Old/New Testament
பொய்த் தீர்க்கதரிசிகள்
13 “ஒரு தீர்க்கதரிசி அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவன் ஒருவன் உங்களிடம் வந்து, ஒரு அடையாளத்தையோ அல்லது ஒரு அற்புதத்தையோ காட்டுவதாகச் சொல்லுவான். 2 அவன் சொன்னபடி அந்த அடையாளமோ, அற்புதமோ, உண்மையிலேயே நடந்திடலாம். நீங்கள் அறிந்திராத அந்நிய தெய்வங்களைச் சேவிப்போம் என்று அவன் உங்களிடம் சொல்வான். 3 அந்த தீர்க்கதரிசி அல்லது கனவை விளக்கிக் கூறுபவன் சொல்லுவதைக் கேட்காதீர்கள் ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் மனப்பூர்வமாகவும், ஆத்ம திருப்தியாகவும், கர்த்தர் மீது அன்பு செலுத்துகின்றீர்களா என்பதை அறிய விரும்புகிறார். 4 உங்கள் தேவனாகிய கர்த்தரை மதித்து அவரையே பின்பற்ற வேண்டும்! கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் உங்களுக்குச் சொன்னவற்றையேச் செய்யுங்கள். கர்த்தருக்குச் சேவை செய்வதிலிருந்து ஒருபோதும் விலகிவிடாதீர்கள்! 5 அதுமட்டுமின்றி, நீங்கள் அந்தத் தீர்க்கதரிசியை அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவனைக் கொல்ல வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக உங்களைத் திசை திருப்பப் பேசினான். உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்தார். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வாழும்படி கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து உங்களை வெளியே இழுக்க அந்த ஆள் முயற்சித்தான். எனவே நீங்கள் அவனைக் கொன்று அந்தத் தீமையை உங்களிடமிருந்து வெளியேற்றுங்கள்.
6 “யாராவது ஒருவன், அது உங்கள் உடன் பிறந்த சகோதரன், உங்கள் மகன், உங்கள் மகள், நீங்கள் நேசிக்கின்ற உங்கள் மனைவி அல்லது உங்கள் உயிர் நண்பன், இவர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்களுள் ஒருவர் உங்களிடம் வந்து, ‘நாம் போய் அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்யலாம்’ என்று அந்நிய தெய்வங்களை நீங்கள் வழிபட இரகசியமாக கூறலாம். (இந்தத் தெய்வங்கள் உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் தெரியவே தெரியாது. 7 அந்தத் தெய்வங்கள் உங்களைச் சுற்றியுள்ள தேசங்களில் வசிக்கின்ற ஜனங்களின் தெய்வங்களாகும். அவைகள் உங்கள் சமீபத்திலும் தூரத்திலும் உள்ளன.) 8 நீங்கள் உங்களைத் திசைத்திருப்பக் கூறியவனின் பேச்சை ஒத்துக்கொள்ளாதீர்கள். அவன் பேச்சைக் கேட்காதீர்கள். அவனுக்கு இரக்கம் காட்டாதீர்கள். அவனை ஒளித்து வைக்காதீர்கள். அவன் தப்பும்படி விட்டுவிடக் கூடாது. 9-10 அதற்குப் பதில் அவனை நீங்கள் கொன்றுவிட வேண்டும்! கற்களால் அவனை அடித்துக் கொல்லுங்கள், அவ்வாறு செய்வதில் நீங்கள் முதன்மையாக இருங்கள். பின் அவன் மரிக்கும்வரை மற்ற எல்லா ஜனங்களும் அவன்மீது கற்களை எறிய வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து உங்களை விலக்கி இழுக்க முயன்றான். எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை வெளியே கொண்டுவந்த உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து உங்களை வெளியே இழுக்க முயற்சி செய்தவன் அவன் 11 பின் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும், அதைக் கேட்டுப் பயந்து உங்களின் நடுவே இப்படிப்பட்ட தீய காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.
