Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 7-8

அதிகாலையில் யெருபாகாலும் (கிதியோன்) அவனது ஆட்களும் ஆரோத்திலுள்ள நீருற்றினருகில் தம் முகாம்களை ஏற்படுத்திக்கொண்டனர், மோரே என்னும் மலையடிவாரத்திலுள்ள பள்ளத்தாக்கில் மீதியானியர் முகாமிட்டுத் தங்கி இருந்தனர். இப்பகுதி, கிதியோனும் அவனது ஆட்களும் தங்கி இருந்த பகுதிக்கு வடக்கில் இருந்தது.

கர்த்தர் கிதியோனை நோக்கி, “மீதியானியரை வெல்வதற்கு உனது ஜனங்களுக்கு உதவப்போகிறேன். ஆனால் அவ்வேலைக்கு தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான வீரர்கள் உன்னோடிருக்கிறார்கள். இஸ்ரவேலர் என்னை மறந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொண்டதாக எண்ணுவதை நான் விரும்பவில்லை. எனவே இப்போது உன் வீரர்களுக்கு இதனை அறிவித்துவிடு. அவர்களிடம், ‘பயப்படுகிற எவனும் கீலேயாத் மலையை விட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்’ என்று கூறு” என்றார்.

அப்போது 22,000 பேர் கிதியோனை விட்டு வீடுகளுக்குத் திரும்பினார்கள். ஆனாலும் 10,000 பேர் மீதி இருந்தனர்.

அப்போது கர்த்தர் கிதியோனை நோக்கி, “இப்போதும் ஆட்கள் மிகுதியாக இருக்கிறார்கள், அவர்களை தண்ணீரருகே அழைத்துச் செல். உனக்காக அவர்களை அங்கு பரிசோதிப்பேன். ‘இந்த மனிதன் உன்னோடு செல்வான்’ என்று நான் கூறினால் அவன் போவான். ‘அவன் உன்னோடு செல்லமாட்டான்’ என்று நான் கூறினால் அவன் போகமாட்டான்” என்றார்.

எனவே கிதியோன் அவர்களை தண்ணீரருகே அழைத்துச் சென்றான். அங்கு கர்த்தர் கிதியோனை நோக்கி, “உனது ஆட்களில் நாயைப்போல் தண்ணீரை நக்கிக் குடிப்போரை ஒரு குழுவாகவும், மண்டியிட்டு தண்ணீரை குடிப்போரை மற்றொரு குழுவாகவும் பிரித்து விடு” என்றார்.

கைகளால் தண்ணீரை அள்ளி நாயைப் போல் நக்கிப் பருகியோர் 300 பேர். மற்ற எல்லோரும் மண்டியிட்டுத் தண்ணீரைப் பருகினார்கள். கர்த்தர் கிதியோனை நோக்கி, “நாயைப் போல் தண்ணீரை நக்கிய 300 பேரையும் நான் பயன்படுத்துவேன். நீ மீதியானியரை முறியடிக்கும்படி செய்வேன். பிறர் வீடுகளுக்குத் திரும்பட்டும்” என்றார்.

எனவே கிதியோன் பிற இஸ்ரவேலரைத் திருப்பி அனுப்பிவிட்டான். 300 மனிதரை மட்டும் கிதியோன் தன்னோடு இருக்கச் செய்தான். வீட்டிற்குச் சென்றவர்களது பொருட்களையும், எக்காளங்களையும் அந்த 300 பேரும் வைத்துக் கொண்டனர்.

