Old/New Testament
9 எனது தலை தண்ணீரால் நிறைக்கப்பட்டால்,
எனது கண்கள் கண்ணீரின் ஊற்றாக இருந்தால் நான் இரவும் பகலும்,
அழிந்துப்போன எனது ஜனங்களுக்காக அழ முடியும்!
2 வழிபோக்கர்கள் இரவிலே தங்குவதற்கு,
வனாந்தரத்திலே எனக்கென்றொரு வீடு இருந்திருக்குமானால் நல்லது.
அப்பொழுது நான் எனது ஜனங்களை விட்டுப்போவேன்.
நான் அந்த ஜனங்களிலிருந்து தூரப் போய்விடுவேன்.
ஏனென்றால், அவர்கள் தேவன் மேல் விசுவாசம் இல்லாதவர்கள்.
அவர்கள் அனைவரும் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.
3 “அந்த ஜனங்கள் தங்களது நாக்குகளை வில்லைப்போன்று பயன்படுத்துகின்றனர்.
அவர்களது வாய்களிலிருந்து பொய்கள் அம்புகளைப்போன்று பறக்கின்றன.
இந்த நாட்டில் உண்மைகளல்ல பொய்கள் மிகப் பலமாக வளர்ந்திருக்கின்றன.
ஜனங்கள் ஒரு பாவத்திலிருந்து இன்னொரு பாவத்திற்குப் போகிறார்கள்.
அவர்களுக்கு என்னைத் தெரியாது”
கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்.
4 கர்த்தர், “உனது அண்டை வீட்டாரை கவனியுங்கள்!
உனது சொந்தச் சகோதரர்களையும் நம்பாதீர்கள்!
ஏனென்றால், ஒவ்வொரு சகோதரனும் ஏமாற்றுக்காரனாய் இருக்கிறான்.
ஒவ்வொரு அண்டைவீட்டானும், உனது முதுகுக்குப் பின்னால் பேசுகிறான்.
5 ஒவ்வொருவனும் தனது அண்டை வீட்டானுக்கு பொய்யனாக இருக்கிறான்.
எவனும் உண்மையைப் பேசுவதில்லை.
யூதாவின் ஜனங்கள் தம் நாக்குகளுக்கு
பொய்யையே கற்றுக் கொடுத்திருக்கின்றனர்.
சோர்ந்துபோகிற அளவுக்கு
பாவம் செய்தார்கள்.
6 ஒரு கெட்டச் செயலை இன்னொன்று தொடர்கிறது.
பொய்கள், பொய்களைத் தொடர்கின்றன.
ஜனங்கள் என்னை அறிய மறுக்கின்றனர்”
என்று கர்த்தர் கூறினார்.
7 எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“ஒரு வேலையாள், ஒரு உலோகத்தை அது சுத்தமாயிருக்கிறதா என்று சோதனை செய்வதற்காக நெருப்பிலே சூடுபடுத்துகிறான்.
அதுபோல நான் யூதா ஜனங்களை சோதனைச் செய்கிறேன்.
எனக்கு வேறுவழி தெரிந்திருக்கவில்லை.
எனது ஜனங்கள் பாவம் செய்திருக்கிறார்கள்.
8 யூதா ஜனங்கள் அம்புகளைப் போன்ற கூர்மையான நாக்குகளை வைத்திருக்கிறார்கள்.
அவர்களது வாய்கள் பொய்யைப் பேசுகின்றன.
ஒவ்வொரு நபரும் தனது அயலானிடம் சமாதானமாய் பேசுகிறான்.
ஆனால், அவன் இரகசியமாக தனது அயலானைத் தாக்குவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறான்.
9 யூதா ஜனங்களை நான் தண்டிக்க வேண்டும்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“அந்த வகையான ஜனங்களை நான் தண்டிக்க வேண்டும் என்று நீ அறிவாய்.
அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.”
10 நான் (எரேமியா) மலைகளுக்காக உரக்க அழுவேன்.
காலியான வயல்களுக்காக நான் ஒப்பாரிப் பாடலைப் பாடுவேன்.
ஏனென்றால், உயிர் வாழ்வன அனைத்தும் எடுக்கப்பட்டுவிடும்.
இப்பொழுது எவரும் அங்கு பயணம் செய்யமாட்டார்கள்.
ஆடுமாடுகளின் சத்தத்தை அங்கே கேட்கமுடியாது.
பறவைகள் பறந்து போயிருக்கின்றன.
மிருகங்கள் போய்விட்டன.
11 “நான் (கர்த்தர்) எருசலேம் நகரத்தை குப்பை மேடாக்குவேன்.
அது ஓநாய்களின் வீடாகும்.
யூதா நாட்டிலுள்ள நகரங்களை நான் அழிப்பேன்,
அதனால் அங்கே எவரும் வாழமுடியாது.”
