Old/New Testament
எப்பிராயீம், மனாசே ஆகியோருக்கான நிலம்
16 யோசேப்பின் குடும்பம் பெற்ற தேசம் இதுவே. எரிகோவின் அருகே யோர்தான் நதியில் ஆரம்பித்து, இத்தேசம் எரிகோவின் ஆறுகள் வரைக்கும் உள்ள பகுதி ஆகும். (அது எரிகோவின் கிழக்குப் பாகமாகும்.) எரிகோவிலிருந்து பெத்தேலின் மலை நாடு வரைக்கும் அதின் எல்லை விரிந்திருந்தது. 2 பெத்தேலிலிருந்து (லூஸ்) அதரோத்திலுள்ள அர்கீயினுடைய எல்லைவரைக்கும் நீண்டது. 3 தொடர்ந்து எல்லை மேற்கே யப்லெத்தியரின் எல்லை வரைக்கும் தொடர்ந்து, தாழ்வான பெத்தொரோன் வரைக்கும் அது விரிந்தது. மேலும் கேசேருக்குச் சென்று, மத்தியதரைக் கடல்வரைக்கும் தொடர்ந்தது.
4 மனாசே, எப்பிராயீம் கோத்திர ஜனங்கள் அவர்களுக்குரிய நாட்டைப் பெற்றனர். (மனாசேயும் எப்பிராயீமும் யோசேப்பின் ஜனங்கள்.)
5 எப்பிராயீம் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் இதுவே: மேல் பெத்தொரோனுக்கு அருகேயுள்ள அதரோத் அதார் என்னும் இடத்தில் கிழக்கெல்லை ஆரம்பித்தது. 6 மிக்மேத்தாத்தில் அதன் மேற்கெல்லை தொடங்கியது. எல்லை கிழக்காகத் திரும்பி தானாத் சீலோவிற்குச் சென்று, யநோகாவிற்குக் கிழக்காகத் தொடர்ந்தது. 7 இந்த எல்லை யநோகாவிலிருந்து அதரோத் மற்றும் நகராத்வரைக்கும் சென்றது. எரிகோவைத் தொடும் அந்த எல்லை தொடர்ந்து யோர்தான் நதியில் போய் முடிந்தது. 8 மேற்கு எல்லை தப்புவாவிலிருந்து கானா நதிக்குப்போய், கடலில் முடிந்தது. எப்பிராயீம் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் இதுவே. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் அத்தேசத்தின் பாகத்தைப் பெற்றது. 9 எப்பிராயீமின் எல்லையிலுள்ள ஊர்களில் பலவும் மனாசேயின் எல்லைகளில் இருந்தன. ஆனால் எப்பிராயீம் ஜனங்கள் அவ்வூர்களையும் அவற்றைச் சூழ்ந்த வயல்களையும் பெற்றனர். 10 காசேர் என்னும் ஊரைவிட்டுக் கானானியரை வெளியேற்ற எப்பிராயீம் ஜனங்களால் முடியவில்லை. இன்றும்கூட கானானியர் எப்பிராயீம் ஜனங்களோடு வசித்து வருகின்றனர். ஆனால் கானானியர் எப்பிராயீமருக்கு அடிமைகளாயினர்.
17 பிறகு மனாசேயின் கோத்திரத்தினருக்கு
நிலம் வழங்கப்பட்டது. மனாசே யோசேப்பின் முதல் மகன், கிலேயாத்தின் தந்தையாகிய மாகீர் மனாசேயின் முதல் மகன். மாகீர் சிறந்த வீரன், எனவே கீலேயாத், பாசான் ஆகிய பகுதிகள் அவனுக்குத் தரப்பட்டன. 2 மனாசே கோத்திரத்தின் பிற குடும்பங்களுக்கும் தேசம் கொடுக்கப்பட்டது. அவை அபியேசர், ஏலேக், அஸ்ரியேல்,செகேம், எப்பேர், செமீதா ஆகியோரின் குடும்பங்கள் ஆகும். இவர்கள் மனாசேயின் பிற மகன்கள். இவர்களின் குடும்பங்கள் தேசத்தில் பங்கைப் பெற்றன.