கிதியோனின் முகாமிற்குக் கீழேயுள்ள பள்ளத்தாக்கில் மீதியானியர் முகாமிட்டுத் தங்கி இருந்தனர். இரவில் கர்த்தர் கிதியோனிடம், “எழுந்திரு, நீ மீதியானியரின் சேனையைத் தோற்கடிக்கச் செய்வேன். அவர்களின் முகாமிற்குச் செல். 10 தனியே செல்ல நீ பயப்பட்டால் உன் வேலைக்காரனாகிய பூராவையும் உன்னோடு அழைத்துச் செல். 11 மீதியானியரின் முகாமிற்குள் செல். அங்கே ஜனங்கள் பேசும் செய்திகளைக் கவனித்துக்கொள். அதன்பின் அவர்களைத் தாக்குவதற்கு அஞ்சமாட்டாய்” என்றார்.

எனவே கிதியோனும் அவனது வேலையாளாகிய பூராவும் பகைவர் முகாமின் ஓரத்திற்குச் சென்றனர். 12 அப்பள்ளத்தாக்கில் மீதியானியரும், அமலேக்கியரும், கிழக்கிலிருந்து வந்த அனைத்து ஜனங்களும் முகாமிட்டுத் தங்கி இருந்தனர். வெட்டுக் கிளிகளின் கூட்டத்தைப் போல அவர்கள் எண்ணிக்கையில் மிகுந்திருந்தனர். கடற்கரை மணலைப் போன்று அவர்களுக்கு ஒட்டகங்கள் இருந்ததுபோல் தோன்றிற்று.

13 கிதியோன் பகைவரின் முகாமை நெருங்கி ஒரு மனிதன் பேசுவதைக் கேட்டான். அம்மனிதன் அவனது நண்பனுக்குத் தான் கண்ட கனவைக் கூறிக்கொண்டிருந்தான். அம்மனிதன், “மீதியானியரின் முகாமில் ஒரு உருண்டை வடிவமான அப்பமானது உருண்டு வருவதாகக் கனவுக் கண்டேன். அந்த அப்பம் மிக வலிமையாக முகாமைத் தாக்கியதால் கூடாரம் தாக்குண்டு தரைமட்டமாக விழுந்தது” என்றான்.

14 அம்மனிதனின் நண்பன் கனவின் பொருளை அறிந்திருந்தான். அம்மனிதனின் நண்பன், “உன் கனவிற்கு ஒரே ஒரு பொருளுண்டு. உனது கனவு இஸ்ரவேலின் மனிதனைப் பற்றியது. அது யோவாஸின் மகனாகிய கிதியோனைக் குறித்து உணர்த்துகிறது. மீதியானியரின் எல்லா சேனைகளையும் கிதியோன் தோற்கடிப்பதற்கு தேவன் அனுமதிப்பார் என்று இது பொருள்படுகிறது” என்றான்.

15 அம்மனிதர்கள் கனவையும் அதன் பெருளையும்பற்றிப் போசுவதை அவன் கேட்ட பின்னர், கிதியோன் தேவனை விழுந்து வணங்கினான். பின் அவன் இஸ்ரவேலரின் முகாமிற்குத் திரும்பிப் போனான். கிதியோன் ஜனங்களை அழைத்து, “எழுந்திருங்கள்! மீதியானியரை வெல்வதற்கு கர்த்தர் உதவி செய்வார்” என்றான். 16 பின்பு கிதியோன் 300 பேரையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்தான். கிதியோன் ஒவ்வொருவருக்கும் ஒரு எக்காளத்தையும் ஒரு வெறுமையான ஜாடியையும் கொடுத்தான். ஒவ்வொரு ஜாடியினுள்ளும் ஒரு எரியும் தீப்பந்தம் இருந்தது. 17 கிதியோன் அம்மனிதரைப் பார்த்து, “என்னைக் கூர்ந்து கவனித்து நான் செய்வதைச் செய்யுங்கள். பகைவரின் முகாம்வரைக்கும் என்னைத் தொடர்ந்து வாருங்கள். பகைவர்களது முகாமின் ஓரத்தை நான் அடைந்ததும் நான் செய்வதையே நீங்களும் செய்யுங்கள். 18 நீங்கள் எல்லோரும் பகைவரின் முகாம்களைச் சூழ்ந்து கொள்ளுங்கள். நானும் என்னோடிருக்கும் ஆட்களும் எக்காளங்களை ஊதுவோம். நாங்கள் எக்காளங்களை ஊதியதும் நீங்களும் உங்கள் எக்காளங்களை ஊதுங்கள். உடனே சத்தமாக இவ்வாறு கூறுங்கள்: ‘கர்த்தருக்காகவும் கிதியோனுக்காகவும்!’ என்று கூறுங்கள்” என்றான்.