12 இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்ளுகிற அளவிற்கு ஒரு ஞானமுள்ள மனிதன் அங்கே இருக்கிறானா?
கர்த்தரால் கற்பிக்கப்பட்டிருக்கிற சிலர் அங்கே இருக்கிறார்களா?
கர்த்தருடைய செய்தியை எவரொருவராலும் விளக்கமுடியுமா?
அந்தப் பூமி ஏன் வீணாயிற்று?
எந்த மனிதரும் போகமுடியாத அளவிற்கு அது ஏன் வெறுமையான வனாந்தரமாயிற்று?
13 கர்த்தர் இந்த வினாக்களுக்கு விடை சொன்னார்.
அவர் கூறினார்:
“இது ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் எனது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிட்டார்கள்.
நான் எனது போதனைகளைக் கொடுத்தேன்.
ஆனால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டனர்.
14 யூதாவின் ஜனங்கள் தங்கள் சொந்த வழியிலேயே வாழ்ந்தார்கள்.
அவர்கள் பிடிவாதக்காரர்கள்,
அவர்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொள்கிறார்கள்.
அவர்களின் தந்தைகள் அந்தப் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள சொல்லித் தந்தனர்.”
15 “எனவே, இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்:
நான் விரைவில் யூதா ஜனங்களைத் தண்டிப்பேன்.
16 நான் யூதாவின் ஜனங்களை பல நாடுகளிலும் சிதறும்படி செய்வேன்.
அவர்கள் புற ஜாதிகளுக்குள் வாழ்வார்கள்.
அவர்களும் அவர்களது தந்தைகளும் அந்த நாடுகளைப்பற்றி எப்பொழுதும் அறிந்திருக்கமாட்டார்கள்.
நான் பட்டயங்களுடன் ஆட்களை அனுப்புவேன்.
அவர்கள் யூதாவின் ஜனங்களைக் கொல்வார்கள்.
ஜனங்கள் முடிந்து போகுமட்டும் அவர்கள் அவர்களைக் கொல்வார்கள்.”
17 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதைத்தான் கூறுகிறார்:
“இப்பொழுது, இவற்றைப்பற்றி எண்ணுங்கள்!
நீங்கள், சாவில் கூலிக்காக அழுவதில் திறமைவாய்ந்த பெண்களைக் கூப்பிடுங்கள்.
அந்த வேலையில் கெட்டிக்காரிகளை ஜனங்களுக்காக சொல்லி அனுப்புங்கள்.
18 ஜனங்கள் சொல்கிறார்கள்,
‘அந்தப் பெண்கள் விரைவாக வந்து, நமக்காக அழட்டும், பிறகு நமது கண்கள் கண்ணீரால் நிறையும்.
நமது கண்களிலிருந்து நீரோடை வரும்.’
19 “சீயோனிலிருந்து உரத்த அழுகையின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
‘நாம் உண்மையிலேயே அழிக்கப்பட்டிருக்கிறோம்.
நாம் உண்மையிலேயே வெட்கப்படுகிறோம்!
நாம் நமது நாட்டைவிட்டு விலக வேண்டும்.
ஏனென்றால், நமது வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
இப்பொழுது நமது வீடுகள் கற்குவியல்களாக இருக்கின்றன.’”
20 யூதாவின் ஸ்திரீகளே! இப்பொழுது, கர்த்தரிடமிருந்து வரும் செய்தியைக் கேளுங்கள்.
கர்த்தருடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகளைக் கேளுங்கள்.
கர்த்தர், “உங்கள் பெண்பிள்ளைகளுக்கு எவ்வாறு உரக்க அழுவது என்று கற்றுக் கொடுங்கள்.
ஒவ்வொரு பெண்ணும் ஒப்பாரிப் பாடலை பாடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
21 “மரணம் வந்திருக்கிறது.
நமது ஜன்னல்கள் வழியாக மரணம் ஏறியிருக்கிறது.
நமது அரண்மனைகளுக்குள் மரணம் வந்திருக்கிறது.
தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும், நமது பிள்ளைகளிடம் மரணம் வந்திருக்கிறது.
பொது இடங்களில் நாம் சந்திக்கிற இளைஞர்களிடம் மரணம் வந்திருக்கிறது.”
22 “கர்த்தர் எரேமியாவை நோக்கி,
மரித்த உடல்கள் வயல் வெளிகளின்மேல் எருவைப் போன்று கிடக்கும்.
அவர்களின் உடல்கள், விவசாயி அறுத்துப் போட்ட அரியைப்போன்று தரையில் கிடக்கும்.
ஆனால் அவற்றை சேகரிக்க எவரும் இருக்கமாட்டார்கள்” என்று சொல் என்றார்.
23 கர்த்தர், “ஞானம் உள்ளவர்கள்
தமது ஞானத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம்.
பலம் உள்ளவர்கள்
தமது பலத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம்.
