Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 10-12

சூரியன் அசையாது நின்ற நாள்

10 அக்காலத்தில் அதோனிசேதேக் எருசலேமின் அரசனாக இருந்தான். யோசுவா ஆயீ நகரைத் தோற்கடித்து முற்றிலும் அழித்துவிட்டான் என்ற செய்தியை அந்த அரசன் அறிந்தான். எரிகோவிற்கும் அதன் அரசனுக்கும் யோசுவா அவ்வாறே செய்தான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவன் அறிந்திருந்தான். அந்த ஜனங்கள் எருசலேமுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்தனர். எனவே அதோனிசேதேக்கும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்தனர். கிபியோன் ஆயீயைப் போன்ற சிறிய நகரமன்று. கிபியோன் ஒரு பெரிய பலமான நாடு. அங்கிருந்த ஆண்கள் அனைவரும் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள். எருசலேமின் அரசனாகிய, அதோனிசேதேக், எபிரோனின் அரசனாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் அரசனாகிய பீராமுடனும், லாகீசின் அரசனாகிய யப்பியாவுடனும், எக்லோனின் அரசனாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் அரசன் இவர்களிடம், “என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளனர்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

இந்த ஐந்து எமோரிய அரசர்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.) அப்படைகள் கிபியோனை நோக்கிச் சென்று நகரைச் சூழ்ந்து கொண்டு, போர் செய்ய ஆரம்பித்தன.

கிபியோன் நகர ஜனங்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கி இருந்த யோசுவாவிற்குச் செய்தியனுப்பினார்கள்: அதில், “நாங்கள் உமது பணியாட்கள்! எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வந்து எங்களுக்கு உதவுங்கள்! விரைந்து வாருங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்! மலை நாட்டின் எமோரிய அரசர்கள் எல்லோரும் எங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர்கள் படைகளைக் கொண்டுவந்துள்ளனர்” என்று இருந்தது.

எனவே யோசுவா தனது படையோடு கில்காலிலிருந்து புறப்பட்டான். யோசுவாவின் சிறந்த படை வீரர்கள் அவனோடிருந்தனர். கர்த்தர் யோசுவாவிடம், “அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது” என்றார்.

யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

10 இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர். 11 அப்போது இஸ்ரவேல் படையினர் பகைவர்களை பெத்தொரோனிலிருந்து அசெக்கா வரைக்குமுள்ள வழியில் துரத்தினார்கள். அப்போது, கர்த்தர் வானத்திலிருந்து பெருங்கற்கள் விழும்படியாகச் செய்தார். அப்பெருங்கற்களால் பகைவர்கள் பலர் மரித்தனர். இஸ்ரவேல் வீரர்களின் வாளால் அழிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் கற்களால் கொல்லப்பட்டோரே அதிகம்.

12 கர்த்தர் அன்று இஸ்ரவேலர் எமோரியரை வெற்றிக்கொள்ளச் செய்தார். அந்த நாளில் யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக நின்று, கர்த்தரை நோக்கி:

“சூரியன், கிபியோனின் மேல் நிற்கட்டும்.
    ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல், சந்திரன் அசையாது நிற்கட்டும்” என்றான்.

13 எனவே சூரியனும், சந்திரனும் இஸ்ரவேலர் தங்கள் பகைவர்களை முறியடிக்கும் வரைக்கும் அசையாமல் நின்றன. இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. வானத்தின் நடுவில் சூரியன் அசையாமல் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது அசையவேயில்லை. 14 அவ்வாறு முன்னர் நிகழ்ந்ததேயில்லை! அதன் பின் நிகழவுமில்லை. அந்நாளில் கர்த்தர் ஒரு மனிதனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார். உண்மையில் கர்த்தரே இஸ்ரவேலருக்காகப் போர் செய்தார்!

15 அதன்பிறகு, யோசுவாவும் அவனது படையினரும் கில்காலில் முகாமிட்டிருந்த இடத்துக்கு திரும்பிப் போனார்கள். 16 ஆனால் போரின்போது, ஐந்து அரசர்களும் ஓடிப் போய் மக்கெதாவிற்கு அருகிலுள்ள ஒரு குகையில் ஒளித்திருந்தனர். 17 அவர்கள் குகைகளில் ஒளிந்திருந்ததைச் சிலர் பார்த்து யோசுவாவிற்கு தெரிவித்தார்கள். 18 யோசுவா, “குகையின் நுழை வாசலைப் பெரிய கற்களைப் புரட்டி மூடிவிடுங்கள். அக்குகையைக் காவல் செய்வதற்குச் சிலரை நியமியுங்கள். 19 ஆனால் நீங்கள் அங்கு நின்றுகொண்டிருக்க வேண்டாம். பின் தொடர்ந்து உங்கள் பகைவர்களைத் தாக்குங்கள். அவர்கள் தங்கள் நகரத்திற்குச் செல்லவிடாதீர்கள். அவர்கள் மீது வெற்றியை உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்துள்ளார்” என்றான்.