19 கிதியோனும் அவனோடிருந்த 100 மனிதர்களும் பகைவரது முகாமின் ஓரத்தை அடைந்தார்கள். பகைவர்கள் இரவுக் காவலாளரை மாற்றினதும் அவர்கள் அங்கு வந்தடைந்தனர். அது நள்ளிரவு ஜாமக்காவலின்போது நடந்தது. கிதியோனும் அவனது மனிதர்களும் எக்காளங்களை ஊதி, அவர்களுடைய ஜாடிகளை உடைத்தனர். 20 உடனே எல்லாக் குழுவினரும் எக்காளங்களை ஊதி ஜாடிகளை உடைத்தார்கள். அம்மனிதர்கள் தீப்பந்தங்களை இடது கைகளிலும், எக்காளங்களை வலது கைகளிலும் ஏந்திக் கொண்டனர். அவர்கள் எக்காளங்களை ஊதியதும், “கர்த்தருக்கென்று ஒரு பட்டயம், கிதியோனுக்கென்று ஒரு பட்டயம்!” எனச் சத்தமிட்டனர்.

21 கிதியோனின் மனிதர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயே நின்றுக்கொண்டனர். முகாமிற்குள் மீதியானின் மனிதர்கள் கதறிக் கொண்டே ஓட ஆரம்பித்தனர். 22 கிதியோனின் 300 மனிதர்களும் எக்காளங்களை ஊதியபொழுது, மீதியானியர் ஒருவரையொருவர் தங்கள் வாள்களால் கொல்லும்படியாக கர்த்தர் செய்தார். சேரோ நகரத்திற்கு அருகேயுள்ள பெத்சித்தா என்னும் நகரத்திற்கு பகைவரின் படைகள் ஓட்டம் எடுத்தனர். தாபாத் நகரத்தின் அருகேயுள்ள ஆபேல்மேகொலா நகரத்தின் எல்லை வரைக்கும் அவர்கள் ஓடிச் சென்றார்கள்.

23 நப்தலி, ஆசேர், மனாசே கோத்திரத்தினரைச் சேர்ந்த வீரர்கள் மீதியானியரைத் துரத்துமாறு அனுப்பப்பட்டனர். 24 கிதியோன் எப்பிராயீமின் மலைநாடுகளுக்கெல்லாம் செய்தி அறிவிப்போரை அனுப்பினான். அவர்கள், “கீழிறங்கி வந்து மீதியானியரைத் தாக்குங்கள். பெத்தாபராவரைக்கும் யோர்தான் நதிமட்டும் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வாருங்கள். மீதியானியர் அங்கு வந்து சேரும்முன்னர் இதைச் செய்யுங்கள்” என்றார்கள்.

எனவே அவர்கள் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்களை அழைத்தனர். பெத்தாபரா வரைக்கும் நதிப்பிரதேசத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 25 எப்பிராயீம் மனிதர்கள் மீதியானிய தலைவர்களில் இருவரைப் பிடித்தனர். அவர்களின் பெயர்கள்: ஓரேபும், சேபும் ஆகும். எப்பிராயீம் ஆட்கள் ஓரேப் பாறை என்னுமிடத்தில் ஓரேபைக் கொன்றனர். சேப் ஆலை என்னுமிடத்தில் அவர்கள் சேபைக் கொன்றனர். எப்பிராயீம் மனிதர்கள் மீதியானியரைத் தொடர்ந்து துரத்தினார்கள். ஆனால் அவர்கள் முதலில் ஓரேப், சேப் ஆகியோரின் தலைகளை வெட்டி, அத்தலைகளைக் கிதியோனிடம் கொண்டு வந்தனர். அச்சமயம் கிதியோன் யோர்தான் நதியை ஜனங்கள் கடக்கும் இடத்தில் இருந்தான்.

