Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 28-29

சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர்களுக்கான ஆசீர்வாதங்கள்

28 “இப்போதும், நான் இன்று உங்களுக்குச் சொன்ன உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையெல்லாம் நீங்கள் கவனமாகக் கடைப்பிடிப்பீர்களேயானால், உங்கள் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள எல்லா ஜனங்களையும் விட உங்களை உயர்த்தி வைப்பார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும்:

“நகரத்திலும் வயலிலும்
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து
    உங்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பார்.
அவர் உங்கள் நிலத்தை ஆசீர்வதிப்பார்.
    அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுப்பார்.
    அவர் உங்கள் மிருகங்களை ஆசீர்வதிப்பார்.
அவற்றுக்கு நிறைய குட்டிகளைப் பெருகச்செய்வார்.
    அவர் உங்களது அனைத்து கன்றுகளையும் மற்றும் ஆட்டுக் குட்டிகளையும் ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் உங்களது கூடைகளையும்,
    பாத்திரங்களையும் ஆசீர்வதித்து அவற்றில் உணவை நிரப்புவார்.
கர்த்தர் உங்களை எல்லா நேரங்களிலும் நீங்கள் செய்கிற அனைத்திலும் ஆசீர்வதிப்பார்.

“உங்களுக்கு எதிராகச் சண்டைச் செய்ய வருகிற உங்கள் பகைவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் பகைவர்கள் உங்களுக்கு எதிராக ஒரு வழியாக வருவார்கள், ஆனால் அவர்கள் வேறுபட்ட ஏழு வழிகளில் ஓடுவார்கள்.

“கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் களஞ்சியங்களை நிரப்புவார். நீங்கள் செய்கிற அனைத்தையும் அவர் ஆசீர்வதிப்பார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர் உங்களுக்குக் கொடுத்த நாட்டை ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களைத் தமக்கென்று சிறந்த பரிசுத்த ஜனங்களாக, தாம் வாக்குறுதி அளித்தபடி ஆக்குவார். நீங்கள் உங்களது தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் கர்த்தர் இதனைச் செய்வார். 10 பிறகு எல்லா நாட்டினரும் கர்த்தருடைய பெயரால் நீங்கள் அழைக்கப்படுவதைக் கேட்பார்கள். அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்.

11 “கர்த்தர் உங்களுக்கு அநேக நன்மைகளைச் செய்வார். அவர் உங்களுக்குப் பல பிள்ளைகளைத் தருவார். உங்களது பசுக்களுக்குப் பல கன்றுகளை அவர் தருவார். உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நிலத்தில் அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தருவார். 12 கர்த்தர், தமது வளமான ஆசீர்வாதங்களை வைத்துள்ள சேமிப்பு அறையினைத் திறப்பார். உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையைச் சரியான காலத்தில் அனுப்புவார். நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார். நீங்கள் பல நாடுகளுக்குக் கடன்கொடுக்கிற அளவிற்குப் பணம் பெறுவீர்கள். அவர்களிடமிருந்து எதையும் கடனாகப் பெறுகிற தேவை உங்களுக்கு நேரிடாது. 13 கர்த்தர் உங்களை வாலாக இல்லாமல் தலையாக ஆக்குவார். நீங்கள் கீழாக இல்லாமல் மேலாவீர்கள். இன்று நான் சொல்கிறபடி உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளைக் கேட்டால், இது நிகழும். நீங்கள் கவனமாக இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். 14 நான் இன்று உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளிலிருந்து நீங்கள் விலகிப் போகாமல் இருக்க வேண்டும். நீங்கள் வலது புறமாகவோ, இடது புறமாகவோ திரும்பவேண்டாம். நீங்கள் மற்ற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு சேவை செய்யக்கூடாது.

சட்டங்களுக்குக் கீழ்ப்படியாவிட்டால் எற்படும் சாபங்கள்

15 “ஆனால் நீ உனது தேவனாகிய கர்த்தர் சொல்கின்றவற்றைக் கவனிக்காமல் இருந்தால், நான் இன்று உனக்கு சொல்கின்றபடி அவரது சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு இத்தீமைகள் எல்லாம் உனக்கு ஏற்படும்:

16 “நகரிலும், வயலிலும்
    கர்த்தர் உன்னைச் சபிப்பார்.
17 கர்த்தர் உனது கூடைகளையும், பாத்திரங்களையும் சபிப்பார்.
    அவற்றில் உணவு இல்லாமல் போகும்.
18 கர்த்தர் உன்னைச் சபிப்பார்.
    உனக்கு அதிகக் குழந்தைகள் இல்லாமல் போகும்.
அவர் உனது நிலத்தைச் சபிப்பார்.
    உனக்கு நல்ல விளைச்சல் கிடைக்காமல் போகும்.
அவர் உனது மிருகங்களைச் சபிப்பார்.
    அவை குட்டிகள் அதிகம் இல்லாமல் போகும்.
    அவர் உனது எல்லா கன்றுக்குட்டிகளையும் ஆட்டுக்குட்டிகளையும் சபிப்பார்.
19 கர்த்தர் எல்லா நேரங்களிலும் நீ செய்கின்ற எல்லாவற்றையும் சபிப்பார்.

