Old/New Testament
வட இஸ்ரவேலுக்கு எச்சரிக்கைகள்.
28 சமாரியாவைப் பாருங்கள்!
எப்பிராயீமின் குடிகார ஜனங்கள் அந்நகரைப்பற்றித் தற்பெருமை கொள்கிறார்கள்.
மலைக்கு மேலே வளமான பள்ளாத்தாக்கு சூழ இருக்கிறது.
சமாரியா ஜனங்கள் தம் நகரத்தை அழகான பூக்களாலான கிரீடம் என்று நினைத்திருக்கின்றனர்.
ஆனால், அவர்கள் திராட்சைரசத்தைக் குடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த “அழகான கிரீடமானது” வாடிப்போகும் செடிபோல் உள்ளது.
2 பார், எனது ஆண்டவர் பலமும் தைரியமும் கொண்டவராக இருக்கிறார்.
அவர் பெருங்காற்றும் கல்மழையும் கொண்ட நாட்டுக்குள் வருவார்.
அவர் ஒரு புயலைப்போன்று நாட்டுக்குள் வருவார்.
அவர் ஒரு சக்திவாய்ந்த ஆறு நாட்டுக்குள் பெருக்கெடுத்து வருவதுபோன்று இருப்பார்.
அவர் அந்தக் கிரீடத்தை (சமாரியா) தரையில் தள்ளுவார்.
3 எப்பிராயீமிலுள்ள குடிகார ஜனங்கள் தமது “அழகான மகுடத்தைப்” பற்றி பெருமை கொள்கிறார்கள்.
ஆனால், அந்த நகரம் மிதியுண்டு போகும்.
4 மலைக்குமேல் வளமான பள்ளத்தாக்கு சுற்றிலும் இருக்க இந்நகரம் உள்ளது.
அந்த “அழகான பூக்களாலான மகுடம்” வாடும் செடியைப்போன்றுள்ளது.
அந்த நகரம் கோடையில் முதலில் பழுத்த அத்திப்பழம் போன்றது.
ஒருவன் அப்பழத்தில் ஒன்றைப் பார்க்கும்போது, அவன் உடனே அதனை எடுத்துச் சாப்பிட்டுவிடுகிறான்.
5 அந்தக் காலத்திலே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “அழகான மகுடமாக” ஆவார். அவர் “ஆச்சரியத்துக்குரிய பூக்களாலான மகுடமாக” விடுபட்ட தன் ஜனங்களுக்கு இருப்பார்.
6 பிறகு கர்த்தர் தமது ஜனங்களை ஆளுகின்ற நீதிபதிகளுக்கு ஞானத்தைக் கொடுப்பார். நகர வாசல்களில் நடைபெறும் போர்களில் கர்த்தர் தம் ஜனங்களுக்குப் பலத்தைக் கொடுப்பார்.
7 ஆனால் இப்போது, அந்தத் தலைவர்கள் குடித்திருக்கிறார்கள். ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும் திராட்சை ரசத்தையும் மதுவையும் குடித்திருக்கிறார்கள். அவர்கள் தடுமாறி கீழே விழுகிறார்கள். தீர்க்கதரிசிகள் தங்கள் கனவுகளைக் காணும்போது குடித்திருக்கிறார்கள். நீதிபதிகள் தங்கள் முடிவை எடுக்கும்போது குடித்திருக்கிறார்கள்.
8 ஒவ்வொரு மேசையும் வாந்தியால் நிறைந்துள்ளது. சுத்தமான இடம் எங்குமே இல்லை.
தேவன் அவரது ஜனங்களுக்கு உதவ விரும்புகிறார்
9 கர்த்தர் ஜனங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க விரும்புகிறார். கர்த்தருடைய போதனைகளை ஜனங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால், ஜனங்களோ சிறு குழந்தைகளைப்போன்று இருக்கின்றனர். அவர்கள் கொஞ்ச காலத்துக்கு முன்னரே பால்குடிப்பதை மறந்த குழந்தைகளைப்போன்று இருக்கிறார்கள். 10 எனவே, கர்த்தர் அவர்களைக் குழந்தைகளாக எண்ணி:
சா லசவ் சா லசவ்
குவா லகுவா குவா லகுவா
சீர் ஷேம் சீர் ஷேம்
11 என்பதுபோன்ற விநோதமான மொழியில் பேசுவார். அவர் அந்த ஜனங்களோடு வேறு மொழிகளையும் பயன்படுத்துவார்.