எப்பிராயீம் மனிதர்கள் கிதியோனிடம் கோபப்பட்டனர். எப்பிராயீம் மனிதர்கள் கிதியோனைச் சந்தித்தபோது, அவர்கள், “ஏன் எங்களை இப்படி நடத்தினீர்கள்? மீதியானியரை எதிர்த்து நீங்கள் போராடச் சென்றபோது ஏன் எங்களை அழைக்கவில்லை?” என்று கேட்டார்கள்.

ஆனால் கிதியோன் எப்பிராயீம் ஆட்களைப் பார்த்து, “நீங்கள் சாதித்த அளவுக்கு நான் எதையும் செய்யவில்லை. எனது குடும்பத்தாராகிய அபியேஸரின் குடும்பத்தைக் காட்டிலும் எப்பிராயீம் ஜனங்களாகிய நீங்கள் சிறப்பாக அறுவடை செய்கிறீர்கள். அறுவடைக் காலத்தில் எங்கள் குடும்பத்தினர் சேகரிப்பதைக் காட்டிலும் நீங்கள் உங்கள் வயல்களில் அதிகமான திராட்சைக் கனிகளைவிட்டு வைக்கிறீர்கள். அது உண்மை அல்லவா? அதுபோலவே, உங்களுக்கு இப்போதும் சிறந்த அறுவடை வாய்த்துள்ளது. தேவன் உங்களை மீதியானியரின் தலைவர்களாகிய ஓரேபையும் சேபையும் சிறைப்பிடிக்கச் செய்தார். நீங்கள் செய்வதோடு என் வெற்றியை நான் எவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்?” என்றான். எப்பிராயீமின் ஆட்கள் கிதியோனின் பதிலைக் கேட்டபோது, அவர்கள் கோபம் அடங்கியது.

மீதியானியரின் இரண்டு அரசர்களையும் கிதியோன் சிறைபிடித்தல்

கிதியோனும் அவனது 300 ஆட்களும் யோர்தான் நதியருகே வந்து மறுகரைக்குக் கடந்து சென்றனர். அவர்கள் களைப்புற்றுப் பசியோடு காணப்பட்டனர். கிதியோன் சுக்கோத் நகரத்தின் மனிதர்களைப் பார்த்து, “எனது வீரர்கள் உண்பதற்கு ஏதாவது கொடுங்கள். அவர்கள் களைப்புற்றிருக்கிறார்கள். நாங்கள் மீதியானியரின் அரசர்களாகிய சேபாவையும் சல்முனாவையும் துரத்திக் கொண்டிருக்கிறோம்” என்றான்.

ஆனால் சுக்கோத் நகரத்தின் தலைவர்கள் கிதியோனைப் பார்த்து, “ஏன் நாங்கள் உமது வீரர்களுக்கு சாப்பிட உணவு கொடுக்க வேண்டும்? நீங்கள் இன்னும் சேபாவையும் சல்முனாவையும் பிடிக்கவில்லை” என்றார்கள்.

அப்போது கிதியோன், “நீங்கள் எங்களுக்கு உணவு தரமாட்டீர்கள். சேபாவையும் சல்முனாவையும் பிடிப்பதற்கு கர்த்தர் எனக்கு உதவுவார். அதன் பின்னர் நான் மீண்டும் இங்கு வருவேன். அப்போது பாலைவனத்திலுள்ள முட்களாலும் நெருஞ்சில்களாலும் அடித்து உங்கள் தோலைக் கிழித்துவிடுவேன்” என்றான்.

