Old/New Testament
தேவனைப்போற்றும் பாடல்
26 அந்த நேரத்தில் யூதாவில் இந்தப் பாடலை ஜனங்கள் பாடுவார்கள்:
கர்த்தரே நமக்கு இரட்சிப்பைத் தருகிறார்.
நமக்குப் பலமான நகரம் உள்ளது.
நமது நகரத்திற்குப் பலமான சுவர்களும், தற்காப்புகளும் உள்ளன.
2 கதவுகளைத் திறவுங்கள். நல்ல ஜனங்கள் நுழைவார்கள்.
தேவனுடைய நல்ல போதனைகளுக்கு அந்த ஜனங்கள் கீழ்ப்படிவார்கள்.
3 கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும்,
உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர்.
4 எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள்.
ஏனென்றால், கர்த்தராகிய யேகோவாவில் உங்களுக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பான இடமுண்டு.
5 ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார்.
அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார்.
கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார்.
அது புழுதிக்குள் விழும்.
6 பிறகு, ஏழ்மையும் பணிவும் உள்ள ஜனங்களின் கால்கள் அதனை மிதித்துச் செல்லும்.
7 நல்ல ஜனங்களுக்கு நேர்மையே சிறந்த பாதை.
நல்ல ஜனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் உள்ள பாதையில் செல்வார்கள்.
தேவனே நீர் அந்தப் பாதையை மென்மையாக்கி
எளிதாக செல்லும்படிச் செய்கிறீர்.
8 ஆனால் கர்த்தாவே, நாங்கள் உமது நீதியின் பாதைக்காகக் காத்திருக்கிறோம்.
எங்கள் ஆத்துமா, உம்மையும் உமது நாமத்தையும் நினைவு கொள்ள விரும்புகின்றது.
9 இரவில் எனது ஆத்துமா உம்மோடு இருக்க விரும்புகிறது.
என்னுள் இருக்கிற ஆவி ஒவ்வொரு புதிய நாளின் அதிகாலையிலும் உம்மோடு இருக்க விரும்புகிறது.
தேசத்திற்கு உமது நீதியின் பாதை வரும்போது,
ஜனங்கள் வாழ்வின் சரியான பாதையைக் கற்றுக்கொள்வார்கள்.
10 தீயவன் நல்லவற்றை செய்ய கற்றுக்கொள்ளமாட்டான்.
அவனிடம் நீர் இரக்கம் மட்டும் காட்டினால், அவன் கெட்டவற்றை மட்டும் செய்வான்.
அவன் நல்லவர்களின் உலகில் வாழ்ந்தாலும் கூட,
கர்த்தருடைய மகத்துவத்தை தீயவன் எப்பொழுதும் கண்டுகொள்ளமாட்டான்.
11 ஆனால் கர்த்தாவே, நீர் அந்த ஜனங்களைத் தண்டித்தால் அவர்கள் அதனைப் பார்ப்பார்கள்.
கர்த்தாவே, தீயவர்களிடம் உமது ஜனங்கள்மேல் நீர் வைத்திருக்கிற பலமான அன்பைக் காட்டும்.
உண்மையாகவே தீய ஜனங்கள் அவமானப்படுவார்கள்,
உமது எதிரிகள் அவர்களது சொந்த நெருப்பிலேயே (தீமை) எரிக்கப்படுவார்கள்.
12 கர்த்தாவே, நீர் நாங்கள் செய்யமுயன்ற காரியங்களை எங்களுக்காகச் செய்வதில் வெற்றியடைந்திருக்கிறீர்.
ஆதலால், எங்களுக்குச் சமாதானத்தைத் தாரும்.
தேவன் அவரது ஜனங்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுப்பார்
13 கர்த்தாவே, நீர் எங்களது தேவன்,
ஆனால் கடந்த காலத்தில், நாங்கள் மற்ற தெய்வங்களைப் பின்பற்றினோம்.
நாங்கள் மற்ற எஜமானர்களுக்கு உரியவர்களாய் இருந்தோம்,
ஆனால், இப்பொழுது நாங்கள் ஒரே ஒரு நாமத்தை, அதுவும் உமது நாமத்தை மட்டும் நினைவில் வைக்க விரும்புகிறோம்.
14 அந்தப் பொய்த் தெய்வங்களெல்லாம் உயிரோடு இல்லை.
அந்த ஆவிகள் மரணத்திலிருந்து எழுவதில்லை.
