Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 62-64

புதிய எருசலேம்: நீதி முழுமையாக உள்ள நகரம்

62 “சீயோனை நான் நேசிக்கிறேன்.
    எனவே, நான் தொடர்ந்து அவளுக்காகப் பேசுவேன்.
எருசலேமை நான் நேசிக்கிறேன்.
    எனவே, நான் பேசுவதை நிறுத்தமாட்டேன்.
பிரகாசமான வெளிச்சத்தைப்போன்று நன்மை ஒளிவீசும்வரை பேசுவேன்.
    இரட்சிப்பானது சுவாலையைப்போன்று எரியும்வரை பேசுவேன்.
பிறகு, அனைத்து நாடுகளும் உன் நன்மையைப் பார்க்கும்.
    அனைத்து அரசர்களும் உனது மகிமையைக் காண்பார்கள்.
பிறகு நீ புதிய பெயரைப் பெறுவாய்.
    கர்த்தர் அவராகவே ஒரு புதிய பெயரைக் கொடுப்பார்.
கர்த்தர் உன்னைப்பற்றி மிகவும் பெருமை கொள்வார்.
    நீ கர்த்தருடைய கையில் உள்ள அழகான கிரீடத்தைப்போல் இருப்பாய்.
‘தேவனால் கைவிடப்பட்ட ஜனங்கள்’ என்று மீண்டும் நீங்கள் அழைக்கப்படமாட்டீர்கள்.
    ‘தேவன் அழித்த நாடு’ என்று உனது நாடு மீண்டும் அழைக்கப்படாது.
‘தேவன் நேசிக்கும் ஜனங்கள்’ என்று நீங்கள் அழைக்கப்படுவீர்கள்.
    ‘தேவனுடைய மணமகள்’ என்று உனது நாடு அழைக்கப்படும்.
ஏனென்றால், கர்த்தர் உன்னை நேசிக்கிறார்.
    உனது நாடு அவருக்கு உரியதாகும்.
ஒரு இளைஞன் ஒரு பெண்ணை நேசிக்கும்போது அவளை மணக்கிறான்.
    அவள் அவனது மனைவி ஆகிறாள்.
அதே வழியில் உனது நாடு உனது பிள்ளைகளுக்கு உரியதாகும்.
    ஒருவன் தன் புதிய மனைவியோடு மிக மகிழ்ச்சியாய் இருப்பதுபோல உன் தேவன் உன்னோடு மகிழ்ச்சியாய் இருப்பார்.”

எருசலேமே! உனது மதில்களில் காவலர்களை (தீர்க்கதரிசிகள்) வைப்பேன்.
    அந்தக் காவலர்கள் மௌனமாக இருக்கமாட்டார்கள்!
    அவர்கள் இரவும் பகலும் ஜெபம் செய்வார்கள்!

காவலர்களே! நீங்கள் கர்த்தரிடம் ஜெபம் செய்யவேண்டும்.
    அவரது வாக்குறுதியை நீ அவருக்கு நினைவுறுத்த வேண்டும்.
    எப்பொழுதும் ஜெபத்தை நிறுத்தாதே.
அவர் எருசலேமை மாநகரமாகச் செய்து, பூமியில் உள்ள ஜனங்கள் எல்லாம் துதிக்கும் வரையில்
    கர்த்தரிடம் நீ ஜெபம் செய்யவேண்டும்.

கர்த்தர் ஒரு வாக்குறுதிச் செய்தார். கர்த்தர் தன் சொந்த வல்லமையைச் சான்றாகப் பயன்படுத்தினார்.
    கர்த்தர் தன் வாக்குறுதியைக் காப்பாற்ற தனது வல்லமையைப் பயன்படுத்துவார்.
கர்த்தர் சொன்னார், “உங்கள் உணவை உங்கள் பகைவர்களுக்கு மீண்டும் கொடுக்கமாட்டேன் என்று வாக்களிக்கிறேன்.
    நீங்கள் உருவாக்கிய திராட்சைரசத்தை உங்கள் பகைவர்கள் மீண்டும் எடுத்துக்கொள்ள விடமாட்டேன் என்று வாக்களிக்கிறேன்.
உணவைச் சேகரிக்கிறவன் அதனை உண்ணுவான் அவன் கர்த்தரைத் துதிப்பான்.
    திராட்சையைச் சேகரிக்கிறவன் அந்தத் திராட்சையிலிருந்து ரசத்தைக் குடிப்பான், எனது பரிசுத்த தேசங்களில் இவை அனைத்தும் உண்மையில் நடக்கும்.”

