Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 23-25

பிலேயாமின் முதல் செய்தி

23 பிலேயாம் பாலாக்கிடம், “இங்கே ஏழு பலிபீடங்களை கட்டி. ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தயார் செய்யும்” என்றான். பாலாக் பிலேயாம் சொன்னபடி செய்தான். பிறகு பாலாக்கும் பிலேயாமும் ஒரு ஆட்டுக்கடாவையும் ஒரு காளையையும் ஒவ்வொரு பலிபீடத்திலும் பலியிட்டனர்.

பிறகு பிலேயாம் பாலாக்கிடம், “இப்பலிபீடத்தின் அருகில் இரும். நான் இன்னொரு இடத்திற்குப் போவேன். பிறகு கர்த்தர் என்னிடம் வருவார். நான் என்ன சொல்லவேண்டுமோ அதனை அவர் சொல்லுவார்” என்றான். பிறகு பிலேயாம் ஓர் உயரமான இடத்திற்குச் சென்றான்.

அந்த இடத்தில் பிலேயாமிடம் தேவன் வந்தார். பிலேயாம் அவரிடம், “நான் ஏழு பலிபீடங்களைத் தயார் செய்துள்ளேன். அவற்றில் இரண்டில் ஒரு காளையும் ஒரு ஆட்டுக் கடாவையும் பலியிட்டேன்” என்றான்.

கர்த்தர் பிலேயாமிடம் அவன் என்ன சொல்ல வேண்டுமோ அதனைச் சென்னார். பிறகு கர்த்தர், “பாலாக்கிடம் திரும்பிப்போ. நான் இவற்றைச் சொல்லச் சொன்னேன் என்று அவனிடம் சொல்” என்றார்.

எனவே பிலேயாம் பாலாக்கிடம் போனான். பாலாக்கும் அவனோடு மோவாபின் தலைவர்களும் பலிபீடத்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர். பிறகு பிலேயாம் பின்வருமாறு சொன்னான்:

மோவாபின் அரசனான பாலாக் என்னை இங்கே அழைத்து வந்தான்.
    ஆராம் மலையின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்தேன்.
பாலாக் என்னிடம்,
    “வா, வந்து எனக்காக யாக்கோபிற்கு எதிராகப் பேச வேண்டும்,
    இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் பேச வேண்டும்” என்று கேட்டான்.
ஆனால் தேவன் அந்த ஜனங்களுக்கு எதிராக இல்லை.
    எனவே, என்னாலும் அவர்களுக்கு எதிராகப் பேச முடியாது!
கர்த்தர் அந்த ஜனங்களுக்கு தீமை ஏற்படும்படி பேசவில்லை.
    எனவே என்னால் அவ்வாறுச் செய்ய முடியாது.
நான் மலையிலிருந்து அந்த ஜனங்களைப் பார்க்கிறேன்.
    உயரமான மலையிலிருந்து அவர்களைப் பார்க்கிறேன்.
அவர்கள் தனியாக வாழ்கிறார்கள்.
    அவர்கள் வேறொரு தேசத்தாரையும் சேர்ந்தவர்கள் அல்ல.
10 யாக்கோபின் ஜனங்களை எவரால் எண்ணிப் பார்க்க முடியும்?
    அவர்கள் புழுதியைப் போல அதிக எண்ணிக்கையுள்ளவர்கள்.
இஸ்ரவேல் ஜனங்களின் நாலில் ஒரு பங்கைக்கூட எவராலும் எண்ண இயலாது.
என்னை ஒரு நல்ல மனிதனைப் போன்று மரிக்கவிடு.
    அவர்களுடைய வாழ்வைப் போன்று மகிழ்ச்சியோடு என் வாழ்வையும் முடியவிடு!.

11 பாலாக் பிலேயாமிடம், “நீர் எனக்கு என்ன செய்தீர்? எனது பகைவர்களுக்கு எதிராகப் பேசும்படி உம்மை அழைத்து வந்தேன். ஆனால் நீர் அவர்களை ஆசீர்வாதம் செய்கிறீரே!” என்றான்.

12 ஆனால் பிலேயாம், “கர்த்தர் என்னிடம் சொல்லுமாறு சொன்னவற்றையே நான் சொல்வேன்” என்றான்.

