Old/New Testament
இஸ்ரவேலுக்கும் யூதாவுக்குமிடையே போர்
3 சவுல், தாவீது ஆகியோரின் குடும்பத்தாருக்கிடையே நீண்டகாலம் யுத்தம் தொடர்ந்தது. தாவீது வலிமை பெற்றுக்கொண்டே இருந்தான். சவுலின் குடும்பத்தார் தளர்ந்துக்கொண்டே வந்தனர்.
தாவீதுக்கு ஆறு மகன்கள் எப்ரோனில் பிறந்தனர்
2 எப்ரோன் நகரில் தாவீதுக்கு ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.
முதல் மகன் அம்மோன். அம்மோனின் தாய் யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாள் ஆவாள்.
3 இரண்டாவது மகன் கீலேயாப். கீலேயாபின் தாய் அபிகாயில். அவள் கர்மேலிலுள்ள நாபாலின் விதவையாயிருந்தாள்.
மூன்றாவது மகன் அப்சலோம். இவனது தாய், கேசூரின் அரசனாகிய தல்மாயின் மகள் மாக்காள் என்பவள் ஆவாள்.
4 நான்காம் மகன் அதோனியா. அதோனியாவின் தாய் ஆகீத்.
ஐந்தாம் மகன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தால்.
5 ஆறாம் மகன் இத்ரேயாம். தாவீதின் மனைவி எக்லாள் இத்ரேயாமுக்கு தாய்.
தாவீதுக்கு எப்ரோனில் இந்த ஆறு மகன்களும் பிறந்தனர்.
தாவீதோடு சேர அப்னேரின் தீர்மானம்
6 தாவீது, சவுல் ஆகியோரின் குடும்பங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டிருந்த போது சவுலின் படையில் அப்னேர் மிகவும் பலமடைந்து வந்தான். 7 சவுலிடம் ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் பெயருள்ள வேலைக்காரி ஒருத்தி இருந்தாள். இஸ்போ சேத் அப்னேரை நோக்கி, “எனது தந்தையின் வேலைக்காரியோடு நீ ஏன் பாலின உறவு கொண்டாய்?” என்று கேட்டான்.
8 இஸ்போசேத் இவ்வாறு கேட்டதால் அப்னேர் கோபமடைந்தான். அப்னேர், “நான் சவுலுக்கும் அவனது குடும்பத்துக்கும் உண்மையுள்ளவனாக இருந்தேன். நான் உன்னைத் தாவீதிடம் ஒப்படைக்கவில்லை. அவன் உன்னைத் தோற்கடிக்க அனுமதிக்கவில்லை. நான் யூதாவுக்காக உழைக்கும் வஞ்சகன் அல்ல. நான் இத்தீயக் காரியத்தைச் செய்ததாக நீ கூறிக்கொண்டிருக்கிறாய். 9-10 நான் இப்போது இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். தேவன் சொன்ன காரியங்கள் நிறைவேறும் என நான் உறுதியாக நம்புகிறேன். சவுலின் குடும்பத்தாரிடமிருந்து அரசை எடுத்து தாவீதின் குடும்பத்தாருக்குக் கொடுப்பதாக கர்த்தர் கூறினார். கர்த்தர் தாவீதை இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் அரசனாக்குவார். தாணிலிருந்து பெயெர்செபா வரைக்கும் [a] அவன் அரசாளுவான். இது நிகழும்படியாக நான் செய்யாவிட்டால் தேவன் எனக்குத் தீமை செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்!” என்றான். 11 இஸ்போசேத்தால் அப்னேருக்கு எந்த பதிலும் கூற முடியவில்லை. அவனைக் கண்டு இஸ்போசேத் மிகவும் பயந்தான்.
12 அப்னேர் தாவீதிடம் செய்தி சொல்வோரை அனுப்பினான். அப்னேர், “நீ யார் இந்த நாட்டை ஆளவேண்டும் என்று நினைக்கிறாய்? என்னோடு ஒப்பந்தம் செய்துக்கொள். இஸ்ரவேலருக்கு அரசனாகும்படியாக நான் உனக்கு உதவுவேன்” என்றான்.