20 “நீ தீமைசெய்து கர்த்தரை விட்டுவிலகிப் போனால், பிறகு அவர் உனக்கு தீமைகள் ஏற்படும்படிச் செய்வார். நீ செய்கிற எல்லாவற்றிலும் உனக்கு விரக்தியும், கஷ்டமும் ஏற்படும்படிச் செய்வார். நீ விரைவாகவும் முழுவதுமாகவும் அழிக்கப்படும்வரை கர்த்தர் இதனைத் தொடர்ந்து செய்வார். அவர் இதனைச் செய்வார். ஏனென்றால், நீ அவரை விட்டு விலகிப்போனாய். 21 நீ பெறப்போகும் நாட்டிலிருந்து நீ அழிந்து முடிந்து போகும்வரை, உனக்கு கர்த்தர் பயங்கரமான நோய்கள் ஏற்படும்படிச் செய்வார். 22 கர்த்தர் உன்னை நோய்களாலும், காய்ச்சல் மற்றும் வீக்கங்களாலும் தண்டிப்பார். கர்த்தர் உனக்குப் பயங்கரமான வெப்பத்தை அனுப்புவார். உனக்கு மழை இல்லாமல் போகும். உனது பயிர்கள் வெப்பத்தாலும், நோயாலும் பட்டுப் போகும். நீ அழிக்கப்படும்வரை இத்தீமைகள் எல்லாம் நிகழும். 23 வானத்தில் மேகங்கள் இராது. வானம் பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத்தைப் போல் இருக்கும். உனக்குக் கீழுள்ள பூமியானது கெட்டியான இரும்பைப்போன்று இருக்கும். 24 கர்த்தர் மழையை அனுப்பமாட்டார். வானத்திலிருந்து மணலும், புழுதியுமே விழும். நீ அழிகிறவரை இது கீழே வந்து கொண்டிருக்கும்.

25 “உனது பகைவர்கள் உன்னைத் தோற்கடிக்கும்படி கர்த்தர் செய்வார். உனது பகைவரோடு சண்டையிட நீ ஒரு வழியில் போவாய். ஆனால் நீ வேறுபட்ட ஏழு வழிகளில் தப்பி ஓடுவாய். உனக்கு ஏற்படும் இந்த தீமைகள் எல்லாம் பூமியிலுள்ள எல்லா ஜனங்களையும் பயப்படுத்தும். 26 உங்களது மரித்த உடல்கள் காட்டு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாகும். உங்கள் மரித்த உடல்களிலிருந்து அவற்றை எவராலும் பயமுறுத்தி விரட்ட முடியாது.

27 “கர்த்தர் எகிப்தியர்களுக்கு அனுப்பியது போன்று பருக்களால் உன்னைத் தண்டிப்பார். அவர் உன்னைக் குணமாக்க முடியாதபடியுள்ள மூல வியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் தண்டிப்பார். 28 கர்த்தர் உன்னைப் புத்தி மயங்க வைத்தும் தண்டிப்பார். அவர் உன்னைக் குருடாக்கியும் குழப்புவார். 29 பகல் வெளிச்சத்தில், குருடனைப்போல் உனது வழியை தடவிப்பார்த்துச் செல்வாய். நீ செய்கிற எல்லாவற்றிலும் தோற்றுப் போவாய். ஜனங்கள் மீண்டும், மீண்டும் உன்னைத் தாக்கி உன்னிடமுள்ளவற்றைத் திருடிக்கொள்வார்கள். அங்கு எவராலும் உன்னைக் காப்பாற்ற முடியாது.

30 “நீ ஒரு பெண்ணை நியமித்துக்கொள்வாய், ஆனால் இன்னொருவன் அவளோடு பாலின உறவுகொள்வான். நீ ஒரு வீட்டைக் கட்டுவாய். ஆனால் அதில் நீ இருக்கமாட்டாய். நீ திராட்சைச் செடிகளைப் பயிர் செய்வாய். ஆனால் அவற்றிலிருந்து எதையும் நீ சேகரிக்கமாட்டாய். 31 ஜனங்கள் உனக்கு முன்னாலேயே உனது பசுக்களைக் கொல்வார்கள். ஆனால் அவற்றின் இறைச்சியை நீ தின்னமாட்டாய். ஜனங்கள் உனது கழுதைகளை எடுத்துக்கொள்வார்கள் அவர்கள் அவற்றை உனக்குத் திரும்பக் கொடுக்கமாட்டார்கள். உனது பகைவர்கள் உனது ஆட்டு மந்தையை எடுத்துக்கொள்வார்கள். அங்கே எவரும் உன்னைக் காப்பாற்ற இருக்கமாட்டார்கள்.

