Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 1-3

இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே பேசுதல்

இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே அறிவித்தச் செய்தி. யோர்தான் நதிக்குக் கிழக்கில் உள்ள பாலைவனத்தின் பள்ளத்தாக்கில் அவர்கள் இருந்தபொழுது, மோசே அவர்களிடம் சொன்னான். அப்பகுதி சூப்புக்கு எதிராகவும், பாரான் பாலைவனத்திற்கும் தோப்பேல், லாபான், ஆஸரோத், திசாகாப் ஆகிய நகரங்களுக்கு இடையிலும் இருந்தது.

ஓரேப் மலையிலிருந்து (சீனாய்) சேயீர் குன்றுகள் வழியாக காதேஸ்பர்னேயாவுக்கு பயணம் செய்வதற்கு பதினோரு நாட்கள் ஆகும். ஆனால் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பதாண்டுகள் கழிந்தபின்னரே இவ்விடத்தை அடைந்தனர். நாற்பதாவது ஆண்டின் பதினோராவது மாதத்தின் முதல் நாளன்று, மோசே அந்த ஜனங்களிடம் பேசினான். அவர்களிடம் கூறுமாறு தேவன் கட்டளையிட்ட எல்லாவற்றையும் மோசே எடுத்துச் சொன்னான். கர்த்தர் சீகோனையும் ஓகையும் வெற்றிக்கொண்ட பின்னர் இது நடந்தது. (எஸ்பானில் வசித்த சீகோன் எமோரியரின் அரசன். பாசான் மன்னனாகிய ஓக், அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வசித்தான்.) இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதிக்குக் கிழக்கே மோவாப் நிலப்பகுதியில் இருந்தபொழுது, தேவன் கட்டளையிட்டவற்றை மோசே அவர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னான். மோசே,

“நமது தேவனாகிய கர்த்தர் ஓரேப் மலையில் (சீனாய்) நம்மிடம் பேசினார். தேவன் சொன்னது என்னவென்றால்: ‘நீங்கள் நீண்டகாலம் இம்மலையில் தங்கியிருந்தது போதும். எமோரிய ஜனங்கள் வாழும் மலை நாட்டிற்கும், அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களுக்கும் செல்லுங்கள். யோர்தான் பள்ளத்தாக்கு, மலைநாடு, மேற்குச்சரிவுகள், யூதேயாவின் தெற்கிலுள்ள நெகேவ் (பாலைவனப் பகுதி) மற்றும் கடற்கரைப் பகுதிக்கும் செல்லுங்கள். கானான் நிலப்பகுதி மற்றும் லீபனோன் ஆகியவற்றின் வழியாக பெரும் நதியான ஐபிராத்து வரைக்கும் செல்லுங்கள். அந்நிலத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். சென்று எடுத்துக்கொள்ளுங்கள். அந்நிலத்தை உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு நான் வாக்களித்தேன். அந்நிலத்தை அவர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கொடுப்பதாக நான் வாக்களித்தேன்’” என்றார்.

மோசே தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல்

மோசே, “அந்த நாட்களில் நான் ஒருவனாக உங்களை கவனித்துக்கொள்ள இயலாது. 10 இப்பொழுது, உங்களிடம் பலர் இருக்கிறீர்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் மேலும் பலரை சேர்த்துள்ளார். ஆகவே வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போல் நீங்கள் எண்ணிக்கையில் பெருகியுள்ளீர்கள்! 11 உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர், உங்களை இப்பொழுதுள்ளதைப் போல 1,000 மடங்கு எண்ணிக்கையில் அதிகரிக்கச் செய்யட்டும்! அவர் வாக்களித்தபடி உங்களை ஆசீர்வதிக்கட்டும்! 12 ஆனால் உங்களை கவனித்துக்கொள்ளவும், உங்கள் வாதங்களைத் தீர்த்து வைக்கவும், என் ஒருவனால் முடியவில்லை. 13 ஆகவே ‘ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் சிலரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக்குவேன். புரிந்துகொள்ளும் ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த ஞானவான்களைத் தேர்ந்தெடுங்கள்’ என்று நான் சொன்னேன்.

14 “அதற்கு நீங்கள், ‘நீர் செய்யச்சொன்ன செயல் நல்ல செயல்’ என கூறினீர்கள்.

15 “ஆகவே உங்கள் கோத்திரங்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த அறிவும் அனுபவமும் நிறைந்தவர்களை உங்கள் தலைவர்களாக்கினேன். இப்படியாக, 1,000 பேர்களுக்குத் தலைவர்களையும், 100 பேர்களுக்குத் தலைவர்களையும், 50 பேர்களுக்குத் தலைவர்களையும், 10 பேர்களுக்குத் தலைவர்களையும், உங்களுக்கு ஏற்படுத்தினேன். மேலும் உங்கள் ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் அதிகாரிகளையும் கொடுத்தேன்.

