Old/New Testament
53 நாங்கள் சொல்வதை யார் உண்மையில் நம்பினார்கள்? கர்த்தருடைய தண்டனையை உண்மையில் யார் ஏற்றுக்கொண்டார்கள்?
2 கர்த்தருக்கு முன்னால் அவர் சிறு செடியைப்போன்று வளர்ந்தார். வறண்ட பூமியில் அவர் வேர் விட்டு வளருவது போன்றிருந்தார். அவர் சிறப்பாகக் காணப்படவில்லை. அவருக்குத் தனியான விசேஷ மகிமை காணப்படவில்லை. அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க சிறப்பான உருவம் அவருக்கு இல்லை. 3 ஜனங்கள் அவரைக் கேலி செய்தனர். அவரது நண்பர்கள் விலகினார்கள். அவர் மிகுதியான வலிகொண்ட மனிதராக இருந்தார். அவர் நோயை நன்றாக அறிந்திருந்தார். ஜனங்கள் அவரைப் பார்க்காமல் அசட்டை செய்தனர். நாம் அவரைக் கவனிக்கவில்லை.
4 ஆனால், அவர் நமது நோய்களை எடுத்து தனதாக்கிக்கொண்டார். அவர் நமது வலியை எடுத்துக்கொண்டார். தேவன் அவரைக் தண்டித்துவிட்டார் என்று நாம் நினைத்தோம். அவர் செய்தவற்றுக்காக தேவன் அவரை அடித்தார் என்று நாம் நினைத்தோம். 5 ஆனால், நாம் செய்த தவறுகளுக்குத் துன்பப்படவே அவர் வேதனையைப் பெற்றார். நமது குற்றங்களுக்காக அவர் நசுக்கப்பட்டார். நாம் கொண்ட கடனுக்காக நமது தண்டனை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவரது காயங்களால் நாம் சுகமடைந்திருக்கிறோம். (மன்னிக்கப்பட்டோம்). 6 ஆனால், இதனைச் செய்தபிறகு நாம் ஆடுகளைப்போல அலைந்துகொண்டிருந்தோம். நம்மில் ஒவ்வொருவரும் நமது சொந்த வழியில் சென்றோம். கர்த்தர் நம் குற்றத்திலிருந்து நம்மை விடுதலை செய்து நமது குற்றங்களை அவர்மீது போட்ட பிறகும் நாம் இதனைச் செய்தோம்.
7 அவர் பாதிக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொல்லப்படுவதற்காக கொண்டுப்போகப்படும் ஆட்டுக்குட்டியைப்போன்று, அவர் எதுவும் சொல்லவில்லை! தனது மயிரைக் கத்தரிக்கும்போது சத்தமிடாமல் இருக்கும் ஆட்டைப்போல் அவர் அமைதியாக இருந்தார்! அவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தன் வாயைத் திறக்கவில்லை. 8 மனிதர்கள் அவரைப் பலவந்தமாகப் பிடித்தனர், அவரை அவர்கள் நேர்மையாக நியாயந்தீர்க்கவில்லை. எவரும் அவரது எதிர்காலக் குடும்பத்தைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால், அவர் உயிரோடு வாழ்கிறவர்களின் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டார். எனது ஜனங்களின் பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார்.
9 அவர் மரித்தார், செல்வந்தர்களோடு புதைக்கப்பட்டார். அவர் தீயவர்களோடு புதைக்கப்பட்டார். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் எப்பொழுதும் பொய் சொன்னதில்லை, இருந்தாலும் இவை அவருக்கு ஏற்பட்டன.
10 அவரை நசுக்கிவிட கர்த்தர் முடிவுசெய்தார். அவர் துன்பப்படவேண்டும் என்று கர்த்தர் முடிவு செய்தார். எனவே அந்தத் தாசன் தன்னைத்தானே மரிக்க அனுமதித்தார். ஆனால், மிக நீண்ட காலத்திற்குப் புதிய வாழ்க்கை வாழ்வார். அவரது ஜனங்களை அவர் பார்ப்பார். அவர் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்பினாரோ அதனை அவர் முழுமையாகச் செய்துமுடிப்பார்.
11 அவர் தனது ஆத்துமாவில் பல்வேறு வகையில் துன்புறுவார். ஆனால் அவர் நடக்கும் நல்லவற்றைப் பார்ப்பார். அவர் தான் கற்றுக்கொண்டவற்றின் மூலம் திருப்தி அடைவார்.