அவற்றை அழித்துவிட நீர் முடிவு செய்தீர்.
அவற்றை நினைவூட்டுகிற அனைத்தையும் நீர் அழித்துவிட்டீர்.
15 நீர் நேசித்த நாட்டிற்கு உதவியிருக்கிறீர்
மற்ற ஜனங்கள் அந்நாட்டை தோற்கடிக்காதபடி நீர் தடுத்தீர்.
16 கர்த்தாவே, ஜனங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நினைப்பார்கள்.
நீர் அவர்களைத் தண்டிக்கும்போது உம்மிடம் அமைதியான பிரார்த்தனைகளை ஜனங்கள் செய்வார்கள்.
17 கர்த்தாவே, நாங்கள் உம்மோடு இல்லாதபோது,
நாங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தப் பெண்ணைப்போல் இருக்கிறோம்.
அவள் பிரசவ வலியுடன் அழுகிறாள்.
18 அதே வழியில், எங்களுக்கு வலி உள்ளது.
நாங்கள் குழந்தை பெற்றோம். ஆனால் அது காற்றாகியது.
நாங்கள் உலகத்துக்காக புதிய ஜனங்களை உருவாக்கவில்லை.
நாங்கள் தேசத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவரவில்லை.
19 ஆனால் கர்த்தர் கூறுகிறார், “உம்முடைய ஜனங்கள் மரித்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் மீண்டும் வாழ்வார்கள்.
எங்கள் ஜனங்களின் உடல்களும்
மரணத்திலிருந்து எழும்.
மரித்த ஜனங்கள் மண்ணிலிருந்து எழுந்து மகிழ்வார்கள்.
உம்முடைய பனி
செடிகொடிகளின் மேல் பெய்யும் பனி போல இருக்கும்.
புதிய நேரம் வந்துகொண்டிருப்பதை இது காட்டும். ஜனங்கள் இப்போது பூமியில் புதைக்கப்படுகிறார்கள்.
ஆனால் பூமியானது மரித்தவர்களை வெளியே அனுப்பும்.”
தீர்ப்பு: பரிசு அல்லது தண்டனை
20 எனது ஜனங்களே! உங்கள் அறைக்குள் போங்கள்.
உங்கள் கதவுகளை மூடுங்கள்.
கொஞ்ச காலத்திற்கு உங்கள் அறைகளில் ஒளிந்திருங்கள்.
தேவனுடைய கோபம் முடியும்வரை ஒளிந்திருங்கள்.
21 கர்த்தர் அவரது இடத்தை விட்டு
உலக ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக நியாயந்தீர்க்க வருவார்.
கொல்லப்பட்ட ஜனங்களின் இரத்தத்தைப் பூமி காட்டும்.
இந்த ஜனங்களை இனி பூமி மூடி வைக்காது.
27 அந்தக் காலத்திலேயே, கர்த்தர் லிவியாதான் என்னும் கோணலான பாம்பை நியாயந்தீர்ப்பார்.
கர்த்தர் தனது கடினமும் வல்லமையும் கொண்ட பெரிய வாளை,
லிவியாதான் என்னும் நீண்ட பாம்பைத் தண்டிக்கப் பயன்படுத்துவார்.
கடலில் உள்ள பெரிய பிராணியை கர்த்தர் கொல்வார்.
2 அந்தக் காலத்திலே,
ஜனங்கள் நல்ல திராட்சைத் தோட்டத்தைப்பற்றிப் பாடுவார்கள்.
3 “கர்த்தராகிய நான், அத்தோட்டத்தைக் கவனித்துக்கொள்வேன்.
சரியான காலத்தில் நான் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவேன்.
இரவும் பகலும் நான் தோட்டத்தைக் காவல் செய்வேன்.
எவரும் தோட்டத்தை அழிக்க முடியாது.
4 நான் கோபமாக இல்லை.
ஆனால் போர் இருந்தால், ஒருவர் முள்புதரால் சுவர் எழுப்பினால்,
பிறகு, நான் அதனை நோக்கிப்போய் அதனை எரிப்பேன்.
5 ஆனால், எவராவது பாதுகாப்புக்காக என்னிடம் வந்தால்,
என்னோடு சமாதானமாயிருக்க விரும்பினால் அவர்களை வரவிடுங்கள்.
அவர்கள் என்னோடு சமாதானம் கொள்ளட்டும்.
6 ஜனங்கள் என்னிடம் வருவார்கள்.
