Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 4-6

மோசேக்கு அடையாளம்

அப்போது மோசே தேவனை நோக்கி, “நீர் என்னை அனுப்பினீர் என்று கூறும்பொழுது, இஸ்ரவேல் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள். அவர்கள், ‘தேவன் (யேகோவா) உனக்குக் காட்சியளிக்கவில்லை’ என்பார்கள்” என்றான்.

தேவன் மோசேயை நோக்கி, “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார்.

மோசே, “இது எனது கைத்தடி” என்றான்.

அப்போது தேவன், “உனது கைத்தடியை தரையில் போடு” என்றார்.

மோசே, தனது கைத்தடியை நிலத்தின் மேல் போட்டான். அது பாம்பாக மாறிற்று. மோசே அதற்குப் பயந்து அங்கிருந்து ஓடினான். கர்த்தர் மோசேயை நோக்கி, “கையை நீட்டி, பாம்பின் வாலைப் பிடி” என்றார்.

எனவே மோசே கையை நீட்டிப் பாம்பின் வாலைப் பிடித்தான். மோசே அவ்வாறு செய்தபோது, பாம்பு மீண்டும் கைத்தடியாயிற்று. அப்போது, தேவன், “உனது கைத் தடியை இவ்வாறு பயன்படுத்து. அப்போது நீ உனது முற்பிதாக்களின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தரைக் கண்டாய் என்பதை ஜனங்கள் நம்புவார்கள்” என்றார்.

பின் கர்த்தர், “உனக்கு மற்றொரு அடையாளத்தையும் தருவேன். உனது கையை அங்கிக்குள் நுழை” என்றார்.

எனவே மோசே தன் அங்கிக்குள் கையை நுழைத்தான். மோசே அங்கியிலிருந்து கையை எடுத்தபோது, அது மாறிப்போயிருந்தது. கை முழுவதும் உறைந்த பனியைப் போன்ற வெள்ளைப் புள்ளிகளால் நிரம்பியிருந்தது.

அப்போது தேவன், “உனது கையை அங்கிக்குள் மீண்டும் நுழை” என்றார். மோசே அவ்வாறே அங்கிக்குள் கையை நுழைத்தான். பின் மோசே கையை வெளியே எடுத்தபோது அவனது கை முன்பிருந்ததைப்போலவே நன்றாக இருந்தது.

அப்போது தேவன், “நீ உனது கைத்தடியைப் பயன்படுத்தும்போது ஒருவேளை ஜனங்கள் உன்னை நம்பாவிட்டாலும், இந்த அடையாளத்தைக் காட்டும்போது, அவர்கள் உன்னை நம்புவார்கள் இந்த இரண்டு காரியங்களைக் காண்பித்து, அவர்கள் உன்னை நம்ப மறுத்தால், நீ நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை அள்ளி, அதனைத் தரையில் ஊற்று. அது நிலத்தைத் தொட்டதும் இரத்தமாக மாறும்” என்றார்.

10 ஆனால் மோசே கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன் நான் தேர்ந்த பேச்சாளன் அல்ல. நான் சிறப்பாக எப்போதும் பேசியதில்லை. இப்போது உம்மிடம் பேசிய பிறகும்கூட, நான் சிறந்த பேச்சாளனாக மாறவில்லை. நான் நிதானமாகப் பேசுகிறேன் என்பதும், சிறந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாத திக்குவாய் உடையவன் என்பதும் உமக்கு தெரியும்” என்று கூறினான்.

11 அப்போது கர்த்தர் அவனை நோக்கி, “யார் மனிதனின் வாயை உண்டாக்கினார்? யாரால் மனிதனைச் செவிடனாகவும், ஊமையாகவும் செய்யமுடியும்? யார் ஒருவனைக் குருடனாக்கக் கூடும்? யார் ஒருவனுக்குப் பார்வை தரமுடியும்? இக்காரியங்களைச் செய்ய வல்லவர் நானே. நான் யேகோவா. 12 எனவே நீ போ! நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன். நீ சொல்லவேண்டிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன்” என்றார்.

13 ஆனால் மோசே, “எனது கர்த்தாவே, வேறு யாரையாவது அனுப்புமாறு உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன், என்னை அனுப்பவேண்டாம்” என்றான்.

