Old/New Testament
கைப்பற்றப்படாத நாடுகள்
13 யோசுவா வயது முதிர்ந்தவனாக இருக்கும்போது, கர்த்தர் அவனை நோக்கி, “யோசுவா உனக்கு வயது முதிர்ந்துவிட்டது, ஆனால் நீ கைப்பற்றவேண்டிய நாடுகள் இன்னும் பல உள்ளன. 2 கெசூரிம் தேசத்தையோ, பெலிஸ்தியரின் தேசத்தையோ நீ இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை. 3 எகிப்திலுள்ள சீகேபர் நதியின் தேசங்களையும், வடக்கில் எக்ரோனின் கரையிலுள்ள நாடுகளையும் நீ கைப்பற்றவில்லை. அது இன்னமும் கானானியருக்குரியதாக உள்ளது. காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் ஆகிய இடங்களின் ஐந்து பெலிஸ்திய தலைவர்களையும் நீ தோற்கடிக்க வேண்டியுள்ளது. 4 கானானியரின் நாட்டிற்குக் கிழக்கேயுள்ள ஏவியரையும் நீ வெல்லவேண்டும். 5 கிப்லியரின் தேசத்தையும் நீ இன்னும் வெற்றி கொள்ளவில்லை. எர்மோன் மலையின் கீழேயுள்ள பாகால்காத்திற்குக் கிழக்கில் லீபனோனின் பகுதியிலிருந்து லெபோ ஆமாத் வரைக்கும் நீ கைப்பற்ற வேண்டும்.
6 “சீதோனின் ஜனங்கள் லீபனோனிலிருந்து மிஸ்ரெபோத்மாயீம் வரையுள்ள மலைநாட்டில் வசித்து வருகின்றனர். இஸ்ரவேலருக்காக இவர்கள் அனைவரையும் நான் துரத்துவேன். இஸ்ரவேலின் ஜனங்களுக்காக தேசத்தைப் பிரிக்கும்போது இத்தேசத்தையும் ஞாபகப்படுத்திக்கொள். நான் உனக்குச் சொன்னபடியே இதைச் செய். 7 இப்போது, தேசத்தை ஒன்பது கோத்திரத்தினருக்கும், மனாசே என்னும் கோத்திரத்தின் சரிபாதியினருக்கும் பிரித்துக்கொடு” என்றார்.
தேசத்தைப் பங்கிடுதல்
8 ரூபன், காத், ஆகிய கோத்திரத்தினருக்கும், மனாசே என்னும் கோத்திரத்தின் பாதிப் பகுதியினரும் அவர்களுக்குரிய தேசத்தை ஏற்கெனவே பெற்றிருந்தார்கள். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே, யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தை அவர்களுக்குக் கொடுத்திருந்தான். 9 ஆரோவேர் நதிக்கருகிலுள்ள அர்னோன் நதியில் அத்தேசம் ஆரம்பித்து நதியின் நடுப்பகுதியிலுள்ள ஊர்வரைக்கும் அவர்களது தேசம் இருந்தது. அது மெதபாவிலிருந்து தீபோன்வரைக்குமுள்ள சமவெளியையும் கொண்டிருந்தது. 10 அத்தேசத்தில் எமோரியரின் அரசனாகிய சீகோன் ஆண்டிருந்த எல்லா ஊர்களும் அடங்கியிருந்தன. அந்த அரசன் எஸ்போன் நகரில் ஆண்டு வந்தான். எமோரியர் வாழ்ந்த பகுதி வரைக்கும் அத்தேசம் தொடர்ந்தது. 11 கீலேயாத் என்னும் ஊரும் அத்தேசத்தில் இருந்தது. கெசூர், மாகா ஆகியவற்றின் ஜனங்கள் வாழ்ந்த பகுதியும் அத்தேசத்தில் இருந்தது. எர்மோன் மலைப்பகுதி முழுவதும் சலேகாவரைக்குமான பாசானின் பகுதியும் அந்த நிலப் பகுதியில் அடங்கி இருந்தன. 12 ஓகின் அரசுக்குட்பட்ட நாடு முழுவதும் அதில் அடங்கியிருந்தது. பாசானில் ஓக் என்ற அரசன் ஆண்டு வந்தான். முன்பு அஸ்தரோத்திலும், எத்ரேயியிலும் அவன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான். ஓக் ரெபயத் ஜனங்கள் இனத்தவன், முன்பே மோசே இவர்களை வென்று, அவர்கள் நாட்டைக் கைப்பற்றியிருந்தான். 13 கெசூர், மாகா ஆகியவற்றின் ஜனங்களை, இஸ்ரவேல் ஜனங்கள் துரத்தவில்லை, இன்றும் இஸ்ரவேல் ஜனங்களோடுகூட அவர்களும் வாழ்கின்றனர்.
