Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எரேமியா 15-17

15 கர்த்தர் என்னிடம், “எரேமியா இப்பொழுது மோசேயும் சாமுவேலும் இருந்து யூதாவின் ஜனங்களுக்காக ஜெபம் செய்தாலும் நான் இந்த ஜனங்களுக்காக இரக்கப்படுவதில்லை. என்னைவிட்டு யூத ஜனங்களை தூர அனுப்பு, அவர்களைப் போகும்படி சொல். அந்த ஜனங்கள் உன்னைக் கேட்கலாம், ‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று நீ அவர்களுக்கு இதனைச் சொல் என்றார். இதுதான் கர்த்தர் சொன்னது:

“சில ஜனங்களை மரிப்பதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்,
    அந்த ஜனங்கள் மரிப்பார்கள்,
சில ஜனங்களை வாளால் கொல்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
    அந்த ஜனங்கள் வாளால் கொல்லப்படுவார்கள்.
நான் சில ஜனங்களை பசியால் மரிக்க தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
    அந்த ஜனங்கள் பசியால் மரிப்பார்கள்.
நான் சில ஜனங்களைச் சிறைபிடிக்கப்பட்டு அந்நிய நாட்டிற்குக் கொண்டுபோகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
    அவர்கள் அந்நியநாடுகளில் கைதிகளாக இருப்பார்கள்.
நான் அவர்களுக்கு எதிராக நான்கு வகை அழிவு சக்திகளை அனுப்புவேன்”
இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது.
“நான் எதிரியை ஒரு வாளோடு கொல்வதற்கு அனுப்புவேன்.
நான் நாய்களை அவர்களது உடல்களை வெளியே இழுத்துவர அனுப்புவேன்.
நான் வானத்து பறவைகளையும், காட்டு மிருகங்களையும்
    அவர்களது உடல்களை உண்ணவும் அழிக்கவும் அனுப்புவேன்.
நான் யூதாவின் ஜனங்களை பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும்
    ஒரு பயங்கரமான செயலுக்கான உதாரணமாகச் செய்வேன்.
நான் இதனை யூதா ஜனங்களுக்காகச் செய்வேன்.
    ஏனென்றால், மனாசே எருசலேமில் செய்ததுதான்.
    மனாசே எசேக்கியா அரசனின் மகன்.
    மனாசே யூதாவின் அரசன்.”

“உனக்காக எவனும் வருத்தப்படமாட்டான்.
    எருசலேம் நகரமே, எவனும் உனக்காக பரிதாபப்படவோ அழவோமாட்டான்.
    எவனும், ‘நீ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்க தனது வழியிலிருந்து திரும்பிக் கேட்கமாட்டான்!
எருசலேமே, நீ என்னை விட்டு விலகினாய்.”
இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது:
“மீண்டும் மீண்டும் என்னை விட்டு விலகினாய் எனவே,
    நான் உன்னைத் தண்டித்து அழிப்பேன்.
    நான் உனது தண்டனையை நிறுத்தி வைத்தே களைத்துப்போனேன்.
நான் எனது தூற்றுக் கட்டையால் யூதா ஜனங்களைத் தனியாகப் பிரித்துப்போடுவேன்.
    நான் அவர்களை நகர வாசல்களில் சிதறச் செய்வேன்.
எனது ஜனங்கள் மாறவில்லை.
    எனவே, நான் அவர்களை அழிப்பேன்.
    நான் அவர்களது பிள்ளைகளை வெளியே எடுப்பேன்.
பல பெண்கள் தம் கணவனை இழப்பார்கள்.
    கடற்கரையில் உள்ள மணல்களை விட விதவைகள் மிகுதியாக இருப்பார்கள்.
மதிய வேளையில் நான் அழிக்கிறவனை அழைத்து வருவேன்.
    யூதாவிலுள்ள இளைஞர்களின் தாய்மார்களை அழிக்கிறவன் தாக்குவான்.
நான் யூதா ஜனங்களுக்கு துன்பத்தையும் பயத்தையும் கொண்டு வருவேன்.
    மிக விரைவில் இது நிகழுமாறு நான் செய்வேன்.
எதிரி தன் வாள்களால் தாக்கி ஜனங்களைக் கொல்வான்.
    யூதாவிலுள்ள மீதியிருப்பவர்களை அவர்கள் கொல்வார்கள்.
ஒரு பெண்ணுக்கு ஏழு மகன்கள் இருக்கலாம்.
    ஆனாலும் அவர்கள் மரித்துப்போவார்கள்.
அவள் பலவீனமாகி மூச்சுவிடமுடியாத நிலை அடையும்வரை அழுவாள்.
    அவள் திகைப்பும் குழப்பமும் அடைவாள்.
அவளது ஒளிமயமான பகல் துன்பமான இருட்டாகும்.”