12 கடந்த காலத்தில் தேவன் அந்த ஜனங்களோடு பேசினார். அவர், “இங்கே ஓய்விடம் உள்ளது. இது சமாதானமான இடம். சோர்ந்துபோன ஜனங்கள் வந்து ஓய்வுகொள்ளட்டும். இது சமாதானத்திற்குரிய இடம்” என்றார்.
ஆனால், அந்த ஜனங்கள் தேவனைக் கவனிக்க விரும்பவில்லை. 13 எனவே, தேவனிடமிருந்து வந்த:
என்பது போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு அந்நிய மொழியைப்போன்று இருந்தது.
ஜனங்கள் தங்கள் சொந்த வழிகளில் நடந்தார்கள். எனவே, ஜனங்கள் பின்னிட்டு விழுந்து தோற்கடிக்கப்பட்டார்கள். ஜனங்கள் வலையில் அகப்பட்டு கைப்பற்றப்பட்டனர்.
தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து எவரும் தப்ப முடியாது
14 கர்த்தருடைய செய்தியை எருசலேமிலுள்ள தலைவர்களாகிய நீங்கள் கேட்கவேண்டும். ஆனால் நீங்கள் அவர் சொல்வதைக் கவனிக்க மறுக்கிறீர்கள்.
15 நீங்கள், “நாங்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எங்களுக்கு மரணத்தின் இடமாகிய பாதாளத்துடன் ஒப்பந்தம் உள்ளது. எனவே நாங்கள் தண்டிக்கப்படமாட்டோம். தண்டனை எங்களைக் கடந்துபோகும். அது எங்களைப் பாதிக்காது. நாங்கள் எங்களது தந்திரங்கள் மற்றும் பொய்களுக்குப்பின் மறைந்து கொள்வோம்” என்று சொல்கிறீர்கள்.
16 ஆதலால், எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார், “நான் சீயோனில் அஸ்திபாரமாக ஒரு கல்லை வைப்பேன். இது ஒரு விலை உயர்ந்த கல்லாக இருக்கும். மிக முக்கியமான கல்லின் மேலேயே எல்லாம் கட்டப்படும். அக்கல்லின்மேல் நம்பிக்கை வைக்கிற எவனும் ஏமாந்து போகமாட்டான்.
17 “சுவர் நேராக இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள ஒரு அளவுக் கருவியை ஜனங்கள் பயன்படுத்துகின்றனர். அதே வழியில் நான் நீதியையும், நன்மையையும் பயன்படுத்தி எது சரியென்று காட்டுகிறேன்.
“தீய ஜனங்களாகிய நீங்கள் உங்கள் தந்திரங்கள் மற்றும் பொய்களுக்குப் பின்னால் மறைகிறீர்கள். ஆனால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். ஒரு புயல்அல்லது வெள்ளம் வருவதுபோன்று வந்து உங்கள் மறைவிடங்களை அழிக்கும். 18 மரணத்தோடு உங்களுக்குள்ள ஒப்பந்தம் நீக்கப்படும். பாதாளத்துடனுள்ள ஒப்பந்தம் உங்களுக்கு உதவாது.
“எவனோ ஒருவன் வந்து உங்களைத் தண்டிப்பான். அவன் உங்களைப் புழுதியாக்கி நடந்து போவான். 19 அப்பகைவன் இரவு பகலாகத் தன் சேனையுடன் உங்கள் நாட்டின் மீது வருவான். இந்தச் செய்தியை அறிபவர் யாராயினும் அச்சத்தால் நடுங்குவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது.