13 தாவீது, “நல்லது! நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வேன். ஆனால் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்: சவுலின் மகள் மீகாளை என்னிடம் அழைத்துவரும்வரை உன்னை நான் சந்திக்கமாட்டேன்” என்றான்.
தாவீது தன் மனைவி மீகாளை பெற்றுக்கொள்கிறான்
14 தாவீது சவுலின் மகனாகிய இஸ்போசேத்திடம் செய்தியோடு தூதுவரை அனுப்பினான். தாவீது, “என்னுடைய மனைவியாகிய மீகாளைக் கொடு. அவளை எனக்கு கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டுள்ளது. நான் அவளுக்காக நூறு பெலிஸ்தியரைக் கொன்றேன்” என்றான்.
15 இஸ்போசேத் லாயிசின் மகனாகிய பல்த்தியேலிடமிருந்து மீகாளை அழைத்து வருமாறு ஆட்களை அனுப்பினான். 16 மீகாளைப் பின் தொடர்ந்து அவள் கணவன் பல்த்தியேலும் சென்றான். மீகாளோடு பகூரீமுக்கு வந்தபோது பல்த்தியேல் அழுதுக்கொண்டே பின்தொடர்ந்தான். ஆனால் அப்னேர் பல்த்தியேலை நோக்கி, “வீட்டிற்குப் போ” என்றான். எனவே பல்த்தியேல் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.
தாவீதுக்கு உதவுவதாக அப்னேரின் உறுதி
17 இஸ்ரவேலின் தலைவர்களுக்கு அப்னேர் செய்தி சொல்லியனுப்பினான். அவன், “நீங்கள் தாவீதை அரசனாக ஆக்கக் காத்திருக்கிறீர்கள். 18 இப்போது அவ்வாறே செய்யுங்கள்! கர்த்தர் தாவீதைக் குறித்து ஏற்கெனவே இவ்வாறு சொல்லியிருக்கிறார். ‘இஸ்ரவேலராகிய எனது ஜனங்களை நான் பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் விடுவிப்பேன். எனது தாசனாகிய தாவீதின் மூலமாக இதைச் செய்வேன்’” என்றார்.
19 எப்ரோனிலிருந்த தாவீதுக்கு அப்னேர் சொன்ன இக்காரியங்களை பென்யமீன் கோத்திரத்திற்கும் சொன்னான். பென்யமீன் கோத்திரத்திற்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அப்னேர் கூறிய காரியங்கள் நன்மையாகத் தோன்றின.
20 பின்பு எப்ரோனிலிருந்த தாவீதிடம் அப்னேர் வந்தான். அவன் தன்னோடு 20 பேரை அழைத்து வந்திருந்தான். அப்னேருக்கும் அவனோடு வந்த ஆட்களுக்கும் தாவீது விருந்தளித்தான்.
21 அப்னேர் தாவீதை நோக்கி, “எனது ஆண்டவனும், அரசருமானவரே! நான் அனைத்து இஸ்ரவேலரையும் உம்மிடம் அழைத்துவர அனுமதியும். அப்போது அவர்கள் உம்மோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வார்கள். பின் நீர் விரும்பியதுபோல் இஸ்ரவேலை ஆளலாம்” என்றான்.
எனவே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான். அப்னேர் சமாதானமாய் திரும்பினான்.
அப்னேரின் மரணம்
22 யோவாபும் தாவீதின் அதிகாரிகளும் யுத்தத்திலிருந்து திரும்பினார்கள். பகைவரிடமிருந்து எடுத்த பல பொருட்கள் அவர்களிடமிருந்தன. அப்போதுதான் அப்னேர் தாவீதிடமிருந்து சமாதானமாய் புறப்பட்டுச் சென்றிருந்தான். ஆதலால் அந்நேரம் எப்ரோனில் தாவீதோடு அப்னேர் இருக்கவில்லை 23 யோவாபும் அவனது படையும் எப்ரோனை அடைந்தது. படையினர் யோவாபிடம், “நேரின் மகனாகிய அப்னேர் தாவீது அரசனிடம் வந்திருந்தான். அவன் சமாதானமாய் செல்லுமாறு தாவீது அனுமதித்தான்” என்றனர்.
