Old/New Testament
கெட்ட ஜனங்கள் தங்கள் வாழ்வை மாற்ற வேண்டும்
59 பார், உன்னைக் காப்பாற்ற கர்த்தருடைய வல்லமை போதுமானதாக உள்ளது. நீ அவரிடம் உதவி கேட்கும்போது அவர் உனக்குப் பதில் தருவார். 2 ஆனால் உனது பாவங்கள் உன்னை தேவனிடமிருந்து விலக்குகிறது. உனது பாவங்கள் கர்த்தருடைய முகத்தை உன்னிடமிருந்து மறையச் செய்கிறது. அப்போது அவர் உனக்குச் செவி கொடுக்கமாட்டார். 3 உனது கைகள் அழுக்காக உள்ளன. அவை இரத்தத்தால் மூடப்பட்டுள்ளன. உனது விரல்கள் குற்றங்களால் மூடப்பட்டுள்ளன. நீ உனது வாயால் பொய்களைச் சொல்லுகிறாய். உனது நாக்கு தீயவற்றைக் கூறுகிறது. 4 எவரும் மற்றவர்களைப் பற்றிய உண்மைகளைக் கூறுவதில்லை, ஜனங்கள் ஒருவரோடு ஒருவர் வழக்காடு மன்றத்தில் மோதுகிறார்கள். அவர்கள் தம் வழக்குகளில் வெல்வதற்கு பொய்யான வாக்குவாதங்களை நம்பி இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் பொய் சொல்லுகிறார்கள். அவர்களுக்கு முழுவதுமாகத் துன்பம் உள்ளது. அவர்கள் தீமையைப் பெற்றெடுக்கிறார்கள். 5 விஷப் பாம்புகளிலிருந்து முட்டைகள் வருவதுபோல இவர்களிடமிருந்து தீமைகள் வருகின்றன. நீ அவற்றில் ஒரு முட்டையைத் உண்டால் மரித்துப்போவாய். அவற்றில் ஒரு முட்டையை உடைத்தால், ஒரு விஷப்பாம்பு வெளியே வரும். ஜனங்கள் பொய் சொல்கிறார்கள். அந்தப் பொய்கள் சிலந்தி வலைபோன்றுள்ளன. 6 அந்த வலைகளை ஆடைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அந்த வலைகளால் நீ உன்னை மூடிக்கொள்ள முடியாது. சிலர் கெட்டச் செயல்களைச் செய்வார்கள். மற்றவர்களுக்குக் கொடுமை செய்யத் தம் கைகளைப் பயன்படுத்துவார்கள். 7 அந்த ஜனங்கள் தம் கால்களைத் தீமைசெய்ய ஓடுவதற்குப் பயன்படுத்துவார்கள். அவர்கள் குற்றம் ஒன்றுமே செய்யாதவர்களைக் கொலை செய்ய விரைவார்கள். அவர்கள் தீய எண்ணங்களைச் சிந்திப்பார்கள். கலகமும் கொள்ளையும் அவர்களின் வாழ்க்கைமுறையாக உள்ளது. 8 அந்த ஜனங்கள் சமாதானத்தின் வழியை அறிவதில்லை. அவர்களின் வாழ்வில் நன்மை இல்லை. அவர்களின் வழிகள் நேர்மையானதாக இல்லை. அவர்கள் வாழ்வதுபோன்று வாழ்கிற எவரும் தம் வாழ்வில் சமாதானத்தை அடையமாட்டார்கள்.
இஸ்ரவேலரின் பாவம் துன்பத்தைக் கொண்டுவருகிறது
9 அனைத்து நேர்மையும், நன்மையும் போனது.
நமக்கு அருகில் இருள் மட்டுமே உள்ளது.
எனவே, நாம் வெளிச்சத்துக்காக காத்திருக்கவேண்டும்.
நாம் பிரகாசமான வெளிச்சத்தை எதிர்பார்க்கிறோம்.
ஆனால், நம்மிடம் இருப்பதெல்லாம் இருள்தான்.
10 கண்கள் இல்லாத ஜனங்களைப்போன்றிருக்கிறோம்.
நாம் குருடர்களைப்போன்று சுவர்களில் மோதுகிறோம்.