20 “பிறகு, நீங்கள் இந்தக் கதையைப் புரிந்துகொள்வீர்கள்: ஒருவன் அவனை விடச் சிறிய ஒரு படுக்கையில் தூங்க முயல்கிறான். அவனிடம் ஒரு போர்வை உள்ளது. ஆனால் அது அவனை மூடப்போதுமானதாக இல்லை. அந்தப் படுக்கையும் போர்வையும் பயனற்றவை. அவற்றைப்போன்றே உங்கள் ஒப்பந்தங்களும் உள்ளன”.
21 பெராத்சீம் மலையில் கர்த்தர் போர் செய்தது போலவே செய்வார். கிபியோனின் பள்ளத்தாக்கிலே இருந்ததுபோலவே, கர்த்தர் கோபத்தோடு இருப்பார். பிறகு, தான் செய்ய வேண்டியவற்றை கர்த்தர் செய்வார். சில விநோதமானவற்றை கர்த்தர் செய்வார். ஆனால் அவர் தன் வேலையை முடிப்பார். அவரது வேலையும் விநோதமானதாகும். 22 இப்பொழுது, நீங்கள் அவற்றுக்கு எதிராகப்போரிட வேண்டாம். நீங்கள் செய்தால், உங்களைச் சுற்றியுள்ள கயிறுகள் இறுக்கும்.
நான் கேட்ட வார்த்தைகள் மாறாது. அந்த வார்த்தைகள் பூமியை ஆளுகின்ற சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தவை. இது நிகழ்ந்தே தீரும்.
கர்த்தர் சரியாகத் தண்டிக்கிறார்
23 நான் சொல்லிக்கொண்டிருக்கிற செய்தியை நெருக்கமாகக் கவனியுங்கள். 24 எல்லா நேரத்திலும் ஒரு விவசாயி உழுதுகொண்டிருப்பானா? இல்லை. 25 ஒரு விவசாயி பூமியைத் தயார் செய்கிறான், பிறகு அவன் விதைகளை விதைக்கிறான். விவசாயி பல் வேறு வழிகளில் பல்வேறு விதைகளைத் தூவுகிறான். ஒரு விவசாயி உளுந்தைத் தூவுகிறான். சீரகத்தைப்போடுகிறான். வரிசைகளில் கோதுமையை விதைக்கிறான், வாற்கோதுமையை அதற்குரிய சிறப்பான இடத்தில் தூவுகிறான், கம்பை வயலின் ஓரங்களில் விதைக்கிறான்.
26 நமது தேவன் உங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தேவன் தன் ஜனங்களைத் தண்டிக்கும்போது, அவர் நீதியாக இருக்கிறார் என்பதை இந்த உதாரணம் காட்டும். 27 ஒரு விவசாயி உளுந்து தாலத்தாலே போரடிக்கச் செய்வானா? செய்யமாட்டான். ஒரு விவசாயி சீரகத்தின் மேல் வண்டியின் உருளையைச் சுற்றவிடுவானா? இல்லை. உளுந்தைக் கோலினாலும் சீரகத்தை மிலாற்றினாலும் அடிப்பான்.
28 ஒரு பெண் அப்பம் செய்யும்போது, மாவைப் பிசைந்து கையால் அழுத்துவாள். ஆனால் அவள் இதனை எப்பொழுதும் செய்யமாட்டாள். கர்த்தர் இதே வழியில் தன் ஜனங்களைத் தண்டிக்கிறார். அவர் வண்டிச் சக்கரத்தால் அவர்களைப் பயமுறுத்துவார். ஆனால் அவர் முழுமையாக நசுக்குகிறதுமில்லை. அவர் பல குதிரைகள் அவர்களை மிதிக்க விடுகிறதுமில்லை. 29 இப்படி இந்த பாடம் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வருகிறது. கர்த்தர் ஆச்சரியகரமான ஆலோசனைகளைத் தருகிறார். தேவன் உண்மையான ஞானம் உடையவர்.