13 பிறகு பாலாக் அவனிடம், “இன்னொரு இடத்திற்கு வா. அந்த இடத்திலிருந்து அவர்களில் மிகுதியான ஜனங்களை நீ பார்க்க முடியும். ஆனால் அவர்களில் முழு பகுதியினரை உன்னால் பார்க்க முடியாது. ஆனால் அவர்களில் ஒரு பகுதியினரை உன்னால் பார்க்க முடியும். எனக்காக அங்கிருந்து அவர்களுக்கு எதிராக நீ பேச முடியும்” என்றான். 14 எனவே பாலாக் பிலேயாமை காவற்காரன் மலைக்கு அழைத்து சென்றான். இது பிஸ்கா மலையின் உச்சியில் இருந்தது. அங்கே பாலாக் ஏழு பலிபீடங்களைக் கட்டினான். பின் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக்கடாவையும் தனித்தனியாக ஒவ்வொரு பலிபீடத்திலும் பலியாக செலுத்தினான்.

15 பிலேயாம் பாலாக்கிடம், “இந்தப் பலிபீடத்தின் அருகிலே இரு. நான் அந்த இடத்திற்குப் போய் தேவனைச் சந்தித்துவிட்டு வருகிறேன்” என்றான்.

16 எனவே கர்த்தர் பிலேயாமிடம் வந்து பேசி, தான் சொன்னவற்றை பாலாக்கிடம் திரும்பிப்போய் சொல்லுமாறு கூறினார். 17 பிலேயாம் பாலாக்கிடம் திரும்பிப் போனான். அங்கே பலிபீடத்தின் அருகிலேயே பாலாக் நின்றுகொண்டிருந்தான். அவனோடு, மோவாபின் தலைவர்களும் நின்றுகொண்டிருந்தனர். பிலேயாம் வருவதைப் பார்த்து பாலாக், “கர்த்தர் என்ன சொன்னார்?” எனக் கேட்டான்.

பிலேயாமின் இரண்டாவது செய்தி

18 பிலேயாம் அவனிடம்,

“பாலாக்! எழுந்து நில். நான் சொல்வதைக் கவனி.
    சிப்போரின் மகனான பாலாக்கே! நான் சொல்வதைக் கேள்:
19 தேவன் ஒரு மனிதனல்ல;
    அவர் பொய்ச் சொல்லமாட்டார்.
அவர் மானிடன் அல்ல.
    அவரது முடிவு மாறாதது.
கர்த்தர் ஒன்றைச் செய்வதாகக் கூறினால்
    அவர் அதனை நிச்சயம் செய்வார்.
கர்த்தர் ஒரு வாக்குறுதி தந்தால்
    அந்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவார்.
20 கர்த்தர் அந்த ஜனங்களை ஆசீர்வதிக்குமாறு சொன்னார்.
    அவர் அவர்களை ஆசீர்வதித்தார். அதனை என்னால் மாற்ற முடியாது.
21 யாக்கோபின் ஜனங்களிடம் தேவன் எவ்வித தவறையும் காணவில்லை.
    இஸ்ரவேல் ஜனங்களிடம் எவ்வித பாவத்தையும் தேவன் பார்க்கவில்லை.
கர்த்தரே அவர்களின் தேவன்.
    அவர் அவர்களோடு இருக்கிறார்.
அந்த மாபெரும் அரசர் அவர்களோடு இருக்கிறார்!
22 அவர்களை அவர் எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார்.
    அவர்கள் காட்டுக் காளையைப் போன்று பலம் பொருந்தியவர்கள்.
23 யாக்கோபின் ஜனங்களைத் தோற்கடிக்கிற வல்லமை எதுவும் இல்லை.
    இஸ்ரவேல் ஜனங்களை தடுத்து நிறுத்துகிற மந்திரம் எங்குமில்லை.
‘தேவன் செய்த மாபெரும் செயல்களை பாருங்கள்’
    என்று யாக்கோபையும் இஸ்ரவேல் ஜனங்களையும் பற்றி ஜனங்கள் பேசுவார்கள்.
24 அந்த ஜனங்கள் சிங்கம் போன்று பலமுள்ளவர்கள்.
    அவர்கள் சிங்கத்தை போன்றே சண்டையிடுவார்கள்.
அந்தச் சிங்கம் பகைவரை அடித்துத் தின்னும்வரை ஓய்வு எடுக்காது.
    தனக்கு எதிராக வந்த ஜனங்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை அது ஓய்வு எடுக்காது” என்றான்.

