Old/New Testament
கர்த்தரே நித்திய சிருஷ்டிகர்
41 கர்த்தர் கூறுகிறார், “தூரத்திலுள்ள நாடுகளே, அமைதியாக இருங்கள் என்னிடம் வாருங்கள்!
நாடுகளே மறுபடியும் தைரியம் கொள்ளுங்கள்.
என்னிடம் வந்து பேசுங்கள். நாம் சந்தித்து கூடுவோம்.
யார் சரியென்று முடிவு செய்வோம்.
2 இந்த வினாக்களுக்கு என்னிடம் பதில் சொல்லுங்கள்.
கிழக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிற மனிதனை எழுப்பியது யார்?
நன்மையானது அவரோடு நடக்கிறது.
அவர் தமது வாளைப் பயன்படுத்தி நாடுகளைத் தாக்குகிறார்.
அவைகள் தூசிபோல ஆகின்றன.
அவர் தமது வில்லைப் பயன்படுத்தி அரசர்களை வென்றார்.
அவர்கள் காற்றால் அடித்துச் செல்லப்படும் துரும்புகளைப்போன்று ஓடிப்போனார்கள்.
3 அவர் படைகளைத் துரத்துகிறார். அவர் காயப்படுத்தவில்லை.
இதற்கு முன்னால் போகாத இடங்களுக்கு எல்லாம் அவர் போகிறார்.
4 இவை நிகழக் காரணமாக இருந்தது யார்?இதனைச் செய்தது யார்?
தொடக்கத்திலிருந்து அனைத்து ஜனங்களையும் அழைத்தது யார்?
கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன்.
கர்த்தராகிய நானே முதல்வர்!
தொடக்கத்திற்கு முன்னரே நான் இங்கே இருந்தேன்.
எல்லாம் முடியும்போதும் நான் இங்கே இருப்பேன்.
5 வெகு தொலைவிலுள்ள இடங்களே பாருங்கள் பயப்படுங்கள்!
பூமியிலுள்ள தொலைதூர இடங்களே அச்சத்தால் நடுங்குங்கள்.
இங்கே வந்து என்னைக் கவனியுங்கள்!” அவர்கள் வந்தார்கள்.
6 “தொழிலாளிகள் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். அவர்கள் பலம் பெற ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தினார்கள். 7 ஒரு வேலைக்காரன் சிலை செதுக்க மரம் வெட்டினான். அவன் தங்க வேலை செய்பவனை உற்சாகப்படுத்தினான். இன்னொரு வேலைக்காரன் சுத்தியலைப் பயன்படுத்தி உலோகத்தை மென்மைப்படுத்தினான். பிறகு, அந்த வேலைக்காரன் அடைக்கல்லில் வேலை செய்பவனை உற்சாகப்படுத்துகிறான். இந்த இறுதி வேலைக்காரன், ‘இந்த வேலை நன்று. இந்த உலோகம் வெளியே வராது’ என்று கூறுகிறான். எனவே, அவன் சிலையை ஒரு பீடத்தின் மேல் அசையாமல் ஆணியால் இறுக்குகிறான். அந்தச் சிலை கீழே விழாது. அது எப்பொழுதும் அசையாது.”
கர்த்தர் மாத்திரமே நம்மைக் காப்பாற்ற முடியும்
8 கர்த்தர் சொல்கிறார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன்.
யாக்கோபே, நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து நீ வந்தாய், நான் ஆபிரகாமை நேசிக்கிறேன்.
9 பூமியில் நீங்கள் வெகு தொலைவில் இருந்தீர்கள்.
நீங்கள் தொலைதூர நாட்டில் இருந்தீர்கள்.
ஆனால் நான் உன்னிடம் தேடிவந்து உன்னை அழைத்துச் சொன்னேன்,
‘நீ எனது ஊழியன்.’
நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நான் உன்னைத் தள்ளிவிடவில்லை!
10 கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.
பயப்படாதே, நான் உனது தேவன்.
நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்திருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன்.
நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன்.
