Old/New Testament
பகைவர் எருசலேமை சுற்றிவளைத்தனர்
6 பென்யமீன் ஜனங்களே! உங்கள் உயிருக்காக ஓடுங்கள்.
எருசலேம் நகரத்தை விட்டுத் தூர ஓடுங்கள்!
தெக்கோவா நகரில் போர் எக்காளத்தை ஊதுங்கள்!
பெத்கேரேம் நகரில் எச்சரிக்கை கொடியை ஏற்றுங்கள்!
நீங்கள் இவற்றை செய்யுங்கள்.
ஏனென்றால், வடக்கிலிருந்து பேரழிவானது வந்துகொண்டிருக்கிறது.
பயங்கரமான பேரழிவு உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது.
2 சீயோனின் மகளே, நீ ஒரு அழகான மென்மையான
பெண் போன்றுள்ளாய்.
3 மேய்ப்பர்கள் எருசலேமிற்கு வருகிறார்கள்,
அவர்கள் தம் ஆட்டு மந்தையைக் கொண்டுவருகிறார்கள்.
எருசலேமைச் சுற்றி தங்கள் கூடாரங்களை அமைத்தனர்.
ஒவ்வொரு மேய்ப்பனும், அவனது சொந்த மந்தையைக் கவனிக்கின்றனர்.
4 “எருசலேமிற்கு எதிராகப் போராடத் தயாராகுங்கள்.
எழுந்திருங்கள்! நாம் மதிய நேரத்தில் நகரத்தைத் தாக்குவோம்;
ஆனால் ஏற்கனவே தாமதமாகிவிட்டது.
மாலை நிழல் நீளமாக வளர்ந்துக்கொண்டிருக்கின்றது.
5 எனவே, புறப்படுங்கள்! இரவில் நகரத்தை நாம் தாக்குவோம்!
எருசலேமைச் சுற்றியிருக்கின்ற உறுதியான சுவர்களை அழிப்போம்.”
6 சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“எருசலேமை சுற்றியுள்ள மரங்களை வெட்டிப்போடுங்கள், அதன் சுவருக்கு எதிராக எடுசுவரை எழுப்புங்கள்.
இந்த நகரம் தண்டிக்கப்படவேண்டும்!
இந்த நகரத்தின் உட்பகுதியில் கொடுமையைத் தவிர வேறு எதுவுமில்லை.
7 ஒரு கிணறு தனது தண்ணீரைப் புதிதாக சுரக்கிறது,
இதுபோலவே எருசலேமும் தனது தீங்கை சுரக்கபண்ணுகிறது,
நகரத்திற்குள் எல்லா நேரத்திலும், கொடுமையும், வன்முறையும் நிகழ்வதை நான் கேள்விப்படுகிறேன்.
எருசலேமிற்குள் எப்பொழுதும் துன்பமும், நோயும் இருப்பதைப் பார்க்கிறேன்.
8 எருசலேமே! இந்த எச்சரிக்கையை கவனி!
நீ கவனிக்காவிட்டால், பிறகு நான் உனக்கு எனது முதுகைத் திருப்புவேன்,
உனது நாட்டை ஒரு வெறும் வனாந்தரமாக நான் செய்வேன்.
அங்கு எவரும் வாழமுடியாமல் போகும்” என்று கூறுகிறார்.
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“தங்கள் தேசத்தில் விடப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேருங்கள்,
நீங்கள் திராட்சைத் தோட்டத்தில் இறுதியில்
பழுத்த பழங்களை சேகரிப்பதுபோன்று
அவர்களை ஒன்று சேருங்கள்.
ஒரு வேலைக்காரன் ஒவ்வொரு திராட்சைப் பழத்தையும் பறிக்குமுன்
சோதிப்பதுபோன்று சோதியுங்கள்” என்று கூறுகிறார்.
10 நான் யாரோடு பேசுவேன்?
நான் யாரை எச்சரிக்க முடியும்?
நான் சொல்வதை யார் கேட்பார்கள்?
இஸ்ரவேல் ஜனங்கள் தம் காதுகளை மூடிக்கொண்டார்கள்.
எனவே, எனது எச்சரிக்கைகளை அவர்களால் கேட்கமுடியாது.
ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளை விரும்புகிறதில்லை,
அவரது செய்தியை அவர்கள் கேட்க விரும்பவில்லை.
11 ஆனால் நான், (எரேமியா) கர்த்தருடைய கோபத்தால் முழுமையாக நிறைந்திருக்கிறேன்!
நான் அதனைத் தாங்குவதில் சோர்ந்துபோனேன்.
“தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் மீது கர்த்தருடைய கோபத்தை ஊற்றுங்கள்.
கூடுகின்ற இளைஞர் மேல் கர்த்தருடைய கோபத்தை ஊற்றுங்கள்.
ஒரு ஆணும் அவனது மனைவியும் சேர்த்து கைபற்றப்படுவார்கள்.
வயதான ஜனங்கள் அனைவரும் கைபற்றப்படுவார்கள்.
12 அவர்களின் வீடுகள் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.
அவர்களின் வயல்களும் மனைவிகளும் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.
நான் என்னுடைய கையை உயர்த்தி யூதாவின் ஜனங்களைத் தண்டிப்பேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13 “இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் மேலும் மேலும் பணத்தை விரும்புகின்றனர்.
முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள்வரை அனைத்து ஜனங்களும், இதுபோலவே இருக்கின்றனர்.
தீர்க்கதரிசிகளிலிருந்து ஆசாரியர்கள்வரை, அனைத்து ஜனங்களும் பொய்களைக் கூறுகின்றனர்.
14 என்னுடைய ஜனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், அந்தக் காயங்களுக்குக் கட்டுப் போடவேண்டும்.
அவர்கள் சிறிய காயங்களுக்கு, சிகிச்சை செய்வதுபோன்று, அவர்கள் புண்களுக்கு சிகிச்சை செய்கின்றனர்.
‘இது சரியாக இருக்கிறது, எல்லாம் சரியாக இருக்கிறது!’
என்று கூறுகிறார்கள்.
ஆனால் அது சரியாக இல்லை!
15 தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், தாங்கள் செய்கிற தீயச்செயல்களுக்காக வெட்கப்பட வேண்டும்.
ஆனால், அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை.
தங்கள் பாவங்களுக்காக வெட்கப்படும் அளவிற்கு அவர்களுக்கு போதிய அறிவில்லை;
எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவார்கள்.
நான் ஜனங்களைத் தண்டிக்கும்போது, அவர்கள் தரையில் வீசியெறியப்படுவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
16 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“வழிகளில் நின்று கவனி.
பழையசாலை எங்கே என்று கேள்.
நல்ல சாலை எங்கே என்று கேள்.
அந்தச் சாலையில் நட.
நீ செய்தால், உனக்குள் நீ ஓய்வைக் கண்டுபிடிப்பாய்.
ஆனால் நீங்களோ, ‘நாங்கள் நல்ல சாலைகளில் நடக்கமாட்டோம்!’ என்று கூறினீர்கள்.
17 உங்களை கவனிக்க காவல்காரர்களைத் தேர்ந்தெடுத்தேன்.
நான் அவர்களிடம், ‘போர் எக்காள சத்தத்தை கவனியுங்கள்’ என்று கூறினேன்.
ஆனால் அவர்களோ, ‘நாங்கள் கவனிக்கமாட்டோம்!’ என்று கூறினார்கள்.
18 எனவே, தேசத்திலுள்ளவர்களே!
கேளுங்கள் சபையே,
19 பூமியின் ஜனங்களே,
யூதா ஜனங்களுக்கு நான் பேரழிவைக் கொண்டுவருவேன்.
ஏனென்றால், அவர்கள் எல்லா தீயச்செயல்களுக்கும் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் என் வார்த்தையை உதாசினப்படுத்தினார்கள்.
அந்த ஜனங்கள் என் சட்டங்களுக்கு அடிபணிய மறுத்தனர்.”
20 கர்த்தர் அவர்களிடம், “ஏன் நீங்கள் சேபா நாட்டிலுள்ள நறுமணப் பொருட்களையும்,
தொலை நாடுகளிலுள்ள சுகந்தப் பட்டைகளையும் எனக்குக் கொண்டு வருகிறீர்கள்?
உங்களது சர்வாங்கத் தகன பலிகள் எனக்கு மகிழ்ச்சியளிப்பதில்லை,
உங்களது பலிகள் எனக்கு இன்பமாயிராது” என்று கூறினார்.
21 எனவே இதுதான் கர்த்தர் கூறுவது:
“யூதாவிலுள்ள ஜனங்களுக்கு நான் சிக்கல்களை கொண்டு வருவேன்.
அவை ஜனங்களை விழச் செய்யும் கற்களைப்போன்று இருக்கும்.
தந்தைகளும் மகன்களும் ஒருவர் மேல் ஒருவர் இடறி விழுவார்கள்.
நண்பர்களும் அருகில் உள்ளவர்களும் மரித்துப்போவார்கள்.”
22 கர்த்தர் சொல்லுகிறதாவது:
“ஒரு படையானது வடக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
பூமியிலுள்ள, தொலைதூர இடங்களிலிருந்து ஒரு பெரிய தேசம் வந்துகொண்டிருக்கிறது.
23 வீரர்கள் வில்லையும் ஈட்டியையும் கொண்டு வருகின்றனர்.
அவர்கள் கொடுமையானவர்கள்.
அவர்களிடம் இரக்கம் இல்லை.
அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்,
அவர்கள், குதிரைகள் மேல் சவாரி செய்து வரும்போது,
இரைகின்ற கடலைப்போன்று சத்தம் எழுப்புகிறார்கள்.
சண்டை செய்வதற்கு தயாராக அப்படை வந்துக்கொண்டிருக்கிறது.
சீயோனின் குமாரத்தியே! அந்தப் படை உங்களை தாக்கிட வந்துகொண்டிருக்கிறது.”
24 அந்தப் படையைப் பற்றியச் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எங்களின் துன்ப வலையில் மாட்டிக்கொண்டதாக உணர்கிறோம்.
பயத்தினால் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம்.
பிரசவிக்கும் பெண்ணைப்போன்று வேதனையில் இருக்கிறோம்.
25 வெளியே வயல்களுக்குப் போகாதீர்கள்.
சாலைகளில் போகாதீர்கள்,
ஏனென்றால் பகைவர்கள் வாள் வைத்திருக்கின்றனர்.
எல்லா இடங்களிலும் ஆபத்து இருக்கிறது.