32 “மற்ற ஜனங்கள் உனது மகன்களையும், மகள்களையும் எடுத்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். நாள்தோறும் உனது பிள்ளைகளை எதிர்ப்பார்த்திருப்பாய். உனது கண்கள் பலவீனமாகிக் குருடாகும்வரை நீ பார்த்துக்கொண்டிருப்பாய். ஆனால் உன்னால் அவர்களைக் காணமுடியாது. தேவன் உனக்கு உதவிசெய்யமாட்டார்.

33 “நீ அறிந்திராத நாடு உனது விளைச்சல் எல்லாவற்றையும், மற்றும் நீ உழைத்துப் பெற்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும். ஜனங்கள் உன்னை மோசமாக நடத்துவார்கள். ஜனங்கள் உன்னைப் பழிப்பார்கள். 34 நீ பார்க்கின்றவை அனைத்தும் உனக்குப் பைத்தியத்தை ஏற்படுத்தும். 35 கர்த்தர் உன்னைக் குணப்படுத்தமுடியாத கொடிய எரிபந்தப் பருக்களினால் தண்டிப்பார். அப்பருக்கள் உனது முழங்கால்களிலும், கால்களிலும் இருக்கும். அப்பருக்கள் உனது உள்ளங்கால்கள் முதல் உச்சந்தலைவரை உடம்பின் எல்லாப் பாகங்களிலும் இருக்கும்.

36 “நீ அறிந்திராத நாட்டிற்கு உன்னையும், உனது அரசனையும் கர்த்தர் அனுப்புவார். நீயும் உனது முற்பிதாக்களும் இதற்கு முன்னால் இந்நாட்டைப் பார்த்திருக்கவில்லை. அங்கே நீ பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்வாய். அவை மரத்தாலும், கல்லாலும் செய்யப்பட்டிருக்கும். 37 கர்த்தர் உங்களை அனுப்பிய நாடுகளில் உங்களுக்கு ஏற்படுகின்ற தீயவற்றைப் பார்த்து அங்குள்ள ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர்கள் உங்களைப்பற்றி மோசமாகப் பேசுவார்கள்.

தோல்வியின் சாபம்

38 “உங்கள் வயல்கள் ஏராளமாக தானியங்ளை விளைவித்தாலும், உங்களது அறுவடை சிறியதாக இருக்கும். ஏனென்றால், வெட்டுக்கிளிகள் உங்கள் அறுவடையைத் தின்றுவிடும். 39 நீ திராட்சைச் செடிகளைப் பயிர்செய்வாய். அவற்றுக்காகக் கடினமாக வேலை செய்வாய். ஆனால், நீ திராட்சைப் பழங்களைப் பறிக்கமாட்டாய். திராட்சைரசத்தையும் குடிக்கமாட்டாய். ஏனென்றால், புழுக்கள் அவற்றைத் தின்றுவிடும். 40 உனது நிலத்தில் ஒலிவ மரங்கள் எங்கெங்கும் வளர்ந்திருக்கும். ஆனால், நீ பயன்படுத்திட ஒலிவ எண்ணெயைப் பெறமாட்டாய். ஏனென்றால், ஒலிவ மரங்களில் பிஞ்சுகள் கீழே விழுந்து அழுகிப்போகும். 41 உனக்கு மகன்களும், மகள்களும் இருப்பார்கள், ஆனால் நீ அவர்களைப் பாதுகாக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்படுவார்கள். 42 வெட்டுக் கிளிகள் உனது வயலில் உள்ள விளைச்சலையும், மரங்களையும் அழித்துவிடும். 43 உங்களிடையே வாழ்கிற பிற நாட்டு ஜனங்கள் மேலும் மேலும் அதிகாரத்தைப் பெறுவார்கள். நீயோ உனக்கிருந்த அதிகராத்தையும் இழப்பாய். 44 பிற நாட்டுக்காரர்கள் உனக்குக் கடன்தர பணம் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னிடம் பணம் இருக்காது. (தலை உடலைக் கட்டுப்படுத்துவது போன்று) அவர்கள் உன்னைக் கட்டுப்படுத்துவார்கள். நீ வாலைப் போன்று இருப்பாய்.