அந்த ஜனங்கள் யாக்கோபுக்கு உதவிசெய்து அவனை நல்ல வேர்கள் கொண்ட செடியைப்போல் பலமுள்ளதாக்குவார்கள்.
அந்த ஜனங்கள், இஸ்ரவேலை பூக்க ஆரம்பிக்கும் செடிபோல் வளரச் செய்வார்கள். பிறகு, செடிகளின் பழங்களைப்போல நாடு குழந்தைகளால் நிறைந்திருக்கும்.”
தேவன் இஸ்ரவேலை அனுப்பிவிடுவார்
7 எப்படி கர்த்தர் அவரது ஜனங்களைத் தண்டிப்பார்? கடந்த காலத்தில், பகைவர்கள் ஜனங்களைத் தாக்கினார்கள். அதே வழியில் கர்த்தர் அவர்களைத் தாக்குவாரா? கடந்த காலத்தில் நிறைய ஜனங்கள் கொல்லப்பட்டனர். கர்த்தரும் அதே வழியில் பலரைக் கொல்வாரா?
8 கர்த்தர், இஸ்ரவேலரை வெகுதொலைவிற்கு அனுப்பிவிடுவதன் மூலம் தனது விவாதத்தை முடிக்க விரும்புகிறார். இஸ்ரவேலரிடம் கர்த்தர் கடுமையாகப் பேசுவார். அவரது வார்த்தைகள் சூடான வனாந்திர காற்றைப்போல எரிக்கும்.
9 யாக்கோபின் குற்றம் எப்படி மன்னிக்கப்படும்? அவனது பாவங்கள் விலக்கப்பட என்ன நிகழும்? (இவை நிகழும்) பலிபீடத்திலுள்ள கற்கள் நொறுக்கப்பட்டு புழுதியில் கிடக்கும். சிலைகளும் பலிபீடங்களும் பொய்த் தெய்வங்களின் தொழுதுகொள்ளுதலுக்கு உரியதாய் இருந்தவைகளும் அழிக்கப்படும்.
10 அந்தக் காலத்திலே, பெரு நகரம் காலியாகும். அது வனாந்தரம்போல் ஆகும். எல்லா ஜனங்களும் செல்வார்கள். அவர்கள் வெளியே ஓடுவார்கள். அந்த நகரமானது திறந்த மேய்ச்சல் நிலம்போல் ஆகும். இளம் கன்றுக்குட்டிகள் அங்கே புல் மேயும். திராட்சைக் கொடிகளிலுள்ள இலைகளைக் கன்றுக்குட்டிகள் உண்ணும்.
11 திராட்சைக் கொடிகள் உலர்ந்துபோகும். அவற்றின் இலைகள் ஒடிந்துபோகும். பெண்கள் அக்கிளைகளை விறகாகப் பயன்படுத்துவார்கள்.
ஜனங்கள் புரிந்துகொள்ள மறுப்பார்கள். எனவே, அவர்களை உருவாக்கிய தேவன் ஆறுதல் செய்யமாட்டார். அவர்களை உண்டாக்கியவர் அவர்களிடம் கருணையோடு இருக்கமாட்டார்.
12 அந்தக் காலத்தில், கர்த்தர் தமது ஜனங்களை மற்ற ஜனங்களிடமிருந்து பிரித்து வைப்பார். அவர் ஐபிராத்து ஆற்றிலிருந்து தொடங்குவார். கர்த்தர் தமது ஜனங்களை ஐபிராத்து நதி முதல் எகிப்து நதிவரை திரட்டுவார்.
இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் ஒவ்வொருவராகச் சேர்க்கப்படுவீர்கள். 13 எனது ஜனங்களில் சிலர் இப்பொழுது அசீரியாவில் காணாமல் போயிருக்கிறார்கள். எனது ஜனங்களில் சிலர் எகிப்துக்கு ஓடிப்போயிருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்திலே, ஒரு பெரும் எக்காளம் ஊதப்படும். அப்பொழுது அந்த ஜனங்கள் எல்லோரும் எருசலேமிற்குத் திரும்பி வருவார்கள். அந்த ஜனங்கள் அந்தப் பரிசுத்த மலையின்மேல் கர்த்தருக்கு முன்பு பணிவார்கள்.