14 அப்போது மோசேயின்மேல் கர்த்தர் கோபம் கொண்டு, “நல்லது! உனக்கு உதவியாக நான் ஒருவனைத் தருவேன். லேவியனாகிய உனது சகோதரன் ஆரோனை நான் பயன்படுத்துவேன். அவன் தேர்ந்த பேச்சாளன். அவன் உன்னைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறான். அவன் உன்னைப் பார்த்து சந்தோஷப்படுவான். 15 அவன் உன்னோடுகூட பார்வோனிடம் வருவான். நீ கூற வேண்டியதை உனக்குச் சொல்வேன். நீ அதை ஆரோனுக்குச் சொல். பார்வோனிடம் பேச வேண்டிய தகுந்த வார்த்தைகளை ஆரோன் தெரிந்துகொள்வான். 16 உனக்காக ஆரோன் ஜனங்களிடமும் பேசுவான். நீ ஒரு பேரரசனைப் போலிருப்பாய், உனக்குரிய பேச்சாளனாக அவன் இருப்பான். [a] 17 எனவே போ. உனது கைத்தடியையும் எடுத்துச்செல். நான் உன்னோடிருக்கிறேன் என்பதை ஜனங்களுக்குக் காட்டுவதற்கு உனது கைத்தடியையும், பிற அற்புதங்களையும் பயன்படுத்து” என்றார்.

மோசே எகிப்துக்குத் திரும்பி வருதல்

18 அப்போது மோசே தன் மாமனாகிய எத்திரோவிடம் திரும்பிப்போனான். மோசே எத்திரோவை நோக்கி, “நான் எகிப்துக்குத் திரும்பிப்போக அனுமதி கொடும். எனது ஜனங்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும்” என்றான்.

எத்திரோ மோசேயை நோக்கி, “நீ சமாதானத்தோடு போய்வா” என்றான்.

19 மோசே இன்னும் மீதியானில் இருக்கும்போதே, தேவன் மோசேயை நோக்கி, “இப்போது நீ எகிப்திற்குத் திரும்பிப் போவதற்குப் பொருத்தமான வேளை. உன்னைக் கொல்ல விரும்பிய மனிதர்கள் மரித்து போய்விட்டனர்” என்றார்.

20 எனவே மோசே, தன் மனைவியையும், குழந்தைகளையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்திற்குத் திரும்பிப் போனான். தேவனின் வல்லமையைப் பெற்றிருந்த தனது கைத்தடியையும் மோசே எடுத்துக்கொண்டான்.

21 மோசே எகிப்தை நோக்கிப் பிரயாணம் செய்துகொண்டிருந்தபோது, தேவன் அவனோடு பேசினார். அவர், “நீ பார்வோனோடு பேசும்போது, உனக்கு நான் அளித்துள்ள வல்லமையினால் எல்லா அற்புதங்களையும் செய்து காட்ட வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள். ஆனால் பார்வோன் மிகவும் பிடிவாதமாக இருக்கும்படியாகச் செய்வேன். ஜனங்களைப் போகும்படியாக அவன் அனுமதிக்கமாட்டான். 22 அப்போது நீ பார்வோனைப் பார்த்து, ‘இஸ்ரவேல் எனது முதற்பேறான மகன். 23 என் மகன் கிளம்பிப் போய் என்னைத் தொழுதுகொள்ளவிடு என்று உனக்குக் கூறுகிறேன்! இஸ்ரவேல் போவதற்கு நீ அனுமதி அளிக்க மறுத்தால், நான் உனது முதற்பேறான மகனைக் கொல்வேன், என்று கர்த்தர் சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.

மோசேயின் மகன் விருத்தசேதனம் செய்யப்படுதல்

24 எகிப்திற்குச் செல்லும் வழியில் இரவைக் கழிப்பதற்காக மோசே ஓரிடத்தில் தங்கினான். கர்த்தர் அவ்விடத்தில் மோசேயைச் சந்தித்து அவனைக் கொல்ல முயன்றார். [b] 25 ஆனால் சிப்போராள் கூர்மையான கல்லினால் செய்யப்பட்டக் கத்தியினால் தனது மகனின் நுனித்தோலை அறுத்தெடுத்து, நுனித் தோலினால் மோசேயின் பாதங்களைத் தொட்டு, “நீர் எனக்கு இரத்த சம்பந்தமான கணவன்” என்றாள். 26 மகனுக்கு அவளே விருத்தசேதனம் செய்யும்படியாக நேரிட்டதால் சிப்போராள் இவ்வாறு கூறினாள். எனவே தேவன் மோசேயை மன்னித்து அவனைக் கொல்லாமல்விட்டார்.