16 “அந்த சமயத்தில் அந்த நீதிபதிகளிடம், ‘உங்கள் ஜனங்களுக்கு இடையிலான வாதங்களைக் கேளுங்கள். ஒவ்வொரு வழக்கிற்கும் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையாக இருங்கள். வழக்கு இரு இஸ்ரவேலர்களுக்கு இடையிலா அல்லது ஒரு இஸ்ரவேலனுக்கும் ஒரு வெளிநாட்டவனுக்கும் இடையிலா என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு வழக்குகளையும் நடுநிலையுடன் தீர்க்கவேண்டும். 17 நீங்கள் நியாயம் வழங்கும்பொழுது, ஒருவன் மற்றவனைவிட முக்கியத்துவம் வாய்ந்தவன் என நினைக்கக் கூடாது. நீங்கள் அனைவரையும் சமமாகக் கருதவேண்டும். நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம், ஏனெனில் உங்கள் தீர்ப்பு தேவனுடையது. ஆனால் கடினமான வழக்காயிருந்தால், என்னிடம் அவ்வழக்கைக் கொண்டு வாருங்கள். நான் நியாயம் வழங்குகிறேன்’ என்று கூறினேன். 18 அதே சமயம், நீங்கள் செய்ய வேண்டிய மற்ற எல்லாவற்றையும் உங்களுக்குக் கூறினேன்.

ஒற்றர்கள் கானானுக்கு செல்லுதல்

19 “பின் நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தோம். ஓரேப் மலையை விட்டு (சீனாய்), எமோரிய ஜனங்களின் மலைநாட்டிற்குப் பயணம் செய்தோம். நீங்கள் கண்ட பெரியதும் கொடூரமானதுமாகிய பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்து காதேஸ்பர்னேயாவை அடைந்தோம். 20 பின் நான் உங்களிடம்: ‘நீங்கள் இப்பொழுது எமோரிய ஜனங்களின் மலைநாட்டிற்கு வந்துள்ளீர்கள். நமது தேவனாகிய கர்த்தர் இந்நாட்டை நமக்குக் கொடுப்பார். 21 அங்கே தெரிகிறது, பாருங்கள்! நீங்கள் போய் அப்பூமியை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்! உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர், நீங்கள் இதைச் செயல்படுத்துமாறு கூறினார். எனவே, பயப்படாதீர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்!’ என்று கூறினேன்.

22 “ஆனால் நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து: ‘அந்த நிலத்தைப் பார்க்க முதலில் சிலரை அனுப்புவோம். அவர்கள் அங்குள்ள வலிமையுள்ளதும், வலிமையற்றதுமாகிய இடங்களைப் பார்த்துவர இயலும். பின் அவர்கள் திரும்பி வந்து நாம் எந்த வழியாகச் செல்லவேண்டும் என்பதைத் தெரிவிப்பார்கள். மேலும் நாம் போக வேண்டிய நகரங்களையும் நமக்கு கூறுவார்கள்’ என்று சொன்னீர்கள்.

23 “அது நல்ல யோசனை என்று நான் நினைத்தேன். ஆகவே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொருவராக மொத்தம் பன்னிரெண்டு பேரைத் தேர்ந்தெடுத்தேன். 24 பின் அந்த ஆட்கள் மலை நாட்டிற்கு ஏறிச் சென்றார்கள். அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கிற்கு மட்டும் சென்று அதைச் சுற்றிப் பார்த்தார்கள். 25 அங்கிருந்து சிலவகைப் பழங்களை நம்மிடம் கொண்டுவந்து கொடுத்து அந்நிலப் பகுதியைப் பற்றி நமக்குக் கூறினார்கள். அவர்கள், ‘நமது தேவனாகிய கர்த்தர், நமக்கு நல்லதொரு நாட்டினைக் கொடுக்கிறார்!’ என்று சொன்னார்கள்.

26 “ஆனால் நீங்களோ அங்கு செல்ல மறுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள். 27 நீங்கள் உங்களது கூடாரங்களுக்குத் திரும்பிச்சென்று குறைகூறத் துவங்கினீர்கள். நீங்கள், ‘கர்த்தர் நம்மை வெறுக்கிறார்! எமோரிய ஜனங்கள் நம்மை அழிப்பதற்காகவே அவர் எகிப்து தேசத்திலிருந்து நம்மை வெளியேற்றினார்! 28 நாம் இப்பொழுது எங்கே செல்லமுடியும்? நம் சகோதரர்கள் (பன்னிரண்டு ஒற்றர்கள்) நம்மை பயமுறுத்திவிட்டார்கள். அவர்கள், “அங்குள்ளவர்கள் நம்மை விடவும் பலசாலிகளாகவும், உயரமானவர்களாகவும் இருக்கிறார்கள்! நகரங்கள் பெரியனவாயும், வானுயர்ந்த சுவர்களைக் கொண்டதாயும் உள்ளன! மேலும் நாங்கள் இராட்சதர்களை அங்கே கண்டோம்!”’ என்று சொன்னீர்கள்.

29 “ஆகவே நான் உங்களிடம்: ‘கலக்கம் அடையாதீர்கள்! அந்த ஜனங்களைக் குறித்துப் பயப்படாதீர்கள்! 30 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்னால் சென்று உங்களுக்காகப் போரிடுவார். அவர் எகிப்தில் செய்ததைப் போலவே இதையும் செய்வார், 31 அவர் பாலைவனத்தில் செய்ததைக் கண்டீர்கள். தன் மகனை ஒருவன் சுமந்து செல்வதைப்போல, தேவன் உங்களை சுமந்து சென்றதைக் கண்டீர்கள். கர்த்தர் உங்களைப் பத்திரமாக இங்கே கொண்டு வந்து சேர்த்தார்’ என்று கூறினேன்.

32 “ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் நீங்கள் நம்பவில்லை! 33 உங்கள் பயணத்தின்போது, நீங்கள் முகாம் அமைக்கத் தகுந்த இடத்தைத் தேட உங்களுக்கு முன்பாகச் சென்றார். அவர் இரவில் அக்கினியாலும், பகலில் மேகத்திலும் உங்களுக்கு வழிகாட்டிச் சென்றார்.

