Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எரேமியா 18-19

குயவனும் களிமண்ணும்

18 இந்தச் வார்த்தை எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வந்தது: “எரேமியா, குயவனின் வீட்டிற்குப் போ. அந்தக் குயவனின் வீட்டில் எனது வார்த்தையை உனக்குக் கொடுப்பேன்.”

எனவே, நான் கீழே குயவனின் வீட்டிற்குப் போனேன். குயவன் சக்கரத்தில் களிமண்ணை வைத்து வேலை செய்துகொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவன் களிமண்ணிலிருந்து ஒரு பானையை செய்துகொண்டிருந்தான். ஆனால் அந்தப் பானையில் ஏதோ தவறு இருந்தது. எனவே, அந்தக் குயவன் அக்களிமண்ணை மீண்டும் பயன்படுத்தி வேறொரு பானை செய்தான். தான் விரும்பின வகையில் அந்தப் பானையை வடிவமைக்கும்படி அவன் தனது கைகளைப் பயன்படுத்தினான்.

அப்போது கர்த்தரிடமிருந்து எனக்கு வார்த்தை வந்தது: “இஸ்ரவேல் குடும்பத்தினரே! உங்களோடு தேவனாகிய நானும் அதே செயலைச் செய்யமுடியும் என்பது உங்களுக்குத் தெரியும். குயவனின் கைகளில் இருக்கிற களிமண்ணைப்போன்று நீங்கள் இருக்கிறீர்கள். நான் குயவனைப் போன்றுள்ளேன். ஒரு காலம் வரும். அப்போது, நான் ஒரு தேசத்தையோ அல்லது ஒரு அரசாட்சியையோ குறித்து பேசுவேன். அத்தேசத்தை உயர்த்துவேன் என்று நான் சொல்லலாம். அத்தேசத்தைக் கீழே இழுத்துப் போடுவேன். அத்தேசத்தை அல்லது அரசாங்கத்தை அழிப்பேன் என்று சொல்லலாம். ஆனால், அத்தேசத்து ஜனங்கள் தங்கள் இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றலாம். அத்தேசத்து ஜனங்கள் தங்கள் தீயச் செயல்களை நிறுத்தலாம். பிறகு என் மனதை நான் மாற்றுவேன். அத்தேசத்திற்கு அழிவைக் கொண்டுவரும் எனது திட்டத்தை நான் பின்பற்றமாட்டேன். இன்னொரு காலம் வரலாம். அப்போது ஒரு தேசத்தைப்பற்றிப் பேசுவேன். நான் அத்தேசத்தைக் கட்டி எழுப்புவேன் என்று சொல்லலாம். 10 ஆனால், அத்தேசம் தீயவற்றைச் செய்து எனக்குக் கீழ்ப்படியாமல் போவதை நான் பார்க்கலாம். பிறகு, நான் அத்தேசத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று போட்டிருந்த திட்டங்களுக்காக வருந்தி அவற்றை எதிராக மாற்றிப்போடுவேன்.

11 “எனவே, எரேமியா, யூதாவின் ஜனங்களிடமும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களிடமும் கூறு. ‘இதுதான் கர்த்தர் கூறுவது: நான் இப்போதிருந்தே உங்களுக்குத் தொல்லைகளை தயாரித்துக்கொண்டிருக்கிறேன். நான் உங்களுக்கு எதிராகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். எனவே, நீங்கள் செய்துகொண்டிருக்கிற தீயச்செயல்களை நிறுத்துங்கள். ஒவ்வொரு நபரும் மாறவேண்டும், நல்லவற்றைச் செய்யத் தொடங்கவேண்டும்!’ 12 ஆனால் யூதாவின் ஜனங்கள் பதில் கூறுவார்கள், ‘மாற்றம் செய்வதற்கான முயற்சி எடுப்பதால் பயனில்லை. நாங்கள் விரும்புகிறபடியே தொடர்ந்து செய்வோம். எங்களில் ஒவ்வொருவரும் தங்கள் பிடிவாதத்தின்படியே தீய இருதயம் விரும்புகிறபடியே செய்யப் போகிறோம்.’”

13 கர்த்தர் சொல்கிறவற்றை கவனியுங்கள்.