தேவனின் முன்னிலையில் மோசேயும் ஆரோனும்

27 கர்த்தர் ஆரோனோடு பேசினார். கர்த்தர் அவனிடம், “பாலைவனத்தில் சென்று மோசேயைப் பார்” என்றார். எனவே ஆரோன் சென்று, தேவனின் மலையில் மோசேயைச் சந்தித்தான். ஆரோன் மோசேயைக் கண்டு, அவனை முத்தமிட்டான். 28 தேவன் அவனை அனுப்பினார் என்பதை நிரூபிப்பதற்காக அவன் செய்யவேண்டிய காரியங்களையும் அற்புதங்களையும் குறித்து மோசே ஆரோனுக்குச் சொன்னான். தேவன் அவனுக்குச் சொன்ன எல்லாவற்றையும் மோசே ஆரோனுக்குக் கூறினான்.

29 மோசேயும் ஆரோனும் சென்று இஸ்ரவேல் ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்களை) ஒன்றாகக் கூட்டினார்கள். 30 அப்போது ஆரோன் ஜனங்களிடம் கர்த்தர் மோசேயிடம் கூறிய எல்லாக் காரியங்களையும் கூறினான். எல்லா ஜனங்களும் பார்க்கும்படியாக அடையாளங்களைச் செய்து காட்டினான். 31 தேவன் மோசேயை அனுப்பினார் என்பதை ஜனங்கள் நம்பினார்கள். தேவன் அவர்களின் துன்பங்களைக் கண்டார் எனவும், அவர்களுக்கு உதவுவதற்காக அவன் வந்துள்ளான் என்பதையும் இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்தார்கள். எனவே அவர்கள் தலைகுனிந்து தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

பார்வோனின் முன்னே மோசேயும் ஆரோனும்

மோசேயும் ஆரோனும் ஜனங்களிடம் பேசிய பிறகு, பார்வோனிடம் சென்றனர். அவர்கள், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘பாலைவனத்தில் போய் பண்டிகை கொண்டாடி என்னை கௌரவப்படுத்துவதற்கு என் ஜனங்களை நீ போகவிடு’ என்று கூறுகிறார்” என்றனர்.

ஆனால் பார்வோன், “யார் உங்கள் கர்த்தர்? நான் ஏன் அவருக்குக் கீழ்ப்படியவேண்டும்? இஸ்ரவேலரை நான் ஏன் போக அனுமதிக்கவேண்டும்? இந்த கர்த்தர் யாரென்று கூட எனக்குத் தெரியாது. நான் இஸ்ரவேலரைப் போக அனுமதிக்கமாட்டேன்” என்றான்.

அப்போது ஆரோனும் மோசேயும், “எபிரெய ஜனங்களின் தேவன் எங்களுடன் பேசினார். பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செல்வதற்கு எங்களை அனுமதிக்குமாறு நாங்கள் உன்னை வேண்டுகிறோம். அங்கு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி செலுத்துவோம். இதை நாங்கள் செய்யவில்லையென்றால், அவர் கோபங்கொண்டு நோய் அல்லது யுத்தத்தினால் நாங்கள் அழியும்படியாகச் செய்வார்” என்றனர்.

ஆனால் பார்வோன் அவர்களை நோக்கி, “மோசேயே, ஆரோனே, நீங்கள் வேலை செய்கிறவர்களைத் தொந்தரவு செய்கிறீர்கள். அவர்கள் அவர்களது வேலையைச் செய்யட்டும். உங்கள் வேலையை நீங்கள் கவனியுங்கள். ஏராளமான வேலையாட்கள் உள்ளார்கள். தம் வேலைகளைச் செய்யாதபடி நீங்கள் அவர்களை தடுக்கிறீர்கள்” என்றான்.