எனவே, “எனது நல்ல தாசன் பல ஜனங்களைக் குற்றத்திலிருந்து விடுவிப்பார். அவர்களது பாவங்களை அவர் எடுத்துக்கொள்வார். 12 இந்தக் காரணத்திற்காக, என் ஜனங்களிடையே அவரை நான் பெரிய மனிதராக்குவேன். அவர் பலமுள்ள ஜனங்களோடு அனைத்து பொருள்களின் பங்கையும் பெறுவார். நான் இதனை அவருக்காகச் செய்வேன். ஏனென்றால், அவர் ஜனங்களுக்காக தன் உயிரைக் கொடுத்து மரித்தார். ஜனங்கள் அவரை ஒரு பயங்கரக் குற்றவாளி எனக் கூறினார்கள். ஆனால் உண்மையென்னவெனில் அவர் பல்வேறு ஜனங்களின் பாவங்களை தம்மேல் சுமந்துகொண்டார். இப்போது அவர் பாவம் செய்த ஜனங்களுக்காகப் பேசுகிறார்.”
தேவன் அவரது ஜனங்களை வீட்டிற்குக் கொண்டு வருகிறார்
54 “பெண்களே மகிழ்ச்சியோடு இருங்கள்!
உங்களுக்கு எந்தப் பிள்ளைகளும் இல்லை.
ஆனால், நீங்கள் மிக மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்!”
கர்த்தர் கூறுகிறார்,
“தனியாக இருக்கும் பெண் கணவனோடு இருக்கும் பெண்ணைவிட மிகுதியான பிள்ளைகளைப் பெறுவாள்.”
2 “உனது கூடாரத்தைப் பெரிதாக்கு.
உனது கதவுகளை அகலமாகத் திற.
உன் வீட்டில் சேர்த்துக்கொள்வதை நிறுத்தாதே.
உனது கூடாரத்தைப் பெரிதாகவும் பலமாகவும் செய்.
3 ஏனென்றால், நீ மிகவும் வளருவாய்.
உனது பிள்ளைகள் பல நாடுகளிலிருந்து ஜனங்களைப் பெறுவார்கள்.
உனது பிள்ளைகள், அழிந்துபோன இந்த நகரத்தில் மீண்டும் வாழ்வார்கள்.
4 அஞ்சாதே! நீ ஏமாற்றம் அடையமாட்டாய்.
உனக்கு எதிராக ஜனங்கள் தீயவற்றைச் சொல்லமாட்டார்கள்.
நீ இலச்சையடைவதில்லை.
நீ இளைஞனாக இருந்து அவமானத்தை உணர்ந்தாய்.
ஆனால், இப்போது அந்த அவமானத்தை மறந்துவிட்டாய்.
நீ உன் கணவனை இழந்தபோது அடைந்த அவமானத்தை இப்போது நினைக்கமாட்டாய்.
5 ஏனென்றால், உன் கணவனாகிய ஒருவரே (தேவன்) உன்னைச் செய்தவர்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
இஸ்ரவேலைக் காப்பாற்றுகிறவர் அவர் ஒருவரே.
அவர் இஸ்ரவேலின் பரிசுத்தமானவர்.
அவர் பூமி முழுவதற்குமான தேவன் என்று அழைக்கப்படுவார்.
6 “கணவனால் கைவிடப்பட்ட பெண்ணைப்போன்று நீ இருந்தாய்.
உன் ஆவியில் மிகவும் துக்கமுடையவளாக இருந்தாய்.
ஆனால், கர்த்தர் அவருடையவளாக உன்னை அழைத்தார்.
இளம் வயதில் திருமணம் செய்து, கணவனால் கைவிடப்பட்ட பெண்ணைப்போன்று நீ இருந்தாய்.
ஆனால், தேவன் உன்னை அவருடையவளாக அழைத்தார்.”
7 தேவன் கூறுகிறார், “நான் உன்னை விட்டு விலகினேன்.
ஆனால், அது கொஞ்சக் காலத்திற்குத்தான்.
நான் மீண்டும் உன்னை என்னிடம் கூட்டிக்கொள்வேன்.
நான் உன்னிடம் பெருங்கருணையைக் காட்டுவேன்.
8 நான் மிகவும் கோபம்கொண்டேன்.
கொஞ்ச காலத்திற்கு உன்னிடமிருந்து மறைந்திருந்தேன்.
ஆனால் என்றென்றும் உன்னைத் தயவுடன் ஆறுதல்படுத்துவேன்” உனது மீட்பரான கர்த்தர் இதனைக் கூறினார்.
9 தேவன் கூறுகிறார், “நினைவுகொள்!
நோவாவின் காலத்தில் நான் உலகத்தை வெள்ளத்தால் தண்டித்தேன்.
