Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 33-34

33 நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்!
    நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்!
சுரமண்டலத்தை இசைத்து கர்த்தரைத் துதியுங்கள்!
    பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள்.
புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்!
    மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள்.
தேவனுடைய வாக்கு உண்மையானது!
    அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்!
நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார்.
    கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிரப்பியுள்ளார்.
கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று.
    தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று.
கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார்.
    அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்.
பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும்.
    உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும்.
ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது.
    அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும்.
10 எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும்.
    அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும்.
11 கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது.
    தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும்.
12 கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
13 பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து,
    எல்லா ஜனங்களையும் கண்டார்.
14 அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து
    பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார்.
15 ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார்.
    ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார்.
16 அரசன் தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை.
    ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை.
17 போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை.
    அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை.
18 கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார்.
    அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும்.
19 தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார்.
    அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார்.
20 எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம்.
    அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார்.
21 தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார்.
    அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன்.
22 கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்!
    உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும்.

தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான்.

34 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
    என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும்.
தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள்.
    என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.
தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள்.
    அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள்.
உதவிவேண்டி தேவனிடம் போனேன்.
    அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார்.
உதவிக்காக தேவனை நாடுங்கள்.
    அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள்.
இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான்.
    கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார்.
    என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான்.
    கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான்.
கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள்.
    கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான்.
கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும்.
    கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை.
10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள்.
    ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.
11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
    கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன்.
12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,
13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது.
    அம்மனிதன் பொய் பேசக்கூடாது.
14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும்.
    நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு.
    அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.
15 நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார்.
    அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.
16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து
    அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.

17 கர்த்தரிடம் ஜெபியுங்கள்.
    அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார்.
    உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.
18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர்.
    கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார்.
19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
    அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
    கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
    நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார்.
    அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.

அப்போஸ்தலர் 24

யூதர்களின் குற்றச்சாட்டு

24 ஐந்து நாட்களுக்குப் பிறகு அனனியா செசரியா நகரத்திற்கு வந்தான். அனனியா தலைமை ஆசாரியனாக இருந்தான். சில முதிய யூதத் தலைவர்களையும் தெர்த்துல்லு என்னும் பெயருள்ள வழக்கறிஞரையும் அனனியா அழைத்து வந்திருந்தான். ஆளுநர் முன்னால் பவுல் மீது வழக்கு தொடுக்கும் பொருட்டு அவர்கள் செசரியாவுக்குச் சென்றார்கள். கூட்டத்திற்கு முன் பவுல் அழைக்கப்பட்டான். தெர்த்துல்லு குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கத் துவங்கினான். தெர்த்துல்லு, “மிகக் கனம் பொருந்திய பெலிக்ஸ் அவர்களே! உங்களால் எங்கள் மக்கள் மிகுந்த அமைதியோடு வாழ்கிறார்கள். உங்கள் ஞானமான உதவியால் எங்கள் நாட்டில் பல தவறான காரியங்கள் திருத்தப்பட்டு வருகின்றன. உங்களிடமிருந்து இவற்றைப் பெறுவதால் மிக நன்றியுடையவர்களாக இருக்கிறோம். எல்லா இடங்களிலும் நாங்கள் அவற்றை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் உங்கள் நேரத்தை மேலும் வீணாக்க நான் விரும்பவில்லை. எனவே நான் சுருக்கமாகச் சொல்கிறேன். தயவு செய்து பொறுமையாக இருங்கள். இம்மனிதன் தொல்லைகளை ஏற்படுத்துகிறவன். உலகமெங்குள்ள யூதர்களிடம் அமைதியைக் குலைக்கிறான். நசரேயக் குழுவின் தலைவன் இவன். 6-8 மேலும் அவன் தேவாலயத்தை நாசமாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறான். ஆனால் நாங்கள் அவனைத் தடுத்துவிட்டோம். இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையா என்பதை நீர் முடிவு கட்டலாம். நீரே அவனிடம் சில கேள்விகளைக் கேளும்” [a] என்றான். பிற யூதர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள், “இவையனைத்தும் உண்மையே!” என்றனர்.

பவுல் தனக்காக பெலிக்ஸின் முன்பு வழக்காடுதல்

10 பவுல் பேசுமாறு ஆளுநர் குறிப்பிட்டார். எனவே பவுல் பதிலாக, “ஆளுநர் பெலிக்ஸ் அவர்களே, இந்தத் தேசத்தின் நியாயாதிபதியாக, நீண்ட காலமாக நீங்கள் இருந்து வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் உங்கள் முன்பு எனக்காக வழக்காடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். 11 பன்னிரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் எருசலேமுக்கு வழிபடச் சென்றேன். இது உண்மையா என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 12 என்னைப் பழிக்கிற இந்த யூதர்கள் நான் ஆலயத்தில் யாரோடும் விவாதிப்பதைப் பார்க்கவில்லை. நான் மக்களிடம் தொல்லையையும் விளைவிக்கவில்லை. ஜெப ஆலயங்களிலோ, நகரத்தின் வேரிடங்களிலோ நான் விவாதிக்கவோ, தொல்லை விளைவிக்கவோ செய்யவில்லை. 13 இப்போது எனக்கெதிராக அவர்கள் கூறும் குற்றச் சாட்டுகளை அவர்கள் நிரூபிக்க முடியாது.

