Old/New Testament
தேவனைப்பற்றி அனைவரும் கற்றுக்கொள்வார்கள்
65 கர்த்தர் கூறுகிறார், “என்னிடம் ஆலோசனை கேட்க வராதவர்களுக்கும் நான் உதவினேன். ஜனங்கள் என்னைத் தேடாமல் இருந்தும் கண்டுகொண்டார்கள். எனது பெயரால் அழைக்கப்பட தகுதியற்ற ஜனங்களிடமும் நான் பேசினேன். ‘இதோ நான் இங்கே இருக்கிறேன்’ என்று சொன்னேன்”
2 “எனக்கு எதிராகத் திரும்பிய ஜனங்களை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக நின்றேன். என்னிடம் வருகின்ற ஜனங்களுக்காக நான் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து நன்மையற்ற வழியில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் இதயங்கள் விரும்பிய எல்லாவற்றையும் செய்தனர். 3 அந்த ஜனங்கள் எப்பொழுதும் என் முன்னால் இருந்து என்னைக் கோபமூட்டுகின்றனர். அந்த ஜனங்கள் சிறப்பான தோட்டங்களில் பலி கொடுக்கிறார்கள். நறுமணப் பொருட்களை எரிக்கிறார்கள். 4 அந்த ஜனங்கள் கல்லறைகளுக்கு இடையில் அமர்கிறார்கள். மரித்த ஜனங்களிடமிருந்து செய்தி வரும் என்று காத்திருக்கின்றனர். அவர்கள் மரித்த உடல்களுக்கு இடையில் வாழ்கிறார்கள். அவர்கள் பன்றி இறைச்சியைத் தின்கிறார்கள். அவர்களின் கத்திகளும் கரண்டிகளும் அழுகிய இறைச்சியால் அசுத்தமாயின. 5 ஆனால் அந்த ஜனங்கள் மற்றவர்களிடம், ‘என்னருகில் வராதீர்கள். நான் உன்னைச் சுத்தம் செய்யும்வரை என்னைத் தொடாதீர்கள்,’ என்கின்றனர். அந்த ஜனங்கள் என் கண்களில் படியும் புகையைப்போன்றவர்கள். அவர்களின் நெருப்பு எப்பொழுதும் எரிகிறது.”
இஸ்ரவேல் தண்டிக்கப்படவேண்டும்
6 “பார்! இங்கே, செலுத்தப்பட வேண்டியவற்றுக்கான பத்திரம் உள்ளது. உங்கள் பாவங்களுக்கு நீர் குற்ற உணர்வுகொள்வதாக இந்தப் பத்திரம் காட்டுகிறது. நான், இந்தப் பத்திரத்திற்குரியதைச் செலுத்தும்வரை அமைதியாக இருக்கமாட்டேன். உன்னைத் தண்டிப்பதன் மூலம் இந்தப் பத்திரத்தைச் செலுத்துவேன். 7 உனது பாவங்களும், உனது முன்னோர்களின் பாவங்களும் ஒன்றுபோல்தான் உள்ளன. உங்கள் முற்பிதாக்கள் மலைகளில் நறுமணப் பொருட்களை எரித்தபோது இந்தப் பாவங்களைச் செய்தனர். அம்மலைகளில் அவர்கள் என்னை அவமானப்படுத்தினர். நான் அவர்களை முதலில் தண்டித்தேன். அவர்களுக்கு ஏற்ற தண்டனையே நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.”