எரேமியா மீண்டும் தேவனிடம் முறையிடுகிறான்

10 தாயே! நீ எனக்கு பிறப்பைக் கொடுத்ததற்காக
    நான் (எரேமியா) வருந்துகிறேன்.
தேசத்துக்கெல்லாம் வாதும் வழக்கும் உள்ளவனாக நான் இருக்கிறேன்.
    நான் கடன் கொடுத்ததுமில்லை,
கடன் வாங்கியதுமில்லை.
    ஆனால் ஒவ்வொருவனும் என்னை சபிக்கிறான்.

11 உண்மையாக கர்த்தாவே, நான் உமக்கு நன்கு தொண்டு செய்துள்ளேன்.

நெருக்கடி நேரத்தில் என் பகைவர்களைக்குறித்து உம்மிடம் ஜெபம் செய்தேன்.

தேவன் எரேமியாவிற்குப் பதிலளிக்கிறார்

12 “எரேமியா எவராலும் ஒரு இரும்புத் துண்டைக்கூட
    உடைக்க முடியாது என்பதை நீ அறிவாய்.
வடக்கிலிருந்து வருகிற அந்த விதமான இரும்பைக் குறித்து நான் குறிப்பிடுகிறேன்.
    எவராலும் ஒரு வெண்கலத் துண்டையும் உடைக்க முடியாது.
13 யூதாவின் ஜனங்களுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன.
    நான் அவற்றை மற்ற ஜனங்களுக்குக் கொடுப்பேன்.
அந்த மற்றவர்கள் அச்செல்வத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.
    நான் அவர்களுக்கு அச்செல்வத்தைக் கொடுப்பேன்.
    ஏனென்றால் யூதாவிடம் பல பாவங்கள் உள்ளன.
    யூதாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஜனங்கள் பாவம் செய்தனர்.
14 யூதாவின் ஜனங்களே! நான் உங்களை உமது பகைவர்களின் அடிமைகளாக்குவேன்.
    நீங்கள் எப்போதும் அறிந்திராத நாடுகளில் அடிமைகளாக இருப்பீர்கள்.
நான் மிகக் கோபமாக இருக்கிறேன்.
    எனது கோபம் சூடான நெருப்பு போல் உள்ளது.
    நீ எரிக்கப்படுவாய்.”

15 கர்த்தாவே! நீர் என்னை அறிவீர்.
    என்னை நினைவில் வைத்துள்ளீர்.
என்னை கவனித்துக்கொள்வீர்.
    ஜனங்கள் என்னைப் புண்படுத்துகிறார்கள்.
அந்த ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்.
    நீர் ஜனங்களோடு பொறுமையாக இருக்கிறீர்.
நீர் அவர்களுடன் பொறுமையாக இருப்பதால்
    என்னை அழித்து விடாதேயும்.
என்னை நினைத்துப் பாரும்.
    கர்த்தாவே நான் உமக்காக அடைந்த வலியை எண்ணிப் பாரும்.
16 உமது செய்தி எனக்கு வந்தது.
    நான் உமது வார்த்தைகளை உண்டேன்.
உமது செய்தி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிற்று.
    நான் உமது நாமத்தால் அழைக்கப்படுவதில் மகிழ்ந்தேன்.
உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
17 நான் சிரிப்பும் வேடிக்கையும் செய்கிற கூட்டத்தில்
    ஒருபோதும் இருந்ததில்லை.
உமது நோக்கம் என்மேல் இருப்பதால் நான் எப்போதும் தனியாகவே இருக்கிறேன்.
    என்னைச் சுற்றிலும் தீமை நடக்கும்போது, நீர் என்னைக் கோபத்தால் நிரப்பினீர்.
18 நான் ஏன் இன்னும் காயப்படுத்தப்படுகிறேன்?
    என்று எனக்குப் புரியவில்லை.
    எனது காயங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?
அல்லது குணப்படுத்த முடியவில்லை?
    என்பது எனக்குப் புரியவில்லை.
கர்த்தாவே! நீர் மாறியிருக்கிறீர் என நினைக்கிறேன்.
    நீர், ஊற்று வறண்டு போனதுபோல இருக்கிறீர்.
    நீர், ஊற்று ஒன்று நின்றுவிட்டது போல இருக்கிறீர்.
19 பிறகு, கர்த்தர், “எரேமியா, நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால், பிறகு நான் உன்னைத் தண்டிக்கமாட்டேன்.
    நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால்,
நீ எனக்கு சேவை செய்யலாம்.
    நீ பயனற்ற வார்த்தைகளைப் பேசாமல்,
முக்கியமானவற்றைப்பற்றி பேசினால் பின் நீ எனக்காகப் பேசமுடியும்.
    யூதாவின் ஜனங்கள் மாறி உன்னிடம் திரும்பி வருவார்கள்.
ஆனால் நீ மாறி அவர்களைப்போல் இருக்க வேண்டாம்.
20 நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்வேன்.
அந்த ஜனங்கள் உன்னை பலமுடையவர்களாக,
    வெண்கலத்தாலான சுவரைப்போன்று எண்ணுவார்கள்.
யூதாவின் ஜனங்கள் உனக்கு எதிராகப் போரிடுவார்கள்.
    ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள்.
ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன்.
    நான் உனக்கு உதவுவேன்.
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

21 “நான் உன்னை அத்தீய ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவேன்.
    அந்த ஜனங்கள் உன்னை பயப்படுத்துவார்கள்.
    ஆனால் நான் உன்னை அவர்களிடமிருந்து காப்பேன்.”

