Old/New Testament
91 மிக உன்னதமான தேவனிடம் மறைந்துகொள்ள நீ போகமுடியும்.
சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பாதுகாப்பிற்காக நீ போக முடியும்.
2 நான் கர்த்தரை நோக்கி, “நீரே என் பாதுகாப்பிடம், என் கோட்டை,
என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன்” என்று கூறுகிறேன்.
3 மறைவான ஆபத்துக்களிலிருந்தும்
ஆபத்தான நோய்களிலிருந்தும் தேவன் உன்னைக் காப்பாற்றுகிறார்.
4 நீ தேவனைப் பாதுகாப்பிற்காக அணுகமுடியும்.
அவர் உன்னை ஒரு பறவை சிறகை விரித்துத் தன் குஞ்சுகளைக் காப்பதைப்போன்று காப்பார்.
தேவன் ஒரு கேடகத்தைப் போன்றும் சுவரைப் போன்றும் உன்னைப் பாதுகாக்கிறார்.
5 இரவில் நீ அஞ்சத்தக்கது எதுவுமில்லை.
நீ பகலில் பகைவரின் அம்புக்கும் பயப்படமாட்டாய்.
6 இருளில் வரும் கொடிய நோய்களுக்கும்,
நடுப் பகலில் வரும் கொடிய நோய்களுக்கும் நீ அஞ்சமாட்டாய்.
7 நீ ஆயிரம் பகைவர்களைத் தோற்கடிப்பாய்.
உன் சொந்த வலதுகை பதினாயிரம் பகைவீரர்களைத் தோற்கடிக்கும்.
உன் பகைவர்கள் உன்னைத் தொடக்கூடமாட்டார்கள்.
8 சற்றுப்பார்,
அத்தீயோர் தண்டிக்கப்பட்டதை நீ காண்பாய்!
9 ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய்.
மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய்.
10 தீயவை உனக்கு நிகழாது,
உன் வீட்டில் எந்தவிதமான நோய்களும் இருப்பதில்லை.
11 தேவன் அவரது தூதர்களை உனக்காகக் கட்டளையிடுவார்.
நீ போகுமிடங்களிலெல்லாம் அவர்கள் உன்னைப் பாதுகாப்பார்கள்.
12 உன் கால் பாறையில் மோதாதபடிக்கு
அவர்கள் கைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும்.
13 சிங்கங்களின் மேலும்
விஷம் நிரம்பிய பாம்புகளின் மேலும் நடக்கும் வல்லமை உனக்கு வாய்க்கும்.
14 கர்த்தர்: “ஒருவன் என்னை நம்பினால், நான் அவனை மீட்பேன்.
என் நாமத்தை தொழுது கொண்டு என்னைப் பின்பற்றுவோரை நான் கப்பாற்றுவேன்” என்கிறார்.
15 என்னைப் பின்பற்றுவோர் உதவிக்காக என்னை அழைப்பார்கள்.
நான் அவர்களுக்குப் பதில் கொடுப்பேன்.
அவர்களுக்குத் தொல்லை நேரும்போது நான் அவர்களோடு இருப்பேன்.
நான் அவர்களைக் காப்பாற்றிப் பெருமைப்படுத்துவேன்.
16 என்னைப் பின்பற்றுவோருக்கு நான் நீண்ட ஆயுளைக் கொடுப்பேன்.
நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.
ஓய்வு நாளின் துதிப்பாடல்
92 மிக உன்னதமான தேவனாகிய கர்த்தரைத் துதிப்பது நல்லது.
உமது நாமத்தைத் துதிப்பது நல்லது.
2 காலையில் உமது அன்பைப்பற்றியும்
இரவில் உமது நம்பிக்கையைப் பற்றியும் பாடுவது நல்லது.
3 தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும்,
இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது.
4 கர்த்தாவே, நீர் செய்த காரியங்களால் எங்களை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறீர்.
அக்காரியங்களைக் குறித்து நாங்கள் சந்தோஷமாகப் பாடுவோம்.
5 கர்த்தாவே, நீர் மேன்மையான காரியங்களைச் செய்தீர்.
உமது எண்ணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியாது.
6 உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள்.
நாங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத மூடர்களைப்போல் இருக்கிறோம்.
7 களைகளைப்போல் தீயோர் வாழ்ந்து மறைகிறார்கள்.
அவர்கள் செய்யும் பயனற்ற காரியங்களே என்றென்றும் அழிக்கப்படும்.
8 ஆனால் தேவனே, நீர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவீர்.