செல்வம் உடையவர்கள்
தமது செல்வத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம்.
24 ஆனால் எவராவது பெருமைபேச விரும்பினால், அவன் இதைப்பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளட்டும்.
என்னைப்பற்றி அவன் அறிந்துக்கொண்டதைக் குறித்து பெருமைப்படட்டும்.
நானே கர்த்தர் என்றும்,
நான் தயவும் நியாயமும் கொண்டவர் என்றும்,
நான் பூமியில் நன்மையைச் செய்கிறவர் என்றும்
புரிந்துகொண்டவன் பெருமைப்படட்டும்.
நான் அவற்றை நேசிக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25 “சரீரத்தில் மட்டும் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டவர்களை நான் தண்டிக்கப்போகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. 26 எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாப் மற்றும் வனாந்திரத்தில் வாழ்கிற அனைத்து ஜனங்களையும்பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன், பாலைவனக் குடிகள் தங்கள் தாடி ஓரங்களை வெட்டினார்கள். இந்த நாடுகளில் உள்ள அனைத்து ஜனங்களும் சரீரத்தில் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளாதவர்கள். ஆனால், இஸ்ரவேல் குடும்பத்தில் வந்த ஜனங்களோ, தங்கள் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தரும், விக்கிரகங்களும்
10 இஸ்ரவேல் குடும்பத்தாரே! உங்களைக் குறித்து கர்த்தர் சொன்னதை கவனித்து கேளுங்கள்!
2 “மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களைப் போன்று வாழாதீர்கள்!
வானத்தில் தோன்றும் சிறப்பான அடையாளங்களைக் கண்டு பயப்படாதீர்கள்!
அயல் நாடுகளில் உள்ளவர்கள் தாம் வானத்தில் காண்கின்றவற்றைப்பற்றி பயப்படுகிறார்கள்.
ஆனால் அவற்றைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம்!
3 மற்ற ஜனங்களின் பழக்கவழக்கங்கள் பயனற்றவை.
ஏனெனில், அவர்களது விக்கிரகங்கள் காட்டிலுள்ள மரக்கட்டைகளைத் தவிர, வேறில்லை.
அவர்களின் விக்கிரகங்கள் வேலையாளால் உளியால் செதுக்கப்பட்டவை.
4 அவர்கள் தமது விக்கிரகங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் அழகுபடுத்துகின்றனர்.
அவர்கள் ஆணிகளையும், சுத்திகளையும் பயன்படுத்தி, விக்கிரகங்கள் விழாமல் செய்கிறார்கள்.
எனவே, அவை விழுவதில்லை.
5 அயல்நாடுகளில் உள்ள விக்கிரகங்கள் வெள்ளரிக்காய் வயலிலே,
குருவிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட கொல்லை பொம்மையைப் போன்றுள்ளன.
அவர்களின் விக்கிரகங்களால் பேசமுடியாது.
அவர்களின் விக்கிரகங்களால் நடக்கமுடியாது.
ஜனங்கள் அந்த விக்கிரகங்களைத் தூக்கிச் செல்லவேண்டும்.
அவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்.
அவைகளால் உங்களைக் காயப்படுத்த முடியாது.
அவை உங்களுக்கு உதவியும் செய்யாது”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 கர்த்தாவே, உம்மைப் போன்று எவரும் இல்லை!
நீர் பெரியவர்!
உமது நாமம் மகிமையும் பெருமையும் வல்லமையும் வாய்ந்தது!
7 தேவனே! எல்லோரும் உமக்கு மரியாதைச் செலுத்தவேண்டும்.
அனைத்து தேசத்தாருக்கும் நீரே அரசன்.
அவர்களின் மரியாதைக்கு நீர் பாத்திரர்.
அந்த நாடுகளுக்கிடையில் பல ஞானமுள்ளவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் எவரும் உம்மைப் போன்று ஞானமுள்ளவர்கள் இல்லை.
8 வேறு நாடுகளில் உள்ள, அனைத்து ஜனங்களும், அறியாமையும், மூடத்தனமும் கொண்டவர்கள்.
அவர்களின் போதனைகள் பயனற்றவை.
அவர்களின் தெய்வங்கள் மரச் சிலைகளே.
9 அவர்கள் தர்ஷீசிலிருந்து கொண்டுவந்த வெள்ளியையும்
ஊப்பாசிலிருந்து கொண்டு வந்த பொன்னையும் வைத்து அந்தச் சிலைகளைச் செய்திருக்கின்றனர்.
அந்த விக்கிரகங்கள், தச்சன்களாலும், தட்டான்களாலும் செய்யப்பட்டவை.
அவர்கள் அந்த விக்கிரகங்களுக்கு, இளநீலமும், ஊதா ஆடையும் அணிவிக்கிறார்கள்.
“ஞானமுள்ளவர்கள்” அந்த “தெய்வங்களைச்” செய்கின்றனர்.