அழிவு நாள்

16 கர்த்தருடைய செய்தி எனக்கு வந்தது: “எரேமியா, நீ திருமணம் செய்துக்கொள்ள கூடாது. இந்த இடத்தில் உனக்கு மகன்களோ, மகள்களோ இருக்க வேண்டாம்.”

கர்த்தர், யூதா நாட்டில் பிறந்த மகன்களையும் மகள்களையும்பற்றி இவ்வாறு சொன்னார். அப்பிள்ளைகளின் தாய்களைப்பற்றியும், தந்தைகளைப்பற்றியும் கர்த்தர் சொன்னது இதுதான்: “அந்த ஜனங்கள் ஒரு பயங்கரமான மரணத்தை அடைவார்கள். அந்த ஜனங்களுக்காக எவரும் அழமாட்டார்கள். அவர்களை எவரும் புதைக்கமாட்டார்கள். அவர்களது உடல்கள் தரையில் எருவைப்போன்று கிடக்கும். அந்த ஜனங்கள் பகைவரின் வாளால் மரிப்பார்கள். அவர்கள் பஞ்சத்தால் மரிப்பார்கள். அவர்களது மரித்த உடல்கள், வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகும்.”

எனவே கர்த்தர், “எரேமியா, மரண உணவு உண்ணும் வீட்டிற்குள் செல்லவேண்டாம். மரித்தவர்களுக்காக அழவும் உனது சோகத்தைக் காட்டவும் நீ போக வேண்டாம். நீ இவற்றை செய்ய வேண்டாம். ஏனென்றால், நான் எனது ஆசீர்வாதத்தைத் திரும்ப எடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் யூதாவின் ஜனங்களிடம் இரக்கமாக இருக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

“யூதா நாட்டிலுள்ள முக்கிய ஜனங்களும் பொது ஜனங்களும் மரிப்பார்கள். அந்த ஜனங்களை எவரும் புதைக்கமாட்டார்கள், அவர்களுக்காக அழவும்மாட்டார்கள். அந்த ஜனங்களுக்காக வருத்தம் தெரிவிக்கும்படி எவரும் தம்மைத்தாமே வெட்டிக்கொள்ளவோ, தலையை மொட்டையடித்துக்கொள்ளவோமாட்டார்கள். மரித்தவர்களுக்காக அழுகிறவர்களுக்கு எவரும் உணவு கொண்டு வரமாட்டார்கள். தம் தாயையோ தந்தையையோ இழந்தவர்களுக்கு எவரும் ஆறுதல் சொல்லமாட்டார்கள். மரித்தவர்களுக்காக அழுகின்றவர்களுக்கு எவரும் குடிக்கவும் கொடுக்கமாட்டார்கள்.

“எரேமியா, விருந்து நடக்கும் வீடுகளுக்குள் நீ போகாதே. அந்த வீடுகளுக்குப் போய் உட்கார்ந்து உண்ணவோ குடிக்கவோ செய்யாதே. நமது இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘களியாட்டு மனிதரின் சத்தத்தை விரைவில் நிறுத்துவேன். திருமண விருந்துகளில் எழுப்பப்படும் மகிழ்ச்சி ஒலிகளை விரைவில் நான் நிறுத்துவேன். உமது வாழ்நாளில் இவை நடைபெறும். நான் விரைவில் இவற்றைச் செய்வேன்.’

10 “எரேமியா, யூதாவின் ஜனங்களிடம் நீ இவற்றைக் கூறு. ஜனங்கள் உன்னிடம் கேட்பார்கள், ‘கர்த்தர் எங்களுக்கு ஏன் இத்தகைய பயங்கரமானவற்றைச் சொன்னார்? நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நாங்கள் என்ன பாவம் செய்தோம்?’ 11 நீ அந்த ஜனங்களிடம் இவற்றையெல்லாம் சொல்ல வேண்டும், ‘உங்கள் முற்பிதாக்களால், பயங்கரமானவை உங்களுக்கு ஏற்படும். ஏனென்றால், அவர்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டனர்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என்னைப் பின் பற்றுவதை விட்டு, அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் அந்த அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டனர். உங்கள் முற்பிதாக்கள் என்னைவிட்டு விலகினார்கள். எனது சட்டங்களுக்கு அடிபணிய மறுத்தனர். 12 ஆனால் நீங்களோ உங்கள் முற்பிதாக்களை விட மோசமான பாவம் செய்திருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் பிடிவாதமானவர்கள். நீங்கள் விரும்புவதையே செய்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு கீழ்ப்படிகிறதில்லை. நீங்கள் செய்ய விரும்புவதை மட்டுமே செய்கிறீர்கள். 13 எனவே, நான் உங்களை இந்த நாட்டுக்கு வெளியே எறிவேன். உங்களை அயல் நாடுகளுக்குப் போகும்படி கட்டாயப்படுத்துவேன். நீங்களும் உங்கள் முற்பிதாக்களும், அறிந்திராத நாட்டிற்குப் போவீர்கள். அந்த நாட்டில் நீங்கள் விரும்பும் அந்நிய தெய்வங்களை இரவும் பகலும் சேவிப்பீர்கள். நான் உங்களுக்கு உதவியோ நன்மையோ செய்யமாட்டேன்.”

