Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோபு 41-42

41 “யோபுவே, உன்னால் லிவியாதானை ஒரு தூண்டிலினால் பிடிக்க முடியுமா?
    அதன் நாவை உன்னால் ஒரு கயிற்றினால் கட்ட முடியுமா?
யோபுவே, லிவியாதானின் மூக்கில் ஒரு கயிற்றை நுழைக்கமுடியுமா?
    அல்லது, அதன் தாடையில் ஒரு ஆணியைச் செருகமுடியுமா?
யோபுவே, அதனை விடுதலைச் செய்யுமாறு லிவியாதான் உன்னை இரந்து வேண்டுமா?
    மென்மையான சொற்களால் அது உன்னோடு பேசுமா?
யோபுவே, லிவியாதான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு
    என்றென்றும் உனக்குச் சேவை புரிய வாக்குறுதி தருமா?
யோபுவே, நீ லிவியாதானோடு ஒரு பறவையிடம் விளையாடுவதைப்போன்று விளையாடுவாயா?
    உன் பணிப்பெண்கள் அதனோடு விளையாடுமாறு அதனை ஒரு கயிற்றால் கட்டுவாயா?
யோபுவே, மீன் பிடிப்போர் உன்னிடமிருந்து லிவியாதானை வாங்க முயல்வார்களா?
    அவர்கள் அதைத் துண்டுகளாக்கி, வியாபாரிகளுக்கு அதை விற்பார்களா?
யோபுவே, நீ லிவியாதானின் தோலோ அல்லது தலையிலோ ஈட்டியை எறிய (வீச) முடியுமா?

“யோபுவே, நீ லிவியாதானைத் தாக்க ஒரு முறை முயன்றால், பின்பு ஒருபோதும் அதனைச் செய்யமாட்டாய்!
    எத்தகைய யுத்தம் நடக்கும் என்பதைச் சற்றே யோசித்துப்பார்!
நீ லிவியாதானைத் தோற்கடிக்க முடியுமென எண்ணினால் அதை மறந்துவிடு!
    எந்த நம்பிக்கையும் இல்லை!
(நம்பிக்கையற்றுப்போவாய்)!
    அதைப் பார்த்தாலே பீதி (அச்சம்) விளையும்!
10 அதனை எழுப்பிக் கோபமுறுத்த
    எந்த மனிதனுக்கும் தைரியம் (துணிவு) இல்லை.

“ஒருவனும் என்னை எதிர்த்து நிற்கமுடியாது!
11 நான் (தேவன்) ஒருவனுக்கும் கடமைப்பட்டவன் அல்லன்.
    பரலோகத்தின் கீழ் உள்ளவை அனைத்தும் எனக்குரியன.