24 யோவாப் அரசனிடம் வந்து, “நீங்கள் என்ன செய்தீர்கள்? அப்னேர் உங்களிடம் வந்தும், அவனுக்கு எந்தத் துன்பமும் செய்யாமல் அவனை அனுப்பியுள்ளீர்கள்! 25 நேரின் மகனாகிய அப்னேரை உமக்குத் தெரியும். அவன் உம்மை வஞ்சிக்க வந்தான். நீர் செய்துக்கொண்டிருக்கும் காரியங்களைக் குறித்து வேவு பார்க்க அவன் வந்தான்” என்றான்.
26 யோவாப் தாவீதை விட்டுச்சென்று சீராவின் கிணற்றருகே இருந்த அப்னேரைச் சந்திக்கும்படி தூதுவர்களை முன்னே அனுப்பினான். அவர்கள் அப்னேரை தனியே அழைத்து வந்தனர். அது தாவீதுக்குத் தெரிந்திருக்கவில்லை. 27 அப்னேர் எப்ரோனை அடைந்ததும், அவனோடு தனித்துப் பேசும்படியாக யோவாப் வாசலின் பின்புறம் அழைத்துச் சென்றான். அப்போது யோவாப் அப்னேரை வயிற்றில் குத்தினான். அப்னேர் மரித்தான். யோவாபின் சகோதரனான ஆசகேலை அப்னேர் கொன்றிருந்தான். ஆகையால் இப்போது யோவாப் அப்னேரைக் கொன்றான்.
அப்னேருக்காக தாவீதின் அழுகை
28 தாவீது நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டான். தாவீது, “நானும் எனது அரசும் நேரின் மகனாகிய அப்னேரின் மரணத்தைக் குறித்து என்றும் களங்கமற்றவர்கள். இதைக் குறித்து கர்த்தர் அறிவார். 29 யோவாபின் குடும்பத்தார் குற்றவாளிகள். அவர்களுக்கும் பல தொல்லைகள் நேரக்கூடும். தொழு நோய் போன்றவற்றால் அக்குடும்பத்தினர் பாதிக்கப்படக்கூடும். அவர்கள் முடவர்களாகக் கூடும். யுத்தத்தில் மரிக்கக்கூடும், உண்ண உணவின்றி வாழக்கூடும்!” என்றான்.
30 கிபியோனில் நடந்த யுத்தத்தில் தங்கள் சகோதரனாகிய ஆசகேலை அப்னேர் கொன்றதால் யோவாபும் அவனது சகோதரன் அபிசாயும் அப்னேரைக் கொன்றார்கள்.
31-32 யோவாபிடமும், யோவாபுடனிருந்த எல்லா ஜனங்களிடமும் தாவீது, “உங்கள் ஆடைகளைக் கிழித்து துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அப்னேருக்காக அழுங்கள்” என்றான். அவர்கள் எப்ரோனில் அப்னேரைப் புதைத்தார்கள். அடக்கத்திற்கு தாவீது சென்றிருந்தான். தாவீது அரசனும் எல்லா ஜனங்களும் கல்லறையருகே அப்னேருக்காக அழுதனர்.
33 அப்னேரின் அடக்கத்தின்போது தாவீது அரசன் இந்த சோக கீதத்தைப் பாடினான்:
“அறிவில்லாத குற்றவாளியைப்போல அப்னேர் மரித்தானா?
34 அப்னேர், உனது கைகள் கட்டப்படவில்லை.
கால்களில் விலங்கு மாட்டப்படவில்லை, அப்னேரே, தீயோர் உன்னை கொன்றனர்!”
அப்போது ஜனங்கள் எல்லோரும் அப்னேருக்காக மீண்டும் அழுதனர். 35 அந்த நாள் முழுவதும் ஜனங்கள் தாவீதிடம் வந்து அப்பம் உண்ணுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் தாவீது விசேஷ வாக்குறுதி செய்திருந்தான். அவன், “சூரியன் மறையும் முன்னர் நான் ரொட்டியையோ, வேறு உணவையோ உட்கொண்டால் தேவன் என்னைத் தண்டிப்பாராக” என்றான். 36 எல்லோரும் நடந்ததைக் கண்டனர். தாவீது அரசனின் செய்கையைக் கண்டு திருப்தியுற்றனர். 37 நேரின் மகனாகிய அப்னேரைத் தாவீது அரசன் கொல்லவில்லையென யூதா ஜனங்களும் இஸ்ரவேலரும் புரிந்துக்கொண்டனர்.