14 லேவி கோத்திரத்திற்கு எந்த நிலப் பகுதியும் கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு, தகன பலியாகக் கொடுக்கப்பட்ட மிருகங்கள் அனைத்தும் லேவி கோத்திரத்தினரைச் சார்ந்தவர்களுக்கு உரியனவாயின. கர்த்தர் அவர்களுக்கு வாக்களித்தது அதுவே.
15 ரூபனின் கோத்திரத்திலுள்ள ஒவ்வொரு கோத்திரத்திற்கும் மோசே வழங்கியிருந்த சிறிய நிலப்பகுதியை மட்டுமே அவர்கள் பெற்றிருந்தனர்: 16 அது அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேரிலிருந்து மெதெபா என்ற ஊர் வரைக்கும் உள்ள பகுதியாகும். அந்நதியின் மத்தியிலுள்ள ஊரையும், சமவெளிப் பகுதியையும் அது உள்ளடக்கியிருந்தது. 17 எஸ்போன் வரைக்கும் அத்தேசம் இருந்தது. சமவெளியின் எல்லா ஊர்களையும் அது கொண்டிருந்தது. தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால், மெயோன் ஆகியப் பகுதிகளும், 18 யாகாசா, கொதெமோத், மேபாகாத், 19 கீரியாத்தாயீம், சிப்மா, ஆகியவையும், பள்ளத்தாக்கைச் சார்ந்த மலைப் பகுதிகளில் உள்ள செரேத்சகார், 20 பெத்பேயோர், பிஸ்காவின் மலைகள், பெத்யெசிமோத் ஆகிய பகுதிகளும் அந்த ஊர்களில் அடங்கியிருந்தன. 21 அத்தேசம் சமவெளியிலுள்ள எல்லா ஊர்களையும், எமோரியரின் அரசனாகிய சீகோன் அரசாண்ட எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. எஸ்போன் என்னும் ஊரில் அந்த அரசன் அரசாட்சி செய்தான். ஆனால் மோசே அவனையும், மீதியானியரின் தலைவர்களையும் தோற்கடித்தான். ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா ஆகியோர் அத்தலைவர்கள் ஆவார்கள். (இத்தலைவர்கள் எல்லோரும் சீகோனுடன் ஒன்றுசேர்ந்து மோசேயை எதிர்த்துப் போரிட்டனர்.) இத்தலைவர்கள் எல்லோரும் அந்நாட்டில் வசித்தனர். 22 இஸ்ரவேல் ஜனங்கள் பேயோரின் மகனாகிய பாலாமைத் தோற்கடித்தனர். (எதிர்காலம் பற்றி தனது மந்திர சக்தியால் சொல்வதற்குப் பாலாம் முயன்று கொண்டிருந்தான்.) போரின்போது இஸ்ரவேல் ஜனங்கள் பலரைக் கொன்றனர். 23 யோர்தான் நதிக்கரை ரூபனுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லையாக அமைந்தது. மேலே கூறப்பட்ட ஊர்களும் அவற்றின் வயல்களும் ரூபனுக்குச் சொந்தமான தேசத்தில் இருந்தன,
24 காத்தின் கோத்திரத்துக்கு அவரவர் வம்சங்களின்படி மோசே இத்தேசத்தைக் கொடுத்திருந்தான்:
25 யாசேரின் தேசமும் கீலேயாத்தின் எல்லா ஊர்களும், ராபாவின் அருகேயுள்ள ஆரோவேர் வரைக்குமான அம்மோனியரின் தேசத்தில் பாதியையும் கொடுத்தான். 26 அத்தேசம் எஸ்போனிலிருந்து ராமாத் மிஸ்பா பெத்தோனீம் வரைக்கும் உள்ள பகுதியைக் கொண்டிருந்தது. அத்தேசம் மக்னாயீமிலிருந்து தெபீர் வரைக்குமுள்ள இடத்தைக் கொண்டது. 27 பெத்ஹராம் பள்ளத்தாக்கு, பெத்நிம்ரா, சுக்கோத், சாப்போன் ஆகியவையும் அத்தேசத்தில் இருந்தன. எஸ்போனின் அரசனாகிய சீகோன் ஆண்ட மீதி நாடும் இந்த நிலத்தில் அடங்கியிருந்தது. யோர்தான் நதியானது அந்த நிலத்தில் கிழக்குப் பகுதியாக அமைந்தது. அந்த நிலம் கலிலேயா ஏரியின் கடைசி வரைக்கும் தொடர்ந்தது. 28 மோசே காத் கோத்திரத்தாருக்குக் கொடுத்த தேசத்தில் இவையெல்லாம் இருந்தன. மேலே தரப்பட்ட எல்லா ஊர்களும் அத்தேசத்தைச் சார்ந்தன. இவற்றை காத் கோத்திரத்தின் வம்சத்தினருக்கு மோசே பிரித்துக் கொடுத்தான்.