8 கர்த்தர் கூறுகிறார், “ஒரு திராட்சைக் குலையில் இரசம் காணப்படும்போது, ஜனங்கள் இரசத்தைப் பிழிந்தெடுப்பார்கள். ஆனால், அவர்கள் திராட்சையை முழுமையாக அழிப்பதில்லை. அவர்கள் இதைச் செய்கின்றனர். ஏனென்றால், அந்தத் திராட்சைகள் மேலும் பயன்படுத்தப்படும். நான் இதனையே என் ஊழியர்களுக்கும் செய்வேன். நான் அவர்களை முழுமையாக அழிக்கமாட்டேன். 9 யாக்கோபின் (இஸ்ரவேல்) ஜனங்களில் சிலரைப் பாதுகாப்பேன். யூதாவிலுள்ள சில ஜனங்கள் எனது மலையைப் பெறுவார்கள். அங்கே என் ஊழியர்கள் வாழ்வார்கள். அங்கே வாழும் ஜனங்களை நான் தேர்ந்தெடுப்பேன். 10 பிறகு, சாரோன் சமவெளி ஆடுகளுக்கான மேய்ச்சல் நிலமாகும். ஆகோரின் பள்ளத்தாக்கு மாடுகளுக்கான ஓய்விடமாகும். இவை அனைத்தும் எனது ஜனங்களுக்காக என்னைத் தேடுகிற ஜனங்களுக்கு உரியவையாகும்.
11 “ஆனால் நீங்கள் கர்த்தரைவிட்டு விலகினீர்கள். எனவே, நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் எனது பரிசுத்தமான மலையை மறந்துவிட்டீர்கள். நீங்கள் அதிர்ஷ்டத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தீர்கள். நீங்கள் விதி என்னும் பொய்த் தெய்வத்தின் முன்பு உணவு மற்றும் பான பலிகளை படைத்து, அதைச் சார்ந்து இருக்கிறீர்கள. 12 ஆனால், உங்கள் எதிர்காலத்தை நான் தீர்மானித்துவிட்டேன். நீங்கள் வாளால் கொல்லப்படுவீர்கள் என்று நான் தீர்மானித்தேன். நீங்கள் அனைவரும் கொல்லப்படுவீர்கள். ஏனென்றால், நான் உங்களை அழைத்தேன். ஆனால், எனக்குப் பதில் சொல்ல மறுத்தீர்கள். நான் உங்களோடு பேசினேன். நீங்கள் கவனிக்கவில்லை. நான் தீமை என்று சொன்னதை நீங்கள் செய்தீர்கள். நான் விரும்பாதவற்றையெல்லாம் நீங்கள் செய்ய முடிவு செய்தீர்கள்.”
13 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
“எனது ஊழியர்கள் உண்பார்கள்.
ஆனால் தீயவர்களாகிய நீங்கள் பட்டினியாக இருப்பீர்கள்.
எனது ஊழியர்கள் குடிப்பார்கள்.
ஆனால், தீயவர்களாகிய நீங்கள் தாகமாய் இருப்பீர்கள்.
எனது ஊழியர்கள் மகிழ்வார்கள்.
ஆனால், தீயவர்களாகிய நீங்கள் அவமானம் அடைவீர்கள்.
14 எனது ஊழியர்கள் தம் இதயங்களில் நன்மை கொண்டுள்ளனர்.
எனவே, அவர்கள் மகிழ்வார்கள்.
ஆனால், தீயவர்களாகிய நீங்கள் கதறுவீர்கள்.
ஏனென்றால், உங்கள் இதயங்களில் உள்ள உங்கள் ஆவி உடைக்கப்படும்.
நீங்கள் வருத்தம்கொள்வீர்கள்.
15 எனது ஊழியர்களுக்கு உங்கள் பெயர்கள் கெட்ட வார்த்தைகளைப்போல இருக்கும்.”
எனது கர்த்தராகிய ஆண்டவர் உங்களைக் கொல்வார்.
அவர் தம் ஊழியர்களைப் புதிய பெயரால் அழைப்பார்.
16 “ஜனங்கள் இப்போது பூமியிலிருந்து ஆசீர்வாதத்தைக் கேட்கின்றனர்.
ஆனால் எதிர்காலத்தில், அவர்கள் நம்பிக்கைக்குரிய தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைக் கேட்பார்கள்.
இப்பொழுது ஜனங்கள் வாக்குறுதிச் செய்யும்போது, பூமியின் வல்லமையை நம்புகின்றனர்.
ஆனால் எதிர்காலத்தில், அவர்கள் நம்பிக்கைக்குரிய தேவன் மீது நம்பிக்கை வைப்பார்கள்.
ஏனென்றால் கடந்தகாலத்தில் உள்ள துன்பங்கள் எல்லாம் மறக்கப்படும்.