14 “ஜனங்கள் வாக்குறுதிச் செய்கிறார்கள், ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு, கர்த்தர் ஒருவரே எகிப்து நாட்டுக்கு வெளியே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து வந்தார்’ என்பார்கள். ஆனால் காலம் வந்துகொண்டிருக்கிறது” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்தச் செய்திகளை ஜனங்கள் சொல்லமாட்டார்கள், 15 ஜனங்கள் புதியவற்றைச் சொல்வார்கள். அவர்கள், ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு அவர் ஒருவரே வட நாடுகளுக்கு வெளியே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து வந்தார். அவர்களை அவர் அனுப்பியிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் வெளியே அழைத்து வந்தார்’ என்றனர். ஏன் ஜனங்கள் இவற்றைச் சொல்வார்கள்? ஏனென்றால், நான் இஸ்ரவேல் ஜனங்களை அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்குத் திரும்ப அழைத்து வருவேன்.

16 “நான் விரைவில் பல மீன் பிடிப்பவர்களை இந்த நாட்டிற்கு வரும்படி அனுப்புவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்த மீனவர்கள் யூதாவின் ஜனங்களைப் பிடிப்பார்கள். அது நிகழந்த பிறகு, இந்த நாட்டுக்கு சில வேட்டைக்காரர்களை அனுப்புவேன். அந்த வேட்டைக்காரர்கள் ஒவ்வொரு மலையிலும், குன்றிலும், பாறை பிளவுகளிலும், யூதா ஜனங்களை வேட்டையாடுவர். 17 அவர்கள் செய்துக்கொண்டிருக்கிற அனைத்தையும் நான் பார்க்கிறேன். யூதா ஜனங்கள் தாம் செய்கின்றவற்றை என்னிடம் மறைக்க முடியாது. அவர்களது பாவம் என்னிடம் மறைக்கப்படாமல் போகும். 18 நான் யூதா ஜனங்களுக்கு அவர்கள் செய்கின்றவற்றுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களது ஒவ்வொரு பாவத்திற்கும் நான் இருமடங்கு தண்டிப்பேன். நான் இதனைச் செய்வேன். ஏனென்றால், அவர்கள் எனது நாட்டை அருவருப்பான விக்கிரகங்களால் ‘தீட்டு’ ஆக்கிவிட்டனர். நான் அந்த விக்கிரகங்களை வெறுக்கிறேன். ஆனால் அவர்கள் எனது நாட்டை அந்த விக்கிரகங்களால் நிறைத்துவிட்டனர்.”

19 கர்த்தாவே, நீரே எனது பலமும் காவலும்!
    நீரே துன்பக்காலத்தில் நான் ஓடி வரத்தக்கப் பாதுகாப்பான இடம்.
உலகம் முழுவதிலுமிருந்து நாடுகள் உம்மிடம் வரும்.
    அவர்கள், “எங்கள் தந்தையர்கள் அந்நிய தெய்வங்களை வைத்திருந்தனர்.
அவர்கள் அந்தப் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுகொண்டனர்.
    ஆனால் அந்த விக்கிரகங்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் உதவவில்லை” என்பார்கள்.
20 ஜனங்கள் உண்மையான தெய்வங்களை தங்களுக்கென உருவாக்க முடியுமா?
இல்லை! அவர்கள் சிலைகளைச் செய்துக்கொள்ளலாம்.
ஆனால் அச்சிலைகள் உண்மையில் தெய்வங்கள் இல்லை.

21 கர்த்தர், “எனவே, விக்கிரகங்களை உருவாக்கும் அவர்களுக்கு நான் பாடம் கற்பிப்பேன்.
    இப்போது நான் அவர்களுக்கு எனது அதிகாரம் மற்றும் பலம் பற்றி கற்பிப்பேன்.
பிறகு, அவர்கள் நானே தேவன் என்பதை அறிந்துகொள்வார்கள்.
    நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிந்துக்கொள்வார்கள்” என்று கூறுகிறார்.