20 யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் பகைவர்களை வென்றனர். ஆனால் சில பகைவர்கள் அவர்கள் நகரங்களுக்குப் போய் ஒளிந்துகொண்டனர். அவர்கள் கொல்லப்படவில்லை. 21 போர் முடிந்தபின், மக்கெதாவிற்கு யோசுவாவின் ஆட்கள் திரும்பி வந்தனர். இஸ்ரவேல் ஜனங்களுக்கெதிராக எதையும் கூறும் துணிவு அந்நாட்டு ஜனங்களுக்கு இருக்கவில்லை.

22 யோசுவா, “குகையின் வாசலை மூடியுள்ள கற்களை அகற்றி, ஐந்து அரசர்களையும் என்முன் கொண்டு வாருங்கள்” என்றான். 23 யோசுவாவின் ஆட்கள் அப்படியே செய்தனர். அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகியவற்றின் அரசர்களாவார்கள். 24 அவர்கள் அந்த ஐந்து அரசர்களையும் யோசுவாவிடம் அழைத்து வந்தனர். அவ்விடத்திற்கு வருமாறு யோசுவா தன் எல்லா ஆட்களையும் அழைத்தான். யோசுவா படையதிகாரிகளை நோக்கி, “இங்கே வாருங்கள்! உங்கள் பாதங்களை இந்த அரசர்களின் கழுத்தின் மீது வையுங்கள்” என்றான். அவ்வாறே யோசுவாவின் படை அதிகாரிகள் நெருங்கி வந்து அந்த அரசர்களின் கழுத்துக்களின் மீது தங்கள் பாதங்களை வைத்தனர்.

25 அப்போது யோசுவா தன் ஆட்களை நோக்கி, “வலிமையும் துணிவும் உடையவர்களாயிருங்கள், அஞ்சாதீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளப் போகிற பகைவர்கள் எல்லோருக்கும் கர்த்தர் செய்யவிருப்பதை உங்களுக்குக் காட்டுவேன்” என்றான்.

26 யோசுவா அந்த ஐந்து அரசர்களையும் கொன்று, அவர்களின் உடல்களை ஐந்து மரங்களில் தொங்கவிட்டான். மாலைவரை யோசுவா அவர்களை மரத்திலேயே தொங்கவிட்டான். 27 சூரியன் மறையும் வேளையில் யோசுவா அவனது ஆட்களிடம் அந்த உடல்களை மரங்களிலிருந்து கீழே இறக்குமாறு கூறினான். அவர்கள் அந்த உடல்களை இறக்கி முன்பு அந்த அரசர்கள் ஒளித்திருந்த குகைளில் போட்டு மூடி, அவற்றின் வாசல்களைப் பெரிய பாறைகளால் மூடினார்கள். அந்தப் பாறைகள் இன்றைக்கும் உள்ளன.

28 அன்று யோசுவா மக்கெதா என்னும் நகரத்தை வென்றான். அந்நகரின் அரசனையும் ஜனங்களையும் கொன்றான். யாரும் உயிரோடு விடப்படவில்லை. எரிகோவின் அரசனுக்குச் செய்தபடியே மக்கெதாவின் அரசனுக்கும் செய்தான்.

தெற்குப் பகுதியின் நகரங்களைக் கைப்பற்றுதல்

29 பின் யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் மக்கெதாவிலிருந்து பயணம் செய்தனர். அவர்கள் லிப்னா என்னும் நகருக்குச் சென்று, அந்நகரத்தைத் தாக்கினார்கள். 30 அந்நகரத்தையும் அதன் அரசனையும் தோற்கடிப்பதற்கு கர்த்தர் இஸ்ரவேலரை அனுமதித்தார். அந்நகரில் இருந்த ஒவ்வொருவரையும் இஸ்ரவேல் ஜனங்கள் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவின் அரசனுக்குச் செய்தபடியே லிப்னாவின் அரசனுக்கும் செய்தனர்.

