Old/New Testament
எரேமியா மற்றும் பஸ்கூர்
20 பஸ்கூர் என்ற பெயருள்ள ஒருவன் ஆசாரியனாக இருந்தான். கர்த்தருடைய ஆலயத்தில் முக்கியமான அதிகாரியாக இருந்தான். பஸ்கூர், இம்மேர் என்ற பெயருடையவனின் மகனாக இருந்தான். பஸ்கூர் எரேமியாவின் பிரசங்கத்தை ஆலயப் பிரகாரத்தில் வைத்துக் கேட்டான். 2 எனவே அவன் எரேமியா தீர்க்கதரிசியை அடித்தான். ஆலயத்தில் பென்யமீனின் மேல் வாசலருகே அவனது கைகளிலும் கால்களிலும் பெரிய மரத்தடிகளால் விலங்கிட்டான். 3 மறுநாள் பஸ்கூர் எரேமியாவை மரக் காவலில் இருந்து வெளியேற்றினான். பிறகு எரேமியா பஸ்கூரிடம் சொன்னான், “கர்த்தருக்கு உன் பெயர் பஸ்கூர் அல்ல. இப்போது கர்த்தர் உனக்கு, ஒவ்வொரு பக்கத்திலும் பயங்கரம் என்ற பெயரை வைத்துள்ளார். 4 அதுதான் உனது பெயர். ஏனென்றால் கர்த்தர்: ‘உனக்கு உன்னையே பயங்கரமானவனாக விரைவில் செய்வேன்! நான் உன்னை உனது அனைத்து நண்பர்களுக்கும் ஒரு பயங்கரமாகச் செய்வேன். உனது நண்பர்களை சத்துருக்கள் வாளால் கொல்லுகிறதை நீ பார்ப்பாய். நான் யூதாவின் அனைத்து ஜனங்களையும் பாபிலோன் அரசனிடம் கொடுப்பேன். அவன் யூதாவின் ஜனங்களை பாபிலோன் நாட்டுக்குக் கொண்டுச் செல்வான். யூதாவின் ஜனங்களை அவனது படை வாள்களால் கொல்வார்கள். 5 எருசலேம் ஜனங்கள் கடினமாக உழைத்து செல்வம் சேர்த்தனர். ஆனால், நான் அவற்றையெல்லாம் அவர்களது பகைவர்களுக்குக் கொடுப்பேன். எருசலேமில் அரசனுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன. ஆனால் நான் அந்தப் பொக்கிஷங்கள் அனைத்தையும் பகைவர்களுக்குக் கொடுப்பேன். பகைவர்கள் அவற்றை எடுத்து பாபிலோன் நாட்டிற்குக் கொண்டுசெல்வார்கள். 6 பஸ்கூர், நீயும் உன்னோடு வீட்டில் உள்ள அனைவரும் கொண்டுசெல்லப்படுவீர்கள். நீங்கள் பலவந்தமாகப் பாபிலோன் நாட்டில் வாழ வைக்கப்படுவீர்கள். நீ பாபிலோனில் மரிப்பாய். அந்த அயல்நாட்டில் நீ புதைக்கப்படுவாய். நீ உனது நண்பர்களுக்குப் பொய்யைப் பிரச்சாரம் செய்தாய். நீ இவை நிகழாது என்று சொன்னாய். ஆனால், உனது அனைத்து நண்பர்களும் மரித்து பாபிலோனில் புதைக்கப்படுவார்கள்.’”
எரேமியாவின் ஐந்தாவது முறையீடு
7 கர்த்தாவே, நீர் என்னிடம் தந்திரம் செய்தீர்.
நான் ஒரு முட்டாளாக இருந்தேன்.
நீர் என்னைவிட பலமுள்ளவர்.
எனவே நீர் வென்றீர்.
நான் வேடிக்கைக்குரிய பொருளானேன்.
ஜனங்கள் என்னைப் பார்த்து சிரித்தனர்.
நாள் முழுவதும் என்னை வேடிக்கை செய்தனர்.
8 ஒவ்வொரு முறையும் நான் பேசும்போது கதறுகிறேன்.
நான் எப்பொழுதும் வன்முறை மற்றும் பேரழிவு பற்றி சத்தமிடுகிறேன்.
நான் கர்த்தரிடமிருந்து பெற்ற வார்த்தையைப்பற்றி ஜனங்களிடம் சொல்கிறேன்.
ஆனால், ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்;
என்னை வேடிக்கை செய்கிறார்கள்.
9 சில நேரங்களில் நான் எனக்குள் சொல்கிறேன்.
“நான் கர்த்தரைப்பற்றி மறப்பேன்.