26 என் சாக்கு ஆடையை அணிந்துக்கொள்ளுங்கள்.
சாம்பலில் புரளுங்கள்.
மரித்த ஜனங்களுக்காக உரக்க அழுங்கள்.
ஒரே மகனை இழந்ததைப்போன்று அழுங்கள்,
இவற்றையெல்லாம் செய்யுங்கள்;
ஏனென்றால், நமக்கு எதிரியான, அழிவுக்காரன் மிகவேகமாக வந்துக்கொண்டிருக்கிறான்.
27 “எரேமியா! நான், (கர்த்தர்) உன்னை உலோகத்தை
சோதித்துப்பார்க்கும் வேலையாளாக வைத்தேன்,
நீ எனது ஜனங்களை சோதிப்பாய்;
அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று கவனிப்பாய்.
28 என்னுடைய ஜனங்களே, எனக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர்,
அவர்கள் மிகவும் கடினமானவர்கள்.
அவர்கள் ஜனங்களைப்பற்றி தவறானவற்றைச் சொல்கிறார்கள், ஜனங்களைப்பற்றி கெட்டவற்றைச் சொல்கிறார்கள்.
துருவும் கறையும் கொண்ட அவர்கள் எல்லோரும் தீயவர்கள்.
அவர்கள் வெண்கலத்தைப்போன்றும் இரும்பைப் போன்றும் இருக்கின்றனர்.
29 அவர்கள் வெள்ளியை சுத்தப்படுத்த முயலும் வேலைக்காரர்களைப் போன்றுள்ளனர்.
துருத்திகள் பலமாக ஊதப்படுகின்றன.
நெருப்பு மேலும் சூடாகின்றது.
ஆனால் நெருப்பிலிருந்து ஈயம்மட்டும் வருகின்றது.
அந்த வெள்ளியை சுத்தப்படுத்துவதில் வேலையாள் தனது காலத்தை வீணாக்கிவிட்டான்.
இதுபோலவே, எனது ஜனங்களிடமிருந்து தீயவை விலக்கப்படவில்லை.
30 என்னுடைய ஜனங்கள் ‘தள்ளுபடியான வெள்ளி’ என்று அழைக்கப்படுவார்கள், அவர்களுக்கு அந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஏனென்றால், கர்த்தர் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.”
எரேமியாவின் ஆலயத்துப் பிரசங்கம்
7 எரேமியாவிற்கான கர்த்தருடைய செய்தி இது: 2 எரேமியா, தேவனுடைய வீட்டுக் கதவருகில் நில். வாசலில் இந்த செய்தியைப் பிரசங்கம் செய்: “யூதா நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களே! கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! இந்த வாசல் வழியாக கர்த்தரை ஆராதிக்க வருகின்ற ஜனங்களே, இந்தச் செய்தியைக் கேளுங்கள். 3 இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதைத் தான் சொல்கிறார்: ‘உங்களது வாழ்க்கையை மாற்றுங்கள். நல்லவற்றைச் செய்யுங்கள், இதனை நீங்கள் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். 4 சில ஜனங்கள் கூறுகிற பொய்களில் நம்பிக்கை வைக்காதீர்கள். இதுதான் கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம்’ என்று அவர்கள் கூறுகின்றனர். 5 நீங்கள் உங்களது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நற் செயல்களைச் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நியாயமாக இருக்கவேண்டும். 6 நீங்கள் அந்நியர்களுக்கும் நியாயமாக இருக்கவேண்டும். நீங்கள் விதவைகளுக்கும் அநாதைகளுக்கும் நல்லவற்றைச் செய்யவேண்டும். ஒன்றுமறியாத ஜனங்களைக் கொல்லவேண்டாம். மற்ற தெய்வங்களைப் பின் பற்றவேண்டாம். ஏனென்றால் அவை உங்கள் வாழ்வை அழித்துவிடும். 7 நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன்: நான் உங்களது முற்பிதாக்களுக்கு இந்த நாட்டை என்றென்றைக்கும் வைத்திருக்கும்படி கொடுத்தேன்.