11 பார், சில ஜனங்கள் உன் மீது கோபத்தோடு இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அவமானம் அடைவார்கள்.
உங்கள் பகைவர்கள் மறைந்து தொலைந்து போவார்கள்.
12 நீங்கள் உங்களுக்கு எதிரான ஜனங்களைத் தேடுவீர்கள்.
ஆனால் அவர்களை உங்களால் காணமுடியாது.
உங்களுக்கு எதிராகப்போரிடுகிற அனைவரும் முழுவதுமாக மறைந்துபோவார்கள்.
13 நான் உனது தேவனாகிய கர்த்தர்.
நான் உனது வலது கையைப் பற்றியிருக்கிறேன்.
‘நான் உனக்குச் சொல்கிறேன்: பயப்படாதே!
நான் உனக்கு உதவுவேன்.’
14 விலையேறப்பெற்ற யூதாவே, பயப்படாதே.
எனது அருமை இஸ்ரவேல் ஜனங்களே! கலங்க வேண்டாம்!
நான் உங்களுக்கு உண்மையாகவே உதவுவேன்”.
கர்த்தர் தாமாகவே இவற்றைக் கூறினார்.
“நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும் (தேவன்)
உன்னைக் காப்பாற்றுகிறவரும் இதனைக் கூறுகிறார்.
15 பார்! நான் உன்னை போரடிப்பதற்கான புதிய கருவியாக்குவேன்.
அது கூர்மையான பற்களை உடையது.
விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி போரடிப்பார்கள்.
அவர்கள் தானியத்தை அதிலிருந்து பிரிப்பார்கள்.
நீ மலைகளின் மேல் நடந்து அவற்றை நசுக்குவாய்.
நீ குன்றுகளைப் பதர்களைப்போன்று ஆக்கிவிடுவாய்.
16 நீ அவற்றைக் காற்றில் தூற்றிவிடுவாய்.
அவற்றைக் காற்று அடித்துச்சென்று, சிதறடித்துவிடும்.
பிறகு, நீ கர்த்தருக்குள் மகிழ்ச்சியுடன் இருப்பாய்.
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரைப்பற்றி (தேவன்) நீ மிகவும் பெருமை அடைவாய்”.
17 “ஏழ்மையும் தேவையும் கொண்ட ஜனங்கள் தண்ணீருக்காக அலைவார்கள்.
ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள்.
அவர்கள் தாகமாக இருக்கிறார்கள்.
அவர்களின் நாக்கு உலர்ந்துபோயிற்று.
அவர்களின் ஜெபத்திற்கு இஸ்ரவேலின் தேவனும் கர்த்தருமாகிய நான் பதில் சொல்வேன்.
நான் அவர்களை விடமாட்டேன்.
அவர்கள் மரிக்கவும் விடமாட்டேன்.
18 வறண்ட மலைகளில் நதிகளை நான் பாயச் செய்வேன்.
பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை நான் எழச்செய்வேன்.
வனாந்திரங்களை தண்ணீர் நிறைந்த ஏரியாக நான் மாற்றுவேன்.
வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் இருக்கும்.
19 வனாந்திரங்களில் மரங்கள் வளரும்.
அங்கு கேதுரு மரங்களும், சித்தீம் மரங்களும், ஒலிவ மரங்களும், சைப்பிரஸ் மரங்களும், ஊசி இலை மரங்களும், பைன் மரங்களும் இருக்கச் செய்வேன்.
20 ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள்.
கர்த்தருடைய வல்லமை இவற்றைச் செய்தது என்று அவர்கள் அறிவார்கள்.
ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள்.
அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள், இஸ்ரவேலின் பரிசுத்தமானவர் (தேவன்) இவற்றைச் செய்தார்”.
