Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 56-58

அனைத்து தேசங்களும் கர்த்தரைப் பின்பற்றும்

56 கர்த்தர் இவற்றைச் சொன்னார், “அனைத்து ஜனங்களிடமும் நியாயமாக இருங்கள், நீதியானவற்றைச் செய்யுங்கள். ஏனென்றால், எனது இரட்சிப்பு விரைவில் உனக்கு வரும். உலகம் முழுவதற்கும் எனது இரட்சிப்பு விரைவில் காட்டப்படும்.” ஓய்வு நாளில் தேவனுடைய சட்டங்களுக்கு அடிபணிந்து வாழ்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான். தீமை செய்யாதவன் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

யூதரல்லாத சிலர் கர்த்தரோடு தாங்களாகவே சேர்ந்துகொள்வார்கள். அவர்கள், “கர்த்தர் தமது ஜனங்களோடு எங்களைச் சேர்த்துக்கொள்ளமாட்டார்” என்று சொல்லமாட்டார்கள். “நான் ஒரு காய்ந்த மரத்துண்டு. நான் குழந்தைகளைப் பெற முடியாதவன்” என்று அலிகள் சொல்லக்கூடாது.

4-5 அலிகள் இவ்வாறு சொல்லமாட்டார்கள். ஏனென்றால், கர்த்தர் கூறுகிறார், “ஓய்வு நாளில் அலிகளில் சிலர், என் உடன்படிக்கைகளுக்கு அடிபணிகிறார்கள். அவர்கள் நான் விரும்புகின்றவற்றைச் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் உண்மையில் என் உடன்படிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள். எனவே, நான் ஆலயத்தில் ஒரு ஞாபகக் கல்லை அவர்களுக்காக வைப்பேன். அவர்களின் பெயர் என் நகரத்தில் நினைவுகூரப்படும். ஆம், நான் அந்த அலிகளுக்கு மகன்கள் மகள்கள் ஆகியோரைவிடச் சிறந்ததான சிலவற்றைக் கொடுப்பேன். நித்தியமான ஒரு பெயரை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் எனது ஜனங்களிடமிருந்து வெட்டப்படமாட்டார்கள்.”

கர்த்தரோடு யூதரால்லாத சில ஜனங்களும் சேருவார்கள். அவர்கள் இதைச் செய்வார்கள். எனவே, அவருக்குத் தொண்டு செய்யமுடியும். கர்த்தருடைய நாமத்தை நேசிக்கின்றனர். அவர்கள் தாங்களாகவே கர்த்தரோடு அவரது ஊழியக்காரர்களாகச் சேருவார்கள். அவர்கள் ஓய்வுநாளை வழிபாட்டுக்குரிய சிறந்த நாளாக எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் தொடர்ந்து எனது உடன்படிக்கையை (சட்டம்) நெருக்கமாகப் பின்பற்றுவார்கள். கர்த்தர் கூறுகிறார், “எனது பரிசுத்தமான மலைக்கு நான் அந்த ஜனங்களை அழைத்து வருவேன். ஜெபக்கூடத்தில் அவர்களை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வேன். அவர்கள் தரும் காணிக்கைகளும் பலிகளும் என்னைத் திருப்திப்படுத்தும் எனென்றால், எனது ஆலயம் எல்லா நாடுகளுக்குமான ஜெபவீடாக அழைக்கப்படும்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

இஸ்ரவேல் ஜனங்கள் தம் நாட்டை விட்டுப்போக வற்புறுத்தப்பட்டனர். ஆனால் மீண்டும் கர்த்தர் அவர்களை ஒன்று சேர்த்துவிடுவார். கர்த்தர், “நான் மீண்டும் இந்த ஜனங்களை ஒன்று சேர்ப்பேன்” என்று கூறுகிறார்.