3 எப்பேரின் மகன் செலொப்பியாத். கிலேயாத்தின் மகன் எப்பேர். மாகீரின் மகன் கிலேயாத், மனாசேயின் மகன் மாகீர், செலோப்பியாத்திற்கு மகன்கள் இருக்கவில்லை, அவனுக்கு ஐந்து பெண்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் ஆகியவை ஆகும். 4 ஆசாரியனாகிய எலெயாசாரிடமும் நூனின் மகனாகிய யோசுவாவிடமும், எல்லாத் தலைவர்களிடமும் அப்பெண்கள் சென்று, “ஆண்களைப் போலவே எங்களுக்கும் நிலத்தைத் தரும்படியாக கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார்” என்றனர். எலெயாசார் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அப்பெண்களுக்கும் கொஞ்சம் நிலம் கொடுத்தான். எனவே ஆண்களைப் போன்றே இந்த மகள்களும் நிலத்தைப் பெற்றார்கள்.
5 யோர்தான் நதிக்கு மேற்கே பத்துப் பகுதிகளையும், யோர்தான் நதிக்கு மறுகரையில் கீலேயாத், பாசான் ஆகிய பகுதிகளையும் மனாசே கோத்திரத்தினர் பெற்றனர். 6 மனாசேயின் மகள்களும், மகன்களைப் போன்றே நிலத்தில் பங்கைப் பெற்றனர். கீலேயாத் தேசம் மனாசேயின் பிற குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டது.
7 ஆசேருக்கும் மிக்மேத்தாத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மனாசேயின் நிலங்கள் இருந்தன. அது சீகேமுக்கு அருகில் இருந்தது. என்தப்புவாவின் தெற்கே எல்லை சென்றது. 8 தப்புவாவைச் சூழ்ந்த பகுதி மனாசேக்கு உரியதாயிற்று. ஆனால் அவ்வூர் அவனுக்கு உரியதாகவில்லை. மனசேயின் தேசத்து எல்லையில் தப்புவா என்ற ஊர் இருந்தது. அது எப்பிராயீம் ஜனங்களுக்கு உரியதாக இருந்தது. 9 மனாசேயின் எல்லை தெற்கே கானா நதிவரைக்கும் தொடர்ந்தது. இப்பகுதி மனசே கோத்திரத்தினருக்கு உரியதாக இருந்தும், நகரங்கள் எப்பிராயீமுக்குச் சொந்தமாயின. நதிக்கு வடக்கே மனாசேயின் எல்லை அமைந்தது. அது மத்தியத்தரைக் கடல்வரை எட்டியது. 10 தெற்கேயுள்ள தேசம் எப்பிராயீமுக்குச் சொந்தமானது. வடக்கேயுள்ள தேசம் மனாசேக்குச் சொந்தமானது. மத்தியத்தரைக் கடல் மேற்கு எல்லையாக இருந்தது. அதன் எல்லை வடக்கில் ஆசேரின் தேசத்தையும், கிழக்கில் இசக்காரின் தேசத்தையும் தொட்டது.
11 இசக்கார், ஆசேர் ஆகியோரின் பகுதிகளிலும் மனாசே ஜனங்களின் ஊர்கள் இருந்தன. பெத்செயான், இப்லெயாம், அவற்றைச் சுற்றிலும் காணப்பட்ட சிற்றூர்கள் எல்லாம் மனாசே ஜனங்களுக்குச் சேர்ந்தன. தோர், எந்தோர், தானாக், மெகிதோ மற்றும் அவைகளைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களிலும் வாழ்ந்தார்கள். நாபோத்தின் மூன்று ஊர்களிலும் அவர்கள் வாழ்ந்தனர். 12 மனாசே கோத்திரத்து ஜனங்கள் அந்நகரங்களை முறியடிக்க முடியவில்லை. கானானியர்கள் அங்கு தொடர்ந்து வாழ்ந்தபோதிலும் 13 இஸ்ரவேலர் வலியோராயினர். அப்போது கானானியரைத் தங்களுக்காக உழைக்கும்படி இஸ்ரவேலர் செய்தனர். ஆனால் அவர்கள் தேசத்தை விட்டுப் போகும்படியாக கானானியரை வற்புறுத்தவில்லை.
14 யோசேப்பின் கோத்திரத்தினர் யோசுவாவிடம், “எங்களுக்கு ஒரு பகுதி நிலம் மாத்திரமே நீங்கள் கொடுத்தீர்கள். ஆனால் நாங்களோ எண்ணிக்கையில் மிகுதியான அளவில் உள்ளோம். தம் ஜனங்களுக்காக கர்த்தர் கொடுத்த தேசத்தில் ஒரு பகுதியை மட்டும் நீங்கள் ஏன் எங்களுக்குக் கொடுத்தீர்கள்?” என்றனர்.