அழிக்க வேண்டிய நகரங்கள்
12 “உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வாழ்வதற்கான நகரங்களைத் தந்துள்ளார். சில நேரங்களில் நீங்கள் அந்த நகரங்களில் ஏதாவது ஒரு நகரத்தைப் பற்றித் தீய செய்திகளைக் கேட்கலாம். நீங்கள் கேட்கும் அந்தச் செய்தியானது, 13 உங்கள் தேசத்தைச் சார்ந்த சில தீயவர்கள் அவர்களது நகர ஜனங்களை தீயச் செயல்களைச் செய்யுமாறு தூண்டினார்கள் என்பதாகும். அவர்கள் அவர்களது நகர ஜனங்களிடம் ‘அந்நிய தெய்வங்களை தொழுது கொண்டு சேவை செய்வோம் வாருங்கள்!’ என்று அழைத்த செயலே அதுவாகும். (அந்தத் தெய்வங்கள் நீங்கள் இதற்கு முன் அறிந்திராத அந்நிய தெய்வங்கள்.) 14 இப்படிப்பட்டச் செய்திகளை நீங்கள் கேட்டீர்கள் என்றால், அனைவரும் அதை நன்றாகக் கேட்டு ஆராய வேண்டும். நீங்கள் விசாரித்தது உண்மை என்றால், அப்படிப்பட்ட எரிச்சலூட்டும் காரியம் உங்கள் நடுவே நடந்தது உண்மையென்று கண்டீர்கள் என்றால், 15 பின் அந்த நகர ஜனங்களை நீங்கள் தண்டிக்க வேண்டும். நீங்கள் அவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும். அவர்களது விலங்குகளையும் கூட கொன்றுவிடவேண்டும். அந்த நகரத்தை முழுவதுமாக நாசமாக்கி அழித்து விட வேண்டும். 16 பின் நீங்கள் அங்கு கைப்பற்றிய அனைத்துப் பொருட்களையும், விலையுயர்ந்தப் பெருட்களையும், நகரத்தின் நடுப்பகுதிக்குக் கொண்டுவந்து நகரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும், தீயிட்டுக் கொளுத்த வேண்டும். அது உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் செய்யும் தகனபலியாகும், அந்த நகரமானது வெறும் வெற்றிடமாக மண்மேடாகவே என்றென்றும் இருக்கும். அந்த நகரம் மீண்டும் கட்டப்படவே கூடாது. 17 அந்த நகரில் உள்ள எல்லாப் பொருளும் அழிக்கப்படுவதற்காக தேவனிடம் கொடுக்கப்பட வேண்டும். ஆகையால் நீங்கள் அவற்றில் எந்த ஒரு பொருளையும் உங்களுக்காக வைத்துக்கொள்ளக் கூடாது. இப்படி நீங்கள் செய்வீர்கள் என்றால் கர்த்தர் உங்கள் மீதுள்ள கடுங்கோபத்தை நிறுத்திவிடுவார். கர்த்தர் உங்களுக்கு இரக்கம் காட்டுவார். உங்களுக்காக வருந்துவார். அவர் உங்கள் தேசத்தை உங்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கின்படி வளார்ச்சி அடையச் செய்வார். 18 இவைகள் நடக்க வேண்டுமென்றால் நான் இன்று உங்களுக்குத் தரும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கூறியதைக் கேட்டு அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லும் சரியானவற்றையெல்லாம் நீங்கள் கண்டிப்பாகச் செய்யவேண்டும்.