காட்டு மிருகங்களே, வாருங்கள்.
    உண்ணுங்கள்!
10 காவல்காரர்கள் (தீர்க்கதரிசிகள்) குருடராய் இருக்கிறார்கள்.
    அவர்களுக்குத் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை.
அவர்கள் குரைக்காத நாய்களைப்போன்றவர்கள்.
    அவர்கள் தரையில் கிடந்து தூங்குகிறார்கள்.
    அவர்கள் தூங்குவதை நேசிக்கிறார்கள்.
11 அவர்கள் பசித்த நாய்களைப்போன்றவர்கள்.
    அவர்கள் எப்பொழுதும் திருப்தி அடையமாட்டார்கள்.
மேய்ப்பர்களுக்கு என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை.
    அவர்கள் தம் ஆடுகளைப்போன்றுள்ளனர். அவை எப்பொழுதும் அலைந்துகொண்டிருக்கின்றன.
அவர்கள் பேராசைக்காரர்கள்.
    அவர்கள் அனைவரும் தங்கள் திருப்திக்காகச் செய்ய விரும்புகின்றனர்.
12 அவர்கள் வந்து சொல்கிறார்கள், “நான் கொஞ்சம் திராட்சைரசம் குடிப்பேன், நான் கொஞ்சம் மது குடிப்பேன்.
    நான் நாளையும் இதனையே செய்வேன். இன்னும் அதிகமாகக் குடிப்பேன்.”

இஸ்ரவேலர்கள் தேவனைப் பின்பற்றவில்லை

57 நீதிமான்கள் அழிந்துவிட்டனர்.
    எவரும் கவனிக்கவில்லை.
நல்லவர்கள் ஒன்று கூடியிருக்கின்றனர்.
    ஆனால் ஏனென்று புரிந்துகொள்வதில்லை.