25 பிறகு பாலாக் பிலேயாமிடம், “நீ அவர்களுக்கு நன்மை நடக்குமாறு கேட்க வேண்டாம். நீ அவர்களுக்கு தீமை ஏற்படுமாறும் கேட்கவேண்டாம்” என்றான்.

26 பிலேயாம் அதற்கு, “கர்த்தர் சொல்லச் சொல்லுகிறவற்றைத்தான் நான் சொல்வேன் என்று ஏற்கெனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று பதிலுரைத்தான்.

27 பிறகு பாலாக் பிலேயாமிடம் “எனவே என்னோடு இன்னொரு இடத்திற்கு வா. அங்கேயிருந்து நீ அவர்களைச் சபிப்பது தேவனுக்குப் பிடிக்கலாம்” என்று அழைத்தான். 28 பிலேயாமைப் பாலாக் அழைத்துக் கொண்டு பேயோர் என்னும் மலையின் உச்சிக்குப் போனான். அது பாலைவனத்திற்கு மேலே தெரிந்தது.

29 பிலேயாம், “ஏழு பலிபீடங்களை இங்கே கட்டு. பிறகு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலிக்கென்று ஆயத்தப்படுத்து” என்றான். 30 பிலேயாம் கேட்டுக்கொண்டபடி பாலாக் செய்தான். பலிபீடத்தில் காளைகளையும் ஆட்டுக் கடாக்களையும் பலியிட்டான்.

பிலேயாமின் மூன்றாவது செய்தி

24 இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்புவதை பிலேயாம் கவனித்தான். எனவே, பிலேயாம் அதனை மாற்ற எவ்வகையான மந்திரத்தையும் பயன்படுத்த முயற்சி செய்யவில்லை. ஆனால் பிலேயாம் திரும்பி பாலைவனத்தை நோக்கிப் பார்த்தான். பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் பார்த்தான். அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் தங்கள் கோத்திரங்களோடு கூடாரமிட்டுத் தங்கி இருந்தார்கள். தேவனுடைய ஆவி பிலேயாமின் மீது வந்தது. அதனால் அவன் கீழ்க்கண்டவற்றைக் கூறினான்:

“பேயோரின் குமாரனான பிலேயாமிடமிருந்து வரும் செய்தி.
நான் தெளிவாக பார்த்தவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.
நான் தேவனிடமிருந்து இந்த செய்தியைக் கேட்டேன்.
    சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்குக் காட்டியதை நான் பார்த்தேன்.
    நான் தெளிவாகப் பார்த்தவற்றைப் பணிவாகக் கூறுகிறேன்.

“யாக்கோபின் ஜனங்களே, உங்கள் கூடாரங்கள் அழகாக இருக்கின்றன!
    இஸ்ரவேல் ஜனங்களே உங்கள் வீடுகள் அழகாக இருக்கின்றன!
நீங்கள் நதிக்கரையில் அமைக்கப்பட்ட தோட்டம் போன்றும்,
    ஆற்றங்கரையில் வளர்ந்த தோட்டம் போன்றும் இருக்கின்றீர்கள்.
கர்த்தரால் நடப்பட்ட வாசனை நிறைந்த
    அடர்ந்த செடிகளைப் போன்று இருக்கின்றீர்கள்.
தண்ணீர்க் கரையில் வளர்ந்திருக்கும்
    அழகான மரங்களைப் போன்று இருக்கின்றீர்கள்.
    உங்கள் விதைகள் வளர்வதற்கேற்ற
    போதுமான தண்ணீரை நீங்கள் பெறுவீர்கள்.
ஆகாக் அரசனைவிட உங்கள் அரசன் பெரியவன்.
    உங்கள் ராஜ்யம் மிகப் பெரியதாகும்.