45 “இந்த சாபங்கள் எல்லாம் உனக்கு வரும். நீ அழியும்வரை இவை உன்னைத் துரத்திப் பிடிக்கும். ஏனென்றால், நீ உனது தேவனாகிய கர்த்தர் சொன்னவற்றைக் கவனிக்கவில்லை. அவர் கொடுத்த சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீ அடிபணியவில்லை. 46 உன்னையும் உனது சந்ததிகளையும் தேவன் நியாயந்தீர்த்திருக்கிறார் என்று ஜனங்களுக்கு இந்த சாபங்கள் காட்டும். உங்களுக்கு ஏற்படுகிற பயங்கரத்தைப்பற்றி ஜனங்கள் வியப்படைவார்கள்.

47 “உனது தேவனாகிய கர்த்தர் உனக்குப் பல ஆசீர்வாதங்களைக் கொடுத்தார். ஆனால் நீ அவருக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கொண்ட மனதோடு சேவை செய்யவில்லை. 48 ஆகவே கர்த்தர் அனுப்பிவைத்த உனது பகைவர்களுக்கு நீ சேவை செய்வாய். நீ பசியும், தாகமும், நிர்வாணமும், ஏழ்மையும் அடைவாய். கர்த்தர் உன்மீது நீக்க முடியாத சுமையை வைப்பார். அவர் உன்னை அழிக்கும்வரை அந்தச் சுமையை நீ சுமப்பாய்.

பகை நாட்டிற்குரிய சாபம்

49 “கர்த்தர் தொலைதூரத்திலிருந்து உன்னோடு சண்டையிட ஒரு நாட்டை வரவழைப்பார். அவர்களது மொழியை உன்னால் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் விரைந்து வருவார்கள். வானிலிருந்து ஒரு கழுகு வருவதுபோன்று வருவார்கள். 50 அந்த ஜனங்கள் கொடூரமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் முதியவர்களைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அவர்கள் இளங்குழந்தைகளிடம் இரக்கம் காட்டமாட்டார்கள். 51 அவர்கள் உங்களது மிருகங்களையும் நீங்கள் வளர்த்த உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொள்வார்கள். உன்னை அழிக்கும்வரை அவர்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன்னிடம் தானியம், திராட்சை ரசம், எண்ணெய், பசுக்கள், ஆடுகள் அல்லது மாடுகள் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் உன்னை அழிக்கும்வரை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள்.

52 “அந்த நாடு உனது நகரங்களைச் சுற்றி முற்றுகையிட்டுத் தாக்கும். உனது நகரங்களைச் சுற்றியுள்ள உயரமும் உறுதியும் கொண்ட சுவர்கள் உங்களைக் காப்பாற்றும் என்று நீ நினைத்தால், அந்தச் சுவர்கள் கீழே விழும், உனது தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த நாட்டிலுள்ள நகரங்கள் எல்லாவற்றையும் பகைவர்கள் முற்றுகையிடுவார்கள். 53 நீ மிகவும் துன்பப்படுவாய். பகைவர்கள் உனது நகரங்களை முற்றுகையிடுவார்கள், உனக்கு உணவு கிடைக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். நீ மிகுந்த பசியை அடைவாய். உங்கள் சொந்த மகன்களையும் மகள்களையும் தின்னும்படியும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுத்த பிள்ளைகளைத் தின்னும்படியும் உங்களுக்கு அதிக பசி இருக்கும்.

54 “உங்களில் மிக சாந்தமும் இரக்கமும் கொண்டவன் கொடூரமானவனாக ஆவான். அவன் பிறருக்கும், தான் மிகவும் நேசித்த தன் மனைவிக்கும் கொடியவன் ஆவான். அவன் உயிரோடுள்ள தன் பிள்ளைகளுக்கும் கொடியவன் ஆவான். 55 அவனுக்கு எந்த உணவும் இல்லாதபடியால் தன் சொந்தப் பிள்ளைகளையே புசிப்பான். அவன் அந்த உணவை வேறு யாரோடும் தன் சொந்தக் குடும்பத்தினரோடும்கூட பகிர்ந்துக்கொள்ள மாட்டான். உனது பகைவர்கள் உன் நகரங்களை முற்றுகையிட்டு உன்னைத் துன்புறுத்தும்போது இந்த கொடூரங்களெல்லாம் ஏற்படும்.