என் ஜனங்கள் இந்தத் துன்பங்களையெல்லாம் மீண்டும் நினைக்கவேமாட்டார்கள்.”
புதிய காலம் வந்துகொண்டிருக்கிறது
17 “நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைப்பேன்.
ஜனங்கள் கடந்த காலத்தை நினைக்கமாட்டார்கள்.
அவற்றில் எதையும் அவர்கள் நினைக்கமாட்டார்கள்.
18 எனது ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
அவர்கள் என்றும் என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
நான் என்ன செய்யப்போகிறேன்?
நான் மகிழ்ச்சி நிறைந்த ஒரு எருசலேமை உருவாக்குவேன்.
அவர்களை மகிழ்ச்சி நிறைந்த ஜனங்கள் ஆக்குவேன்.
19 “பிறகு, நான் எருசலேமோடு மகிழ்ச்சியாக இருப்பேன்.
நான் என் ஜனங்களோடு மகிழ்ச்சியாக இருப்பேன்.
அந்த நகரத்தில் மீண்டும் அழுகையும் துக்கமும் இராது.
20 இனி ஒருபோதும் ஒரு குழந்தை பிறந்தவுடன் மரிக்காது.
இனி நகரத்தில் எவரும் குறுகிய வாழ்வுடன் மரிக்கமாட்டார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் நீண்ட காலம் வாழும்.
ஒவ்வொரு வயோதிகனும் நீண்ட காலம் வாழ்வான்.
100 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவன் இளைஞன் என்று அழைக்கப்படுவான்.
பாவம் செய்தவன் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்வு முழுவதும் துன்பத்தை அடைவான்.
21 “அந்த நகரத்தில், ஒருவன் வீடுகட்டினால் அவன் அங்கே வாழ்வான்.
ஒருவன் திராட்சைத் தோட்டத்தை வைத்தால், அவன் அந்தத் தோட்டத்திலிருந்து திராட்சைகளை உண்பான்.
22 மீண்டும் ஒருவன் வீடுகட்ட இன்னொருவன் அதில் குடியேறமாட்டான்.
மீண்டும் ஒருவன் திராட்சைத் தோட்டத்தை அமைக்க இன்னொருவன் பழம் உண்ணமாட்டான்.
எனது ஜனங்கள் மரங்கள் வாழும்மட்டும் வாழ்வார்கள்.
நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தாங்கள் செய்தவற்றை அனுபவித்து மகிழ்வார்கள்.
23 பெறும் குழந்தை மரித்துப்போவதற்காக
இனிமேல் பெண்கள் பிரசவிக்கமாட்டார்கள்.
பிரசவத்தின்போது என்ன ஆகுமோ என்று பெண்கள் இனிமேல் பயப்படமாட்டார்கள்.
எனது அனைத்து ஜனங்களும் அவர்களது பிள்ளைகளும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
24 அவர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களுக்கு என்ன தேவை என்று நான் அறிவேன்.
அவர்கள் கேட்டு முடிப்பதற்குள்ளாக நான் அவர்களுக்கு உதவுவேன்.
25 ஓநாயும் ஆட்டுக் குட்டிகளும் சேர்ந்து புல்மேயும்.
சிங்கங்கள் மாடுகளோடு சேர்ந்து வைக்கோலை உண்ணும்.
எனது பரிசுத்தமான மலையில் தரையில் உள்ள பாம்பு யாரையும் பயப்படுத்தாது.
அது எவரையும் தீண்டாது” கர்த்தர் இவை அனைத்தையும் கூறினார்.
அனைத்து தேசங்களையும் தேவன் நியாயம் தீர்ப்பார்
66 கர்த்தர் சொல்கிறது இதுதான், “வானங்கள் என்னுடைய சிங்காசனம்.
பூமி எனது பாதப்படி.
எனவே, எனக்கு ஒரு ஆலயம் கட்ட முடியுமென்று நீ நினைக்கிறாயா? முடியாது. உன்னால் முடியாது!
நான் ஓய்வெடுக்கும் இடத்தை உன்னால் கொடுக்கமுடியுமா? உன்னால் முடியாது!