10 வாசல்கள் வழியாக வாருங்கள்.
    ஜனங்களுக்காகப் பாதையைச் சுத்தப்படுத்துங்கள்.
சாலையைத் தயார் செய்யுங்கள்.
    சாலையிலுள்ள கற்களை அப்புறப்படுத்துங்கள் ஜனங்களுக்கு அடையாளமாகக் கொடியை ஏற்றுங்கள்.

11 கவனியுங்கள்! தொலைதூர நாடுகளிலுள்ள ஜனங்களோடு கர்த்தர் பேசிக்கொண்டிருக்கிறார்.
    “சீயோன் ஜனங்களிடம் கூறு:
‘பார், உன் இரட்சகர் வருகிறார்.
    அவர் உனக்குரிய விருதினைக் கொண்டு வருகிறார். அவர் அவரோடு அவ்விருதினைக் கொண்டு வருகிறார்.’”
12 “பரிசுத்தமான ஜனங்கள்” “கர்த்தருடைய இரட்சிக்கப்பட்ட ஜனங்கள்” என்று அவரது ஜனங்கள் அழைக்கப்படுவார்கள்:
    “தேவன் விரும்பும் நகரம்” “தேவனோடு இருக்கிற நகரம்” என்று எருசலேம் அழைக்கப்படும்.

கர்த்தர் தம் ஜனங்களை நியாயந்தீர்க்கிறார்

63 ஏதோமிலிருந்து வந்துகொண்டிருக்கிற இவன் யார்?
    அவன் போஸ்றாவிலிருந்து வருகிறான்.
அவனது ஆடைகள் கட்டிச் சிவப்பாக உள்ளது.
    அவனது ஆடைகள் மகத்துவமாய் உள்ளது.
அவன் பெரும் வல்லமையோடு உயரமாக நடந்துகொண்டிருக்கிறான்.
    அவன், “உன்னைக் காக்கும் வல்லமை என்னிடம் உள்ளது. நான் உண்மையைப் பேசுகிறேன்” என்கிறான்.

“உனது ஆடைகள் ஏன் சிவப்பாக உள்ளன?
    அவை, திராட்சையை ரசமாக்குகிற இடத்தில் நடந்து வந்தவனைப்போன்றுள்ளன.”

அவன் பதில் கூறுகிறான், “நான் திராட்சைரச ஆலை வழியாக நடந்தேன்.
    எவரும் எனக்கு உதவவில்லை.
நான் கோபமாக இருக்கிறேன். நான் திராட்சைகளுக்குமேல் நடந்தேன்.
    அதன் சாறு என் ஆடைகள் மேல் தெளித்தது. எனவே, எனது ஆடைகள் அழுக்காக உள்ளன.
ஜனங்களைத் தண்டிக்க நான் ஒரு காலத்தைத் தேர்ந்தெடுக்கிறேன்.
    இப்போது, எனது ஜனங்களைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் உரிய நேரம் வந்துள்ளது.
நான் சுற்றிலும் பார்த்தேன். ஆனால் எவரும் எனக்கு உதவுவதைக் காணவில்லை.
    எவரும் எனக்கு உதவவில்லை என்று நான் ஆச்சரியப்பட்டேன்.
எனவே, என் ஜனங்களைக் காப்பாற்ற
    என் சொந்த வல்லமையைப் பயன்படுத்தினேன், என் கோபம் என்னைத் தாங்கினது.
நான் கோபமாக இருக்கும்போது, நான் ஜனங்களை மிதித்தேன்.
    என் கோபம் அதிகமானபடியால் அவர்களைத் தண்டித்தேன்.
    நான் அவர்களது இரத்தத்தைத் தரையில் ஊற்றினேன்.”