8 “ஆனால் நீங்கள் பொய்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பொய்கள் பயனில்லாதவை. 9 நீங்கள் களவும், கொலையும் செய்வீர்களா? நீங்கள் விபச்சாரம் என்னும் பாவத்தை செய்வீர்களா? நீங்கள் மற்றவர்கள் மேல் பொய்வழக்கு போடுவீர்களா? நீங்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொண்டு, உங்களால் அறியப்படாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றுவீர்களா? 10 நீங்கள் அந்தப் பாவங்களைச் செய்தால், எனது நாமத்தால் அழைக்கப்படும். இந்த வீட்டில் எனக்கு முன்னால் நிற்க முடியும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் இதுபோன்ற கெட்ட செயல்களையெல்லாம் செய்துகொண்டு, எனக்கு முன்னால் நின்று, ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டே தீய செயல்களைத் தொடர்ந்து செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? 11 இந்த ஆலயம் எனது நாமத்தால் அழைக்கப்படுகின்றது. இந்த ஆலயம் உங்களுக்கு, கள்ளர் பதுங்கும் இடமே ஒழிய, வேறு எதுவுமில்லையா? நான் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 “யூதாவின் ஜனங்களே! இப்பொழுது சீலோ என்னும் நகரத்திற்குப் போங்கள். நான் முதலில் எந்த இடத்தில் எனது நாமத்தால் ஒரு வீட்டை அமைத்தேனோ அங்கு போங்கள். இஸ்ரவேல் ஜனங்களும் தீயச்செயல்களைச் செய்தனர். அவர்கள் செய்த தீயச்செயல்களுக்கு நான் அந்த இடத்துக்குச் செய்தவற்றைப் போய் பாருங்கள். 13 யூதா ஜனங்களாகிய நீங்கள், இத்தீயச் செயல்களையெல்லாம் செய்தீர்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் உங்களிடம் மீண்டும் மீண்டும் பேசினேன். ஆனால் நீங்கள் என்னை கவனிக்க மறுத்துவிட்டீர்கள். நான் உங்களை அழைத்தேன். ஆனால் நீங்கள் பதில் சொல்லவில்லை. 14 எனவே, எருசலேமில் எனது நாமத்தால் அழைக்கப்பட்ட வீட்டை அழிப்பேன். நான் சீலோவை அழித்தது போன்று, அந்த ஆலயத்தையும் அழிப்பேன். எனது நாமத்தால் அழைக்கப்படும் எருசலேமில் உள்ள அந்த வீடு, நீங்கள் நம்பிக்கை வைத்த ஆலயம். நான் அந்த இடத்தை உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்தேன். 15 எப்பிராயீமிலுள்ள உங்கள் சகோதரர்களை நான் தூர எறிந்ததைப்போன்று, உங்களையும் என்னைவிட்டுத் தூர எறிவேன்.
16 “எரேமியா, யூதாவிலுள்ள இந்த ஜனங்களுக்காக நீ விண்ணப்பம் செய்யவேண்டாம். அவர்களுக்காக நீ ஜெபிக்கவும், கெஞ்சவும் வேண்டாம், அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று என்னிடம் மன்றாடவேண்டாம். அவர்களுக்கான உனது ஜெபத்தை நான் கேட்கமாட்டேன். 17 யூதாவின் நகரங்களில் அந்த ஜனங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நீ பார்க்கிறாய் என்பதை நான் அறிவேன். எருசலேம் நகரத்து வீதிகளில் அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உன்னால் பார்க்க முடியும். 18 யூதாவிலுள்ள ஜனங்கள் செய்துகொண்டிருப்பது இதுதான். பிள்ளைகள் மரக்கட்டைகளைச் சேகரிக்கின்றனர். தந்தைகள் நெருப்புக்காக அந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். பெண்கள், வானராக்கினிக்கும் பலியிட அப்பங்களைச் சுடுகிறார்கள். அந்நிய தெய்வங்களை தொழுவதற்காக யூதா ஜனங்கள் பானங்களின் காணிக்கைகளை ஊற்றுகின்றனர். எனக்குக் கோபம் ஏற்படும்படி அவர்கள் இதனைச் செய்கின்றனர். 19 ஆனால் யூதா ஜனங்கள் உண்மையிலேயே என்னைப் புண்படுத்தவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அவர்கள் தங்களையே புண்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்கே அவமானத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள்.” 20 எனவே கர்த்தர் அவர்களிடம், “நான் இந்த இடத்துக்கு எதிராக எனது கோபத்தைக் காட்டுவேன். நான் ஜனங்களையும் மிருகங்களையும் தண்டிப்பேன். நான் வெளியிலுள்ள மரங்களையும் தரையிலுள்ள விளைச்சலையும் தண்டிப்பேன். எனது கோபம் சூடான நெருப்பைப் போன்றிருக்கும். எவராலும் அதனைத் தடுக்கமுடியாது” என்று கூறுகிறார்.
கர்த்தர் பலிகளைவிட கீழ்ப்படிதலையே விரும்புகிறார்
21 இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “போங்கள், உங்கள் விருப்பப்படி எத்தனை மிகுதியாகத் தகன பலிகளையும், மற்ற பலிகளையும் செலுத்த முடியுமோ செலுத்துங்கள். அப்பலிகளின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள். 22 எகிப்துக்கு வெளியே உங்களது முற்பிதாக்களைக் கொண்டுவந்தேன். நான் அவர்களோடு பேசினேன், ஆனால் தகனபலிகள் மற்றும் மற்ற பலிகள் பற்றி எந்தக் கட்டளையையும் இடவில்லை. 23 நான் இந்தக் கட்டளையை மட்டும் கொடுத்தேன். ‘எனக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது நான் உங்களது தேவனாக இருப்பேன். நீங்கள் என் ஜனமாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட அனைத்தும் செய்யுங்கள். உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.’
