Old/New Testament
ஆராமுக்கு தேவனுடைய செய்தி
17 தமஸ்குவிற்கான துயரச் செய்தி இது.தமஸ்குவுக்கு இவையனைத்தும் நிகழும் என்று கர்த்தர் கூறுகிறார்:
“தமஸ்கு இப்பொழுது நகரமாக இருக்கிறது.
ஆனால் தமஸ்கு அழிக்கப்படும்.
அழிக்கப்பட்டக் கட்டிடங்கள் மட்டுமே தமஸ்குவில் இருக்கும்.
2 ஆரோவேரின் நகரங்களைவிட்டு ஜனங்கள் விலகுவார்கள்.
காலியான அந்தப் பட்டணங்களில் ஆட்டு மந்தைகள் சுதந்திரமாகத் திரியும்.
அவற்றைத் தொந்தரவு செய்ய அங்கே யாரும் இருக்கமாட்டார்கள்.
3 எப்பிராயீமின் (இஸ்ரவேல்) அரணான நகரங்கள் அழிக்கப்படும்.
தமஸ்குவில் உள்ள அரசு முடிந்துவிடும்.
இஸ்ரவேலுக்கு ஏற்பட்ட அனைத்தும் சீரியாவிற்கு ஏற்படும்.
முக்கியமான ஜனங்கள் அனைவரும் வெளியே எடுத்துச்செல்லப்படுவார்கள்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவை அனைத்தும் நிகழும்” என்று கூறினார்.
4 “அந்தக் காலத்தில், யாக்கோபின் (இஸ்ரவேல்) செல்வம் அனைத்தும் போய்விடும்.
யாக்கோபு நோய்வாய்ப்பட்டதினால் பெலவீனமும் மெலிவும் கொண்ட மனிதனைப்போலாவான்.
5 “அந்தக் காலம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே தானிய அறுவடை நடைபெறுவதுபோல் இருக்கும். வேலைக்காரர்கள் வயலில் வளர்ந்த செடிகளை சேகரிக்கிறார்கள். பிறகு அவர்கள் செடிகளிலிருந்து தானியக் கதிர்களை வெட்டுகிறார்கள். பிறகு அவர்கள் தானியத்தைச் சேகரிக்கின்றனர்.
6 “ஜனங்கள் ஒலிவமரத்தில் அறுவடை செய்வதுபோன்று அந்தக் காலம் இருக்கும். ஜனங்கள் ஒலிவ மரத்திலிருந்து ஒலிவக் காய்களைப் பறிப்பார்கள். மரத்தின் உச்சியில் சில ஒலிவக் காய்களை அவர்கள் விட்டுவைப்பார்கள். நான்கு அல்லது ஐந்து ஒலிவக் காய்களை அவர்கள் உயரத்திலுள்ள கிளைகளில் விட்டுவிடுவார்கள். இதுபோலவே அந்த நகரங்களுக்கும் ஏற்படும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
7 அந்தக் காலத்தில், ஜனங்கள் தங்களைப் படைத்த தேவனை நோக்கிப் பார்ப்பார்கள். அவர்களின் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரைப் பார்க்கும். 8 அவர்களால் செய்யப்பட்ட பலிபீடங்களுக்குத் திரும்பமாட்டார்கள். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு தங்களால் அமைக்கப்பட்ட சிறப்பான தோட்டங்களுக்கும், பலிபீடங்களுக்கும் போகமாட்டார்கள்.
9 அந்தக் காலத்தில், கோட்டை நகரங்கள் எல்லாம் காலியாகும். இஸ்ரவேல் ஜனங்கள் வருவதற்கு முன்னால் அந்தத் தேசத்தில் மலைகளும் காடுகளும் இருந்தது போன்று அந்த நகரங்கள் இருக்கும். கடந்த காலத்தில், அனைத்து ஜனங்களும் ஓடிப்போனார்கள். ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் அங்கு வந்துகொண்டு இருந்தனர். வரும்காலத்தில் மீண்டும் இந்தத் தேசம் காலியாகும். 10 இது நிகழும், ஏனென்றால், உங்களைப் பாதுகாக்கிற தேவனை நீங்கள் மறந்துவிட்டீர்கள். உங்கள் பாதுகாப்புக்குரிய இடமாக இருக்கும் தேவனை நீங்கள் நினைக்கவில்லை.