2 நானே எனக்கு இவற்றையெல்லாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்தும் இங்கே உள்ளன.
ஏனென்றால், நான் இவற்றைப் படைத்தேன்.”
கர்த்தர்தாமே இவற்றைக் கூறினார்.
“எனக்கு சொல், நான் எந்த ஜனங்களைப் பாதுகாக்கவேண்டும்.
ஏழைகளையும், துயரப்படுபவர்களையும் பாதுகாக்கிறேன்.
எளியவர்களுக்காகவும், துயரப்படுபவர்களுக்காகவும் பொறுப்பேற்கிறேன்.
எனது வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிற ஜனங்களை நான் பாதுகாக்கிறேன்.
3 சில ஜனங்கள் காளைகளைப் பலியிடுகிறார்கள்.
ஆனால், அவர்கள் ஜனங்களையும் அடிக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் ஆடுகளைப் பலியாகக் கொடுக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் நாய்களின் கழுத்துகளையும் உடைக்கிறார்கள்.
அவர்கள் பன்றியின் இரத்தத்தையும் எனக்கு பலியாகச் செலுத்துகிறார்கள்.
அந்த ஜனங்கள் நறுமணப் பொருட்களை எரிக்க நினைவுகொள்வார்கள்.
ஆனால், அவர்கள் தமது பயனற்ற விக்கிரகங்களை நேசிக்கிறார்கள்.
அவர்கள் எனது வழியை அல்ல.
தங்கள் சொந்த வழியையே தேர்ந்து எடுப்பார்கள்.
அவர்கள் தங்களது பயங்கரமான விக்கிரகங்களை நேசிக்கிறார்கள்.
4 எனவே, நான் அவர்களது தந்திரங்களையே பயன்படுத்த முடிவு செய்தேன்.
அதாவது அவர்கள் எதைக்கண்டு அதிகமாகப் பயப்படுகிறார்களோ, அதனாலேயே அவர்களைத் தண்டிப்பேன்.
நான் அந்த ஜனங்களை அழைத்தேன்.
ஆனால் அவர்கள் கவனிக்கவில்லை.
நான் அவர்களோடு பேசினேன்.
ஆனால், அவர்கள் என்னைக் கேட்கவில்லை.
எனவே, நான் அதனையே அவர்களுக்குச் செய்வேன்.
நான் விரும்பாதவற்றையே அவர்கள் செய்யத் தேர்ந்தெடுத்தனர்.”
5 கர்த்தருடைய கட்டளைகளுக்கு அடிபணிகிற ஜனங்களாகிய நீங்கள் கர்த்தர் சொல்கிறவற்றையும் கேட்கவேண்டும்.
“உங்களை உங்கள் சகோதரர் வெறுத்தார்கள்.
அவர்கள் உங்களுக்கு எதிராக மாறினார்கள்.
ஏனென்றால், என்னை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்.
உங்கள் சகோதரர்கள் கூறினார்கள், ‘கர்த்தர் மகிமைப்படுத்தப்படும்போது, நாங்கள் உம்மிடம் திரும்பிவருவோம்.
பிறகு, நாங்கள் உங்களோடு மகிழ்ச்சியாக இருப்போம்’ அத்தீய ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.”
தண்டனையும் புதிய நாடும்
6 கவனியுங்கள்! நகரத்திலிருந்தும், ஆலயத்திலிருந்தும் பேரோசை வந்துகொண்டிருக்கிறது. அது கர்த்தர் தனது பகைவர்களைத் தண்டிக்கும் ஓசை. அவர்களுக்கு ஏற்ற தண்டனையை கர்த்தர் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
7-8 “ஒரு பெண் பிரசவ வலியை உணர்வதற்கு முன்பு ஒரு குழந்தையைப் பெறமுடியாது. ஒரு பெண் தான் பெற்றெடுக்கும் குழந்தையைப் பார்க்கும்முன் அதற்குரிய வலியை உணரவேண்டும். அதைப்போலவே, எவரும் ஒரு புதிய நாடு ஒரே நாளில் பிறப்பதைக் காணமுடியாது. எவரும் ஒரு நாடு ஒரே நாளில் தோன்றியதைக் கேள்விப்பட்டிருக்க முடியாது. அந்த நாடு பிரசவ வலிபோன்று முதிலில் வலியை அறியவேண்டும். பிரசவ வலிக்குப் பிறகே, நாடு தன் பிள்ளையாகிய புதிய நாட்டைப் பெற்றெடுக்கும். 9 இதைப்போலவே நான் புதிய ஒன்று பிறக்க இடமில்லாமல் வலிக்குக் காரணமாக இருக்கமாட்டேன்.”
