10 நாற்பது ஆண்டுகள் அந்த ஜனங்களிடம் நான் பொறுமையாக இருந்தேன்.
அவர்கள் உண்மையில்லாதவர்கள் என நான் அறிவேன்.
அந்த ஜனங்கள் என் போதனைகளைப் பின்பற்ற மறுத்தார்கள்.
11 எனவே நான் கோபமடைந்தேன்,
எனது இளைப்பாறுதலின் தேசத்தில் அவர்கள் நுழைவதில்லை என ஆணையிட்டேன்.
96 கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும்.
2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்!
அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்!
ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்!
3 தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள்.
தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள்.
4 கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர்.
வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.
5 பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே.
ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர்.
6 அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும்.
தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும்.
7 குடும்பங்களும் தேசங்களும்
கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள்.
8 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள்.
9 கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள்.
10 கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்!
அதனால் உலகம் அழிக்கப்படுவதில்லை.
கர்த்தர் ஜனங்களை நியாயமாக அரசாளுவார்.
11 விண்ணுலகங்களே!
மகிழ்ச்சிகொள்ளுங்கள்.
பூமியே! களிகூரு.
கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்!
12 வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்!
வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்!
13 கர்த்தர் வருகிறார், ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள்.
கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வந்துகொண்டிருக்கிறார்.
நீதியோடும் நியாயத்தோடும்
அவர் உலகை ஆளுகை செய்வார்.
தன் பணியைப் பற்றிப் பவுல்
14 எனது சகோதர சகோதரிகளே! நீங்கள் நன்மையால் நிறைந்திருப்பதாக நம்புகிறேன். உங்களுக்குத் தேவையான அறிவு உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியும். நீங்கள் ஒருவருக்கொருவர் கற்பிக்கும் தகுதி பெற்றவர்கள். 15 நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ளத்தக்க சிலவற்றைப் பற்றி நான் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறேன். தேவன் எனக்குச் சிறப்பான வரத்தைக் கொடுத்திருப்பதால் நான் இதனைச் செய்தேன். 16 என்னை இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக தேவன் ஆக்கினார். நான் யூதரல்லாதவர்களுக்கு உதவும்பொருட்டு என்னை தேவன் ஊழியனாக்கினார். நற்செய்தியைக் கற்றுக்கொடுப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்கிறேன். யூதரல்லாதவர்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளத்தக்க காணிக்கை ஆகும்பொருட்டு நான் இதனைச் செய்கிறேன். அவர்கள் தேவனுக்காகப் பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்பட்டனர்.
17 நான் தேவனுக்காகக் கிறிஸ்துவுக்குள் செய்த பணிகளுக்காகப் பெருமை கொள்கிறேன். 18 நான் செய்து முடித்த செயல்களைப் பற்றி நானே பேசுவதில்லை. யூதரல்லாதவர்கள் தேவனுக்கு அடிபணிய, என் மூலம் கிறிஸ்து செய்த செயல்களைப் பற்றி மட்டுமே பேசுவேன். நான் செய்ததும், சொன்னதுமான காரியங்கள் மூலமே அவர்கள் தேவனுக்குப் பணிந்தனர். 19 அற்புதங்களையும், வல்லமைகளையும். பெருங்காரியங்களையும் பார்த்தும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை உணர்ந்தும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தனர். நான் எருசலேமிலிருந்து கிறிஸ்துவின் நற் செய்தியை அறிவிக்க தொடங்கி, இல்லிரிக்கம் நகர்வரை என் பணியை முடித்திருக்கிறேன். 20 கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்படாத மக்கள் இருக்கும் இடங்களில் நற்செய்தியைப் போதிக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன். மற்றவர்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட பணிகளை நான் போய்த் தொட விரும்பாததால் நான் இவ்வாறு செய்கிறேன். ஆனால்,
21 “அவரைப் பற்றி கேட்டிராத மக்கள் அவரைப் பார்ப்பார்கள்.
அவரைப் பற்றி அறியாத மக்கள் அவரைப் புரிந்துகொள்வார்கள்.” (A)
என்று ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.
ரோம் செல்லப் பவுலின் திட்டம்
22 அதனால் தான் உங்களிடம் வருவதிலிருந்து பலமுறை நிறுத்தப்பட்டேன்.
23 நான் இந்தத் திசைகளில் இப்போது எனது பணியை முடித்துவிட்டேன். பல ஆண்டுகளாக உங்களைக் காண விரும்பியிருக்கிறேன். 24 நான் ஸ்பானிய நாட்டிற்குப் போகும்போது உங்களிடம் வந்து உங்களைக் கண்டு கொள்ளவும், நான் உங்களோடு தங்கியிருந்து மகிழ்ச்சி அடைவேனென்றும் நம்புகிறேன். என் பயணத்துக்கு நீங்களும் உதவி செய்யலாம்.
25 தேவனுடைய மக்களுக்கு உதவுவதற்காக இப்பொழுது நான் எருசலேமுக்குச் செல்கிறேன். 26 எருசலேமிலுள்ள தேவனுடைய மக்களில் சிலர் வறுமையில் உள்ளனர். மக்கதோனியா, அகாயா போன்ற நாடுகளில் உள்ள விசுவாசிகள் கொடுப்பதில் மகிழ்ச்சியடைவார்கள். அவர்களே எருசலேமில் உள்ள விசுவாசிகளுக்கு உதவிசெய்து வருகின்றனர். 27 இப்படிச் செய்வது நல்லதென்று எண்ணினார்கள். இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளியாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால் புறஜாதியினர் அவர்களுடைய ஞான நன்மைகளில் பங்கேற்கின்றனர். சரீர நன்மைகளில் அவர்களுக்கு உதவுகின்றனர். அவர்கள் இவ்விதம் கடனாளியாயிருக்கிறார்களே. 28 எருசலேமில் உள்ள ஏழை மக்கள் அவர்களுக்காக வழங்கப்பட்ட பொருளை அடையவேண்டும். இதை முடித்த பிறகு ஸ்பானியாவுக்குப் புறப்படுவேன்.
வழியில் உங்களைப் பார்ப்பேன். 29 நான் உங்களைப் பார்க்க வரும்போது, கிறிஸ்துவின் முழுமையான ஆசீர்வாதத்தை உங்களுக்குக் கொண்டு வருவேன் என்பதை நான் அறிவேன்.
30 சகோதர சகோதரிகளே! நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமும் பரிசுத்த ஆவியானவரின் அன்பின் மூலமும் உங்களை வேண்டுகிறேன். நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது எனது போராட்டங்களில் பங்கு கொள்ளுங்கள். தேவனிடம் பிரார்த்தனை செய்யும்போது நினைவு கொள்ளுங்கள். 31 யூதேயாவிலுள்ள நம்பிக்கையற்றவர்களிடமிருந்து நான் தப்பித்துக்கொள்ளும் பொருட்டு பிரார்த்தனை செய்யுங்கள். எருசலேமிலுள்ள விசுவாசிகளுக்கு நான் செய்யப்போகும் உதவி அவர்களால் மகிழ்ச்சியுடன் ஏற்கப்படவும் பிரார்த்தனை செய்யுங்கள். 32 பிறகு, தேவனுடைய விருப்பம் இருந்தால் நான் உங்களிடம் வருவேன். நான் மகிழ்ச்சியோடு வருவேன். உங்களோடு ஓய்வுகொள்ளுவேன். 33 சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக ஆமென்.
2008 by World Bible Translation Center