இருட்டில் இருப்பதுபோல இடறிக் கீழே விழுகிறோம்.
பகலிலும்கூட நம்மால் பார்க்க முடிவதில்லை.
மத்தியான வேளையில் நாம் மரித்தவர்களைப்போன்று விழுகிறோம்.
11 நாம் எல்லோரும் மிகுந்த துக்கத்தில் இருக்கிறோம்.
நாம் கரடிகள் மற்றும் புறாக்களைப்போன்று துக்க ஓசைகளைச் எழுப்புகிறோம்.
நாம் ஜனங்கள் நியாயமாயிருக்கும் காலத்திற்காக காத்திருக்கிறோம்.
ஆனால் இதுவரை நியாயமில்லை.
நாம் காப்பாற்றப்படுவதற்காகக் காத்திருக்கிறோம்.
ஆனால், இரட்சிப்பு இன்னும் வெகு தொலைவில் உள்ளது.
12 ஏனென்றால், நாம் நமது தேவனுக்கு எதிராகப் பல தீமைகளைச் செய்திருக்கிறோம்.
நாம் தவறானவர்கள் என்பதை நமது பாவங்கள் காட்டுகின்றன.
இவற்றையெல்லாம் செய்த குற்றவாளிகள் என்பதை நாம் அறிவோம்.
13 நாம் பாவங்கள் செய்து கர்த்தருக்கு எதிராகத் திரும்பினோம்.
நாம் அவரை விட்டுத் திரும்பி அவரை விட்டு விலகினோம்.
நாம் தீயவற்றுக்குத் திட்டமிட்டோம்.
தேவனுக்கு எதிராக இருக்கும் செயல்களுக்குத் திட்டமிட்டோம்.
நம்மிடம் இவற்றைப் பற்றிய எண்ணங்கள் உண்டு.
நமது இதயத்தில் இவற்றைப்பற்றி திட்டமிட்டோம்.
14 நம்மிடமிருந்து நீதி திரும்பிவிட்டது.
நேர்மையானது வெகு தொலைவில் உள்ளது.
உண்மையானது தெருக்களில் விழுந்து கிடக்கின்றது.
நன்மையானது நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
15 உண்மை போய்விட்டது.
நன்மை செய்யவேண்டும் என்று முயற்சி செய்கிறவர்கள் கொள்ளையடிக்கப்படுகிறார்கள்.
கர்த்தர் பார்த்தார்.
அவரால் எந்த நன்மையும் கண்டுகொள்ள முடியவில்லை.
கர்த்தர் இதனை விரும்பவில்லை.
16 கர்த்தர் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
ஜனங்களுக்கு உதவி செய்ய ஒருவனும் நிற்பதைக் கண்டுகொள்ள முடியவில்லை.
எனவே, கர்த்தர் தனது சொந்த வல்லமயையும் நீதியையும் பயன்படுத்தினார்.
கர்த்தர் ஜனங்களைக் காப்பாற்றினார்.
17 கர்த்தர் போருக்குத் தயார் செய்தார்.
கர்த்தர் நீதியை மார்புக் கவசமாக்கினார்.
இரட்சிப்பைத் தலைக்குச் சீராவாக்கினார்.
தண்டனைகள் என்னும் ஆடைகளை அணிந்துகொண்டார்.
உறுதியான அன்பைச் சால்வையாகப்போர்த்தினார்.
18 கர்த்தர் தனது பகைவர்கள்மீது கோபம் கொண்டிருக்கிறார்.
எனவே, கர்த்தர் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பார்.
கர்த்தர் தனது பகைவர்கள் மீது கோபம்கொண்டிருக்கிறார்.
எனவே, தொலைதூர இடங்களிலுள்ள ஜனங்களையும் கர்த்தர் தண்டிப்பார்.
கர்த்தர் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பார்.
19 எனவே, மேற்கே உள்ள ஜனங்கள் அஞ்சி, கர்த்தருடைய நாமத்திற்கு மரியாதை தருவார்கள்.
கிழக்கே உள்ள ஜனங்கள் அஞ்சி, கர்த்தருடைய மகிமைக்கு மரியாதை தருவார்கள்.
கர்த்தர் விரைவில் வருவார்.