56 “உங்கள் மத்தியில் மிகுந்த சாந்தமும் இரக்கமுமுள்ள பெண்ணும்கூடக் கொடியவள் ஆவாள். அவள் மிகவும் சாந்தமும், அவளது கால்கள் தரையில்படாத அளவிற்கு நளினமுள்ளவளாகவும் இருக்கலாம். ஆனால் அவள் தன் மிகுந்த அன்புக்குரிய கணவனுக்குக் கொடியவள் ஆவாள். அவள் தனது சொந்த மகனுக்கும், மகளுக்கும்கூடக் கொடியவள் ஆவாள். 57 அவள் மறைவாக ஒரு குழந்தையைப் பெறுவாள். அக்குழந்தையோடு அவளது உடலிலிருந்து வெளிவரும் அனைத்தையும் அவள் புசிப்பாள். உன் பகைவன் உனது நகரங்களை முற்றுகையிட்டு உன்னைத் துன்புறுத்தும்போது இத்தீயவை எல்லாம் நிகழும்.

58 “நீ இந்தப் புத்தகத்திலுள்ள அனைத்து கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். நீ உனது தேவனாகிய கர்த்தருடைய அற்புதமும் பயங்கரமுமான பெயருக்கு மதிப்பளிக்க வேண்டும். நீ கீழ்ப்படியாவிட்டால் பிறகு 59 கர்த்தர் உனக்கும் உனது சந்ததிகளுக்கும் மிகுந்த துன்பங்களைக் கொடுப்பார். உன் துன்பங்களும் நோய்களும் பயங்கரமானதாக இருக்கும். 60 எகிப்தில் நீ பல துன்பங்களையும் நோய்களையும் பார்த்தாய். அவை உன்னை அஞ்சும்படி செய்தன. உனக்கு அத்துன்பங்களையெல்லாம் கர்த்தர் கொண்டு வருவார். 61 இந்தப் போதனைகளின் புத்தகத்தில் எழுதப்படாத துன்பங்களையும், நோய்களையும் கர்த்தர் உனக்குக் கொண்டுவருவார். நீ அழிக்கப்படும்வரை கர்த்தர் இதனைத் தொடர்ந்து செய்வார். 62 நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப் போன்று அதிக எண்ணிக்கையுடையவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களிடம் சிலரே மீதியாகவிடப்படுவீர்கள். ஏனென்றால், நீ உனது தேவனாகிய கர்த்தருக்குச் செவிசாய்க்கவில்லை.

63 “கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பதிலும் உனது நாட்டை வளர்ச்சி அடைய செய்வதிலும் மகிழ்ந்தார். அதே வழியில் உன்னை அழிப்பதிலும் அதம்பண்ணுவதிலும் மகிழ்ச்சியடைவார். நீ அந்த நாட்டை உனக்குச் சொந்தமானதாக ஆக்கப்போகிறாய், ஆனால் ஜனங்கள் அந்த நாட்டைவிட்டு உன்னை அப்புறப்படுத்துவார்கள். 64 கர்த்தர் உங்களை உலக நாட்டு குடிகளினிடையில் சிதறடிப்பார். அங்கே நீ கல்லாலும், மரத்தாலும் ஆன பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்வாய். அவர்கள் உன்னாலும் உனது முற்பிதாக்களாலும் ஆராதிக்கப்படாத பொய்த் தெய்வங்கள்.

65 “இந்நாட்டு குடிகளுக்குள்ளே நீ சமாதானத்தைப் பெறமாட்டாய், உனக்கு ஓய்வு கொள்ள இடமிருக்காது. கர்த்தர் உனது மனம் முழுவதையும் கவலைகளால் நிரப்புவார். உனது கண்கள் சோர்வை உணரும். நீ மிகுந்த மனசஞ்சலம் அடைவாய். 66 நீ எப்பொழுதும் ஆபத்துக்களுக்கிடையில் பயத்தோடு இருப்பாய். நீ இரவும், பகலும் பயப்படுவாய். நீ உனது வாழ்க்கையைப் பற்றிய உறுதி இல்லாமல் இருப்பாய். 67 காலையில் நீ, ‘எப்பொழுது சாயங்காலம் வருமோ’ என்றும், மாலையில் ‘இது காலையாக இருக்க விரும்புகிறேன்’ என்றும் சொல்லுவாய். ஏனென்றால், உன் மனதில் பயம் இருக்கும். நீ தீயவற்றைப் பார்ப்பாய். 68 கப்பல்களில் கர்த்தர் உன்னை மீண்டும் எகிப்திற்கு அனுப்புவார். உங்களை மீண்டும் அனுப்பமாட்டேன் என்று நான் சொன்னேன். ஆனால், கர்த்தர் உங்களை அனுப்புவார். எகிப்தில் உங்கள் பகைவர்களுக்கு நீங்களே உங்களை அடிமைகளாக விற்பீர்கள். ஆனால் உங்களை யாரும் வாங்கமாட்டார்கள்.”