9 கர்த்தாவே, உமது பகைவர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
தீயவை செய்யும் எல்லா ஜனங்களும் அழிக்கப்படுவார்கள்.
10 ஆனால் நீர் என்னைப் பெலனுடையவனாகச் செய்கிறீர்.
பலத்த கொம்புகளையுடைய ஆட்டைப் போலாவேன்.
விசேஷ வேலைக்காக நீர் என்னைத் தேர்ந்தெடுத்தீர்.
உமது புது எண்ணெயை என்மீது ஊற்றினீர்.
11 என் பகைவர்களை என்னைச் சுற்றிலும் காண்கிறேன்.
என்னைத் தாக்க வருகிற பெருங்காளைகளைப் போல அவர்கள் காணப்படுகிறார்கள்.
அவர்கள் என்னைக் குறித்துச் சொல்பவற்றை நான் கேட்கிறேன்.
12-13 செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான்.
லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான்.
கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள்.
தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள்.
14 வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள்.
அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள்.
15 கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள்.
அவர் என் பாறை, அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை.
93 கர்த்தர் அரசர்.
அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார்.
அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது,
அது அசைக்கப்படுவதில்லை.
2 தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது.
தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்!
3 கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது.
மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன.
4 கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன.
ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.
5 கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும்.
உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும்.
15 விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிற நாம் பல வீனமானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் நமது திருப்திக்காக மட்டுமே வாழ்தல் கூடாது. 2 நம்மில் ஒவ்வொருவரும் மற்றவர்களையும் மகிழ்ச்சியுறச் செய்தல் வேண்டும். இதனை மற்றவர்களுக்கு உதவியாகச் செய்ய வேண்டும். அவர்கள் விசுவாசத்தில் பலமுடையவர்களாக உதவி செய்யவேண்டும். 3 கிறிஸ்து கூட தனது திருப்திக்காக வாழவில்லை. “அவர்கள் உங்களை நிந்தித்தால் என்னையும் நிந்திக்கிறவர்களாகிறார்கள்” [a] என்று எழுதப்பட்டிருப்பதைப் போலாகும் அது. 4 வேதவசனத்தினால் பொறுமையும் ஆறுதலும் உண்டாகிறது. அதனால் நாம் நம்பிக்கை உள்ளவர்களாகும்படிக்கு முன்பு எழுதப்பட்டவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதப்பட்டன. 5 பொறுமையும் பலமும் தேவனிடமிருந்து வந்தன. இயேசு கிறிஸ்து விரும்புகிற வழியை நீங்கள் உங்களுக்குக்குள் ஏற்றுக்கொள்ள தேவனிடம் பிரார்த்திப்பேன். 6 எனவே இதய ஒற்றுமையுடனும் ஒருமித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனைப் புகழ்வீர்கள். 7 கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டார். எனவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தேவனுக்கு மகிமையைக் கொண்டு வரும். 8 இதனால் யூதர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். கிறிஸ்து யூதர்களுக்குப் பணியாளர் ஆனார். இதன் மூலம் அவர் தேவனுடைய வாக்குறுதிகள் உண்மையானவை எனக் காட்டினார். கிறிஸ்து யூதர்களின் தந்தையர்க்குக் கொடுத்த வாக்குறுதியை நிரூபித்துவிட்டார். 9 இதனால் யூதரல்லாதவர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது:
“யூதர் அல்லாத மக்களுக்கிடையில் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
உமது பெயரைப் பாராட்டிப் பாடுவேன்.” (A)
10 மேலும் வேதவாக்கியம் கூறுகிறது:
“யூதரல்லாதவர்களாகிய நீங்கள் தேவனுடைய மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள்.” (B)
11 மேலும் வேத வாக்கியம் கூறுகிறது:
“யூதரல்லாத நீங்கள் கர்த்தரைப் புகழுங்கள்.
அனைத்து மக்களும் கர்த்தரைப் புகழ வேண்டும்.” (C)
12 ஏசாயா இப்படி கூறுகிறார்:
“ஈசாயின் குடும்பத்திலிருந்து ஒருவர் வருவார்.
யூதரல்லாதவர்களை அவர் ஆள்வார்.
அவரால் யூதரல்லாதவர்களும் நம்பிக்கை அடைவார்கள்.” (D)
13 தேவன் வழங்கும் விசுவாசம் உங்களை சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும் நிரப்பட்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிறகு உங்களுக்கு மேலும் மேலும் விசுவாசம் பெருகும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அது நிரம்பி வழியும்.
2008 by World Bible Translation Center