எருசலேம் மீது தேவனுடைய அன்பு
29 தேவன் கூறுகிறார், “அரியேலைப் பாருங்கள்! தாவீது வாழ்ந்த நகரமே, அரியேல். ஆண்டுதோறும் அவனது விடுமுறைகள் தொடர்ந்து வந்திருக்கின்றன. 2 நான் அரியேலைத் தண்டித்திருக்கிறேன். அந்நகரம் துக்கத்தாலும் அழுகையாலும் நிறைந்திருக்கிறது. ஆனால் அவள் எப்பொழுதும் எனது அரியேலாகவே இருக்கிறாள். 3 அரியேலே, நான் உன்னைச் சுற்றிப் படைகளை வைத்துள்ளேன். நான் உனக்கு எதிராகப்போர்க் கோபுரங்களை எழுப்பினேன். 4 நீ தோற்கடிக்கப்பட்டுத் தரையில் வீழ்த்தப்பட்டாய். இப்பொழுது ஒரு ஆவியின் சத்தத்தைப்போல உனது சத்தம் தரையிலிருந்து எழும்புவதை நான் கேட்கிறேன்”.
5 அங்கே பல அந்நியர்கள் புழுதியின் சிறு துணுக்குகளைப்போல இருக்கிறார்கள். அங்கே சில கொடூரமான ஜனங்கள் காற்றில் பறந்து வரும் பதர்களைப்போன்றுள்ளனர். 6 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உன்னை நில நடுக்கம், இடி, பலத்தகுரல், கூச்சல் ஆகியவற்றால் தண்டிப்பார். அங்கே புயற் காற்று, பெருங்காற்று, நெருப்பு ஆகியவை தோன்றி அழிக்கவும் எரிக்கவும் செய்யும். 7 அரியேலுக்கு எதிராகப் பல நாடுகள் போரிடும். இது இரவில் வருகிற பயங்கரக் கனவு போன்றிருக்கும். படைகள் அரியேலை முற்றுகையிட்டு தண்டித்தன. 8 ஆனால் அப்படைகளுக்கும் இது அத்தகைய கனவாக இருக்கும். அவர்கள் தாம் விரும்புகின்றவற்றைப் பெறுவதில்லை. இது, பசியுள்ளவன் உணவைப்பற்றிக் கனவு காண்பது போலிருக்கும். அவன் எழும்புகிறபோதும் பசியாகவே இருப்பான். இது, தாகமாயுள்ளவன் தண்ணீரைப்பற்றிக் கனவு காண்பது போலிருக்கும். அவன் விழித்தெழுகின்றபோதும் தாகமாகவே இருக்கும். சீயோனுக்கு எதிராகப்போரிடுகிற அனைத்து நாடுகளும் இது போலவே இருக்கும். அந்த நாடுகள் அவை விரும்புவதைப் பெறுவதில்லை.
9 ஆச்சரியப்படுங்கள் பிரமிப்படையுங்கள்.
நீங்கள் நன்றாகக் குடித்திருப்பீர்கள், ஆனால் மதுவினால் அல்ல.
நீங்கள் தள்ளாடி விழுவீர்கள், ஆனால் மதுவினால் அல்ல.
10 கர்த்தர் உங்களைத் தூங்கச் செய்வார்.
கர்த்தர் உங்கள் கண்களை மூடச்செய்வார்.
(தீர்க்கதரிசிகள் உங்கள் கண்களாய் இருக்கிறார்கள்).
கர்த்தர் உங்கள் தலைகளை மூடுவார்.
(தீர்க்கதரிசிகள் உங்கள் தலைகளாய் இருக்கிறார்கள்).