கர்த்தர் வேகமாகப் பாயும் ஆறு பலமான காற்றால் அடித்து வருவதுபோல் விரைந்து வருவார்.
20 பிறகு, ஒரு மீட்பர் சீயோனுக்கு வருவார். அவர் பாவம் செய்து
பிறகு தேவனிடம் திரும்பிய யாக்கோபின் ஜனங்களிடம் வருவார்.
21 கர்த்தர் கூறுகிறார், “அந்த ஜனங்களோடு நான் ஒரு உடன்படிக்கைச் செய்வேன். எனது ஆவியும் வார்த்தையும் உனது வாயில் போடப்பட்டுள்ளது. அவை உம்மை விட்டு விலகாது. நான் வாக்களிக்கிறேன். அவை உங்கள் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் பிள்ளைகளிடமும் இருக்கும். இவை உங்களுடன் இப்பொழுதும் என்றென்றும் இருக்கும்.”
தேவன் வந்துகொண்டிருக்கிறார்
60 “எருசலேமே! என் வெளிச்சமே! எழு!
உனது வெளிச்சம் (தேவன்) வந்துகொண்டிருக்கிறது.
கர்த்தருடைய மகிமை உன் மேல் ஒளிவீசும்.
2 இப்போது பூமியை இருள் மூடியிருக்கிறது.
ஜனங்கள் இருளில் உள்ளனர்.
ஆனால் கர்த்தர் உன்மேல் ஒளிவீசுகிறார்.
அவரது மகிமை உன்மேல் தோற்றம் தரும்.
3 தேசங்கள், உனது வெளிச்சத்திடம் (தேவன்) வரும்.
அரசர்கள், உனது பிரகாசமான வெளிச்சத்திடம் வருவார்கள்.
4 உன்னைச் சுற்றிப் பார்!
ஜனங்கள் ஒன்றுகூடி உன்னிடம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் உனது மகன்கள், வெகு தொலைவிலிருந்து வருகிறார்கள்.
உனது மகள்களும் அவர்களோடு வருகிறார்கள்.
5 “இது எதிர்காலத்தில் நடைபெறும்.
அப்போது, நீ உனது ஜனங்களைக் காண்பாய். உனது முகம் மகிழ்ச்சியுடன் பிரகாசிக்கும்.
முதலில் நீ பயப்படுவாய்!
ஆனால் பிறகு நீ கிளர்ச்சியடைவாய்.
கடல்களைத் தாண்டி வரும் ஜனங்களின் கூட்டம் உன் முன் இருக்கும்.
பலநாட்டு ஜனங்களும் உன்னிடம் வருவார்கள்.
6 மீதியான் ஏப்பாத் நாடுகளில் உள்ள ஒட்டகக் கூட்டங்கள் உனது நாட்டைக் கடக்கும்.
சேபாவிலிருந்து நீள வரிசையாக ஒட்டகங்கள் வரும்.
அவர்கள் பொன்னையும் நறுமணப் பொருட்களையும் கொண்டுவருவார்கள்.
ஜனங்கள் கர்த்தரைத் துதித்துப் பாடுவார்கள்.
7 கேதாரிலுள்ள அனைத்து ஆடுகளையும் சேகரித்து ஜனங்கள் உன்னிடம் தருவார்கள்.
நெபாயோத்திலிருந்து அவர்கள் ஆட்டுக் கடாக்களைக் கொண்டுவருவார்கள்.
எனது பலிபீடத்தில் அந்த மிருகங்களை நீங்கள் பலியிடுவீர்கள்.
நான் அவற்றை ஏற்றுக்கொள்வேன்.
எனது அற்புதமான ஆலயத்தை
மேலும் நான் அழகுபடுத்துவேன்.
8 ஜனங்களைப் பாருங்கள்!
மேகங்கள் விரைவாக வானத்தைக் கடப்பதுபோன்று அவர்கள் உன்னிடம் விரைந்து வருகின்றனர்.
புறாக்கள் தம் கூடுகளுக்குப் பறந்து போவதுபோல் போகின்றனர்.
9 எனக்காகத் தொலைதூர நாடுகள் எல்லாம் காத்திருக்கின்றன.
பெரிய சரக்குக் கப்பல்களும் பயணத்திற்குத் தயாராக உள்ளன.