31 பிறகு யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் லிப்னா நகரிலிருந்து லாகீசை நோக்கிச் சென்றனர். யோசுவாவும் அவனது படையும் லாகீசைச் சுற்றிலும் முகாமிட்டு அந்நகரத்தைத் தாக்கினார்கள். 32 லாகீசு நகரத்தைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அவர்களை அனுமதித்தார். இரண்டாம் நாளில் அந்நகரைத் தோற்கடித்தார்கள். லிப்னாவில் செய்தபடியே, இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரிலிருந்த அனைவரையும் கொன்றார்கள். 33 அப்போது கேசேரின் அரசனாகிய ஓராம், லாகீசுக்கு உதவியாக வந்தான். யோசுவா அவனையும் அவனது படையையும் கூட வென்றான். யாரும் உயிரோடு விடப்படவில்லை.

34 பிறகு, யோசுவாவும் எல்லா இஸ்ரவேல் ஜனங்களும் லாகீஸ் நகரிலிருந்து எக்லோன் நகரை நோக்கிப் பயணம் செய்தார்கள். அவர்கள் எக்லோன் நகரைச் சூழ்ந்து அதைத் தாக்கினார்கள். 35 அவர்கள் அன்றைக்கு அந்நகரைக் கைப்பற்றியதோடு அங்கு வசித்து வந்த ஜனங்களையும் கொன்றனர். லாகீஸ் நகரில் செய்தபடியே இந்த நகரிலும் செய்தனர்.

36 பின்பு யோசுவாவும் இஸ்ரவேலரும் எக்லோன் நகரத்திலிருந்து எபிரோன் என்னும் நகருக்குச் சென்று அதைத் தாக்கினார்கள். 37 அவர்கள் அந்த நகரத்தையும் அதைச் சுற்றியிருந்த ஊர்களையும் கைப்பற்றினர். நகரத்தில் வாழ்ந்தவர்களை எல்லாம் இஸ்ரவேலர் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. அவர்கள் எக்லோனிலும் அவ்வாறே செய்திருந்தனர். அவர்கள் நகரத்தை அழித்து, எல்லா ஜனங்களையும் கொன்றனர்.

38 பின்பு யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லோரும் தெபீருக்குத் திரும்பிச்சென்று, அந்நகரைத் தாக்கினார்கள். 39 அவர்கள் நகரத்தையும், அதன் அரசனையும், நகரைச் சுற்றிலுமிருந்த சிறிய ஊர்களையும், கைப்பற்றினார்கள். அந்நகரில் வாழ்ந்த அனைவரையும் கொன்றனர். யாரும் உயிரோடுவிடப்படவில்லை. எபிரோனுக்கும் அதன் அரசனுக்கும் செய்ததையே இஸ்ரவேலர் தெபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தனர். அவ்வாறே லிப்னாவிற்கும் அதன் அரசனுக்கும் செய்திருந்தனர்.

40 மலை நாடுகளிலும், பாலைவனங்களிலும், மேற்கு மற்றும் கிழக்கு மலையடிவாரங்களிலும், இருக்கிற நகரங்களையெல்லாம் ஆட்சி செய்த எல்லா அரசர்களையும் யோசுவா தோற்கடித்தான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எல்லா ஜனங்களையும் கொல்லும்படியாக யோசுவாவிற்குக் கூறினார். எனவே யோசுவா அந்த இடங்களில் யாரையும் உயிரோடு விட்டுவைக்கவில்லை.

41 காதேஸ் பர்னேயாவிலிருந்து காத்சா வரைக்கும் இருந்த எல்லா நகரங்களையும் யோசுவா கைப்பற்றினான். எகிப்திலிருந்த கோசேன் நிலப் பகுதியிலிருந்து கிபியோன் வரையிலிருந்த எல்லா நகரங்களையும் கைப்பற்றினான். 42 யோசுவா அந்த நகரங்கள் அனைத்தையும் அவற்றின் அரசர்களையும் ஒரே ராணுவ நடவடிக்கையில் கைப்பற்றினான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காகப் போராடியதால் யோசுவா இதை சாதித்தான். 43 பின்பு யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் கில்கால் என்னும் நகரிலிருந்த தங்கள் முகாமிற்குத் திரும்பினார்கள்.