12 “யோபுவே, லிவியாதானின் கால்களைப் பற்றியும் அதன் வலிமை, அழகிய வடிவம் ஆகியற்றைப் பற்றியும்
    நான் உனக்குக் கூறுவேன்.
13 ஒருவனும் அதன் தோலைக் குத்திப் பிளக்க முடியாது.
    அதன் தோல் ஒரு கேடயத்தைப் போன்றது!
14 லிவியாதானின் தாடையைத் திறக்குமாறு செய்ய ஒருவனும் அதனை வற்புறுத்த முடியாது.
    அதன் வாயிலுள்ள பற்கள் ஜனங்களைப் பயமுறுத்தும்.
15 லிவியாதானின் முதுகில் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ள
    கேடய வரிசைகள் காணப்படும்.
16 அக்கேடயங்கள் காற்றும் நுழைய முடியாதபடி
    இறுகிப் பிணைந்திருக்கும்,
17 கேடயங்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும்.
    அவை பிரிக்க முடியாதபடி ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கும்.
18 லிவியாதான் தும்மும்போது, மின்னல் மின்னுவதைப் போன்றிருக்கும்.
    அதன் கண்கள் உதயகால ஒளிபோல் பிரகாசிக்கும்.
19 அதன் வாயிலிருந்து தீப்பந்தங்கள் வெளிவரும்.
    நெருப்புப் பொறிகள் வெளிப்படும்.
20 கொதிக்கும் பானையின் அடியில் எரியும் புதரைப்போல்
    லிவியாதானின் மூக்கிலிருந்து புகை கிளம்பும்.
21 லிவியாதானின் மூச்சு நிலக்கரியை எரிக்கும்,
    அதன் வாயிலிருந்து நெருப்பு எழும்பும்.
22 லிவியாதானின் கழுத்து மிகுந்த வல்லமை கொண்டது.
    ஜனங்கள் பயந்து அதனிடமிருந்து ஓடிப்போகிறார்கள்.
23 அதன் தோலில் மிருதுவான பகுதி கிடையாது.
    அது இரும்பைப்போல கடினமானது.
24 லிவியாதானின் இருதயம் பாறையைப் போன்றது.
    அதற்கு அச்சம் கிடையாது.
(அது அஞ்சுவதில்லை).
    அது எந்திரத்தின் அடிக்கல்லைப்போல் கடினமாயிருக்கும்.
25 லிவியாதான் எழுகையில் வலியோர் அஞ்சுவார்.
    லிவியாதான் வாலை வீசும்போது அவர்கள் ஓடிவிடுவர்.
26 வாட்கள், ஈட்டிகள், மற்றும் வல்லயம் லிவியாதானைத் தாக்கும்.
    ஆனால் அவையே எகிறிவிழும்.
    அக்கருவிகள் அதைக் காயப்படுத்துவதேயில்லை!
27 லிவியாதான் இரும்பைப் புல்லைப் போல் உடைக்கும்.
    உளுத்துப்போன (அரித்துப்போன) மரத்தைப்போன்று அது வெண்கலத்தை உடைக்கும்.
28 அம்புகள் லிவியாதானை ஓடச்செய்யாது,
    உலர்ந்த புல்லாய் பாறைகள் அதனின்று விலகிவீழும்.
29 பெருந்தடிகள் லிவியாதானைத் தாக்கும்போது, அவற்றை அது புல்லாய் உணரும்.
    மனிதர் அதன் மீது ஈட்டிகளை எறியும்போது, அது சிரிக்கும்.
30 கடினமாக, கூரிய, உடைந்த, மட்பாண்டத்தின் துண்டுகளைப்போல், லிவியாதானின் உடம்பின் அடியிலுள்ள தோல் இருக்கும்.
    தாற்றுக்கோலைப் போன்று அது சேற்றின் மீது அடையாளமிட்டுச் செல்லும்.
31 கொதிக்கும் பானையைப்போன்று லிவியாதான் தண்ணீரைக் கலக்குகிறது.
    பானையின் கொதிக்கும் எண்ணெயைப் போன்று அது குமிழிகளை எழுப்பும்.
32 லிவியாதான் நீந்தும்போது, அதன் பின்னே ஒரு பாதையை விட்டுச்செல்லும்.
    அது தண்ணீரைக் கலக்கும், அதன் பின்னே வெண்மையான நுரையைத் தள்ளிச் செல்லும்.
33 லிவியாதானைப்போன்று உலகில் வேறெந்த மிருகமும் இல்லை.
    அச்சமின்றி படைக்கப்பட்ட மிருகம் அது.
34 கர்வம் மிக்க மிருகங்களையும் லிவியாதான் நகைப்போடு பார்க்கும்.
    அது எல்லா காட்டுமிருகங்களுக்கும் அரசன்.
    கர்த்தராகிய நான் லிவியாதானைப் படைத்தேன்!” என்றார்.

யோபு கர்த்தருக்குப் பதில் கூறுகிறான்

42 அப்போது யோபு கர்த்தருக்குப் பதிலளித்தான். யோபு,

“கர்த்தாவே!Ԕநீர் எல்லாவற்றையும் செய்ய வல்லவர் என்பதை நான் அறிவேன்.
    நீர் திட்டமிடுகிறீர், எதனாலும் உமது திட்டங்களை மாற்றவோ, தடுக்கவோ முடிவதில்லை.
கர்த்தாவே, நீர் இக்கேள்வியைக் கேட்டீர்: ‘இம்மூடத்தனமான காரியங்களை சொல்லிகொண்டிருக்கும் இந்த அஞ்ஞானி யார்?’
    கர்த்தாவே, நான் புரிந்துகொள்ளாதவற்றைக் குறித்துப் பேசினேன்.
    என்னால் புரிந்துகொள்ள முடியாத மிகுந்த வியக்கத்தக்க காரியங்களைப் பற்றிப் பேசினேன்.

“கர்த்தாவே, நீர் என்னிடம், ‘யோபுவே கவனி,
    நான் உன்னோடு பேசுவேன், நான் உன்னிடம் கேள்விகளைக் கேட்பேன், நீ எனக்குப் பதில் கூறுவாய்’ என்றீர்.
கர்த்தாவே, முன்பு, நான் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
    இப்போது என் சொந்தக் கண்களாலேயே உம்மைப் பார்க்கிறேன்!
கர்த்தாவே, நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன்.
    கர்த்தாவே, நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
நான் தூசியிலும் சாம்பலிலும் உட்கார்ந்து கொண்டே,
    என் இருதயத்தையும் என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள உறுதியளிக்கிறேன்” என்றான்.