அக்கப்பல்கள் தொலை தூர நாடுகளிலிருந்து, உனது பிள்ளைகளைக் கொண்டுவரத் தயாராக உள்ளன.
அவர்கள் பொன்னையும், வெள்ளியையும் தங்களோடு எடுத்து வந்து
உங்கள் தேவனாகிய கர்த்தரும், இஸ்ரவேலின் பரிசுத்தருமானவரை மகிமைப்படுத்துவார்கள்.
கர்த்தர் உனக்காக அற்புதச் செயல்களைச் செய்கிறார்.
10 மற்ற நாடுகளில் உள்ள பிள்ளைகள், உனது சுவர்களை மீண்டும் கட்டுவார்கள்.
அவர்களின் அரசர்கள் உனக்குச் சேவைசெய்வார்கள்.
“நான் கோபமாக இருந்தபோது, நான் உன்னைக் காயப்படுத்தினேன்.
ஆனால் இப்போது, நான் உன்னிடம் தயவாயிருக்க விரும்புகிறேன்.
எனவே உனக்கு நான் ஆறுதல் செய்வேன்.
11 உனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.
அவை, இரவு அல்லது பகல் எவ்வேளையிலும் மூடப்படாதவை.
நாடுகளும் அரசர்களும் தங்கள் செல்வங்களை உனக்குக் கொண்டுவருவார்கள்.
12 உனக்குச் சேவைசெய்யாத
எந்த நாடும், இராஜ்யமும் அழிக்கப்படும்.
13 லீபனோனில் உள்ள மிகச்சிறந்த பொருட்கள் உனக்குக் கொடுக்கப்படும்.
ஜனங்கள் உனக்கு தேவதாரு, பாய்மரம், புன்னை போன்ற மரங்களைக் கொண்டுவருவார்கள்.
இம்மரங்கள் எனது பரிசுத்தமான இடத்தைக் கட்டவும் மேலும் அழகுபடுத்தவும் பயன்படும்.
இந்த இடம் சிங்காசனத்திற்கு முன்பு உள்ள சிறு நாற்காலிபோல் இருக்கும்.
நான் இதற்கு பெருமதிப்பு கொடுப்பேன்.
14 கடந்த காலத்தில், ஜனங்கள் உன்னைக் காயப்படுத்தினார்கள்,
அந்த ஜனங்கள் இப்பொழுது உன் முன்னால் பணிவார்கள்.
கடந்த காலத்தில், ஜனங்கள் உன்னை வெறுத்தனர்.
அந்த ஜனங்கள் உன் காலடியில் பணிவார்கள்.
அவர்கள் உன்னை ‘கர்த்தருடைய நகரம்’
‘இஸ்ரவேலுடைய பரிசுத்தமானவரின் சீயோன்’ என்றும் அழைப்பார்கள்.
15 “நீ மீண்டும் தனியாகக் கைவிடப்படமாட்டாய்.
நீ மீண்டும் வெறுக்கப்படமாட்டாய்.
நீ மீண்டும் வெறுமையாக்கப்படமாட்டாய்.
நான் என்றென்றும் உன்னை பெரியவனாக்குவேன்.
நீ என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பாய்.
16 உனக்குத் தேவையான அனைத்தையும் நாடுகள் தரும்.
இது குழந்தை தன் தாயிடமிருந்து பால் குடிப்பதுபோன்று இருக்கும்.
ஆனால் நீ அரசர்களிடமிருந்து செல்வத்தைக் குடிப்பாய்.
பிறகு நீ, அது நான் என்றும் உன்னைக் காப்பாற்றும் கர்த்தர் என்றும் அறிந்துகொள்வாய்.
யாக்கோபின் பெரிய தேவன் உன்னைக் காப்பாற்றுகிறவர், என்பதை நீ அறிந்துகொள்வாய்.
17 “இப்போது உன்னிடம் வெண்கலம் உள்ளது.
நான் உனக்குப் பொன்னைக் கொண்டுவருவேன்.
இப்போது, உன்னிடம் இரும்பு உள்ளது.
நான் உனக்கு வெள்ளியைக் கொண்டுவருவேன்.
நான் உனது மரத்தை வெண்கலமாக மாற்றுவேன்.