ஒற்றுமையுடனும் கரிசனையுடனும் இருங்கள்
2 நான் உங்களைச் செய்யச் சொல்ல கிறிஸ்துவுக்குள் வேறு செயல்கள், உள்ளனவா? அன்பினாலே யாதொரு தேறுதலும் உண்டாகுமா? ஆவியினாலே யாதொரு ஐக்கியமும் உண்டாகுமா? உங்களுக்கு இரக்கமும் கருணையும் உள்ளனவா? 2 உங்களிடம் இவை இருந்தால் எனக்காகச் செய்ய வேண்டும் என்று சில காரியத்தைக் கேட்டுக்கொள்வேன். இது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும். ஒரே காரியத்தைப் பற்றிய நம்பிக்கையில் உங்கள் அனைவரது மனமும் ஒன்று சேரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒருவருடன் ஒருவர் அன்புடன் இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, ஒரே நோக்கம் உடையவர்களாக இருங்கள். 3 நீங்கள் இச்செயல்களைச் செய்யும்போது தன்னலமும், வீண் பெருமையும் கொள்ள வேண்டாம். பணிவுடன் இருங்கள். நீங்கள் உங்களுக்குத் தரும் மரியாதையைவிட மற்றவர்களுக்கு அதிக மரியாதையைத் தாருங்கள். 4 நீங்கள் உங்கள் வாழ்வில் மட்டும் அல்லாமல் மற்றவர் வாழ்விலும் ஆர்வம் கொள்ளுங்கள்.
தன்னலமற்ற குணம்
5 உங்கள் வாழ்வில் நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் போன்று சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும்.
6 கிறிஸ்து அவரளவில் எல்லாவற்றிலும் தேவனைப் போன்றிருந்தார்.
அவர் தேவனுக்கு நிகரானவராயிருந்தார். ஆனால் தேவனுக்குச் சமமாக இருப்பதை கொள்ளையில் கிடைத்த அரிய பொருளாக அவர் நினைத்ததில்லை.
7 தேவனோடு இருந்த தனது இடத்தை அவர் விட்டுக்கொடுத்து, தேவனது ஊழியர் வடிவை எடுத்தார்.
மனிதராகப் பிறந்து அடிமையைப் போல அவர் வாழ்ந்தார்.
8 மனிதனாக அவர் வாழும்போது தேவனுக்கு முன்பு கீழ்ப்படிந்தவராக இருந்தார்.
மரணம் வரைக்கும் அவர் பணிவுள்ளவராக இருந்தார்.
முடிவில் சிலுவையிலே இறந்தார்.
9 தேவனுக்குக் கிறிஸ்து பணிந்தார்.
ஆகையால் தேவன் அவரை மிக முக்கியமான இடத்துக்கு உயர்த்திவிட்டார்.
தேவன் அவரது பெயரை மற்ற எல்லா பெயர்களையும் விட உயர்வாக்கினார்.
10 அனைவரும் இயேசுவின் பெயருக்கு முன்பு தலைகுனிந்தே இருக்க வேண்டும் என்பதற்காகவே தேவன் இதனைச் செய்தார்.
பரலோகத்திலும், பூலோகத்திலும், பூமிக்குக் கீழுள்ள உலகத்திலும் உள்ளவர்கள் அவரைப் பணிவார்கள்.
11 “இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர்” என்று அனைவரும் அறிக்கை செய்வர்.
அவர்கள் இதனைச் சொல்லும்போது பிதாவாகிய தேவனுக்கு மகிமை சேரும்.
தேவன் விரும்புகிற மக்களாய் இருங்கள்
12 என்னுடைய அன்பு நண்பர்களே! எப்பொழுதும் நீங்கள் கீழ்ப்படிந்து இருங்கள். உங்களோடு நான் இருந்தபோது நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிருந்தீர்கள். உங்களோடு நான் இல்லாதபோது நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நான் தூரமாயிருக்கிறபோது நீங்கள் தேவனிடம் மரியாதையும் அச்சமும் கொண்டு உங்கள் இரட்சிப்பு நிறைவேற முயற்சி செய்யுங்கள். 13 ஆமாம், தேவன் உங்களில் பணியாற்றுகிறார். அவர் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறார். அவற்றைச் செய்ய உங்களுக்கு தேவனே பலத்தைக் கொடுக்கிறார்.