நான் மேலும் கர்த்தருடைய நாமத்தால் பேசமாட்டேன்!”
ஆனால் நான் இதனைச் சொன்னால், பிறகு கர்த்தருடைய வார்த்தை அக்கினியைப் போன்று எனக்குள் எரிந்துகொண்டு இருக்கிறது,
எனது எலும்புக்குள் அது ஆழமாக எரிவதுபோன்று எனக்குத் தோன்றுகிறது!
எனக்குள் கர்த்தருடைய செய்தியைத் தாங்கிக்கொள்வதில் நான் சோர்வு அடைகிறேன்!
இறுதியாக அதனை உள்ளே வைத்துக்கொள்ள முடியாமல் ஆகிறது.
10 ஜனங்கள் எனக்கு எதிராக முணுமுணுப்பதை நான் கேட்கிறேன்.
எங்கெங்கும் என்னைப் பயப்படுத்தும் செய்தியைக் கேட்கிறேன்.
என் நண்பர்களும் கூட, “அவனைப்பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்வோம்” என கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் நான் தவறு செய்வேன் என்று காத்திருக்கிறார்கள்.
அவர்கள், “எங்களைப் பொய் சொல்லவிடுங்கள்.
அவன் தீயவற்றைச் செய்தான் என்று சொல்லவிடுங்கள்.
நாங்கள் எரேமியாவிடம் தந்திரம்செய்ய முடியும்.
பிறகு அவனைப் பெறுவோம்.
இறுதியாக நாங்கள் அவனைத் தொலைத்து ஒழிப்போம்.
பிறகு அவனை இறுகப்பிடிப்போம்.
அவன் மேலுள்ள வஞ்சத்தை தீர்த்துக்கொள்வோம்” என்றார்கள்.
11 ஆனால், கர்த்தர் என்னோடு இருக்கிறார்;
கர்த்தர் பலமான போர் வீரனைப் போன்றிருக்கிறார்.
எனவே, என்னைத் துரத்துகிற வீரர்கள் விழுவார்கள்.
அந்த ஜனங்கள் என்னைத் தோற்கடிக்கமாட்டார்கள் அந்த ஜனங்கள் தோற்பார்கள்.
அவர்கள் ஏமாந்துப் போவார்கள்.
அந்த ஜனங்கள் அவமானமடைவார்கள்.
ஜனங்கள் அந்த அவமானத்தை
என்றென்றும் மறக்கமாட்டார்கள்.
12 சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நீர் நல்ல ஜனங்களை சோதிக்கிறீர்.
ஒருவனின் மனதை நீர் பார்க்கிறீர்.
அந்த ஜனங்களுக்கு எதிரான எனது வாதங்களை நான் உம்மிடம் சொன்னேன்.
எனவே அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நீர் அளிப்பதை என்னைப் பார்க்கப்பண்ணும்.
13 கர்த்தரிடம் பாடுங்கள்! கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் ஏழைகளின் வாழ்வைக் காப்பாற்றுவார்!
அவர் அவர்களைத் தீயவர்களிடமிருந்து காப்பாற்றுவார்!
எரேமியாவின் ஆறாவது முறையீடு
14 நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக!
என் தாய் என்னைப் பெற்ற நாளை ஆசீர்வதிக்க வேண்டாம்.
15 நான் பிறந்துவிட்ட செய்தியை என் தந்தையிடம் சொன்னவன் சபிக்கப்படட்டும்.
“உனக்கொரு மகன் பிறந்திருக்கிறான்,
அவன் ஒரு ஆண்பிள்ளை” என்று அவன் சொன்னான்.
அவன் அந்தச் செய்தியைச் சொல்லி
என் தந்தையை மிகவும் மகிழச் செய்தான்.
16 கர்த்தர் அழித்துப்போட்ட பட்டணங்களைப் போன்று அந்த மனிதன் ஆவானாக.
கர்த்தர் அந்தப் பட்டணங்கள் மீது எவ்வித இரக்கமும் கெள்ளவில்லை.
காலையில் அம்மனிதன் போரின் ஒலிகளைக் கேட்கட்டும்.
மதிய வேளையில் அவன் போர்க்கதறல்களைக் கேட்கட்டும்.
17 ஏனென்றால், நான் எனது தாயின் கருவில் இருக்கும்போது
அம்மனிதன் என்னைக் கொல்லவில்லை.
அந்த நேரத்தில் அவன் என்னைக் கொன்றிருந்தால்
என் தாயின் கர்ப்பப்பையே கல்லறை ஆகியிருக்கும்.
நான் பிறந்திருக்கவேமாட்டேன்.