வடக்குப் பகுதியின் பட்டணங்களைத் தோற்கடித்தல்

11 ஆத்சோரின் அரசனாகிய யாபீன், நடந்த எல்லா காரியங்களையும் குறித்துக் கேள்விப்பட்டான். எனவே பல அரசர்களின் சேனைகளையும் திரட்ட முடிவு செய்தான். மாதோனின் அரசனாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் அரசனிடத்திற்கும், அக்சாபாவின் அரசனிடத்திற்கும், வடக்கிலும், மலைநாடுகளிலும், பாலைவனங்களிலும் உள்ள மற்ற அரசர்களுக்கும் செய்தியனுப்பினான். கின்னரோத், நெகேவ், மேற்கிலுள்ள மலையடிவாரங்களிலுள்ள அரசர்களுக்கும் யாபீன் செய்தியனுப்பினான். மேற்கிலுள்ள நாபோத், தோரின் அரசனுக்கும் யாபீன் செய்தி அனுப்பினான். கிழக்கிலும் மேற்கிலும் உள்ள கானானியரின் அரசர்களுக்கும் யாபீன் செய்தியைத் தெரிவித்தான். எமோரியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், எர்மோன் மலைக்குக் கீழே மிஸ்பாவிற்கு அருகிலுள்ள ஏவியர் ஆகியோருக்கும் செய்தி கூறினான். எனவே இந்த அரசர்களின் படைகள் அனைத்தும் ஒன்று கூடி போர் வீரர்களும், குதிரைகளும், இரதங்களும் எண்ணிக்கையில் மிகுதியாக இருந்தபடியால், அது மிகவும் பெரிய படையாக இருந்தது. கடற்கரையின் மணலைப் போன்று ஆட்கள் ஏராளமாக இருந்தனர்.

மோரோம் என்கிற சிறு நதிக்கருகே எல்லா அரசர்களும் சந்தித்தனர். அவர்கள் தங்கள் படைகளை எல்லாம் ஒன்றிணைத்து இஸ்ரவேலுக்கு எதிராகப் போர் செய்யத் திட்டமிட்டனர்.

அப்போது கர்த்தர் யோசுவாவை நோக்கி, “அப்படையைக் கண்டு அஞ்சாதே. நீ அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். நாளை இதே வேளையில், நீ அவர்களையெல்லாம் கொன்றிருப்பாய். நீங்கள் குதிரையின் கால்களை வெட்டி, அவர்களின் இரதங்களை எரித்துப் போடுவீர்கள்” என்று சொன்னார்.

யோசுவாவும் அவனது படையினரும் பகைவரை வியப்படையச் செய்தனர். மேரோம் நதிக்கரையில் அவர்கள் பகைவர்களைத் தாக்கினார்கள். பிறகு இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். இஸ்ரவேல் படையினர் அவர்களைத் தோற்கடித்து பெரிய சீதோன், மிஸ்ர போத்மாயீம், கிழக்கேயுள்ள மிஸ்பா பள்ளத்தாக்கு வரைக்கும் துரத்தினார்கள். பகைவரில் ஒருவரும் உயிரோடிராதபடிக்கு இஸ்ரவேல் படையினர் போர் செய்தார்கள். கர்த்தர் செய்யும்படியாகக் கூறியவற்றையெல்லாம் அவன் செய்தான். யோசுவா அவர்களது குதிரைகளின் கால்களை வெட்டி, அவர்களது தேர்களை எரித்தான்.

10 பின் யோசுவா திரும்பிச் சென்று ஆத்சோரைக் கைப்பற்றினான். ஆத்சோரின் அரசனைக் கொன்றான். (இஸ்ரேவலுக்கு எதிராகப் போர் செய்த எல்லா அரசுகளுக்கும் ஆத்சோர் தலைமை தாங்கி இருந்தான்.) 11 இஸ்ரவேல் படை நகரிலிருந்த ஒவ்வொருவரையும் கொன்றழித்தது. எல்லா ஜனங்களையும் அவர்கள் அழித்துப்போட்டனர். எதுவும் உயிரோடு விடப்பட்டிருக்கவில்லை. பிறகு அவர்கள் அந்த நகரை எரித்தனர்.

