Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 66-67

இராகத் தலைவனுக்கு, ஒரு துதிப்பாடல்.

66 பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும்.
அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்!
    துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்!
அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்!
    தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது!
உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள்.
    அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள்.
உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும்.
    ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும்.

தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்!
    அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும்.
தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார்.
    மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள்.
தேவன், அவரது மிகுந்த வல்லமையால் உலகத்தை ஆளுகிறார்.
    எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார்.
    ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது.

ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள்,
    உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள்.
தேவன் நமக்கு உயிரைத் தந்தார்.
    தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார்.
10 ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார்.
11 தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர்.
    கனமான பாரத்தை நீர் எங்கள் மேல் வைக்கிறீர்.
12 எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர்.
    நெருப்பின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் நடக்குமாறு எங்களை வழி நடத்தினீர்.
    ஆனால் ஒரு பத்திரமான இடத்திற்கு எங்களை அழைத்து வந்தீர்.
13-14 எனவே நான் உமது ஆலயத்திற்குப் பலிகளைக் கொண்டுவருவேன்.
நான் தொல்லையில் சிக்குண்டபோது உதவிக்காக உம்மைக் கேட்டேன்.
    உமக்குப் பல பொருத்தனைகளைப் பண்ணினேன்.
இப்போது, நான் பொருத்தனைப் பண்ணினதை உமக்குக் கொடுக்கிறேன்.
15     நான் பாவப்பரிகார பலிகளை உமக்குக் கொடுக்கிறேன்.
நான் ஆட்டுக்கடாக்களோடு நறுமணப்பொருட்களைப் புகையிடுவேன்.
    நான் உமக்குக் காளைகளையும் செம்மறி ஆடுகளையும் தருவேன்.
16 தேவனைத் தொழுதுக்கொள்கிற எல்லா ஜனங்களே, வாருங்கள்.
    தேவன் எனக்குச் செய்தவற்றை உங்களுக்குக் கூறுவேன்.
17 நான் அவரிடம் ஜெபித்தேன், நான் அவரைத் துதித்தேன்.
18 என் இருதயம் தூய்மையாயிருந்தது.
    எனவே என் ஆண்டவர் நான் கூறியவற்றைக் கேட்டார்.
19 தேவன் நான் கூறியவற்றைக் கேட்டார்.
    தேவன் என் ஜெபத்தைக் கேட்டார்.
20 தேவனைத் துதியுங்கள்,
    தேவன் என்னிடம் பாராமுகமாக இருக்கவில்லை, அவர் என் ஜெபத்தைக் கேட்டார்.
    தேவன் அவரது அன்பை என்னிடம் காட்டியருளினார்.

இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.

67 தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும்.
    தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!

தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன்.
    நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும்.
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்!
    எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்!
    ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர்.
    நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர்.
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்.
    எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும்.
    எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும்.
தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
    பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.

ரோமர் 7

திருமணம்-ஒரு உதாரணம்

சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் மோசேயின் சட்டவிதியைத் தெரிந்திருக்கிறீர்கள். ஒருவன் உயிரோடு இருக்கும்வரைதான் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகின்றது. நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். ஒரு மணமான பெண் தன் கணவன் உயிரோடு இருக்கும்வரைதான் தன் கணவனோடு வாழ சட்டத்தால் கட்டுப்பட்டுள்ளாள். ஆனால் அவன் இறந்து போனால், அவள் திருமண விதிகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். தன் கணவன் உயிரோடு இருக்கும்போதே ஒரு பெண் இன்னொருவனை மணந்துகொண்டால் அவள் விபசாரம் என்னும் குற்றத்துக்கு ஆளாகிறாள் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அவளது கணவன் இறந்தபின் எல்லா திருமண விதிகளில் இருந்தும் அவள் சுதந்தரமாகிறாள். அப்போது அவள் இன்னொருவனை மணக்க விரும்பினால் அது விபசாரம் எனும் குற்றத்துக்கு ஆளாக்காது.

சகோதர சகோதரிகளே! இதே வழியில், உங்கள் பழைய வாழ்வு இறந்து கிறிஸ்துவின் சரீரம் மூலம் சட்டத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த மற்றவர்களோடு சேர்க்கப்படுகிறீர்கள். அதனால் தேவனுக்கு சேவைசெய்ய நாம் பயன்படமுடியும். முன்பு, நாம் நமது மாமிசத்தால் ஆளப்பட்டிருந்தோம். சட்டத்தால் பாவ இச்சைகள் நம்மிடம் தோன்றின. அவை நமது சரீர உறுப்புகள் மீது ஆட்சி செலுத்தியது. அது நமக்கு மரணத்தைக் கொடுத்தது. கடந்த காலத்தின் சட்டவிதிகள் நம்மைச் சிறைக் கைதிகளைப்போன்று வைத்திருந்தன. ஆனால் அந்தப் பழையவிதிகள் மறைந்துபோனது. நாமும் விதிகளினின்றும் விடுவிக்கப்பட்டோம். எனவே இப்போது புதிய வழியில் தேவனுக்கு சேவை செய்கிறோம். பழைய வழியில் சட்டவிதிக்குக் கட்டுப்பட்டு இருக்கவில்லை. இப்போது பரிசுத்த ஆவியானவரோடும் இருக்கிறோம்.

