Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எரேமியா 1-2

இவை எரேமியாவின் செய்திகள். இல்க்கியா என்ற பெயருள்ள மனிதரின் மகன் எரேமியா. ஆனதோத் என்ற நகரத்தில் வாழ்ந்த ஆசாரியரின் குடும்பத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அந்நகரமானது பென்யமீனின் கோத்திரத்தினருக்குரிய நாட்டில் இருந்தது. கர்த்தர், யூதா நாட்டின் அரசனாக யோசியா இருந்தபோது அந்நாட்களில் எரேமியாவுடன் பேசத்தொடங்கினார். யோசியா, ஆமோன் என்ற பெயருடைய மனிதரின் மகனாகும். கர்த்தர், யோசியாவின் ஆட்சியில் 13வது ஆண்டில் [a] எரேமியாவுடன் பேச ஆரம்பித்தார். யூதாவின் அரசனாக யோயாக்கீம் இருந்தபோதும் அந்தக் காலத்தில் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். யோயாக்கீம் யோசியாவின் மகன், யூதாவின் அரசனாக சிதேக்கியா இருந்த பதினோறு ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். சிதேக்கியாவும் யோசியாவின் மகனாக இருந்தான். சிதேக்கியா அரசனாக இருந்த பதினொன்றாவது ஆண்டின் ஐந்தாவது மாதத்தில் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் சிறையெடுக்கப்பட்டனர்.

தேவன் எரேமியாவை அழைக்கிறார்

கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர்,

“உனது தாயின் கருவில் நீ உருவாக்கப்படுவதற்கு முன்பே
    நான் உன்னை அறிவேன்.
நீ பிறப்பதற்கு முன்பு
    உன்னதமான வேலைக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
    நாடுகளுக்குத் தீர்க்கதரிசியாக நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார்.

பிறகு எரேமியா, “ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு சிறுவன்” என்றான்.

ஆனால் கர்த்தர் என்னிடம்,

“‘நீ சிறுவன்’ என்றுச் சொல்லாதே.
    நான் அனுப்புகிற எல்லா இடங்களுக்கும் நீ போகவேண்டும், நான் சொல்லுகிறவற்றை எல்லாம் நீ பேசவேண்டும்” என்றார்.
“எவருக்கும் பயப்படவேண்டாம், நான் உன்னோடு இருக்கிறேன்.
    நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

பிறகு கர்த்தர் தனது கரத்தை நீட்டி எனது வாயைத் தொட்டார், கர்த்தர் என்னிடம்,

“எரேமியா, நான் எனது வார்த்தைகளை உனது வாய்க்குள் வைக்கிறேன்.
10 இன்று நான் உன்னை நாடுகளுக்கும், அரசுகளுக்கும் பொறுப்பாளியாக நியமித்திருக்கிறேன்.
    நீ வேரோடு பிடுங்கவும், இடிக்கவும்,
    அழிக்கவும், கவிழ்க்கவும்,
    கட்டவும், நாட்டவும் செய்வாய்” என்றார்.

இரண்டு தரிசனங்கள்

11 மறுபடியும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்றார்.

நான் கர்த்தருக்கு, “நான் வாதுமை மரத்தின் கிளையால் ஆனக் கம்பைப் பார்க்கிறேன்” என்றேன்.

12 கர்த்தர் என்னிடம், “நீ நன்றாகப் பார்த்தாய். நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். உன்னிடம் வரும் எனது வார்த்தைகளை சீக்கிரமாய் நிறைவேற்றுவேன், என்பதை உறுதி செய்கிறேன்” என்றார்.

13 மீண்டும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்றார். “நான் ஒரு பானையில் கொதிக்கிற தண்ணீரைப் பார்க்கிறேன், அந்தப் பானையின் வாய் வடக்கேயிருந்து பார்க்கிறது” என்றேன்.