12 யோசுவா எல்லா நகரங்களையும் கைப்பற்றினான். அவற்றின் அரசர்களையும், நகரங்களில் இருந்த எல்லாவற்றையும் அழித்தான். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே, கட்டளையிட்டபடியே யோசுவா செய்தான். 13 ஆனால் இஸ்ரவேல் படை மலைகளின் மேல் கட்டப்பட்டிருந்த நகரங்களை எரிக்கவில்லை. மலையின் மேல் கட்டப்பட்டிருந்த நகரங்களில் அவர்கள் எரித்தழித்த ஒரே நகரம் ஆத்சோர் ஆகும். யோசுவா இந்நகரத்தை எரித்தான். 14 நகரங்களில் கிடைத்த எல்லாப் பொருட்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்காக வைத்துக்கொண்டனர். நகரத்திலிருந்த மிருகங்களையும் அவர்களுக்காக எடுத்துக்கொண்டனர். ஆனால் மனிதர்கள் எல்லோரையும் கொன்றுவிட்டனர். அவர்கள் ஒருவரையும் உயிரோடிருக்க அனுமதிக்கவில்லை. 15 வெகு நாட்களுக்கு முன்னரே கர்த்தர் அவரது ஊழியனாகிய மோசேக்கு இவ்வாறு செய்யும்படி கட்டளையிட்டார். பின் மோசே யோசுவாவிற்கு இவ்வாறு செய்யக் கட்டளை தந்தான். ஆகையால் யோசுவா தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டவற்றையெல்லாம் யோசுவா செய்தான்.

16 அந்நாடு முழுவதிலுமுள்ள ஜனங்கள் எல்லாரையும் யோசுவா தோற்கடித்தான். மலை நாடுகள், பாலைவனங்கள், கோசேனின் பகுதிகள், மேற்கு மலையடிவாரத்தின் பகுதிகள், யோர்தான் பள்ளத்தாக்கு, இஸ்ரவேலின் பர்வதங்கள், அருகேயுள்ள மலைகள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தினான். 17 சேயீருக்கு அருகிலுள்ள ஆலாக் மலையிலிருந்து லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால் காத்வரைக்குமுள்ள இடங்களிலும் யோசுவாவுக்கு அதிகாரம் செலுத்த முடிந்தது. அங்குள்ள எல்லா அரசர்களையும் பிடித்து அவர்களைக் கொன்றான். 18 நீண்டகாலம் அந்த அரசர்களோடு யோசுவா போர் செய்தான். 19 அப்பகுதியில் இருந்த ஒரே ஒரு நகரம் மட்டுமே இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது. கிபியோனிலுள்ள ஏவியரின் நகரமே அது. மற்ற நகரங்களெல்லாம் போரில் தோல்வி கண்டன. 20 அந்த ஜனங்கள் தங்களை வலியவர்களாக கருதும்படி கர்த்தர் செய்தார். அப்போதுதான் அவர்கள் இஸ்ரவேலரோடு போர் செய்யக் கருதக்கூடும், இரக்கமின்றி அந்த ஜனங்களை அழிப்பதற்கு யோசுவாவிற்கு வழியுண்டாகும். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவன் அவர்களை அழிக்கமுடியும்.

21 எபிரோன், தெபீர், ஆனாப், யூதா ஆகிய மலை நாடுகளில் ஏனாக்கியர் வாழ்ந்து வந்தனர். யோசுவா அவர்களோடு போர் தொடுத்து அவர்களையும், அவர்களது ஊர்களையும் முற்றிலும் அழித்தான். 22 இஸ்ரவேல் நாட்டில் ஏனாக்கியர் ஒருவரும் வாழவில்லை. காசா, காத், ஆஸ்தோத் நாடுகளில் மட்டுமே ஏனாக்கியர் உயிரோடு விடப்பட்டனர். 23 முன்பே கர்த்தர் மோசேக்குக் கூறியிருந்தபடி, யோசுவா இஸ்ரவேல் நாட்டின் மீது ஆதிக்கம் உடையவனானான். வாக்களித்தபடியே கர்த்தர் இஸ்ரவேலருக்கு அத்தேசத்தைக் கொடுத்தார். இஸ்ரவேலின் கோத்திரங்கள் அனைத்திற்கும் அத்தேசத்தை யோசுவா பிரித்துக் கொடுத்தான். இறுதியில் போர் முடிந்து, அத்தேசத்தில் அமைதி நிலவிற்று.