இதயத்தில் எழுதப்பட்ட குற்றம்

17 “யூதா ஜனங்களின் பாவம், அவர்களால்
    அழிக்க முடியாத இடத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அந்தப் பாவங்கள் இரும்பு எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளது.
    அவர்களின் பாவங்கள் வைர முனையிலுள்ள எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளன.
    அந்தக் கல்தான் அவர்களது இதயம்.
அப்பாவங்கள் அவர்களது பலிபீடங்களில் உள்ள கொம்புகளில் வெட்டப்பட்டுள்ளன.
அவர்களின் பிள்ளைகள் அஷேரா தேவதைக்காக
    அர்ப்பணிக்கப்பட்ட பலிபீடங்களை நினைவுக்கொள்வார்கள்.
அவர்கள் அஷேராவிற்குச் சமர்பிக்கப்பட்ட மரத்தூண்களை நினைத்துக்கொள்கிறார்கள்.
    அவர்கள் பச்சை மரங்களுக்குக் கீழேயும், பாறைகளுக்கு மேலேயும் உள்ள பீடங்களை நினைத்துக்கொள்கிறார்கள்.
சிறந்த நாடுகளில் உள்ள மலைகளில் மேலே
    உள்ளவற்றை அவர்கள் நினைக்கிறார்கள்.
யூதாவின் ஜனங்களுக்கு பல கருவூலங்கள் உள்ளன.
    நான் மற்ற ஜனங்களுக்கு அவற்றைக் கொடுப்பேன்.
ஜனங்கள், உங்கள் நாட்டிலுள்ள அனைத்து மேடைகளையும் அழிப்பார்கள்.
    நீங்கள் அந்த இடங்களில் சிலைகளைத் தொழுதுகொண்டீர்கள், அது ஒரு பாவம்.
நான் கொடுத்த நாட்டை நீங்கள் இழப்பீர்கள்.
    உங்கள் பகைவர்கள் உங்களை சிறைபிடிக்க நான் அனுமதிப்பேன்.
நீங்கள் அறியாத தேசத்தில் அவர்களது அடிமைகளாக இருப்பீர்கள்.
    ஏனென்றால், நான் கோபத்தோடு இருக்கிறேன்.
எனது கோபம் சூடான நெருப்பைப்போன்றது.
    நீங்கள் என்றென்றும் எரிக்கப்படுவீர்கள்.”

ஜனங்களிடம் நம்பிக்கை மற்றும் தேவனிடம் நம்பிக்கை

கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
    “மற்ற ஜனங்கள் மீது மட்டும் நம்பிக்கை வைக்கின்றவர்களுக்கு தீமை ஏற்படும்.
மற்ற ஜனங்களை பலத்துக்காகச் சார்ந்திருக்கிறவர்களுக்குத் தீமை ஏற்படும்.
    ஏனென்றால், அந்த ஜனங்கள் கர்த்தர் மீது நம்பிக்கை வைப்பதை நிறுத்தினார்கள்.
அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே உள்ள புதரைப் போன்றவர்கள்.
    அப்புதர் ஜனங்களே வாழாத வனாந்தரத்திலே உள்ளது.
    அப்புதர் வெப்பமும் வறட்சியும் உள்ள பூமியில் உள்ளது.
அப்புதர் கெட்ட மண்ணில் உள்ளது.
    அப்புதர் தேவனால் தர முடிகிற நல்லவற்றைப்பற்றி அறியாதது.
ஆனால், கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்.
    ஏனென்றால், கர்த்தர் நம்பத்தகுந்தவர் என்பதை காட்டுவார்.
அந்த மனிதன் தண்ணீர்க்கரையில் நடப்பட்ட மரத்தைப்போன்ற பலத்தோடு இருப்பான்.
    அந்த மரம் தண்ணீரைக் கண்டுக்கொள்கிற வேர்களை உடையதாக இருக்கும்.
அந்த மரம் கோடைகாலம் வரும்போது உலர்ந்து போவதில்லை.
    அதன் இலைகள் எப்போதும் பசுமையாக இருக்கும்.
மழைப் பெய்யாத ஆண்டுகளில் அது கவலைப்படுவதில்லை.
    அந்த மரம் எப்பொழுதும் பழங்களை உற்பத்தி செய்யும்.

“ஒருவனின் இருதயம் மிகவும் தந்திரமானது!
    இருதயம் மிகவும் சுகவீனம் அடையக் கூடும்.
    உண்மையில் எவரும் ஒருவனின் இருதயத்தை புரிந்துகொள்வதில்லை.
10 ஆனால், நானே கர்த்தர்.
    என்னால் ஒருவனின் இருதயத்தைப் பார்க்கமுடியும்.
நான் ஒருவனின் மனதை சோதிக்கமுடியும்.
    ஒவ்வொருவனிடமும் என்ன இருக்கிறது என்பதை என்னால் முடிவு செய்யமுடியும்.
    என்னால், ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சரியான கூலியைக் கொடுக்கமுடியும்.
11 சில நேரங்களில் ஒரு பறவை, தான் இடாத
    முட்டையைக் குஞ்சு பொரிக்க வைக்கும்.
ஏமாற்றி பொருள் சம்பாதிக்கிற ஒவ்வொருவனும்
    இப்பறவையைப் போன்றவன்.
அவனது வாழ்க்கை பாதியில் இருக்கும்போதே
    அவன் அப்பணத்தை இழப்பான்.
அவனது வாழ்வின் இறுதியில்,
    அவன் ஒரு முட்டாளாக இருந்தான் என்பது தெளிவாகும்.”