ஆனால், நான் மீண்டும் இந்த உலகத்தை வெள்ளத்தால் அழிக்கமாட்டேன் என்று நோவாவிற்கு வாக்குறுதி அளித்தேன்!
இதே வழியில், நான் மீண்டும் கோபங்கொண்டு உன்னைக் கடிந்துகொள்வதில்லை என்று வாக்களிக்கிறேன்.”
10 கர்த்தர் கூறுகிறார், “மலைகள் மறைந்து போகலாம்!
குன்றுகள் புழுதி (தூள்) ஆகலாம்! ஆனால், எனது தயவு உன்னைவிட்டு விலகாது!
நான் உன்னோடு சமாதானம் செய்துகொள்வேன்.
அது எப்பொழுதும் முடிவுபெறாது” கர்த்தர் உன்மீது இரக்கம் காட்டுகிறார்.
இவற்றையெல்லாம் சொன்னவர் அவர் ஒருவரே.
11 “ஏழை நகரமே!
பகைவர்கள் புயலைப்போன்று உனக்கு எதிரே வந்தார்கள். எவரும் உனக்கு ஆறுதல் அளிக்கவில்லை.
ஆனால், நான் உன்னை மீண்டும் கட்டுவேன்.
நான் ஒரு அழகான கல்லை உனது சுவர்களுக்கு வைப்பேன்.
நான் நீல ரத்தினக் கற்களைப் பயன்படுத்தி அஸ்திபாரம் அமைப்பேன்.
12 சுவர்களின் உச்சியில் இரத்தினங்களால் செய்த கற்களை வைப்பேன்.
நான் வாசல்களுக்கு மாணிக்கக் கற்களைப் பயன்படுத்துவேன்.
உன்னைச் சுற்றி சுவர்கள் கட்ட விலையுயர்ந்த கற்களைப் பயன்படுத்துவேன்.
13 உனது பிள்ளைகள் தேவனைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கு அவர் கற்பிப்பார்.
உனது பிள்ளைகள் உண்மையான சமாதானத்தை அடைவார்கள்.
14 நீ நன்மையால் கட்டப்படுவாய்.
எனவே நீ கொடுமை மற்றும் அச்சத்திலிருந்து காப்பாற்றப்படுவாய்.
உனக்குப் பயப்படுவதற்கு எதுவுமில்லை.
உன்னை எதுவும் பாதிக்காது.
15 உனக்கு எதிராக எந்தப் படையும் போரிடாது.
எந்தப் படையாவது உன்னைத் தாக்க முயன்றால், நீ அந்தப் படையைத் தோற்கடிப்பாய்.”
16 “பார், நான் கொல்லனைப் படைத்தேன். அவன் நெருப்பை ஊதி மேலும் சூடாக்குகிறான். பிறகு, அவன் சூடான இரும்பை எடுத்து அவனது விருப்பம்போல் கருவிகளைச் செய்கிறான். அதே வழியில் பொருள்களை அழிக்கின்ற அழிவுக்காரனையும் படைத்தேன்.
17 “ஜனங்கள் உனக்கு எதிராகப்போரிட ஆயுதங்களைச் செய்வார்கள். ஆனால், அந்த ஆயுதங்கள் உங்களைத் தோற்கடிக்காது. சிலர் உங்களுக்கு எதிராகச் சிலவற்றை சொல்வார்கள். ஆனால் ஒவ்வொரு மனிதனும் உனக்கு எதிராகப் பேசும்போது அது தவறு என்று காட்டப்படும்.”
கர்த்தர் கூறுகிறார், “கர்த்தருடைய ஊழியர்கள் எதைப் பெறுவார்கள்? என்னிடமிருந்து வரும் நியாயமான நன்மை மட்டும் பெறுவார்கள்.”
திருப்தியளிக்கும் உணவை தேவன் கொடுக்கிறார்
55 “தாகமாயுள்ள ஜனங்களே!
தண்ணீரைக் குடிக்க வாருங்கள்!
உங்களிடம் பணம் இல்லாவிட்டால் வருந்தவேண்டாம்.
வாருங்கள் உங்கள் வயிறு நிறையும்வரை குடியுங்கள், உண்ணுங்கள்!
பாலுக்கும் திராட்சைரசத்திற்கும் விலையில்லை.
2 உண்மையான உணவாக இல்லாதவற்றுக்காக ஏன் நீ உன் பணத்தை வீணடிக்கிறாய்?
உன்னை உண்மையாகவே திருப்தி செய்யாத வேலைகளை ஏன் நீ செய்கிறாய்?
என்னை மிக நெருக்கமாக கவனி! நீ மிக நல்ல உணவை உண்பாய்.