கர்த்தர் யோபுவின் செல்வத்தை மீண்டும் அளிக்கிறார்

கர்த்தர் யோபுவிடம் பேசிமுடித்த பின்பு, அவர் தேமானிலிருந்து வந்த எலிப்பாசிடம் பேசினார். கர்த்தர் எலிப்பாசை நோக்கி, “நான் உன்னிடமும் உனது இரண்டு நண்பர்களிடமும் கோபமாயிருக்கிறேன். ஏனெனில், நீங்கள் என்னைப்பற்றிய சரியான கருத்துக்களைக் கூறவில்லை. யோபுவே என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான். ஆனால் யோபு எனது தாசன். யோபு என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான். எனவே இப்போது எலிப்பாசே, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் கொண்டு வா. அவற்றை எனது தாசன் யோபுவிடம் கொண்டு செல். அவற்றைக் கொன்று, உனக்காக தகனபலியாகச் செலுத்து. என் தாசன் யோபு உனக்காக ஜெபம் செய்வான். நான் அவன் ஜெபத்திற்குப் பதிலளிப்பேன். உனக்குரிய தண்டனையை அப்போது நான் உனக்கு அளிக்கமாட்டேன். நீ மிகுந்த மூடனாக இருந்ததால் நீ தண்டிக்கப்படவேண்டும். நீ என்னைப்பற்றிய சரியான தகவலைக் கூறவில்லை. ஆனால் என் தாசனாகிய (பணியாளாகிய) யோபு என்னைப்பற்றிய சரியான கருத்துக்களைக் கூறினான்.” என்றார்.

எனவே தேமானின் எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாவின் சோப்பாரும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தார்கள். அப்போது கர்த்தர் யோபுவின் ஜெபத்திற்குப் பதிலளித்தார்!

10 யோபு அவனது நண்பர்களுக்காக ஜெபம் செய்தான். தேவன் யோபுவை மீண்டும் வெற்றிபெறச் செய்தார். கர்த்தர் யோபுவுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்காக எல்லாவற்றையும் கொடுத்தார். 11 யோபுவின் எல்லா சகோதரர்களும், சகோதரிகளும் அவனை அறிந்த அனைத்து ஜனங்களும் யோபுவின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் யோபுவோடு கூட ஒரு பெரிய விருந்துணவை உட்கொண்டார்கள். அவர்கள் யோபுவுக்கு ஆறுதல் கூறினார்கள். கர்த்தர் யோபுவுக்கு மிகுந்த தொல்லைகளைக் கொடுத்ததற்காக அவர்கள் வருந்தினார்கள். ஒவ்வொருவரும் ஒரு வெள்ளிக் காசும், ஒரு பொன் மோதிரமும் யோபுவுக்குக் கொடுத்தார்கள்.

12 யோபுவின் வாழ்க்கையின் முதல் பகுதியைக் காட்டிலும் இரண்டாம் பகுதியைக் கர்த்தர் ஆசீர்வதித்தார்! யோபுவுக்கு 14,000 ஆடுகளும், 6,000 ஒட்டகங்களும், 2,000 பசுக்களும், 1,000 பெண் கழுதைகளும் சொந்தமாக இருந்தன. 13 யோபுவுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தனர். 14 யோபு, முதல் மகளுக்கு எமீமாள் என்று பேரிட்டான். யோபு, இரண்டாவது மகளுக்குக் கெத்சீயாள் என்று பெயரிட்டான். மூன்றாவது மகளுக்குக் கேரேனாப்புக் என்று பெயர் கொடுத்தான். 15 தேசத்தில் யோபுவின் மகள்களே மிகுந்த அழகிகளாக இருந்தார்கள்! யோபு, அவனது மகள்களுக்கும் சொத்திலுள்ள பாகத்தைக் கொடுத்தான். அவர்களின் சகோதரர்களைப்போலவே சொத்தில் அவர்களும் பங்கைப் பெற்றார்கள்.

16 அவ்வாறு யோபு இன்னும் 140 ஆண்டுகள் வாழ்ந்தான். அவனது பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், பேரர்களின் பிள்ளைகளையும், பேரர்களின் பேரர்களையும் பார்க்கும்படி அவன் வாழ்ந்தான். 17 பின்பு யோபு மரித்தான். யோபு ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தான். அவன் மிகவும் முதிர்ந்தவனாகும்வரை வாழ்ந்தான்.

அப்போஸ்தலர் 16:22-40

22 பவுலையும், சீலாவையும் கூட்டத்தினர் எதிர்த்தார்கள். பவுல், சீலா ஆகியோரின் ஆடைகளைத் தலைவர்கள் கிழித்தார்கள். பவுலையும், சீலாவையும் கழிகளால் அடிக்கும்படி அவர்கள் சில மனிதர்களுக்குச் சொன்னார்கள். 23 அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் பல முறை அடித்தார்கள். பின் அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறையில் தள்ளினார்கள். தலைவர்கள் சிறை அதிகாரியை நோக்கி, “கவனமாக அவர்களைக் காவலில் வையுங்கள்!” என்றார்கள். 24 சிறையதிகாரி இந்தச் சிறப்புக் கட்டளையைக் கேட்டான். எனவே அவன் பவுலையும் சீலாவையும் சிறையின் மிக உட்பகுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து காவலில் வைத்தான். பெரிய மரத்தூண்களுக்கிடையில் அவர்கள் கால்களைக் கட்டினான்.

