Old/New Testament
சமாதானத்தின் அரசர் வந்துகொண்டிருக்கிறார்
11 ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து ஒரு குழந்தை துளிர் தோன்றி வளரத் தொடங்கியது. அந்தக் கிளையானது ஈசாயின் குடும்பத்தில் வேரிலிருந்து தோன்றி வளரும். 2 கர்த்தருடைய ஆவி அந்தச் சிறு (பிள்ளையின்) துளிர்மேல் இருக்கும். ஆவியானவர் ஞானம், புரிந்துகொள்ளுதல், வழிநடத்துதல், வல்லமை போன்றவற்றைத் தருகிறார். ஆவியானவர் அந்த பிள்ளைக்கு கர்த்தரைத் தெரிந்துகொள்ளவும், அவரை மதிக்கவும் உதவுவார். 3 இந்தப் பிள்ளை கர்த்தருக்கு மரியாதை கொடுக்கும். பிள்ளையை இது மகிழ்ச்சி உடையதாகச் செய்யும்.
அவர் தமது கண்கண்டபடி நியாயம்தீர்க்கமாட்டார். அவர் தமது காதில் கேட்டபடி தீர்ப்பு அளிக்கமாட்டார். 4 - 5 அவர் ஏழை ஜனங்களை நீதியுடனும் பொறுமையுடனும் நியாயம்தீர்ப்பார். இந்த நாட்டிலுள்ள ஏழை ஜனங்களுக்குச் சரியாகத் தீர்ப்பு செய்து காரியங்களைச் செய்வார். அவர் ஜனங்களை அடிக்கவேண்டும் என்று முடிவு செய்தால், பிறகு அவர் கட்டளையிடுவார், அந்த ஜனங்கள் அடிக்கப்படுவார்கள். ஜனங்கள் மரிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தால், அவர் கட்டளையிட, பாவிகள் கொல்லப்படுவார்கள். நன்மையும் நீதியும் இந்தக் குழந்தைக்குப் பலத்தைக் கொடுக்கும். அவை அவருக்கு இடுப்பைச்சுற்றிக் கட்டப்படும் கச்சையைப்போல இருக்கும்.
6 அப்போது, ஓநாய்கள் ஆட்டுக்குட்டிகளோடு சமாதானமாய் வாழும், புலிகள் வெள்ளாட்டுக் குட்டிகளோடு சமாதானமாய் படுத்துக்கொள்ளும். கன்றுக்குட்டியும் இளஞ்சிங்கமும் காளையும் சமாதானமாக ஒரே இடத்தில் வாழும். ஒரு சிறு பிள்ளை அவைகளை வழிநடத்துவான். 7 பசுக்களும் கரடியும் சமாதானமாக சேர்ந்து மேயும். அவற்றின் குட்டிகள் ஒன்றையொன்று காயப்படுத்தாமல் சேர்ந்து படுத்துக்கொள்ளும். சிங்கமானது, பசுவைப்போன்று புல்லைத் தின்னும். பாம்புகளும் கூட ஜனங்களைக் கடிக்காது. 8 ஒரு குழந்தை நல்லபாம்பின் புற்றினருகில் விளையாட முடியும். ஒரு குழந்தை ஒரு விஷமிக்க பாம்பின் துளையில் கையை விடமுடியும்.
9 இவையனைத்தும் சமாதானத்தைக் காட்டும். ஒருவரும் மற்றவரைத் துன்புறுத்தமாட்டார்கள். எனது பரிசுத்தமான மலையிலுள்ள ஜனங்கள் பொருட்களை அழிக்க விரும்பமாட்டார்கள். ஏனென்றால், ஜனங்கள் உண்மையிலேயே கர்த்தரை அறிந்திருக்கின்றனர். கடல் நிறைய தண்ணீர் இருப்பது போன்று அவர்களிடம் கர்த்தரைப்பற்றிய அறிவு நிறைந்திருக்கும்.
10 அப்போது, ஈசாயின் குடும்பத்தில் இருந்து ஒருவர் வருவார். அவர் ஒரு கொடியைப்போல இருப்பார்.
“அக்கொடி” அனைத்து நாடுகளையும் காட்டி அவரைச் சுற்றிவரும். நாடுகளெல்லாம் தான் செய்ய வேண்டியதைப்பற்றி அவரிடம் கேட்கும். அவர் இருக்கின்ற இடமெல்லாம் மகிமை நிறைந்திருக்கும்.