கர்த்தர் அவரது ஜனங்களிடம் தயவோடு இருக்கிறார்

கர்த்தர் தயவாக இருக்கிறார் என்று நினைவுகொள்வேன்.
    கர்த்தரைத் துதிக்க நான் நினைவுகொள்வேன்.
கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்திற்குப் பல நல்லவற்றைக் கொடுத்தார்.
    கர்த்தர் எங்களோடு மிகத் தயவோடு இருந்திருக்கிறார். கர்த்தர் எங்களிடம் இரக்கம் காட்டினார்.
கர்த்தர், “இவர்கள் என்னுடைய ஜனங்கள்.
    இவர்கள் என்னுடைய மெய்யான பிள்ளைகள்” என்றார்.
    எனவே கர்த்தர் அந்த ஜனங்களைக் காப்பாற்றினார்.
ஜனங்களுக்கு நிறைய துன்பங்கள் இருந்தன.
    ஆனால் கர்த்தர் அவர்களுக்கு எதிராக இல்லை.
கர்த்தர் ஜனங்களை நேசித்தார். அவர்களுக்காக வருத்தப்பட்டார்.
    எனவே கர்த்தர் அவர்களைக் காப்பாற்றினார்.
அவர் தமது சிறப்பான தூதனை அவர்களைக் காப்பாற்ற அனுப்பினார்.
    கர்த்தர் என்றென்றும் அவர்களிடம் அக்கறைகொண்டார்.
    கர்த்தர் அந்த ஜனங்களுக்காக அக்கறைகொள்வதை நிறுத்த விரும்பவில்லை.
10 ஆனால், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகத் திரும்பினார்கள்.
    ஜனங்கள் அவரது பரிசுத்த ஆவியை வருந்தும்படி செய்தனர்.
எனவே, கர்த்தர் அவர்களின் பகைவரானார்.
    கர்த்தர் அவர்களுக்கு எதிராகப்போராடினார்.

11 ஆனால், கர்த்தர் நீண்ட காலத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை இப்போதும் நினைவுகொள்கிறார்.
    அவர் மோசேயையும் அவரது ஜனங்களையும் நினைவுகொள்கிறார்.
கடல்வழியாக ஜனங்களைக் கொண்டுவந்தவர் கர்த்தர் ஒருவரே.
    கர்த்தர் தம் மந்தைகளை (ஜனங்கள்) வழிநடத்த மேய்ப்பர்களைப் (தீர்க்கதரிசிகளை) பயன்படுத்தினார்.
    ஆனால் இப்போது, மோசேயில் தன் ஆவியை வைத்தவர் எங்கே இருக்கிறார்?
12 கர்த்தர் மோசேயை அவரது வலது கையால் வழி நடத்தினார்.
    கர்த்தர் மோசேயை வழிநடத்த அவரது அற்புத வல்லமையைப் பயன்படுத்தினார்.
கர்த்தர் தண்ணீரைப் பிரித்தார்.
    அதனால் ஜனங்கள் கடல் வழியாக நடக்கமுடிந்தது.
    கர்த்தர் இப்பெருஞ் செயலைக் செய்ததின் மூலமாக தனது நாமத்தை நித்திய புகழுக்குரியதாக்கினார்.
13 கர்த்தர் ஜனங்களை ஆழமான கடல் வழியாக நடத்தினார்.
    ஜனங்கள் கீழே விழாமல் பாலைவனத்தின் வழியாக ஒரு குதிரை செல்வதுபோல் சென்றனர்.
14 ஒரு பசு வயலில் நடந்து செல்லும்போது அது கீழே விழாது.
    அதேபோன்று ஜனங்கள் கடல் வழியாகப்போகும்போது கீழே விழவில்லை.
கர்த்தருடைய ஆவி ஜனங்களை ஒரு ஓய்விடத்திற்கு அழைத்துச் சென்றது.
    ஜனங்கள் முழுநேரமும் பாதுகாப்பாக இருந்தனர்.
கர்த்தாவே, அதுதான் நீர் உமது ஜனங்களை நடத்திய வழி.
    நீர் ஜனங்களை வழிநடத்தினீர். நீர் உமது நாமத்தை அற்புதமாக்கினீர்!