பார்வோன் ஜனங்களைத் தண்டித்தல்

அதே நாளில் இஸ்ரவேல் ஜனங்கள் இன்னும் கடினமாக உழைக்கும்படியாக பார்வோன் ஒரு கட்டளையிட்டான். அடிமைகளின் மேற்பார்வையாளர்களிடமும் எபிரெயர்களைக் கண்காணிப்பவர்களிடமும் பார்வோன், “ஜனங்களுக்கு எப்போதும் நீங்கள் வைக்கோலை கொடுத்து வந்தீர்கள். அவர்கள் அதைப் பயன்படுத்திச் செங்கல் செய்தார்கள். ஆனால் இப்போது செங்கல் செய்வதற்குத் தேவையான வைக்கோலை அவர்களே சேகரித்து வரும்படி கூறுங்கள். ஆனால் முன்னால் செய்தபடியே, அதே எண்ணிக்கை செங்கற்களை தினமும் அவர்கள் செய்யவேண்டும். அவர்கள் சோம்பேறிகளாகிவிட்டனர், எனவே தான் தங்களை அனுப்பும்படியாக அவர்கள் என்னைக் கேட்கிறார்கள். அவர்கள் செய்வதற்குப் போதிய வேலை இல்லை. எனவேதான் அவர்கள் தங்கள் தேவனுக்குப் பலிகள் செலுத்தவேண்டுமென என்னைக் கேட்கிறார்கள். எனவே இந்த மனிதர்கள் கடினமாக வேலை செய்யும்படிச் செய்யுங்கள். அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். அப்போது அவர்களுக்கு மோசேயின் பொய்களை நம்புவதற்குப் போதிய நேரமிராது” என்றான்.

10 எனவே இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்களும், எபிரெய மேற்பார்வையாளர்களும் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, “செங்கற்கள் செய்ய உங்களுக்கு வைக்கோல் தரமுடியாதென பார்வோன் முடிவு செய்துள்ளார். 11 நீங்கள் போய் உங்களுக்கு வேண்டிய வைக்கோலைக் கொண்டு வரவேண்டும். ஆனால் முன்னால் செய்தபடியே எண்ணிக்கைகளில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை” என்றார்கள்.

12 வைக்கோலைக் கொண்டு வருவதற்காக ஜனங்கள் எகிப்தின் எல்லா இடங்களுக்கும் சென்றார்கள். 13 மேற்பார்வையாளர்கள் ஜனங்களை இன்னும் கடினமாக வேலைவாங்கினார்கள். முன்னால் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யும்படி வற்புறுத்தினார்கள். 14 இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களைத் தேர்ந்தெடுத்து ஜனங்கள் செய்த வேலைக்கு அவர்களைப் பொறுப்பாளர்கள் ஆக்கினார்கள். இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களை அடித்து அவர்களிடம், “முன்னால் செய்த எண்ணிக்கையளவு செங்கற்களை ஏன் நீங்கள் செய்யவில்லை? முன்பு அதனைச் செய்ய முடிந்ததென்றால், இப்போதும் உங்களால் அதைச் செய்யக் கூடும்!” என்றார்கள்.

15 அப்போது எபிரெய மேற்பார்வையாளர்கள் பார்வோனிடம் சென்று: “நாங்கள் உமது ஊழியர்கள். ஏன் எங்களை இவ்வாறு நடத்துகிறீர்? 16 எங்களுக்கு நீர் வைக்கோல் தரவில்லை. ஆனால் முன்பு செய்த எண்ணிக்கையளவுக்கு செங்கற்களை இப்போதும் செய்யும்படியாகக் கூறுகிறீர். இப்போது எங்கள் எஜமானர்கள் எங்களை அடிக்கிறார்கள். இவ்வாறு உங்கள் ஜனங்கள் செய்வது தவறானது” என்று குறை கூறினார்கள்.

17 பார்வோன், “நீங்கள் சோம்பேறிகள், உங்களுக்கு வேலைசெய்ய விருப்பமில்லை. அதனால் தான் உங்களை அனுப்பும்படி நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். நீங்கள் இங்கிருந்து போய், கர்த்தருக்கு பலிசெலுத்த விரும்புகிறீர்கள். 18 இப்போது வேலை செய்யத் திரும்பி போங்கள்! உங்களுக்கு வைக்கோல் தரமாட்டோம். ஆனால் முன்பு செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களை நீங்கள் செய்ய வேண்டும்!” என்று பதிலளித்தான்.