10 ஆனால் கர்த்தர்தான் உண்மையான ஒரே தேவன்.
உண்மையில் ஜீவனுள்ள ஒரே தேவன் அவர்தான்!
அவர் என்றென்றும் ஆளுகின்ற அரசன்!
தேவன் கோபங்கொண்டால் பூமி அதிர்கிறது,
தேசங்களிலுள்ள ஜனங்களால் அவரது கோபத்தை தாங்க முடியாது.
11 “அந்த ஜனங்களிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள்,
‘அந்தப் பொய்த் தெய்வங்கள் பரலோகத்தையும் பூமியையும் படைக்கவில்லை.
அந்தப் பொய்த் தெய்வங்கள் அழிக்கப்படுவார்கள்.
வானம் மற்றும் பூமியிலிருந்து மறைவார்கள்’” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 தேவன் ஒருவரே தமது வல்லமையால் பூமியைச் செய்தார்.
தேவன் தனது ஞானத்தைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார்.
தேவன் தமது ஞானத்தினால்
பூமியின்மேல் வானத்தை விரியச் செய்தார்.
13 சத்தமான இடிக்கும் தேவனே காரணமாகிறார்.
வானத்திலிருந்து பெருவெள்ளம் பொழியவும் அவரே காரணமாகிறார்.
அவர் பூமியின் அனைத்து இடங்களிலிருந்தும் வானத்திற்கு மேகம் எழும்பும்படி செய்கிறார்.
அவர் மின்னலுடன் மழையை அனுப்புகிறார்.
அவர் தமது பண்டகச் சாலையிலிருந்து காற்றை அனுப்புகிறார்.
14 ஜனங்கள் மூடர்களாக இருக்கிறார்கள்!
உலோகச் சிற்பிகள் தாங்கள் செய்த விக்கிரகங்களைக் கொண்டு அவமானத்துக்குள்ளாகின்றனர்.
அந்தச் சிலைகள் வெறும் பொய் என்று அவர்கள் அறிவார்கள்.
அந்த விக்கிரகங்களுக்கு உயிர் இல்லை.
15 அந்த விக்கிரகங்கள் பயனற்றவை.
அவை பொய்யானவை. வஞ்சிக்கும்படியாக செய்யப்பட்டவை.
நியாயத்தீர்ப்புக் காலத்தில்,
அவ்விக்கிரகங்கள் அழிக்கப்படும்.
16 ஆனால் யாக்கோபின் தேவன், அந்த விக்கிரகங்களைப் போன்றவரல்ல.
தேவன் எல்லாவற்றையும் படைத்தார், தேவன் தமது சொந்த ஜனங்கள் என்று இஸ்ரவேல் ஜனங்களை தேர்ந்தெடுத்தார்.
“சர்வ வல்லமையுள்ள கர்த்தர்” என்பது தேவனுடைய நாமம்.
அழிவு வந்துகொண்டிருக்கிறது
17 உனக்குச் சொந்தமானவற்றையெல்லாம் சேர்த்துக்கொள்.
புறப்படத் தயாராகு. யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் பட்டணத்தில் பிடிபடுவீர்கள்.
இதனை பகைவர்கள் சுற்றி வளைத்துக் கொள்வார்கள்.
18 “இந்த முறை, யூதாவின் ஜனங்களை நாட்டைவிட்டு வெளியே எறிவேன்.
நான் அவர்களுக்கு வலியும், துன்பமும் கொண்டு வருவேன்.
நான் இதனைச் செய்வதன் மூலம் அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
19 ஓ! நான் (எரேமியா) மோசமாகக் காயப்பட்டேன்,
நான் புண்பட்டேன், என்னால் குணமாக முடியவில்லை
எனக்குள் நான் இவ்வாறு சொல்லிக்கொண்டேன்.
“இதுதான் என்னுடைய நோய்.
இதன் மூலம் நான் துன்பப்படவேண்டும்.”
20 எனது கூடாரம் அழிக்கப்பட்டது.
கூடாரக் கயிறுகள் எல்லாம் அறுபட்டன.
எனது பிள்ளைகள் என்னை விட்டுவிட்டனர்.
அவர்கள் போய்விட்டார்கள்.
எனது கூடாரத்தை அமைப்பதற்கு எவனும் இருக்கவில்லை,
எனக்கான இருப்பிடத்தை உருவாக்கிட யாரும் இல்லை.
21 மேய்ப்பர்கள் (தலைவர்கள்) மூடர்கள்,
அவர்கள் கர்த்தரைத் தேட முயற்சி செய்வதில்லை.
அவர்களுக்கு ஞானம் இல்லை.
எனவே அவரது மந்தைகள் (ஜனங்கள்) சிதறிக் காணாமல் போகின்றன.
22 உரத்த சத்தத்தைக் கேளுங்கள்!