14 கர்த்தர் என்னிடம், “வடக்கிலிருந்து பயங்கரமான ஒன்று வரும்,
    இந்த நாட்டில் வாழ்கிற அனைத்து ஜனங்களுக்கும் இது ஏற்படும்.
15 மிகக் குறுகிய காலத்தில் நான், வடநாட்டு அரசுகளில் உள்ள அனைத்து ஜனங்களையும் அழைப்பேன்” என்றார்.
இவற்றையெல்லாம் கர்த்தர் சொன்னார்.

“அந்நாடுகளில் உள்ள அரசர்கள் வந்து எருசலேமின் வாசலருகில்
    தங்கள் சிங்காசனங்களை போடுவார்கள்,
அவர்கள் எருசலேமின் நகரச் சுவர்களைத் தாக்குவார்கள்,
    மற்றும் அவர்கள் யூதாவிலுள்ள அனைத்து நகரங்களையும் தாக்குவார்கள்.
16 நான் எனது ஜனங்களுக்கு எதிராக என் தீர்ப்பினை அறிவிப்பேன்.
    அவர்கள் தீயவர்கள், எனவே நான் இவற்றைச் செய்வேன்.
அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருந்தார்கள்.
    எனது ஜனங்கள் என்னை விட்டு விலகினார்கள்.
அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகளைக் கொடுத்தனர்,
    அவர்கள் தமது கைகளால் செய்திருந்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர்.

17 “ஆகவே எரேமியா, தயாராயிரு,
    எழுந்து நில், ஜனங்களோடு பேசு,
நான் உன்னிடம் சொன்னவற்றையெல்லாம் நீ அவர்களுக்குச் சொல்.
    ஜனங்களைப் பார்த்து பயப்படாதே,
நீ ஜனங்களுக்குப் பயந்தால்,
    பிறகு அவர்களுக்கு நீ பயப்படும்படி நல்ல காரணங்களைத் தருவேன்.
18 என்னைப் பொருத்தவரை, இன்று உன்னை
    பாதுகாப்பான நகரத்தைப்போன்று வலிமையானவனாக ஆக்குவேன்,
    இரும்புத் தூண் போலவும்,
வெண்கலச்சுவர் போலவும் செய்வேன்.
    தேசத்திலுள்ள எல்லாவற்றுக்கும் முன்பும்,
    யூதா நாட்டிலுள்ள அரசர்களுக்கு முன்பும்,
    யூதாவின் தலைவர்களுக்கு முன்பும்,
    யூதாவின் ஆசாரியர்களுக்கு முன்பும்,
    யூதாநாட்டின் ஜனங்களுக்கு முன்பும் நிற்க முடிந்த ஒருவனாக ஆவாய்.
19 அந்த ஜனங்கள் அனைவரும் உனக்கு எதிராகப் போரிடுவார்கள்,
    ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள்.
ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன்,
    நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

யூதா உண்மையாக இல்லை

கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி அவர், “எரேமியா, போ. எருசலேம் ஜனங்களிடம் பேசு, அவர்களிடம்,

“நீ இளைய நாடாக இருந்த காலத்தில் எனக்கு உண்மை உள்ளவளாக இருந்தாய்,
    இளைய மணமகளைப் போன்று, என்னைப் பின்பற்றினாய்.
வனாந்தரத்தின் வழியாக என்னைப் பின்பற்றினீர்கள்;
    விவசாயத்திற்குப் பயன்படுத்தாத நிலத்தின் வழியாக என்னைப் பின்தொடர்ந்தீர்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கான பரிசுத்த அன்பளிப்பாக இருந்தனர்.
    அவர்கள் கர்த்தரால் சேகரிக்கப்பட்ட முதல்கனியாக இருந்தனர்.
அவர்கள் காயப்படுத்த முயலும் எவரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படுவார்கள்.
    அத்தீயவர்களுக்குக் கெட்டவை ஏற்படும் என்று சொல்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.