சுக்கோத் நகரை விட்டு வெளியேறிய கிதியோன் பெனூவேல் நகரத்திற்குச் சென்றான். கிதியோன் பெனூவேலின் ஆட்களிடமும் உணவு கேட்டான். சுக்கோத்தின் மனிதர்களைப் போலவே பெனூவேலின் ஆட்களும் கிதியோனுக்குப் பதில் கூறினார்கள். எனவே கிதியோன் பெனூவேலின் மனிதர்களிடம், “நான் வெற்றி பெற்றபின் இங்குத் திரும்பி வந்து கோபுரத்தைத் தரைமட்டம் ஆக்குவேன்” என்றான்.

10 சேபாவும், சல்முனாவும், அவர்களது சேனைகளும் கர்கோர் நகரத்தில் இருந்தார்கள். அவர்களது சேனையில் 15,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் கிழக்கிலிருந்து வந்த ஜனங்களின் சேனையில் மீதியிருந்த படை வீரர்களாவர். அவர்கள் சேனையின் 1,20,000 வலிமைமிக்க படைவீரர்கள் ஏற்கெனவே கொல்லப்பட்டனர்.

11 கிதியோனும் அவனது மனிதர்களும் கூடாரங்களில் வாழ்வோரின் பாதை வழியாகச் சென்றனர். நோபாகு, யொகிபெயா ஆகிய நகரங்களின் கிழக்கில் அப்பாதை இருந்தது. கிதியோன் கர்கோர் நகரம் வரைக்கும் வந்து, பகைவரைத் தாக்கினான். எதிரிகளின் சேனை அந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. 12 மிதியானியரின் அரசர்களாகிய சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள். ஆனால் கிதியோன் அவர்களைத் துரத்திப் பிடித்தான். கிதியோனும் அவனது ஆட்களும் பகைவரின் படையைத் தோற்கடித்தனர்.

13 பின், யோவாஸின் மகனான கிதியோன் போரிலிருந்து திரும்பினான். ஏரேஸ் கணவாய் வழியாகக் கிதியோனும் அவனது ஆட்களும் திரும்பினார்கள். 14 கிதியோன் சுக்கோத் நகரத்து இளைஞன் ஒருவனைப் பிடித்தான். கிதியோன் அந்த இளைஞனைச் சில கேள்விகள் கேட்டான். அந்த இளைஞன் சுக்கோத் நகரத்துத் தலைவர்கள் மற்றும் மூப்பர்களது பெயர்களை எழுதினான். அவன் 77 மனிதர்களின் பெயர்களைத் தந்தான்.

15 பின் கிதியோன் சுக்கோத் நகரத்திற்கு வந்தான். அவன் அந்நகரத்து மனிதர்களைப் பார்த்து, “சேபாவையும், சல்முனாவையும் இதோ பிடித்திருக்கிறோம். நீங்கள் எங்களைப் பார்த்துக் கிண்டலாக, ‘ஏன் உங்கள் களைத்த வீரர்களுக்கு உணவளிக்க வேண்டும்? நீங்கள் இன்னும் சேபாவையும் சல்முனாவையும் பிடிக்கவில்லை’ என்றீர்கள்” என்றான். 16 கிதியோன் சுக்கோத் நகரத்தின் தலைவர்களை அழைத்து வந்து, பாலைவனத்தின் முட்களாலும் நெருஞ்சில்களாலும் அவர்களை அடித்தான். 17 பெனூவேல் நகரத்தின் கோபுரத்தையும் கிதியோன் தரைமட்டம் ஆக்கி, அந்நகரின் மனிதர்களைக் கொன்றான்.

18 பின் கிதியோன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி, “தாபோர் மலையில் நீங்கள் சில மனிதர்களைக் கொன்றீர்கள், அவர்கள் யாரைப் போன்றிருந்தார்கள்?” என்று கேட்டான்.