அவரது ஜனங்களுக்கு உதவ தேவனிடம் ஒரு ஜெபம்

15 கர்த்தாவே! வானத்திலிருந்து கீழே பாரும்!
    இப்பொழுது, நிகழ்ந்துகொண்டிருப்பவற்றைப் பாரும்!
பரலோகத்திலுள்ள உமது பெருமையும். பரிசுத்தமும் கொண்ட வீட்டிலிருந்து என்னைப் பாரும்!
    என் மீதிருந்த உமது பலமான அன்பு எங்கே? உமது ஆழத்திலிருந்து வரும் வல்லமையான உமது வேலைகள் எங்கே?
எனக்கான உமது இரக்கம் எங்கே?
    என்னிடமிருந்து உமது கருணையை ஏன் மறைத்தீர்?
16 பாரும். நீர் எமது தந்தை!
    எங்களை ஆபிரகாம் அறியமாட்டார்.
    இஸ்ரவேல் (யாக்கோபு) எங்களை அடையாளம் காணவில்லை.
கர்த்தாவே, நீர் எமது தந்தை.
    எங்களை எப்போதும் காப்பாற்றுகிறவர் நீர் ஒருவரே.
17 கர்த்தாவே, எங்களை நீர் ஏன் உம்மிடமிருந்து தள்ளுகிறீர்.
    உம்மைப் பின்தொடர்வதை நீர் ஏன் கடினமாக்கினீர்?
கர்த்தாவே எங்களிடம் திரும்பி வாரும்.
    நாங்கள் உமது ஊழியர்கள்.
எங்களிடம் வந்து எங்களைக் காப்பாற்றும்.
    எங்கள் குடும்பங்களும் உம்மைச் சார்ந்தது.
18 உமது பரிசுத்தமான ஜனங்கள் அவர்களின் நாடுகளில் கொஞ்சம் காலமே வாழ்ந்தார்கள்.
    பிறகு எங்கள் பகைவர்கள் உமது பரிசுத்தமான ஆலயத்தை மிதித்தனர்.
19 சிலர் உம்மைப் பின்பற்றவில்லை.
    அந்த ஜனங்கள் உமது நாமத்தால் அழைக்கப்படவில்லை.
    நாங்களும் அந்த ஜனங்களைப்போல் இருந்தோம்.

64 நீர் வானங்களைக் கிழித்து திறந்து
    பூமிக்கு இறங்கி வந்தால், பிறகு எல்லாம் மாறும்.
    உமக்கு முன்னால் மலைகள் உருகிப்போகும்.
மலைகள் புதர் எரிவதுபோல எரிந்து வரும்.
    தண்ணீர் நெருப்பில் கொதிப்பதுபோல மலைகள் கொதிக்கும்.
பிறகு, உமது பகைவர்கள் உம்மைப்பற்றிக் கற்றுக்கொள்வார்கள்.
    அவர்கள் உம்மைப் பார்க்கும்போது அனைத்து நாடுகளும் அச்சத்தால் நடுங்கும்.
ஆனால், நாங்கள் உண்மையில் நீர் இவற்றைச் செய்வதை விரும்பவில்லை.
    மலைகள் உமக்கு முன்னால் உருகிப்போகும்.
உமது ஜனங்கள் என்றென்றும் உம்மை உண்மையில் கவனிக்கவில்லை.
    உமது ஜனங்கள் நீர் சொன்னதையெல்லாம் என்றென்றும் கேட்கவில்லை.
உம்மைப்போன்ற தேவனை எவரும் காணவில்லை.
    வேறு தேவன் இல்லை, நீர் மட்டுமே.
    ஜனங்கள் பொறுமையாய் இருந்தால், நீர் அவர்களுக்கு உதவும்படி காத்திருந்தால், பிறகு நீர் அவர்களுக்காகப் பெருஞ் செயலைச் செய்வீர்.