மோவாபில் உடன்படிக்கை

29 கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களோடு ஓரேப் மலையின் (சீனாய்) மேல் உடன்படிக்கை செய்தார். அவர்கள் மோவாபில் இருக்கும்போது உடன்படிக்கையோடு கர்த்தர், இன்னொரு உடன்படிக்கையைச் செய்துகொள்ளும்படி மோசேக்குக் கட்டளையிட்டார். இதுதான் அந்த உடன்படிக்கை:

மோசே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் கூட்டி அழைத்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் கர்த்தர் எகிப்தில் செய்த எல்லாவற்றையும் பார்த்தீர்கள். அவர் பார்வோனுக்கும், பார்வோனின் அதிகாரிகளுக்கும், நாடு முழுவதற்கும் செய்தவற்றை நீங்கள் பார்த்தீர்கள். அவர் கொடுத்த பெருந் துன்பங்களையும் நீங்கள் பார்த்தீர்கள். அவர் செய்த அற்புதங்களையும், வியக்கத்தக்கவற்றையும் பார்த்தீர்கள். ஆனால், இன்றுவரை என்ன நடந்தது என்று நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றி உண்மையிலேயே புரிந்துகொள்ள கர்த்தர் அனுமதிக்கவில்லை. கர்த்தர் 40 ஆண்டுகளாக உங்களை வனாந்தரத்தில் வழி நடத்தினார். அக்காலம் முழுவதும் உங்கள் ஆடைகளும் பாதரட்சைகளும் கிழிந்து போகவில்லை. உங்களோடு எவ்வித உணவும் இருக்கவில்லை. உங்களிடம் குடிப்பதற்குத் திராட்சைரசமோ வேறு பானமோ இருக்கவில்லை. ஆனால், கர்த்தர் உங்களைக் கவனிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவரே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதைப் புரிந்து கொள்ளும்படி அவர் இதனைச் செய்தார்.

“நீங்கள் இந்த இடத்திற்கு வந்தீர்கள். நமக்கு எதிராகச் சண்டையிட எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் வந்தார்கள். ஆனால் நாம் அவர்களைத் தோற்கடித்தோம். பிறகு நாம் அவர்களுடைய நாடுகளை எடுத்து ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் கொடுத்தோம். இந்த உடன்படிக்கையில் உள்ள அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிந்தால் பிறகு நீ செய்கிற எல்லாவற்றிலும் தொடர்ந்து வெற்றிபெறுவாய்.

10 “இன்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தலைவர்கள், அதிகாரிகள், மூப்பர்கள் மற்றும் எல்லா மனிதர்களும், 11 உங்கள் மனைவிகளும் பிள்ளைகளும் இங்கே இருக்கிறார்கள். உங்களிடையே அயல் நாட்டுக் குடிகள் வாழ்கிறார்கள். அவர்கள் உங்களுக்கென்று மரத்தை வெட்டி, தண்ணீரைக்கொண்டு வருகிறார்கள். 12 உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் உடன்படிக்கை செய்ய நீங்கள் அனைவரும் இங்கே இருக்கிறீர்கள். கர்த்தர் இன்று உங்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்கிறார். 13 இந்த உடன்படிக்கையோடு, கர்த்தர் உங்களைத் தமது சொந்த விசேஷமான ஜனங்களாக்கிக்கொண்டிருக்கிறார். அவர்தாமே உங்கள் தேவன் ஆவார். அவர் இதை உனக்குக் கூறுகிறார். அவர் உனது முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோர்களுக்கு வாக்களித்திருக்கிறார். 14 கர்த்தர் இந்த உடன்படிக்கையை தமது வாக்குறுதிகளோடு உங்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை. 15 நமது தேவனாகிய கர்த்தருக்கு முன்பு நிற்கிற நம் அனைவரோடும் அவர் உடன்படிக்கை செய்திருக்கிறார். ஆனால் இந்த உடன்படிக்கை இன்று நம்மோடு இங்கே இல்லாத நமது சந்ததிகளுக்கும் உரியதாகிறது. 16 நாம் எகிப்து நாட்டில் எப்படி வாழ்ந்தோம் என்றும், நாம் கடந்து வந்த வழியிலுள்ள இந்நாடுகளில் எப்படிப் பயணம் செய்தோம் என்றும் நினைத்துக்கொள்ளுங்கள். 17 அவர்களது வெறுக்கத்தக்க பொருட்களான மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும், தங்கத்தாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களை பார்த்தீர்கள். 18 இங்கே ஒரு ஆணோ, பெண்ணோ, கோத்திரமோ இன்று, நமது தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகாதபடி உறுதியாயிருங்கள். அந்நிய நாடுகளிலுள்ள தெய்வங்களுக்கு சேவை செய்ய எவரும் போகவேண்டாம். அவ்வாறு செய்கிற ஜனங்கள் கசப்பும், விஷத் தன்மையும் உள்ள கனியுள்ள செடி போல இருப்பார்கள்.