“தேவன் அந்த ஜனங்களை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்தார்.
    அவர்கள் காட்டுக் காளையைப் போன்று பலமுள்ளவர்கள்.
அவர்கள் பகைவர்கள் அனைவரையும் தோற்கடிப்பார்கள்.
    அவர்களின் எலும்பை நொறுக்கி, தங்கள் அம்புகளை எய்வார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் சிங்கம் போன்றவர்கள்.
    அவர்கள் சுருண்டு படுத்திருக்கிறார்கள்.
ஆமாம்! அவர்கள் இளம் சிங்கத்தைப் போன்றவர்கள்.
    எவரும் அவர்களை எழுப்ப விரும்பவில்லை!
உங்களை ஆசீர்வதிப்பவர்கள்
    ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
உங்களை சபிப்பவர்கள்
    சபிக்கப்படுவார்கள்.”

10 பிலேயாம் மீது பாலாக்குக்கு பெருங்கோபம் ஏற்பட்டது. பாலாக் பிலேயாமிடம், “நீ வந்து என் பகைவருக்கு எதிராகப் பேசும்படி அழைத்தேன். ஆனால் நீ அவர்களை மூன்று முறை ஆசீர்வதித்திருக்கிறாய். 11 இப்போது இந்த இடத்தைவிட்டு வீட்டிற்கு ஓடிப்போ. நான் உனக்கு ஒரு நல்ல தொகையைக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் உனது பரிசை நீ இழப்பதற்கு கர்த்தர் காரணமாக இருந்துவிட்டார்” என்றான்.

12 ஆனால் பிலேயாம், “நீ என்னிடம் சிலரை அனுப்பினாய், அவர்கள் என்னை அழைத்தனர். ஆனால் நான் அவர்களிடம், 13 ‘பாலாக் தனது அழகான வீடு நிறைய வெள்ளியும் தங்கமும் எனக்குத் தரலாம். ஆனால் கர்த்தர் எதைச் சொல்லவேண்டும் என்று ஆனையிடுகிறாரோ அதை மட்டுமே சொல்வேன். நானாக எதையும் என்னால் செய்ய முடியாது. அது நன்மையோ அல்லது தீமையாகவோ இருக்கலாம். கர்த்தர் ஆணையிட்டபடியே நான் சொல்ல வேண்டும்’ என்றேன். நான் உன் ஆட்களிடம் கூறியதை நினைத்துப்பார். 14 நான் இப்போது என் சொந்த ஜனங்களிடம் திரும்பிச் செல்கிறேன். ஆனால் நான் உனக்கு இந்த எச்சரிக்கையை கொடுக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்கள் உனக்கும் உன் ஜனங்களுக்கும் வரும் நாட்களில் என்ன செய்வார்கள் என்பதையும் உனக்குக் கூறிவிடுகிறேன்” என்றான்.

பிலேயாமின் கடைசிச் செய்தி

15 பிறகு பிலேயாம் கீழ்க்கண்டவற்றைக் கூறினான்:

“பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லும் செய்தி இது.
நான் தெளிவாகப் பார்த்தவற்றைப் பற்றி மட்டுமே சொல்கிறேன்.
16 நான் இந்தச் செய்திகளை தேவனிடமிருந்து கேட்டேன்.
    உன்னதமான தேவன் கற்பித்தவற்றை நான் அறிந்தேன்.
    சர்வ வல்லமையுள்ள தேவன் காட்டியவற்றை நான் கண்டேன்.
    நான் தெளிவாகப் பார்த்தவற்றை மட்டுமே உங்களுக்குப் பணிவுடன் கூறுவேன்.

17 “கர்த்தர் வருவதை நான் காண்கிறேன்.
    ஆனால் இப்பொழுது அல்ல.
நான் அவரைக் காண்பேன், ஆனால் வெகு சீக்கிரம் அல்ல.
    யாக்கோபின் குடும்பத்திலிருந்து ஒரு நட்சத்திரம் வரும்.
இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து ஒரு அரசன் வருவார்.
    அவர் மோவாப் ஜனங்களின் தலைகளை நசுக்கி, சேத்தின் பிள்ளைகளது தலைகளையெல்லாம் அந்த அரசன் அழிப்பார்.
18 இஸ்ரவேல் ஜனங்கள் பலத்தோடு வளர்வார்கள்!
    அவர்கள் ஏதோமின் நாட்டைப் பெறுவார்கள்.
    அவர்களது பகைவர்களான சேயர்களின் நாட்டையும் அவர்கள் கைப்பற்றுவார்கள்.