வெகு தொலைவிலுள்ள இடங்களிலிருந்து நீ சில நல்ல திராட்சைக் கொடிகளைக் கொண்டுவந்தாய். நீ அவற்றை நட்டு வைக்கலாம். ஆனால் அவை வளராது. 11 ஒரு நாள் உன் திராட்சைக் கொடிகளை நடுவாய். அவற்றை வளர்க்க முயல்கிறாய். மறுநாள் அக்கொடிகள் வளரத் தொடங்கும். ஆனால் அறுவடைக் காலத்தில் அச்செடிகளிலிருந்து பழங்களைப் பறிக்க செல்வாய். ஆனால் அனைத்தும் மரித்துப்போனதை காண்பாய். அனைத்து செடிகளையும் ஒரு நோய் அழித்துவிடும்.
12 ஏராளமான ஜனங்களை விசாரித்துக் கேள்!
அவர்கள் உரத்து கடல் இரைச்சலைப்போன்று அலறிக்கொண்டிருக்கிறார்கள்.
சத்தத்தைக் கேள், இது கடலில் அலைகள் மோதிக்கொள்வதைப்போன்றிருக்கும்.
13 ஜனங்களும் அந்த அலைகளைப்போன்று இருப்பார்கள்.
தேவன் அந்த ஜனங்களிடம் கடுமையாகப் பேசுவார்.
அவர்கள் வெளியே ஓடிப்போவார்கள்.
ஜனங்கள் காற்றால் துரத்தப்படுகிற பதரைப்போன்று இருப்பார்கள்.
ஜனங்கள் புயலால் துரத்தப்படுகிற துரும்பைப்போன்று இருப்பார்கள்.
காற்று அடிக்கும்போது பதர்கள் வெளியேறும்.
14 அந்த இரவு, ஜனங்கள் அஞ்சுவார்கள்.
காலைக்கு முன்னால், எதுவும் விடுபடாது.
எனவே, நம் பகைவர்கள் எதனையும் பெறமாட்டார்கள்.
அவர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள்.
ஆனால் அங்கு எதுவும் இராது.
எத்தியோப்பியாவிற்கு தேவனுடைய செய்தி
18 எத்தியோப்பியாவை அதன் ஆறுகளோடு பார். அந்த நாடு பூச்சிகளால் நிறைந்திருக்கிறது. அவற்றின் சிறகுகளின் இரைச்சலை உங்களால் கேட்க முடியும். 2 அந்த நாடு ஜனங்களை நாணல் படகுகளில் கடலைக் கடந்து செல்லுமாறு அனுப்பியது.
விரைவாகச் செல்லும் தூதர்களே!
வளர்ச்சியும் பலமும் கொண்ட ஜனங்களிடம் போங்கள்.
(எல்லா இடங்களிலும் உயரமும் பலமும் கொண்ட ஜனங்களிடம் மற்ற ஜனங்கள் பயப்படுவார்கள்.
அவர்கள் வல்லமைமிக்க தேசத்தை உடையவர்கள்.
அவர்களின் தேசம் மற்ற தேசங்களைத் தோற்கடிக்கிறது.
ஆறுகளால் பிரிக்கப்படுகிற நாட்டில் அவர்கள் இருக்கிறார்கள்).
3 அவர்களுக்குக் கெட்டவை ஏற்படும் என்று அந்த ஜனங்களை எச்சரிக்கை செய்யுங்கள்.
இந்த உலகிலுள்ள அனைத்து ஜனங்களும் இவர்களுக்கு ஏற்படப்போவதைக் காண்பார்கள்.
மலையில் ஏற்றப்பட்டக் கொடியைப்போன்று, ஜனங்கள் இவற்றைத் தெளிவாகப் பார்ப்பார்கள்.
இந்த உலகிலுள்ள அனைத்து ஜனங்களும் இந்த உயர்ந்து வளர்ந்த ஜனங்களுக்கு நிகழப்போவதைப்பற்றிக் கேள்விப்படுவார்கள்.
போருக்கு முன் கேட்கும் எக்காளத்தைப்போன்று தெளிவாக அவர்கள் கேட்பார்கள்.