இந்த உரத்த சத்தம் வடக்கிலிருந்து வருகிறது.
அது யூதாவின் நகரங்களை அழிக்கும்.
யூதா ஒரு வெறுமையான வனாந்தரமாகும்,
அது ஓநாய்களுக்கான வீடாகும்.
23 கர்த்தாவே! ஜனங்கள் உண்மையில் தங்களது வாழ்வைக் கட்டுப்படுத்தவோ,
அல்லது தங்கள் எதிர்காலத்தை திட்டமிடவோ முடியாது, என்பதை நான் அறிவேன்.
வாழ்வதற்கான சரியான வழியை ஜனங்கள் உண்மையில் அறிந்துகொள்ளவில்லை.
24 கர்த்தாவே! எங்களைத் திருத்தும்,
நீதியாய் இரும்.
கோபத்தில் எங்களைத் தண்டிக்காமல் இரும்.
இல்லையேல் நீர் எங்களை அழிக்கக்கூடும்.
25 நீர் கோபத்தோடு இருந்தால்,
பின் அந்நிய நாடுகளைத் தண்டியும்.
அவர்கள் உம்மை அறிவதில்லை, மதிப்பதுமில்லை.
அந்த ஜனங்கள் உம்மைத் தொழுதுகொள்வதுமில்லை.
அந்த நாடுகள் யாக்கோபின் குடும்பத்தை அழித்தது,
அவர்கள் இஸ்ரவேலை முழுமையாக அழித்தனர்,
அவர்கள் இஸ்ரவேலரின் தாய் நாட்டையும் அழித்தனர்.
உடன்படிக்கை உடைக்கப்படுகிறது
11 எரேமியாவிற்கு வந்த கர்த்தருடைய வார்த்தை இதுதான். 2 “எரேமியா, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேள். யூதாவின் ஜனங்களிடம் இவற்றைப்பற்றி கூறு. எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற ஜனங்களிடம் இவற்றைப்பற்றி கூறு. 3 இதைத்தான், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘இந்த உடன்படிக்கைக்கு அடிபணியாத எந்தவொரு நபருக்கும் கெட்டவை ஏற்படும். 4 நான் உங்கள் முற்பிதாக்களோடு செய்துக்கொண்ட உடன்படிக்கையைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தபோது அவர்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்துக்கொண்டேன். எகிப்து பல துன்பங்களுக்குரிய இடமாக இருந்தது. அது இரும்பை இளகச் செய்யும் அளவிற்கு சூடான வாணலியைப்போன்று இருந்தது.’ அந்த ஜனங்களிடம், ‘எனக்குக் கீழ்ப்படியுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றவற்றைச் செய்யுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்கள் என்னுடைய ஜனங்களாகவும், நான் உங்களது தேவனாகவும் இருப்பேன்’ என்று சொன்னேன்.
5 “நான் உங்களது முற்பிதாக்களுக்குச் செய்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காகவே இதனைச் செய்தேன். மிகவும் செழிப்பான பாலும் தேனும் ஓடுகிற பூமியைத் தருவதாக நான் அவர்களுக்கு உறுதி செய்தேன். நீங்கள் இன்று அத்தகைய நாட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்.”
நான் (எரேமியா) “ஆமென் கர்த்தாவே” என்றேன்.
6 கர்த்தர் என்னிடம், “எரேமியா எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் நகரங்களிலும் இச்செய்தியைப் பிரச்சாரம் செய் என்று சொன்னார். அவர், ‘இந்த உடன்படிக்கையின் வார்த்தையை கவனியுங்கள். அதன் சட்டங்களுக்கு அடிபணியுங்கள். 7 உங்களது முற்பிதாக்களுக்கு நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, ஒரு எச்சரிக்கைக் கொடுத்தேன். இந்நாள்வரை நான் அவர்களை மீண்டும், மீண்டும், எச்சரிக்கை செய்தேன், எனக்கு கீழ்ப்படியுமாறு நான் அவர்களுக்குச் சொன்னேன். 8 ஆனால் உங்களது முற்பிதாக்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் பிடிவாதமாக இருந்து அவர்களது தீயமனம் விரும்புகிறபடி செய்தனர். அவர்கள் எனக்கு அடிபணியாவிட்டால் கெட்டவை ஏற்படும், என்று உடன்படிக்கைக் கூறுகிறது, எனவே, நான் அவர்களுக்கு அனைத்து கெட்டவற்றையும் ஏற்படும்படிச் செய்கிறேன். உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்டேன். ஆனால் அவர்கள் செய்யவில்லை.’”