கஷ்டங்கள் வருகிறதென்றும்,
    அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் ஒன்று கூடியிருக்கிறார்களென்பதையும் அறிந்துகொள்ளவில்லை.
ஆனால் சமாதானம் வரும்.
    ஜனங்கள் தம் சொந்தப் படுக்கையில் ஓய்வுகொள்வார்கள்.
    தேவன் விரும்பும் வழியில் அவர்கள் வாழ்வார்கள்.
“சூனியக்காரியின் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்!
    உங்கள் தந்தை விபச்சாரம் செய்தான்.
    உங்கள் தாயும் விபச்சாரத்திற்காகத் தன் உடலை விற்றவள். இங்கே வாருங்கள்!
நீங்கள் கெட்டவர்கள்.
    பொய்யான பிள்ளைகளாகிய நீங்கள் என்னை பரிகாசம் செய்கிறீர்கள்.
நீங்கள் எனக்கு எதிராக வாயைத் திறக்கிறீர்கள்.
    நீங்கள் என்னைப் பார்த்து நாக்கை நீட்டுகிறீர்கள்.
ஒவ்வொரு பச்சையான மரத்தினடியிலும் நீங்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள்.
    ஒவ்வொரு ஓடை அருகிலும் பிள்ளைகளைக் கொல்கிறீர்கள்.
    அவர்களைப் பாறைகளில் பலி கொடுக்கிறீர்கள்.
ஆறுகளில் உள்ள வழு வழுப்பான கற்களை நீங்கள் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள்.
    அவற்றைத் தொழுதுகொள்ள அவற்றின் மீது திராட்சைரசத்தை ஊற்றுகிறீர்கள்.
அவற்றிற்கு நீங்கள் பலி கொடுக்கிறீர்கள்.
    ஆனால், அந்தப் பாறைகளே நீ பெற்றுக்கொள்ளும் எல்லாம் ஆகும்.
இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தும் என்று நினைக்கிறாயா?
    இல்லை. இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தாது.
ஒவ்வொரு மலையிலும் குன்றுகளிலும் உனது படுக்கையை நீ அமைக்கிறாய்.
    அந்த இடங்களுக்கு நீ ஏறிப்போய் பலிகளைத் தருகிறாய்.
பிறகு நீ அந்தப் படுக்கையைப் பெற்று எனக்கு எதிராக, அந்தத் தெய்வங்களை நேசித்து பாவம் செய்கிறாய்.
    அந்தத் தெய்வங்களை நேசிக்கிறாய்.
அவற்றின் நிர்வாண உடல்களைப் பார்த்து நீ சந்தோஷப்படுகிறாய்.
    நீ என்னோடு இருந்தாய்.
ஆனால் என்னைவிட்டு அவற்றோடு இருக்கிறாய்.
    என்னை நினைவுப்படுத்துகிறவற்றை நீ மறைத்துவிடுகிறாய்.
கதவுகளுக்கும், நிலைகளுக்கும் பின்னால் அவற்றை மறைக்கிறாய்.
    பிறகு, நீ அந்தப் பொய்த் தெய்வங்களிடம் சென்று அவற்றோடு ஒப்பந்தம் செய்துகொள்கிறாய்.
நீ உனது தைலத்தையும், வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தி மோளேகுக்காக அழகுபடுத்துகிறாய்.
    தொலைதூர நாடுகளுக்கு உனது தூதுவர்களை அனுப்பினாய்.
    உன் செய்கை உன்னை மரண இடமான பாதாளம்வரை கொண்டுபோய்விடும்.
10 இவற்றைச் செய்ய நீங்கள் கடுமையாக உழைத்திருக்கவேண்டும்.
    ஆனால், நீ எப்பொழுதும் சோர்வடைந்ததில்லை.
நீ புதிய பலத்தைக் கண்டுகொண்டாய்.
    ஏனென்றால், நீ அவற்றில் மகிழ்ச்சியடைந்தாய்.
11 என்னை நீ நினைக்கவில்லை.
    என்னை நீ கண்டுகொள்ளவும் இல்லை.
எனவே யாரைப்பற்றி நீ கவலைப்பட்டாய்?
    நீ யாருக்கு அஞ்சிப் பயப்பட்டாய்?
    நீ ஏன் பொய் சொன்னாய்?
கவனி! நான் நீண்ட காலமாக அமைதியாக இருக்கிறேன்.
    நீ என்னை மகிமைப்படுத்தவில்லை.
12 உனது நல்ல வேலைகளைப்பற்றி நான் சொல்ல முடிந்தது.
    நீ செய்த மதத் தொடர்பானவற்றையும் சொல்ல முடிந்தது.
    ஆனால், அவை பயனற்றவை.
13 உனக்கு உதவி தேவைப்படும்போது,
    அந்தப் பொய்த் தெய்வங்களிடம் கதறுகிறாய். அவை உன்னைச் சுற்றியுள்ளன.
    அவை உனக்கு உதவட்டும்.
ஆனால், நான் உனக்குக் கூறுகிறேன். அவற்றைக் காற்று அடித்துப்போகும்.
    உன்னிடமிருந்து இவற்றையெல்லாம் சிறு காற்று கொண்டுபோகும்.
ஆனால், என்னைச் சார்ந்திருக்கிற ஒருவன்
    நான் வாக்குப்பண்ணின பூமியைப் பெறுவான்.
    அப்படிப்பட்டவன் எனது பரிசுத்தமான மலையைப் பெறுவான்.”

கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார்

14 சாலைகளைச் சுத்தம் செய்க!
சாலைகளைச் சுத்தம் செய்க!
    எனது ஜனங்களுக்கு வழி தெளிவாக இருக்கும்படி தடைகளை நீக்குங்கள்!