18 நான் ஏன் அந்த உடலைவிட்டு வந்தேன்?
நான் பார்த்திருப்பதெல்லாம் தொல்லையும் துன்பமும்தான்.
என் வாழ்க்கை அவமானத்தில் முடியும்.
தேவன் சிதேக்கியா ராஜாவின் வேண்டுக்கோளை ஏற்க மறுக்கிறார்
21 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. யூதாவின் அரசனான சிதேக்கியா பஸ்கூர் என்ற மனிதனையும், செப்பனியா என்ற ஆசாரியனையும் எரேமியாவிடம் அனுப்பியபோது இந்த வார்த்தை வந்தது. பஸ்கூர் மல்கியா என்ற பெயருள்ளவனின் மகன். செப்பனியா, மாசெயா என்ற பெயருள்ளவனின் மகன். பஸ்கூரும் செப்பனியாவும் எரேமியாவிற்கு வார்த்தையைக் கொண்டுவந்தனர். 2 பஸ்கூரும் செப்பனியாவும் எரேமியாவிடம், “எங்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய். என்ன நிகழும் என்று கர்த்தரிடம் கேள். நாங்கள் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஏனென்றால் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சர் எங்களைத் தாக்கிக்கொண்டிருக்கிறான். கர்த்தர் கடந்த காலத்தில் செய்ததுபோன்று எங்களுக்குப் பெருஞ்செயல்களை ஒருவேளை செய்வார். நேபுகாத்நேச்சார் எங்களைத் தாக்குவதை நிறுத்தி விலகும்படி கர்த்தர் செய்வார்” என்றனர்.
3 பிறகு எரேமியா, பஸ்கூருக்கும் செப்பனியாவிற்கும் பதில் சொன்னான். அவன், “சிதேக்கியா அரசனுக்குச் சொல்லுங்கள். 4 ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வது இதுதான்: உங்கள் கைகளில் போருக்கான ஆயுதங்கள் உள்ளன. நீங்கள் அந்த ஆயுதங்களை பாபிலோனின் அரசன் மற்றும் பாபிலோனியர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுகிறீர்கள். ஆனால், நான் அந்த ஆயுதங்களைப் பயனற்றுப்போகும்படிச் செய்வேன்.
“‘நகரச்சுவர்களுக்கு வெளியே பாபிலோனியப் படை உள்ளது. அப்படை நகரைச் சுற்றிலும் உள்ளது. நான் விரைவில் அப்படையை எருசலேமிற்குள் கொண்டுவருவேன். 5 யூதாவின் ஜனங்களே, உங்களுக்கு எதிராக நானே போரிடுவேன். உங்களுக்கு எதிராக நான் என் சொந்த வல்லமையான கரத்தினாலேயே போரிடுவேன். உங்களுக்கு எதிராக நான் மிகக் கடுமையாகப் போரிடுவேன். நான் எவ்வளவு கோபமாக உள்ளேன் என்பதைக் காட்டுவேன். 6 எருசலேமில் வாழ்கிற ஜனங்களை நான் கொல்வேன். நான் ஜனங்களையும் மிருகங்களையும் கொல்வேன். நகரம் முழுவதும் பரவும் பயங்கரமான நோயால் அவர்கள் மரிப்பார்கள். 7 அது நிகழ்ந்த பிறகு, நான் யூதாவின் அரசனான சிதேக்கியாவைப் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நான் சிதேக்கியாவின் அதிகாரிகளையும் நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். எருசலேமில் உள்ள சில ஜனங்கள் பயங்கரமான நோயால் மரிக்கமாட்டார்கள். சில ஜனங்கள் வாளால் கொல்லப்படமாட்டார்கள். சிலர் பசியால் மரிக்கமாட்டார்கள். ஆனால் நான் அந்த ஜனங்களை நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நான் யூதாவின் பகைவர்களை வெல்லவிடுவேன். நேபுகாத்நேச்சாரின் படை யூதாவின் ஜனங்களைக் கொல்ல விரும்புகிறது. எனவே, யூதாவின் ஜனங்களும் எருசலேமின் ஜனங்களும் வாளால் கொல்லப்படுவார்கள். நேபுகாத்நேச்சார் எவ்வித இரக்கமும் காட்டமாட்டான். அவன் அந்த ஜனங்களுக்காக வருத்தப்படமாட்டான்.’”