இஸ்ரவேலர் தேவனின் விசேஷ ஜனங்கள்
14 “நீங்கள் எல்லோரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகள். உங்களில் ஒருவன் மரித்ததற்காக நீங்கள் உங்களை கீறிக்கொள்ளாமலும், மொட்டையடித்து சவரம் செய்யாமலும் இருப்பீர்களாக. 2 ஏனென்றால் நீங்கள் மற்ற ஜனங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். இந்த உலகில் உள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே தமது சொந்தமான விசேஷ ஜனங்களாக இருக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
இஸ்ரவேல் ஜனங்கள் உண்ண அனுமதிக்கப்பட்ட உணவுகள்
3 “கர்த்தர் வெறுக்கின்ற எந்தப் பொருளையும் நீங்கள் உண்ணக்கூடாது. 4 நீங்கள் உண்ணத்தகுந்த மிருகங்களாவன: மாடுகள், செம்மறி ஆடு, வெள்ளாடு, 5 மான், வெளிமான், கலைமான், வரையாடு, புள்ளிமான், சருகுமான், புல்வாய், ஆகியனவாகும். 6 நீங்கள் கால்களில் விரிகுளம்புகளுடைய மிருகங்களையும், குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கின்ற மிருகங்களையும், அசைபோடுகின்ற சகல மிருகங்களையும உண்ணலாம். 7 ஆனால் ஒட்டகங்களையும், முயல்களையும் குழிமுயல்களையும் உண்ணக் கூடாது. இவைகள் அசைபோடும் மிருகங்களாக இருந்தாலும் அவைகளுக்கு விரிகுளம்புகள் இல்லை. ஆகவே அந்த மிருகங்கள் உங்களுக்கு அசுத்தமான உணவாகும். 8 நீங்கள் பன்றிகளை உண்ணக்கூடாது. அவை விரிகுளம்பு உள்ளதாய் இருந்தாலும் அசை போடாது. ஆகவே இவை உங்களுக்கு சுத்தமான உணவு இல்லை. இவைகளின் இறைச்சியை உண்ணக்கூடாது. இவற்றின் மரித்த உடலைக்கூட தொடக்கூடாது.
9 “நீங்கள் துடுப்பும், செதில்களும் உள்ள எந்த வகையான மீனையும் உண்ணலாம். 10 ஆனால் துடுப்புகளும். செதில்களும் இல்லாத தண்ணீருக்குள் வசிக்கும் எதையும் உண்ணக்கூடாது. இவை உங்களுக்கான சுத்தமான உணவு அல்ல.
11 “சுத்தமான எந்தப் பறவையையும் நீங்கள் உண்ணலாம். 12 ஆனால் கழுகுகள், கருடன்கள், கடலுராஞ்சிகள் ஆகியவற்றையும், 13 பைரி, வல்லூற்று எவ்வகை பருந்தும், 14 எந்த வகையான காகங்களும், 15 தீக்குருவி, கூகை, செம்புகம், சகலவிதமான டேகையும், 16 ஆந்தை, கோட்டான், நாரைகள், 17 கூழக் கடா, குருகு, தண்ணீர்க் காகம், 18 கொக்கு, சகலவித ராஜாளியும், புழுக்கொத்தி, வௌவால், ஆகியவற்றை உண்ணக்கூடாது.
19 “பறப்பனவற்றில் எல்லா வகையான ஊர்வன யாவும் சுத்தமற்றவை. ஆகவே அவற்றை உண்ணக் கூடாது. 20 ஆனால், சுத்தமான பறவைகள் எவற்றையும் நீங்கள் உண்ணலாம்.
21 “தானாக மரித்துப்போன எந்த விலங்கையும் உண்ண வேண்டாம். நீங்கள் அவற்றை உங்கள் ஊரிலுள்ள வழிப்போக்கருக்குக் கொடுத்துவிடலாம், அவர்கள் அதனை உண்ணலாம். அல்லது அந்நியருக்கு விற்றுவிடலாம். ஆனால் நீங்கள் உங்களுக்குள் அவற்றை உண்ணக்கூடாது. ஏனென்றால் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்தமான ஜனங்கள்.
“வெள்ளாட்டுக் குட்டியை, அதின் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம்.