19 தங்களுக்குத் தொல்லை நேர்ந்ததை எபிரெய மேற்பார்வையாளர்கள் கண்டுகொண்டார்கள். கடந்த காலத்த்தில் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யமுடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.

20 பார்வோனைச் சந்தித்துத் திரும்பிக்கொண்டிருந்த வழியில் மோசேயும், ஆரோனும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். 21 அவர்கள் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, “நம்மைப் போகவிடும்படியாக பார்வோனைக் கேட்டபடியால் நீங்கள் பெரிய தவறு செய்துவிட்டீர்கள். பார்வோனும், அவரது ஆட்சியாளர்களும் எங்களை வெறுக்கும்படிச் செய்ததால் கர்த்தர் உங்களைத் தண்டிப்பார். எங்களைக் கொல்வதற்கு அவர்களுக்கு ஒரு தருணத்தை அளித்திருக்கிறீர்கள்” என்றனர்.

மோசே தேவனிடம் முறையிடுதல்

22 மோசே கர்த்தரிடம் ஜெபம் செய்து, “ஆண்டவரே, உமது ஜனங்களுக்கு ஏன் இந்தக் கொடுமையான காரியத்தைச் செய்தீர்? ஏன் என்னை இங்கு அனுப்பினீர்? 23 நான் பார்வோனிடம் போய் நீர் கூறும்படியாகச் சொன்னவற்றைக் கூறினேன். அப்போதிலிருந்து அவன் ஜனங்களைக் கேவலமாக நடத்துகிறான். அவர்களுக்கு உதவுவதற்கு நீர் எதையும் செய்யவில்லை!” என்றான்.

அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய். அவனுக்கு எதிராக என் மகா வல்லமையைப் பயன்படுத்துவேன். அவன் என் ஜனங்களைப் போகவிடுவான். அவர்களை அனுப்ப மிக்க ஆயத்தத்தோடு இருப்பான். அவர்கள் போகும்படியாக அவன் கட்டாயப்படுத்துவான்” என்றார்.

பின், தேவன் மோசேயை நோக்கி, “நானே கர்த்தர். நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு தரிசனமானேன். அவர்கள் என்னை எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ள தேவன்) என்று அழைத்தார்கள். அவர்களுக்கு யேகோவா (கர்த்தர்) என்னும் எனது பெயர் தெரிந்திருக்கவில்லை. நான் அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்தேன். கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தேன். அவர்கள் அத்தேசத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் அது அவர்களின் சொந்த தேசமல்ல. இஸ்ரவேல் ஜனங்கள் படும் தொல்லைகளை நான் இப்போது அறிகிறேன். அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருப்பதையும் நான் அறிகிறேன், எனது உடன்படிக்கையை நினைவுகூருகிறேன். எனவே இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, ‘நானே கர்த்தர். நான் உங்களை மீட்பேன். நான் உங்களை விடுவிப்பேன். எகிப்தியர்களுக்கு நீங்கள் அடிமைகளாக இருக்கமாட்டீர்கள். எனது பெரிய வல்லமையைப் பயன்படுத்தி, எகிப்தியருக்குப் பயங்கரமான தண்டனை அளிப்பேன். பின், உங்களை மீட்பேன். நீங்கள் எனது ஜனங்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாக இருப்பேன். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் உங்களை எகிப்திலிருந்து மீட்டேன் என்பதை அறிவீர்கள். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஒரு பெரிய வாக்குத்தத்தம் பண்ணினேன். அவர்களுக்கு ஒரு விசேஷமான தேசத்தை அளிப்பதாக வாக்களித்தேன். எனவே உங்களை அத்தேசத்திற்கு வழிநடத்துவேன். உங்களுக்கு அத்தேசத்தைத் தருவேன், அது உங்களுடையதாக இருக்கும். நானே கர்த்தர்!’ என்று கூறியதாகச் சொல்லுங்கள்” என்றார்.