பொய்த் தெய்வங்களுக்கு கர்த்தர் சவால் விடுகிறார்
21 யாக்கோபின் அரசரான கர்த்தர், “வா, உனது வாதங்களைக் கூறு. உனது சான்றுகளைக் காட்டு. சரியானவற்றை நாம் முடிவு செய்வோம். 22 உங்கள் சிலைகள் (பொய்த் தெய்வங்கள்) வந்து என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் என்ன நடந்தது? எதிர்காலத்தில் என்ன நடக்கும்? எங்களிடம் கூறு. நாங்கள் கடினமாகக் கவனிப்போம். பிறகு அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவோம். 23 என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கும்படி எங்களுக்குக் கூறுங்கள். பிறகு நாங்கள் உங்களை உண்மையான தெய்வங்கள் என்று நம்புவோம். ஏதாவது செய்யுங்கள்! எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், நல்லதோ அல்லது கெட்டதோ! பிறகு நீங்கள் உயிரோடு இருப்பதாக நாங்கள் பார்ப்போம். நாங்கள் உங்களைப் பின்பற்றுவோம்.
24 “பாருங்கள், பொய்த் தெய்வங்களான நீங்கள் ஒன்றுமில்லாமல் இருக்கிறீர்கள்! உங்களால் எதுவும் செய்யமுடியாது! அருவருப்பானவன் மட்டுமே உங்களை வழிபட விரும்புவான்!”
கர்த்தர் தாமே ஒரே தேவன் என நிரூபிக்கிறார்
25 “வடக்கே நான் ஒருவனை எழுப்பினேன் அவன் சூரியன் உதிக்கிற கிழக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறான்.
அவன் எனது நாமத்தைத் தொழுதுகொள்கிறான்.
பானைகளைச் செய்பவன் களிமண்னை மிதிப்பதுபோல
அந்தச் சிறப்பானவன் அரசர்களை அழிப்பான் (மிதிப்பான்).
26 “இது நடைபெறுவதற்கு முன்னால் யார் இதைப்பற்றிச் சொன்னது.
நாம் அவனை தேவன் என்று அழைப்போம்.
எங்களுக்கு இவற்றை உனது சிலைகளில் ஒன்று சொன்னதா? இல்லை! சிலைகளில் எதுவும் எதையும் சொல்லவில்லை.
அந்தச் சிலைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
அந்தப் பொய்த் தெய்வங்கள் நீங்கள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்க முடியாது.
27 கர்த்தராகிய நானே சீயோனிடம் இதைப் பற்றிச் சொன்ன முதல் நபர்.
இந்தச் செய்திகளோடு ஒரு தூதுவனை நான் எருசலேமிற்கு அனுப்பினேன்.
‘பாருங்கள், உங்கள் ஜனங்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்!’”
28 நான் அந்தப் பொய்த் தெய்வங்களைப் பார்த்தேன்.
அவைகளில் ஒன்றும் எதுவும் சொல்லும் வகையில் ஞானமுள்ளவையல்ல.
அவைகளிடம் நான் கேள்விகள் கேட்டேன், அவைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை!
29 அந்தத் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாதவைகள்!
அவைகளால் எதுவும் செய்யமுடியாது!
அந்தச் சிலைகள் முழுமையாகப் பயனற்றவை!
கர்த்தருடைய விசேஷ ஊழியன்
42 “என் தாசனைப் பாருங்கள்!
அவரை நான் ஆதரிக்கிறேன்.
நான் தேர்ந்தெடுத்த ஒருவர் அவரே.
நான் அவரை மிகவும் விரும்புகிறேன்.
அவரில் எனது ஆவியை வைக்கிறேன்.
அவர் நாடுகளுக்கு நியாயமாக நீதி வழங்குவார்.
2 அவர் தெருக்களில் உரக்க பேசமாட்டார்.
அவர் கூக்குரலிடவும்மாட்டார்.
3 அவர் சாந்த குணமுள்ளவர். அவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார்.
அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார்.
அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டுகொள்வார்.
4 உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை.
ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து அவரது போதனைகளை நம்புவார்கள்”.