பாவத்துக்கு எதிரான போராட்டம்

சட்டவிதியையும் பாவத்தையும் நான் ஒரே விதமாக நினைப்பதாக நீங்கள் எண்ணக் கூடும். அது உண்மையல்ல. ஆனால் சட்ட விதியின் மூலமாகவே நான் பாவமென்றால் என்னவென்று புரிந்துகொண்டேன். “பிறர் பொருள் மேல் ஆசைப்படாமல் இருங்கள்” [a] என்று சட்டவிதி சொல்லாமல் இருந்தால் அது பாவம் என்று எனக்கு தெரியாமல் போயிருக்கும். சகலவிதமான தவறான ஆசைகளையும் நான் விரும்புமாறு கட்டளையை உபயோகப்படுத்தும் ஒரு வழியை பாவம் கண்டுபிடித்தது. அக்கட்டளையின் மூலமாகவே பாவம் வந்து சேர்ந்தது. சட்டவிதி இல்லாவிட்டால் பாவத்துக்கு வல்லமை இல்லாமல் போகும். முன்பு சட்டங்கள் இல்லாதவனாய் இருந்தபோது நான் உயிர் உள்ளவனாய் இருந்தேன். சட்டவிதி வந்த பிறகு பாவம் உயிர் கொண்டது. 10 பாவத்தால் நான் உள்ளத்தைப் பொருத்தமட்டில் மரித்தவன் ஆனேன். உயிர் கொடுப்பதற்காக வந்த சட்டவிதி எனக்கு மரணமுண்டாகக் காரணமானது. 11 பாவமானது அந்த கட்டளையினாலே நேரம் பார்த்து என்னை வஞ்சித்து, அதன் மூலம் என்னைக் கொன்றது.

12 சட்டவிதி தூய்மையானதுதான். கட்டளையும் கூட தூய்மையாகவும் சரியாகவும் நன்மையாகவும் இருக்கின்றன. 13 அதனால் நன்மையானது எனக்கு இறப்புக்குரியதாயிற்றா? இல்லை. ஆனால் பாவமானது அந்நன்மையையும் தீமையாக்கி எனக்கு மரணத்தைக் கொண்டு வந்துவிட்டது. இதனால் பாவத்தின் இயல்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பாவம் மிக மிகக் கொடுமையானதாகக் காட்டப்பட்டது. இதற்குப் பிரமாணமே பயன்பட்டது.

மனிதனுக்குள் முரண்பாடு

14 சட்டவிதி ஆவிக்குரியது என நாம் அறிகிறோம். ஆனால் நான் அல்ல. ஒரு அடிமையின் மேல் ஆட்சி செலுத்துவதைப்போல பாவம் என்னை ஆளுகிறது. 15 நான் செய்வது எனக்கே புரியவில்லை. நான் செய்ய விரும்பும் நல்ல காரியங்களை என்னால் செய்ய முடியவில்லை. நான் என்னால் வெறுக்கப்படும் தீயவற்றையே செய்கிறேன். 16 நான் இப்படி விரும்பாததைச் செய்தவனாய் இருக்க, சட்ட விதியை நல்லது என நான் ஒத்துக்கொள்வதாக பொருள்படும். 17 உண்மையில் நான் கெட்டவற்றை செய்பவனில்லை. ஆனால் என்னுள் இருக்கிற பாவம் அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. 18 என்னிடத்தில் நன்மை வாழ்வதில்லை. இது எனக்குத் தெரியும். நன்மை செய்ய வேண்டும் என்னும் விருப்பம் என்னிடமுள்ளது. ஆனால் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை. 19 எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யவில்லை. நான் விரும்பாத தீமையையே செய்துவருகிறேன். 20 அவ்வாறு எனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தால் நான் அல்ல, எனக்குள் இருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது.

21 அதனால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையே உண்டு என்ற விதியை அறிந்துகொண்டேன். 22 என் மனதிற்குள், தேவனுடைய சட்டவிதியோடு மகிழ்ச்சியாய் இருக்கிறேன். 23 ஆனால் வேறொரு விதியும் என் சரீரத்திற்குள் இயங்குவதை அறிகிறேன். என் மனம் ஒத்துக்கொள்ளும் விதிக்கு எதிராக அது ஒரு போரையே நிகழ்த்துகிறது. அதுதான் பாவம் பற்றிய விதி ஆகும். அது என் உடலை அடக்கி, அதன் கைதியாக்கிக்கொள்கின்றது. 24 நான் நிர்ப்பந்தமான மனிதன். என்னை இந்த சரீரத்திடம் இருந்து யார் காப்பாற்றுவார்கள்? 25 தேவனே காப்பாற்றுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்.

ஆதலால் என் மனதார நான் தேவனுடைய சட்டவிதிக்கு சேவை செய்கிறேன். ஆனால் நான் மாமிசத் தன்மையால் பாவத்தின் சட்டத்திற்கு சேவை செய்கிறேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center