15 யோசுவா, “நீங்கள் எண்ணிக்கையில் அதிக அளவு இருந்தீர்களேயானால் மலை நாட்டுக்குச் சென்று, அந்நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்நிலம் இப்போது பெரிசியருக்கும், ரெப்பாயீமீயருக்கும் உரியதாக உள்ளது. எப்பிராயீமின் மலை நாடு உங்களுக்கு அளவில் மிகவும் சிறியதாக இருந்தால் மட்டுமே அந்நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றான்.
16 யோசேப்பின் ஜனங்கள், “எங்களுக்கு எப்பிராயீமின் மலைநாடு போதுமான அளவு பெரியது அல்ல. ஆனால் அங்கு வாழும் கானானியரிடம் ஆற்றல் வாய்ந்த போர்க்கருவிகள் உள்ளன. அவர்களிடம் இரும்பாலாகிய தேர்கள் இருக்கின்றன! அந்த ஜனங்களே பள்ளத்தாக்கிலும் அதிகாரம் செலுத்துகின்றனர்! யெஸ்ரேயேல் பள்ளத்தாக்கு, பெத்செயான், அங்குள்ள சிறிய ஊர்கள் ஆகியவற்றின் அதிகாரமும் அவர்களிடமே உள்ளது” என்றார்கள்.
17 எப்பிராயீம், மனாசே, யோசேப்பின் ஜனங்களிடம் யோசுவா, “நீங்கள் எண்ணிக்கையில் பலராயிருக்கிறீர்கள். வல்லமை மிக்கவர்கள். நிலத்தில் ஒரு பகுதியைக் காட்டிலும் அதிகம் உங்களுக்குத் தரப்பட வேண்டும். 18 நீங்கள் மலை நாட்டைப் பெறுவீர்கள். அது காடு, ஆனால் மரங்களை வெட்டி, வாழ்வதற்கேற்ற இடமாக மாற்றலாம். உங்களுக்கு அது சொந்தமாகும். அங்கிருந்து கானானியரை வெளியேறச் செய்வீர்கள். அவர்கள் ஆற்றல் வாய்ந்தோராய், சிறந்த போர்க் கருவிகளை வைத்திருந்தாலும் அவர்களை நீங்கள் தோற்கடிப்பீர்கள்” என்றான்.
தேசத்தின் பிறபகுதிகளைப் பங்கிடுதல்
18 சீலோவில் இஸ்ரவேலர் எல்லோரும் ஒன்றாகக் கூடினார்கள், அங்கு ஆசரிப்புக் கூடாரத்தை நிறுவினர். இஸ்ரவேலர் தேசத்தில் ஆட்சி செலுத்தினர். அத்தேசத்தின் பகைவர்களை எல்லாம் அவர்கள் வென்றனர். 2 அப்போது இஸ்ரவேலின் ஏழு கோத்திரங்கள் இன்னும் தேவன் வாக்களித்த தங்களுக்குரிய நிலத்தின் பாகத்தைப் பெறாமலிருந்தனர்.
3 எனவே யோசுவா இஸ்ரவேலரை நோக்கி, “நீங்கள் உங்கள் நிலங்களைப் பெற ஏன் இவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்? உங்கள் பிதாக்களின், தேவனாகிய கர்த்தர், இத்தேசத்தை உங்களுக்குத் தந்தார். 4 எனவே உங்களில் ஒவ்வொரு கோத்திரத்தினரும் மும்மூன்று ஆட்களைத் தெரிந்துகொள்ளுங்கள் தேசத்தைப் பற்றித் தெரிந்து வருவதற்கு நான் அவர்களை அனுப்புவேன் அவர்கள் திரும்பி வந்து என்னிடம் அந்த தேசத்தை பற்றி விவரிப்பார்கள். 5 அவர்கள் தேசத்தை ஏழு பாகங்களாகப் பிரிப்பார்கள். யூதாவின் ஜனங்களுக்குத் தெற்கிலுள்ள தேசம் உரியதாகும். யோசேப்பின் ஜனங்கள் வடக்கிலுள்ள தேசத்தை வைத்துக்கொள்வார்கள். 6 ஆனால் நீங்கள் தேசப்படத்தை வரைந்து அதை ஏழாகப் பிரிக்க வேண்டும். அப்படத்தை என்னிடம் கொண்டு வாருங்கள். எந்தெந்த கோத்திரத்தாருக்கு, எந்தெந்த பகுதி என்பதை நமது தேவனாகிய கர்த்தர் தீர்மானிப்பதற்கு [a] விட்டுவிடுவோம். 7 லேவியர் தேசத்தில் எந்தப் பாகத்தையும் பெறவில்லை. கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதே அவர்களுக்குரிய பங்காகும். வாக்களிக்கப்பட்ட தேசத்தில் தங்களுக்குரிய பாகத்தை காத், ரூபன் ஆகிய கோத்திரங்களும், மனாசே கோத்திரத்தின் பாதிக் குடும்பங்களும் பெற்றுக்கொண்டனர். யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில் அவர்கள் வசித்தனர். கர்த்தருடைய, ஊழியனாகிய மோசே, அவர்களுக்கு அத்தேசத்தைக் கொடுத்திருந்தான்” என்றான்.