கர்த்தரே ஆளுகிறார் உலகத்தை உருவாக்கினார்
5 உண்மையான தேவனாகிய கர்த்தர் இவற்றைச் சொன்னார். (கர்த்தர் வானங்களை உருவாக்கினார். கர்த்தர் பூமியின்மேல் வானத்தை விரித்தார். அவர் பூமியின்மேல் எல்லாவற்றையும் செய்தார். கர்த்தர் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் சுவாசத்தைக் கொடுக்கிறார். கர்த்தர் பூமியில் நடமாடுகிற ஒவ்வொரு மனிதருக்கும் ஆவியைக் கொடுக்கிறார்).
6 “கர்த்தராகிய நான், சரியானதைச் செய்ய உன்னை அழைத்தேன்.
நான் உன் கையைப் பற்றிக்கொள்வேன். நான் உன்னைப் பாதுகாப்பேன்.
நான் ஜனங்களோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை பிறருக்குக் காட்டுவதற்கு வெளிப்புற அடையாளமாக நீ இருப்பாய்.
அனைத்து ஜனங்களுக்கும் ஒளி வீசும் விளக்காக நீ இருப்பாய்.
7 குருடர்களின் கண்களை நீ திறப்பாய், அவர்களால் பார்வையைப் பெறமுடியும்.
சிறையில் இருக்கிறவர்களை நீ விடுவிப்பாய்.
பலர் இருளில் இருக்கிறார்கள். அவர்களை அந்தச் சிறையில் இருந்து வெளியே அழைத்து வருவாய்.
8 “நானே கர்த்தர்! எனது நாமம் யேகோவா!
நான் எனது மகிமையை வேறு ஒருவனுக்கும் கொடேன்.
நான் எனக்குரிய பாராட்டை சிலைகளுக்கு (பொய்த் தெய்வங்களுக்கு) கொடேன்.
9 தொடக்கத்தில் சில காரியம் நடைபெறும் என்று சொன்னேன். அவை நடந்தன.
இப்போது, இது நடக்கும் முன்னால்!
நான் சிலவற்றைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.”
இவை எதிர்காலத்தில் நடைபெறும்.
தேவனைத் துதிக்கும் ஒரு பாடல்
10 ஒரு புதிய பாடலை கர்த்தருக்குப் பாடுங்கள்.
தொலைதூர நாடுகளில் உள்ள ஜனங்களே, கடலில் பயணம் செய்கிற ஜனங்களே, கடலில் உள்ள மிருகங்களே, தொலைதூர இடங்களில் உள்ள ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
11 வனாந்திரங்களே, நகரங்களே, கேதாரியரின் வயல்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
சீலோவில் வாழுகின்ற ஜனங்களே!
மகிழ்ச்சியோடு பாடுங்கள்.
உங்கள் மலை உச்சியில் இருந்து பாடுங்கள்.
12 கர்த்தருக்கு மகிமையைக் கொடுங்கள்.
தொலை தூர நாடுகளில் உள்ள ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
13 கர்த்தர் ஒரு பலம் பொருந்திய வீரனைப்போல வெளியே போவார்.
அவர் போர் செய்யத் தயாராக உள்ள வீரனைப்போன்றிருப்பார்.
அவர் மிகுந்த கிளர்ச்சியுள்ளவராக இருப்பார்.
அவர் உரத்த குரலில் சத்தமிடுவார். அவரது பகைவரைத் தோற்கடிப்பார்.
தேவன் மிகவும் பொறுமையானவர்
14 “நீண்ட காலமாக நான் எதையும் சொல்லவில்லை.
என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். நான் எதுவும் சொல்லவில்லை.
ஆனால், இப்போது நான் அலறுகிறேன், ஒரு பெண் பிள்ளை பெறும்போது கதறுவதுபோல,
நான் கடினமாகவும் உரக்கவும் மூச்சுவிடுகிறேன்.
15 நான் மலைகளையும் குன்றுகளையும் அழிப்பேன்.
நான் அங்கே வளருகின்ற தாவரங்களை வாடச் செய்வேன்.
நான் ஆறுகளை வறண்ட நிலமாக்குவேன்.