மோசே இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கூறினான். ஆனால் ஜனங்கள் அதற்குச் செவிசாய்க்கவிலை. அவர்கள் மிகக் கடினமாக உழைத்ததால் மோசேயிடம் பொறுமையிழந்து காணப்பட்டார்கள்.

10 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, 11 “பார்வோனிடம் போய் இஸ்ரவேல் ஜனங்களை தனது தேசத்திலிருந்து போகவிடும்படியாகக் கூறு” என்றார்.

12 ஆனால் மோசே, “இஸ்ரவேல் ஜனங்களே எனக்குச் செவிசாய்க்க மறுக்கிறார்கள்! எனவே பார்வோனும் நான் சொல்வதைக் கேட்கமாட்டான். நான் பேச திறமையில்லாதவன்” என்று பதில் கூறினான்.

13 ஆனால் கர்த்தர் மோசேயோடும், ஆரோனோடும் பேசினார். இஸ்ரவேல் ஜனங்களிடமும், பார்வோனிடமும் சென்று பேசுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்துமாறும் அவர்களுக்கு தேவன் கட்டளையிட்டார்.

இஸ்ரவேலின் சில குடும்பங்கள்

14 இஸ்ரவேல் குடும்பத் தலைவர்களில் சிலருடைய பெயர்கள் இங்குத் தரப்படுகின்றன:

இஸ்ரவேலின் முதல் மகன் ரூபனுக்கு நான்கு மகன்கள். அவர்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ ஆகியோர்.

15 சிமியோனின் மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், சவுல் ஆகியோர். (சவுல் கானானிய பெண்ணின் மகன்.)

16 லேவி 137 ஆண்டுகள் வாழ்ந்தான். கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் ஜனங்கள்.

17 கெர்சோனுக்கு, லிப்னீ, சிமேயீ என்னும் இரண்டு மகன்கள் இருந்தனர்.

18 கோகாத் 133 ஆண்டுகள் வாழ்ந்தான். கோகாத்தின் ஜனங்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர்.

19 மெராரியின் ஜனங்கள் மகேலியும், மூசியுமாவர்.

இந்தக் குடும்பங்கள் அனைத்தும் இஸ்ரவேலின் மகன் லேவியிலிருந்து வந்தவை.

20 அம்ராம் 137 ஆண்டுகள் வாழ்ந்தான். அவன் தன் தந்தையின் சகோதரியாகிய யோகெபேத்தை மணந்தான். அம்ராமும் யோகெபேத்தும், ஆரோனையும் மோசேயையும் பெற்றனர்.

21 கோராகு, நெப்பேக், சித்ரி ஆகியோர் இத்சேயாரின் மகன்கள்.

22 மீசவேல், எல்சாபான், சித்ரி ஆகியோர் ஊசியேலின் மகன்கள்.

23 எலிசபாளை ஆரோன் மணந்தான். (எலிசபா அம்மினதாபின் மகளும், நகசோனின் சகோதரியுமாவாள்.) ஆரோனும் எலிசபாளும் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரைப் பெற்றனர்.

24 ஆசீர், எல்க்கானா, அபியாசாப் ஆகியோர் கோராகின் ஜனங்களும் கோராகியரின் முற்பிதாக்களும் ஆவார்கள்.

25 ஆரோனின் மகனாகிய எலெயாசார் பூத்தயேலின் மகள் ஒருத்தியை மணந்தான். அவள் பினெகாசைப் பெற்றெடுத்தாள்.

இந்த ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலின் மகனாகிய லேவியின் குடும்பத்தினராவார்கள்.

26 ஆரோனும் மோசேயும், இந்த கோத்திரத்திலிருந்து வந்தனர். அவர்களிடம் தேவன் பேசி, “குழுக்களாக என் ஜனங்களை வழிநடத்து” என்றார். 27 ஆரோனும், மோசேயும் எகிப்து மன்னன் பார்வோனிடம் பேசினார்கள். எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்கு அனுமதிக்கும்படி அவர்கள் பார்வோனிடம் கூறினார்கள்.

மோசேயை தேவன் மீண்டும் அழைத்தல்

28 எகிப்தில் தேவன் மோசேயிடம் பேசினார். 29 அவர், “நானே கர்த்தர். நான் உன்னிடம் கூறுகின்றவற்றை எகிப்து அரசனிடம் சொல்” என்றார்.