நீர் நன்மை செய்வதில் மகிழ்ச்சி அடைகிற ஜனங்களோடு இருக்கிறீர்.
    அந்த ஜனங்கள் உமது வாழ்க்கை வழியை நினைவுகொள்கிறார்கள்.
ஆனால் பாரும்! கடந்த காலத்தில் நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
    எனவே நீர் எங்களோடு கோபமுற்றீர்.
    இப்போது, நாங்கள் எப்படி காப்பாற்றப்படுவோம்?
நாங்கள் பாவத்தால் அழுக்காகியுள்ளோம்.
    எங்களது அனைத்து நன்மைகளும் பழைய அழுக்கு ஆடைபோன்று உள்ளன.
நாங்கள் செத்துப்போன இலைகளைப்போன்றுள்ளோம்.
    எங்கள் பாவங்கள் காற்றைப்போல எங்களை அடித்துச் செல்லும்.
யாரும் உம்மைத் தொழுதுகொள்ளவில்லை.
    உமது நாமத்தின்மீது நம்பிக்கை வைப்பதில்லை.
உம்மைப் பின்பற்ற நாங்கள் ஊக்கமுள்ளவர்களாக இல்லை.
    எனவே நீர் எங்களிடமிருந்து திரும்பிவிட்டீர்.
எங்கள் பாவங்களினிமித்தம்
    உமக்கு முன்பு நாங்கள் உதவியற்று இருக்கிறோம்.
ஆனால் கர்த்தாவே! நீர் எங்களது தந்தை.
    நாங்கள் களிமண்ணைப்போன்றவர்கள்.
நீர் தான் குயவர்.
    எங்கள் அனைவரையும் உமது கைகள் செய்தன.
கர்த்தாவே! எங்களோடு தொடர்ந்து கோபங்கொள்ளவேண்டாம்.
    நீர் என்றென்றும் எமது பாவங்களை நினைவுகொள்ளவேண்டாம்.
தயவுசெய்து எங்களைப் பாரும்!
    நாங்கள் உமது ஜனங்கள்.
10 உமது பரிசுத்தமான நகரங்கள் காலியாக உள்ளன.
    இப்பொழுது, அந்நகரங்கள் வனாந்திரங்களைப்போன்றுள்ளன.
    சீயோன் ஒரு வனாந்திரம். எருசலேம் அழிக்கப்படுகிறது.
11 பரிசுத்த ஆலயத்தில் உம்மை எங்கள் முற்பிதாக்கள் தொழுதுகொண்டார்கள்.
    அந்த ஆலயம் எங்களுக்கு மிக உயர்வானது.
எங்களது பரிசுத்தமான ஆலயம் நெருப்பால் எரிக்கப்பட்டது.
    எங்களுக்கிருந்த நற்செயல்கள் எல்லாம் இப்பொழுது அழிக்கப்பட்டன.
12 இவையனைத்தும் எப்பொழுதும் எங்களிடம் அன்பு காட்டுவதிலிருந்து உம்மை விலக்குமோ?
    நீர் தொடர்ந்து எதுவும் பேசாமல் இருப்பீரோ?
    நீர் என்றென்றும் எங்களைத் தண்டிப்பீரோ?

1 தீமோத்தேயு 1

நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற இயேசு கிறிஸ்துவும் ஆணை இட்டபடியே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாய் இருக்கிற பவுல்,

விசுவாசத்தில் உண்மையான மகனாக இருக்கும் தீமோத்தேயுவுக்கு எழுதுவது: நமது பிதாவாகிய தேவனாலும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும், இரக்கமும், சமாதானமும் உண்டாவதாக.

தவறான போதனைகளுக்கு எச்சரிக்கை

எபேசு நகரத்தில் நீ இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் மக்கதோனியாவுக்குப் போனபோது நீ அவ்வாறு செய்யும்படி கேட்டேன். எபேசு நகரில் சிலர் தவறானவற்றைப் போதித்து வருகிறார்கள். இது போல் செய்ய வேண்டாம் என்று ஆணையிட்டுச் சொல்லும் பொருட்டு நீ அங்கே தங்கி இரு. உண்மையற்ற கட்டுக்கதைகளைக் கேட்டு காலத்தை வீணாக்க வேண்டாம் என்றும், குடும்ப வரலாற்றுப் பட்டியல்களைக் கேட்க வேண்டாம் என்றும் கூறு. அவை வெறும் விவாதங்களை மட்டுமே உருவாக்கும். அவை தேவனுடைய பணிக்கு உதவாதவை. விசுவாசத்தின் மூலமே தேவனுடைய பணி நடைபெறும். மக்கள் அன்புகொள்ள வேண்டும் என்பதே இக்கட்டளையின் நோக்கம். இந்த அன்பைப் பெற மக்கள் தூய இதயத்தைப் பெற வேண்டும். எது சரியானது என்று எண்ணுகிறார்களோ அதைச் செய்ய வேண்டும். உண்மையான விசுவாசம் கொள்ளவேண்டும். சிலர் இக்காரியங்களைச் செய்யத் தவறினார்கள். ஆகையால் அவர்கள் அதிலிருந்து விலகி ஒன்றுக்கும் உதவாத காரியங்களைப் பற்றி இப்பொழுது பேசுகிறார்கள். அந்த மக்கள் நியாயப்பிரமாண போதகர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தாம் என்ன சொல்கிறோம் என்பது தெரியவில்லை. அதோடு தாம் உறுதியாகச் சொல்கின்றவற்றைப் பற்றியும் புரிந்துகொள்ளவில்லை.