9 கர்த்தர் என்னிடம், “எரேமியா! யூதாவின் ஜனங்களும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களும் இரகசியமாக திட்டங்கள் போடுகிறார்கள் என்று தெரியும். 10 அந்த ஜனங்கள் தம் முற்பிதாக்கள் செய்த அதே பாவங்களைச் செய்கிறார்கள். அவர்களின் முற்பிதாக்கள் எனது செய்தியை கேட்க மறுத்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்ளவும், பின்பற்றவும் செய்தனர். நான் அவர்களது முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை இஸ்ரவேலின் குடும்பத்தாரும், யூதாவின் குடும்பத்தாரும், உடைத்துவிட்டனர்” என்று கூறினார்.
11 எனவே கர்த்தர், “யூதாவின் ஜனங்களுக்கு விரைவில் பயங்கரமான சில காரியங்கள் ஏற்படும்படி செய்வேன். அவர்களால் அவற்றிலிருந்து தப்பிக்க முடியாது. அவர்கள் வருத்தப்படுவார்கள். அவர்கள் என்னிடம் உதவிக்காக அழுவார்கள். ஆனால் நான் அவர்களை கவனிக்கமாட்டேன். 12 யூதாவில் உள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும், தங்கள் விக்கிரகங்களிடம் போய் உதவிக்காக ஜெபிப்பார்கள். அந்த விக்கிரகங்களுக்கு முன் நறுமணப் பொருட்களை எரிக்கின்றனர். அந்தப் பயங்கரமான காலம் வரும்போது அந்த விக்கிரகங்களால் யூதாவின் ஜனங்களுக்கு உதவி செய்யமுடியாது.
13 “யூதாவின் ஜனங்களே! உங்களிடம் ஏராளமான விக்கிரகங்கள் உள்ளன, யூதாவில் உள்ள நகரங்களைப் போன்றே, உங்களிடம் பல விக்கிரகங்கள் உள்ளன. பொய்யான பாகால் தெய்வத்திற்கு நீங்கள் பல பலிபீடங்களை தொழுதுகொள்வதற்காகக் கட்டியிருக்கிறீர்கள். அவை எருசலேமிலுள்ள, தெருக்களின் எண்ணிக்கைபோன்று, அதிக எண்ணிக்கையாக உள்ளன என்று சொல்லுகிறார்.
14 “எரேமியா, யூதாவின் இந்த ஜனங்களுக்காக நீ ஜெபம் செய்யவேண்டாம். அவர்களுக்காக கெஞ்சவேண்டாம். அவர்களுக்காக ஜெபம் செய்யவேண்டாம். நான் கேட்கமாட்டேன். அந்த ஜனங்கள் துன்பப்படத் தொடங்குவார்கள். பிறகு அவர்கள் என்னை உதவிக்காக அழைப்பார்கள். ஆனால் நான் அவர்களை கவனிக்கமாட்டேன்.
15 “ஏன் எனது பிரியமானவள் (யூதா) எனது வீட்டில் (ஆலயத்தில்) இருக்கிறாள்?
அங்கே இருக்க அவளுக்கு உரிமை இல்லை.
அவள் பல தீய செயல்களைச் செய்திருக்கிறாள்.
யூதாவே, சிறப்பான வாக்குறுதிகளும் மிருகபலிகளும் உன்னை அழிவிலிருந்து காப்பாற்றும் என்று நினைக்கிறாயா?
எனக்குப் பலிகள் கொடுப்பதன் மூலம் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறாயா?”
16 கர்த்தர் உனக்கு ஒரு பெயரைக் கொடுத்தார்.
உன்னை அழைத்து, “பசுமையான ஒலிவமரம்.
பார்க்க அழகானது” என்றார்.
ஆனால் ஒரு பெரும் புயலுடன், கர்த்தர் அந்த மரத்தை நெருப்பில் தள்ளிவிடுவார்.
அதன் கிளைகள் எரிக்கப்படும்.
17 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உன்னை நட்டுவைத்தார். அழிவு உனக்கு வருமென்று அவர் சொன்னார். ஏனென்றால், இஸ்ரவேலின் குடும்பமும், யூதாவின் குடும்பமும், கெட்ட செயல்களைச் செய்திருக்கின்றன. அவர்கள் பாகலுக்குப் பலிகளைக் கொடுத்தனர் அது அவருக்குக் கோபத்தை உண்டுப்பண்ணியது!
எரேமியாவிற்கு எதிராக தீய திட்டங்கள்
18 ஆனதோத்திலுள்ள மனிதர்கள் எனக்கு எதிராக திட்டங்கள் போடுவதை, கர்த்தர் எனக்குக் காட்டினார். அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களை எனக்கு கர்த்தர் காட்டினார். எனவே நான், அவர்கள் எனக்கு எதிரானவர்கள் என்பதை அறிந்தேன். 19 அந்த ஜனங்கள் எனக்கு எதிராக இருந்தார்கள் என்று கர்த்தர் எனக்குக் காட்டுமுன் நான் அடிக்கப்படுவதற்காகக் கொண்டுப்போகப்படும் சாதுவான ஆட்டுக் குட்டியைப்போன்று இருந்தேன். அவர்கள் எனக்கு எதிரானவர்கள் என்பதை அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் என்னைப்பற்றி இவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள், “இந்த மரத்தையும், அதன் கனிகளையும் அழித்து, அவனைக் கொல்லலாம் வாருங்கள். பிறகு ஜனங்கள் அவனை மறப்பார்கள்.” 20 ஆனால் கர்த்தாவே! நீர் நியாயமான நீதிபதி, மனிதர்களின் மனதையும், இதயத்தையும், எப்படி சோதிக்க வேண்டும் என்பதை அறிவீர். என்னுடைய வாதங்களை நான் உமக்குச் சொல்வேன். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுக்கும்படி உம்மை அனுமதிப்பேன்.