8 “எருசலேம் ஜனங்களுக்கு இவற்றையும் சொல்லுங்கள். கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீங்கள் வாழ்வதா அல்லது மரிப்பதா என்பதைத் தேர்ந்தெடுக்க நானே அனுமதிப்பேன். 9 எருசலேமில் தங்குகிற எவனும் மரிப்பான். அந்த நபர் வாளால் மரிப்பான் அல்லது பசியால் மரிப்பான் அல்லது பயங்கரமான நோயால் மரிப்பான். ஆனால், எவன் ஒருவன் எருசலேமிற்கு வெளியே போகிறானோ, பாபிலோனில் படையிடம் சரணடைகிறானோ அவன் உயிர் வாழ்வான். நகரத்தைச்சுற்றி படை உள்ளது. எனவே, நகரத்திற்குள் எவனும் உணவைக் கொண்டுவர முடியாது. ஆனால், எவன் ஒருவன் நகரத்தை விட்டுப் போகிறானோ அவனது வாழ்வு பாதுகாக்கப்படும். 10 எருசலேம் நகரத்திற்குத் தொல்லை கொடுக்க நான் முடிவு செய்தேன். நான் நகரத்திற்கு உதவி செய்யமாட்டேன். நான் எருசலேம் நகரத்தைப் பாபிலோன் அரசனிடம் கொடுப்பேன். அவன் அதனை நெருப்பால் எரிப்பான்.’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
11 “யூதாவின் அரசக் குடும்பத்தில் இவற்றைக் கூறுங்கள்: ‘கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தையை கவனி. 12 தாவீதின் குடும்பத்தினரே, கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“‘ஒவ்வொரு நாளும் நீங்கள் சரியாக ஜனங்களை நியாயம் தீர்க்கவேண்டும்.
இரக்கமற்ற ஒடுக்குபவர்களிடமிருந்து ஒடுக்கப்படுபவர்களைக் காப்பாற்றுங்கள்.
நீங்கள் இதனைச் செய்யாவிட்டால்
நான் பிறகு கோபம்கொள்வேன்.
எனது கோபம் நெருப்பைப் போன்றது எவரும் அதனை அணைக்கமுடியாது.
இது நிகழும் ஏனென்றால், நீங்கள் தீயவற்றைச் செய்திருக்கிறீர்கள்.’
13 “எருசலேமே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
நீ மலையின் உச்சியில் உட்கார்ந்து இருக்கிறாய்.
இந்தப் பள்ளத்தாக்கின் மீதுள்ள அரசியைப் போன்று நீ உட்கார்ந்து இருக்கிறாய்.
எருசலேமில் ஜனங்களாகிய நீங்கள்,
‘எவராலும் எங்களைத் தாக்க முடியாது!
எங்கள் பலமான நகரத்திற்குள் எவராலும் வர இயலாது’” என்று கூறுகிறீர்கள்.
ஆனால், கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேளுங்கள்.
14 “உங்களுக்கு ஏற்ற தண்டனையை நீங்கள் பெறுவீர்கள்.
உங்கள் காடுகளில் ஒரு நெருப்பைத் தொடங்குவேன்.
அது உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரித்துவிடும்.”
4 தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் முன்னால் உனக்கு ஒரு கட்டளையை இடுகிறேன். வாழ்கிறவர்கள் மத்தியிலும், இறந்தவர்கள் மத்தியிலும் நியாயம் தீர்ப்பவர் இயேசு ஒருவரே. இயேசுவுக்கென்று ஒரு இராஜ்யம் உண்டு. அவர் மீண்டும் வருவார். எனவே நான் இந்தக் கட்டளையை வழங்குகிறேன். 2 மக்களிடம் நற்செய்தியைக் கூற எப்பொழுதும் தயாராக இரு. மக்களிடம் அவர்கள் செய்யவேண்டியவற்றைச் சொல். அவர்கள் தவறானவற்றைச் செய்யும்போது எடுத்துச் சொல்லி தடுத்து நிறுத்து. நல்லதைச் செய்யும்போது உற்சாகப்படுத்து. இவற்றைப் பொறுமையுடனும் கவனத்துடனும் போதி.
3 மக்கள் உண்மையான போதனைகளைக் கவனிக்காத காலம் வரும். தம் ஒவ்வொரு விசித்திர விருப்பத்தையும் சந்தோஷப்படுத்தும் ஏராளமான போதகர்களை சேர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இது விருப்பமாக இருக்கும். மக்கள் கேட்க விரும்புவதையே அவர்கள் கூறுவர். 4 மக்கள் உண்மையைக் கேட்பதை நிறுத்திவிடுவர். அவர்கள் பொய்க்கதைகளைப் போதிப்பவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவர். 5 ஆனால் நீ எப்பொழுதும் உன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். துன்பம் வந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்க. நற்செய்தியைச் சொல்லும் வேலையைச் செய்க. தேவனின் ஊழியனாக அனைத்து கடமைகளையும் செய்க.