கர்த்தர் இதனைச் சொல்கிறார், “நான் வாக்குறுதிச் செய்கிறேன். நான் உங்களது பிரசவ வலிக்குக் காரணமாக இருந்தால், புதிய நாட்டை உங்களுக்குத் தராமல் நிறுத்தமாட்டேன்.” உங்கள் தேவன் இதைச் சொன்னார்.
10 எருசலேமே மகிழ்ச்சிகொள்!
எருசலேமை நேசிக்கிற ஜனங்களாகிய நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள்!
எருசலேமிற்கு துன்பங்கள் ஏற்பட்டன.
எனவே, ஜனங்களில் சிலர் வருத்தமாய் இருந்தீர்கள். ஆனால், இப்போது நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கலாம்!
11 ஏனென்றால், மார்பிலிருந்து பால் வருவது போன்று நீங்கள் இரக்கத்தைப் பெறுவீர்கள்.
அந்தப் பால் உண்மையில் உங்களைத் திருப்திப்படுத்தும்.
நீங்கள் அந்தப் பாலைக் குடிப்பீர்கள்.
நீங்கள் உண்மையில் எருசலேமின் மகிமையை அனுபவிப்பீர்கள்.
12 கர்த்தர் கூறுகிறார், “பார், நான் உங்களுக்குச் சமாதானத்தைக் கொடுப்பேன்.
இந்தச் சமாதானம் உங்களுக்குப் பெருக்கெடுத்து வரும் ஆற்றினைப்போல் பாயும்.
அனைத்து நாடுகளில் உள்ள செல்வங்களும் உன்னிடம் பாய்ந்து வரும்.
அந்தச் செல்வம் வெள்ளம்போல் வரும்.
நீங்கள் சிறு குழந்தைகளைப்போன்று இருப்பீர்கள். நீங்கள் பாலைக் (செல்வம்) குடிப்பீர்கள்!
நான் உங்களைத் தூக்கி எனது கைகளில் வைத்துக்கொள்வேன்.
நான் உங்களை எனது முழங்காலில் வைத்து தாலாட்டுவேன்.
13 ஒரு தாய் தன் குழந்தையைத் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன்!
நீங்கள் எருசலேமில் ஆறுதல் செய்யப்படுவீர்கள்.”
14 நீங்கள் உண்மையில் மகிழ்ச்சியடைகிறவற்றைப் பார்ப்பீர்கள்.
நீங்கள் விடுதலை பெற்று புல்லைப்போல வளருவீர்கள்.
கர்த்தருடைய ஊழியர்கள் அவருடைய வல்லமையைக் காண்பார்கள்.
ஆனால், கர்த்தருடைய பகைவர்கள் அவரது கோபத்தைப் பார்ப்பார்கள்.
15 பாருங்கள், கர்த்தர் நெருப்போடு வந்துகொண்டிருக்கிறார்.
கர்த்தருடைய படைகள் புழுதி மேகங்களோடு வந்துகொண்டிருக்கிறார்கள்.
கர்த்தர் அந்த ஜனங்களைத் தனது கோபத்தால் தண்டிப்பார்.
கர்த்தர் நெருப்பின் ஜீவாலையைப் பயன்படுத்தி, அவர் கோபமாக இருக்கையில் அந்த ஜனங்களைத் தண்டிப்பார்.
16 கர்த்தர் ஜனங்களை நியாயந்தீர்ப்பார்.
பிறகு கர்த்தர் ஜனங்களை வாளாலும் நெருப்பாலும் அழிப்பார்.