சேபாவும் சல்முனாவும், “அவர்கள் உங்களைப் போன்றிருந்தார்கள். ஒவ்வொருவனும் ஒரு இராஜ குமாரனைப் போல் காணப்பட்டான்” என்று பதில் கூறினார்கள்.

19 கிதியோன், “அவர்கள் என் சகோதரர்கள்! என் தாயின் ஜனங்கள்! கர்த்தர் ஜீவித்திருக்கிறபடியால், நீங்கள் அவர்களைக் கொல்லாமல் விட்டிருந்தால், நானும் இப்போது உங்களைக் கொல்லாமல் விட்டிருப்பேன்” என்றான்.

20 பின்பு கிதியோன் யெத்தேரை ஏறிட்டுப் பார்த்தான். யெத்தேர் கிதியோனின் மூத்த மகன். கிதியோன் அவனை நோக்கி, “இந்த அரசர்களைக் கொன்றுவிடு” என்றான். ஆனால் யெத்தேர் பயம் நிறைந்த ஒரு பையனாக இருந்தான். எனவே அவன் தன் வாளை உருவவில்லை.

21 அப்போது சேபாவும் சல்முனாவும் கிதியோனை நோக்கி, “நீர் எழுந்து எங்களைக் கொன்றுபோடும். இதை நிறைவேற்றும் வலிமை உம்மிடமே உண்டு” என்றனர். எனவே கிதியோன் எழுந்து சேபாவையும் சல்முனாவையும் கொன்றான். பின்பு அவர்களது ஒட்டகங்களின் கழுத்துக்களிலிருந்தச் சந்திரனைப் போன்ற அலங்காரங்களை எடுத்துக்கொண்டான்.

கிதியோன் ஓர் ஏபோதைச் செய்தல்

22 இஸ்ரவேலர் கிதியோனை நோக்கி, “நீர் எங்களை மீதியானியரிடமிருந்து காப்பாற்றினீர். எனவே எங்களை நீரே ஆட்சி செய்யும். நீரும், உமது மகனும், உமது பேரனும் எங்களை ஆளவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்” என்றனர்.

23 ஆனால் கிதியோன் இஸ்ரவேலரை நோக்கி, “கர்த்தர் தாமே உங்கள் அரசராக இருப்பார். நான் உங்களை ஆளமாட்டேன், எனது மகனும் உங்களை ஆளமாட்டான்” என்றான்.

24 இஸ்ரவேலர் வென்ற ஜனங்களில் இஸ்மவேலரும் இருந்தனர். இஸ்மவேலரில் ஆண்கள் பொன்னாலாகிய காதணிகளை அணிந்திருந்தனர். எனவே கிதியோன் இஸ்ரவேலரை நோக்கி, “நான் கேட்கும் இந்த காரியத்தை நீங்கள் எனக்குச் செய்ய வேண்டும். போரில் நீங்கள் எடுத்துக்கொண்ட பொருள்களிலிருந்து ஒவ்வொருவரும் ஒரு பொன் காதணியை எனக்குத் தரவேண்டும்! என்று விரும்புகிறேன்” என்றான்.

25 அதற்கு இஸ்ரவேலர் கிதியோனை நோக்கி, “நீர் கேட்பதை நாங்கள் மகிழ்ச்சியோடு தருவோம்” என்றனர். அவர்கள் ஓர் மேலாடையைக் கீழே விரித்தனர். ஒவ்வொருவனும் அதன் மீது ஒரு காதணியைப் போட்டான். 26 அக்காதணிகளைச் சேர்த்து எடைபோட்டபோது 43 பவுண்டு எடையுள்ளதாய் இருந்தது. இஸ்ரவேலர் கிதியோனுக்குக் கொடுத்த மற்றப் பரிசுகள் இங்கு சேர்க்கப்படவில்லை. பிறையைப் போன்றும், மழைத் துளிகளைப் போன்றும் வடிவமைந்த அணிகலன்களையும் அவர்கள் அவனுக்குக் கொடுத்தனர். அவனுக்கு ஊதா நிற அங்கியையும் கொடுத்தனர். மீதியானியரின் அரசர்கள் அவற்றை அணிந்திருந்தனர். மீதியானிய அரசர்களின் ஒட்டகங்களிலுள்ள சங்கிலிகளையும் அவர்கள் அவனுக்குக் கொடுத்தனர்.