21 ஆனதோத்திலுள்ள மனிதர்கள் எரேமியாவைக் கொல்லத் திட்டம் போட்டனர். அந்த மனிதர்கள் எரேமியாவிடம் சொன்னார்கள், “கர்த்தருடைய நாமத்தால் தீர்க்கதரிசனம் சொல்லாதே. அல்லது நாங்கள் உன்னைக் கொல்வோம்” ஆனதோத்திலிருக்கும், மனிதர்களைப்பற்றி கர்த்தர் ஒரு முடிவு செய்தார். 22 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “ஆனதோத்திலுள்ள மனிதர்களை நான் விரைவில் தண்டிப்பேன். அவர்களின் இளைஞர்கள் போரில் மரிப்பார்கள். அவர்களது மகன்களும் மகள்களும் பசியில் மரிப்பார்கள். 23 ஆனதோத் நகரத்தில் உள்ள எவரும் விடப்படுவதில்லை. எவரும் உயிர் வாழமாட்டார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களுக்குத் தீயவை நேரும்படி நான் காரணமாவேன்” என்றார்.
அடிமைகளுக்கான விதிமுறைகள்
6 அடிமைகளாய் இருக்கிற அனைவரும் தங்கள் எஜமானர்களுக்கு மரியாதை காட்டவேண்டும். அவர்கள் இதனைச் செய்யும்பொழுது தேவனுடைய பெயரும், நம் போதனையும் விமர்சிக்கப்படாமல் இருக்கும். 2 சில அடிமைகளின் எஜமானர்கள் விசுவாசம் உடையவர்களாய் இருப்பார்கள். அதனால் அவர்கள் இருவரும் சகோதரர்களாய் இருப்பார்கள். எனினும் அந்த அடிமைகள் தங்கள் மரியாதையைக் குறைத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் மேலும் சிறப்பான முறையில் தங்கள் வேலையைத் தங்கள் எஜமானர்களுக்காகச் செய்யவேண்டும். ஏனென்றால் தாம் நேசிக்கும் விசுவாசிகளுக்கு அந்த அடிமைகள் உதவிக்கொண்டும் பயன் விளைவித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
இக்காரியங்களைச் செய்ய நீ அவர்களுக்கு இதனைப் போதிக்கவும் உற்சாகப்படுத்தவும் வேண்டும்.
தவறான போதனையும் உண்மையான செல்வமும்
3 சிலர் தவறான போதனைகளைச் செய்துவருகிறார்கள். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான போதனையை அவர்கள் பின்பற்றுவதில்லை. தேவனுக்குச் சேவை செய்கிற உண்மையான வழியையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 4 தவறான போதகன் தற்பெருமையை உடையவன். அவனுக்கு எதுவும் புரியாது. வாக்குவாதங்களின் மேல் ஒரு நோய் கொண்ட உற்சாகத்தை உடையவனாக இருக்கிறான். அது பொறாமையையும், சண்டையையும், அவதூறுகளையும், பொல்லாத ஐயங்களையும் உண்டாக்குகின்றன. 5 உக்கிரமான தீயமனம் உடையவர்கள் வெறும் வாக்குவாதங்களையே முடிவில் உருவாக்குகிறார்கள். அவர்கள் உண்மையைத் தொலைத்துவிட்டார்கள். தேவனை சேவிப்பது செல்வந்தனாகும் வழி என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
6 தன்னிடம் இருப்பதே போதும் என்று ஒருவன் திருப்தி அடைகிறானெனில் அத்துடன் அவனுக்குள்ள தேவபக்தியானது மிகுந்த இலாபமாயிருக்கும், என்பது உண்மை. 7 நாம் இந்த உலகத்துக்கு வரும்போது எதையும் நம்மோடு கொண்டு வரவில்லை. நாம் இறக்கும்போதும் எதையும் கொண்டு போகப் போவதில்லை. 8 எனவே, நம்மிடம் உள்ள உணவு, ஆடை ஆகியவற்றோடு திருப்தி அடையவேண்டும். 9 மேலும் செல்வந்தராக விரும்புகிறவர்கள் சோதனைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் கண்ணிகளில் மாட்டிக்கொள்கிறார்கள். முட்டாள்தனமானதும் ஆபத்தானதுமான ஆசைகளை வளர்த்துக்கொள்கிறார்கள். அவை அவர்களைப் பாதித்து, அழிக்கும். 10 பண ஆசையானது எல்லாவிதமான பாவங்களுக்கும் வழி வகுக்கும். சிலர் மேலும் மேலும் பணத்தை விரும்பி உண்மையான போதனையை விட்டுவிட்டார்கள். அதனால் தம் துன்பத்துக்குத் தாமே காரணமாகிறார்கள்.