கர்த்தர் அதிகமான ஜனங்களை அழிப்பார்.
17 “அந்த ஜனங்கள் அவர்களின் சிறப்பான தோட்டத்தில், தொழுதுகொள்வதற்காகத் தம்மைத் தாமே கழுவி சுத்தப்படுத்திக்கொள்வார்கள். அவர்களின் சிறப்பான தோட்டத்திற்கு அந்த ஜனங்கள் ஒருவரை ஒருவர் பின்தொடர்ந்து செல்வார்கள். பிறகு அவர்கள் தம் விக்கிரகங்களைத் தொழுதுகொள்வார்கள். ஆனால் அனைத்து ஜனங்களையும் கர்த்தர் அழிப்பார். அந்த ஜனங்கள் பன்றிகள், எலிகள் மற்றும் மற்ற அழுக்கானவற்றின் இறைச்சியைத் உண்கிறார்கள். ஆனால் அந்த அனைத்து ஜனங்களும் சேர்ந்து அழிக்கப்படுவார்கள். (கர்த்தர் இவற்றை அவராகவே சொன்னார்).
18 “அந்த ஜனங்கள் தீய நினைவுகளைக் கொண்டு தீயவற்றைச் செய்தனர். எனவே, நான் அவர்களைத் தண்டிக்க வந்துகொண்டிருக்கிறேன். நான் அனைத்து நாடுகளையும் அனைத்து ஜனங்களையும் ஒன்று சேர்ப்பேன். அனைத்து ஜனங்களும் சேர்ந்து வந்து எனது வல்லமையைப் பார்ப்பார்கள். 19 நான் ஜனங்களில் சிலர் மீது அடையாளத்தை இடுவேன். நான் அவர்களைக் காப்பாற்றுவேன். காப்பாற்றப்பட்ட ஜனங்களில் சிலரை நான் தர்ஷீசு, லிபியாலூத் (வில் வீரர்களின் நாடு), தூபால், கிரீஸ் மற்றும் தொலைதூர நாடுகளுக்கும் அனுப்புவேன். அந்த ஜனங்கள் என்றும் எனது போதனைகளைக் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். அந்த ஜனங்கள் எனது மகிமையை என்றும் பார்த்திருக்கமாட்டார்கள். எனவே, காப்பாற்றப்பட்ட ஜனங்கள் எனது மகிமையைப்பற்றி அந்நாடுகளில் கூறுவார்கள். 20 அவர்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரையும் அவர்கள் எனது பரிசுத்தமான மலையான எருசலேமிற்கு அழைத்து வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், இரதங்கள் மற்றும் வண்டிகளில் வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஆகியோர் இஸ்ரவேலர்களால் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சுத்தமான தட்டில் வைத்து கொண்டுவரப்படும் காணிக்கைகளைப்போன்று இருப்பார்கள். 21 நானும் இந்த ஜனங்களில் சிலரை ஆசாரியர்களாகவும் லேவியர்களாகவும் தேர்ந்தெடுப்பேன்” கர்த்தர்தாமே இவற்றைச் சொன்னார்.
புதிய வானங்களும் புதிய பூமியும்
22 “நான் ஒரு புதிய உலகத்தைப் படைப்பேன். புதிய வானங்களும் புதிய பூமியும் என்றென்றும் நிலைத்து இருக்கும். அவ்வாறே உங்கள் பெயர்களும், உங்கள் பிள்ளைகளும் என்னோடு எப்பொழுதும் இருப்பார்கள். 23 ஒவ்வொரு ஆராதனைக்குரிய நாளிலும் அனைத்து ஜனங்களும் என்னை ஆராதிக்க வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு ஓய்வு நாளிலும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் வருவார்கள்.
24 “இந்த ஜனங்கள் எனது பரிசுத்தமான நகரத்தில் இருப்பார்கள். அவர்கள் அந்நகரத்தை விட்டு வெளியே போனால் எனக்கு எதிராகப் பாவம் செய்தவர்களின் மரித்த உடல்களைப் பார்ப்பார்கள். அந்த உடல்களில் புழுக்கள் இருக்கும். அப்புழுக்கள் என்றும் சாகாது. நெருப்பு அந்த உடல்களை எரித்துப்போடும். அந்நெருப்பு அணையாமல் இருக்கும்.”