38 தாவீது அரசன் அதிகாரிகளை நோக்கி, “இஸ்ரவேலில் இன்று ஒரு முக்கியமான தலைவன் மரித்துவிட்டான் என்பதை அறிவீர்கள். 39 இதே நாளில் நான் அரசனாகவும், அபிஷேகம் செய்யப்பட்டேன். இந்த செருயாவின் மகன்கள் எனக்கு மிகுந்த துன்பத்தை கொடுத்துவிட்டனர். அவர்கள் தவறுக்கேற்ற தண்டனையை கர்த்தர் அளிப்பார் என நம்புகிறேன்” என்றான்.
சவுலின் குடும்பத்திற்குத் தொல்லைகள்
4 எப்ரோனில் அப்னேர் மரித்தான் என்பதை சவுலின் மகனான இஸ்போசேத் கேள்விப்பட்டான். இஸ்போசேத்தும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மிகவும் அச்சம் கொண்டனர். 2 சவுலின் மகனாகிய இஸ்போசேத்தைப் பார்ப்பதற்கு இருவர் சென்றனர். அவர்கள் படைத்தலைவர்களாக இருந்தனர். அவர்கள் ரிம்மோனின் மகன்களாகிய, ரேகாபும், பானாவும் ஆவார்கள். (ரிம்மோன் பேரோத்தைச் சேர்ந்தவன். பென்யமீன் கோத்திரத்திற்கு உரிய நகரமாக பேரோத் இருந்ததால் அவர்கள் பென்யமீனியர் ஆவார்கள். 3 ஆனால் பேரோத்தின் ஜனங்கள் கித்தாயீமிற்கு ஓடிவிட்டனர். அவர்கள் இன்றும் அங்கேயே வசித்து வருகின்றனர்.)
4 சவுலின் மகனாகிய யோனத்தானுக்கு மேவிபோசேத் என்னும் பெயருள்ள மகன் இருந்தான். சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி யெஸ்ரயேலிலிருந்து வந்தபோது மேவிபோசேத்திற்கு ஐந்து வயது ஆகியிருந்தது. பகைவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்ததால் மேவிபோசேத்தை வளர்த்த தாதி பெண் அச்சம் கொண்டாள். எனவே அவள் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். அவ்வாறு ஓடியபோது அவள் குழந்தையைத் தவறி போட்டுவிட்டாள். எனவே அவனது இரண்டு கால்களும் முடமாயின.
5 பேரோத்திலுள்ள ரிம்மோனின் மகன்களாகிய ரேகாபும், பானாவும் இஸ்போசேத்தின் வீட்டிற்கு நண்பகலில் சென்றார்கள். வெப்பம் மிகுதியாக இருந்ததால் இஸ்போசேத் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான். 6-7 கோதுமை எடுக்க வந்தவர்களைப் போன்று ரேகாபும் பானாவும் வீட்டிற்குள் புகுந்தனர். படுக்கையறையில் இஸ்போசேத் சாய்ந்திருந்தான். அவனை ரேகாபும் பானாவும் குத்திக் கொன்றார்கள். பின் அவனது தலையை வெட்டி எடுத்துக் கொண்டு யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவு முழுவதும் பயணம் செய்தனர். 8 அவர்கள் எப்ரோனை வந்தடைந்தனர். இஸ்போசேத்தின் தலையை தாவீதிடம் கொடுத்தனர்.
ரிம்மோனின் பிள்ளைகளாகிய ரேகாபும் பானாவும் தாவீது அரசனை நோக்கி, “இதோ உம்மைக் கொல்ல முயன்ற உமது பகைவனாகிய சவுலின் மகன் இஸ்போசேத்தின் தலை, உமக்காக இன்று கர்த்தர் சவுலையும் அவனது குடும்பத்தாரையும் தண்டித்துள்ளார்” என்றனர்.