பத்தில் ஒரு பாகத்தைக் கொடுப்பது
22 “உங்கள் வயல்களின் எல்லா விளைச்சலிலுமிருந்து பத்தில் ஒரு பங்கை வருடந்தோறும் தனியாக எடுத்து வையுங்கள். 23 அதை நீங்கள் கர்த்தர் தமக்கென்று தெரிந்து கொண்ட சிறப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரோடு இருக்க நீங்கள் அங்கே செல்ல வேண்டும். அந்த இடத்தில் உங்களது தானியத்திலும், உங்களது திராட்சைரசத்திலும், உங்கள் எண்ணெயிலும் எடுத்துவைத்த பத்தில் ஒரு பங்கையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடு மாடுகளின் தலையீற்றையும் கொண்டுவந்து கர்த்தர் உங்களுக்கு நியமிக்கும் தேவாலயத்தில் உண்டு மகிழுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதையளிக்கும்படி எப்பொழுதும் நினைவாயிரு. 24 ஆனால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கின்றபோது தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொண்ட இடமானது நீங்கள் குடியிருக்கிற இடத்திலிருந்து, மிகத் தொலைவில் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் பத்தில் ஒரு பங்கு காணிக்கைப் பொருட்களை தூக்கி எடுத்துச் செல்ல இயலாமல் போகலாம். அப்படி நடக்குமென்றால் 25 நீங்கள் ஒதுக்கிவைத்த பங்குப் பொருட்களை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்திற்கு வரவேண்டும். 26 தேவாலயத்திற்கு வந்த பின்பு, நீங்கள் உங்கள் தேவைக்கேற்ற மாடுகள், ஆடுகள், திராட்சைரசம் போன்ற உணவுப் பொருட்களை அந்த பணத்தினால் வாங்கிக்கொள்ளலாம், பின்பு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உண்டு மகிழலாம். 27 உங்கள் நகரில் வசிக்கின்ற லேவியரை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (அவர்களுக்கும் உங்கள் உணவை பகிர்ந்தளியுங்கள்) ஏனெனில், அவர்களுக்கு உங்களைப் போன்று எந்த சொத்தும் சுதந்திரமும் கிடையாது.
28 “மூன்று ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் அந்த ஆண்டு உங்களுக்குக் கிடைத்த பலன் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை ஒதுக்கி வைக்கவேண்டும். மற்ற ஜனங்கள் பயன்படுத்தக் கூடிய உங்கள் பட்டணங்களில் அந்த உணவுப் பொருட்களை சேர்த்து வைத்திருங்கள். 29 இந்த உணவுப் பொருட்கள் லேவியர்களுக்கு சொந்தம் ஆகும். ஏனென்றால், அவர்களுக்கென்று சொந்தமான எந்த நிலமும் அவர்களுக்கு இல்லை. மேலும் இந்த உணவுப் பொருட்கள் உங்கள் ஊரில் தேவை உள்ள ஜனங்களுக்கும் ஆகும். அது அயல்நாட்டு குடிகளுக்கும், விதவைகளுக்கும், அநாதைகளுக்கும், உரியது, அவர்கள் வந்து உண்டு திருப்தி அடையட்டும். இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தீர்கள் என்றால் பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.