11 இவை நிகழும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். ஆனால் நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய வார்த்தைகள் மூடி முத்திரையிடப்பட்ட புத்தகத்தைப்போல் உள்ளன. 12 நீங்கள் அந்தப் புத்தகத்தை வாசிக்க முடிந்த ஒருவனிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லலாம். ஆனால் அவன், “என்னால் இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியாது. இது மூடப்பட்டிருக்கிறது. என்னால் திறக்கமுடியாது” என்று சொல்வான். அல்லது நீங்கள் அந்தப் புத்தகத்தை வாசிக்கமுடியாத ஒருவனிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லலாம். அதற்கு அவன், “நான் இந்தப் புத்தகத்தை வாசிக்கமுடியாது, ஏனென்றால், எப்படி வாசிக்கவேண்டும் என்று எனக்குத் தெரியாது” என்பான்.
13 எனது ஆண்டவர், “என்னை நேசிப்பதாக இந்த ஜனங்கள் கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் வாயின் வார்த்தைகளால் என்னைப் பெருமைபடுத்துகிறார்கள். ஆனால் அவர்களது இருதயங்கள் என்னை விட்டுத் தொலைவில் உள்ளன. அவர்கள் எனக்குக் காட்டும் மரியாதையானது மனிதர்கள் உண்டாக்கிய சட்டங்களைத் தாங்கள் மனப்பாடம் செய்யும் அளவுக்கு மட்டுமே இருந்தது. 14 எனவே நான் அந்த ஜனங்களை ஆச்சரியப்படுத்த சில வல்லமைமிக்க, அதிசயப்படத்தக்கச் செயல்களைச் செய்வேன். அவர்களது ஞானிகள் தங்கள் ஞானத்தை இழப்பார்கள். அவர்களின் ஞானிகள் புரிந்துகொள்ள முடியாமல் போவார்கள்” என்று சொல்கிறார்.
15 அந்த ஜனங்கள் சிலவற்றை கர்த்தரிடம் மறைக்க முயல்கிறார்கள். கர்த்தர் இதனைப் புரிந்துகொள்ளமாட்டார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அந்த ஜனங்கள் இருட்டில் தங்கள் கெட்ட செயல்களைச் செய்கிறார்கள். அவர்கள் தமக்குள்: “எவரும் எங்களைப் பார்க்க முடியாது. நாங்கள் யார் என்று எவருக்கும் தெரியாது” எனக் கூறுகிறார்கள்.
16 நீங்கள் குழம்பி இருக்கிறீர்கள். குயவனை களிமண்ணுக்குச் சமமாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஒருவனால் செய்யப்பட்ட பொருள் அவனைப் பார்த்து “நீ என்னை உன்டாக்கவில்லை” என்று சொல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இது, ஒரு பானை தன்னை உருவாக்கியவனிடம் “நீ புரிந்துகொள்கிறதில்லை” என்று சொல்வது போன்றதாகும்.
நல்ல நேரம் வந்துகொண்டிருக்கிறது
17 இதுதான் உண்மை: கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, கர்மேல் மலையைப்போன்று லீபனோன் வளமான மண்ணைக்கொண்டது. கர்மேல் மலை ஒரு அடர்த்தியான காட்டைப்போன்றதாகும். 18 புத்தகத்தில் உள்ள வார்த்தைகளை ஒரு செவிடன் கேட்க முடியும். குருடன் இருளுக்கும் அந்தகாரத்திற்கும் ஊடே பார்க்கமுடியும். 19 கர்த்தர் ஏழைகளை மகிழ்ச்சியாக்குவார். இஸ்ரவேலின் பரிசுத்தரில் ஏழையான ஜனங்கள் களிப்படைவார்கள்.
20 அற்பர்களும் கொடியவர்களும் அழிந்த பிறகு இது நிகழும். கெட்ட செயலில் மகிழ்ச்சி அடைகிற ஜனங்கள் போனபிறகு இது நிகழும். 21 (அந்த ஜனங்கள் நல்லவர்களைப்பற்றிப் பொய் சொல்கிறார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் வலைக்குட்படுத்த முயல்கிறார்கள். அவர்கள் அப்பாவி ஜனங்களை அழித்துவிட முயல்கிறார்கள்).