9 ஆனால் தாவீது ரேகாபையும் அவனது சகோதரன் பானாவையும் நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வாறே அவர் என்னைத் தொல்லைகளிலிருந்து விடுவித்ததும் நிச்சயம். 10 ஆனால் முன்பொருமுறை ஒருவன் எனக்கு ஏதோ நற்செய்தி கொண்டுவருவதாக எண்ணினான். அவன் என்னிடம், ‘பாருங்கள் சவுலை கொன்றதினால் மரித்துவிட்டான்’ என்றான். அச்செய்தியைக் கொண்டு வந்ததற்காக ஏதேனும் பரிசளிப்பேன் என்று அவன் எண்ணினான். ஆனால் அம்மனிதனைப் பிடித்து சிக்லாக் என்னும் இடத்தில் அவனைக் கொன்றேன். 11 எனவே உன்னையும் நான் கொன்று இத்தேசத்திலிருந்து அகற்றவேண்டும். ஏனெனில் துஷ்டராகிய நீங்கள் ஒரு நல்ல மனிதனை வீட்டிற்குள், அவனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும்போது கொன்றீர்கள்” என்றான்.
12 எனவே ரேகாபையும் பானாவையும் கொல்லும்படி தனது இளம் வீரர்களுக்கு தாவீது கட்டளையிட்டான். அந்த இளம் வீரர்கள் ரேகாப், பானா ஆகியோரின் கைகளையும் கால்களையும் வெட்டி எப்ரோன் குளத்தருகே தொங்கவிட்டார்கள். பின் அவர்கள் இஸ்போசேத்தின் தலையை எடுத்து எப்ரோனில் அப்னேர் புதைக்கப்பட்ட இடத்திலேயே புதைத்தார்கள்.
இஸ்ரவேலர் தாவீதை அரசனாக்குகிறார்கள்
5 இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லோரும் எப்ரோனில் தாவீதிடம் கூடிவந்தார்கள். அவர்கள் தாவீதை நோக்கி, “நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தார்! [b] 2 சவுல் நமது அரசனாக இருந்தபோதும் யுத்தத்தில் நீர் எங்களை வழி நடத்தினீர். யுத்தத்திலிருந்து இஸ்ரவேலரை அவர்கள் இருப்பிடத்திற்கு நீரே அழைத்து வந்தீர். கர்த்தர் உம்மிடம், ‘எனது ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு மேய்ப்பனாயிருப்பாய். இஸ்ரவேலுக்கு அரசனாக இருப்பாய்!’ என்று சொன்னார்” என்றார்கள்.
3 எனவே இஸ்ரவேலின் அனைத்து தலைவர்களும் தாவீதைச் சந்திப்பதற்காக எப்ரோன் என்னும் நகருக்கு வந்தார்கள். தாவீது அரசன் இத்தலைவர்களோடு கர்த்தருடைய முன்னிலையில் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். இஸ்ரவேலின் அரசனாக தலைவர்கள் அனைவரும் தாவீதை அபிஷேகம் பண்ணினார்கள்.
4 தாவீது அரசாள ஆரம்பித்தபோது அவனுக்கு 30 வயது. அவன் 40 ஆண்டுகள் அரசாண்டான். 5 எப்ரோனில் 7 ஆண்டு 6 மாதங்கள் அவன் யூதர்களுக்கு அரசனாக இருந்தான். எருசலேமில் இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் 33 ஆண்டுகள் அரசனாக இருந்தான்.
எருசலேமில் தாவீதின் வெற்றி
6 அரசனும் அவனது வீரர்களும் எருசலேமில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எபூசியரை எதிர்த்துப் போரிடுவதற்குச் சென்றனர். எபூசியர்கள் தாவீதிடம், “எங்கள் நகரத்திற்குள் உங்களால் வரமுடியாது. [c] எங்களில் குருடர்களும் முடவர்களுங்கூட உங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்” என்றனர். (தாவீது, அவர்கள் நகரத்திற்குள் நுழையமாட்டான் என்று அவர்கள் நினைத்ததால் இவ்வாறு கூறினார்கள். 7 ஆனால் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான். இக்கோட்டை பின்பு தாவீதின் நகரமாயிற்று.)