6 என் வாழ்க்கையை தேவனுக்கே காணிக்கையாகத் தந்துவிட்டேன். இங்கே என் வாழ்வு முடியும் காலம் நெருங்கி விட்டது. 7 நான் போரிலே நன்றாகப் போராடியிருக்கிறேன். நான் பந்தயத்தை முடித்துவிட்டேன். நான் விசுவாசத்தைப் பாதுகாத்திருக்கிறேன். 8 இப்பொழுது எனக்காக ஒரு கிரீடம் காத்திருக்கிறது. அந்த நாளில் தேவன் என்னிடம் இதைக் கொடுப்பார். கர்த்தரே நியாயம் தீர்க்கிறவர். அவர் சரியாகச் செய்வார். அந்த நாளில் அவர் எனக்குக் கிரீடத்தைத் தருவார். அவரது வருகையை விரும்பி, அவருக்காகவே காத்திருக்கிற அனைவருக்கும் அவர் கிரீடத்தைத் தருவார்.
தனிப்பட்ட வார்த்தைகள்
9 உன்னால் எவ்வளவு விரைவில் என்னிடம் வர இயலுமோ அவ்வளவு விரைவில் வர முயற்சி செய். 10 தேமா இந்த உலகை மிகுதியாக நேசித்தான். அதனாலேயே அவன் என்னை விட்டுப் போனான். அவன் தெசலோனிக்கே நகரத்துக்குப் போனான். கிரெஸ்கெ கலாத்தியாவுக்குப் போனான். தீத்து தல்மாத்தியாவுக்குப் போனான். 11 லூக்கா மட்டுமே என்னோடு இருக்கிறான். நீ வரும்போது உன்னோடு மாற்குவையும் அழைத்து வா. இங்கே அவன் எனது பணிக்கு உதவியாக இருப்பான். 12 நான் தீகிக்குவை எபேசுவுக்கு அனுப்பினேன்.
13 நான் துரோவாவில் இருந்தபோது எனது மேலங்கியை கார்ப்புவிடம் விட்டு விட்டு வந்தேன். நீ வரும்போது அதை எடுத்து வா. எனது புத்தகங்களையும் எடுத்து வா. குறிப்பாக தோலால் ஆன என் புத்தகச்சுருளை எடுத்து வா. அவையே எனக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.
14 கொல்லனாகிய அலெக்சாண்டர் எனக்கு எதிராகப் பல தீய செயல்களைச் செய்தான். அவன் செய்த செயல்களுக்கு கர்த்தர் அவனைத் தண்டிப்பார். 15 அவன் உன்னையும் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொள். அவன் நம் போதனைகளை மோசமாக எதிர்த்தான்.
16 முதல் முறையாக நானே என்னைத் தற்காத்துக்கொண்டேன். எவரும் எனக்கு உதவவில்லை. எல்லோரும் விலகிவிட்டனர். அவர்களை மன்னிக்குமாறு தேவனிடம் வேண்டுகிறேன். 17 ஆனால் கர்த்தர் என்னோடு இருந்தார். அவர் எனக்கு பலம் தந்தார். இவ்வகையில் நற்செய்தியைப் போதிக்கும் என் வேலை முழுமையாக நடைபெறும். யூதர் அல்லாதவர்கள் அனைவரும் நற்செய்தியைக் கேட்கவேண்டும் என்று கர்த்தரும் விரும்பினார். நான் சிங்கத்தின் வாயில் விழாமல் காப்பாற்றப்பட்டேன். 18 எவராவது என்னை அழிக்க முயன்றால் கர்த்தர் என்னைக் காப்பாற்றுவார். அவர் பரலோகஇராஜ்யத்திற்கு பாதுகாப்பாகக் கொண்டுபோய் சேர்ப்பார். கர்த்தருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக.
இறுதி வாழ்த்துக்கள்
19 பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஓநேசிப்போரின் வீட்டாருக்கும் என் வாழ்த்துக்களைக் கூறு. 20 கொரிந்து நகரில் எரஸ்து இருந்துவிட்டான். மிலேத்துவில் தூரோப்பீமுவை நோயாளியாக விட்டு விட்டு வந்தேன். 21 குளிர் காலத்துக்கு முன்னால் நீ வந்து சேருமாறு கடும் முயற்சி எடுத்துக்கொள். ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும் கிறிஸ்துவில் உள்ள எல்லா சகோதரர்களும் உன்னை வாழ்த்துகின்றனர்.
22 உன் ஆவியோடுகூட கர்த்தர் இருப்பாராக. அவரது கிருபை உங்களோடு இருப்பதாக.
2008 by World Bible Translation Center