29 மனாசேயின் கோத்திரத்துக்கு மோசே கொடுத்த நிலம் பின்வருவதாகும்: மனாசே கோத்திரத்தின் பாதிப் பகுதியினர் இதனைப் பெற்றனர்.
30 மக்னாயீமில் தேசம் ஆரம்பித்தது. பாசான் முழுவதும் பாசானின் அரசனாகிய ஓகினால் ஆளப்பட்ட நாடும், பாசானில் யாவீரின் எல்லா ஊர்களும் அத்தேசத்தில் இருந்தன. (மொத்தம் 60 நகரங்கள் இருந்தன.) 31 கீலேயாத்தின் பாதிபாகம், அஸ்தரோத், எத்ரேயி ஆகிய நகரங்களும் அத்தேசத்தில் இருந்தன. (ஓக் அரசன் வசித்த நகரங்கள் கீலேயாத், அஸ்தரோத், எத்ரேயி ஆகியவை.) மனாசேயின் மகனாகிய மாகீரின் குடும்பத்திற்கு இத்தேசங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டன. மனாசேயின் மகன்களில் பாதிக்குடும்பத்தினர் அவற்றைப் பெற்றனர்.
32 மோசே இத்தேசத்தை இந்தக் கோத்திரத்தினருக்கு கொடுத்தான். மோவாப் சம வெளியில் ஜனங்கள் பாளையமிட்டிருந்தபோது மோசே இதைச் செய்தான். எரிகோவிற்குக் கிழக்கில் யோர்தான் நதிக்குக் குறுக்காக இது இருந்தது.
33 லேவியின் கோத்திரத்தினருக்கு மோசே எந்த நிலத்தையும் கொடுக்கவில்லை. லேவி கோத்திரத்தினருக்கு, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே பங்காக அமைவதாக வாக்களித்திருந்தார்.
14 ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரங்களின் தலைவர்களும் ஜனங்களுக்கு எந்தெந்த தேசத்தைக் கொடுப்பதென்று முடிவு செய்தனர். 2 ஜனங்கள் அவர்களுக்குரிய தேசத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு விரும்பிய வகையை அவர் முன்னரே மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார். அவரவருக்கு எந்தெந்த நிலப்பகுதி வேண்டுமென்பதை ஒன்பதரை கோத்திரத்தாரும் சீட்டு போட்டுத் தேர்ந்தெடுத்தனர். 3 இரண்டரை கோத்திரத்தாருக்கு மோசே ஏற்கெனவே யோர்தானுக்குக் கீழக்கேயுள்ள நிலத்தைப் பிரித்துக் கொடுத்திருந்தான். ஆனால் லேவியின் கோத்திரத்தார் எந்த நிலத்தையும் பெறவில்லை. 4 பன்னிரண்டு கோத்திரத்தினருக்கும் அவர்களுக்குரிய நிலம் கொடுக்கப்பட்டது. யோசேப்பின் ஜனங்கள் மனாசே, எப்பிராயீம் என்று இரண்டு கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு கோத்திரமும் நிலத்தைப் பெற்றனர். லேவி கோத்திரத்துக்கு எந்த நிலமும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் வசிப்பதற்கு சில ஊர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு கோத்திரத்தின் நடுவிலும் இந்த ஊர்கள் இருந்தன. அவர்களுடைய மிருகங்களுக்காக வயல்வெளி கொடுக்கப்பட்டிருந்தது. 5 இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் நிலத்தை எவ்வாறு பிரித்துக் கொடுப்பதென்று கர்த்தர் மோசேக்குச் சொல்லியிருந்தார். கர்த்தர் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் நிலத்தைப் பங்கிட்டனர்.