19 “யாக்கோபின் குடும்பத்திலிருந்து ஒரு புதிய அரசன் வருவார்.
    நகரத்தில் உயிரோடு மிஞ்சியிருக்கும் ஜனங்களை அவர் அழிப்பார்.”

20 பிறகு பிலேயாம் திரும்பி அமலேக் ஜனங்களை நோக்கி,

“அமலேக் நாடானது அனைத்து நாடுகளையும்விடப் பலம்பொருந்தியது.
    ஆனால் இந்த அமலேக்கும் கூட அழிக்கப்படும்!” என்று சொன்னான்.

21 பிறகு கேனிய ஜனங்களைப் பார்த்து:

“மலை உச்சியில் இருக்கும் பறவையின்
    கூடு போல உங்கள் நாடு பாதுகாப்புடன் இருப்பதாக நினைக்கிறீர்கள்.
22 ஆனால் கேனிய ஜனங்களும் கூடுகளைப் போன்று கர்த்தரால் அழிக்கப்படுவார்கள்.
    அசீரியா உங்களைச் சிறை பிடிக்கும்” என்றான்.

23 மேலும் அவன்:

“தேவன் இவ்வாறு செய்யும்போது ஒருவனும் தப்பிக்க முடியாது.
24     சைப்ரஸிலிருந்து கப்பல்கள் வரும்.
அவர்கள் அசீரியாவையும், எபோரையும் தோற்கடிப்பார்கள்.
    ஆனால் அந்தக் கப்பல்களும் அழிக்கப்படும்” என்றான்.

25 பிறகு பிலேயாம் எழுந்து தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். பாலாக் தன் பாதையில் சென்றான்.

பேயோரில் இஸ்ரவேலர்கள்

25 இஸ்ரவேல் ஜனங்கள் அகாசியாவின் அருகில் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் மோவாப் பெண்களோடு பாலுறவுப் பாவத்தில் ஈடுபட்டார்கள். 2-3 மோவாப் பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை அழைத்துப் போய் தங்கள் போலியான தேவர்களுக்குப் பலி கொடுக்கச் செய்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் அப்போலியான தெய்வங்களை வணங்கவும் அவர்களிட்ட பலிகளை உண்ணவும் ஆரம்பித்தனர். அந்த இடத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் பாகால் பேயோர் போன்ற போலியான தேவர்களை வணங்கத் துவங்கினார்கள். இதனால் அவர்கள் மீது கர்த்தர் பெருங்கோபம் கொண்டார்.

கர்த்தர் மோசேயிடம், “இந்த ஜனங்களின் தலைவர்களையெல்லாம் ஒன்று சேர். பிறகு மற்றவர்கள் பார்க்கும்படி அவர்களைக் கொன்றுவிடு. அவர்களின் பிணங்களை என் பார்வையில் தூக்கில் போடு. பிறகு மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் மீது நான் கோபம் கொள்ளாமல் இருப்பேன்” என்றார்.

எனவே மோசே இஸ்ரவேலின் நீதிபதிகளிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கோத்திரங்களில், பாகால் பேயோர் போன்ற போலியான தெய்வங்களை வணங்க அழைத்துப் போனவர்களை கண்டு பிடித்து, அவர்களைக் கொல்லவேண்டும்” என்றார்.

அதே நேரத்தில் மோசேயும் இஸ்ரவேலரின் மூப்பர்களும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடினார்கள். இஸ்ரவேலன் ஒருவன் மீதியானிய பெண் ஒருத்தியைத் தன் சகோதரனின் குடியிருப்பிற்கு அழைத்துப் போனதை மோசேயும் மற்ற தலைவர்களும் பார்த்து மிகவும் வருத்தப்பட்டனர். இதை ஆரோனின் பேரனும், எலெயாசாரின் மகனுமான பினெகாசும் பார்த்தான். ஒரு பெண்ணைக் கூடாரத்திற்கு இஸ்ரவேலன் அழைத்துச் செல்வதை அந்த ஆசாரியன் பார்த்ததும் தன் ஈட்டியை எடுத்துக்கொண்டான். அவனும் அக்கூடாரத்திற்குள் பின் தொடர்ந்து சென்றான். அந்த ஈட்டியால் இஸ்ரவேலனையும் மீதியானியப் பெண்ணையும் கூடாரத்திலேயே கொன்றான். இருவரையும் ஒருசேர ஈட்டியால் குத்திக் கொன்றுவிட்டான். அதே நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் நோய் பரவிவிட்டது. பினெகாஸ் அவர்களைக் கொன்றதும் நோய் நிறுத்தப்பட்டது. அந்நோயால் 24,000 ஜனங்கள் மரித்துப் போனார்கள்.