கடன்களை ரத்து செய்யும் விசேஷ ஆண்டு
15 “ஏழு ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டும். 2 நீங்கள் செய்யவேண்டிய முறையாவது: ஒவ்வொருவரும் தான் மற்ற இஸ்ரவேலருக்குக் கடனாகக் கொடுத்த பணத்தை ரத்து செய்துவிட வேண்டும். அவன் மற்ற இஸ்ரவேல் சகோதரனிடம் அந்தப் பணத்தை திரும்ப தன்னிடம் செலுத்துமாறு கேட்கக்கூடாது. ஏனென்றால், கர்த்தர் உங்களுக்குக் கூறியதின்படி அந்தக் கடனை அவ்வாண்டிலேயே ரத்து செய்திட வேண்டும். 3 நீங்கள் அந்நியர்களுக்குக் கொடுத்த கடனை திரும்பச் செலுத்துமாறு கேட்கலாம். ஆனால், உன் இஸ்ரவேல் சகோதரனிடம் அவ்வாறு கேட்கக்கூடாது. 4 உங்கள் நாட்டில் ஏழை ஜனங்கள் யாரும் இருக்கக் கூடாது. ஏனென்றால், கர்த்தர் இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றார். கர்த்தர் உங்களை வெகுவாய் ஆசீர்வதிப்பார். 5 ஆனால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால் மாத்திரம் இது நடக்கும். நான் இன்று உங்களுக்குச் சொன்ன தேவனுடைய ஒவ்வொரு கட்டளையையும் நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும். 6 பின்பு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி உங்களை ஆசீர்வதிப்பார். அதனால், நீங்கள் பல ஜாதிகளுக்கு கடன் கொடுப்பீர்கள். ஆனால், நீங்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்கும் அவசியம் உங்களுக்கு இருக்காது. நீங்கள் அவர்களை ஆளலாம். அவர்கள் யாரும் உங்களை ஆள இயலாது.
7 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும், இந்த தேசத்தில் உங்களில் யாராவது ஒருவன் ஏழை எளியவனாக இருந்தால், அவர்கள் மத்தியில் நீங்கள் யாரும் சுயநலமுள்ளவர்களாக இருந்துவிடக்கூடாது. நீங்கள் அந்த ஏழை எளியவனுக்குக் கைகொடுத்து உதவ மறுத்துவிடக் கூடாது. 8 நீங்கள் அவனுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டவேண்டும். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கடன் கொடுத்து உதவவேண்டும்.
9 “கடன்களை ரத்து செய்யும் ஏழாவது ஆண்டு சமீபமாக வந்துவிட்டது என்பதால், ஏழைக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. இப்படிப்பட்ட ஒரு கெட்ட சிந்தை உன் மனதில் நுழைய இடம் கொடாதே. தேவை உள்ள ஏழையைக் குறித்து ஒருபோதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே. அவனுக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. அப்படி நீங்கள் உதவவில்லையென்றால், அவன் உங்களுக்கு எதிராக கர்த்தரிடத்தில் முறையிடுவான். அப்போது கர்த்தர் அதை உங்கள் மேல் குற்றமாகச் சுமத்துவார்.
10 “அந்த ஏழை நபருக்குத் தாராளமாகக் கொடுங்கள். அவர்களுக்குக் கொடுப்பதை இழிவாகக் கருதாதீர்கள், ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், நீங்கள் இந்த நற்செயலைச் செய்வதால் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர் ஆசீர்வதிப்பார். 11 தேசத்திலே ஏழை எளியவர்கள் எப்போதும் இருப்பார்கள். அதனால் தான் உன் தேசத்தில் உள்ள ஏழை எளிய சகோதரனுக்கு நீங்கள் உதவத் தயாராக இருக்கவேண்டுமென நான் கட்டளையிடுகிறேன். அவர்களுக்குத் தேவைப்படும்போது கொடுங்கள்.
அடிமைகள் விடுதலை பெற அனுமதித்தல்
12 “எபிரெய ஆணையோ, பெண்ணையோ நீங்கள் அடிமைகளாக விலை கொடுத்து வாங்கியிருந்தால், நீங்கள் அவர்களை ஆறு ஆண்டுகளுக்கு உங்களுக்கு சேவை செய்ய வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஏழாவது ஆண்டு அவர்களை உங்களிடமிருந்து விடுதலை பெற்றுச் செல்ல அனுமதிக்க வேண்டும். 13 அவ்வாறு அவர்கள் உங்களிடமிருந்து விடுதலையாகிச் செல்லும்போது, அவர்களை ஒன்றுமில்லாதவர்களாய் அனுப்பிவிடாதீர்கள். 14 நீங்கள் அவர்களுக்கு உங்களது ஆடு மாடுகளில் சிலவற்றையும், கொஞ்சம் தானியத்தையும், கொஞ்சம் திராட்சை ரசத்தையும் கொடுத்து அனுப்ப வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் தாராளமாகக் கொடுக்குமளவு ஏராளமான நன்மைகளால் உங்களை ஆசீர்வதித்தார். அதே போல் நீங்களும் உங்களது அடிமைகளுக்குத் தாராளமாகக் கொடுங்கள். 15 நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை அங்கிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். அதை நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளீர்கள். அதனால்தான் நான் இன்று உங்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கின்றேன்.