11 அப்போது, என் ஆண்டவரான தேவன், மீண்டும் தமது கையை உயர்த்தி மீதியான ஜனங்களை அழைத்துக்கொள்வார். இதனை தேவன் இரண்டாம் முறையாகச் செய்கின்றார். (இவர்கள் தேவனுடைய ஜனங்கள். இவர்கள் அசீரியா, வட எகிப்து, தென் எகிப்து, எத்தியோப்பியா, ஏலாம், பாபிலோனியா, ஆமாத், மற்றும் தூர நாடுகளிலும் மீதியாயிருந்தவர்கள்). 12 தேவன் இந்தக் “கொடியை” அனைத்து ஜனங்களுக்கும் அடையாளமாக ஏற்றுவார். யூதா மற்றும் இஸ்ரவேலில் உள்ள ஜனங்கள் தம் நாட்டைவிட்டுப்போகும்படி பலவந்தப்படுத்தப்படுவார்கள். ஜனங்கள் பூமியில் உள்ள தூரநாடுகளுக்கெல்லாம் சிதறிப்போனார்கள். ஆனால் தேவன் அனைவரையும் ஒன்று சேர்ப்பார்.
13 அப்போது, எப்பிராயீம் யூதாவின் மீது பொறாமைகொள்ளாது. யூதாவில் எந்தப் பகைவரும் விடுபடமாட்டார்கள். யூதா எப்பிராயீமுக்கு எவ்விதத் துன்பமும் கொடுக்காது.
14 ஆனால் எப்பிராயீமும் யூதாவும் பெலிஸ்தர்களைத் தாக்குவார்கள். இந்த இரு நாடுகளும் சிறு மிருகங்களைப் பிடிக்கும் பறவைகளைப்போன்று சேர்ந்து பறக்கும். அவர்கள் இருவரும் கிழக்கு நாட்டு ஜனங்களின் ஐசுவரியத்தை கொள்ளையிடுவார்கள். எப்பிராயீமும் யூதாவும் ஏதோம், மோவாப் மற்றும் அம்மோன் ஜனங்களைக் கட்டுப்படுத்துவார்கள்.
15 கர்த்தர் கோபங்கொண்டு எகிப்திலுள்ள கடலை இரண்டாகப் பிளந்தார். இதுபோல, கர்த்தர் தனது கையை ஐபிராத்து ஆற்றின் மேல் அசைப்பார். அவர் ஆற்றை அடித்ததும் அது ஏழு சிறு ஆறுகளாகப் பிரியும். இந்தச் சிறு ஆறுகள் ஆழம் குறைந்தவை. இவற்றில் ஜனங்கள் தம் பாதரட்சைச் கால்களோடு எளிதாக நடந்துபோகலாம். 16 தேவனுடைய ஜனங்கள் அசீரியாவை விட்டுச் செல்ல ஒரு பாதை கிடைக்கும். இது தேவன் எகிப்தை விட்டு ஜனங்களை வெளியே கொண்டுவந்ததுபோல இருக்கும்.
தேவனைத் துதிக்கும் பாடல்
12 அப்போது நீ கூறுவாய்,
“கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்
நீர் என் மீது கோபமாக இருந்தீர்.
ஆனால் இப்போது கோபமாக இருக்க வேண்டாம்!
என் மீது உமது அன்பைக் காட்டும்”.
2 என்னை தேவன் காப்பாற்றுகிறார்.
நான் அவரை நம்புகிறேன். நான் அஞ்சவில்லை.
அவர் என்னைக் காப்பாற்றுகிறார்.
கர்த்தராகிய யேகோவா எனது பெலம்.
அவர் என்னைக் காப்பாற்றுகிறார்.
நான் அவரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுகிறேன்.
3 உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள்.
பிறகு நீ மகிழ்ச்சியாய் இருப்பாய்.
4 பிறகு நீ கூறுவாய்:
“கர்த்தரைத் துதியுங்கள்! அவரது நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்
அவர் செய்தவற்றை அனைத்து ஜனங்களிடமும் கூறுங்கள்!”
5 கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்!
ஏனென்றால், அவர் பெரிய செயல்களைச் செய்துள்ளார்.