ஜனங்கள் கானானுக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டது

34 “நீங்கள் கூறியதைக் கேட்ட கர்த்தர் கோபமடைந்து, 35 ‘இப்பொழுது உயிருடனிருக்கும் தீயவர்களாகிய உங்களில் ஒருவரும் நான் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்த பரிசுத்த பூமிக்குச் செல்லமாட்டீர்கள். 36 எப்புன்னேயின் மகனாகிய காலேப் மட்டுமே அப்பூமியைக் காண்பான். காலேப் நடந்து சென்ற பூமியை அவனுக்கும், அவனது சந்ததியினருக்கும் வழங்குவேன். ஏனென்றால் நான் கட்டளையிட்டவற்றை காலேப் மட்டுமே செய்தான்’ என்று கர்த்தர் கூறினார்.

37 “உங்கள் நிமித்தம் என்னிடமும் கர்த்தர் கோபமாயிருந்தார். அவர் என்னிடம், ‘மோசே நீயும் அந்நாட்டிற்குள் நுழைய முடியாது. 38 ஆனால் உன் உதவியாளனும், நூனின் மகனுமாகிய யோசுவாவும் அந்நாட்டிற்குச் செல்வார்கள். யோசுவாவை ஊக்கப்படுத்து, ஏனெனில் இஸ்ரவேலர்கள் அந்த நாட்டை சொந்தமாக்கிக்கொள்ள அவன் அவர்களை வழிநடத்துவான்’ என்று கூறினார். 39 மேலும் கர்த்தர் எங்களிடம், ‘உங்கள் குழந்தைகள் எதிரிகளால் தூக்கிச் செல்லப்படுவார்கள் என்று கூறினீர்கள். ஆனால், அக்குழந்தைகள் அந்நாட்டிற்குள் நுழைவார்கள். உங்கள் தவறுகளுக்காக உங்கள் குழந்தைகளை நான் குற்றஞ் சொல்லமாட்டேன் ஏனென்றால் நல்லது கெட்டது அறியாத இளம்பருவத்தினர் அவர்கள். ஆகவே அந்த நாட்டை நான் அவர்களுக்கு வழங்குகிறேன். உங்கள் குழந்தைகள் அதைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். 40 ஆனால் நீங்களோ செங்கடலுக்குச் செல்லும் சாலை வழியாகப் பாலைவனத்திற்குத் திரும்பிச்செல்ல வேண்டும்’ என்று கூறினார்.

41 “பின்னர் நீங்கள், ‘கர்த்தருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம். ஆனால் இனி தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடி நாங்கள் சென்று போராடுவோம்’ என்று சொன்னீர்கள்.

“பின் நீங்கள் ஒவ்வொருவரும் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டீர்கள். மலைதேசத்தை வெற்றி கொள்வது எளிது என்று நினைத்தீர்கள். 42 ஆனால் கர்த்தர் என்னிடம், ‘மலை மீதேறி போராட வேண்டாமென்று ஜனங்களிடம் சொல். ஏனென்றால் நான் அவர்களுடன் இருக்கமாட்டேன். அவர்களை எதிரிகள் தோற்கடிப்பார்கள்!’ என்று கூறினார்.

43 “நான் உங்களிடம் அதை சொன்னேன், ஆனாலும் நீங்கள் அதைத் கேட்கவில்லை. கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள். உங்கள் சுய வலிமையைப் பயன்படுத்த எண்ணி, மலை நாட்டிற்கு ஏறிச் சென்றீர்கள். 44 ஆனால் அங்கே வசித்துக்கொண்டிருந்த எமோரிய ஜனங்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டு, தேனீக் கூட்டத்தைப் போல அவர்கள் உங்களை சேயீரிலிருந்து ஓர்மா வரைக்கும் துரத்தியடித்தார்கள், 45 பின், நீங்கள் திரும்ப வந்து கர்த்தரிடம் உதவி கேட்டு அழுதீர்கள். ஆனால் உங்களுக்குச் செவிசாய்க்க தேவன் மறுத்தார். 46 எனவே நீங்கள் காதேசில் நீண்டகாலம் தங்கியிருந்தீர்கள்.

பாலைவனத்தில் இஸ்ரவேலர் அலைகின்றனர்

“பின் கர்த்தர் என்னிடம் சொல்லியபடி நாம் செய்தோம். செங்கடலுக்குச் செல்லும் சாலை வாழியாகப் பாலைவனத்திற்குத் திரும்பிச் சென்றோம். சேயீர் மலைகளைச் சுற்றி பல நாட்கள் அலைந்தோம். பின் கர்த்தர் என்னிடம், ‘இம்மலைகளைச் சுற்றி நீங்கள் அலைந்தது போதும். வடக்கே திரும்புங்கள், ஜனங்களிடம் இதைச் சொல்வாயாக: நீங்கள் சேயீர் நிலப்பகுதியைக் கடந்து செல்வீர்கள். இது ஏசாவின் சந்ததியினரான உங்கள் உறவினர்களுக்கு உரியது. உங்களைக் கண்டு அவர்கள் பயப்படுவார்கள். மிகுந்த எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுடன் சண்டையிடாதீர்கள். அவர்களுக்கு உரிமையானதில் ஒரு அடி நிலம் கூட உங்களுக்குத் தரமாட்டேன். ஏனென்றால் சேயீர் மலை நாட்டை ஏசாவிற்குச் சொந்தமாக வழங்கினேன். நீங்கள் அங்கே உண்ணும் உணவிற்கும் குடிக்கும் தண்ணீருக்கும் ஏசாவின் ஜனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். நீங்கள் செய்த ஒவ்வொரு செயலையும் உங்கள் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். இப்பெரும் பாலைவனத்தில் நீங்கள் நடந்து செல்வதை அவர் அறிவார். இந்த 40 ஆண்டு காலமும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் இருந்தார். உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன’ என்று கூறினார்.