19 “ஒருவன் இந்தச் சாபங்களைக் கேட்கலாம். ஆனால் அவன் தன்னை ஆறுதல்படுத்திக்கொண்டு தனக்குள், ‘நான் என் விருப்பம் போல்தான் செய்வேன். எனக்கு எந்தத் தீமையும் ஏற்படாது’ என்று சொல்லலாம். அவன் தனக்கு மட்டும் தீமையை வரவழைப்பதில்லை. ஆனால் எல்லோருக்கும், நல்லவர்களுக்கும் கூடத் தீமையை வரவழைக்கிறான். 20-21 கர்த்தர் அவனை மன்னிப்பதில்லை. அவன்மேல் கர்த்தர் கோபமும் எரிச்சலும் அடைவார். அவனை கர்த்தர் தண்டிப்பார். கர்த்தர் அவனது பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப் போடுவார். கர்த்தர் அவனை முழுமையாக அழிப்பார். இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாத் தீமைகளும் அவனுக்கு ஏற்படும். இந்தப் போதனைகளின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள உடன்படிக்கையின் ஒரு பகுதியாக அவை இருக்கும்.

22 “எதிர்காலத்தில் உங்கள் சந்ததிகளும், தொலை தூரத்து அயல்நாட்டுக் குடிகளும் இந்நாடு எவ்வாறு பாழானது என்று காண்பார்கள். கர்த்தர் இந்த நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிற நோய்களையும் பார்ப்பார்கள். 23 அனைத்து நாடுகளும் பயனற்றுப்போகும். எரிகின்ற கந்தகத்தால் அழிக்கப்பட்டு உப்பால் மூடப்படும். எதுவும் நடுவதற்கு ஏற்றதாக பூமி இருக்காது. களைகள் கூட வளராத அளவிற்குப் பாழாய் போகும். கர்த்தர் மிகக் கோபத்தோடு இருந்தபோது, நகரங்களான சோதோமையும், கொமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் அழித்தது போன்று இந்த நாடும் அழிக்கப்படும்.

24 “‘கர்த்தர் இந்த நாட்டிற்கு ஏன் இவ்வாறு செய்தார்? அவர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?’ மற்ற அனைத்து நாடுகளும் கேட்கும். 25 அதன் பதில் இவ்வாறு இருக்கும்: ‘கர்த்தர் கோபமாக இருக்கிறார். ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கையை விட்டுவிலகிப் போனார்கள். அவர்களை கர்த்தர் எகிப்தை விட்டு வெளியே கொண்டுவந்தபோது அவர்களோடு அவர் செய்த உடன்படிக்கையை பின்பற்றுவதை நிறுத்தினர். 26 இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களுக்கும், இதற்குமுன்பு தொழுதுகொள்ளாத தெய்வங்களுக்கும் பணிவிடை செய்யத் தொடங்கினார்கள். அத்தெய்வங்களை ஆராதிக்க வேண்டாம் என்று கர்த்தர் அந்த ஜனங்களிடம் கூறினார். 27 அதனால்தான், கர்த்தர் அந்நாட்டு ஜனங்களுக்கு எதிராக மிகவும் கோபங்கொண்டார். எனவே, புத்தகத்தில் எழுதப்பட்ட எல்லா சாபங்களையும் அவர்களுக்கு அவர் கொண்டு வந்தார். 28 கர்த்தர் அவர்கள்மேல் மிகவும் கோபங்கொண்டு எரிச்சல் அடைந்தார். எனவே, அவர்களை அவர் அந்நாட்டைவிட்டு வெளியே எடுத்தார். அவர் அவர்களை இன்று இருக்கிற நாட்டில் விட்டார்.’

29 “நமது தேவனாகிய கர்த்தர் சில காரியங்களை இரகசியமாக வைத்துள்ளார். அவற்றை அவர் மட்டுமே தெரிந்திருக்கிறார். ஆனால் கர்த்தர் தமது போதனைகளை நமக்கும் நமது சந்ததிகளுக்கும் என்றென்றைக்கும் கொடுத்திருக்கிறார். அந்தச் சட்டத்திலுள்ள எல்லா கட்டளைகளுக்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும்.

மாற்கு 14:54-72

54 பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றான். ஆனால் இயேசுவை நெருங்கவில்லை. தலைமை ஆசாரியனின் அரண்மனைக்குள் நுழைந்தான். அப்போது சில காவலர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். பேதுருவும் நெருப்பருகில் சென்றான்.

55 தலைமை ஆசாரியரும், மற்றவர்களும் இயேசுவைக் கொல்லக் குற்றங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். யூத ஆலோசனைச் சங்கத்தினரால் இயேசுவைக் கொல்வதற்குரிய எவ்விதக் குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. 56 பலர் வந்து அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துப் போகவில்லை.