யாக்கோபின் குடும்பமே கர்த்தருடைய வார்த்தையைக் கேள்,
    இஸ்ரவேலின் கோத்திரங்களே கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

கர்த்தர் சொல்லுகிறது இதுதான்:
“நான், உங்கள் முற்பிதாக்களிடம் நீதியுடன் இல்லை என நினைக்கிறீர்களா?
    அதனால்தான் அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்களா?
உங்கள் முற்பிதாக்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர்.
    அவர்கள், தாங்களே உதவாக்கரைகள் ஆனார்கள்.
உங்கள் முற்பிதாக்கள், ‘கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தார்,
    கர்த்தர் எங்களை வனாந்திரத்தில் வழிநடத்தினார்.
கர்த்தர் எங்களை வறண்ட பாறை நிலத்தின் வழியாக நடத்தினார்.
கர்த்தர் எங்களை இருண்ட ஆபத்தான நாடுகள் வழியாக நடத்தினார்,
    ஜனங்கள் எவரும் அங்கு இதற்குமுன்பு வாழவில்லை.
    ஜனங்கள் அவ்வழியாகப் பயணம் செய்ததுமில்லை,
ஆனால் கர்த்தர் எங்களை அந்த தேசத்தின் வழியாக நடத்தி வந்தார்;
    எனவே, இப்போது அவர் எங்கே இருக்கிறார்?’” என்று சொல்லவில்லை.

கர்த்தர் கூறுகிறார்: “நான் உங்களை நல்ல நாட்டிற்கு கொண்டுவந்தேன்,
    பல நன்மைகள் நிறைந்த ஒரு நாட்டிற்கு கொண்டுவந்தேன்.
நான் இதனைச் செய்தேன், எனவே நீ அங்கு வளர்ந்த பழங்கள் மற்றும் அறுவடைகளை உண்ணமுடியும்,
    ஆனால் நீங்கள் என் நாட்டை ‘அசுத்தம்’ மட்டுமே செய்தீர்கள்.
நான் அந்த நல்ல நாட்டை உங்களுக்குக் கொடுத்தேன்,
    ஆனால் நீங்கள் அதனை தீய இடமாகச் செய்தீர்கள்.

“‘கர்த்தர் எங்கே?’
    என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை,
சட்டத்தை அறிந்தவர்கள் என்னை அறிய விரும்பவில்லை,
    இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்;
தீர்க்கதரிசிகள் பாகால் என்னும் பொய்த் தெய்வம் பெயரால் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
    அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டார்கள்.”

எனவே கர்த்தர் சொல்லுகிறதாவது: “இப்பொழுது நான் மீண்டும் உன்னைக் குற்றம்சாட்டுவேன்,
    நான் உனது பேரப் பிள்ளைகளையும் குற்றம்சாட்டுவேன் என்று சொல்லுகிறார்.
10 கடலைக் கடந்து கித்திமின் தீவுகளுக்குப் போ.
    கேதாருக்கு யாராவது ஒருவனை அனுப்பு,
மிகக் கவனமாகப் பார்,
    எவராவது இதுபோல செய்திருக்கிறார்களா, என்று பார்.
11 எந்த நாட்டவர்களாவது எப்போதாவது புதிய தெய்வங்களை தொழுதுகொள்ள
    தங்கள் பழைய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நிறுத்தினார்களா?
அவர்களின் தெய்வங்கள், தெய்வங்களே அல்ல!
ஆனால், என் ஜனங்கள், தங்கள் மகிமைமிக்க தேவனை ஆராதிப்பதைவிட்டு,
    எதற்கும் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.

12 “வானங்களே, நடந்திருக்கும் இவற்றின் நிமித்தம்
    திகைப்பால் வியப்படைந்து பெரும் பயத்தால் நடுங்குங்கள்!”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
13 “எனது ஜனங்கள் இரு தீயச்செயல்களைச் செய்திருக்கின்றனர்;
    அவர்கள் என்னிடமிருந்து விலகினார்கள்,
    (நான் உயிருள்ள தண்ணீரின் ஊற்றாக இருக்கிறேன்).
    அவர்கள் தங்களுக்குரிய தண்ணீர்க் குழிகளைத் தோண்டினார்கள்.
    (அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பினார்கள்).
ஆனால், அவர்களுடைய தண்ணீர்க்குழிகள் உடைந்தன,
    அத்தொட்டிகளில் தண்ணீர் தங்குவதில்லை.