15 தேவன் உயர்ந்தவர்!
    உன்னதமானவர், தேவன் என்றென்றும் ஜீவிக்கிறார்.
    தேவனுடைய நாமம் பரிசுத்தமானது.
தேவன் கூறுகிறார், “நான் உயர்ந்த பரிசுத்தமான இடத்தில் வாழ்கிறேன்.
    ஆனால், அதோடு துக்கமும் பணிவும்கொண்ட ஜனங்களோடும் வாழ்கிறேன்.
நான் உள்ளத்தில் பணிவுள்ள ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுப்பேன்.
    நான் தங்கள் இருதயங்களில் துக்கமுள்ள ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுப்பேன்.
16 நான் என்றென்றும் தொடர்ந்து போரிடமாட்டேன்.
    நான் எப்பொழுதும் கோபமாய் இருக்கமாட்டேன்.
நான் தொடர்ந்து கோபமாக இருந்தால்,
    எனக்கு முன்பாக மனிதனின் ஆவியும், நான் அவர்களுக்குத் கொடுத்த ஆத்துமாவும் சாகும்.
17 இந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அது எனக்குக் கோபமூட்டியது.
    எனவே, நான் இஸ்ரவேலைத் தண்டித்தேன்.
நான் அவனிடமிருந்து திரும்பினேன். ஏனென்றால் நான் கோபமாக இருந்தேன்.
    இஸ்ரவேல் என்னைவிட்டு விலகியது.
    இஸ்ரவேல் முரட்டாட்டம் செய்து, தனக்கு இஷ்டமானதை செய்தது.
18 இஸ்ரவேல் எங்கு சென்றாலும் நான் பார்த்தேன். எனவே, நான் அவனைக் குணப்படுத்துவேன்.
    (மன்னிப்பேன்) நான் அவனை நடத்தி அவனுக்கு ஆறுதல் கூறுவேன்.
அவன் சமாதானம் அடையுமாறு வார்த்தைகளைச் சொல்வேன்.
    பிறகு, அவனும் அவனது ஜனங்களும் துக்கத்தை உணரமாட்டார்கள்.
19 நான் அவர்களுக்குச் ‘சமாதானம்’ எனும் புதிய வார்த்தையைக் கற்றுத் தருவேன்.
    என்னருகிலே உள்ள ஜனங்களுக்குச் சமாதானத்தைத் தருவேன்.
தொலை தூரத்திலுள்ள ஜனங்களுக்கும் சமாதானத்தைத் தருவேன்.
    நான் அந்த ஜனங்களைக் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்).”
    கர்த்தர் தாமே இவற்றைச் சொன்னார்.

20 ஆனால் தீய ஜனங்கள் கொந்தளிப்பான கடலைப்போன்றவர்கள்.
    அவர்களால் அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கமுடியாது.
    அவர்கள் கோபத்தோடு மண்ணைக் கலக்கும் கடலைப்போன்று உள்ளனர்.
21 “தீய ஜனங்களுக்கு சமாதானம் இல்லை”
    என்று என் தேவன் கூறுகிறார்.

தேவனைப் பின்பற்றுமாறு ஜனங்களுக்குச் சொல்லப்பட வேண்டும்

58 உன்னால் முடிந்தவரை சத்தமிடு!
    நீயாக நிறுத்தாதே! எக்காளம் போன்று உரக்கச் சத்தமிடு!
ஜனங்கள் செய்த தவறுகளைப்பற்றி அவர்களுக்குக் கூறு!
    யாக்கோபின் குடும்பத்திற்கு அவர்களின் பாவத்தைப்பற்றிக் கூறு!
பிறகு அவர்கள் என்னைத் தொழுதுகொள்ள ஒவ்வொரு நாளும் வருவார்கள்.
    எனது வழிகளை அந்த ஜனங்கள் கற்றுக்கொள்ள விரும்புவார்கள்.
அவர்கள் நேர்மையாக வாழும் தேசமாவார்கள்.
    தேவனுடைய நல்ல கட்டளைகளைப் பின்பற்றுவதை அவர்கள் விடமாட்டார்கள்.
அவர்களை நேர்மையாக நியாயந்தீர்க்குமாறு என்னைக் கேட்பார்கள்.
    அவர்கள் தேவனிடம் அவர் கொடுக்கும் நேர்மையான முடிவுகளுக்காகப்போக விரும்புவார்கள்.

இப்போது, அந்த ஜனங்கள், “உமக்கு மரியாதை செலுத்துவதற்காக நாங்கள் சாப்பிடுவதை நிறுத்துகிறோம். எங்களை ஏன் பார்க்கவில்லை? நாங்கள் உமக்கு மரியாதை செலுத்த எங்கள் உடலைக் காயப்படுத்துகிறோம். நீர் ஏன் எங்களைக் கண்டுகொள்ளவில்லை?” என்று கூறுகின்றனர்.