காலேப் அவனுக்குரிய நிலத்தைப் பெறுதல்
6 ஒருநாள் கில்காலில் யோசுவாவிடம் யூதா கோத்திரத்திலிருந்து சிலர் வந்தனர். கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேபும், அவர்களில் ஒருவன். காலேப் யோசுவாவிடம், “காதேஸ் பர்னேயாவில் கர்த்தர் அவரது ஊழியனாகிய, மோசேயிடம், உம்மையும் என்னையும் குறித்துச் சொன்னவற்றை நினைவுகூர்ந்து பாரும். 7 நாம் போகப்போகிற தேசத்தைப் பார்த்து வரும்படியாக கர்த்தருடைய ஊழியனாகிய மோசே என்னை அனுப்பினான். எனக்கு அப்போது நாற்பது வயது. அத்தேசத்தைப் பற்றிய எனது எண்ணங்களை நான் திரும்பி வந்தபோது மோசேக்குக் கூறினேன். 8 என்னோடு வந்த மற்றவர்கள் தாம் பார்த்து அஞ்சியவற்றைக் குறித்துச் சொன்னார்கள். ஆனால் நாம் அத்தேசத்தைப் பெறுவதற்கு கர்த்தர் நிச்சயம் உதவி செய்வார் என நான் உண்மையாகவே நம்பினேன். 9 எனவே அந்நாளில், ‘நீ செல்லும் தேசம் உனக்குரியதாகும். உனது பிள்ளைகளுக்கு எப்போதும் அத்தேசம் சொந்தமாகும். எனது தேவனாகிய கர்த்தரை, நீ உண்மையாகவே நம்பியதால் உனக்கு அத்தேசத்தைக் கொடுப்பேன்’ என்று மோசே எனக்கு வாக்குறுதி அளித்தான்.
10 “கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன்பு கர்த்தர் எனக்குச் கூறியபடியே இன்றும் என்னை உயிரோடு வைத்திருக்கிறார். நாம் பாலைவனங்களில் இதுவரைக்கும் அலைந்தோம். இப்போது எனக்கு, 85 வயது. 11 மோசே என்னை அனுப்பியபோது இருந்ததுபோலவே இன்றும் பெலமுள்ளவனாக இருக்கிறேன். அன்று போலவே இன்றும் என்னால் போரிட முடியும். 12 முன்பு, கர்த்தர் எனக்குக் கொடுப்பதாக வாக்களித்த மலைப்பிரதேசத்தை இப்போது எனக்குக் கொடும். வலிமை பொருந்திய ஏனாக்கியர் அந்நாளில் அங்கு வாழ்ந்தனர் என்பதையும், அவர்களுடைய நகரங்கள் பெரியதாகவும் பாதுகாப்புடையதாகவும் இருக்கின்றன என்பதையும் நீர் கேள்விப்பட்டிருக்கிறீர். இப்போதும், கர்த்தர் என்னோடிருக்கிறபடியால், அவர்களை வெளியேற்றி விட்டு கர்த்தர் கூறியபடி அந்த நிலப்பகுதியை நான் உரிமையாக்கிக்கொள்வேன்” என்றான்.
13 எப்புன்னேயின் மகனாகிய காலேபை யோசுவா ஆசீர்வதித்தான். அவனுக்குச் சொந்தமாக எபிரோன் நகரை யோசுவா கொடுத்தான். 14 கேனாசியனான, எப்புன்னேயின் மகனாகிய காலேபின் குடும்பத்தாருக்கு இன்றும் அந்நகரம் உரியதாக இருக்கிறது. ஏனென்றால் அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம் நம்பிக்கை கொண்டு அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தான். 15 முன்பு அந்நகரம் கீரியாத்அர்பா எனப்பட்டது. அர்பா என்னும் ஏனாக்கியரின் புகழ்பெற்ற மனிதனின் பெயரை அந்நகரம் முன்பு பெற்றிருந்தது. இதற்குப் பின், அந்த நிலப்பகுதியில் அமைதி நிலவியது.