12 தொடக்கத்திலிருந்தே, தேவனுக்கு நமது ஆலயமே
    மகிமையான சிங்காசனமாக இருந்தது.
    இது மிக முக்கியமான இடமாகும்.
13 கர்த்தாவே, இஸ்ரவேலர்களின் நம்பிக்கையே நீர்தான்.
    கர்த்தாவே, நீர் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றைப் போன்றவர்.
ஒருவன் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தினால்
    அவன் இகழப்பட்டு அவனது வாழ்வு குறுகியதாக்கப்படும்.

எரேமியாவின் மூன்றாவது முறையீடு

14 கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்தினால்
    நான் உண்மையில் சுகமாவேன்.
என்னைக் காப்பாற்றும்,
    நான் உண்மையில் காப்பாற்றப்படுவேன்.
கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
15 யூதாவின் ஜனங்கள் என்னிடம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்கிறார்கள்.
    அவர்கள் “எரேமியா, கர்த்தரிடமிருந்து வந்த செய்தி என்ன?
    அச்செய்தி எப்பொழுது நிறைவேறும்?” என்கின்றனர்.

16 கர்த்தாவே, நான் உம்மை விட்டு ஓடிப்போகவில்லை.
    நான் உம்மைப் பின்தொடர்ந்தேன்.
    நீர் விரும்புகிற மேய்ப்பனாக நான் இருந்தேன்.
ஒரு பயங்கரமான நாள் வருவதை நான் விரும்பவில்லை.
    கர்த்தாவே, நான் சொன்னவற்றை நீர் அறிவீர்.
    எல்லாம் நிகழ்ந்துக்கொண்டிருப்பதை நீர் பார்க்கிறீர்.
17 கர்த்தாவே, என்னை அழித்து விடாதீர்.
    துன்பக் காலத்தில் நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
18 ஜனங்கள் என்னைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஜனங்களை அவமானப்படும்படி செய்யும்.
    என்னை மனந்தளரவிடாதீர்.
அந்த ஜனங்களை பயப்படச் செய்யும்.
    ஆனால் என்னை பயப்படச் செய்யாதிரும்.
எனது பகைவர்களுக்கு அந்தப் பயங்கரமான நாளை வரப்பண்ணும்.
    அவர்களை உடையும், அவர்களை மீண்டும் உடையும்.

ஓய்வு நாளைப் பரிசுத்தப்படுத்தல்

19 கர்த்தர் என்னிடம் இவற்றைச் சொன்னார்: “எரேமியா, யூதாவின் அரசர்கள் வந்துபோகிற எருசலேமின் ஜனங்கள் வாசலுக்குப்போய் நில். எனது வார்த்தையை ஜனங்களிடம் கூறு. பிறகு எருசலேமின் மற்ற வாசல்களுக்கும் போ. அதே செயலைச் செய்.”

20 அந்த ஜனங்களிடம் சொல்: “கர்த்தருடைய செய்தியைக் கேளுங்கள்! யூதாவின் அரசர்களே, கேளுங்கள்! யூதாவின் ஜனங்களே, கேளுங்கள்! இந்த வாசல்கள் வழியாக எருசலேமிற்குள் வருகின்ற ஜனங்களே, என்னை கவனியுங்கள்! 21 கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: ‘ஓய்வுநாளில் சுமைகளைத் தூக்கிச் செல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். ஓய்வுநாளில் எருசலேமின் வாசல்கள் வழியாகச் சுமையைத் தூக்கிவராதீர்கள். 22 ஓய்வுநாளில் உங்கள் வீட்டுக்கு வெளியே சுமையைத் தூக்கி வராதீர்கள். அந்த நாளில் எந்த வேலையும் செய்யாதீர்கள். நீங்கள் ஓய்வுநாளை ஒரு பரிசுத்த நாளாக்க வேண்டும். நான் இதே கட்டளையை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்தேன். 23 ஆனால் உங்கள் முற்பிதாக்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் என் மீது கவனம் செலுத்தவில்லை. உங்கள் முற்பிதாக்கள் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். நான் அவர்களைத் தண்டித்தேன். ஆனால் அது அவர்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை. அவர்கள் என்னை கவனிக்கவில்லை. 24 ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படிவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. ஓய்வு நாளில் நீங்கள் எருசலேமின் வாசல்கள் வழியாக சுமையைக் கொண்டு வராதீர்கள். நீங்கள் ஓய்வு நாளைப் பரிசுத்தமாக்க வேண்டும். அந்நாளில் எவ்வித வேலையும் செய்யாமல் இருப்பதே ஓய்வுநாளை பரிசுத்தமான நாளாக வைப்பதாகும்.