24 “ஆனால் உங்களது முற்பிதாக்கள் என்னை கவனிக்கவில்லை. அவர்கள் நான் சொன்னதில் கவனம் வைக்கவில்லை, அவர்கள் முரட்டாட்டமாக இருந்தார்கள். அவர்கள் விரும்பியதையே செய்தார்கள். அவர்கள் நல்லவர்கள் ஆகவில்லை. அவர்கள் மேலும் தீயவர்கள் ஆனார்கள். அவர்கள் முன்னுக்கு வராமல் பின்னுக்குப் போனார்கள். 25 உங்களது முற்பிதாக்கள் எகிப்தை விட்டு விலகிய நாள் முதல், இன்றுவரை நான் உங்களிடம் எனது சேவகர்களை அனுப்பியிருக்கிறேன். தீர்க்கதரிசிகளே எனது சேவகர்கள். நான் அவர்களை மீண்டும், மீண்டும் உங்களிடம் அனுப்பினேன். 26 ஆனால், உங்களது முற்பிதாக்கள் நான் சொன்னதற்கு செவிசாய்க்கவில்லை. அவர்கள் என்மீது கவனம் வைக்கவில்லை. அவர்கள் மிகுந்த பிடிவாதமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் தம் தந்தையரைவிட மோசமான தீமைகளைச் செய்தனர்.
27 “எரேமியா! நீ யூதா ஜனங்களிடம் இவற்றை எல்லாம் சொல்லுவாய். ஆனால் அவர்கள் நீ சொல்வதை கவனிக்கமாட்டார்கள்! நீ அவர்களை அழைப்பாய். ஆனால் அவர்கள் பதில் சொல்லமாட்டார்கள். 28 எனவே, நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும். நமது தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியாத தேசம் இதுதான். தேவனுடைய போதனைகளை அதன் ஜனங்கள் கவனிக்கவில்லை, இந்த ஜனங்கள் உண்மையான போதனைகளை அறியவில்லை.
கொலையின் பள்ளத்தாக்கு
29 “எரேமியா, உனது தலைமுடியை வெட்டி எறிந்துபோடு. பாறையின் உச்சிக்குப் போய் அழு. ஏனென்றால், கர்த்தர் இந்த தலைமுறை ஜனங்களை மறுத்திருக்கிறார். இந்த ஜனங்களுக்கு கர்த்தர் தனது முதுகைத் திருப்பிக்கொண்டார். கோபத்துடன் அவர்களைத் தண்டிப்பார். 30 இவற்றைச் செய். ஏனென்றால், யூதா ஜனங்கள் தீமை செய்வதை நான் பார்த்திருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அவர்கள் தம் விக்கிரகங்களை அமைத்திருக்கிறார்கள், அதனை எனது நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். அவற்றை நான் வெறுக்கிறேன். அவர்கள் எனது வீட்டை ‘தீட்டு’ செய்திருக்கிறார்கள்! 31 யூதா ஜனங்கள், இன்னோமின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டியிருக்கிறார்கள். அந்த இடங்களில் அவர்கள் தமது மகன்களையும், மகள்களையும் கொன்று, பலியாக எரித்தார்கள். இவற்றைச் செய்யுமாறு நான் கட்டளையிடவில்லை. இவை போன்றவற்றை நான் மனதிலே நினைத்துப் பார்க்கவுமில்லை. 32 எனவே, நான் உன்னை எச்சரிக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஜனங்கள் இந்த இடத்தை தொப்பேத் என்னும் இன்னோமின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்போவதில்லை. அவர்கள் இதனை ‘சங்காரப் பள்ளத்தாக்கு’ என்று அழைப்பார்கள். அவர்கள் இதற்கு இந்தப் பெயரை இடுவார்கள். ஏனென்றால் மரித்தவர்களை அவர்கள் தோப்பேத்தில் இனி புதைக்க இடமில்லை என்று கூறுமளவுக்குப் புதைப்பார்கள். 33 பிறகு, மரித்தவர் களின் உடல்கள் பூமிக்கு மேலே கிடக்கும், வானத்து பறவைகளுக்கு உணவாகும். அந்த ஜனங்களின் உடல்களைக் காட்டு மிருகங்கள் உண்ணும். அந்தப் பறவைகள் அல்லது மிருகங்களைத் துரத்திட அங்கு எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள். 34 எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் நகரங்களிலும் உள்ள, சந்தோஷம் மகிழ்ச்சி ஆகியவற்றின் ஒலிகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவேன். எருசலேம் அல்லது யூதாவில் இனிமேல் மணவாளன் மற்றும் மணவாட்டியின் சத்தமும் இனிமேல் இருக்காது. இந்த நாடு ஒரு பாழடைந்த பாலைவனமாகும்.”
8 கர்த்தர் சொல்லுகிறதாவது: “அந்தக் காலத்தில் மனிதர்கள் யூதாவின் அரசர்கள் மற்றும் முக்கிய ஆள்வோர்களின் எலும்புகளை அவர்களின் கல்லறையிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். ஆசாரியர்கள், மற்றும் தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும், அவர்களின் கல்லறையிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். எருசலேமின் அனைத்து ஜனங்களின் எலும்புகளையும், அவர்களின் கல்லறைகளிலிருந்து அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். 2 அவர்கள் அந்த எலும்புகளை தரையின் மீது சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுக்கு அடியில் பரப்பி வைப்பார்கள். எருசலேம் ஜனங்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை நேசித்து, பின்தொடர்ந்து, குறி கேட்டு தொழுதுகொண்டனர். எவரும் அந்த எலும்புகளைச் சேகரித்து மீண்டும் அடக்கம் செய்யமாட்டார்கள். எனவே, அந்த ஜனங்களின் எலும்புகள், பூமியின் மேல் எருவைப் போன்று எறியப்படும்.