14 “ஆனால் நான் உங்களுக்கு இதைச் சொல்வேன். இயேசுவின் வழியைப் பின்பற்றும் சீடனாக நான் நமது முன்னோரின் தேவனை வணங்குகிறேன். 15 இந்த யூதர்கள் தேவனிடம் கொண்டுள்ள நம்பிக்கை, அதாவது நல்லோராயினும் தீயோராயினும் சரி எல்லா மக்களும் மரணத்தினின்று எழுப்பப்படுவர் என்ற அதே நம்பிக்கை எனக்கும் உள்ளது. 16 எனவே தான் தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக நான் சரியென்று நம்புவதை எப்பொழுதும் செய்ய முயல்கிறேன்.

17 “பலகாலம் எருசலேமிலிருந்து தொலைவில் வாழ்ந்து வந்தேன். என் மக்களுக்குப் பணம் கொண்டு வரவும் காணிக்கை செலுத்தவும் நான் அங்குத் திரும்பிச் சென்றேன். 18 தேவாலயத்தில் நான் இதைச் செய்துகொண்டிருந்தபோது சில யூதர்கள் என்னைக் கண்டனர். சுத்தப்படுத்தும் பண்டிகையை [b] முடித்தேன். நான் எந்தக் தொல்லையையும் ஏற்படுத்தவில்லை. என்னை சுற்றி எந்தக் கூட்டமும் சேரவில்லை. 19 ஆசியாவிலுள்ள சில யூதர்கள் அங்கிருந்தார்கள். இங்கும் உங்கள் முன் அவர்கள் நின்றுகொண்டிருக்க வேண்டும். நான் ஏதேனும் தவறாகச் செய்திருந்தால் என்னைக் குற்றம் சாட்டவேண்டியவர்கள் அவர்களே. 20 எருசலேமிலுள்ள யூத சங்கத்தின் முன் நான் நின்றபோது என்னில் ஏதேனும் பிழையை அவர்கள் கண்டார்களா என்பதை இந்த யூதர்களிடம் விசாரியுங்கள். 21 நான் அவர்கள் முன்னிலையில் நின்றபோது ஒன்றை மட்டும் கூறினேன். ‘மரணத்தினின்று மக்கள் எழும்புவர் என்பதை நான் நம்புவதால் இன்றைக்கு நீங்கள் என்னை நியாயந்தீர்க்கிறீர்கள்’ என்றேன்” என்று கூறினான்.

22 இயேசுவின் வழிகளைக் குறித்து ஏற்கனவே பெலிக்ஸ் நிரம்பத் தெரிந்துவைத்திருந்தான். அவன் வழக்கை இந்த இடத்தில் நிறுத்தியவனாக, “அதிகாரி லீசியா இங்கு வருகிறபோது, இவற்றைக் குறித்து முடிவெடுப்பேன்” என்றான். 23 பெலிக்ஸ் படை அதிகாரியிடம் பவுலைக் காவலில் வைக்குமாறு கூறினான். அவன் படை அதிகாரியிடம் பவுலுக்குச் சற்றுச் சுதந்திரம் அளிக்குமாறும், பவுலின் நண்பர்கள் அவனுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவந்து உதவுவதற்கு அனுமதி அளிக்குமாறும் கூறினான்.

பெலிக்ஸ் முன் பவுல்

24 சில நாட்களுக்குப் பிறகு பெலிக்ஸ், அவனது மனைவி துருசில்லாவுடன் வந்தான். அவள் யூதப் பெண்மணி. பெலிக்ஸ் பவுலைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறினான். கிறிஸ்து இயேசுவில் வைக்கும் விசுவாசத்தைக் குறித்துப் பவுல் பேசுவதை பெலிக்ஸ் கேட்டான். 25 நேர்மையான வாழ்வு, தன்னடக்கம், எதிர்காலத்தின் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்துப் பவுல் கூறியதைக் கேட்டு அவன் அஞ்சினான். பெலிக்ஸ் “இப்போது போய் விடு! இன்னும் கால அவகாசம் கிடைக்கும்போது உன்னை அழைக்கிறேன்” என்றான். 26 பவுலோடு பெலிக்ஸ் பேசுவதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. பவுல் தனக்கு லஞ்சம் கொடுப்பான் எனவும் பெலிக்ஸ் நம்பினான். எனவே பெலிக்ஸ் பவுலை அடிக்கடி அழைப்பித்து அவனோடு பேசினான்.

27 ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, போர்சியு பெஸ்து ஆளுநரானார். பெலிக்ஸ் ஆளுநராக இருக்கவில்லை. பெலிக்ஸ் யூதர்களை மகிழ்விக்கும்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று விரும்பியதால் பவுலைச் சிறையிலேயே விட்டுச் சென்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center