22 எனவே, கர்த்தர் யாக்கோபின் குடும்பத்தோடு பேசுகிறார். (இந்த கர்த்தர்தான் ஆபிரகாமை விடுதலை செய்தவர்). கர்த்தர் கூறுகிறார், “இப்போது, யாக்கோபு (இஸ்ரவேல் ஜனங்கள்) நாணமடைந்து வெட்கப்பட்டுப்போவதில்லை. 23 அவன் அவரது பிள்ளைகள் எல்லோரையும் பார்ப்பான். எனது பெயர் பரிசுத்தமானது என்று அவன் கூறுவான். இந்தப் பிள்ளைகளை நான் என் கைகளால் செய்தேன். யாக்கோபின் பரிசுத்தமானவர் (தேவன்) மிகவும் சிறப்புடையவர் என்று இந்தப் பிள்ளைகள் கூறுவார்கள். இஸ்ரவேலின் தேவனை இந்தப் பிள்ளைகள் மதிப்பார்கள். 24 இந்த ஜனங்களில் பலர் புரிந்துகொள்ளமாட்டார்கள். எனவே, அவர்கள் தவறுகளைச் செய்வார்கள். இந்த ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்கள் தமது பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள்” என்கிறார்.
கிறிஸ்துவே முக்கியமானவர்
3 இப்போதும் என் சகோதர சகோதரிகளே! கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருங்கள். அவற்றையே மீண்டும் எழுதுவதில் எனக்கு எவ்விதமான தொந்தரவும் இல்லை. ஆனால் இது நீங்கள் ஆயத்தமாக இருக்க உதவியாக இருக்கும்.
2 பாவம் செய்கிற மக்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் நாய்களைப் போன்றவர்கள். அவர்கள் நீங்கள் விருத்தசேதனம் செய்யும்படி பலவந்தப்படுத்துவார்கள். 3 ஆனால் உண்மையில் நாம் விருத்தசேதனம் உள்ளவர்கள். நாம் தேவனை அவரது ஆவியின் மூலம் வழிபட்டு வருகிறோம். நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் இருப்பதில் பெருமைப்படுகிறோம். நம் மீதோ, நமது செயல்களின் மீதோ நாம் நம்பிக்கை வைப்பதில்லை. 4 என் மீது நான் நம்பிக்கை வைக்க முடியும் என்றாலும் நான் நம்பிக்கை வைப்பதில்லை. வேறு யாராவது ஒருவர் தன் மீது நம்பிக்கை வைக்கக் காரணம் இருக்கும் என்று கருதினால், எனக்கும் என் மீது நம்பிக்கை வைக்க நிறைய காரணங்கள் உள்ளன. 5 நான் பிறந்த எட்டு நாட்களுக்குப் பின் விருத்தசேதனம் செய்யப்பட்டேன். நான் இஸ்ரவேலைச் சேர்ந்தவன். பென்யமீன் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் எபிரேயன். என் பெற்றோர்களும் எபிரேயர்கள். மோசேயின் சட்டங்கள் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அதனால்தான் பரிசேயனாக ஆனேன். 6 நான் எனது யூத மதவெறி காரணமாக சபைகளைத் துன்புறுத்தி வந்தேன். எவனொருவனும் என்மீது நான் மோசேயின் சட்டங்களைக் கைக்கொள்வதைக் குறித்து குற்றம் சாட்ட முடியவில்லை.
7 ஒரு காலத்தில் எனக்கு இவை முக்கியமாய்த் தோன்றியது. ஆனால் கிறிஸ்துவுக்கு முன்னால் அவை பயனற்றுப் போய்விட்டன. 8 அவை மட்டுமல்ல எனது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றேன். 9 இதனால்தான் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். கிறிஸ்துவுக்குள் நான் தேவனுக்கு வேண்டியவனாகிறேன். நான் சட்டங்களைப் பின்பற்றியதால் இப்பேறு பெறவில்லை. தேவனிடமிருந்து விசுவாசத்தின் மூலம் இது எனக்கு வந்தது. நான் கிறிஸ்துவிடம் கொண்ட விசுவாசத்தைப் பயன்படுத்தி தேவன் தனக்கு ஏற்றவனாகச் செய்துகொண்டார். 10 அவரையும் அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையையும் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். அவரது துன்பத்தில் பங்குகொள்ளவும் மரணத்தில் அவரைப் போல் ஆகவும் விரும்புகிறேன். 11 அவற்றை நான் பெறுவேனேயானால் பிறகு மரணத்தில் இருந்தும் உயிர்த்தெழுந்து வருவேன் என்ற நம்பிக்கை பெறுவேன்.