உலகம் முழுவதும் தேவனுடைய செயல்களைக் குறித்த செய்தியைப் பரப்புங்கள்.
எல்லா ஜனங்களும் இதனை அறியும்படி செய்யுங்கள்.
6 சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப்பற்றிச் சத்தமிடுங்கள்!
இஸ்ரவேலின் பரிசுத்தர் பலமிக்க வழியில் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்!
பாபிலோனுக்கு தேவனுடைய செய்தி
13 ஆமோத்சின் மகனான ஏசாயாவுக்கு தேவன் பாபிலோன்பற்றிய சோகச் செய்தியைக் காட்டினார்.
2 தேவன், “எதுவும் வளராத அந்த இடத்தில், மலை மீது கொடியை ஏற்றுங்கள்.
அந்த மனிதர்களை அழையுங்கள்.
உங்கள் கைகளை அசையுங்கள்.
அவர்கள் முக்கியமானவர்களுடைய வாசல்களில் நுழையும்படி கூறுங்கள்!” என்றார்.
3 தேவன்: “நான் அவர்களை ஜனங்களிடமிருந்து பிரித்திருக்கிறேன்.
நானே அவர்களுக்கு ஆணையிடுவேன்.
நான் கோபமாக இருக்கிறேன்.
ஜனங்களைத் தண்டிக்க எனது மிகச் சிறந்தவர்களை கூட்டிச்சேர்த்தேன். மகிழ்ச்சியுள்ள இவர்களைப்பற்றி பெருமிதமடைகிறேன்!.
4 மலைகளில் உரத்த சத்தம் உள்ளது.
அச்சத்தத்தை கவனியுங்கள்! அது பல மனிதர்களின் சத்தம் போலுள்ளது.
பல அரசாங்கங்களிலிருந்து ஜனங்கள் அங்கு கூடியிருக்கின்றார்கள்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம் படைகளைக் கூட்டியிருக்கிறார்.
5 கர்த்தரும் அவரது படைகளும் தூர நாடுகளிலிருந்து வந்துள்ளனர்.
அவர்கள் பூமியின் எல்லைகளுக்கு அப்பாலிருந்து வருகிறார்கள்.
கர்த்தர் தன் கோபத்தைக் காட்ட இவர்களை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்.
இந்தப் படை முழு நாட்டையும் அழிக்கும்” என்றார்.
6 கர்த்தருடைய விசேஷ நாள் நெருங்குகிறது. எனவே அழுங்கள். உங்களுக்காகச் சோகமாக இருங்கள். பகைவர்கள் உங்கள் செல்வங்களைப் பறிக்கும் காலம் வந்துகொண்டிருக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவன் இதனை நிறைவேற்றுவார். 7 ஜனங்கள் தம் தைரியத்தை இழப்பார்கள். ஜனங்களை அச்சம் பெலவீனப்படுத்தும்.
8 ஒவ்வொருவரும் அஞ்சுவார்கள். இந்த அச்சம் அவர்களின் வயிற்றில் பிரசவ வேதனைபோன்ற துன்பத்தைத் தரும். அவர்களின் முகங்கள் நெருப்பைப்போன்று சிவக்கும். ஒருவரையொருவர் பார்த்து பிரமித்துப்போவார்கள். காரணம் எல்லாருடைய முகங்களிலும் அச்சம் நிரம்பியிருக்கும்.
பாபிலோனுக்கு எதிரான தேவனுடைய தீர்ப்பு
9 பார்! கர்த்தருடைய விசேஷ நாள் வருகிறது! இது பயங்கரமான நாள். தேவன் மிகவும் கோபம் அடைந்து, நாட்டினை அழிப்பார். பாவம் செய்த அனைவரையும் தேவன் அழித்துப்போடுவார். 10 வானம் இருட்டாகும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் ஒளி வீசாது.