ஆனால் கர்த்தர் கூறுகிறார்: “நீங்கள் உங்களையே திருப்திப்படுத்திக்கொள்ள சிறப்பு நாட்களில் சாப்பிடாமல் இருக்கிறீர்கள். நீங்கள் சொந்த உடல்களை அல்ல, உங்கள் வேலைக்காரர்களையே தண்டிக்கிறீர்கள். நீங்கள் பசியோடு இருக்கிறீர்கள். ஆனால், உணவுக்காக அன்று. நீங்கள் வாதம் செய்யவும் சண்டை செய்யவும் பசியாய் இருக்கிறீர்கள், அப்பத்துக்காக அல்ல. உங்கள் தீய கைகளால் ஜனங்களை அடிக்கப் பசியாய் இருக்கிறீர்கள். நீங்கள் உணவு உண்டதை நிறுத்துவது, எனக்காக அல்ல. நீங்கள் உங்கள் குரலைப் பயன்படுத்தி என்னைத் துதிக்க விரும்புவதில்லை. அந்தச் சிறப்பான நாட்களில் சாப்பிடாமல் இருந்து ஜனங்கள் தம் உடலை வருத்திக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?ஜனங்கள் சோகமாகத் தோற்றமளிப்பதை விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா?ஜனங்கள் வாடிய செடிகளைப்போன்று தலை குனிந்து துக்கத்துக்கான ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஜனங்கள் தம் துக்கத்தைக் காட்ட சாம்பலில் உட்கார்ந்திருப்பதை நான் விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? இதையே உங்கள் சிறப்பான உபவாச நாட்களில் நீங்கள் செய்கிறீர்கள். கர்த்தர் இதைத்தான் விரும்புகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

“நான் விரும்புகின்ற சிறப்பான ஒரு நாளை உங்களுக்குச் சொல்வேன். ஜனங்களை விடுதலை பெறச்செய்யும் நாள். ஜனங்களின் சுமைகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒரு நாளை நான் விரும்புகிறேன். துன்பப்படுகிற ஜனங்களை நீங்கள் விடுதலை செய்யும் நாளை சிறப்பானதாக விரும்புகிறேன். அவர்களின் தோள்களிலிருந்து சுமையை எடுத்துவிடும் ஒரு நாளை நான் விரும்புகிறேன். நீங்கள் உங்கள் உணவை பசித்தவர்களோடு பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் வீடற்ற ஏழை ஜனங்களைக் கண்டுபிடித்து, அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதை நான் விரும்புகிறேன். ஆடையில்லாத ஒரு மனிதனை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் ஆடைகளை அவனுக்குக் கொடுங்கள். அவர்களுக்கு உதவாமல் ஒளிந்துகொள்ளாதீர்கள். அவர்கள் உங்களைப்போன்றவர்களே.”

நீங்கள் இவற்றைச் செய்தால், உங்களது வெளிச்சம் விடியற்கால சூரியனைப்போன்று ஒளிவீசத் தொடங்கும். பிறகு, உங்கள் காயங்கள் குணமாகும். உங்கள் நன்மை (தேவன்) உங்களுக்கு முன்னால் நடந்து செல்லும். கர்த்தருடைய மகிமை உங்களைப் பின்தொடர்ந்துவரும். பிறகு நீங்கள் கர்த்தரை அழைப்பீர்கள். கர்த்தர் உங்களுக்குப் பதில் சொல்வார். நீ கர்த்தரிடம் சத்தமிடுவாய். அவர் “நான் இங்கே இருக்கிறேன்!” என்பார்.