“மற்ற தேசத்தாரிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்.
    ‘இஸ்ரவேல் செய்திருக்கிற தீயச் செயல்களை எவராவது செய்ததாக நீங்கள் எப்பொழுதாவது கேள்விபட்டிருக்கிறீர்களா?’
தேவனுக்கு இஸ்ரவேலர் சிறப்புக்குரியவர்கள்.
    இஸ்ரவேலர் தேவனுடைய மணமகளைப் போன்றவள்!
14 லீபனோனில் உள்ள மலை உச்சியில் படிந்த பனி உருகுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
    குளிர்ச்சியாக பாய்கின்ற நீரோடைகள் வறண்டுவிடுவதில்லை என்பது உங்களுக்கு தெரியும்.
15 ஆனால் எனது ஜனங்கள் என்னைப் மறந்திருக்கிறார்கள்.
    பயனற்ற விக்கிரகங்களுக்கு அவர்கள் பலிகளைக் கொடுக்கிறார்கள்.
எனது ஜனங்கள் தாம் செய்கின்றவற்றில் தடுமாற்றமாக இருக்கிறார்கள்.
    அவர்களின் தடுமாற்றம் தமது முற்பிதாக்களின் பழைய வழிகளைப் பற்றியதாக உள்ளது.
எனது ஜனங்கள் என்னைப் பின்பற்றி நல்ல சாலைகளில் வருவதைவிட,
    பின் சாலைகளிலும் மோசமான நெடும் பாதைகளிலும் நடப்பார்கள்.
16 எனவே, யூதாவின் நாடு காலியான வனாந்தரம் போன்றதாகும்.
    அதைக் கடந்து செல்லும் ஜனங்கள் பிரமித்து தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
இந்நாடு எவ்வாறு அழிக்கப்பட்டது என்று அதிர்ச்சி அடைவார்கள்.
17 நான் யூதாவின் ஜனங்களைச் சிதறும்படி செய்வேன்.
    அவர்கள் பகைவர்களிடமிருந்து ஓடிப் போவார்கள்.
கிழக்குக் காற்று பொருட்களைச் சிதறடிப்பதுபோன்று
    நான் யூதா ஜனங்களைச் சிதறடிப்பேன்.
நான் அந்த ஜனங்களை அழிப்பேன், நான் அவர்களுக்கு உதவி செய்ய வருவதைப் பார்க்கமாட்டார்கள்.
    இல்லை நான் விலகிச் செல்வதை அவர்கள் பார்ப்பார்கள்.”

எரேமியாவின் நான்காவது முறையீடு

18 பிறகு, எரேமியாவின் பகைவர்கள் சொன்னார்கள், “வாருங்கள் எரேமியாவிற்கு எதிராகத் திட்டங்கள் தீட்ட எங்களை அனுமதியுங்கள். ஆசாரியரால் இயற்றப்படும் சட்டம் பற்றிய போதனைகள் தொலைந்து போகாது. ஞானமுள்ள மனிதரின் ஆலோசனைகள் நம்மோடு கூட இருக்கும். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நாம் இன்னும் வைத்திருப்போம். எனவே அவனைப்பற்றிய பொய் சொல்ல எங்களை விடுங்கள். அது அவனை அழிக்கும். அவன் சொல்லுகிற எதையும் நாங்கள் கவனிக்கமாட்டோம்.”

19 கர்த்தாவே என்னைக் கேட்டருளும்!
    என் வாதங்களைக் கேளும் யார் சரியானவர் என்பதை முடிவு செய்யும்.
20 ஜனங்கள் நன்மைக்கு தீமையை செய்வார்களா? இல்லை.
    நீர் அவர்களை தண்டிக்கக்கூடாது என்பதற்காக
    நான் உம் முன் நின்று அவர்களைப் பற்றி நல்ல காரியங்களை கூறியதை நினைவுகூரும்.
ஆனால், அவர்கள் எனக்குத் தீமையைச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
    அவர்கள் என்னை வலைக்குட்படுத்தி கொல்ல முயற்சி செய்கிறார்கள்.
21 அவர்களது பிள்ளைகள் பஞ்சத்தால் துன்புறும்படிச் செய்யும்.
    அவர்களின் பகைவர்களால் அவர்கள் கொல்லப்படும்படிச் செய்யும்.
அவர்களது மனைவிகள், குழந்தைகள் இழந்துபோகட்டும்.
யூதாவின் ஆண்கள் மரணத்தில் விழட்டும்.
    அவர்களது மனைவியர் விதவைகள் ஆகட்டும்.
    யூதாவில் உள்ள ஆண்கள் மரணத்தில் விழட்டும். இளைஞர்கள் போரில் கொல்லப்படட்டும்.
22 அவர்களது வீடுகளில் அழுகை வரட்டும்.
    அவர்களுக்கு எதிராகத் திடீரென்று எதிரியை வர வழைக்கும்போது அவர்கள் கதறட்டும்.
எனது பகைவர்கள் என்னை (வலைக்குள்) சிக்க வைக்க முயன்றனர்.
    எனவே, இவையெல்லாம் நிகழட்டும்.
23 கர்த்தாவே, அவர்கள் என்னைக் கொல்வதற்குயிட்ட திட்டங்களை நீர் அறிவீர்.
    அவர்களது பொல்லாங்குகளை மன்னியாதிரும்.
அவர்களது பாவங்களை அழிக்காதிரும்.
எனது பகைவர்கள் உமக்கு முன்பாக இடறி விழட்டும்.
    நீர் கோபமாக இருக்கும்போது அந்த ஜனங்களைத் தண்டியும்.