குறிக்கோளை எட்டுவதற்கான முயற்சி
12 நான் எப்படி இருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறாரோ அப்படி நான் ஏற்கெனவே இருக்கிறேன் என்று எண்ணவில்லை. நான் இன்று வரை கூட எனக்காக கிறிஸ்துவால் ஆக்கப்பட்ட அந்த குறிக்கோளை அடையவில்லை. ஆனால் தொடர்ந்து அந்தக் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். 13 சகோதர சகோதரிகளே! இன்னும் அந்த இலக்கை நான் அடையவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் எப்பொமுதும் நான் ஒன்றை மட்டும் செய்து வருகிறேன். அதாவது கடந்த காலத்தில் உள்ளவற்றை நான் மறந்துவிடுகிறேன். என முன்னால் உள்ள குறிக்கோளை அடைய எவ்வளவு முயல முடியுமோ அவ்வளவு முயலுகிறேன். 14 குறிக்கோளை அடைந்து பரிசு பெறுவதற்கான முயற்சியையும் விடாமல் தொடர்ந்து நான் கைக்கொண்டு வருகிறேன். அது என்னுடையது. ஏனென்றால் அத்தகைய வாழ்வுக்குத்தான் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் என்னை அழைத்திருக்கிறார்.
15 ஆன்மீகத்தில் வளர்ந்து முழுமை அடைந்துள்ள நாம் அனைவரும் இத்தகைய வழியில் எண்ண வேண்டும். நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மேற்கூறிய விஷயங்களில் ஏதேனும் இருந்தால் தேவன் அதை உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். 16 ஆனாலும் நாம் ஏற்கெனவே செய்வது போல நாம் அடைந்த உண்மையைப் பின் தொடர்வதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
17 சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் என்னைப் போன்று வாழ முயல வேண்டும். நாங்கள் காட்டிய சட்டங்களை மேற்கொண்டு வாழ்பவர்களை அப்படியே பின்பற்ற முயலுங்கள். 18 இயேசுவின் சிலுவைக்கு விரோதமாகப் பலர் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையவர்களைப் பற்றி நான் அடிக்கடி கூறி வருகிறேன். இப்பொழுதும் அவர்களைப் பற்றிக் கூறுவதை எண்ணும்போது எனக்கு அழுகையே வருகிறது. 19 இத்தகையோரின் வாழ்க்கை முறை இவர்களை அழிவின் பாதைக்கே அழைத்துச் செல்லும். அவர்கள் தேவனுக்குச் சேவை செய்வதில்லை. அவர்கள் தம்மைத் திருப்திப்படுத்திக்கொள்வதற்காகவே வாழ்கிறார்கள். அவர்கள் வெட்கப்படத்தக்க செயல்களை செய்வதோடு அதைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளவும் செய்கிறார்கள். அவர்கள் பூமியில் உள்ளவற்றைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 20 ஆனால், நம் குடியிருப்போ பரலோகத்தில் உள்ளது. நம்முடைய இரட்சகர் பரலோகத்தில் இருந்து வருவார். அவருக்காகவே நாம் காத்திருக்கிறோம். நமது இரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. 21 அவர் இத்தகைய நமது அற்பமான சரீரங்களை மாற்றி தம்முடைய மகிமை மிக்க சரீரம்போல ஆக்கிவிடுவார். அவர் இதனைத் தம் வல்லமையால் செய்வார். அந்த வல்லமையால் அவர் எல்லாவற்றையும் ஆளத்தக்கவர்.
2008 by World Bible Translation Center