“ஆகவே சேயீரில் வசித்த ஏசாவின் ஜனங்களாகிய நமது உறவினர்களைக் கடந்தோம். யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து ஏலாத் மற்றும் எசியோன்கே பேர் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் வழியை விட்டு விலகி மோவாப் பாலைவனத்துக்குச் செல்லும் சாலை வழியாகத் திரும்பினோம்.

ஆர் நகரில் இஸ்ரவேலர்

“கர்த்தர் என்னிடம், ‘மோவாப் ஜனங்களைத் துன்புறுத்த வேண்டாம், அவர்களுக்கு எதிராகப் போர் துவங்காதீர்கள். அவர்களது நிலம் எதையும் உங்களுக்குத் தரமாட்டேன். லோத்தின் சந்ததியாராகிய அவர்களுக்கு ஆர் நகரை வழங்கினேன்’ என்று கூறினார்.”

10 (கடந்த காலத்தில், ஏமிய ஜனங்கள் ஆர் நகரில் வாழ்ந்தனர்! பலசாலிகளான அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். ஏனாக்கியர்களைப் போலவே ஏமியர்களும் உயரமானவர்கள். 11 ஏனாக்கியர்கள் ரெப்பெய்தியர்களில் ஒரு பகுதியினர், ஏமியர்களும் ரெப்பெய்தியர்கள் என்றே கருதப்பட்டனர், ஆனால் மோவாப் ஜனங்கள் அவர்களை ஏமியர்கள் என்றே அழைத்தார்கள், 12 ஓரியர்களும் முன்னர் சேயீரில் வாழ்ந்தார்கள். ஆனால் ஏசாவின் ஜனங்கள் அவர்களிடமிருந்து நாட்டை எடுத்துக்கொண்டார்கள். ஓரியர்களை அழித்துவிட்டு ஏசாவின் ஜனங்கள் அவர்களது நிலத்தில் குடியேறினார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொந்தமாக கர்த்தர் வழங்கிய நிலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் செய்ததைப்போலவே ஏசாவின் ஜனங்களும் செய்தார்கள்.)

13 “கர்த்தர் என்னிடம், ‘இப்பொழுது சேரேத் பள்ளத்தாக்கின் மறுபுறம் செல்லுங்கள்’ என்று கூறினார். ஆகவே நாம் சேரேத் பள்ளத்தாக்கைக் கடந்தோம். 14 நாம் காதேஸ்பர்னேயாவை விட்டு விலகியதிலிருந்து சேரேத் பள்ளத்தாக்கைக் கடக்க 38 ஆண்டுகள் கடந்தன. நமது முகாமிலிருந்த அத்தலைமுறையைச் சேர்ந்த எல்லா போர் வீரர்களும் மரித்துவிட்டனர். அப்படி நடக்குமென்று கர்த்தர் ஆணையிட்டிருந்தார். 15 அவர்கள் மரித்து நமது முகாமை விட்டுவிலகும் வரையிலும் கர்த்தர் அந்த ஆட்களுக்கு எதிராயிருந்தார்.

16 “போர்வீரர்கள் அனைவரும் மரித்துப் போனார்கள். 17 பின் கர்த்தர் என்னிடம், 18 ‘இன்று நீங்கள் ஆர் நகர எல்லையைக் கடந்து மோவாபிற்குள் நுழையவேண்டும். 19 நீங்கள் அம்மோனிய ஜனங்களுக்கு அருகில் செல்வீர்கள், அவர்களைத் துன்புறுத்த வேண்டாம். அவர்களுடன் போரிட வேண்டாம், ஏனென்றால் அவர்களது நிலத்தை உங்களுக்குத் தரமாட்டேன் என்று கூறினார். லோத்தின் சந்ததியாராகிய அவர்களுக்கு அந்த நிலத்தைக் கொடுத்து விட்டேன்’ என்றார்.”

20 (அந்நாடும் ரெப்பாயிம் எனப்பட்டது. கடந்த காலத்தில் ரெப்பெய்தியர்கள் அங்கு வாழ்ந்தார்கள். அம்மோனிய ஜனங்கள் அவர்களைச் சம்சூமியர்கள் என்று அழைத்தார்கள். 21 பலசாலிகளான சம்சூமியர்களில் பலர் அங்கே இருந்தார்கள். ஏனாக்கிய ஜனங்களைப் போலவே அவர்களும் உயரமானவர்கள். சம்சூமியர்களை அழிக்க அம்மோனிய ஜனங்களுக்கு கர்த்தர் உதவினார். நிலங்களை வசப்படுத்திக்கொண்டு அம்மோனிய ஜனங்கள் அங்கு வசித்தார்கள். 22 ஏசாவின் ஜனங்களுக்கும் தேவன் இதையே செய்தார். கடந்த காலத்தில் சேயீரில் ஓரிய ஜனங்கள் வாழ்ந்தார்கள். ஏசாவின் ஜனங்கள் ஓரியர்களை அழித்தார்கள். ஏசாவின் சந்ததியார் இன்று வரை அங்கே வசிக்கின்றனர். 23 கெரேத்திலிருந்து வந்த ஜனங்கள் சிலருக்கும் இவ்வாறே தேவன் செய்தார். காசாவைச் சுற்றியுள்ள நகரங்களில் ஆவியர் வாழ்ந்தார்கள். ஆனால் கெரேத்திலிருந்து வந்த ஜனங்கள் சிலர் ஆவியர்களை அழித்தனர். அவர்கள் அந்த நிலங்களை வசப்படுத்திக்கொண்டு இதுவரையிலும் வசித்து வருகின்றனர்.)