ஜனங்களுக்குத் துன்பங்களையும், சுமைகளையும் கொடுப்பதை நிறுத்தவேண்டும். நீங்கள் அநியாயமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், மற்றவர்களைக் குறைசொல்வதையும் நிறுத்த வேண்டும். 10 பசியாயிருக்கிற ஜனங்களைப் பார்த்து நீ வருத்தப்படவேண்டும். அவர்களுக்கு உணவு தர வேண்டும். துன்பப்படுகிறவர்களுக்கு நீ உதவ வேண்டும். அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.அப்போது உனது வெளிச்சம் இருளில் பிரகாசிக்கும். உனக்கும் துக்கம் இருக்காது. நீ நண்பகலில் உள்ள சூரியனைப்போன்று பிரகாசமாக இருப்பாய்.

11 கர்த்தர் எப்பொழுதும் உன்னை வழிநடத்துவார். வறண்ட நிலங்களில் அவர் உனது ஆத்துமாவைத் திருப்திப்படுத்துவார். உனது எலும்புகளுக்கு கர்த்தர் பெலன் தருவார். அதிகத் தண்ணீருள்ள தோட்டத்தைப்போன்று நீ இருப்பாய். எப்பொழுதும் தண்ணீருள்ள ஊற்றினைப்போன்று நீ இருப்பாய்.

12 உனது நகரங்கள் பல ஆண்டுகளுக்கு அழிக்கப்பட்டிருக்கும். ஆனால், புதிய நகரங்கள் கட்டப்படும். இந்நகரங்களின் அஸ்திபாரங்கள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இருக்கும். நீ, “வேலிகளை கட்டுகிற ஒருவன்” என்று அழைக்கப்படுவாய். நீ, “சாலைகளையும் வீடுகளையும் கட்டுபவன்” என்றும் அழைக்கப்படுவாய்.

13 ஓய்வுநாளில் தேவனுடைய சட்டத்திற்கு எதிராகப் பாவம் செய்வதை எப்பொழுது நீ நிறுத்துகிறாயோ அப்போது இது நிகழும். அந்தச் சிறப்பு நாளில் உன்னை நீயே திருப்திபடுத்திக்கொள்ளும் செயல்கள் செய்வதை எப்பொழுது நிறுத்துவாயோ, அப்போது இது நடக்கும். ஓய்வுநாளை மகிழ்ச்சியான நாள் என்றும் நீ எண்ணவேண்டும். கர்த்தருடைய சிறப்பான நாளை நீ மகிமைப்படுத்த வேண்டும். மற்ற நாட்களில் நீ சொல்வதையும், செய்வதையும் அந்தச் சிறப்புநாளில் செய்யாமல் நீ அதனை மகிமைப்படுத்தவேண்டும்.

14 பின் நீ கர்த்தரை உன்னிடம் தயவாயிருக்குமாறு கேட்கலாம். அவர் உன்னைப் பூமிக்கு மேலுள்ள உயரமான இடங்களுக்கு எடுத்துச்செல்வார். உனது தந்தை யாக்கோபிற்குரிய அனைத்தையும் அவர் தருவார். கர்த்தர்தாமே இவற்றைச் சொன்னார். எனவே இவை நடக்கும்.

2 தெசலோனிக்கேயர் 2

தீயசெயல்கள் நிகழும்

சகோதர, சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவது பற்றிச் சில காரியங்கள் சொல்ல வேண்டியது உள்ளன. நாம் எப்போது அவரோடு ஒன்று சேருவோம் என்பது பற்றிப் பேச நாங்கள் விரும்புகிறோம். கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள். சிலர் இதனைத் தீர்க்கதரிசனமாகவோ, செய்தியாகவோ சொல்லலாம், அல்லது ஒருவன் எங்களிடத்தில் இருந்து கூட ஒரு கடிதம் வந்ததாகக் கூறி உங்களை ஏமாற்றப் பார்க்கலாம். எவரும் உங்களை எவ்விதத்திலும் முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் விசுவாச மறுதலிப்பும், அழிவின் மகனாகிய பாவமனிதனும் தோன்றும் வரை அந்த நாள் வராது. பாவமனிதன் நரகத்துக்கு உரியவன். அவன் தேவனுக்கும் மனிதர்களின் வழிபாடுகளுக்கும் எதிரானவன். அவன் தேவனுடைய ஆலயத்திற்கும் சென்று அங்கே உட்காருவான். பிறகு, தன்னை தேவனைவிட உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்வான்.