8 அந்த நாளில் தாவீது தனது ஆட்களை நோக்கி, “நீங்கள் எபூசியரை வெல்ல விரும்பினால், தண்ணீர் குகை [d] வழியே சென்று ‘முடவரும், குருடரும்’ ஆகிய பகைவரை நெருங்குங்கள்” என்றான். இதனால்தான் மக்கள், “குருடரும் முடவரும் வீட்டினுள் வரமுடியாது” என்பார்கள்.
9 கோட்டையினுள் தாவீது வாழ்ந்தான். அதை “தாவீதின் நகரம்” என்று அழைத்தான், மில்லோ என்னும் கோபுர பகுதியையும் தாவீது கட்டினான். நகரத்திற்குள்ளும் பல கட்டிடங்களை கட்டினான். 10 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தாவீதோடிருந்ததால் அவன் பலம் மிகுந்தவனானான்.
11 தீருவின் அரசனாகிய ஈராம் தாவீதினிடம் தூதுவர்களை அனுப்பினான். கேதுரு மரங்களையும் தச்சரையும், சிற்பிகளையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கென்று ஒரு வீட்டைக் கட்டினார்கள். 12 அப்போது தாவீது கர்த்தர் தன்னை உண்மையாகவே இஸ்ரவேலின் அரசனாக்கியதை அறிந்தான். தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு தனது அரசை கர்த்தர் முக்கியமானதாக ஆக்கினார் என்பதை அவன் உணர்ந்தான்.
13 தாவீது எப்ரோனிலிருந்து எருசலேமுக்கு குடி பெயர்ந்தான். எருசலேமுக்கு வந்த பின் தாவீது இன்னும் பல மனைவியரையும் வேலைக்காரிகளையும் சேர்த்துக்கொண்டான். அவனுக்கு மேலும் பிள்ளைகள் பிறந்தனர். 14 எருசலேமில் தாவீதுக்குப் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள் இவைகளே: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், 15 இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா, 16 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத்.
பெலிஸ்தியருக்கு எதிராக தாவீது சண்டையிடுகிறான்
17 இஸ்ரவேலின் அரசனாக தாவீதை இஸ்ரவேலர் அபிஷேகம் செய்தார்கள் என்பதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டனர். தாவீதைக் கொன்றுவிடுவதற்காக பெலிஸ்தியர் அவனைத் தேடிப் புறப்பட்டனர். தாவீது இதையறிந்து எருசலேமில் கோட்டைக்குள் இருந்தான். 18 பெலிஸ்தியர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டு தங்கினார்கள்.
19 தாவீது கர்த்தரிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்த்துப் போரிட வேண்டுமா? பெலிஸ்தியரைத் தோற்கடிக்க நீர் எங்களுக்கு உதவுவீரா?” என்று கேட்டான்.
கர்த்தர் தாவீதிடம், “பெலிஸ்தியரைத் தோற்கடிப்பதற்கு நான் கண்டிப்பாக உதவுவேன்” என்றார்.
20 பின்பு தாவீது பாகால் பிராசீம் என்னும் இடத்துக்கு வந்து அந்த இடத்தில் பெலிஸ்தியரைக் தோற்கடித்தான். தாவீது, “உடைந்த அணையில் வெள்ளம் பெருக்கெடுப்பதைப்போல கர்த்தர் எனது பகைவர்களிடையே பாய்ந்தார்” என்று கூறினான். எனவே அவ்விடத்திற்குப் “பாகால் பிராசீம்” என்று பெயரிட்டான். 21 பெலிஸ்தியர்கள் பாகால் பிராசீமில் தம் தெய்வங்களின் உருவங்களை விட்டுச் சென்றனர். தாவீதும் அவன் ஆட்களும் அவற்றை அப்புறப்படுத்திவிட்டனர்.
22 மீண்டும் பெலிஸ்தியர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டு தங்கினார்கள்.