8 தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள் தேசத்தைப் பார்க்கவும், பின்னர் அதைப் படமாக வரைந்து யோசுவாவிடம் கொண்டுவரவும் திட்டமிட்டனர். யோசுவா அவர்களை நோக்கி, “போய் தேசத்தை ஆராய்ந்து, அதன் படங்களை வரையுங்கள். பிறகு சீலோவில் என்னிடம் வாருங்கள். பின் சீட்டுப் போட்டு, கர்த்தர் உங்களுக்கான பாகத்தைத் தேர்ந் தெடுக்கும்படியாகச் செய்வேன்” என்றான்.
9 எனவே அந்த ஆட்கள் தேசத்திற்குள் சென்றார்கள். அவர்கள் தேசத்தைச் சுற்றி ஆராய்ந்து, படங்கள் தயாரித்தனர். அவர்கள் அந்தத் தேசத்தை ஏழு பகுதிகளாகப் பிரித்தனர். அவர்கள் படங்களை வரைந்த பின்னர் சீலோவிற்கு யோசுவாவிடம் திரும்பிச் சென்றனர். 10 சீலோவில் கர்த்தருடைய முன்னிலையில் யோசுவா சீட்டுகளைக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுத்தான். இவ்வாறு, யோசுவா தேசத்தைப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தினருக்கும் அவரவருக்குரிய பாகத்தைக் கொடுத்தான்.
பென்யமீனுக்குரிய நிலம்
11 யூதா, யோசேப்பு கோத்திரங்களுக்கு மத்தியிலுள்ள நிலம், பென்யமீன் கோத்திரத்தினருக்குக் கிடைத்தது. பென்யமீன் கோத்திரத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களுக்குரிய பங்கைப் பெற்றனர். பென்யமீனுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் இதுவே: 12 யோர்தான் நதியருகே அதன் வடக்கெல்லை ஆரம்பித்தது. எரிகோவின் வடக்குக் கரையோரமாக எல்லை தொடர்ந்தது. பெத்தாவேனின் கிழக்குப் பகுதிவரைக்கும் அவ்வெல்லை சென்றது. 13 லூசின் (பெத்தேலின்) தெற்கே எல்லை சென்றது. அதரோத் அதார் வரைக்கும் எல்லை தொடர்ந்தது. கீழ்பெத்தொரோனின் தெற்கிலுள்ள மலையின் மேல் அதரோத் அதார் இருந்தது. 14 பெத்தொரோனின் தெற்கிலுள்ள மலையிலிருந்து எல்லை தெற்கே திரும்பி, மலைக்கு மேற்குப்புறமாக சென்றது. கீரியாத் பாகாலுக்கு (“கீரியாத் யெயாரீம்” என்றும் அழைக்கப்பட்டது.) எல்லை சென்றது. இவ்வூர் யூதா ஜனங்களுக்குச் சொந்தமானது. இது மேற்கெல்லை ஆகும்.