எமோரியர்களுடன் போர்

24 “கர்த்தர் என்னிடம், ‘அர்னோன் பள்ளத்தாக்கைக் கடந்து செல்லத் தயாராகுங்கள். எஸ்போனின் அரசனாகிய சீகோன் என்னும் எமோரியர்களை நீங்கள் தோற்கடிக்கச் செய்து, அவனது நாட்டை உங்களுக்குச் சொந்தமாக்குவேன். ஆகவே அவனுடன் போரிட்டு அவனது நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். 25 உங்களைக் கண்டு எங்குமுள்ள ஜனங்களனைவரையும் பயப்படச் செய்வேன். அவர்கள் உங்களைப் பற்றிய செய்திகளை கேட்டு, பயந்து நடுங்குவார்கள்’ என்று கூறினார்.

26 “நாம் கெதெமோத் பாலைவெளியில் தங்கியிருந்தபொழுது, எஸ்போனின் அரசனாகிய சீகோனிடம் நான் தூதர்களை அனுப்பினேன், அந்தத் தூதுவர்கள் சமாதான வார்த்தைகளை கேட்டு சீகோனிடம், 27 ‘உங்கள் நாட்டின் வழியாக எங்களைப் போகவிடுங்கள். நாங்கள் சாலைகளிலேயே இருப்போம். சாலையின் வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பமாட்டோம். 28 நாங்கள் உண்ணும் உணவுக்கோ, அல்லது குடிக்கும் தண்ணீருக்கோ வெள்ளிக் காசுகளைத் தருகிறோம். உங்கள் நாட்டின் வழியாகச் செல்வதற்கு மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். 29 யோர்தான் நதியைக்கடந்து நமது தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு வழங்கும் நிலத்தை அடையும்வரை உங்கள் நாட்டின் வழியாகப் பயணம் செய்ய விரும்புகிறோம். சேயீரில் வசிக்கும் ஏசாவின் ஜனங்களும் ஆர் நகரில் வசிக்கும் மோவாப் ஜனங்களும் எங்களை அவர்களது நாடுகளின் வழியாகப் பயணம் செய்ய அனுமதித்தார்கள்’ என்று கூறினார்கள்.

30 “ஆனால் எஸ்போனின் அரசன் சீகோன், நம்மை அவனது நாட்டின் வழியாக செல்ல அனுமதிக்கவில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் அவனை மிகவும் பிடிவாதமாக இருக்கச் செய்தார். சீகோனை நீங்கள் தோற்கடிக்கவே கர்த்தர் இவ்வாறு செய்தார். அது மெய்யாகவே நடந்ததை இன்று நாம் அறிவோம்!

31 “கர்த்தர் என்னிடம், ‘அரசன் சீகோனையும் அவனது நாட்டையும் உங்களுக்குத் தருகிறேன். அவனது நாட்டைச் சென்று எடுத்துக்கொள்ளுங்கள்!’ என்று கூறினார்.

32 “பின்னர் அரசன் சீகோனும் அவனது குடிமக்கள் அனைவரும் யாகாசில் நம்முடன் போரிட வந்தார்கள். 33 ஆனால் நமது தேவனாகிய கர்த்தர் அவனை நம்மிடம் ஒப்புக்கொடுத்தார். அரசன் சீகோன், அவனது குமாரர்கள், மற்றும் அவனது குடிமக்கள் அனைவரையும் நாம் தோற்கடித்தோம். 34 அப்பொழுது சீகோனுக்குச் சொந்தமாயிருந்த எல்லை நகரங்களையும் நாம் அழித்தோம். எல்லா நகரங்களிலுமிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய அனைவரையும் அழித்தோம். எவரையும் உயிருடன் விட்டு வைக்கவில்லை! 35 அந்நகரங்களிலிருந்த கால்நடைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டோம், 36 அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்திலிருந்த ஆரோவேரையும் அப்பள்ளத்தாக்கின் மையத்திலிருந்த வேறொரு நகரையும் வென்றோம். அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து கீலேயாத் வரைக்குமான எல்லா நகரங்களையும் வெல்லும் வல்லமையை கர்த்தர் நமக்குக் கொடுத்தார். எந்த நகரமும் நம்மைவிட வலிமையில் மிஞ்சியிருக்கவில்லை. 37 ஆனால் அம்மோனிய ஜனங்களின் நாட்டிற்கு அருகில் நீ செல்லவில்லை. யாபோக் ஆற்றங்கரைக்கு அருகிலோ அல்லது மலை நாட்டின் நகரங்களுக்கு அருகிலோ நீ செல்லவில்லை. நமது தேவனாகிய கர்த்தர் நமக்குத் தராத எந்த இடத்திற்கு அருகிலும் நீ செல்லவில்லை.