23 தாவீது கர்த்தரிடம் பிராத்தனை செய்தான். இம்முறை கர்த்தர் தாவீதிடம், “நீ அங்குப் போகாதே. அவர்கள் படைக்குப் பின்னே சென்று வளைத்துக்கொள். முசுக்கட்டை செடிகளுக்கு அருகே இருந்து அவர்களைத் தாக்கு. 24 முசுக்கட்டை செடிகளின் உச்சியிலிருந்து பெலிஸ்தியர் போருக்காக அணிவகுத்து வரும் ஒலியைக் கேட்பீர்கள். அப்போது நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். ஏனெனில் அதுவே கர்த்தர் உங்களுக்கு முன்பாக சென்று பெலிஸ்தியரைத் தோற்கடிக்கும் சமயமாகும்” என்றார்.
25 கர்த்தர் கட்டளையிட்டபடியே தாவீது செய்தான். அவன் பெலிஸ்தியரை வென்றான். கேபாவிலிருந்து கேசேர் வரைக்கும் அவர்களைத் துரத்தினான்.
முதலில் திட்டமிடுங்கள்(A)
25 இயேசுவோடு பலர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். இயேசு மக்களை நோக்கி, 26 “என்னிடம் வருகிற ஒருவன் அவனது தந்தையையோ, தாயையோ, சகோதரரையோ, சகோதரிகளையோ, என்னைக் காட்டிலும் அதிகமாக நேசித்தால் அம்மனிதன் எனக்குச் சீஷனாக ஆக முடியாது. ஒருவன் தன்னை நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசிக்க வேண்டும்! 27 ஒருவன் என்னைப் பின்பற்றும்போது அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிலுவையை (துன்பத்தை) சுமக்காவிட்டால் அவன் எனக்குச் சீஷனாக முடியாது.
28 “ஒரு கோட்டையைக் கட்டும் முன்பு, முதலில் அமர்ந்து அதைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தீர்மானிப்பீர்கள். வேலையை முடிப்பதற்குத் தேவையான பணம் உங்களிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். 29 அதைச் செய்யாவிட்டால் நீங்கள் வேலையைத் தொடங்கினாலும், அதை முடிக்க உங்களால் முடியாது. நீங்கள் அதை முடிக்க முடியாவிட்டால் அதைக் கவனிக்கிற எல்லா மக்களும் உங்களைப் பார்த்து நகைப்பார்கள். 30 அவர்கள், ‘இந்த மனிதன் கட்ட ஆரம்பித்தான். ஆனால் முடிக்க முடியவில்லை’ என்று சொல்வார்கள்.
31 “ஓர் அரசன் மற்றோர் அரசனுக்கு எதிராகப் போரிடச் சென்றால், முதலில் அமர்ந்து திட்டமிடுவான். அரசனிடம் பத்தாயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தால் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட மற்ற அரசனைத் தோற்கடிக்க முடியுமா எனப் பார்ப்பான். 32 அவனால் மற்ற அரசனைத் தோற்கடிக்க முடியாதென்றால், எதிரி இன்னும் தொலைவான இடத்தில் இருக்கும்பொழுதே சில ஆட்களை அனுப்பி அந்த அரசனிடம் சமாதானத்திற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவான்.
33 “அதைப்போலவே முதலில் நீங்கள் திட்டமிட வேண்டும். என்னைப் பின்பற்ற வேண்டுமானால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும், அவ்வாறு செய்யவில்லை என்றால், நீங்கள் எனது சீஷராக இருக்க முடியாது!”
உப்பின் உதாரணம்(B)
34 “உப்பு ஒரு நல்ல பொருள். ஆனால் உப்பு அதன் சுவையை இழந்துபோனால் அதனால் பயன் எதுவும் இல்லை. அதைத் திரும்பவும் சுவை உடையதாக மாற்ற முடியாது. 35 மண்ணிற்காகவோ, உரமாகவோ, கூட அதனைப் பயன்படுத்த முடியாது. மக்கள் அதை வீசியெறிந்துவிடுவார்கள்.
“என்னைக் கேட்கிற மக்களே! கவனியுங்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center