யூதாவிற்குரிய நிலம்
15 யூதாவுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் அந்தக் கோத்திரத்திலிருந்த குடும்பங்களுக்கிடையில் பங்கிடப்பட்டது. அந்த நிலம் ஏதோம் எல்லையிலிருந்து தெற்காக தேமான் விளிம்பில் சீன் பாலைவனம் வரைக்கும் சென்றது. 2 யூதாவின் தெற்கு எல்லை சவக்கடலின் தெற்குக்கோடியில் துவங்கியது. 3 அந்த எல்லை தேள்கணவாயின் தெற்காக சீன் மலைப்பகுதி வரை தொடர்ந்தது. காதேஸ் பர்னேயாவிற்குத் தெற்காகத் தொடர்ந்தது. எஸ்ரோனிலிருந்து ஆதாரையும் அந்த எல்லை கடந்து சென்றது. ஆதாரிலிருந்து அந்த எல்லை கர்க்காவிற்கு தொடர்ந்தது. 4 அந்த எல்லையானது அஸ்மோன், எகிப்தின் ஆறு, பின் மத்தியதரைக் கடல் எனத் தொடர்ந்தது. இதுவே அவர்களின் தெற்கு எல்லையாயிருந்தது.
5 அத்தேசத்தின் கிழக்கு எல்லை சவக்கடலின் தென்கரையிலிருந்து யோர்தான் நதி கடலோடு சேரும் பகுதிவரைக்கும் இருந்தது.
வடக்கு எல்லையானது யோர்தான் நதி சவக்கடலோடு கலந்த பகுதியில் அமைந்தது. 6 பின் அது பெத்எக்லா வரைக்கும் சென்று, பெத் அரபாவின் வடக்கே தொடர்ந்தது. போகனின் கல்வரைக்கும் அந்த எல்லை நீண்டது. (ரூபனின் மகன் போகன்) 7 வடக்கு எல்லை ஆகோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீருக்குத் தொடர்ந்தது. பின் வடக்கே திரும்பி கில்காலுக்குச் சென்றது. அதும்மீமின் மலைவழியாகச் செல்லும் பாதையின் குறுக்கே அந்த எல்லை இருந்தது. அது நதியின் தெற்குப் பகுதியாகும். என்சேமேசின் தண்ணீரின் வழியாகத் தொடர்ந்தது. இந்த எல்லை என்ரொகேலில் முடிந்தது. 8 எபூசியர் நகரின் தெற்குப் பகுதிக்குப் பக்கத்திலுள்ள இன்னோம் பள்ளத்தாக்கு வழியாக அவ்வெல்லை சென்றது. (அந்த எபூசிய நகரமே எருசலேம் எனப்பட்டது.) அவ்விடத்தில் எல்லை இன்னோம் பள்ளத்தாக்கின் மேற்கேயுள்ள மலையுச்சிவரைக்கும் சென்றது. ரெப்பாயீம் பள்ளத் தாக்கின் வடக்கு மூலை வரைக்கும் அது இருந்தது. 9 அந்த இடத்திலிருந்த நெப்தோவாவின் நீரூற்று வரைக்கும் எல்லை தொடர்ந்து எப்பெரோன் மலைக்கருகேயுள்ள நகரங்களுக்குச் சென்றது. அங்கு எல்லை திரும்பி, பாலாவரைக்கும் போனது. (பாலா, கீரியாத் யெயாரீம் என்றும் அழைக்கப்படுகிறது.) 10 பாலாவில் எல்லை மேற்கே திரும்பி சேயீரின் மலை நாட்டிற்குச் சென்றது. யெயாரீம் மலையின் (கெசலோனின்) வடக்குப் பகுதிக்கு அது தொடர்ந்து பெத்ஷிமேசுக்குத் தொடர்ந்தது. அங்கிருந்து எல்லை திம்னாவைக் கடந்தது. 11 பிறகு எக்ரோனுக்கு வடக்கேயுள்ள மலையை எல்லை எட்டியது. அங்கிருந்து சிக்ரோனுக்குத் திரும்பி, பாலா மலையைத் தாண்டியது. பிறகு யாப்னியேலுக்குச் சென்று, மத்திய தரைக்கடலில் முடிவடைந்தது. 12 யூதாவுக்குரிய தேசத்தின் மேற்கெல்லையாக மத்தியதரைக் கடல் இருந்தது. இந்த நான்கு எல்லைகளுக்கும் மத்தியில் யூதாவின் தேசம் இருந்தது. யூதாவின் குடும்பங்கள் அப்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள்.