30 ஆனால் மோசே, “நான் பேச திறமையில்லாதவன். அரசன் எனக்குச் செவிசாய்க்கமாட்டான்” என்று பதிலளித்தான்.

மத்தேயு 14:22-36

இயேசு தண்ணீரின் மேல் நடத்தல்(A)

22 பிறகு இயேசு தமது சீஷர்களைப் படகில் ஏறச் சொன்னார். இயேசு அவர்களை ஏரியின் மறுகரைக்குப் போகச் சொன்னார். தாம் பின்னர் வருவதாக அவர்களிடம் கூறினார். 23 மக்களிடம் விடை பெற்றுக்கொண்ட இயேசு குன்றின்மீது ஏறினார். தனியே பிரார்த்தனை செய்வதற்காக இயேசு அங்கு சென்றார். 24 அந்தச் சமயம், படகு ஏற்கெனவே வெகு தொலைவு சென்றிருந்தது. படகு அலைகளினால் தொல்லைகளுக்கு உள்ளானது. படகு சென்ற திசைக்கு எதிராகக் காற்று வீசியது.

25 அதிகாலை, மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை இயேசுவின் சீஷர்கள் படகிலேயே இருந்தனர். இயேசு தண்ணீரின் மேல் நடந்து அவர்களிடம் வந்தார். 26 இயேசு தண்ணீரின் மேல் நடப்பதைக் கண்ட சீஷர்கள் பயந்து போனார்கள்., “அது ஒரு ஆவிதான்” என்று அவர்கள் பயத்தில் அலறினார்கள்.

27 உடனே இயேசு அவர்களிடம்,, “கவலை கொள்ளாதீர்கள். நான்தான்! பயப்படாதீர்கள்” என்று கூறினார்.

28 அதற்குப் பேதுரு,, “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தானென்றால், என்னை உம்மிடம் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று சொன்னான்.

29 இயேசு அவனிடம்,, “வா, பேதுரு” என்று கூறினார்.

பின்னர், பேதுரு படகிலிருந்து இறங்கி, தண்ணீரின் மேல் இயேசுவை நோக்கி நடந்தான். 30 ஆனால், தண்ணீரின் மேல் நடந்து சென்றபொழுது பேதுரு காற்றடிப்பதையும் அலைகள் வீசுவதையும் கண்டான். பயந்து போன பேதுரு, நீரில் மூழ்க ஆரம்பித்தான். உடனே பேதுரு,, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று அலறினான்.

31 உடனே இயேசு தமது கையால் பேதுருவைப் பற்றிக்கொண்டார். இயேசு அவனிடம்,, “உன் விசுவாசம் சிறியது. நீ ஏன் சந்தேகம் கொண்டாய்?” என்று சொன்னார்.

32 பேதுருவும் இயேசுவும் படகில் ஏறியதும் காற்று அமைதியடைந்தது. 33 அதன் பிறகு படகிலிருந்த சீஷர்கள் இயேசுவை வணங்கி,, “உண்மையிலேயே நீர் தேவகுமாரன்தான்” என்று சொன்னார்கள்.

அநேக நோயாளிகளை இயேசு குணமாக்குதல்(B)

34 அவர்கள் ஏரியைக் கடந்து, கெனசெரேத்து என்ற இடத்தை அடைந்தார்கள். 35 அங்கிருந்த மக்கள் இயேசுவைக் கண்டனர். அவர்கள் அவர் யார் என்பதை அறிந்திருந்தனர். எனவே, அவர்கள் அப்பிரதேசத்தைச் சுற்றியிருந்த மற்றவர்களிடம் இயேசு வந்திருப்பதைக் கூறினார்கள். நோயாளிகள் அனைவரையும் இயேசுவிடம் அழைத்து வந்தனர். 36 அவரது மேலாடையைத் தொடுவதற்கு மட்டுமாவது அனுமதித்து குணம் பெறத் தங்களை அனுமதிக்குமாறு இயேசுவிடம் மக்கள் கெஞ்சிக் கேட்டனர். இயேசுவின் மேலாடையைத் தொட்ட நோயாளிகள் அனைவரும் குணமடைந்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center