நான் தண்ணீருள்ள குளங்களையும் வறளச் செய்வேன்.
16 பிறகு, நான் குருடர்களை அவர்கள் அதுவரை அறியாத வழிகளில் நடத்திச் செல்வேன்.
நான் குருடர்களை அவர்கள் அதுவரை சென்றிராத இடங்களுக்கு அழைத்துச் செல்வேன்.
நான் அவர்களுக்காக இருளை வெளிச்சமாக்குவேன்.
நான் கரடு முரடான பாதையை மென்மையாக்குவேன்.
நான் வாக்களித்ததைச் செய்வேன்!
நான் எனது ஜனங்களை விட்டுவிடமாட்டேன்.
17 ஆனால், சிலர் என்னைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள்.
அவர்களிடம் பொன்னால் மூடப்பட்ட சிலைகள், இருக்கின்றன.
‘நீங்களே எங்கள் தெய்வங்கள்’ என்று அவர்கள் அந்தச் சிலைகளிடம் கூறுகின்றனர்.
அந்த ஜனங்கள் அவர்களது பொய்த் தெய்வங்களை நம்புகின்றனர்.
ஆனால் அந்த ஜனங்கள் ஏமாற்றப்படுவார்கள்.
தேவனுக்குச் செவிசாய்க்க இஸ்ரவேலர்கள் மறுத்தார்கள்
18 செவிடர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்!
குருடர்களே என்னைப் பாருங்கள், உங்களால் காணமுடியும்!
19 உலகத்தில் என் தாசனே மிகவும் குருடன்.
இந்த உலகத்திற்கு நான் அனுப்பிய தூதுவனே செவிடன்.
நான் உடன்படிக்கை செய்துக்கொண்ட ‘கர்த்தருடைய தாசனே’ மிகவும் குருடனாயிருக்கின்றான்.
20 எனது தாசன் அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காண்கின்றான்.
ஆனால் அவன் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
அவன் தனது காதுகளால் கேட்க முடியும்.
ஆனால் அவன் நான் சொல்வதைக் கேட்க மறுக்கிறான்”.
21 கர்த்தர் தமது தாசன் நல்லவனாக இருக்க விரும்புகிறார்.
கர்த்தர் தமது அற்புதமான போதனைகளை மகிமைப்படுத்த விரும்புகிறார்.
22 ஆனால் ஜனங்களைப் பாருங்கள்.
மற்ற ஜனங்கள் அவர்களைத் தோற்கடித்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பொருட்களைத் திருடியிருக்கிறார்கள்.
இளைஞர்களெல்லாம் பயப்படுகிறார்கள்.
அவர்கள் சிறைகளுக்குள் அடைப்பட்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் அவர்களிடமிருந்து பணத்தை எடுத்திருக்கிறார்கள்.
அவர்களைக் காப்பாற்ற அங்கே எவருமில்லை.
மற்ற ஜனங்கள் அவர்களின் பணத்தை எடுத்தார்கள்.
“அதனைத் திருப்பிக் கொடு” என்று சொல்ல அங்கே எவருமில்லை.
23 தேவனுடைய வார்த்தைகளை உங்களில் எவரும் கவனித்தீர்களா? இல்லை! ஆனால், நீங்கள் அவரது வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். என்ன நடந்தது என்று சிந்திக்க வேண்டும். 24 யாக்கோபு மற்றும் இஸ்ரவேலிடமிருந்து செல்வத்தை எடுத்துக்கொள்ள ஜனங்களை அனுமதித்தது யார்? கர்த்தர் அவர்களை அனுமதித்தார். நாம் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தோம். எனவே கர்த்தர் நமது செல்வங்களை எடுத்துக்கொள்ளும்படி அனுமதித்துள்ளார். கர்த்தர் விரும்பிய வழியில் இஸ்ரவேல் ஜனங்கள் வாழவில்லை. அவரது போதனைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கவனிக்கவில்லை. 25 எனவே, கர்த்தர் அவர்கள்மீது கோபங்கொண்டார். கர்த்தர் அவர்களுக்கு எதிராக வலிமைமிக்கப்போர்களை உண்டாக்கினார். இஸ்ரவேல் ஜனங்களைச் சுற்றி நெருப்பு சூழ்ந்ததுபோல் இருந்தது. ஆனால் அவர்கள் நிகழ்வதை அறியாமல் இருந்தார்கள். அவர்கள் எரிந்துகொண்டிருப்பதுபோல் இருந்தனர். ஆனால் அவர்கள் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை.