11 தேவன் கூறுகிறார்: “உலகத்திற்கு கேடு ஏற்பட நான் காரணமாக இருப்பேன். கெட்டவர்களை அவர்களது பாவத்துக்காகத் தண்டிப்பேன். ஆணவம் கொண்டவர்கள் தங்கள் ஆணவத்தை விடும்படி செய்வேன். மற்றவர்களுக்கு அற்பமாகத் தெரியும்படி செயல்புரிகிறவர்களின் வாயாட்டத்தை நான் தடுப்பேன். 12 கொஞ்சம்பேர் மட்டுமே விடுபடுவார்கள். அதிகம் பேர் இருக்கமாட்டார்கள். தங்கத்தைப்போன்று அரிதாக இருப்பார்கள். இவர்கள் சுத்தமான தங்கத்தைவிட விலைமதிப்புள்ளவர்கள். 13 எனது கோபத்தால் வானத்தை நடுங்கவைப்பேன். பூமி தன் இடத்திலிருந்து நகரும்”. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தன் கோபத்தைக் காட்டும் நாளில் இவை அனைத்தும் நிறைவேறும். 14 பிறகு, காயம்பட்ட மானைப்போல, பாபிலோனை விட்டு ஜனங்கள் ஓடுவார்கள். மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல, அவர்கள் ஓடுவார்கள். ஒவ்வொருவரும் திரும்பி தங்கள் சொந்த நாட்டிற்கும் ஜனங்களிடமும் ஓடுவார்கள். 15 ஆனால் பாபிலோனிய ஜனங்களைப் பகைவர்கள் துரத்துவார்கள். பகைவன் ஒருவனைப் பிடிக்கும்போது, அவனை வாளால் கொல்வான். 16 அவர்களது வீடுகளிலுள்ள அனைத்தும் களவாடப்படும். அவர்களின் மனைவிகள் கற்பழிக்கப்படுவார்கள். அவர்களின் சிறிய குழந்தைகள், ஜனங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அடித்துக் கொல்லப்படுவார்கள். 17 தேவன் கூறுகிறார்: “கவனி, மீதியானியப் படைகள் பாபிலோனைத் தாக்க நான் காரணமாக இருப்பேன். மீதியானியப் படைகளுக்குப் பொன்னும், வெள்ளியும் கொடுத்தாலும்கூட தங்கள் தாக்குதலை நிறுத்தாது. 18 பாபிலோனிலுள்ள இளைஞர்களைப் படை வீரர்கள் தாக்கிக் கொல்வார்கள். படை வீரர்கள் குழந்தைகளிடம் இரக்கம் காட்டமாட்டார்கள். படை வீரர்கள் சிறு பிள்ளைகளிடமும் தயவோடு இருக்கமாட்டார்கள். பாபிலோன் அழிக்கப்படும். அது சோதோம் கொமோரா ஆகியவற்றின் அழிவைப்போல் இருக்கும். தேவன் இந்த அழிவுக்குக் காரணமாக இருப்பார். எதுவும் விடுபடாது. 19 “எல்லா இராஜ்யங்களையும்விட பாபிலோன் மிகவும் அழகானது. பாபிலோனிய ஜனங்கள் தமது நகரத்தைப்பற்றிப் பெருமையோடு இருக்கிறார்கள். 20 ஆனால் தொடர்ந்து பாபிலோன் அழகுடையதாக இருக்காது. வருங்காலத்தில் அங்கு ஜனங்கள் தொடர்ந்து வாழமாட்டார்கள். அரேபியர்கள் அங்கே தமது கூடாரங்களை அமைக்கமாட்டார்கள். மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை அங்கே மேய்ச்சலுக்குக் கொண்டுவரமாட்டார்கள். 21 அங்கே வனாந்திரத்திலுள்ள காட்டு மிருகங்கள் மட்டுமே வாழும். பாபிலோனின் வீடுகளில் ஜனங்கள் வசிக்கமாட்டார்கள். வீடு முழுவதும் ஆந்தைகளும், பெரிய பறவைகளும் வசிக்கும். காட்டு ஆடுகள் வீடுகளில் விளையாடும். 22 காட்டு நாய்களும், நரிகளும் பாபிலோனில் மிகப்பெரிய அழகான கட்டிடங்களில் ஊளையிடும். பாபிலோன் அழியும். பாபிலோனின் முடிவு அருகிலுள்ளது. பாபிலோனின் அழிவை நான் தாமதமாக்க விடமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார்.