15 தெற்கெல்லை கீரியாத்யெயாரீமுக்கருகே தொடங்கி நெப்தோவா நதிக்குச் சென்றது. 16 ரெபாயீம் பள்ளத்தாக்கின் வடக்கிலிருந்த இன்னோம் பள்ளத்தாக்கிற்கு, அருகேயுள்ள மலைக்குக் கீழே எல்லை நீண்டது. எபூசியின் நகரத்திற்குத் தெற்கே இன்னோம் பள்ளத்தாக்கு வரைக்கும் எல்லை நீண்டது. எபூசியின் நகரத்திற்குத் தெற்கே இன்னோம் பள்ளத்தாக்கு வரைக்கும் எல்லை தொடர்ந்தது. பின் என்ரொகேல் வரை சென்றது. 17 அங்கு, எல்லை வடக்கே திரும்பி என்சேமேசுவரை போனது. கெலிலோத் வரைக்கும் எல்லை தொடர்ந்தது. (மலைத் தொடர்களிலிருந்து அதும்மீம் வழி அருகே கெலிலோத் இருந்தது.) ரூபனின் மகனான போகனுக்காக குறிக்கப்பட்ட “பெருங்கல்” வரைக்கும் எல்லை நீண்டது. 18 பெத்அரபாவின் வடக்குப் பாகம் வரைக்கும் எல்லை சென்றது. பின் எல்லை அராபா வரைக்கும் போயிற்று. 19 பின்பு எல்லை பெத் ஓக்லாவின் வடக்குப் பகுதிவரைக்கும் சென்று சவக் கடலின் வடக்கெல்லையில் முடிவுற்றது. இங்கேதான் யோர்தான் நதி கடலில் சென்று சேர்ந்தது. அதுவே தெற்கெல்லை.
20 யோர்தான் நதி கிழக்கெல்லையாக இருந்தது. இதுவே பென்யமீன் கோத்திரத்தினருக்காக கொடுக்கப்பட்ட நிலமாக இருந்தது. எல்லாப் பக்கத்து எல்லைகளும் அவையே. 21 எல்லாக் குடும்பங்களும் அவற்றிற்குரிய நிலத்தைப் பெற்றன. இவையே அவர்களின் பட்டணங்கள்: எரிகோ, பெத்ஒக்லா, ஏமேக்கேசீஸ், 22 பெத்அரபா, செமாராயிம், பெத்தேல், 23 ஆவீம், பாரா, ஓப்ரா, 24 கேப்பார் அமோனாய், ஓப்னி, காபா ஆகியவை ஆகும். மொத்தம் 12 நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் அவர்களுக்கு உரியவையாயின.
25 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் கிபியோன், ராமா, பேரோத், 26 மிஸ்பே, கெப்பிரா, மோத்சா, 27 ரெக்கேம், இர்பெயேல், தாராலா, 28 சேலா, ஏலேப், எபூசி நகரம் (எருசலேம்), கீபெயாத், கீரேயாத் ஆகியவற்றையும் பெற்றனர். 14 நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த ஊர்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பென்யமீன் கோத்திரத்தினர் பெற்றனர்.
இயேசுவின் பிறப்பு(A)
2 அக்காலத்தில் ரோம ஆளுகைக்குட்பட்ட எல்லா நாட்டினருக்கும் அகஸ்து இராயன் ஒரு கட்டளை அனுப்பினான். எல்லா மக்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு அக்கட்டளை கூறியது. 2 அதுவே முதல் பதிவாக இருந்தது. சீரியாவின் ஆளுநராக சிரேனியு இருந்தபோது அது நடந்தது. 3 எல்லா மக்களும் பதிவு செய்வதற்கென தங்கள் சொந்த நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்கள்.
4 கலிலேயாவில் உள்ள நகரமாகிய நாசரேத்தை விட்டு யோசேப்பு புறப்பட்டான். யூதேயாவில் உள்ள பெத்லகேம் என்னும் நகரத்துக்குச் சென்றான். பெத்லகேம் தாவீதின் நகரம் ஆகும். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவனாகையால் யோசேப்பு அங்கு சென்றான். 5 மரியாள் அவனைத் திருமணம் செய்யும்பொருட்டு நிச்சயிக்கப்பட்டிருந்ததால் யோசேப்பும் மரியாளும் சேர்ந்து பதிவு செய்துகொண்டனர். (அந்தச் சமயத்தில் மரியாள் கருவுற்றிருந்தாள்.) 6 யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் இருந்தபோது மரியாளின் குழந்தைப் பேற்றுக்காலம் நெருங்கியது. 7 அவள் தன் முதல் மகனைப் பெற்றெடுத்தாள். விடுதிகளில் அறைகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே மரியாள் குழந்தையைத் துணிகளால் சுற்றி ஆடுமாடுகள் உணவு உண்ணும் ஓர் இடத்தில் வைத்தாள்.