உடைந்த ஜாடி

19 கர்த்தர் என்னிடம், “எரேமியா போய் ஒரு குயவனிடமிருந்து மண்ஜாடியை வாங்கிவா. உடைந்த பானைத் துண்டுகளை எரியும் வாசலுக்கு முன்னாலுள்ள பென் இன்னோமுடைய பள்ளத்தாக்குக்குப் போ. உன்னோடு ஜனங்களில் சில மூப்பர்களையும், சில ஆசாரியர்களையும் அழைத்துப் போ என்று சொன்னார். நான் சொல்கிறவற்றை உன்னோடு இருக்கிற அந்த ஜனங்களிடம் சொல், ‘யூதாவின் அரசனே, எருசலேமின் ஜனங்களே, கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேளுங்கள்! இதுதான் சர்வவல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுவது: நான் இந்த இடத்தில் விரைவில் ஒரு பயங்கரத்தை நிகழச்செய்வேன். இதைப்பற்றி கேள்விப்படுகிற ஒவ்வொருவனும் அதிர்ச்சியும் அச்சமும் அடைவான். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் யூதாவின் ஜனங்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டனர். அவர்கள் இந்த இடத்தை அயல்நாட்டுத் தெய்வங்களுக்கு உரியதாகச் செய்துவிட்டனர். அவர்கள் இந்த இடத்தில் வேறு தெய்வங்களுக்குத் தகனபலிகளை அளித்தனர். நீண்ட காலத்திற்கு முன்பு அந்தத் தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. அவர்களின் முற்பிதாக்களும் அத்தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. இவை அந்நிய நாடுகளிலிருந்து வந்தப் புதிய தெய்வங்கள். யூதாவின் அரசர்கள் ஒன்றுமறியாத குழந்தைகளின் இரத்தத்தால் இந்த இடத்தை நிரப்புகிறார்கள். யூதாவின் அரசர்கள் பாகால் தேவனுக்காக மேடையைக் கட்டினார்கள். அவர்கள் அந்த இடங்களைத் தங்கள் மகன்களை எரிக்கப் பயன்படுத்தினார்கள். பாகால் தெய்வத்திற்குத் தங்கள் மகன்களைத் தகனபலியாகக் கொடுத்தனர். நான் அவ்வாறு செய்யும்படி சொல்லவில்லை. உங்கள் மகன்களைப் பலியாகக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. நான் அதைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இப்பொழுது, ஜனங்கள் இந்த இடத்தை இன்னோமின் பள்ளத்தாக்கு என்றும் “தோப்பேத்” என்றும் அழைக்கின்றனர். ஆனால், நான் இந்த எச்சரிக்கையைக் கொடுக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது: ஜனங்கள் இந்த இடத்தை “கொலையின் பள்ளத்தாக்கு” என்று அழைக்கும் நாள் வருகிறது. இந்த இடத்தில், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களின் திட்டங்களை நாசமாக்குவேன். பகைவர்கள் இந்த ஜனங்களைத் துரத்துவார்கள். இந்த இடத்தில் யூதாவின் ஜனங்கள் வாளால் கொல்லப்படுமாறு விடுவேன். அவர்களது மரித்த உடல்களைப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாக்குவேன். இந்நகரத்தை நான் முழுமையாக அழிப்பேன். ஜனங்கள் எருசலேமைக் கடந்துப்போகும்போது பிரமித்து, தலையை அசைப்பார்கள். இந்நகரம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அறியும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள். பகைவர்கள் நகரத்தைச்சுற்றி தம் படைகளை அழைத்து வருவார்கள். அப்படை ஜனங்கள் வெளியே சென்று உணவு பெறுவதை அனுமதிக்காது. எனவே, நகரத்தில் உள்ள ஜனங்கள் பட்டினியாக இருப்பார்கள். அவர்கள் தம் சொந்த மகன்கள் மற்றும் மகள்களின் உடலை உண்ணும் அளவிற்குப் பசியை அடைவார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் உண்ணத் தொடங்குவார்கள்.’