நான் உனது கற்களை இரும்பாக மாற்றுவேன்.
நான் உனது தண்டனைகளைச் சமாதானம் ஆக்குவேன்.
ஜனங்கள் இப்போது, உன்னைப் புண்படுத்துகிறார்கள். ஆனால், ஜனங்கள் உனக்காக நல்லவற்றைச் செய்வார்கள்.
18 உனது நாட்டில் வன்முறைபற்றிய செய்திகள் இனி இராது.
உனது நாட்டை ஜனங்கள் மீண்டும் தாக்கி உனக்குள்ளதைப் பறிக்கமாட்டார்கள்.
நீ உனது சுவர்களுக்கு ‘இரட்சிப்பு’ என்றும்
உனது வாசல்களுக்கு ‘துதி’ என்றும் பெயரிடுவாய்.
19 “பகலில் இனி சூரியன் உனக்கு வெளிச்சத்தைத் தராது.
இரவில் சந்திரன் இனி உனக்கு வெளிச்சத்தைத் தராது.
ஏனென்றால், என்றென்றும் கர்த்தரே உனக்கு வெளிச்சமாய் இருப்பார்.
உனது தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.
20 உனது சூரியன் மீண்டும் அஸ்தமிக்காது.
உனது சந்திரன் மீண்டும் மறையாது.
ஏனென்றால், கர்த்தரே என்றென்றும் உன் வெளிச்சமாய் இருப்பார்!
உனது துக்கத்திற்குரிய காலம் முடிந்துவிட்டது.
21 “உனது ஜனங்கள் அனைவரும் நல்லவர்கள் ஆவார்கள்.
அந்த ஜனங்கள் பூமியை என்றென்றும் பெறுவார்கள்.
நான் அந்த ஜனங்களைப் படைத்தேன்.
அவர்கள் அற்புதமான செடிகள். நான் அவர்களை எனது கைகளினால் படைத்தேன்.
22 மிகச் சிறிய குடும்பம்கூட மிகப்பெரிய கோத்திரமாக வளரும்.
சிறிய குடும்பங்கள் வலிமை மிகுந்த நாடாகும்.
காலம் சரியாகும்போது நான் சீக்கிரமாய் வருவேன்.
நான் இவற்றையெல்லாம் நடக்கும்படிச் செய்வேன்.”
விடுதலைப்பற்றிய கர்த்தருடைய செய்தி
61 கர்த்தருடைய ஊழியன் கூறுகிறான், “எனது கர்த்தராகிய ஆண்டவர், என் மீது அவருடைய ஆவியை வைத்தார். தேவன் என்னை ஏழை ஜனங்களுக்கு நற்செய்திகளைச் சொல்லவும், துக்கமுள்ளவர்களுக்கு ஆறுதலளிக்கவும் தேர்ந்தெடுத்தார். கட்டப்பட்டவர்களிடம் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றும் சிறைப்பட்டவர்களிடம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் சொல்ல தேவன் என்னை அனுப்பினார். 2 கர்த்தர் எப்பொழுது தமது தயவைக் காட்டுவார் என்று தெரிவிக்க தேவன் என்னை அனுப்பினார். தேவன் எப்பொழுது தீயவர்களைத் தண்டிப்பார் என்பதைத் தெரிவிக்க தேவன் என்னை அனுப்பினார். துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளிக்க தேவன் என்னை அனுப்பினார். 3 சீயோனிலுள்ள துக்கப்பட்ட ஜனங்களிடம் தேவன் என்னை அனுப்பினார். நான் அவர்களைக் கொண்டாட்டத்திற்கு தயார் செய்வேன். நான் அவர்கள் தலையிலிருந்து சாம்பலை எடுத்துவிட்டு அவர்களுக்கு கிரீடத்தைக் கொடுப்பேன்.நான் அவர்களின் துக்கத்தை எடுத்துவிட்டு மகிழ்ச்சியின் எண்ணெயைக் கொடுப்பேன். நான் அவர்களின் துயரத்தை எடுத்துவிட்டு கொண்டாட்டத்தின் ஆடைகளைக் கொடுப்பேன். நான் ‘நல்ல மரங்கள்’ என்றும் ‘கர்த்தருடைய அற்புதமான செடிகள்’ என்றும் அந்த ஜனங்களுக்குப் பெயரிட தேவன் என்னை அனுப்பினார்”.