13 யூதாவின் தேசத்தின் ஒரு பகுதியை எப்புன்னேயின் மகன் காலேபுக்குக் கொடுக்கும்படியாக, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். எனவே தேவன் கட்டளையிட்டபடி அத்தேசத்தைக் காலேபுக்கு யோசுவா கொடுத்தான். கீரியாத் அர்பா (எபிரோன்) என்னும் நகரத்தை யோசுவா அவனுக்குக் கொடுத்தான். (அர்பா ஏனாக்கின் தந்தை.) 14 எபிரோனில் வாழ்ந்த சேசாய், அகீமான், தல்மாய் என்ற மூன்று ஏனாக்கிய குடும்பங்களையும் காலேப் வெளியேறும்படி செய்தான். அவை ஏனாக்கின் குடும்பத்தைச் சார்ந்தவை. 15 தெபீரில் வாழ்கின்ற ஜனங்களோடு காலேப் போர் செய்தான். (முன்பு, தெபீரைக் கீரியாத் செப்பேர் என்றும் அழைத்தார்கள்.) 16 காலேப், “நான் கீரியாத் செப்பேரைத் தாக்க வேண்டும். நகரத்தைத் தாக்கி முறியடிக்கிறவனுக்கே என் மகளாகிய அக்சாளை மணம் செய்து வைப்பேன்” என்றான்.
17 காலேபின் சகோதரனும், கேனாசின் மகனுமான ஒத்னியேல் நகரை வென்றான். எனவே, ஒத்னியேலுக்கு மனைவியாக தனது மகள் அக்சாளைக் காலேப் கொடுத்தான். 18 ஒத்னியேலோடு வாழ்வதற்காக அக்சாள் சென்றாள். இன்னும் கொஞ்சம் நிலத்தைத் தந்தையிடம் கேட்டுப்பெறும்படி ஒத்னியேல் அக்சாளிடம் சொன்னான். அக்சாள் தந்தையிடம் பேசுவதற்காகக் கழுதையிலிருந்து இறங்கியதும், காலேப் அவளை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.
19 அக்சாள், “என்னை ஆசீர்வதியுங்கள். நெகேவில் காய்ந்த பாலைவன நிலத்தை எனக்குக் கொடுத்தீர்கள். தண்ணீருள்ள நிலத்தில் கொஞ்சம் எனக்குச் சேர்த்துக் கொடுங்கள்” என்று கூறினாள். எனவே அவள் கேட்டதைக் காலேப் கொடுத்தான். அந்நிலத்தில் மேற்ப்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் இருந்த தண்ணீர் வளமுள்ள நிலங்களைக் கொடுத்தான். 20 தேவன் அவர்களுக்கு வாக்களித்த தேசத்தை யூதா கோத்திரத்தினர் பெற்றனர். ஒவ்வொரு யூதா கோத்திரத்தினரும் தங்களுக்குரிய பங்கு நிலத்தைப் பெற்றனர்.
21 நெகேவின் தெற்கிலுள்ள ஊர்களையெல்லாம் யூதா கோத்திரத்தினர் பெற்றனர். ஏதோமின் எல்லையருகே இந்த ஊர்கள் இருந்தன. அவ்வூர்களின் பட்டியல் இங்கே தரப்படுகிறது:
கப்செயேல், ஏதேர், யாகூர், 22 கீனா, தீமோனா, அதாதா, 23 கேதேஸ், ஆத்சோர், இத்னான், 24 சீப், தேலெம், பெயாலோத், 25 ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன், (ஆத்சோர்) 26 ஆமாம், சேமா, மொலாதா, 27 ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத், 28 ஆத்சார்சுவால், பெயெர் செபா, பிஸ்யோத்யா, 29 பாலா, ஈயிம், ஆத்சேம், 30 எல்தோ லாத், கெசீல், ஒர்மா, 31 சிக்லாக், தமன்னா, சன்சன்னா, 32 லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் ஆகிய மெர்த்தம் 29 ஊர்களும் அவற்றின் வயல்களும் இருந்தன.
33 மேற்கு மலையடிவாரத்தில் யூதா கோத்திரத்தினர் தங்கள் ஊர்களைப் பெற்றனர். அந்த ஊர்களின் பட்டியல் வருமாறு:
எஸ்தாவோல், சோரியா, அஷ்னா, 34 சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம், 35 யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா, 36 சாராயீம், அதித்தாயீம், கெதேரா, (கேதெரொத்தாயீம்) ஆகியவை ஆகும். மொத்தத்தில் 14 ஊர்களும் அவற்றின் வயல்களும் அங்கு இருந்தன.
37 யூதா கோத்திரத்தினருக்கு
சேனான், அதாஷா, மிக்கதால்காத், 38 திலியான், மிஸ்பே யோக்தெயேல், 39 லாகீஸ், போஸ்காத், எக்லோன், 40 காபோன், லகமாம், கித்லீஷ். 41 கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா, ஆகியவை உட்பட மொத்தம் 16 ஊர்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் கொடுக்கப்பட்டன.