சரீரத்தின் ஒற்றுமை
4 நான் கர்த்தரைச் சார்ந்தவனாதலால் சிறையில் இருக்கிறேன். தேவன் உங்களைத் தம் மக்களாகத் தேர்ந்தெடுத்தார். தேவனுடைய மக்கள் வாழும் முறைப்படி நீங்களும் வாழவேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 2 எப்போதும் பணிவும், சாந்தமும் உடையவர்களாக இருங்கள். பொறுமையோடு ஒருவரை ஒருவர் அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள். 3 நீங்கள் ஆவியின் மூலமாகச் சமாதானத்துடன் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள். இதே வழியில் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவாருங்கள். சமாதானம் உங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கட்டும். 4 ஒரே சரீரமும் ஒரே ஆவியும் தான் உள்ளது. ஒரே பொதுவான விசுவாசம்கொள்ள தேவன் உங்களை அழைக்கிறார். 5 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும் உள்ளன. 6 எல்லாருக்கும் ஒரே பிதாவான தேவன் உண்டு. அவர் எல்லாவற்றையும் ஆள்பவர். அவர் எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் இருப்பவர்.
7 நம்மில் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து ஒரு சிறப்புப் பரிசு கொடுத்திருக்கிறார், கிறிஸ்து ஒவ்வொருவருக்கும் எதைக் கொடுக்க விரும்புகிறாரோ அதையேԔ அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். 8 அதனால் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.
அவர் உயரத்தில் ஏறி ஆகாயத்துக்குள் சென்றார்.
அவர் சிறைபட்டவர்களை சிறையாக்கி, அவர்களுக்கு வரங்களையும் கொடுத்தார். (A)
9 அவர் மேலே சென்றார் என்று சொல்லும்போது அதன் பொருள் என்ன? முதலில் அவர் பூமிக்குக் கீழிறங்கி வந்தார் என்பது பொருளாகிறது. 10 எனவே இயேசு இறங்கி வந்தார். பின் அவரே மேலேயும் சென்றார். அவர் எல்லா வானங்களுக்கும் மேலே ஏறிச் சென்றார். கிறிஸ்து தாமாகவே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக அப்படிச் செய்தார். 11 அதே கிறிஸ்து மக்களுக்கு வரங்களைக் கொடுத்தார். சிலரை அப்போஸ்தலராக்கினார், சிலரை தீர்க்கதரிசிகளாக்கினார், சிலரை சுவிசேஷகர்களாக்கினார். சிலரை தேவனின் மக்களைப் பற்றி அக்கறைகொள்ளும் மேய்ப்பர்களாக்கினார், சிலரை போதிப்பவர்களாக்கினார். 12 கிறிஸ்துவின் பரிசுத்தவான்களைச் சேவை செய்ய தேவன் பல வரங்களைக் கொடுத்தார். கிறிஸ்துவின் சபையானது வல்லமை பெறவே அவர் வரங்களைக் கொடுத்தார். 13 நாம் அனைவரும் அதே நம்பிக்கையில் ஒன்றுபட வேண்டும். தேவனுடைய குமாரனைப் பற்றிய அறிவைப் பெறவேண்டி, அதுவரை இவ்வேலை தொடரவேண்டும். நாம் முழுமை பெற்றவர்களாக மாற வேண்டும். நாம் கிறிஸ்துவைப்போல் ஆகும் வரை வளர வேண்டும். அவரது முழுமையைப் பெற வேண்டும்.
14 நாம் இன்னும் குழந்தைகள் போல் இருப்பதை நிறுத்த வேண்டும். அலைகளால் அலைக்கழிக்கப்படும் கப்பலைப்போல சிலர் அடிக்கடி மனம் மாறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களைப் போன்று இருப்பதையும் நிறுத்த வேண்டும். நம்மைத் தந்திரமாகச் சிக்கவைக்க சிலர் முயலும்போது நாம் அவர்கள் பின்னால் போகக் கூடாது. 15 நாம் அன்புடன் உண்மையை மட்டும் பேசுவோம். எல்லா வழிகளிலும் நாம் இயேசுவைப் போன்று வளருவோம். கிறிஸ்து தலையும் நாம் சரீரமும் ஆவோம். 16 இந்த முழு சரீரமும் அவரைச் சார்ந்தது. எல்லா உறுப்புகளும் ஒன்று சேர்ந்து வளருகிறது. ஒவ்வொரு உறுப்பும் அதனதன் வேலையைச் செய்து வருகின்றது. அனைத்தும் சேர்ந்து முழுசரீரம் உருவாகி, அன்போடு வலிமை கொண்டதாக வளர உதவுகிறது.