10 கர்த்தர் மோசேயை நோக்கி, 11 “நான் ஜனங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தேன். அவர்கள் எனக்கு மட்டுமே சொந்தமானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் இஸ்ரவேல் ஜனங்களை என் கோபத்திலிருந்து காப்பாற்றினான். எனவே, நான் அவர்களைக் கொல்லவில்லை. 12 நான் அவனோடு சமாதான உடன்படிக்கைச் செய்துகொள்வேன் என்று பினெகாசிடம் கூறுங்கள். 13 அவனும் அவனது குடும்பத்திலுள்ளவர்களும், அவனுக்குப் பின் வாழும் சந்ததியினரும் எப்போதும் ஆசாரியர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவனுக்கு தேவன் மீது பலமான பக்தியுள்ளது. இஸ்ரவேல் ஜனங்களை சுத்தப்படுத்தும் செயல்களை அவன் செய்துவிட்டான்” என்றார்.

14 மீதியானியப் பெண்ணோடு கொல்லப்பட்ட இஸ்ரவேலனின் பெயர் சிம்ரி. இவன் சாலூவின் மகன். இவன் சிமியோன் கோத்திரத்திலுள்ள தலைவன். 15 கொல்லப்பட்ட மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி. அவள் சூரின் மகள். சூர் மீதியானியக் கோத்திரத்தின் தலைவனாகவும். குடும்பத் தலைவனாகவும் விளங்கினான்.

16 கர்த்தர் மோசேயிடம் 17 “மீதியானிய ஜனங்கள் உங்கள் பகைவர்கள். நீ அவர்களை கொல்ல வேண்டும். 18 அவர்கள் ஏற்கெனவே உங்கள் அனைவரையும் பகைக்கின்றனர். பேயோரில் அவர்கள் தந்திரம் செய்தனர். அவர்கள் கஸ்பி என்ற பெண் மூலம் உங்களிடம் தந்திரம் செய்தனர். அவள் மீதியானிய தலைவரின் மகள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களை அழிக்கும் நோய் வந்தபோது அவள் கொல்லப்பட்டாள். ஜனங்கள் தந்திரத்திற்குட்பட்டு பாகால்பேயார் போன்ற பொய்யான தேவர்களை வணங்கியதால் இந்நோய் ஏற்பட்டது” என்றார்.

மாற்கு 7:14-37

14 மக்களை மீண்டும் இயேசு தன்னிடம் அழைத்தார். அவர் “ஒவ்வொரு மனிதனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டும். நான் சொல்பவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். 15 வெளியே இருந்து மனிதனுக்குள்ளே போகும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது. அவனது உள்ளத்தில் இருந்து வெளியே வருவதுதான் அவனைத் தீட்டுப்படுத்தும். 16 நான் சொல்வதைக் கேட்பவர்களே, கவனியுங்கள்” என்றார்.

17 பின்னர் இயேசு அந்த மக்களிடமிருந்து விலகி வீட்டிற்குள் சென்றார். இந்த உவமையைப்பற்றி அவரது சீஷர்கள் இயேசுவிடம் கேட்டனர். 18 “உங்களுக்கு புரிந்துகொள்வதில் இன்னும் சிரமங்கள் உள்ளனவா? வெளியே இருந்து மனிதனுக்குள் செல்லும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்பது புரியவில்லையா? 19 உணவானது மனிதனின் மூளைக்குள் செல்வதில்லை. உணவு வயிற்றுக்குள் தான் செல்லும். பிறகு அந்த உணவு உடம்பைவிட்டு வெளியேறிவிடும்” என்றார் இயேசு. (இயேசு இதனைக் கூறும்போது, அவர் மக்கள் உண்ணும் எந்த உணவும் அவர்களைத் தீட்டுப்படுத்தாது என்று உணர்த்தினார்.)