42 யூதாவின் ஜனங்கள் இந்த ஊர்களையும் பெற்றார்கள்.
லிப்னா, ஏத்தோர், ஆஷான், 43 இப்தா, அஸ்னா, நெத்சீப், 44 கேகிலா, அக்சீப், மரேஷா ஆகியவை ஆகும். மொத்தத்தில் ஒன்பது ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள ஊர்களும் இருந்தன. 45 எக்ரோனும் அதைச் சார்ந்த ஊர்களும் வயல்களும் யூதாவின் ஜனங்களுக்குக் கிடைத்தன. 46 அவர்கள் எக்ரோனுக்கு மேற்கிலுள்ள பகுதியையும் அஸ்தோத்திற்கு அருகேயுள்ள ஊர்களையும் வயல்களையும் பெற்றார்கள். 47 அஸ்தோத்தைச் சுற்றிலுமுள்ள பகுதியும் அங்குள்ள ஊர்களும் யூதாவின் நிலத்தின் பகுதிகளாயின. காசாவைச் சுற்றிலுமுள்ள பகுதிகளையும் வயல்களையும் ஊர்களையும் கூட யூதாவின் ஜனங்கள் பெற்றனர். அவர்களது நிலம் எகிப்தின் நதி மற்றும் மத்தியதரைக் கடலின் கடற்கரை வரைக்கும் தொடர்ந்தது.
48 யூதாவின் ஜனங்களுக்கு மலைநாட்டின் ஊர்களும் கொடுக்கப்பட்டன. இங்கு அவ்வூர்களின் பட்டியல் தரப்படுகிறது:
சாமீர், யாத்தீர், சோக்கோ, 49 தன்னா, கீரியாத், சன்னா (தெபீர்), 50 ஆனாப், எஸ்தெமொ, ஆனீம், 51 கோசேன், ஓலோன், கிலொ. இவை பதினொரு ஊர்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.
52 இந்த ஊர்களும் கூட யூதாவின் ஜனங்களுக்குத் தரப்பட்டன:
அராப், தூமா, எஷியான், 53 யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா, 54 உம்தா, கீரீயாத்அர்பா, (எபிரோன்), சீயோர். மொத்தம் ஒன்பது ஊர்களும், அவற்றைச் சுற்றிலுமிருந்த வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.
55 இன்னும் சில ஊர்களும் யூதா ஜனங்களுக்கு அளிக்கப்பட்டன:
மாகோன், கர்மேல், சீப், யுத்தா, 56 யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா, 57 காயின், கிபியா, திம்னா, ஆகிய பத்து ஊர்களும் அவற்றின் வயல்களும் உள்ளடங்கிய பகுதியாகும்.
58 யூதாவின் ஜனங்களுக்குக் கீழ்வரும் ஊர்களும் வழங்கப்பட்டன:
அல்கூல், பெத்சூர், கெதோர், 59 மகாராத், பெதானோத், எல்தெகோன், ஆகிய ஆறு ஊர்களும், அவற்றைச் சுற்றிலும் காணப்பட்ட வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும். 60 ரபா, கீரியாத்பாகால் (கீரியாத்யெயாரீம்) ஆகிய இரண்டு ஊர்களும் யூதாவின் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டன.
61 பாலைவனத்தின் பின்வரும் ஊர்களும் யூதாவின் ஜனங்களுக்கு அளிக்கப்பட்டன: அவ்வூர்களின் பட்டியல் இங்குத் தரப்படுகிறது:
பெத்அரபா, மித்தீன், செக்காக்கா, 62 நிப்சான், உப்பு நகரம், என்கேதி ஆகிய ஆறு ஊர்களும், அவற்றைச் சுற்றியிருந்த வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.
63 எருசலேமில் வாழ்ந்த எபூசியரை யூதாவின் படையால் துரத்த முடியவில்லை. எனவே இன்றும் எருசலேமில் யூதர்களோடே எபூசியர் வாழ்கின்றனர்.
யோவானின் பிறப்பு
57 குழந்தைப் பேற்றின் காலம் நெருங்கியபோது எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். 58 அவளது அக்கம் பக்கத்தாரும் உறவினரும் கர்த்தர் அவளுக்குக் கருணைக் காட்டியதை கேள்விப்பட்டனர். அதைக்குறித்து மகிழ்ச்சியடைந்தனர்.