27 கிதியோன் ஒரு ஏபோத்தைச் செய்ய, இப்பொன்னைப் பயன்படுத்தினான். ஒப்ரா என்னும் அவனது சொந்த ஊரிலேயே ஏபோத்தை வைத்தான். இஸ்ரவேலர் எல்லோரும் ஏபோத்தை வழிப்பட்டனர். இவ்விதமாக இஸ்ரவேல் ஜனங்கள் தேவனிடம் அவநம்பிக்கைகொண்டு ஏபோத்தை வழிபட்டனர். கிதியோனும் அவனது குடும்பத்தினரும் பாவம் செய்யும்படியான கண்ணியாக இந்த ஏபோத் அமைந்தது.

கிதியோனின் மரணம்

28 இஸ்ரவேலரின் ஆளுகையின் கீழ் மீதியானியர் வந்தனர். மீதியானியர் இஸ்ரவேலருக்கு எந்தப் பிரச்சனையும் மேற்கொண்டு தரவில்லை. கிதியோன் உயிரோடு இருந்தவரைக்கும் தேசம் 40 ஆண்டுகள் அமைதியாக இருந்தது.

29 யோவாஸின் மகனாகிய யெருபாகால் (கிதியோன்) தன் வீட்டிற்குச் சென்றான். 30 கிதியோனுக்கு 70 மகன்கள் இருந்தனர். அவனுக்குப் பல மனைவியர் இருந்ததால் அத்தனை மகன்கள் இருந்தனர். 31 கிதியோனின் வேலைக்காரி சீகேமில் வாழ்ந்து வந்தாள். கிதியோனுக்கு அவள் மூலமாக பிறந்த மகன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அபிமெலேக்கு.

32 யோவாஸின் மகனாகிய கிதியோன் மிக முதிர்ந்த வயதில் மரித்தான். யோவாஸின் கல்லறையில் கிதியோன் அடக்கம்பண்ணப்பட்டான். அபியேஸர் குடும்பம் வாழும் ஒப்ரா நகரில் அந்தக் கல்லறை இருக்கிறது. 33 கிதியோன் மரித்ததும், இஸ்ரவேலர் தேவனிடம் நம்பிக்கை வைக்காமல் பாகாலைப் பின்பற்றினார்கள். அவர்கள் பாகால் பேரீத்தைத் தேவனாக்கினார்கள். 34 சுற்றி வாழ்ந்த பகைவர்களிடம் இருந்தெல்லாம் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றியும் கூட, இஸ்ரவேலர்கள் தமது தேவனாகிய கர்த்தரை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 35 எவ்வளவோ நன்மைகளைச் செய்திருந்தும்கூட யெருபாகாலின் (கிதியோன்) குடும்பத்தினருக்கு இஸ்ரவேலர் விசுவாசமுடையவர்களாய் இருக்கவில்லை.

லூக்கா 5:1-16

பேதுரு, யாக்கோபு, யோவான்(A)

கெனெசரேத்து கடலின் அருகே இயேசு நின்றார். மக்கள் அவரைச் சுற்றி சூழ்ந்துகொண்டார்கள். தேவனுடைய போதனைகளைக் கேட்க அவர்கள் விரும்பினர். கடற்கரையில் இயேசு இரண்டு படகுகளைக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் தம் வலைகளைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். சீமோனுக்கு உரிய படகில் இயேசு ஏறிக்கொண்டார். படகைக் கரையிலிருந்து கடலுக்குள் சற்றுத் தள்ளி நிறுத்துமாறு இயேசு சீ மோனுக்குக் கூறினார். பிறகு மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.