14 “இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாக மாறினார்களா?
    அடிமையாகப் பிறந்த மனிதனைப்போன்று இருந்தார்களா?
    இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து செல்வத்தை ஏன் ஜனங்கள் எடுத்துக்கொண்டனர்?
15 இஸ்ரவேலை நோக்கி இளஞ்சிங்கங்கள் (பகைவர்கள்) கெர்ச்சிக்கின்றன,
    சிங்கங்கள் முழங்குகின்றன, இஸ்ரவேல் தேசத்தை சிங்கங்கள் அழித்திருக்கின்றன,
இஸ்ரவேல் நகரங்கள் எரிந்திருக்கின்றன,
    அவர்களில் எவரும் மீதமில்லை.
16 நோப், தகபானேஸ் எனும் நகரங்களின் ஜனங்கள்
    உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
17 இந்த தொந்தரவு உனது சொந்தக் குற்றம்!
    உங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்வழியில் நடத்தினார்,
    ஆனால், அவரிடமிருந்து நீங்கள் விலகினீர்கள்.
18 யூத ஜனங்களே, இதை நினையுங்கள்:
    எகிப்துக்குப் போக இது உதவுமா?
    நைல் நதியில் தண்ணீர் குடிக்க இது உதவுமா? இல்லை!
    அசீரியாவிற்குச் செல்ல இது உதவுமா?
    ஐபிராத்து ஆற்று தண்ணீரைக் குடிக்க இது உதவுமா? இல்லை!
19 நீங்கள் தீயவற்றைச் செய்தீர்கள்,
    அத்தீயவை உங்களுக்குத் தண்டனையைமட்டும் கொண்டு வரும். துன்பம் உங்களுக்கு வரும்.
அத்துன்பம் உனக்குப் பாடத்தைக் கற்பிக்கும்.
    இதைப்பற்றி சிந்தி!
பிறகு உன் தேவனிடமிருந்து விலகுவது எவ்வளவு கெட்டது என்பதை நீ புரிந்துகொள்வாய்;
    என்னை மதிக்காததும் எனக்குப் பயப்படாததும் தவறு!”
இச்செய்தி எனது ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தது.
20 “யூதாவே, நீண்ட காலத்திற்கு முன்பு உன் நுகத்தை எறிந்தாய்,
    நீ கயிறுகளை அறுத்து எறிந்தாய், (அதனை உன்னைக் கட்டுப்படுத்த வைத்திருந்தேன்) ‘நான் உனக்கு சேவை செய்ய மாட்டேன்!’ என்று நீ சொன்னாய்.
நீ வேசியைப்போன்று
    மலைகளின் மேலும் ஒவ்வொரு பச்சையான மரங்களின் கீழும் அலைந்தாய்.
21 யூதாவே, நான் உன்னைச் சிறப்பான திராட்சையைப்போன்று நட்டேன்.
    நீங்கள் அனைவரும் நல்ல விதைகளைப் போன்றிருந்தீர்கள்,
நீங்கள் தீய பழத்தைக்கொடுக்கும் வேறுபட்ட திராட்சையாக எப்படி மாறினீர்கள்?
22 நீ உன்னை உவர்மண்ணால் கழுவினாலும்,
    நீ மிகுதியான சவுக்காரத்தைப் பயன்படுத்தினாலும் நான் உனது குற்றத்தின் கறையைக் காணமுடியும்”
என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
23 “யூதாவே, நீ என்னிடம், ‘நான் தீட்டாகவில்லை,
    நான் பாகால் விக்கிரகங்களை தொழுதுகொள்ளவில்லை’ என்று எப்படிக் கூறமுடியும்?
பள்ளத்தாக்குகளில் நீ செய்தவற்றைப்பற்றி எண்ணு,
    நீ இடத்திற்கு இடம் வேகமாக ஓடுகிற பெண் ஒட்டகத்தைப் போன்றவள்.
24 நீ வனாந்தரத்திலே வாழ்கிற ஒரு கழுதையைப் போன்றவன்.
    அது காமத்தின்போது மோப்பம் பிடிக்கக்கூடியது,
    அது ஆசையோடு இருக்கும்போது, அதன் போக்கை மாற்ற யாராலும் திருப்பிக் கொண்டு வரமுடியாது.
காமத்தின்போது ஒவ்வொரு கழுதையும் தான்விரும்பும் பெண் கழுதையை அடையும்,
    அதனைக் கண்டுபிடிப்பது எளிது.
25 யூதாவே, விக்கிரகங்களின் பின்னால் ஓடுவதைவிடு!
    அந்த தெய்வங்களுக்காகத் தாகமாயிருப்பதை நிறுத்து.
ஆனால் நீ, ‘இதனால் பயனில்லை என்னால் அமைதியாக இருக்கமுடியாது,
    அந்த அந்நிய தெய்வங்களை நான் நேசிக்கிறேன்,
    அவற்றை நான் தொழுதுகொள்ள விரும்புகிறேன்’ என்கிறாய்.