25 நள்ளிரவில் பவுலும், சீலாவும் பிரார்த்தனை செய்துகொண்டும் தேவனை நோக்கி துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டுமிருந்தனர். மற்ற சிறைக் கைதிகள் அவர்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். 26 திடீரென்று ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாயிற்று. சிறையின் அஸ்திபாரத்தை அசைக்கும்படியாக அது பலமாக இருந்தது. பின் சிறைச் சாலையின் கதவுகள் எல்லாம் திறந்தன. எல்லா கைதிகளும் அவர்களது விலங்குகளிலிருந்து விடுபட்டனர். 27 சிறையதிகாரி விழித்தெழுந்தான். சிறைக் கதவுகள் திறந்திருப்பதை அவன் கண்டான். சிறைக் கைதிகள் ஏற்கெனவே தப்பித்துப் போயிருக்க வேண்டுமென அவன் நினைத்தான். எனவே சிறையதிகாரி தன் வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள இருந்தான். 28 ஆனால் பவுல் உரக்க, “உன்னைத் துன்புறுத்திக்கொள்ளாதே. நாங்கள் எல்லோரும் இங்கு இருக்கிறோம்!” என்றான்.

29 சிறையதிகாரி விளக்குகளைக் கொண்டுவருமாறு ஒருவனுக்குப் பணித்தான். பின் அவன் உள்ளே ஓடினான். அவன் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் பவுல், சீலா ஆகியோர் முன்பாகக் கீழே விழுந்தான். 30 பின் அவன் அவர்களை வெளியே அழைத்து வந்து அவர்களிடம், “நான் இரட்சிப்படைய என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

31 அவர்கள் அவனை நோக்கி, “கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாயிரு. நீயும் உன் வீட்டாரும் இரட்சிப்பு அடைவீர்கள்” என்றார்கள். 32 எனவே பவுலும் சீலாவும் கர்த்தரின் செய்தியை சிறையதிகாரிக்கும் அவன் வீட்டிலிருந்த ஒவ்வொருவருக்கும் கூறினர். 33 சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் அழைத்துச் சென்று அவர்களது காயங்களைக் கழுவினான். பின் சிறையதிகாரியும் அவன் வீட்டிலிருந்த அனைவரும் ஞானஸ்நானம் பெற்றனர். 34 அதன் பிறகு சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுத்தான். அவன் வீட்டிலிருந்த அனைவரும் தேவன் மீதுகொண்ட விசுவாசத்தால் மகிழ்ந்தார்கள்.

35 மறுநாள் காலையில், தலைவர்கள் சில வீரர்களைச் சிறையதிகாரியிடம், “அம்மனிதர்களை விடுதலை செய்!” என்று கூற அனுப்பினர்.

36 சிறையதிகாரி பவுலிடம், “உங்களை விடுதலை செய்யும்படியாகக் கூறி தலைவர்கள் இந்த வீரர்களை அனுப்பியுள்ளனர். நீங்கள் போகலாம். அமைதியாகச் செல்லுங்கள்” என்று அறிவித்தான்.

37 ஆனால் பவுல் வீரரை நோக்கி, “உங்கள் தலைவர்கள் எங்களை விசாரணை செய்யவில்லை. ஆனால் மக்கள் முன்பாக அவர்கள் எங்களை அடித்துச் சிறையில் அடைத்தார்கள். நாங்கள் ரோம மக்கள். எங்களுக்கு உரிமை உள்ளது. இப்போது தலைவர்கள் நாங்கள் இரகசியமாகப் போக வேண்டுமென விரும்புகிறார்கள். முடியாது, தலைவர்களே வந்து எங்களை வெளியேற்றட்டும்!” என்றான்.

38 பவுல் கூறியவற்றை வீரர்கள் தலைவர்களுக்குக் கூறினர். பவுலும் சீலாவும் ரோம மக்கள் என்பதைத் தலைவர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் பயந்தார்கள். 39 எனவே அவர்கள் வந்து பவுலிடமும், சீலாவிடமும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள். அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறைக்கு வெளியே அழைத்துவந்து அவர்களை நகரத்தை விட்டுப்போகுமாறு கூறினர். 40 ஆனால் பவுலும் சீலாவும் சிறையினின்று வந்தபோது அவர்கள் லிதியாளின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் விசுவாசிகள் சிலரைக் கண்டு, அவர்களை ஆறுதல்படுத்தினார்கள். பின் பவுலும் சீலாவும் வெளியேறினர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center