பாசான் ஜனங்களுடன் போர்

“நாம் பாசானுக்குச் செல்லும் சாலையில் திரும்பிச் சென்றோம். பாசானின் அரசன் ஓக்கும், அவனது ஆட்கள் அனைவரும் எத்ரேயில் எங்களுடன் சண்டையிட வந்தார்கள். கர்த்தர் என்னிடம், ‘ஓக்கைக் கண்டுப் பயப்படாதீர்கள். அவனை உங்களிடம் ஒப்புக்கொடுப்பேன். அவனது ஆட்கள், அவனது நிலம் அனைத்தையும் உங்களிடம் தருவேன். எஸ்போனை ஆண்ட எமோரிய மன்னன் சீகோனைத் தோற்கடித்தது போலவே ஓக்கையும் நீங்கள் தோற்கடிப்பீர்கள்’ என்று கூறினார்.

“ஆகவே நமது தேவனாகிய கர்த்தர் பாசானின் அரசனான ஓக்கைத் தோற்கடிக்கச் செய்தார். அவனையும் அவனுடைய ஆட்கள் அனைவரையும் அழித்தோம். ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. அப்பொழுது ஓக்கிற்குச் சொந்தமாயிருந்த எல்லா நகரங்களையும் கைப்பற்றினோம். அவை அர்கோப் பிரதேசத்தில் ஓக்கின் பாசான் நாட்டைச் சேர்ந்த 60 நகரங்கள். அந்நகரங்கள் அனைத்தும் வலிமை வாய்ந்தவையாக இருந்தன. அவை உயர்ந்த மதில்களையும், உறுதியான கதவுகளையும், வலிமையான தாழ்ப்பாள்களையும் கொண்டிருந்தன. சுவர்கள் இல்லாத பல நகரங்களும் இருந்தன. எஸ்போனின் அரசனாகிய சீகோனின் நகரங்களை அழித்ததுபோலவே அவற்றையும் அழித்தோம். எல்லா நகரங்களையும் அவற்றிலிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்து ஜனங்களையும் அழித்தோம். ஆனால் அந்நகரங்களிலிருந்த எல்லாப் பசுக்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் நமக்காக வைத்துகொண்டோம்.

“அவ்வாறு, இரண்டு எமோரிய அரசர்களின் நிலத்தைக் கைப்பற்றினோம். அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரைக்கும் யோர்தான் நதிக்குக் கிழக்கில் அந்நிலத்தைக் கைப்பற்றினோம். (சீதோனிலிருந்து வந்த ஜனங்கள் எர்மோன் மலையை சீரியோன் என்றழைத்தார்கள். ஆனால் எமோரியர்களோ அதை சேனீர் என்றழைத்தார்கள்.) 10 உயர்ந்த சமவெளியிலிருந்த எல்லா நகரங்களையும் கீலேயாத்தையும் நாம் எடுத்துக்கொண்டோம். சல்க்காயி துவங்கி எத்ரேயி வரைக்கும் பாசானின் எல்லாப் பகுதிகளையும் எடுத்துக்கொண்டோம். பாசானின் அரசன் ஓக்கின் ஆட்சியில் சல்க்காயிவும் எத்ரேயும் நகரங்களாயிருந்தன.”

11 (பாசானின் அரசன் ஓக் அதுவரைக்கும் வாழ்ந்திருந்த மிகச்சில ரெபெய்தியர்களில் ஒருவன். ஓக்கின் படுக்கை இரும்பாலானது. அது 13 அடிக்கும் அதிக நீளமும் 6 அடி அகலமும் உடையது. அந்தப் படுக்கை அம்மோனிய ஜனங்கள் வசிக்கும் ரப்பா நகரில் இன்னமும் உள்ளது.)

யோர்தான் நதியின் கிழக்குப் பகுதி

12 “எனவே அந்நிலத்தை நமக்கு சொந்தமாக்கிக்கொண்டோம். ரூபன் மற்றும் காத் ஆகியோரின் கோத்திரத்திற்கு அந்நிலத்தின் பகுதியை நான் தந்தேன். நான் அவர்களுக்கு அர்னோன் பள்ளத்தாக்கின் ஆரோவேர் முதல் கீலேயாத் மலைநாடு வரைக்குமான நிலப்பகுதியை அதில் இருந்த நகரங்கள் உள்ளாகக் கொடுத்தேன். கீலேயாத் மலைநாட்டின் பாதி அவர்களுக்குக் கிடைத்தது. 13 கீலேயாத்தின் மற்றொரு பாதியையும் பாசான் முழுவதையும், மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த பாதிப்பேர்களுக்கு கொடுத்தேன்.”

(பாசான் ஓக்கின் ஒரு இராஜ்யம். பாசானின் ஒரு பகுதி அர்கோப் எனப்பட்டது. அது ரெப்பாயிம் நாடு என்றும் அழைக்கப்பட்டது. 14 அர்கோப் நிலப் பகுதி முழுவதையும் (பாசான்) மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த யாவீர் எடுத்துக்கொண்டான். கேசூரிய ஜனங்களும் மாகாத்திய ஜனங்களும் வசித்த எல்லை வரைக்கும் அந்நிலப் பகுதி பரவியிருந்தது. அதற்கு யாவீரின் பெயரிடப்பட்டது. ஆகவே இன்றைக்கும், ஜனங்கள் பாசானை யாவீரின் நகரங்கள் என்றழைக்கின்றனர்.)