3 “யூதாவின் பொல்லாத ஜனங்களை நான் கட்டாயப்படுத்தி அவர்களது வீட்டை விட்டும் நாட்டை விட்டும் போகும்படிச் செய்வேன். ஜனங்கள் அந்நிய நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். போரில் கொல்லப்படாத யூதா ஜனங்களில் சிலர் தாம் கொல்லப்பட விரும்புவார்கள்” இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது.
பாவமும் தண்டனையும்
4 “எரேமியா! யூதா ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியதாவது: ‘கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“‘ஒரு மனிதன் கீழே விழுந்தால்
மீண்டும் அவன் எழுவான் என்பதை நீ அறிவாய்.
ஒரு மனிதன் தவறான வழியில் போனால்,
அவன் திரும்பி வருவான்.
5 யூதா ஜனங்கள் தவறான வழியில் சென்றனர்.
(வாழ்ந்தனர்) ஆனால் எருசலேமிலுள்ள அந்த ஜனங்கள் ஏன் தவறான வழியில் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கின்றனர்?
அவர்கள் தங்கள் சொந்தப் பொய்யையே நம்புகின்றனர்.
அவர்கள் திரும்பி என்னிடம் வர மறுக்கின்றனர்.
6 நான் அவர்களை மிகக் கவனமாகக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் எது சரியென்று அவர்கள் சொல்கிறதில்லை.
ஜனங்கள் தம் பாவங்களுக்காக வருத்தப்படுவதில்லை.
அவர்கள் தாங்கள் செய்தது தீயச் செயல்கள் என்று எண்ணுவதில்லை;
ஜனங்கள் எண்ணிப் பார்க்காமலேயே செயல்களைச் செய்கிறார்கள்.
போரில் ஓடும் குதிரைகளைப் போன்று அவர்கள் இருக்கிறார்கள்.
7 வானத்து பறவைகளுக்குக் கூடச் செயல்களைச் செய்வதற்கான
சரியான நேரம் தெரியும்.
நாரைகள், புறாக்கள், தகைவிலான் குருவிகள் ஆகியவற்றுக்கு
புதிய கூட்டிற்குப் பறந்து செல்லவேண்டிய நேரம் தெரியும்.
ஆனால், எனது ஜனங்களுக்குத் தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார் என்பது தெரியாது.
8 “‘“எங்களிடம் கர்த்தருடைய போதனைகள் இருக்கிறது.
எனவே, நாங்கள் ஞானிகள்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் அது உண்மையன்று, ஏனென்றால், வேதபாரகர்கள் தம் எழுத்தாணிகளால் பொய்யுரைத்தனர்.
9 கர்த்தருடைய போதனைகளை, அந்த “ஞானமுள்ள ஜனங்கள்” கவனிக்க மறுத்துவிட்டனர்.
எனவே உண்மையில் அவர்கள் ஞானம் உடையவர்கள் அல்ல.
அந்த “ஞானமுள்ள ஜனங்கள்” பிடிபட்டுள்ளனர்.
அவர்கள் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்துள்ளனர்.
10 எனவே, நான் அவர்களது மனைவியரை மற்றவர்களுக்குக் கொடுப்பேன்,
நான் அவர்களது வயல்களைப் புதிய உரிமையாளர்களுக்குக் கொடுப்பேன்.
இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் மேலும் மேலும் பணத்தை விரும்புகின்றனர்.
முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை, அவர்கள் அனைவரும் அதனை விரும்புகின்றனர்.
தீர்க்கதரிசிகளிலிருந்து ஆசாரியர்கள் வரை அனைவரும் பொய் சொல்லுகின்றனர்.
11 எனது ஜனங்கள் மிக மோசமாகக் காயப்பட்டிருக்கிறார்கள்.
தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், அந்தக் காயங்களுக்குக் கட்டுப்போட வேண்டும்.
ஆனால் சிறு காயங்களுக்குச் சிகிச்சை செய்வதுபோன்று அவர்கள் சிகிச்சை செய்கின்றனர்.
“இது சரியாக இருக்கிறது,” என்று கூறுகிறார்கள்.
ஆனால் அது சரியாகவில்லை.
12 அவர்கள் தாம் செய்கிற தீயச் செயல்களுக்காக அவமானப்பட வேண்டும்.
ஆனால் அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை.
அவர்கள் தங்களது பாவங்களுக்காக வெட்கங்கொள்ள அறியாதவர்கள்.
எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
நான் ஜனங்களைத் தண்டிக்கும்போது அவர்கள் தரையில் வீசி எறியப்படுவார்கள்’”
கர்த்தர் இவற்றையெல்லாம் சொன்னார்.
13 “‘நான் அவர்களுடைய பழங்களையும் விளைச் சலையும் எடுத்துக்கொள்வேன்.
எனவே, அங்கே அறுவடை இருக்காது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
திராட்சைத் தோட்டத்தில் பழங்கள் இராது.
அத்திமரத்தில் அத்திப்பழங்கள் இராது.
இலைகள் கூட காய்ந்து உதிர்ந்துவிடும்.
நான் அவர்களுக்குக் கொடுத்தப் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள்வேன்.’”
14 “எதற்காக நாம் இங்கே சும்மா உட்கார்ந்து இருக்கிறோம்.
வாருங்கள், பலமான நகரங்களுக்கு ஓடுவோம்.
நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரிக்க செய்வாரேயானால், நாம் அங்கேயே மரித்துப்போவோம்.