நினைவுகொள்ளவேண்டிய விஷயங்கள்
11 நீயோ தேவனுடைய மனிதன். எனவே நீ இவற்றில் இருந்து விலகி இருக்கவேண்டும். சரியான வழியில் வாழ முயற்சி செய். தேவனுக்கு சேவை செய். விசுவாசம், அன்பு, பொறுமை, சாந்தம் ஆகியவற்றை வைத்துக்கொள். 12 விசுவாசம் வைத்தல் பந்தயத்தில் ஓடுவது போன்றது. அதில் வெற்றி பெறக் கடுமையாகப் பாடுபடு. நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அத்தகைய வாழ்க்கைக்காகவே நீ அழைக்கப்பட்டாய், அநேக மக்களுக்கு முன்னிலையில் கிறிஸ்துவின் பேருண்மையை நீ அறிக்கை பண்ணியுமிருக்கிறாய். 13 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் முன்பாக நான் ஒரு ஆணையை இடுகிறேன். பொந்தியு பிலாத்துவின் முன்னால் நிற்கும்போது அவர் பேருண்மைக்கு சாட்சியம் வழங்கினவர். கிறிஸ்து இயேசு ஒருவரே எல்லாவற்றிற்கும் வாழ்வளிக்கிறார். 14 அதனால் இப்பொழுது உனக்குக் கூறுகிறேன், உனக்கு ஆணையிட்டுள்ளபடி செய். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வரும்வரை குற்றம் இல்லாமலும் பிழை இல்லாமலும் சரியாகச் செய். 15 தேவன் அதனைச் சரியான நேரத்தில் நிகழும்படி செய்வார். தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும், ஏக சக்கரவர்த்தியாகவும் இருக்கிறார். அவரே அரசர்களுக்கெல்லாம் அரசராகவும், கர்த்தர்களுக்கெல்லாம் கர்த்தராகவும் விளங்குகிறார். 16 அவர் ஒருவரே என்றும் மரிப்பதில்லை. அவர் யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கமுடியாது. என்றென்றைக்கும் அவருக்குக் கனமும் வல்லமையும் உண்டாகுவதாக ஆமென்.
17 இந்த ஆணைகளைச் செல்வர்களிடம் கூறு. பெருமிதம் கொள்ளவேண்டாம் என அவர்களுக்குச் சொல். செல்வத்தின் மீது விசுவாசம் நிரந்தரமாக வைக்கவேண்டாம் என்றும், தேவன் மீது விசுவாசம் வைக்குமாறும் கூறு. செல்வம் விசுவாசிப்பதற்கு உரியதன்று. ஆனால் தேவன் நம்மை செழிப்பாகப் பாதுகாக்கிறார். அவற்றை நாம் சந்தோஷமாக அனுபவிக்க அவர் கொடுக்கிறார். 18 நல்ல செயல்களைச் செய்யுமாறு செல்வர்களிடம் கூறு. வள்ளல்களாகவும், பகிர்ந்துகொள்ள விரும்புகிறவர்களாகவும் இருக்கக் கூறு. 19 இவற்றைச் செய்வதன் மூலம் அவர்கள் பரலோகத்தில் ஒரு பொக்கிஷத்தைச் சேமித்து வைக்கிறார்கள். அது அவர்களுக்குப் பலமான அஸ்திபாரமாக எதிர்கால வாழ்வைக் கட்ட உதவியாக இருக்கும். அதனால் உண்மையான வாழ்வைப் பெறுவர்.
20 தீமோத்தேயுவே, தேவன் உன்னிடம் நம்பிக்கையுடன் பல நல்ல காரியங்களைத் தந்திருக்கிறார். அவற்றைப் பாதுகாத்துக்கொள். தேவனிடமிருந்து வராத முட்டாள்தனமான காரியங்களைப் பேசுகிறவர்களிடமிருந்து விலகு. உண்மைக்கு எதிராக வாதம் செய்கிறவர்களிடமிருந்தும் விலகிப் போ. அவர்கள் “ஞானம்” என்று அழைப்பதெல்லாம் தவறான “ஞானம்” ஆகும். 21 சிலர் தங்களிடம் அந்த “ஞானம்” உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையான போதனையில் இருந்து விலகிப்போனார்கள்.
தேவனுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
2008 by World Bible Translation Center