15 “நான் கீலேயாத்தை மாகீருக்குக் கொடுத்தேன். 16 மேலும் கீலேயாத்திலிருந்து துவங்கும் நிலப்பகுதியை ரூபன் கோத்திரத்திற்கும், காத் கோத்திரத்திற்கும் கொடுத்தேன். இந்த நிலப்பகுதி அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து யாப்போக் நதிவரைக்கும் உள்ளது. பள்ளத்தாக்கின் நடுப்பகுதி ஒரு எல்லை. யாப்போக் நதி அம்மோனிய ஜனங்களின் எல்லை. 17 பாலைவனத்தின் அருகில் உள்ள யோர்தான் நதி அவர்களின் மேற்கு எல்லை. இப்பகுதிக்கு வடக்கே கலிலேயாவும் தெற்கே சவக்கடலும் (உப்புக்கடல்) உள்ளன. இப்பகுதி கிழக்கிலுள்ள பிஸ்கா சிகரங்களின் கீழுள்ளது.

18 “அச்சமயம், நான் அந்தக் கோத்திரங்களுக்கு இக்கட்டளையைக் கொடுத்தேன். அதாவது, ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வசிப்பதற்காக யோர்தான் நதியின் இப்பகுதியில் உள்ள நிலத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், உங்களில் உள்ள போர் வீரர்கள் தம் ஆயுதங்களை ஏந்தி மற்றுமுள்ள பிற இஸ்ரவேல் கோத்திரங்கள் யோர்தான் நதியைக் கடக்க உதவி செய்ய வேண்டும். 19 நான் உங்களுக்குத் தந்துள்ள இந்நகரங்களில் உங்கள் மனைவிகளும், சிறு குழந்தைகளும், ஆடுமாடுகளும், (உங்களிடம் ஏராளமான கால்நடைகள் இருப்பதை நான் அறிவேன்.) தங்கியிருக்க வேண்டும். 20 ஆனால் உங்கள் உறவினரான மற்ற இஸ்ரவேலருக்கு கர்த்தர் யோர்தான் நதியின் மறுபுறம் வசிப்பதற்காக நிலங்களை வழங்கும் வரையிலும் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். உங்களுக்குத் தந்ததைப் போலவே, கர்த்தர் அவர்களுக்கும் அங்கு அமைதியைத் தருகிறவரையிலும் அவர்களுக்கு உதவுங்கள். பின் நான் உங்களுக்குத் தந்துள்ள இந்நிலப் பகுதிக்கு நீங்கள் திரும்பி வரலாம்.’

21 “பிறகு நான் யோசுவாவிடம், ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் இவ்விரு அரசர்களுக்கும் செய்த அனைத்தையும் நீ பார்த்திருக்கிறாய். நீ நுழையும் எல்லா நாடுகளிலும் கர்த்தர் அவ்வாறே செய்வார். 22 அந்நாட்டு அரசர்களைக் கண்டு நீ பயப்படாதே, ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்’ என்று கூறினேன்.

மோசே கானானுக்குள் நுழைவதற்கு தடை

23 “பின் எனக்கென்று சிறப்பாக எதையேனும் செய்யுமாறு நான் கர்த்தரை வேண்டினேன். 24 நான், ‘கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் உமது அடிமை. நீர் செய்யப் போகும் அற்புதமும் வல்லமையுமான செயல்களின் ஒரு சிறு பகுதியை மட்டுமே எனக்குக் காட்டியிருக்கிறீர் என்பதை நான் அறிவேன். நீர் செய்துள்ள மாபெரும் வல்லமை மிக்க செயல்களை செய்யத்தக்க வேறொரு தேவன் விண்ணுலகிலோ, பூமியிலோ இல்லை! 25 தயவுசெய்து என்னை யோர்தான் நதியைக் கடந்துசென்று, அதன் மறுபுறம் உள்ள நற்பகுதியைக் காணவிடும். அழகான மலைநாட்டினையும் லீபனோனையும் என்னைப் பார்க்கவிடும்’ என்று வேண்டினேன்.

26 “ஆனால் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்னிடம் கோபமாயிருந்தார். அவர் எனக்கு செவிசாய்க்கவில்லை. கர்த்தர் என்னிடம், ‘போதும் நிறுத்து! இதைப்பற்றி மேலும் பேசாதே. 27 பிஸ்கா மலையின் மீது ஏறிச் செல். மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய திசைகளில் பார், நீ இவற்றை உன் கண்களால் பார்க்கலாம். ஆனால் நீ ஒருபோதும் யோர்தான் நதியைக்கடக்க முடியாது. 28 நீ யோசுவாவிற்கு கட்டளைக் கொடுத்து, அவனை ஊக்கப்படுத்து, திடப்படுத்து! நீ அந்நாட்டைப் பார்க்கலாம், ஆனால் யோசுவாவே இஸ்ரவேலரை அங்கு வழிநடத்திச் செல்வான். அவர்கள் அந்நாட்டைக் கைப்பற்றவும், அங்கு வாழவும் யோசுவா உதவுவான்’ என்று கூறினார்.

29 “பின்பு நாம் பெத்பெயரைத் தாண்டியுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்.