59 குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனபோது அக்குழந்தையை விருத்தசேதனம் செய்யும்பொருட்டு கொண்டு வந்தனர். அவனது தந்தை பெயரால் அவனை சகரியா என்று பெயரிட்டு அழைக்க விரும்பினர். 60 ஆனால் அக்குழந்தையின் தாய், “இல்லை, அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்” என்றாள்.
61 மக்கள் எலிசபெத்தை நோக்கி, “உன் குடும்பத்தில் யாருக்கும் இப்பெயர் இல்லையே!” என்றனர். 62 பின்னர் அவர்கள் அக்குழந்தையின் தந்தையிடம் சென்று சைகையால், “குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறாய்?” என்று கேட்டனர்.
63 சகரியா எழுதுவதற்கு ஏதாவது ஒன்று கொண்டு வருமாறு கேட்டான். சகரியா, “அவன் பெயர் யோவான்” என்று எழுதினான். எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தனர். 64 அப்போது சகரியாவால் மீண்டும் பேசமுடிந்தது. அவன் தேவனை வாழ்த்த ஆரம்பித்தான். 65 அவனது அக்கம் பக்கத்தார் அனைவருக்கும் பயமுண்டாயிற்று. யூதேயாவின் மலைநாட்டு மக்கள் இக்காரியங்களைக் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டனர். 66 இச்செய்திகளைக் கேட்ட எல்லா மக்களும் அவற்றைக் குறித்து அதிசயப்பட்டார்கள். அவர்கள், “இக்குழந்தை எப்படிப்பட்டதாயிருக்குமோ?” என்று எண்ணினர். கர்த்தர் இந்தக் குழந்தையோடு இருந்தபடியால் அவர்கள் இதைக் கூறினர்.
சகரியா தேவனைப் போற்றுதல்
67 அப்போது யோவானின் தந்தையாகிய சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். பின்னர் நடக்க இருப்பவற்றைக் குறித்து அவன் மக்களுக்குக் கூறினான்.
68 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்றுவோம்.
தேவன் அவரது மக்களுக்கு உதவ வந்தார். அவர்களுக்கு விடுதலை தந்தார்.
69 தேவன் நமக்கு வல்லமை பொருந்திய இரட்சகரைத் தந்தார்.
அவர் தாவீது என்னும் தேவனுடைய பணிவிடைக்காரனின் குடும்பத்தைச் சார்ந்தவர்.
70 தேவன் இதைச் செய்வதாகக் கூறினார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவரது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாக இதை அவர் கூறினார்.
71 நம் எதிரிகளிடம் இருந்து தேவன் நம்மைக் காப்பாற்றுவார்.
நம்மை வெறுக்கும் அனைவரின் கைகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவார்.
72 நமது தந்தையருக்கு அருள்புரிவதாக தேவன் சொன்னார்.
தனது பரிசுத்த வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.
73 நமது தந்தையாகிய ஆபிரகாமுக்கு எதிரிகளின் சக்தியிலிருந்து.
74 நம்மை விடுவிப்பதாக தேவன் வாக்குறுதி தந்தார்.
அதனால் பயமின்றி நாம் அவருக்குச் சேவை செய்வோம்.
75 நாம் நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய முன்னிலையில் நீதியும் பரிசுத்தமும் வாய்ந்தோராக வாழ்வோம்.
76 இப்போதும் சிறுவனே, நீ உன்னதமான தேவனின் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்.
கர்த்தருக்கு முன்பாக முன்னோடியாக நீ நடப்பாய். கர்த்தரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வாய்.
77 அவரது மக்கள் இரட்சிக்கப்படுவர் என்பதை அவர்களுக்கு உணர்த்துவாய். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் இரட்சிக்கப்படுவர்.
78 நம் தேவனின் அன்பான இரக்கத்தால் பரலோகத்திலிருந்து
புதுநாள் ஒன்று நம்மீது பிரகாசிக்கும்.
79 இருளில் மரணப் பயத்திடையே வாழும் மக்களுக்கு தேவன் உதவி செய்வார்.
சமாதானத்தை நோக்கி அவர் நம்மை வழிநடத்துவார்.”
என்று சகரியா உரைத்தான்.
80 அச்சிறுவன் வளர்ந்துவருகையில் ஆவியில் வல்லமை பொருந்தியவனாக மாறினான். இஸ்ரவேல் மக்களுக்குப் போதிக்கும்பொருட்டு வளரும்மட்டும் அவன் மக்களிடமிருந்து தொலைவான இடத்தில் வாழ்ந்தான்.
2008 by World Bible Translation Center