இயேசு போதித்து முடித்தார். அவர் சீமோனிடம், “படகை கடலில் ஆழமான பகுதிக்குச் செலுத்து. நீங்கள் எல்லாரும் வலைவீசினால் மீன்கள் அகப்படும்” என்றார்.

சீமோன் பதிலாக, “ஐயா, மீன் பிடிப்பதற்காக இரவு முழுவதும் முயன்று பணி செய்தோம். ஆனால் மீன் எதுவும் அகப்படவில்லை. நான் நீருக்குள் வலை வீசவேண்டும் என்று நீர் கூறுகிறீர். நான் அவ்வாறே செய்வேன்” என்றான். மீன் பிடிக்கிறவர்கள் நீருக்குள் வலை வீசினர். வலைகள் கிழியும்படியாக அவை முழுக்க மீன்களால் நிரம்பின. அவர்கள் பிற படகுகளில் இருந்த தம் நண்பர்களை வந்து உதவுமாறு அழைத்தனர். நண்பர்கள் வந்தனர். இரண்டு படகுகளும் அமிழ்ந்து போகும் நிலையில் மிகுதியான மீன்களால் நிரம்பின.

8-9 தாங்கள் பிடித்த மிகுதியான மீன்களைக் கண்டு மீன் பிடிக்கிறவர்கள் ஆச்சரியப்பட்டனர். சீமோன் பேதுரு இதைக் கண்டபோது இயேசுவின் முன் தலை குனிந்து வணங்கி, “ஆண்டவரே, என்னிடமிருந்து போகவேண்டும். நான் பாவியான மனிதன்” என்றான். 10 செபெதேயுவின் மகன்களாகிய யாக்கோபும் யோவானும் கூட ஆச்சரியம் அடைந்தார்கள். (யாக்கோபும் யோவானும் பேதுருவுடன் சேர்ந்து உழைத்தனர்) இயேசு சீமோனை நோக்கி, “பயப்படாதே! இப்போதிலிருந்து மனிதரை ஒன்று சேர்க்கும்படியாக நீ வேலை செய்வாய், மீனைப்பிடிக்க அல்ல!” என்றார்.

11 அம்மனிதர்கள் படகைக் கரைக்கு இழுத்து வந்தனர். அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

குணமடைந்த நோயாளி(B)

12 ஒருமுறை இயேசு மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த மனிதன் ஒருவன் வாழ்ந்த ஒரு நகரத்தில் இருந்தார். அந்த மனிதனைத் தொழு நோய் பீடித்திருந்தது. அந்த மனிதன் இயேசுவைப் பார்த்ததும் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, “ஆண்டவரே, என்னைக் குணப்படுத்துங்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால் நீங்கள் என்னைக் குணமாக்க முடியும் என்பது எனக்குத் தெரியும்” என்று வேண்டினான்.

13 இயேசு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். இயேசு அவனைத் தொட்டார். உடனே தொழு நோய் அவனை விட்டு மறைந்தது. 14 இயேசு அவனிடம், “இப்போது நடந்ததை யாருக்கும் சொல்லாதே. ஆனால் ஆசாரியனிடம் சென்று காட்டு. மோசே கட்டளையிட்டபடி நீ குணமாகியதற்கேற்ப தேவனுக்கு ஒரு காணிக்கை கொடு. இது நீ குணமாகியதை மக்களுக்குக் காட்டும்” என்றார்.

15 ஆனால் இயேசுவைப்பற்றிய செய்தி மிகவும் விரிந்த அளவில் பரவியது. பல மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்பதற்கும், தங்கள் நோய்களினின்று குணமாவதற்கும் வந்தனர். 16 பிரார்த்தனை செய்யும்பொருட்டுத் தனிமையான இடத்தைத் தேடி இயேசு அடிக்கடி வேறு வேறு இடங்களுக்குச் சென்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center