20 மேலும் இயேசு, “மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்திவிடுகிறது. 21 கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனத்தில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை 22 விபசாரம், சுயநலம், தீயசெயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். 23 இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை” என்றார்.

யூதரல்லாத பெண்ணுக்கு உதவி(A)

24 இயேசு அந்த இடத்தைவிட்டு தீரு பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்குதான் அவர் இருக்கிறார் என்பதை அங்குள்ள மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஆனால் அவர் மக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. 25 அவர் அங்கு இருப்பதை ஒரு பெண் கேள்வியுற்றாள். அவளது சிறு மகள், அசுத்த ஆவியை உடையவள். எனவே, அவள் இயேசுவிடம் வந்து அவரது பாதத்தில் விழுந்து வணங்கினாள். 26 அவள் யூதர்குலத்துப் பெண் அல்ல. அவள் கிரேக்கப் பெண். சீரோபேனிக்கேயாவில் பிறந்தவள். அவள் தன் மகளைப் பிடித்த பிசாசை விரட்டுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.

27 அந்தப் பெண்ணிடம் இயேசு, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும்” என்றார்.

28 “அது உண்மை தான் ஆண்டவரே. பிள்ளைகள் உண்ணாத உணவுத் துணுக்குகளை மேசைக்கடியில் உள்ள நாய்கள் உண்ணலாமே” என்று அவள் பதில் சொன்னாள்.

29 பிறகு அந்தப் பெண்ணிடம் இயேசு, “இது நல்ல பதில். நீ போகலாம். பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார்.

30 அந்தப் பெண் வீட்டுக்குப் போனாள். தன் குழந்தை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளை விட்டு நீங்கி இருந்தது.

செவிட்டு மனிதனைக் குணமாக்குதல்

31 பிறகு இயேசு தீரு பகுதியை விட்டு விலகி சீதோன் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்து அவர் கலிலேயா கடற்கரைக்குச் சென்றார். அங்கு இயேசு தெக்கப்போலி வழியாக வந்தார். 32 அங்கே அவர் இருக்கும்போது மக்கள் ஒரு மனிதனை அவரிடம் அழைத்து வந்தனர். அவன் ஒரு செவிடன். அவனால் பேசவும் முடியாது. அவனைக் குணப்படுத்தும் பொருட்டு அவன்மீது இயேசு தன் கையை வைக்குமாறு அவரிடம் அவர்கள் கெஞ்சிக் கேட்டனர்.

33 இயேசு அவனை அந்த மக்களிடமிருந்து விலக்கி தனியாய் அழைத்துச் சென்றார். அவர் தனது விரல்களை அவன் காது மீது வைத்தார். பிறகு இயேசு உமிழ்ந்து அவனது நாவையும் தொட்டார். 34 இயேசு ஆகாயத்தைப் பார்த்து பெருமூச்சுவிட்டார். பிறகு அந்த மனிதனிடம் இயேசு, “எப்பத்தா” என்றார். (அதற்குத் “திறக்கப்படுவாயாக” என்று பொருள்) 35 இயேசு இதனைச் செய்ததும் அந்த மனிதனால் கேட்க முடிந்து. பிறகு அவனால் நாவைப் பயன்படுத்தித் தெளிவாகப் பேசவும் முடிந்தது.

36 நடந்ததைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு மக்களைக் கேட்டுக்கொண்டார். இயேசு எப்போதும் தன்னைப்பற்றி எவரிடமும் கூறவேண்டாம் என்றே கட்டளையிடுவார். ஆனால் இது மக்களை இயேசுவைப்பற்றி மற்றவர்களிடம் மேலும் மேலும் சொல்ல வைத்தது. 37 மக்கள் அவரைப்பற்றி மிகவும் பிரமித்துப் போனார்கள். அவர்கள், “இயேசு எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்கிறார். அவர் செவிடர்களைக் கேட்க வைக்கிறார். ஊமைகளைப் பேச வைக்கிறார்” என்று பேசிக்கொண்டனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center