இக்காரியங்கள் நிகழும் என்பது பற்றி முன்னரே நான் உங்களிடம் கூறினேன், ஞாபகம் இருக்கிறதா? அவனை இப்போது தடுத்து நிறுத்தி இருப்பது யாரென்று உங்களுக்குத் தெரியும். அவன் இப்போது தடுக்கப்பட்டிருப்பது சரியான நேரத்தில் வெளிப்படும் பொருட்டுத்தான். பாவத்தின் இரகசிய சக்தி ஏற்கெனவே உலகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அவனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை உடையவர் ஒருவரே! அவன் முழுமையாகத் தன் வழியில் இருந்து விலக்கப்படும்வரை அவனைத் தடுத்து நிறுத்துவார் அவர். பிறகு அந்தப் பாவ மனிதன் வெளிப்படுவான். கர்த்தராகிய இயேசு தன் வாயில் இருந்து வரும் சுவாசத்தினால் அவனைக் கொல்வார். அவர் தன் பெருமைமிகு வருகையின் மூலமே அந்தப் பாவமனிதனை அழிப்பார்.

சாத்தானின் சக்தியாலேயே பாவமனிதன் வருவான். அவனுக்குப் பெரும் சக்தி இருக்கும். அதனால் போலி அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வான். 10 பாவ மனிதன் எல்லாவிதமான பாவங்களையும் செய்து ஆன்மீக அளவில் தான் வஞ்சிக்கும் மக்களை ஏமாற்ற பல தந்திரங்கள் செய்வான். உண்மையை நேசிக்க மறுத்ததால் அம்மக்கள் ஆன்மீக அளவில் தொலைந்துபோனவர்கள் ஆகிறார்கள். (உண்மையை நேசித்திருந்தால் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள்.) 11 ஆனால் அவர்கள் உண்மையை நேசிக்க மறுத்தார்கள். எனவே, அவர்கள் பொய்யை நம்பத்தக்கதாகப் போலி நம்பிக்கை என்னும் ஆற்றலை அவர்களுக்குள் தேவன் அனுப்புகிறார். 12 எனவே, உண்மையை நம்பாத மக்கள் எல்லாரும் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் உண்மையை நம்பவில்லை. பாவச் செயல்கள் செய்வதிலே மகிழ்ந்தார்கள்.

மீட்கப்படுவதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்

13 சகோதர, சகோதரிகளே! கர்த்தர் உங்களிடம் அன்புடன் இருக்கிறார். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே தேவன் ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார். ஆகவே, உங்களுக்காக எப்பொழுதும் நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற பரிசுத்த ஆவியானவராலும், உண்மையின் மீது நீங்கள் வைக்கும் விசுவாசத்தாலும் இரட்சிக்கப்படுகிறீர்கள். 14 அந்த இரட்சிப்பை அடைய உங்களை தேவன் அழைத்தார். நாங்கள் பரப்புகிற நற்செய்தியைப் பயன்படுத்தி நீங்கள் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டு தேவன் உங்களை அழைத்தார். 15 சகோதர சகோதரிகளே! ஆகையால் உறுதியாய் நில்லுங்கள். எங்கள் போதனைகளில் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். அவற்றை நாங்கள் பிரசங்கங்கள் மூலமும், நிருபங்களின் மூலமும் உங்களுக்குப் போதித்திருக்கிறோம்.

16-17 நம்மை நேசித்தும், நமக்கு நல்ல விசுவாசத்தைக் கொடுத்தும், எக்காலத்திலும் தொடர்கிற ஆறுதலை வழங்கியும் வருகிற இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தரும், நம் பிதாவாகிய தேவனும் தொடர்ந்து உங்களை ஆறுதல்படுத்தவும், நீங்கள் சொல்கிற, மற்றும் செய்கிற ஒவ்வொரு நற்செயலிலும் உங்களை வலிமையுறச் செய்யவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center