4 “அந்தக் காலத்தில், அழிந்த பழைய நகரங்கள் மீண்டும் கட்டப்படும். அவை ஆரம்பத்தில் இருந்ததுபோலவே புதியதாக்கப்படும். பற்பல ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட நகரங்கள் எல்லாம் புதியவைபோலக் கட்டப்படும்.
5 “பிறகு, உனது பகைவர்கள் உன்னிடம் வந்து உன் ஆடுகளைக் மேய்ப்பார்கள். உனது பகைவர்களின் பிள்ளைகள் உனது வயல்களிலும் தோட்டங்களிலும் வேலை செய்வார்கள். 6 ‘கர்த்தருடைய ஆசாரியர்கள்’ என்றும், ‘நமது தேவனுடைய ஊழியர்கள்’ என்றும் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். பூமியின் அனைத்து நாடுகளிலுமுள்ள செல்வங்களும் உனக்கு வரும். நீ இவற்றைப் பெற்றதைப்பற்றி பெருமை அடைவாய்.
7 “கடந்த காலத்தில், மற்றவர்கள் உன்னை அவமானப்படுத்தி, உன்மீது கெட்டவற்றைச் சொன்னார்கள். மற்ற எந்த ஜனங்களையும் விட நீ மிகுதியாக அவமானப்பட்டாய். எனவே, இரண்டு மடங்கு மிகுதியாகப் பெறுவாய். நீ என்றென்றும் மகிழ்ச்சியைப் பெறுவாய். 8 இது ஏன் நடக்கும்? ஏனென்றால், நானே கர்த்தர்! நான் நியாயத்தை நேசிக்கிறேன். நான் திருட்டையும் தவறான அனைத்தையும் வெறுக்கிறேன். எனவே, நான் ஜனங்களுக்குரிய சம்பளத்தை அவர்களுக்கு கொடுப்பேன். நான் எனது ஜனங்களோடு ஒரு உடன்படிக்கையை என்றென்றைக்குமாகச் செய்வேன். 9 அனைத்து நாடுகளிலும் உள்ள ஒவ்வொருவரும் எனது ஜனங்களை அறிவார்கள். எனது நாட்டிலுள்ள பிள்ளைகளை ஒவ்வொருவரும் அறிவார்கள். அவர்களைப் பார்க்கிற எவரும் கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கிறார் என்பதை அறிவார்கள்.”
தேவனுடைய ஊழியர் இரட்சிப்பையும் நன்மையையும் கொண்டுவருவார்
10 “கர்த்தர் என்னை மிக மிக மகிழ்ச்சியுடையவராகச் செய்கிறார்.
என் தேவனுக்குள் என் ஆத்துமா மகிழ்ச்சியடைகிறது.
கர்த்தர் இரட்சிப்பாகிய ஆடையை என் மேல் அணிவிக்கிறார்.
அந்த ஆடைகள் திருமணத்தில் ஒருவன் அணிகிற மென்மையான ஆடையைப்போன்றது.
கர்த்தர் என்மீது நீதியின் சால்வையை அணிவிக்கிறார்.
அச்சால்வை மணமகளும், மணமகனும் திருமணத்தில் அணியும் அழகிய ஆடையைப்போன்றது.
11 தாவரங்கள் வளர பூமி காரணமாக இருந்தது.
ஜனங்கள் தோட்டத்தில் விதைகளைத் தூவினார்கள்.
தோட்டம் அந்த விதைகளை வளர வைத்தது. அதே வழியில் கர்த்தர் நீதியை வளரச் செய்வார்.
அனைத்து நாடுகளிலும் கர்த்தர் துதியை வளரச் செய்வார்.”
எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்
3 சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். கர்த்தரின் போதனை தொடர்ந்து வேகமாகப் பரவவேண்டும். அப்போதனையை மக்கள் ஏற்று கனப்படுத்த வேண்டும். உங்களிடம் அது பரவி இருப்பதுபோன்று மற்றவர்களிடமும் பரவவேண்டும். இதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். 2 கெட்ட, தீய மனிதர்களிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். (எல்லா மக்களும் கர்த்தரிடம் விசுவாசம் வைக்கவில்லை)
3 ஆனால் கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் உங்களுக்கு பலத்தைக் கொடுத்து தீமையினின்று உங்களைப் பாதுகாப்பார். 4 மேலும், நாங்கள் வழி காட்டியபடியே நீங்கள் நடந்துகொள்கிறீர்கள் என்றும், இனி மேலும் நடந்துகொள்வீர்கள் என்றும் உங்களைக் குறித்து கர்த்தருக்குள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். 5 தேவனுடைய அன்புக்குள்ளும், கிறிஸ்துவின் பொறுமைக்குள்ளும் உங்கள் இதயம் இருக்கக் கர்த்தர் வழிகாட்ட வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறோம்.
வேலைக்கான பொறுப்புகள்
6 சகோதர சகோதரிகளே! நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தால் உங்களுக்கு ஆணை இடுகிறோம். வேலை செய்ய மறுக்கிற விசுவாசியிடம் இருந்து விலகிச் செல்லுங்கள். வேலை செய்ய மறுக்கிறவர்கள், எங்களிடமிருந்து நீங்கள் பெற்ற போதனையைப் பின்பற்றுகிறவர்கள் அல்ல. 7 நாங்கள் வாழ்வது போன்றே நீங்களும் வாழவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களோடு நாங்கள் இருந்தபோது சோம்பேறிகளாக இருந்ததில்லை. 8 அடுத்தவர்கள் உணவை உண்டபோது அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் மேலும் மேலும் வேலை செய்தோம். எனவே, எவருக்கும் தொந்தரவு தந்ததில்லை. நாங்கள் இரவும் பகலுமாக உழைத்தோம். 9 எங்களுக்கு உதவும்படி உங்களிடம் கேட்க எங்களுக்கு உரிமை இருந்தது. ஆனால் எங்கள் தேவைக்கு நாங்களே வேலை செய்தோம். எனவே உங்களுக்கு முன்மாதிரியாக நாங்கள் இருந்தோம். இதனை நீங்கள் பின்பற்றவேண்டும். 10 “ஒரு மனிதன் வேலை செய்யாவிடில் அவன் உண்ணக்கூடாது” என்று உங்களோடு இருந்தபோது நாங்கள் இந்த விதியைத் தந்தோம்.
11 உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் உழைக்க மறுப்பதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள் எதுவும் செய்வதில்லை. அவர்கள் ஏனைய மக்களின் வாழ்வில் குறுக்கிடுபவர்களாக இருக்கிறார்கள். 12 மற்றவர்களுக்குத் தொந்தரவு தர வேண்டாம் என்று அவர்களுக்கு ஆணை இடுகிறோம். உழைத்து உங்கள் உணவை சம்பாதித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் இதனைக் கேட்டுக்கொள்கிறோம். 13 சகோதர சகோதரிகளே! நல்லவற்றைச் செய்வதில் சோர்வு அடையாதீர்கள்.
14 இந்த நிருபத்தில் சொல்லப்பட்டவற்றிற்கு எவனொருவன் பணிய மறுக்கிறானோ அவன் யாரென்று அறிந்துகொள்ளுங்கள். அவனோடு சேராதீர்கள். பிறகு அதற்காக அவன் வெட்கப்படுவான். 15 ஆனால் அவனை ஒரு பகைவனைப் போல நடத்தாதீர்கள். ஒரு சகோதரனைப் போன்று எச்சரிக்கை செய்யுங்கள்.
இறுதி வார்த்தைகள்
16 சமாதானத்தின் கர்த்தர் உங்களுக்கு எப்பொழுதும் சமாதானத்தைத் தருவாராக. அவர் எப்பொழுதும் எல்லா வழியிலும் சமாதானத்தைத் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.
17 பவுலாகிய நான் என் சொந்தக் கையாலேயே இவ்வாழ்த்துக்களை எழுதி முடிக்கிறேன். என் அனைத்து நிருபங்களிலும் இம்முறையில் தான் நான் கையெழுத்திடுகிறேன். நான் எழுதும் விதம் இதுவே.
18 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
2008 by World Bible Translation Center