26 “ஒரு திருடன் பிடிபட்டபோது,
    வெட்கப்படுகிறான், அதைப்போன்று, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் வெட்கப்படுகிறார்கள்.
அரசர்களும் தலைவர்களும் வெட்கப்படுகிறார்கள்.
    ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுகிறார்கள்.
27 அந்த ஜனங்கள் மரத்துண்டுகளோடு பேசுகிறார்கள்!
    அவர்கள், ‘நீ என் தந்தை’ என்கிறார்கள்.
அந்த ஜனங்கள் பாறையோடு பேசுகிறார்கள்.
    அந்த ஜனங்கள், ‘நீ எனக்குப் பிறப்பைக் கொடுத்தாய்’ என்றனர்.
அவர்கள் அனைவரும் வெட்கப்படுவார்கள்.
அந்த ஜனங்கள் என்னைப் பார்க்கமாட்டார்கள்.
    அவர்கள் எனக்குத் தம் முதுகைக் காட்டினார்கள்.
ஆனால் யூதாவின் ஜனங்கள் துன்பம் அடையும்போது, அவர்கள் என்னிடம் வந்து,
    ‘எங்களைக் காப்பாற்றும்!’ என்பார்கள்.
28 அந்த விக்கிரகங்கள் வந்து உன்னைக் காப்பாற்றட்டும்! நீங்களாகச் செய்த அந்த விக்கிரகங்கள் எங்கே?
    நீங்கள் துன்பப்படும்போது அந்த விக்கிரகங்கள் வந்து உங்களைக் காப்பாற்றுகிறதா என்று பார்க்கலாம்!
யூதாவே, உனது எண்ணற்ற நகரங்களைப் போன்றே நிறைய விக்கிரகங்களைப் பெற்றுள்ளாய்!

29 “ஏன் என்னோடு நீ வாதாடுகிறாய்?
    நீங்கள் அனைவரும் எனக்கு எதிராக உள்ளீர்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
30 “யூதாவின் ஜனங்களே, நான் உங்களைத் தண்டித்தேன்.
    ஆனால் அது உதவவில்லை.
நீங்கள் தண்டிக்கப்பட்டபோது
    என்னிடம் திரும்பி வரவில்லை.
உங்களிடம் வந்த தீர்க்கதரிசிகளை வாளால் கொன்றீர்கள். நீங்கள் ஆபத்தான சிங்கத்தைப் போன்றவர்கள்.
நீங்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றீர்கள்.”
31 இத்தலைமுறையில் உள்ளவர்களே, கர்த்தருடைய செய்தியில் கவனம் செலுத்துங்கள்!

“இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் வனாந்தரத்தைப்போல் இருந்திருக்கிறேனா?
    நான் அவர்களுக்கு இருண்டதும் பயங்கரமானதுமான நிலமாக இருந்திருக்கிறேனா?
ஏன் என் ஜனங்கள், ‘நாங்கள் எங்கள் வழியில் போக சுதந்தரம் உள்ளவர்கள்.
    கர்த்தாவே, நாங்கள் உம்மிடம் வரமாட்டோம்!’ என்றனர்.
ஏன் அவற்றை அவர்கள் சொன்னார்கள்?
32 ஒரு இளம் பெண்ணால் தன் நகைகளை மறக்க முடியாது.
    ஒரு மணமகள் தனது ஆடைகளை மறக்க முடியாது.
ஆனால் என் ஜனங்கள் பலமுறை என்னை மறந்துவிட்டார்கள், அவைகள் எண்ண முடியாதவை.

33 “யூதாவே, உனக்கு நேசர்களை (பொய்த் தெய்வங்கள்) எவ்வாறு விரட்டிப்பிடிப்பது என்று தெரியும்.
    நீங்கள் உண்மையில் தீமை செய்யக் கற்றிருக்கிறீர்கள்.
34 உங்கள் கைகளில் இரத்தம் இருக்கிறது!
    இது ஏழைகளின் இரத்தம்; அப்பாவிகளின் இரத்தம்.
உங்கள் வீட்டை உடைத்தவர்களை நீ பிடிக்கவில்லை!
    எவ்விதக் காரணமும் இல்லாமல் அவர்களைக் கொன்றாய்!
35 ஆனால் இன்றும் நீ, ‘நான் அப்பாவி.
    தேவனுக்கு என்மீது கோபமில்லை’ என்று சொல்லுகிறாய்.
எனவே நானும் உன்னைப் ‘பொய்யன்’ எனக் குற்றம்சாட்டுவேன்.
    ஏனென்றால் நீ, ‘நான் எவ்விதத் தப்பும் செய்யவில்லை’ என்று சொல்லுகிறாய்.
36 உன் மனதை மாற்றிக்கொள்வது உனக்கு மிக எளிதாகலாம்.
    அசீரியா உன்னை அதிருப்திப்படுத்தினான், எனவே அசீரியாவை விட்டு விலகினாய்.
உதவிக்காக எகிப்திடம் போனாய்.
    ஆனால் எகிப்தும் உன்னை அதிருப்திப்படுத்தும்.
37 எனவே நீ இறுதியாக எகிப்தையும் விட்டுப் போய்விடுவாய்.
    உன் முகத்தை வெட்கத்திற்குள் மறைத்துக்கொள்வாய்.
நீ அந்த நாடுகளை நம்பினாய்,
    ஆனால் கர்த்தர் அந்நாடுகளை வெறுத்தார், எனவே அவர்களால் உன் வெற்றிக்கு உதவ முடியாது.

1 தீமோத்தேயு 3

சபையில் தலைவர்கள்

நான் சொல்வதெல்லாம் உண்மையே, மூப்பரின் சேவையை விரும்புகிறவன் நல்ல வேலையைச் செய்வதையே விரும்புகிறான். ஒரு மூப்பன் நல்லவனாகவே இருக்க வேண்டும். அவன் தன்னைக் குற்றம் சாட்டப்படாதவனாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாகவும், சுயக்கட்டுப்பாடும், ஞானமும் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களால் மதிக்கப்படவேண்டும் மக்களை உபசரிப்பவனாக இருக்க வேண்டும். நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். அவன் மது அருந்துபவனாகவும், சண்டையிட விரும்புகிறவனாகவும் இருக்கக் கூடாது. அவன் பொறுமையும், சமாதானமும் உடையவனாக இருக்கவேண்டும். அதோடு அவன் பண ஆசை இல்லாதவனாகவும் இருக்க வேண்டும். அவன் தன் குடும்பத்தில் சிறந்த தலைவனாக இருக்க வேண்டும். அதாவது அவனது பிள்ளைகள் அவனிடம் முழு மரியாதையோடு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தில் நல்லதொரு தலைவனாக இருக்க தெரியாவிட்டால், பிறகு எப்படி அவனால் தேவனுடைய சபைப்பொறுப்பை ஏற்று நடத்த முடியும்?