நாம் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்”
எனவே, தேவனாகிய கர்த்தர் நாம் குடிப்பதற்கு விஷமுள்ள தண்ணீரைக் கொடுத்தார்.
15 நாம் சமாதானம் அடைவோம் என்று நம்பினோம்.
ஆனால் நன்மை எதுவும் வரவில்லை.
அவர் நம்மை மன்னிப்பார் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் பேரழிவு மாத்திரமே வந்தது.
16 தாணின் கோத்திரத்தைச் சேர்ந்த நாட்டிலிருந்து
பகைவர்களின் குதிரைகளது மூச்சு சத்தம் கேட்கிறது.
அவர்களது குதிரைகளின் கனைப்பொலியால் பூமி அதிர்கின்றது.
அவர்கள் இந்த நாட்டையும் இதிலுள்ள அனைத்தையும்
அழிக்க வந்துள்ளனர்.
அவர்கள் இந்த நகரத்தையும்
இதில் வாழும் ஜனங்களையும் அழிக்க வந்திருக்கிறார்கள்.
17 “யூதாவின் ஜனங்களே! உங்களைத் தாக்க விஷமுள்ள பாம்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
அந்தப் பாம்புகளைக் கட்டுப்படுத்த முடியாது.
அந்தப் பாம்புகள் உங்களைக் கடிக்கும்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 “தேவனே, நான் மிகவும் வருத்தத்தோடும், பெருந்துயரத்தோடும் இருக்கிறேன்.
19 எனது ஜனங்கள் சொல்வதை கேளும்”
இந்த நாட்டின் எல்லா இடங்களிலும் ஜனங்கள் உதவிக்காக அழுதுக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள், “சீயோனில் கர்த்தர் இன்னும் இருக்கிறாரா?
சீயோனின் அரசர் இன்னும் இருக்கிறாரா?”
என்று கூறுகிறார்கள்.
ஆனால் தேவன் கூறுகிறார், “யூதாவின் ஜனங்கள் அவர்களது பயனற்ற அந்நிய விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர்.
அது என்னைக் கோபங்கொள்ளச் செய்தது!
அவர்கள் எதற்காக செய்தார்கள்?” என்று கேட்டார்.
20 ஜனங்கள் சொல்கிறார்கள்,
“அறுவடை காலம் முடிந்துவிட்டது, கோடைகாலம் போய்விட்டது, நாம் இன்னும் காப்பாற்றப்படவில்லை.”
21 எனது ஜனங்கள் காயப்பட்டிருக்கிறார்கள்.
எனவே நானும் காயப்பட்டிருக்கிறேன்.
நான் பேசுவதற்கு மிகவும் வருந்துகிறேன்.
22 உறுதியாக கீலேயாத்தில் கொஞ்சம் மருந்து உள்ளது.
உறுதியாக கீலேயாத்தில் ஒரு மருத்துவர் இருக்கிறார்.
எனவே, ஏன்? எனது ஜனங்களின் காயங்கள் குணமாகவில்லை?
மற்றவர்களோடு வாழ்வதற்கான சில விதிமுறைகள்
5 முதியோர்களிடம் கோபமாகப் பேசாதே. ஆனால் அவர்களைத் தந்தையாக மதித்து நடத்து. இளைஞர்களை சகோதரர்களாக மதித்து நடத்து. 2 முதிய பெண்களைத் தாயாகக் கருது. வயது குறைந்த பெண்களை சகோதரிகளாக நினை. அவர்களை எப்பொழுதும் நல்ல முறையில் நடத்து.
3 உண்மையிலேயே தனியாக உள்ள விதவைகளைப் பாதுகாத்து மதித்து நட. 4 ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், இவர்கள் தம் பெற்றோர்களுக்கு உதவுவதன் மூலம் தன் குடும்பத்தை மதிக்க வேண்டும் என்பதை முதலில் கற்கவேண்டும். இவர்கள் இதைச் செய்தால் பெற்றோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் நன்றிக் கடன் செலுத்தியவர்களாவார்கள். இதையே தேவன் ஒப்புக்கொள்கிறார். 5 விதவையாக இருக்கும் ஒருத்தி தேவனைத் தன் ஒரே விசுவாசமாகக்கொண்டிருப்பாள். இரவு பகல் என அவள் எப்பொழுதும் பிரார்த்தனை செய்வாள். தேவனிடம் உதவியை வேண்டுவாள். 6 தனக்கு சந்தோஷம் தரும் செயல்களைச் செய்வதிலேயே ஒரு விதவை தன் வாழ்வை கழித்தாளெனில் உயிரோடு இருந்தாலும் இறந்தவளுக்குச் சமமாவாள். 7 அங்குள்ள விசுவாசிகளிடம் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும்படி கூறு. அதனால் மற்றவர்கள் அவர்கள் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்று கூறமாட்டார்கள். 8 ஒருவன் தன் சொந்த மக்களிடமும் அக்கறை காட்ட வேண்டும். அதைவிட முக்கியமாக அவன் தன் சொந்தக் குடும்பத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒருவன் இதைச் செய்யாவிட்டால் பிறகு அவன் உண்மையான விசுவாசத்தைக் கைவிட்டவன் ஆகிறான். அவன் விசுவாசம் அற்றவனை விட மோசமானவனாகிறான்.