25 “‘நீங்கள் இந்தக் கட்டளைக்கு அடிபணிந்தால், பிறகு தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அரசர்கள் எருசலேமின் வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த அரசர்கள் இரதங்களின் மீதும் குதிரைகள் மீதும் வருவார்கள். அந்த அரசர்களோடு யூதாவின் மற்றும் எருசலேமின் தலைவர்கள் இருப்பார்கள். எருசலேம் நகரம் என்றென்றும் ஜனங்கள் வாழும் இடமாகும்! 26 யூதாவின் நகரங்களில் இருந்து ஜனங்கள் எருசலேமிற்கு வருவார்கள். எருசலேமிற்கு அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள். பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்கள் வாழும் நகரங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள். மேற்கு மலை அடிவாரங்களிலிருந்தும், மலை நாடுகளிலிருந்தும் ஜனங்கள் வருவார்கள். நெகேவிலிருந்தும் ஜனங்கள் வருவார்கள். அந்த ஜனங்கள் எல்லோரும் தகன பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும், ஸ்தோத்திர பலிகளையும் கொண்டு வருவார்கள். கர்த்தருடைய ஆலயத்திற்கு அவர்கள் இந்தப் பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டு வருவார்கள்.

27 “‘ஆனால், நீங்கள் என்னை கவனிக்காமலும் அடிபணியாமலும் இருந்தால் பிறகு தீயவை நிகழும். ஓய்வுநாளில் நீங்கள் எருசலேமிற்குள் சுமைகளைக் கொண்டு வந்தால் பின் நீங்கள் அந்நாளைப் பரிசுத்தப்படுத்தவில்லை. எனவே, உங்களால் அணைக்க முடியாத ஒரு தீயை பற்றவைப்பேன். எருசலேமின் வாசலிலிருந்து அந்த நெருப்பு தொடங்கும். அது அரண்மனைகள்வரை பற்றி எரியும்.’”

2 தீமோத்தேயு 2

நம்பிக்கைக்குரிய வீரன்

தீமோத்தேயுவே, நீ என் மகனைப் போன்றவன். இயேசு கிறிஸ்துவிற்குள் நாம் கொண்டுள்ள கிருபையில் உறுதியாக இரு. நீ கேட்ட என் போதனைகள் மற்றவர்களுக்கும் கூட போதிக்கப்பட வேண்டும். நீ விசுவாசம் வைத்திருக்கிற மக்களிடம் எல்லாம் அதனைப் போதிப்பாயாக. பிறகு அவர்களாலும் அவற்றை ஏனைய மக்களுக்குப் போதிக்க முடியும். நாம் அனுபவிக்க நேரும் துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம். அவற்றை ஒரு உண்மையான போர் வீரனைப்போன்று ஏற்றுக்கொள்வோம். போர் வீரனாயிருக்கும் ஒருவன் எப்பொழுதும் தனது மேலதிகாரியைத் திருப்திப்படுத்தவே விரும்புவான். எனவே அவன் மற்றவர்களைப் போன்று தன் பொழுதை வேறுவகையில் போக்கமாட்டான். விதிமுறைகளின்படி போட்டியிடாமல் எந்த விளையாட்டு வீரனாலும் வெற்றிக் கிரீடத்தை அடைய முடியாது. பாடுபட்டு விளைய வைக்கிற விவசாயியே, விளைச்சலின் முதல் பகுதி உணவை உண்பதற்குத் தகுதியானவன். நான் சொல்லிக்கொண்டிருக்கிற விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார். இவை பற்றிய முழுமையான அறிவை கர்த்தர் உனக்குத் தருவார்.

இயேசு கிறிஸ்துவை ஞாபகப்படுத்திக்கொள். அவர் தாவீதின் குடும்பத்திலிருந்து வந்தவர். இறந்த பிறகு அவர் மரணத்திலிருந்து எழுந்தார். இதுதான் நான் சொல்லும் நற்செய்தி. நான் இதனைச் சொல்வதால் பலவித துன்பங்களுக்கு உட்படுகிறேன். நான் ஒரு குற்றவாளியைப் போல் சங்கிலிகளால் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கிறேன். ஆனால் தேவனுடைய போதனைகள் கட்டப்படவில்லை. 10 ஆகையால் நான் பொறுமையோடு அனைத்துத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். தேவனால் தேர்ந்தெடுக்கபட்ட அனைவருக்கும் உதவும் பொருட்டே நான் இதனைச் செய்தேன். இதனால் மக்கள் இயேசு கிறிஸ்துவில் இரட்சிப்பைப் பெறுவார்கள். அதனால் முடிவற்ற மகிமையைப் பெறுவர்.