நீங்கள் வாழ வேண்டிய வழி
17 கர்த்தருக்காக நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன். நான் எச்சரிப்பதாவது: நம்பிக்கை அற்றவர்களைப் போன்று நீங்களும் தொடர்ந்து வாழக் கூடாது. அவர்களது சிந்தனைகள் பயனற்றவை. 18 அந்த மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களின் மனம் மூடியது, இதயம் கடினமானது, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. எனவே தேவன் கொடுக்கிற வாழ்க்கை அவர்களுக்கு இல்லை. 19 அவர்கள் தங்கள் வெட்க உணர்வை இழந்துவிட்டனர். தீயவற்றைச் செய்வதற்காகவே தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்துகிறார்கள். எல்லா வகையான கெட்ட செயல்களையும் செய்ய அவர்கள் மேலும் மேலும் விரும்புகிறார்கள். 20 ஆனால் நீங்கள் கிறிஸ்துவின் மூலமாகக் கற்றுக் கொண்டவை அந்தக் கெட்டவற்றைப் போன்றதல்ல. 21 அவரைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது எது என்பது எனக்குத் தெரியும். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு உண்மையானது கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆமாம், அந்த உண்மை இயேசுவிடம் உள்ளது. 22 உங்கள் பழைய வாழ்க்கை முறைகளை விட்டுவிடவும், எப்போதும் தீமையைத் தருகிற பழைய குணங்களை ஒதுக்கவும் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அது மேலும் மோசமாகிவிட்டது. ஏனென்றால் அவர்கள் தீயவற்றால் முட்டாளாக்கப்பட்டு அவற்றையே புதுப்பிக்க விரும்புகிறார்கள். 23 ஆனால் நீங்கள் உங்கள் இதயத்தில் புதியவர்களாகும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். 24 நீங்கள் புதிய மனிதனாக இருக்கக் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்தப் புதிய மனிதன் தேவனைப்போன்று செய்யப்படுகிறான். உண்மையான நீதியிலும், பரிசுத்தத்திலும் இருக்கிறான்.
25 எனவே நீங்கள் பொய் சொல்வதை நிறுத்துங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள். ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே சரீரத்தின் பல்வேறு உறுப்புகளாகச் சேர்ந்திருக்கிறோம். 26 உங்கள் கோபம் உங்களைப் பாவம் செய்யக் கொண்டுசெல்லுமளவு அனுமதிக்காதீர்கள். நாள் முழுவதும் கோபம் உடையவர்களாக இருக்காதீர்கள். 27 உங்களை வீழ்த்துவதற்குரிய வழியைப் பிசாசுக்குக் கொடுக்க வேண்டாம். 28 ஒருவன் திருடுகின்றவனாக இருந்தால் தன் திருட்டை நிறுத்துவானாக. அவன் வேலை செய்யத் தொடங்கட்டும். அவன் தனது கைகளை நல்ல செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்தட்டும். பிறகு ஏழைகளோடு பகிர்ந்துகொள்ள அவனுக்கென்று சில இருக்கும்.
29 நீங்கள் பேசும்போது தீயவற்றைச் சொல்லாதீர்கள். ஆனால் மற்றவர்களுக்குப் பயன் தரத்தக்கதும், மற்றவர்களைப் பலமுள்ளதாக்குகிறவைகளை மட்டும் பேசுங்கள். அதனால் உங்கள் பேச்சைக் கேட்பவர்களுக்கு உங்கள் பேச்சு ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். 30 பரிசுத்த ஆவியானவரைச் சோகப்படுத்தாதீர்கள். நீங்கள் தேவனுக்குரியவராக இருக்கிறீர்கள் என்பதற்கு ஆவியானவரே சான்றாக உள்ளார். தேவன் உங்களுக்குச் சரியான நேரத்தில் விடுதலை தருவார் என்பதைக் காட்டவே தேவன் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குத் தந்துள்ளார். 31 கசப்பும், கோபமும், மூர்க்கமும் அடையாதீர்கள். கோபத்தில் சத்தம் இடாதீர்கள். கடுஞ்சொற்களைச் சொல்லாதீர்கள். பாவங்களை செய்யாதீர்கள். 32 ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருங்கள். கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்துவிடுவதைப்போல நீங்களும் மற்றவர்களை மன்னித்துவிடுங்கள்.
2008 by World Bible Translation Center