9 உன் விதவைகள் பட்டியலில் சேர்க்கப்பட, விதவையானவளுக்கு அறுபது வயதுக்கு மேலாகி இருக்கவேண்டும். அவள் தன் கணவனுக்கு உண்மையானவளாக இருந்திருக்க வேண்டும். 10 நல்ல காரியங்களைச் செய்யும் ஒரு பெண் என அறியப்பட்டிருக்க வேண்டும். அதாவது பிள்ளைகளை வளர்த்தல், வீட்டில் அந்நியர்களை உபசரித்தல், தூயவர்களின் கால்களைக் கழுவுதல், துன்பப்படுகிறவர்களுக்குத் துணை புரிதல் போன்று தன் வாழ்க்கை முழுவதும் பலவித நன்மைகளைச் செய்தல் வேண்டும்.
11 அந்தப் பட்டியலில் இளம் விதவைகளைச் சேர்க்காதீர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குத் தம்மை ஒப்படைத்தாலும், பலமான காம ஆசைகளால் அவரை விட்டு வெளியே இழுக்கப்படுவர். அவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்பலாம். 12 இதற்காகவே அவர்கள் குற்றவாளியாவார்கள். தாங்கள் முதலில் வாக்குறுதி கொடுத்தபடி நடந்துகொள்ளாததால் குற்றவாளியாவார்கள். 13 இவர்கள் வீடு வீடாகப் போய்த் தங்கள் நேரத்தை வீணாகப் போக்குவார்கள். அது மட்டும் அல்ல, வீண் பேச்சு பேசுவார்கள். மேலும் மற்ற மனிதர்களின் வாழ்க்கைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கை பற்றிய வதந்திகளையும், எதைச் சொல்லக் கூடாதோ அவற்றையுமே சொல்வார்கள். 14 ஆகையால் இளம் விதவைகள் மீண்டும் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, வீட்டைக் கவனித்துக்கொள்வார்களாக. இதுவே அவர்கள் செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த வழியில் அவர்கள் எதிரிக்கு விமர்சிக்கும் வாய்ப்பை கொடுக்கமாட்டார்கள். 15 ஆனால், ஏற்கெனவே சில இளம் விதவைகள் சாத்தானைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள்.
16 விசுவாசமுள்ள ஒரு பெண்ணின் குடும்பத்தில் எவரேனும் விதவைகள் இருந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என உதவிகளுக்காக சபையில் சென்று தொந்தரவு செய்யக் கூடாது. அப்பொழுது குடும்பமே அற்ற விதவைகளைக் கவனிக்கும் பொறுப்பை மட்டுமே சபை ஏற்றுக்கொள்ள இயலும்.
மூப்பர்களைப்பற்றியும் பிற காரியங்களைப்பற்றியும் இன்னும் சில விஷயங்கள்
17 சபைகளை நன்றாக நடத்திச்செல்லும் மூப்பர்கள் தக்க கௌரவம் பெற வேண்டும். பேசுவதன் மூலமும், போதிப்பதன்மூலம் உழைப்பவர்களாய் இருப்பவர்களே அத்தகு கௌரவத்தைப் பெறுவர். 18 ஏனென்றால், “பிணையல் அடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே. அது உண்ணட்டும்” [a]என்று வேதவாக்கியம் கூறுகிறது. “உழைக்கிறவனுக்கு அதற்கேற்ற கூலி கொடுக்கப்படவேண்டும்” [b]என்றும் கூறுகிறது.
19 மூப்பர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கவனிக்காதே, இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் இருந்தால் அதை ஏற்றுக்கொள். 20 பாவம் செய்பவர்களைக் கண்டிக்க வேண்டும். அதுவும் சபைக்கு முன்னால் மற்றவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும்படி கண்டிக்க வேண்டும்.
21 தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட தேவ தூதர்களுக்கும் முன்பாக இவற்றை நீ செய்யவேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகிறேன். பாரபட்சத்தோடு ஒன்றும் செய்யாதே. அதைப்பற்றி ஒவ்வொன்றையும் தெரிந்துகொள்ளும் முன்பு முடிவு செய்யாதே.
22 எவர் மீதும் கைகள் வைக்கும் முன்பு எச்சரிக்கையோடு யோசி. மற்றவர்கள் செய்யும் பாவங்களில் பங்குகொள்ள வேண்டாம். உன்னைச் சுத்தம் உள்ளவனாகக் காத்துக்கொள்.
23 தீமோத்தேயுவே! நீ இதுவரை தண்ணீரையே குடித்து வந்தாய். அதை நிறுத்தி கொஞ்சம் திராட்சை இரசமும் குடி. அது உன் வயிற்றுக்கு நல்லது. உனக்கு அடிக்கடி வரும் வியாதியில் உனக்கு இது உதவக் கூடும்.
24 சிலரது பாவங்கள் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியும்படியாக இருக்கும். அவர்கள் நியாயம்தீர்க்கப்படுவார்கள் என்பதை அவர்கள் பாவங்களே காட்டுகின்றன. ஆனால் சிலரது பாவங்களோ தாமதமாகவே வெளிப்படும். 25 அவ்வாறே சிலரது நற்செயல்களும் வெளிப்படையாகவே இருக்கும். அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்க முடியாது.
2008 by World Bible Translation Center