11 இந்தப் போதனை உண்மையானது:

நாம் இயேசுவோடு மரணமடைந்திருந்தால் பிறகு நாமும் அவரோடு வாழ்வோம்.
12 நாம் துன்பங்களை ஏற்றுக்கொண்டால் பிறகு அவரோடு ஆட்சியும் செய்வோம்.
நாம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தால் பிறகு அவரும் நம்மை ஏற்க மறுப்பார்.
13 நாம் உண்மையுள்ளவராக இல்லாதிருந்தாலும் அவர் தொடர்ந்து உண்மைக்குரியவராக இருப்பார்.
    ஏனென்றால் அவர் தனக்குத்தானே உண்மையற்றவராக இருக்க முடியாது.

அங்கீகரிக்கப்பட்ட வேலையாள்

14 மக்களிடம் இவற்றைத் தொடர்ந்து சொல்லுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதபடி தேவனுக்கு முன்பு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். அது எவருக்கும் உதவாது. அதைக் கவனிப்பவர்களையும் அழித்து விடும். 15 தேவன் உங்களை ஏற்றுக்கொள்கிறவகையில் அவரிடம் உங்களை ஒப்படைக்க உங்களால் முடிந்த நல்லதைச் செய்யுங்கள். தன் வேலையைப்பற்றி வெட்கப்படாத வேலையாளாக இருங்கள். கிறிஸ்துவின் உண்மையான போதனைகளைச் சரியான வழியில் போதியுங்கள்.

16 தேவனிடமிருந்து பெறப்படாத, பயன் இல்லாத காரியங்களைப் பேசுவோரிடமிருந்து விலகி இருங்கள். அவ்வகை பேச்சுகள் ஒருவனை மேலும் தேவனுக்கு எதிராக்கும். 17 அவர்களின் தீய போதனைகள் சரீரத்துக்குள் நோய் பரவுவது போன்று பரவும். இமெநேயுவும், பிலேத்துவும் இத்தகையவர்ளே. 18 அவர்களின் போதனைகள் உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. மரணத்திலிருந்து எழுங்காலம் ஏற்கெனவே நடந்து முடிந்துபோனது என்று அவர்கள் போதிக்கிறார்கள். அந்த இருவரும் சில மனிதர்களின் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள்.

19 ஆனால் தேவனின் பலமான அஸ்திபாரம் அப்படியே தொடர்ந்து உள்ளது. அஸ்திபாரத்தின்மீது, “கர்த்தருக்குத் தன்னைச் சேர்ந்தவர்கள் எவரென்று தெரியும்.” “கர்த்தரில் விசுவாசம் கொள்கிற ஒவ்வொருவரும் தவறு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” [a]என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது.

20 ஒரு பெரிய வீட்டில் பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளன. அதோடு மரத்தாலும், மண்ணாலும் செய்யப்பட்ட பொருட்களும் உள்ளன. சில பொருட்கள் சில விசேஷ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவை பிற காரியங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு உள்ளன. 21 எவனொருவன் தீய காரியங்களில் ஈடுபடாமல் விலகி தன்னைத் தானே சுத்தமாக வைத்துக்கொள்கிறானோ அவன் சிறப்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்குப் பயன்படுபவனாக இருப்பான். அவன் எவ்வித நற்பணி செய்யவும் தயாராக இருப்பான்.

22 ஓர் இளைஞன் செய்ய விரும்புகிற தீய செயல்களில் இருந்து விலகி இருங்கள். சரியான வழியில் வாழவும், விசுவாசம், அன்பு, சமாதனம் ஆகியவற்றைப் பெறவும் கடுமையாக முயற்சியுங்கள். 23 இவற்றை நீங்கள் சுத்தமான இதயம் உள்ளவர்களோடும் கர்த்தரிடம் நம்பிக்கை உள்ளவர்களோடும் சேர்ந்து செய்யுங்கள். முட்டாள்தனமான அறிவற்ற விவாதங்களில் இருந்தும் விலகி நில்லுங்கள். இப்படிப்பட்ட விவாதங்கள் வளர்ந்து பெரிதாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 24 கர்த்தருடைய ஊழியன் சண்டைக்காரனாக இருக்கக் கூடாது. அவன் எல்லோரிடமும் இரக்கத்துடன் இருத்தல் வேண்டும். அவன் நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். அவன் பொறுமையுள்ளவனாக இருக்க வேண்டும். 25 தன் போதனையை எதிர்க்கிறவர்களோடு கர்த்தரின் ஊழியன் மென்மையாகப் பேச வேண்டும். அவர்களும் உண்மையை ஒப்புக்கொள்ளும் வகையில் தேவன் அவர்களின் மனத்தையும் மாற்றுவார். 26 பிசாசானவன் இத்தகைய மக்களை வலை போட்டுப்பிடித்து தன் விருப்பப்படி செயல்பட வைப்பான். எனினும் அவர்கள் விழித்தெழுந்து, பிசாசு தன்னைப் பயன்படுத்துவதை அறிந்து, தம்மைப் பிசாசின் வலைக்குள் இருந்து விடுவித்துக்கொள்வர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center