1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும் பிதாவாகிய தேவனுக்குள்ளும் இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தருக்குள்ளும் இருக்கும் தெசலோனிக்கேயாவில் உள்ள சபையோருக்கு எழுதுவது. தேவனுடைய கிருபையும் சமாதானமும் உங்களோடு இருப்பதாக.
வாழ்வும் விசுவாசமும்
2 நாங்கள் பிரார்த்தனை செய்யும்பொழுதெல்லாம் உங்களை நினைவுகூருகிறோம். உங்கள் அனைவருக்காவும் தொடர்ந்து தேவனிடம் நன்றி கூறுகிறோம். 3 பிதாவாகிய தேவனிடம் பிரார்த்தனை செய்யும்பொழுதெல்லாம் விசுவாசத்தினாலும், அன்பினாலும் நீங்கள் செய்தவற்றுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையில் நீங்கள் உறுதியுடன் இருப்பதற்காக நாங்கள் அவருக்கு நன்றி செலுத்துகிறோம்.
4 சகோதர சகோதரிகளே, தேவன் உங்களிடம் அன்பாய் இருக்கிறார். அவர் உங்களைத் தமக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று நாங்கள் அறிவோம். 5 உங்களிடம் நற்செய்தியைக் கொண்டு வந்தோம். ஆனால் நாங்கள் வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை, அதிகாரத்தையும் பயன்படுத்தினோம். பரிசுத்த ஆவியானவரோடும் முழு உறுதியோடும் நாங்கள் அதைக் கொண்டு வந்தோம். உங்களோடு நாங்கள் இருந்தபோது எப்படி வாழ்ந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு உதவும் வகையிலேயே வாழ்ந்தோம். 6 நீங்கள் எங்களைப் போலவும், கர்த்தரைப் போலவும் ஆனீர்கள். நீங்கள் மிகவும் துன்புற்றீர்கள், எனினும் மகிழ்ச்சியோடு போதனைகளை ஏற்றுக்கொண்டீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அந்த மகிழ்ச்சியைத் தந்தார்.
7 மக்கதோனியா, அகாயா ஆகிய நகரங்களில் உள்ள விசுவாசிகளுக்கு நீங்கள் எடுத்துக்காட்டு ஆனீர்கள். 8 உங்கள் மூலம் மக்கதோனியாவிலும், அகாயாவிலும் தேவனுடைய போதனை பரவியது. தேவனுடைய பேரில் உள்ள உங்கள் விசுவாசம் எல்லா இடங்களுக்கும் தெரிய வந்தது. எனவே உங்கள் விசுவாசத்தைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. 9 நீங்கள் எங்களை ஏற்றுக்கொண்ட நல்வழியைப் பற்றி எல்லா இடத்திலும் இருக்கிற மக்கள் கூறுகிறார்கள். நீங்கள் எப்படி உருவ வழிப்பாட்டை நிறுத்தினீர்கள் என்பதையும், உண்மையான, ஜீவனுள்ள தேவனுக்கு சேவை செய்யும் மாற்றத்தைப் பெற்றீர்கள் என்பதையும் கூறுகிறார்கள். 10 உருவ வழிபாட்டை நிறுத்திவிட்டு பரலோகத்திலிருந்து வரப்போகும் தேவனுடைய குமாரனுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள். தேவன் தன் குமாரனை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார். இயேசுவாகிய அவரே, நியாயத்தீர்ப்பு அளிக்கப்போகும் தேவனுடைய கோபத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறவர்.
2008 by World Bible Translation Center