16 “ஆனால், உங்களது அடிமைகளுள் ஒருவன், ‘நான் உங்களை விட்டுப் பிரியமாட்டேன்’ என்று உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நேசித்து உங்களுடன் நல்லதொரு வாழ்வைப்பெற்றதனால், கூறிடலாம். 17 நீங்கள் அந்த அடிமையை உங்கள் வீட்டுக் கதவுக்கு எதிராக நிறுத்தி, ஒரு கூர்மையான சிறிய கம்பியினால் அந்த அடிமையின் காதில் ஒரு துளை போடவேண்டும். அவன் உங்களுக்கு என்றைக்கும் அடிமையாயிருப்பான் என்பதை இது காட்டும், உங்களோடு இருக்க விரும்பும் உங்களின் பெண் அடிமைக்கும் இவ்வாறே செய்ய வேண்டும்.
18 “உங்கள் அடிமைகளை விடுதலையாக்கி அனுப்பிவிடுவதை தவறாக எண்ண வேண்டாம். ஆறு ஆண்டுகளாக ஒரு வேலையாளுக்குரிய சம்பளத்தில் பாதிக் கூலிக்கு அவர்கள் உங்களுக்கு சேவை செய்ததை எண்ணிப்பாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார்.
மந்தைகளின் தலையீற்றுகளைப் பற்றிய விதிகள்
19 “உங்கள் மந்தைகளில் உள்ள ஆடு மாடுகளின் தலையீற்று ஆண்களையெல்லாம் கர்த்தருக்குரியதாக்குங்கள். அவற்றை உங்கள் பணிகளுக்காகப் பயன்படுத்தாதீர்கள். அவற்றில் உள்ள தலையீற்று ஆட்டினை மயிர் கத்தரியாமல் இருக்க வேண்டும். 20 ஆண்டுதோறும் அவற்றை நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்திற்கு எடுத்துச்சென்று, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உண்ணுங்கள்.
21 “ஆனால், அந்தக் கால்நடைகளுக்கு முடம், குருடு முதலான எந்த ஒரு பழுது இருந்தாலும் அவற்றை உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம். 22 நீங்கள் உங்கள் வீடுகளிலேயே அவற்றின் இறைச்சியை உண்ணலாம். யார் வேண்டுமானாலும், அசுத்தமானவனும் சுத்தமானவனும் அதை உண்ணலாம். வெளிமான்களையும், கலைமான்களையும் புசிக்கும்படி கொடுக்கப்பட்ட கட்டளையின்படியே இந்த இறைச்சியையும் புசிக்கவேண்டும். 23 ஆனால், அவற்றின் இரத்தத்தை மட்டும் உண்ணாமல், அதைத் தண்ணீரைப்போன்று தரையிலே ஊற்றிவிட வேண்டும்.
மிக முக்கியமான கட்டளை எது?(A)
28 வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான்.
29 அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். 30 நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ [a] இது முதல் கட்டளை. 31 ‘உங்களை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அடுத்தவர்களையும் நேசிக்க வேண்டும்’ [b] என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிட மிக முக்கியமான வேறு கட்டளைகள் எதுவும் இல்லை” என்றார்.