10 “எரேமியா, நீ இவற்றையெல்லாம் ஜனங்களுக்குச் சொல். அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஜாடியை உடைத்துவிடு. 11 அப்போது இவற்றைச் சொல்: ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், நான் யூதா நாட்டையும் எருசலேமையும், ஒருவன் மண்ஜாடியை உடைப்பதுப்போன்று உடைப்பேன். இந்த ஜாடியை மீண்டும் பழையபடி ஆக்கமுடியாது. யூதா நாட்டுக்கும் இதுபோல் ஆகும். வேறு இடமில்லை என்று சொல்லுகிற வரையில் தோப்பேத்தில் மரித்த ஜனங்கள் புதைக்கப்படுவார்கள்.’ இந்த வார்த்தை கர்த்தரிடம் உள்ளது. 12 ‘இவைகளை நான் இந்த ஜனங்களுக்கும் இந்த இடத்துக்கும் செய்வேன். இந்த நகரத்தை தோப்பேத்தைப் போலச் செய்வேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. 13 ‘எருசலேமில் உள்ள வீடுகள் தோப்பேத்தைப்போன்று “அசுத்தமாகும்” அரசர்களின் அரண்மனைகள் தோப்பேத்தைப்போன்று அழிக்கப்படும். ஏனென்றால், அவ்வீடுகளின் கூரையில் பொய்த் தெய்வங்களை வைத்துத் தொழுதுகொள்கிறார்கள். அவர்கள் நட்சத்திரங்களைத் தொழுதுகொள்கின்றனர். அவர்களை மகிமைப்படுத்தத் தகன பலிகளைக் கொடுக்கின்றனர். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்குப் பானங்களின் காணிக்கை கொடுத்தனர்.’”

14 பிறகு, எரேமியா தோப்பேத்தை விட்டு கர்த்தர் பிரசங்கம் பண்ணுமாறு சொன்ன இடத்துக்குச் சென்றான். எரேமியா கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று, ஆலயத்தின் பிரகாரத்தில் நின்றான். எரேமியா அனைத்து ஜனங்களிடமும் சொன்னான். 15 “இதுதான் சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது: ‘நான் எருசலேம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பேரழிவைக் கொண்டுவருவேன் என்று சொன்னேன். நான் விரைவில் அவை நிகழுமாறு செய்வேன். ஏனென்றால், ஜனங்கள் மிகவும் பிடிவாதமானவர்கள், அவர்கள் என்னை கவனிக்கவும், எனக்குக் கீழ்ப்படியவும் மறுத்துவிட்டனர்.’”

2 தீமோத்தேயு 3

இறுதி நாட்கள்

இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள், இறுதி நாட்களில் ஏராளமான தொந்தரவுகள் நேரும். அந்தக் காலங்களில் மக்கள் தம்மையும் செல்வத்தையும் மட்டுமே விரும்புவர். அவர்கள் பெருமிதத்தோடும், செருக்கோடும் இருப்பார்கள். அவர்கள் மக்களைப்பற்றி தீயவற்றையே கூறுவர். பிள்ளைகள் பெற்றோருக்கு அடிபணியமாட்டார்கள். அவர்கள் நன்றியில்லாதவர்களாவர். இரக்கமற்றவர்களாயிருப்பர். அடுத்தவர்களிடம் அன்பற்றவர்களாய் மாறிவிடுவார்கள். அவர்கள் மற்றவர்களை மன்னிக்க மறுப்பார்கள். அவர்கள் தீயவற்றையே பேசுவார்கள். அவர்கள் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பர். கொடிய வன்முறையாளர்களாய் மாறி நல்லவற்றை வெறுக்கத் தொடங்குவர். இறுதி நாட்களில் மக்கள் தம் நண்பர்களுக்கே எதிராகிப்போவர். அவர்கள் சிந்தனையின்றி முட்டாள்தனமாகச் செயல்படுவர். அவர்கள் வீண்பெருமை கொண்டவர்களாகவும் துரோகிகளாகவும் இருப்பர். அவர்கள் இன்பத்தை விரும்பி, தேவனை நேசிக்காதவர்களாக இருப்பர். அவர்கள் தேவனுக்கு சேவை செய்வதுபோலத் தொடர்ந்து நடிப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் வழியோ, தேவனுக்கு அவர்கள் உண்மையிலேயே சேவை செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். தீமோத்தேயுவே இவர்களிடமிருந்து விலகி இரு.