14 முறுமுறுப்பு அல்லது வாக்குவாதம், இல்லாமல் எல்லாவற்றையும் செய்யுங்கள். 15 அப்போதுதான் எதுவுமறியாதவர்களாகவும், எந்தத் தவறும் இல்லாதவர்களாகவும் இருப்பீர்கள். நீங்கள் தேவனுடைய குற்றமற்ற பிள்ளைகளாக இருப்பீர்கள். ஆனால் உங்களைச் சுற்றிலும் உள்ள பாவம் செய்கிற கெட்டவர்களோடு நீங்கள் வாழ்கிறீர்கள். அவர்களுக்கு மத்தியில் இருட்டின் நடுவில் விளக்குபோன்று பிரகாசிக்கிறீர்கள். 16 வாழ்வைக் கொடுக்கும் போதனையை அந்த மக்களுக்கும் நீங்கள் வழங்குங்கள். கிறிஸ்து மீண்டும் வரும்போது இது பற்றி நான் மிகவும் பெருமை அடைவேன். எனது பணி வீணாகவில்லை என்றும் நான் பெருமைகொள்வேன். ஏனென்றால் பந்தயத்தில் ஓடி நான் வென்றவனாவேன்.
17 தேவனுக்கு ஊழியம் செய்து உங்கள் வாழ்வைத் தியாகம் செய்ய உங்கள் விசுவாசம் தூண்டும். உங்கள் தியாகத்தோடு என் இரத்தத்தையும் தரத் தயாராக உள்ளேன். ஆனால் அது நடந்தேறினால் நான் முழுமையாக மகிழ்வேன். நான் உங்களோடு பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். 18 மகிழ்ச்சியாக இருங்கள். என்னோடு முழு மகிழ்ச்சி அடையுங்கள்.
தீமோத்தேயு, எப்பாப்பிரோதீத்து பற்றி
19 தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்ப நான் கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்புகிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன். 20 தீமோத்தேயுவைப் போன்று வேறு ஒருவரும் என்னிடம் இல்லை. உண்மையிலேயே அவன் உங்கள் மேல் அதிகக் கரிசனையுள்ளவன். 21 மற்ற அனைவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் மட்டும் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதில் விருப்பம் இல்லை. 22 தீமோத்தேயு எப்படிப்பட்டவன் என்பது உங்களுக்குத் தெரியும். நற்செய்தியைப் பரப்புவதில் அவன் என்னோடு பணி செய்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் ஒரு மகன் தந்தைக்குத் தொண்டு செய்வது போன்று செய்தான். 23 விரைவில் அவனை உங்களிடம் அனுப்பத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு என்ன நேரும் என்பதை அறிந்துகொள்ளும்போது நான் அவனை உங்களிடம் அனுப்பிவைப்பேன். 24 உங்களிடம் நான் விரைவில் வர நமது கர்த்தர் உதவுவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
25 எப்பாப்பிரோதீத்து கிறிஸ்துவுக்குள் என் சகோதரன், கிறிஸ்துவின் சேவையில் அவன் என்னோடு பணியாற்றி வருகிறான். எனக்கு உதவி தேவைப்பட்டபோது அவனை என்னிடம் அனுப்பினீர்கள். இப்போது அவனை உங்களிடம் அனுப்பி வைக்க வேண்டும் என எண்ணுகிறேன். 26 உங்கள் அனைவரையும் பார்க்க அவன் விரும்புகிறான். அதனால் உங்களிடம் அவனை அனுப்பி வைக்க விரும்புகிறேன். அவன் நோயுற்றதை நீங்கள் கேள்விப்பட்டதால் சங்கடப்படுகிறான். 27 அவன் நோயால் சாவுக்கு அருகில் இருந்தான். தேவன் அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட உதவினார். ஆகவே எனக்கு துக்கத்தின் மேல் துக்கம் உண்டாகவில்லை. 28 எனவே, அவனை நான் உங்களிடம் அனுப்பி வைக்கப் பெரிதும் விரும்புகிறேன். நீங்கள் அவனைப் பார்க்கும்போது உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நானும் உங்களைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்த முடியும். 29 கர்த்தருக்குள் நீங்கள் அவனைப் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றுக்கொள்ளுங்கள். எப்பாப்பிரோதீத்து போன்றவர்களுக்கு மரியாதை செய்யுங்கள். 30 அவன் கிறிஸ்துவுக்கான பணியால் ஏறக்குறைய இறந்தான். அதனால் அவனுக்குக் கனம் தாருங்கள். அவன் தன் வாழ்வை ஆபத்துக்கு உட்படுத்தினான். அவன் இதனைச் செய்தான். எனவே அவன் எனக்கு உதவ முடிந்தது. இது போன்ற உதவியை உங்களால் எனக்கு செய்ய முடியாது.
2008 by World Bible Translation Center