Old/New Testament
கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்
87 எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.
2 இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளை கர்த்தர் நேசிக்கிறார்.
3 தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.
4 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள்.
அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள்.
5 சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார்.
மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
6 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
ஒவ்வொருவனும் எங்கே பிறந்தான் என்பதையும் தேவன் அறிகிறார்.
7 விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள்.
அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள்.
அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள்.
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல்.
88 தேவனாகிய கர்த்தாவே, நீரே எனது மீட்பர்.
இரவும் பகலும் நான் உம்மை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
2 தயவாய் என் ஜெபங்களைக் கவனித்துக் கேளும்.
இரக்கத்திற்காய் வேண்டும் என் ஜெபங்களுக்குச் செவிகொடும்.
3 இந்த நோயினால் என் ஆத்துமா துயரமாயிருக்கிறது,
நான் விரைவில் மரிப்பேன்.
4 ஏற்கெனவே ஜனங்கள் என்னை மரித்தவனைப் போன்றும்
வாழ பெலனற்ற மனிதனைப் போன்றும் கருதி நடத்துகிறார்கள்.
5 மரித்தோரிடம் என்னைத் தேடிப்பாருங்கள்.
உங்களிடமிருந்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்தும் தொடர்பிழந்த நீங்கள் மறந்து போன மரித்த ஜனங்களில் ஒருவனைப் போலவும், கல்லறையில் கிடக்கும் பிணத்தைப்போலவும் நான் இருக்கிறேன்.
6 பூமியிலுள்ள அந்தத் துவாரத்தில் நீர் என்னை வைத்தீர்.
ஆம், நீர் என்னை இருண்ட இடத்தில் வைத்தீர்.
7 தேவனே, நீர் என்னிடம் கோபமாயிருந்தீர், என்னைத் தண்டித்தீர்.
8 என் நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தார்கள்.
யாரும் தொடவிரும்பாத ஒருவனைப் போன்றும் அவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்.
நான் வீட்டில் அடைக்கப்பட்டேன், நான் வெளியே செல்ல முடியவில்லை.
9 என் எல்லாத் துன்பங்களுக்காகவும் அழுவதால் என் கண்கள் புண்படுகின்றன.
தேவனே, உம்மிடம் தொடர்ந்து ஜெபம் செய்கிறேன்!
ஜெபத்தில் என் கரங்களை உமக்கு நேராக உயர்த்துகிறேன்.
10 கர்த்தாவே, மரித்தவர்களுக்காக அற்புதங்கள் நிகழ்த்துவீரா?
ஆவிகள் எழுந்து உம்மைத் துதிக்குமா? இல்லை!
11 கல்லறைகளில் இருக்கும் மரித்தோர் உமது அன்பைக் குறித்துப் பேசமுடியாது.
மரித்தோரின் உலகத்திலுள்ளவர்கள் உமது உண்மையைக் குறித்துப் பேசமுடியாது.
12 இருளில் கிடக்கும் மரித்தோர் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப் பார்க்க முடியாது.
மறக்கப்பட்டோரின் உலகிலுள்ள மரித்தோர் உமது நன்மையைக் குறித்துச் சொல்ல முடியாது.
13 கர்த்தாவே, நீர் எனக்கு உதவவேண்டுமென உம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான் உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
14 கர்த்தாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
ஏன் எனக்குச் செவிகொடுக்க மறுக்கிறீர்?
15 என் இளமைப் பருவத்திலிருந்தே நான் சோர்ந்து நோயாளியாயிருக்கிறேன்.
உமது கோபத்தால் துன்புற்றேன், நான் திக்கற்றவன்.
16 கர்த்தாவே, நீர் என்னிடம் கோபம் கொண்டிருந்தீர்.
உமது தண்டனை என்னைக் கொன்று கொண்டிருக்கிறது.
17 வலியும் நோயும் எப்போதும் என்னை வருத்துகின்றன.
என் வலியிலும் நோயிலும் நான் அமிழ்ந்துகொண்டிருப்பதாக உணருகிறேன்.
18 கர்த்தாவே, என் நண்பர்களையும், அன்பர்களையும், என்னை விட்டு விலகுமாறு செய்தீர்.
இருள் மட்டுமே என்னிடம் நிலைகொண்டது.