மாற்கு 10:32-52

மீண்டும் தன் மரணத்தைப்பற்றிப் பேசுதல்(A)

32 இயேசுவும் அவரோடு இருந்த மக்களும் அங்கிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையில் இருந்தனர். அவர்களுக்குத் தலைமையேற்று இயேசு அழைத்துச் சென்றார். இயேசுவின் சீஷர்கள் இதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அவர் பின்னால் போன மக்களோ அச்சப்பட்டனர். மீண்டும் இயேசு தன் பன்னிரண்டு சீஷர்களைக் கூட்டி அவர்களோடு தனியாகப் பேசினார். எருசலேமில் அவருக்கு என்ன நடக்கும் என்பதைப்பற்றிக் கூறினார். 33 “நாம் எருசலேமுக்கு போய்க் கொண்டு இருக்கிறோம். மனிதகுமாரன் அங்கே தலைமை ஆசாரியர்களிடமும், வேதபாரகர்களிடமும் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் மனிதகுமாரன் சாக வேண்டும் என்று தீர்ப்பளிப்பர். அவர்கள் மனிதகுமாரனை யூதரல்லாதவர்களிடம் ஒப்படைப்பார்கள். 34 அவர்கள் அவரைக் குறித்து நகைப்பர். அவர்மீது காறி உமிழ்வார்கள். வாரினால் அடிப்பார்கள். கொலை செய்வார்கள். அவரோ மரணமடைந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுவார்” என்றார்.

சிறப்புச் சலுகை கேட்டவர்கள்(B)

35 பிறகு செபெதேயுவின் மகன்களாகிய யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், “போதகரே நீங்கள் எங்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றனர்.

36 அவர்களிடம் இயேசு, “நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.

37 “உங்கள் இராஜ்யத்தில் உங்களுக்கென்று மகிமை உள்ளது. எங்களில் ஒருவர் உங்கள் வலது பக்கத்திலும் இன்னும் ஒருவர் இடது பக்கத்திலும் இருக்க வாய்ப்புத்தர வேண்டும்” என்றனர்.

38 அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நான் ஏற்கப்போகும் பாடுகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் ஞானஸ்நானம் பெறும் விதத்திலேயே நீங்களும் பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்.

39 அவர்கள், “ஆமாம், எங்களால் முடியும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நான் படப்போகும் துன்பங்களை எல்லாம் நீங்களும் படவேண்டியதிருக்கும். நான் பெறப்போகும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெறவேண்டியதிருக்கும். 40 எனக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் இருக்கப்போகின்றவர்களை என்னால் தீர்மானிக்க முடியாது. அந்த இடத்திற்காகச் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்காகவே அந்த இடங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார்.

41 ஏனைய பத்து சீஷர்களும் இயேசு சொல்வதைக் கேட்டனர். அவர்களுக்கு யாக்கோபு மீதும், யோவான் மீதும் கோபம் ஏற்பட்டது. 42 இயேசு தன் சீஷர்களை எல்லாம் தம்மிடம் அழைத்தார். அவர்களிடம், “யூதர் அல்லாத மக்கள் ஆள்வோர்கள் எனக் கருதப்படுகின்றனர். இந்த ஆள்வோர்கள் தம் அதிகாரத்தை மக்கள்மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களின் முக்கியத் தலைவர்கள் தம் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். 43 ஆனால், நீங்கள் மேற்கொள்ளும் வழி இதுவாக இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் ஒரு வேலைக்காரனைப்போல மற்றவர்களுக்குச் சேவைசெய்ய வேணடும். 44 உங்களில் ஒருவன் மிகவும் முக்கியஸ்தனாக விரும்பினால் அவன் அடிமையைப்போல உங்கள் எல்லாருக்கும் சேவை செய்ய வேண்டும். 45 இது போலவே, மனித குமாரன் பிறருடைய பணிவிடைகளைப் பெறுவதற்காக வரவில்லை. அவர் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவே வந்துள்ளார். அவர் பல மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தர வந்துள்ளார்” என்றார்.

குருடன் குணமாக்கப்படுதல்(C)

46 பிறகு அவர்கள் எரிகோ நகரத்துக்கு வந்தனர். இயேசு அந்த நகரத்தையும் விட்டுத் தன் சீஷர்களோடும், மற்ற சில மக்களோடும் வெளியேறினார். பர்திமேயு எனப்படும் (திமேயுவின் மகன்) ஒரு குருடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான். அவன் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான். 47 நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு வந்துகொண்டிருப்பதை அறிந்து சத்தமிட ஆரம்பித்தான். அவன், “தாவீதின் குமாரனாகிய இயேசுவே! எனக்கு உதவி செய்யும்” என்றான்.

48 பல மக்கள் அவனைப் பேசாமலிருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் அந்தக் குருடன் இன்னும் சத்தமாக, “தாவீதின் குமாரனே, எனக்கு உதவி செய்யும்” என்றான்.

49 அவ்விடத்தில் இயேசு, “அந்த மனிதனை இங்கே வரச் சொல்லுங்கள்” என்றார்.

எனவே அவர்கள் அக்குருடனை அழைத்தனர். அவர்கள், “மகிழ்ச்சியாய் இரு, எழுந்து வா, இயேசு உன்னை அழைக்கிறார்” என்றனர். 50 அக்குருடன் விரைவாக எழுந்தான். அவன் தன் மேலாடையை அவ்விடத்தில் எறிந்துவிட்டு இயேசுவினருகில் சென்றான்.

51 இயேசு அவனிடம், “நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” எனக் கேட்டார்.

அதற்கு அக்குருடன், “போதகரே! நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றான்.

52 “போ! நீ குணமானாய், ஏனெனில் நீ விசுவாசத்தோடு இருந்தாய்” என்று இயேசு சொன்னார். அதனால் அவன் பார்வை பெற்றான். அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து போனான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center