இஸ்ரவேலரால் தோற்கடிக்கப்பட்ட இராஜாக்கள்

12 யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தில் இஸ்ரவேலரின் ஆதிக்கம் இருந்தது. அர்னோன் நதியிலிருந்து எர்மோன் மலைவரைக்குமுள்ள எல்லா தேசங்களும் யோர்தான் நதியின் கிழக்குக் கரையோரமுள்ள எல்லா தேசங்களும் அவர்களுக்கு உரியதாக இருந்தது. இப்பகுதிகளைக் கைப்பற்றும்பொருட்டு அவர்கள் தோற்கடித்த எல்லா அரசர்களின் பெயர்களும் இங்குத் தரப்படுகின்றன:

அவர்கள் எஸ்போன் நகரில் வாழ்ந்த எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தனர். அவன் அர்னோன் பள்ளத்தாக்கிலுள்ள ஆரோவேரிலிருந்து யாபோக் நதி வரைக்குமுள்ள தேசத்தை ஆண்டு வந்தான். பள்ளத்தாக்கின் நடுவில் அவன் தேசத்தின் எல்லை (தேசம்) ஆரம்பித்தது. இது அம்மோனியரோடு அவர்களின் எல்லையாக இருந்தது. கீலேயாத்தின் பாதிப் பகுதியும் சீகோனின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. கலிலேயா ஏரியிலிருந்து சவக்கடல் வரைக்கும் யோர்தான் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதிகளை அவன் ஆண்டுவந்தான். பெத்யெசிமோத்திலிருந்து பிஸ்கா மலைகளின் தெற்குப்பகுதி வரைக்கும் அவன் ஆண்டுவந்தான்.

அவர்கள் பாசானின் அரசனாகிய ஓகையும், வென்றார்கள். அவன் ரெபெயத் ஜனங்களைச் சார்ந்தவன். அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலுமிருந்த நிலப் பகுதிகளை ஆண்டான். எர்மோன் மலை, சல்கா, பாசானின் நிலப்பகுதிகள் ஆகியவற்றையெல்லாம் ஓக் அரசாண்டான். கெசூர், மாகா ஆகிய ஜனங்கள் வாழ்ந்த தேசம் வரைக்கும் அவன் தேசம் இருந்தது. கீலேயாத்தின் பாதிப் பகுதியையும் ஓக் ஆண்டு வந்தான். எஸ்போனின் அரசனாகிய, சீகோனின் தேசம் மட்டும் அப்பகுதி பரவியிருந்தது.

கர்த்தருடைய ஊழியனாகிய மோசேயும், இஸ்ரவேல் ஜனங்களும் இந்த அரசர்களை எல்லாம் வென்றார்கள். ரூபன், காத், ஆகிய கோத்திரத்தாருக்கும், மனாசே கோத்திரத்தாரில் பாதி ஜனங்களுக்கும் சொந்தமாக மோசே அத்தேசத்தைக் கொடுத்தான்.

யோர்தான் நதிக்கு மேற்கிலுள்ள தேசங்களின் அரசர்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் வென்றார்கள். இந்நாட்டிற்குள் ஜனங்களை யோசுவா வழி நடத்தினான். இத்தேசத்தை இஸ்ரவேலரின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கு இடையே யோசுவா பிரித்துக் கொடுத்தான். தேவன் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த தேசம் இதுவேயாகும். லீபனோன் பள்ளத்தாக்கிலுள்ள பால்காத்திலிருந்து சேயீரிலுள்ள ஆலாக் மலைவரைக்குமுள்ள தேசம் இதுவாகும். மலைநாடு, மேற்கு மலையடிவாரம், யோர்தான் பள்ளத்தாக்கு, கிழக்கு மலைகள், பாலைவனம், நெகேவ் யூதாவின் கிழக்கிலுள்ள பாலைப்பிரதேசம், ஆகியவை இப்பகுதியில் அடங்கியிருந்தன. ஏத்தீயரும், எமோரியரும், கானானியரும், பெரிசியரும், ஏவியரும், ஏபூசியரும் வாழ்ந்த தேசம் இதுவாகும். இஸ்ரவேலர் தோற்கடித்த அரசர்களின் பெயர்ப் பட்டியல் பின்வருவதாகும்:

எரிகோவின் அரசன் 1

பெத்தேலுக்கு அருகிலுள்ள

ஆயீயின் அரசன் 1

10 எருசலேமின் அரசன் 1

எப்ரோனின் அரசன் 1

11 யர்மூத்தின் அரசன் 1

லாகீசின் அரசன் 1

12 எக்லோனின் அரசன் 1

கேசேரின் அரசன் 1

13 தெபீரின் அரசன் 1

கெதேரின் அரசன் 1

14 ஒர்மாவின் அரசன் 1

ஆராதின் அரசன் 1

15 லிப்னாவின் அரசன் 1

அதுல்லாமின் அரசன் 1

16 மக்கேதாவின் அரசன் 1

பெத்தேலின் அரசன் 1

17 தப்புவாவின் அரசன் 1

எப்பேரின் அரசன் 1

18 ஆப்பெக்கின் அரசன் 1

லசரோனின் அரசன் 1

19 மாதோனின் அரசன் 1

ஆத்சோரின் அரசன் 1

20 சிம்ரோன் மேரோனின் அரசன் 1

அக்சாபின் அரசன் 1

21 தானாகின் அரசன் 1

மெகிதோவின் அரசன் 1

22 கேதேசின் அரசன் 1

கர்மேலிலுள்ள

யொக்னியாமின் அரசன் 1

23 தோர் மலையிலுள்ள

தோரின் அரசன் 1

கில்காலின் கோயிம் அரசன் 1

24 திர்சாவின் அரசன் 1

மொத்தம் அரசர்களின் எண்ணிக்கை 31

லூக்கா 1:39-56

சகரியாவையும் எலிசபெத்தையும் மரியாள் சந்தித்தல்

39 மலைநாடான யூதேயாவில் உள்ள பட்டணத்துக்கு மரியாள் எழுந்து விரைந்து சென்றாள். 40 அவள் சகரியாவின் வீட்டுக்குள் நுழைந்து எலிசபெத்தை வாழ்த்தினாள். 41 மரியாளின் வாழ்த்துதலை எலிசபெத் கேட்டதும் இன்னும் பிறக்காமல் எலிசபெத்துக்குள் இருக்கும் குழந்தை துள்ளிக் குதித்தது.

42 எலிசபெத் உரத்த குரலில் “வேறெந்தப் பெண்ணைக் காட்டிலும் அதிகமாக தேவன் உன்னை ஆசீர்வதித்துள்ளார். உனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையையும், தேவன் ஆசீர்வதித்திருக்கிறார். 43 கர்த்தரின் தாயாகிய நீ என்னிடம் வந்துள்ளாய். அத்தனை நல்ல காரியம் எனக்கு நடந்ததேன்? 44 உன் சத்தத்தை நான் கேட்டதும் எனக்குள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. 45 உன்னிடம் கர்த்தர் கூறியதை நீ நம்பியதால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். இது நடக்கக் கூடியதென நீ நம்பினாய்” என்று சொன்னாள்.

மரியாள் தேவனைப் போற்றுதல்

46 அப்போது மரியாள்,

47 “எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது.
    தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது.
48 நான் முக்கியமற்றவள்,
    ஆனால் தேவன் தனது கருணையைப் பணிப்பெண்ணாகிய எனக்குக் காட்டினார்.
இப்போது தொடங்கி,
    எல்லா மக்களும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பர்.
49 ஏனெனில் ஆற்றல் மிகுந்தவர் எனக்காக மேன்மையான செயல்களைச் செய்தார்.
    அவர் பெயர் மிகத் தூய்மையானது.
50 தேவனை வணங்கும் மக்களுக்கு அவர் எப்போதும் இரக்கம் செய்வார்.
51 தேவனின் கைகள் பலமானவை.
    செருக்குற்ற மனிதர்களையும் சுயதம்பட்டக்காரர்களையும் அவர் சிதறடிக்கிறார்.
52 சிம்மாசனத்தினின்று மன்னர்களைக் கீழே இறக்குகிறார்.
    தாழ்ந்தவர்களை உயர்த்துகிறார்.
53 நல்ல பொருட்களால் பசித்த மக்களை நிரப்புகிறார்.
    செல்வந்தரையும், தன்னலம் மிகுந்தோரையும் எதுவுமின்றி அனுப்பிவிடுகிறார்.
54 தனக்குப் பணிசெய்வோருக்கு அவர் உதவினார்.
    அவர்களுக்குத் தன் இரக்கத்தை அருளினார்.
55 நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார்”

என்று சொன்னாள்.

56 மரியாள் எலிசபெத்துடன் ஏறக்குறைய மூன்று மாதகாலம்வரைக்கும் தங்கி இருந்தாள். பின்பு மரியாள் தனது வீட்டுக்குச் சென்றாள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center