அரசு அதிகாரத்திற்கு அடிபணியவும்
13 நீங்கள் அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய வேண்டும். ஆட்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஆட்சி புரியும் அதிகாரத்தை தேவன் கொடுத்திருக்கிறார். இப்பொழுது அதிகாரம் செய்கின்றவர்களுக்கு தேவனாலேயே அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2 எனவே அரசு அதிகாரத்திற்கு எதிராக இருப்பவன் உண்மையில் தேவனுடைய கட்டளைக்கு எதிராக இருக்கிறான் என்றே பொருளாகும். அரசுக்கு எதிராகச் செயல்படுபவன் உண்மையில் தண்டிக்கப்படத்தக்கவன். 3 நன்மை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டிய தேவையில்லை. ஆனால் தீமை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டும். நீங்கள் ஆள்வோர்களைக் கண்டு அச்சம்கொள்வதில் இருந்து விடுதலை பெறவேண்டுமா? அப்படியானால் நன்மையை மட்டும் செய்யுங்கள். நீங்கள் நன்மையைச் செய்தால் அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.
4 ஒரு ஆள்வோன் என்பவன் உங்களுக்கு உதவி செய்வதற்காக தேவனால் நியமிக்கப்பட்டவன். ஆனால் நீங்கள் தப்பு செய்தால் அஞ்சவேண்டும். உங்களைத் தண்டிக்கிற அதிகாரம் அவர்களுக்குண்டு. அதை அவர்கள் பயன்படுத்துவார்கள். தேவனுடைய பணியாளாகவே அவர்கள் தண்டனை வழங்குவார்கள். 5 எனவே நீங்கள் அரசாங்கத்திற்கு அடிபணியுங்கள். நீங்கள் பணியாவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்யத்தக்க நல்ல காரியமே அரசுக்குப் பணிவதுதான்.
6 இதற்காகத்தான் நீங்கள் வரிகளைச் செலுத்துகிறீர்கள். அவர்கள் தேவனுக்காகவும் உங்களுக்காகவும் உழைத்து வருகிறார்கள். தம் நேரமனைத்தையும் ஆட்சி செலுத்துவதிலேயே செலவழிக்கிறார்கள். 7 அனைவருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். கொடுக்க வேண்டிய வரிகளையும் கொடுத்துவிடுங்கள். மரியாதை செலுத்த வேண்டியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். எவருக்கு பயப்பட வேண்டுமோ அவர்களுக்கு பயப்படுங்கள்.
பிறரை நேசிப்பதே பிரமாணம்
8 எதற்காகவும் மற்றவர்களிடம் கடன் படாதிருங்கள். அன்புக்கு மட்டும் கடன்படுங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத்துகிற ஒருவன் உண்மையில் சட்டமுழுவதிற்கும் அடிபணிந்தவனாய் இருப்பான். 9 இவற்றையெல்லாம் நான் எதற்காகக் கூறுகிறேன் என்றால் “விபசாரம் செய்யாதிருங்கள். கொலை செய்யாதிருங்கள். களவு செய்யாதிருங்கள். அடுத்தவர்க்கு உரிய பொருட்களை விரும்ப வேண்டாம்.” [a] சட்டவிதி இவற்றைச் சொல்கிறது. இவை எல்லா கட்டளைகளும், “தன்னை தானே நேசித்துக்கொள்வது போலவே ஒருவன் அடுத்தவனையும் நேசிக்க வேண்டும்” [b] என்று ஒரு விதியையே சொல்கின்றன. 10 அன்பானது மற்றவர்களுக்குத் தவறு செய்யாதது. எனவே, அன்பு சட்டவிதியின் நிறைவேறுதலாய் இருக்கிறது.
11 நாம் மிக முக்கியமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால் இவற்றைக் கூறுகிறேன். நீங்கள் தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் இதுதான். நாம் முதலில் நம்பியதைக் காட்டிலும் இரட்சிப்பின் காலம் நெருங்கிவிட்டது. 12 “இரவு” ஏறக்குறைய முடிந்து போனது. “பகல்” அநேகமாக முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே இருட்டுக்குச் சொந்தமான செயல்களை விட்டுவிடுவோம். வெளிச்சத்தின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம். 13 பகலுக்குரியவர்கள் செய்யத்தக்க செயல்களைச் சீராய் நாம் செய்வோம். களியாட்டமும், குடிவெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நாம் இருக்கக் கூடாது. 14 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். உங்கள் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வது பற்றியும் தீய காரியங்களை செய்வது பற்றியும் யோசிக்காதீர்கள்.
2008 by World Bible Translation Center