உன் ஆத்துமாவைத் திருப்திப்படுத்தும் உணவை உண்டு மகிழலாம்.
3 நான் சொல்லுகிறவற்றை நெருக்கமாகக் கவனி.
என்னைக் கவனி. அதனால் உன் ஆத்துமா வாழும்.
என்னிடம் வா. நான் என்றென்றும் தொடரும் ஒரு உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.
நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையைப்போன்று அது இருக்கும்.
நான் அவனை நேசிப்பேன், என்றென்றும் அவனுக்கு வேண்டியவனாக இருப்பேன் என்று தாவீதுக்கு வாக்குறுதிச் செய்தேன்.
நீ அந்த உடன்படிக்கையை நம்பலாம்.
4 அனைத்து நாடுகளுக்கும் எனது வல்லமையின் சாட்சியாக நான் தாவீதைப் படைத்தேன்.
பல நாடுகளுக்கு அவன் ஒரு தலைவனாகவும், தளபதியாகவும் வருவான் என்று நான் வாக்களித்தேன்.”
5 உனக்குத் தெரியாத நாடுகள் பல உள்ளன.
ஆனால் அந்த நாடுகளை அழைப்பாய்.
அந்த நாடுகள் உன்னை அறியாது.
ஆனால் அவை உன்னிடம் ஓடிவரும்.
இது நடக்கும், ஏனென்றால், உனது தேவனாகிய கர்த்தர் இதை விரும்புகிறார்.
இது நடக்கும், ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன்னை மகிமைப்படுத்துகிறார்.
6 இது மிக தாமதமாவதற்கு முன்னால் நீ கர்த்தரைத் தேட வேண்டும்.
அவர் அருகில் இருக்கும்போதே, இப்பொழுது நீ அவரை அழைக்கவேண்டும்.
7 கெட்டவர்கள் கெட்ட வழியில் செல்வதை நிறுத்தவேண்டும்.
அவர்கள் தீயவற்றை நினைப்பதை நிறுத்தவேண்டும்.
அவர்கள் மீண்டும் கர்த்தரிடம் வரவேண்டும்.
பிறகு கர்த்தர் அவர்களுக்கு ஆறுதல் தருவார்.
அந்த ஜனங்கள் கர்த்தரிடம் வருவார்கள் ஏனென்றால்,
நமது தேவன் அவர்களை மன்னிக்கிறார்.
ஜனங்கள் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது
8 கர்த்தர் கூறுகிறார், “உங்களது சிந்தனைகள் எனது சிந்தனைகளைப்போன்று இல்லை.
உனது வழிகள் எனது வழிகளைப்போன்றில்லை.
9 வானங்கள் பூமியைவிட உயரமானவை.
அதேபோன்று, என் வழிகள் உன் வழிகளைவிட உயர்வானவை.
என் சிந்தனைகள் உன் சிந்தனைகளைவிட உயர்வானவை” கர்த்தர் தாமே இவற்றைக் கூறினார்.
10 “வானத்திலிருந்து மழையும் பனியும் பெய்கிறது.
அவை தரையைத் தொட்டுத் குளிரச் செய்யும்வரை, திரும்ப வானத்துக்குப்போகாது.
பிறகு தரையில் தாவரங்கள் முளைத்து வளரும்.
இத்தாவரங்கள் விவசாயிகளுக்கு விதைகளை உருவாக்கும்.
ஜனங்கள் இந்தத் தானியங்களைப் பயன்படுத்தி தமக்கு உண்ண அப்பத்தைத் தயார் செய்கிறார்கள்.
11 இதே வழியில், எனது வார்த்தைகள் என் வாயை விட்டு வரும்.
அவை எதையும் செய்யாமல் வெறுமனே என்னிடம் திரும்பாது.
எனது வார்த்தைகள் எதைச் செய்யவேண்டுமென்று நான் அனுப்புகிறேனோ அவற்றைச் செய்யும்!
எனது வார்த்தைகள் எதைச் செய்ய நான் அனுப்பினேனோ அதை வெற்றிகரமாகச் செய்யும்!
12 “எனது வார்த்தைகள்
மகிழ்ச்சியோடு வெளியே சென்று சமாதானத்தைக் கொண்டுவரும்.
மலைகளும் குன்றுகளும் மகிழ்ச்சியோடு ஆடத்தொடங்கும்.
வயலிலுள்ள மரங்கள் எல்லாம் தம் கைகளைத் தட்டும்.
13 முட்செடிப் புதருக்குப் பதிலாக அவ்விடங்களில் பருத்த தேவதாரு மரங்கள் வளரும்.
களைகள் இருந்த இடத்தில் பசுமையான மரங்கள் வளரும்.