ஆணுக்கும் பெண்ணுக்கும் சில விதிமுறைகள்
2 எல்லாருக்குமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்று முதலில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எல்லாரையும் பற்றி தேவனிடம் பேசுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைப்பற்றிக் கேளுங்கள். அவரிடம் நன்றியுணர்வுடன் இருங்கள். 2 அரசர்களுக்காகவும், அதிகாரம் உள்ளவர்களுக்காகவும் நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். முழுக்க முழுக்க சேவையும், தேவனைக் குறித்த மரியாதையும் அமைதியும் சமாதானமும் உள்ள வாழ்வை நாம் பெறும்பொருட்டு அத்தலைவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். 3 இது நன்று. நம் மீட்பரான தேவனுக்கு இது மிகவும் விருப்பமானது.
4 அனைத்து மக்களும் மீட்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அனைத்து மக்களும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தேவன் ஆசைப்படுகிறார். 5 ஒரே ஒரு தேவனே இருக்கிறார். மனிதர்கள் தேவனை அடைவதற்கும் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவ்வழி மனிதனாகப் பிறந்த கிறிஸ்துவாகிய இயேசுவின் மூலம் உருவாகிறது. 6 அனைத்து மக்களின் பாவங்களுக்காகவும் அவர் தன்னையே தந்துவிட்டார். தேவன் எல்லாரையும் மீட்க விரும்புகிறார் என்பதற்கு இயேசுவே சாட்சி. அவர் சரியான நேரத்தில் வந்தார். 7 அதனால்தான் நற்செய்தியைப் பரப்புவதற்காக, நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனால் தான் நான் அப்போஸ்தலானாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். (நான் உண்மையைத் தான் சொல்கிறேன். பொய் சொல்லவில்லை) யூதர் அல்லாதவர்களுக்கான போதகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் அவர்கள் விசுவாசம் கொள்ளவும், உண்மையை அறிந்துகொள்ளவும் போதிக்கிறேன்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் விசேஷ விதிமுறைகள்
8 ஆண்கள் எல்லா இடத்திலும் பிரார்த்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கைகளை உயர்த்தி ஜெபம் செய்யும் இவர்கள் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும். இவர்கள் கோபமும், தர்க்கமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
9 பெண்கள் தமக்குப் பொருத்தமான ஆடைகளை அணியவேண்டுமென்று விரும்புகிறேன். மரியாதைக்குரிய விதத்தில் அவர்கள் ஆடைகள் இருக்கவேண்டும். எளிமையாகவும், சரியான சிந்தனை உடையவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் நவநாகரீகமான தலையலங்காரமும், பொன், முத்து நகையலங்காரங்களும், விலையுயர்ந்த ஆடை அலங்காரங்களும் இல்லாமல் இருப்பார்களாக. 10 ஆனால், அவர்கள் அழகானவர்களாகத் தோன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும். தேவனை வழிபடுகிற பெண்கள் அவ்விதத்திலேயே தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.
11 பெண்கள் எல்லாவற்றிலும் அடக்கம் உடையவராய் இருந்து அமைதியோடு கற்றுக்கொள்ள வேண்டும். 12 ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். பெண்கள் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும். 13 ஏனெனில் ஆதாமே முதலில் படைக்கப்பட்டான். ஏவாள் பிறகு தான் படைக்கப்பட்டாள். 14 அதோடு, சாத்தானின் தந்திரத்துக்குள் ஆதாம் அகப்படவில்லை. பெண் தான் முதலில் தந்திரத்துக்குள் சிக்கி பாவியானாள். 15 தொடர்ந்து விசுவாசமும் அன்பும் புனிதமும் கொண்டு நல்ல வழியில் கட்டுப்பாட்டோடு பெண்கள் நடந்துகொண்டால், அவர்கள் தம் பிள்ளைப் பேற்றின் மூலம் இரட்சிக்கப்படுவார்கள்.
2008 by World Bible Translation Center