ஒருவன் சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அச்சட்டம் நல்லதென்று அறிந்திருக்கிறோம். சட்டமானது நல்ல மனிதர்களுக்காக உருவாக்கப்படவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். சட்டத்துக்கு எதிரானவர்களுக்காகவும், பின்பற்ற மறுப்பவர்களுக்காகவும் இச்சட்டம் உருவாக்கப்பட்டது. இது தேவனுக்கு எதிரானவர்களுக்காகவும், பாவிகளுக்காகவும், பக்தியில்லாதவர்களுக்காகவும், தூய்மையற்றவர்களுக்காகவும், தம் பெற்றோரைக் கொல்கிறவர்களுக்காகவும், கொலைகாரர்களுக்காகவும் உருவாக்கப்பட்டது. 10 விபசாரம், ஓரினக்கலவி, அடிமை விற்பனை, பொய், ஏமாற்று, தேவனின் உண்மை போதனைக்கு எதிர்ப்பு போன்றவற்றைச் செய்கின்ற மக்களுக்கு உரியது. 11 சொல்லும்படி தேவன் என்னிடம் ஒப்படைத்த நற்செய்தியின் ஒரு பகுதியே என் போதனையாகும். பெருமை மிகு அந்நற்செய்தி மகிமையின் தேவனிடமிருந்து வருகிறது.

தேவனுடைய கிருபைக்காக நன்றி

12 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நான் நன்றி கூறுகிறேன், ஏனெனில் என்னை விசுவாசமுள்ளவனாகக் கண்டுணர்ந்து சேவை செய்யும் பொருட்டு அவர் எனக்கு இப்பணியைக் கொடுத்திருக்கிறார். அவர் எனக்கு பலத்தைக் கொடுத்திருக்கிறார். 13 முன்பு நான் கிறிஸ்துவுக்கு எதிராகப் பேசி துன்பப்படுத்தி, கொடுமையான காரியங்களைச் செய்தேன். ஆனால் தேவன் என்னிடம் கருணையோடு இருந்தார். ஏனென்றால், செய்வதை இன்னதென்று அறியாமல் நான் செய்தேன். அவரை நம்பாதபோது தான் அவற்றைச் செய்தேன். 14 ஆனால் கர்த்தராகிய அவர் தம் முழுமையான கிருபையை எனக்குத் தந்தார். அதோடு கிறிஸ்து இயேசுவில் விசுவாசமும் அன்பும் வந்தது.

15 நான் என்ன சொல்கிறேனோ, அவை உண்மையானவை. நீங்கள் அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். பாவிகளை மீட்பதற்காகவே கிறிஸ்துவாகிய இயேசு இந்த உலகத்துக்கு வந்தார். அவர்களுள் நான் மிக மோசமானவன். 16 ஆனால் எனக்குக் கருணை அளிக்கப்பட்டது. அதனால் என் மூலம் இயேசு கிறிஸ்து எல்லையற்ற பொறுமை உடையவர் என்று புலப்படுத்திவிட்டார். கிறிஸ்து தனது பொறுமையை எல்லா பாவிகளிலும் மோசமான என்னிடம் காட்டினார். அவரை விசுவாசிக்கிறவர்கள் நித்திய வாழ்வைப் பெறுவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கும்படியாகக் கிறிஸ்து விரும்பினார். 17 கனமும், மகிமையும் நிரந்தரமான அரசருக்கு இருப்பதாக. அவர் அழிக்கப்படாதவர். பார்க்கப்படாதவர். அந்த ஒரே தேவனுக்கே எப்பொழுதும் கனமும், மகிமையும் உண்டாவதாக.

18 தீமோத்தேயுவே, நீ என் மகனைப் போன்றவன். நான் உனக்கு ஓர் ஆணையிடுகிறேன். உன்னைக் குறித்து முன்பு சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களின்படியே விசுவாசத்திற்காக மாபெரும் போரில் நீ ஈடுபடு. இதுவே எனது ஆணை. 19 தொடர்ந்து விசுவாசம் கொள். உனக்கு நியாயமானது என்று தெரிந்ததைச் செய். சிலர் இதனைச் செய்யவில்லை. எனவே அவர்கள் விசுவாசத்திலிருந்து விலகி விழுந்தார்கள். 20 இமனேயும், அலெக்சாண்டரும் இத்தகு இரண்டு உதாரணங்கள். தேவனுக்கு எதிராகப் பேசக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு நான் அவர்களை சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center