சிலர் சில வீடுகளுக்குப் போய் அங்குள்ள பலவீனமும் பாவமும் உள்ள பெண்களை அடைவர். அப்பெண்கள் பாவம் நிறைந்தவர்கள். அவர்கள் செய்ய விரும்பிய பலதீய காரியங்களே அப்பெண்களைப் பாவத்தில் ஈடுபடத் தூண்டும். அப்பெண்கள் எப்போதும் புதிய போதனைகளை விரும்புவர். ஆனால் உண்மை பற்றிய அறிவைப் பெற முடியாதவர்களாக இருப்பர். யந்நேயையும், யம்பிரேயையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் மோசேக்கு எதிரானவர்கள். இவர்களும் அவர்களைப் போன்றே உண்மைக்கு எதிரானவர்கள். அவர்கள் குழம்பிய எண்ணமுடையவர்கள். அவர்கள் உண்மையைப் பற்றிய அறிவை அடைய தவறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் தம் செயலில் மேற்கொண்டு எந்த வளர்ச்சியையும் அடையமாட்டார்கள். அவர்களின் முட்டாள்தனத்தை அனைவரும் பார்ப்பர். இதுவே யந்நேயுக்கும், யம்பிரேயுக்கும் ஏற்பட்டது.

இறுதி அறிவுரைகள்

10 ஆனால் உனக்கு என்னைப்பற்றி எல்லாம் தெரியும். நான் போதனை செய்வது பற்றியும் என் வாழ்க்கைமுறை பற்றியும் நீ அறிவாய். என் வாழ்வின் குறிக்கோள்பற்றியும் நீ அறிவாய். எனது விசுவாசம், பொறுமை, அன்பு ஆகியவற்றையும் நீ அறிவாய். நான் முயற்சியைக் கைவிடமாட்டேன் என்பதையும் அறிவாய். 11 எனது உபத்திரவங்களையும் நான் பட்ட துன்பங்களையும் பற்றி நீ அறிந்திருக்கிறாய். அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய நகரங்களில் எனக்கு ஏற்பட்டவற்றைப் பற்றியும் நீ அறிவாய். ஆனால் நான் அனுபவித்த எல்லா உபத்திரவங்களிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றி விட்டார். 12 தேவன் விரும்புகிறபடி இயேசு கிறிஸ்துவின் வழியில் செல்கிற எவருமே இத்தகைய துன்பங்களைக் கண்டிப்பாக அனுபவிக்கவேண்டி இருக்கும். 13 தீயவர்களும், பிறரை ஏமாற்றுகிறவர்களும் மேலும் மேலும் கெட்டுப்போவார்கள். அவர்கள் மற்றவர்களை முட்டாளாக்குவார்கள். ஆனால் அதே சமயத்தில் தம்மைத் தாமே முட்டாளாக்கிக்கொள்வார்கள்.

14 நீ அறிந்த போதனைகளின்படி தொடர்ந்து செல். அவை உண்மையான போதனைகள் என்பதை அறிந்திருக்கிறாய். ஏனெனில் அவ்விஷயங்களை உனக்குப் போதித்தவர்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியும் என்பதை நீ அறிவாய். 15 நீ குழந்தைப் பருவம் முதலாகப் பரிசுத்த வேதவாக்கியங்களை அறிந்திருக்கிறாய். அவை உன்னை ஞானவானாக மாற்றும் வல்லமைகொண்டது. அந்த ஞானம் உனக்கு இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசம் மூலம் இரட்சிப்பைப்பெற வழிகாட்டும். 16 அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். 17 வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center