மேய்ப்பர்களின் வருகை
8 அந்த இரவில் சில மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கள் ஆடுகளைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர். 9 தேவதூதன் அம்மேய்ப்பர்கள் முன்னே தோன்றினான். கர்த்தரின் மகிமை அவர்களைச் சுற்றிலும் ஒளிவீசியது. மேய்ப்பர்கள் மிகவும் பயந்தனர். 10 தூதன் அவர்களை நோக்கி, “பயப்படாதீர்கள். நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கூறப் போகிறேன். அது எல்லாரையும் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கும். 11 தாவீதின் நகரில் இன்று உங்கள் இரட்சகர் பிறந்துள்ளார். அவரே கிறிஸ்துவாகிய கர்த்தர். 12 ஒரு குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு ஆடுமாடுகள் உணவுண்ணும் இடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவே நீங்கள் அவரை அறிந்துகொள்ளுவதற்குரிய அடையாளம்” என்றான்.
13 அதே சமயத்தில் ஒரு பெரிய கூட்டமான தூதர்கள் பரலோகத்திலிருந்து வந்து முதல் தூதனோடு சேர்ந்துகொண்டார்கள். எல்லா தூதர்களும்,
14 “பரலோகத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
பூமியில் தேவனை பிரியப்படுத்தும் மக்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்”
என்று சொல்லி தேவனைப் போற்றினார்கள்.
15 தூதர்கள் மேய்ப்பர்களிடமிருந்து கிளம்பி மீண்டும் பரலோகத்திற்குச் சென்றார்கள். மேய்ப்பர்கள் ஒருவருக்கொருவர், “நாம் பெத்லகேமுக்குப் போய் கர்த்தரால் நமக்குத் தெரிவிக்கப்பட்ட இக்காரியத்தைக் காண்போம்” என்று கூறிக்கொண்டனர்.
16 எனவே மேய்ப்பர்கள் வேகமாகச் சென்று மரியாளையும் யோசேப்பையும் கண்டனர். குழந்தை ஆடுமாடுகள் உணவு உண்ணும் இடத்தில் படுத்திருந்தது. 17 மேய்ப்பர்கள் குழந்தையைப் பார்த்தனர். பின்பு தூதர்கள் குழந்தையைக்குறித்துக் கூறியவற்றை அவர்களுக்குச் சொன்னார்கள். 18 மேய்ப்பர்கள் கூறியவற்றைக் கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். 19 மரியாள் அவற்றைத் தன் இதயத்தில் வைத்துக்கொண்டாள். அவள் அவற்றைக்குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். 20 தாங்கள் கண்டவற்றிற்காகவும் கேட்டவற்றிற்காகவும் தேவனை வாழ்த்திக்கொண்டும், அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டும், மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகள் இருந்த இடத்திற்குச் சென்றனர். தூதர்கள் அவர்களிடம் கூறியபடியே அனைத்தும் நடந்திருக்கக் கண்டனர்.
21 குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனதும், விருத்தசேதனம் செய்யப்பட்டது. அதற்கு “இயேசு” என்று பெயரிட்டனர். மரியாளின் கரு உருவாகுமுன்னே தூதன் குழந்தைக்கு வைத்த பெயர் இதுவேயாகும்.
தேவாலயத்தில் இயேசு
22 குழந்தை பெற்ற பெண் சுத்தமாகும் [a] பொருட்டு மோசேயின் விதிகள் கூறியவற்றைச் செய்யும்படியான காலம் வந்தது. யோசேப்பும், மரியாளும், இயேசுவை தேவனிடம் அர்ப்பணிக்குமாறு எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். 23 தேவனுடைய பிரமாணத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “வீட்டின் முதற்பேறான மகன் பிறந்ததும் அவன், ‘தேவனுக்கு விசேஷமானவனாகக் கருதப்படுவான்.’”c 24 “இரண்டு காட்டு புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகக் கொடுக்கக்வேண்டும்”d என்றும் கூறுகிறது. எனவே இதைச் செய்வதற்காக யோசேப்பும், மரியாளும் எருசலேமுக்குச் சென்றனர்.
2008 by World Bible Translation Center