57 பின்பு சில மக்கள் எழுந்து அவர்மேல் தவறாகக் குற்றம் சாட்டினர். 58 “‘நான் இந்த ஆலயத்தை இடித்துப் போடுவேன். இது மனிதர்களால் கட்டப்பட்டது. நான் வேறு ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன். அது மனிதர்களால் கட்டப்படாதது’ என்று இவன் கூற நாங்கள் கேட்டோம்” என்றார்கள். 59 ஆனால் அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்றுக்கொள்ளப்படாமல் போயிற்று.

60 தலைமை ஆசாரியன் அவர்களுக்குமுன் எழுந்து நின்றான். அவன் இயேசுவிடம், “இந்த மக்கள் உமக்கு எதிராகக் கூறுகின்றனர். இவற்றுக்கு உம் பதில் என்ன? இவர்கள் சொல்வது உண்மையா?” என்று கேட்டான். 61 ஆனால் இயேசு எதுவும் கூறவில்லை.

தலைமை ஆசாரியன் இயேசுவிடம், “நீர் கிறிஸ்துவா? ஆசீர்வதிக்கப்பட்ட தேவனின் குமாரனா?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டான்.

62 இயேசுவோ, “ஆம். நான் தேவ குமாரன்தான். எதிர்காலத்தில் மனித குமாரன் சர்வ வல்லவரின் வலது பக்கத்தில் இருப்பதைக் காண்பீர்கள். பரலோக இராஜ்யத்தில் மேகங்களின் நடுவே மனித குமாரன் வருவதைப் பார்ப்பீர்கள்” என்றார்.

63 இதைக் கேட்டதும் தலைமை ஆசாரியனுக்குக் கோபம் வந்தது. அவன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “நமக்கு மேலும் சாட்சிகள் தேவையில்லை. 64 தேவனுக்கு எதிராக இவன் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள். என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

அனைத்து மக்களும் இயேசுவைக் குற்றவாளி என்றனர். அவரைக் கொல்லப்பட வேண்டிய குற்றவாளி என்றனர். 65 சிலர் இயேசுவின் மீது காறித்துப்பினார்கள். அவரது கண்களை மூடினர், அவரைக் குட்டினர். “நீ தீர்க்கதரிசி என்பதை எங்களுக்கு நிரூபித்துக் காட்டு” என்று சொன்னார்கள். பிறகு காவற்காரர்கள் இயேசுவை வெளியே கொண்டுபோய் அடித்தனர்.

பேதுருவின் மறுதலிப்பு(A)

66 அப்போது பேதுரு வீட்டின் முற்றத்தில் இருந்தான். அம்மாளிகையில் உள்ள வேலைக்காரப் பெண் பேதுருவிடம் வந்தாள். 67 பேதுரு நெருப்பு காய்ந்துகொண்டிருந்தான். அவள் பேதுருவை மிகவும் நெருக்கத்தில் பார்த்தாள்.

“நாசரேத் ஊரானாகிய இயேசுவோடு நீயும் இருந்தாய் அல்லவா?” என்று கேட்டாள் அவள்.

68 ஆனால் பேதுருவோ “நான் இயேசுவோடு இருந்ததே இல்லை” என்று மறுத்தான். மேலும், “நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எனக்குத் தெரியவுமில்லை, புரியவுமில்லை” என்று கூறினான். பிறகு பேதுரு விலகி வெளியே வாசல் மண்டபத்துக்குச் சென்றான்.

69 மீண்டும் அந்த வேலைக்காரப் பெண் பேதுருவைக் கவனித்தாள். அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் அவள், “இயேசுவின் சீஷர்களுள் இவனும் ஒருவன்” என்றாள். 70 பேதுரு, மீண்டும் அவள் சொல்வது உண்மையில்லை என்று கூறினான்.

கொஞ்ச நேரம் சென்றதும், பேதுரு அருகில் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பேதுருவிடம், “இயேசுவின் சீஷர்களுள் நீயும் ஒருவன். நீயும் கூட கலிலேயாவில் இருந்து வருகிறவன்” என்றனர்.

71 பேதுரு சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கி, “நான் தேவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீங்கள் பேசுகிற அந்த மனிதனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.

72 பேதுரு இவ்வாறு சொன்னதும் சேவலானது இரண்டாம் முறையாகக் கூவியது. இயேசு சொல்லி இருந்ததைப் பேதுரு நினைத்துப் பார்த்தான். “இன்று இரவு சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்னால் நீ மூன்று முறை என்னை மறுதலிப்பாய்” என்று சொல்லி இருந்தார். இதனால் துயருற்று பேதுரு கதறியழுதான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center