ஆனால் மூப்பராக வருகிற ஒருவன் புதிதாக விசுவாசம் கொண்டவனாக இருக்கக்கூடாது. இதில் அவன் பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவ்வாறு செய்தால் அவன் தற்பெருமைக்காகத் தண்டிக்கப்படுவான். அது சாத்தான் பெற்ற தண்டனையைப்போன்று இருக்கும். சபையில் இல்லாதவர்களின் மரியாதையையும் பெற்றவனாக மூப்பர் இருக்க வேண்டும். பிறகு அவன் மற்றவர்களால் விமர்சிக்கப்படாமல் இருப்பான். சாத்தானின் தந்திரத்துக்கும் பலியாகாமல் இருப்பான்.

சபையில் உள்ள உதவியாளர்கள்

இதே விதத்திலேயே மக்களின் மரியாதைக்கு உரியவர்களாக சிறப்பு உதவியாளர்களும் இருக்க வேண்டும். அவர்கள் நினைப்பொன்றும் சொல்லொன்றுமாக இல்லாமலும், மதுக்குடியர்களாக இல்லாமலும் இருக்கவேண்டும். மற்றவர்களை ஏமாற்றி செல்வம் சேர்ப்பவர்களாகவும் இருக்கக் கூடாது. அவர்கள், தேவன் நமக்கு வெளிக்காட்டிய உண்மைகளைக் கடைப்பிடிக்கிறவர்களாகவும் சரியெனப்படுவதை மட்டுமே செய்பவர்களாவும் இருக்க வேண்டும். 10 முதலில் நீங்கள் அவர்களைச் சோதனை செய்யுங்கள். அவர்களில் எதுவும் குற்றம் இல்லாவிட்டால் பிறகு அவர்கள் விசேஷ உதவியாளர்களாக சேவைசெய்ய முடியும்.

11 இதைப்போலவே மற்றவர்கள் மதிக்கத்தக்கவர்களாக பெண்கள் இருக்க வேண்டும். பிறர்மேல் அவதூறு பேசாதவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாகவும், எல்லாவற்றிலும் உண்மை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.

12 விசேஷ உதவியாளர்களாக இருப்பவர்கள் ஒரே ஒரு மனைவி உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தம் பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் நல்ல தலைவர்களாக இருக்க வேண்டும். 13 இவ்வாறு நல்ல வழியில் சேவை செய்கிறவர்கள் ஒரு மரியாதைக்குரிய நிலையை அடைவார்கள். இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் மேலும் உறுதி பெறுவார்கள்.

நம் வாழ்க்கையின் இரகசியம்

14 விரைவில் நான் உங்களிடம் வருவேன் என நம்புகிறேன். ஆனால் இப்பொழுது இதை உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். 15 பிறகு நான் விரைவில் வராவிட்டாலும் தேவனுடைய குடும்பத்தில் என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். தேவனுடைய குடும்பம் என்பது ஜீவனுள்ள தேவனின் சபைதான். உண்மையின் தூணாகவும் அடித்தளமாகவும் சபை இருக்கிறது. 16 நம் வழிபாட்டு வாழ்வின் இரகசியம் எந்த சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல் மிக உயர்ந்தது ஆகும்.

“கிறிஸ்து மனித சரீரத்துடன் காட்சியளித்தார்.
அவர் நீதியானவர் என்பதை ஆவியானவர் நிரூபித்தார்.
தேவதூதர்களால் காணப்பட்டார்.
யூதர் அல்லாதவர்களின் தேசங்களில் அவரைப் பற்றிய நற்செய்தி பரப்பப்பட்டது.
உலகெங்கிலுமுள்ள மக்கள் அவர்மேல் விசுவாசம் கொண்டனர்.
அவர் மகிமையுடன் வானுலகிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center