32 அதற்கு அந்த மனிதன், “போதகரே! இது ஒரு நல்ல பதில். நீங்கள் சரியான பதிலையே சொல்லி இருக்கிறீர்கள். கர்த்தர் ஒருவரே நம் தேவன். அவரைத் தவிர வேறு தேவன் இல்லை. 33 ஒருவன் தேவனைத் தன் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். ஒருவன் தன்னை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். இந்தக் கட்டளைகளே, ஏனைய கட்டளைகளைக் காட்டிலும் முக்கியமானவை. இவை தகனபலிகள் போன்றவற்றைவிட மிக முக்கியமானவை” என்றான்.
34 அந்த மனிதன் புத்திசாலித்தனமாகப் பதில் கூறுவதை இயேசு அறிந்து கொண்டார். எனவே அவனிடம், “நீ தேவனின் இராஜ்யத்தை நெருங்கிவிட்டாய்” என்றார். அதற்குப் பிறகு ஒருவருக்கும் இயேசுவிடம் எந்தக் கேள்வியும் கேட்கும் தைரியம் வரவில்லை.
கிறிஸ்து தாவீதின் குமாரனா?(B)
35 பின்னர், இயேசு தேவாலயத்தில் போதித்துக்கொண்டிருந்தார். “கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர்கள் ஏன் சொல்கிறார்கள்? 36 பரிசுத்த ஆவியின் உதவியுடன் தானாக தாவீது கூறுகிறார்:
“‘கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார், நீங்கள் எனது வலது பக்கத்தில் உட்காருங்கள்.
நான் உங்களுடைய பகைவர்களை உங்கள் ஆளுகைக்கு உட்படுத்துவேன்’ (C)
37 தாவீது தானாக அவரை ‘ஆண்டவர்’ என்று அழைக்கிறார். அப்படி இருக்கக் கிறிஸ்து எவ்வாறு தாவீதின் மகனாக இருக்க முடியும்?” என்று இயேசு கேட்டார். ஏராளமான மக்கள் இயேசு சொல்வதைக் கேட்டு மனம் மகிழ்ந்தனர்.
இயேசு யூத ஆசாரியர்களை விமர்சித்தல்(D)
38 தொடர்ந்து இயேசு உபதேசித்துக்கொண்டிருந்தார். “வேதபாரகர்களிடம் கவனமாக இருங்கள். அவர்கள் மதிப்பைத் தரும் நீண்ட ஆடைகளை அணிந்துகொண்டு அங்குமிங்கும் அலைய விரும்புகிறார்கள். சந்தைப் பகுதிகளில் மக்களிடமிருந்து மரியாதை பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். 39 ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளைப் பெற விரும்புகின்றனர். விருந்துகளில் மிக முக்கியான இடங்களில் இருக்க விரும்புகின்றனர். 40 விதவைகளை இழிவாக நடத்தி அவர்களது வீடுகளைத் திருடுகிறார்கள். நீண்ட பிரார்த்தனை செய்து நல்லவர்கள்போல் தோற்றம் தருகிறார்கள். இவர்களை தேவன் மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார்.
கொடுப்பதின் மேன்மை(E)
41 மக்கள் தம் காணிக்கையைச் செலுத்துகிற ஆலய காணிக்கைப் பெட்டியின் அருகில் இயேசு உட்கார்ந்திருந்தார். மக்கள் அதில் காசுகள் போடுவதைக் கவனித்தார். நிறைய பணக்காரர்கள் ஏராளமாகப் பணத்தைப் போட்டார்கள். 42 பிறகு ஓர் ஏழை விதவை வந்து இரண்டு சிறியகாசுகளைப் போட்டாள்.
43 இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த ஏழை விதவை இரண்டு சிறிய காசுகளைத்தான் போட்டாள். உண்மையில் அவள் செல்வந்தர் எவரையும்விட அதிகம் போட்டிருக்கிறாள். 44 அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குத் தேவையில்லாததையே அவர்கள் கொடுத்தார்கள். இவளோ மிகவும் ஏழை. அவள் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிட்டாள். அவள் கொடுத்தது அவளது வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்” என்றார்.
2008 by World Bible Translation Center