இவை கர்த்தருடைய புகழைப் பரப்பும்.
கர்த்தர் வல்லமையுடையவர் என்பதற்கு இவை சான்றாகும். இந்தச் சான்றுகள் ஒருபோதும் அழியாது.”
1 தெசலோனிக்கேயாவில் இருக்கும் சபைக்கு பவுல், சில்வான், தீமோத்தேயு ஆகியோர் எழுதிக்கொள்வது, பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் நீங்கள் இருக்கிறீர்கள்.
2 உங்களுக்கு நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 உங்களுக்காக எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அதுவே செய்வதற்கு உரியது என்பதால் நாங்கள் அதனைச் செய்கின்றோம். உங்கள் விசுவாசம் மேலும் மேலும் வளருவதால் அப்படிச் செய்கிறோம். உங்களில் ஒருவருக்கொருவரிடம் உள்ள அன்பும் வளர்கின்றது. 4 தேவனுடைய ஏனைய சபைகளில் உங்களைப்பற்றி நாங்கள் பெருமையாய்ப் பேசிக்கொள்கிறோம். விசுவாசத்திலும், பலத்திலும் நீங்கள் தொடர்ந்து இருப்பது குறித்து மற்ற சபைகளுக்கு நாங்கள் கூறுகிறோம். நீங்கள் பல உபத்திரவங்களையும். துன்பங்களையும் அடைந்தீர்கள். எனினும் தொடர்ந்து விசுவாசமும் பலமும் உடையவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள்.
தேவனுடைய தீர்ப்பு
5 தேவன் தன் தீர்ப்பில் சரியாக உள்ளார் என்பதற்கு அதுவே நிரூபணமாக இருக்கிறது. தேவன் தன் இராஜ்யத்துக்கு ஏற்றவர்களாக நீங்கள் இருக்கவேண்டும் என விரும்புகிறார். உங்கள் துன்பங்கள் கூட அந்த இராஜ்யத்துக்காகத்தான். 6 எது சரியானதோ அதையே தேவன் செய்வார். உங்களுக்கு யார் துன்பம் தருகிறார்களோ அவர்களுக்கு தேவன் துன்பம் தருவார். 7 துன்பப்படுகிற உங்களுக்கு தேவன் இளைப்பாறுதலைத் தருவார். எங்களுக்கும் சமாதானத்தைத் தருவார். கர்த்தராகிய இயேசுவின் வருகையின்போது தேவன் எங்களுக்கு இந்த உதவியைச் செய்வார். இயேசு பரலோகத்தில் இருந்து வல்லமை வாய்ந்த தம் தேவதூதர்களோடு வருவார். 8 பரலோகத்திலிருந்து அவர் வரும்போது, தேவனை அறியாதவர்களைத் தண்டிப்பதற்காக எரிகின்ற அக்கினியோடும் வருவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்கள் எல்லாரையும் அவர் தண்டிப்பார். 9 என்றென்றும் நித்திய அழிவுகள் நேரும் வகையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் கர்த்தரோடு இருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அவருடைய பெரும் வல்லமையிடம் இருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். 10 தம் பரிசுத்த மக்களோடு மகிமைப்படுத்தப்படவும், எல்லா விசுவாசிகளுக்கும் தம் மகிமையைப் புலப்படுத்தவும் கர்த்தராகிய இயேசு வரும் நாளில் இவை நிகழும். விசுவாசம் உள்ளவர்களெல்லாம் இயேசுவோடு சேர்ந்துகொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அந்த விசுவாசிகளின் கூட்டத்தில் நீங்களும் இருப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் சொன்னவற்றை நீங்கள் விசுவாசித்தீர்கள்.
11 அதற்காகத்தான் நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். உங்களை நல்வழியில் வாழச் செய்யுமாறு நாங்கள் தேவனை வேண்டுகிறோம். இதற்காகவே தேவனால் நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்னும் ஆவல் உங்களிடம் இருக்கிறது. உங்களது விசுவாசம் உங்களைப் பணியாற்ற வைக்கும். மேலும் மேலும் இத்தகைய செயலைச் செய்ய தேவன் உங்களுக்கு உதவுமாறு நாங்கள் அவரை வேண்டுகிறோம். 12 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் உங்களில் மகிமை அடையும் பொருட்டே இவை அனைத்திற்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். உங்களில் அவர் மகிமையடைவார். அவரில் நீங்கள் மகிமையடைவீர்கள். அம்மகிமை நம் தேவனும், கர்த்தருமான இயேசு கிறிஸ்துவின் கிருபையிலிருந்து வருகிறது.
2008 by World Bible Translation Center