4 கர்த்தர் என்னிடம், “நான் எனக்காகத் தயார் செய்யப்பட்ட இடத்தில் இருப்பேன். நான் நிகழ்பவற்றை அமைதியாகக் கவனிப்பேன். அழகான ஒரு கோடை நாளில் நடுப்பகலில் ஜனங்கள் ஓய்வாக இருப்பார்கள். (இது வெப்பமுள்ள அறுவடைக்காலமாக இருக்கும். மழை இல்லாதபோது, காலைப்பனிமட்டும் இருக்கும்.) 5 பிறகு ஏதோ பயங்கரமான ஒன்று நிகழும். பூக்கள் மலர்ச்சியடைந்த பிறகுள்ள காலமாக இருக்கும். புதிய திராட்சைகள் மொட்டு விட்டு வளர்ந்துகொண்டிருக்கும். ஆனால் அறுவடைக்கு முன்பு, பகைவர்கள் வந்து செடிகளை வெட்டிப்போடுவார்கள். பகைவர்கள் கொடிகளை வெட்டித் தூர எறிவார்கள். 6 திராட்சைக் கொடிகள் மலைப் பறவைகளுக்கும், காட்டுமிருகங்களுக்கும் உணவாகக் கிடைக்கும். அக்கொடிகளில் பறவைகள் கோடை காலத்தில் தங்கும். மழைக் காலத்தில் காட்டு மிருகங்கள் அக்கொடிகளை உண்ணும்” என்றார்.
7 அந்த நேரத்தில், சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு ஒரு விசேஷ காணிக்கை கொண்டுவரப்படும். இக்காணிக்கை உயரமும், பலமும் கொண்ட ஜனங்களிடமிருந்து வரும். (எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்கள் இந்த உயரமும் பலமும் கொண்ட ஜனங்களுக்கு அஞ்சுவார்கள். அந்த வல்லமை மிக்க தேசத்தைக் கொண்டவர்களின் தேசம் மற்ற தேசங்களைத் தோற்கடிக்கும். ஆறுகளால் பிரிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் இருப்பார்கள்). இந்தக் காணிக்கை சீயோன் மலையான, கர்த்தருடைய இடத்திற்குக் கொண்டுவரப்படும்.
எகிப்துக்கு தேவனுடைய செய்தி
19 எகிப்தைப் பற்றியத் துயரமான செய்தி: பார்! விரைவான மேகத்தில் கர்த்தர் வந்து கொண்டிருக்கிறார். கர்த்தர் எகிப்துக்குள் நுழைவார். எகிப்திலுள்ள அனைத்து பொய்த் தெய்வங்களும் பயத்தால் நடுங்கும். எகிப்து தைரியமுடையது. ஆனால், அந்தத் தைரியம் சூடான மெழுகைப்போல உருகிப்போகும்.
2 “எகிப்து ஜனங்கள் தங்களுக்கு எதிராகச் சண்டையிட்டுக்கொள்ள நான் காரணமாக இருப்பேன். ஜனங்கள் தம் சகோதரர்களோடு சண்டையிடுவார்கள். அயலார் தங்கள் அயலாருக்கு எதிராக இருப்பார்கள். பட்டணங்கள் பட்டணங்களுக்கு எதிராக இருக்கும். இராஜ்யங்கள் இராஜ்யங்களுக்கு எதிராக இருக்கும். 3 எகிப்து ஜனங்கள் குழம்பிப்போவார்கள். ஜனங்கள் தமது பொய்த் தெய்வங்களையும், ஞானிகளையும் என்ன செய்யலாம் என்று கேட்பார்கள். ஜனங்கள் குறி சொல்பவர்களையும், மந்திர வாதிகளையும் கேட்பார்கள். ஆனால் அவர்களது ஆலோசனைகள் பயனற்றுப்போகும்” என்று தேவன் சொல்கிறார்.
4 சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் (தேவன்) எகிப்தை ஒரு கடினமான எஜமானனிடம் கொடுப்பேன். ஜனங்களின்மீது ஒரு வல்லமை வாய்ந்த அரசன் ஆட்சிசெய்வான்.”
5 நைல் நதி வறண்டுபோகும். கடலிலிருந்து தண்ணீர் போய்விடும். 6 அனைத்து ஆறுகளும் மிகக் கெட்ட மணம் வீசும். எகிப்திலுள்ள கால்வாய்கள் வறண்டுபோகும். 7 அதிலுள்ள தண்ணீரும் போய்விடும். எல்லா தண்ணீர் தாவரங்களும் வாடிப்போகும். ஆற்றங்கரைகளில் உள்ள செடிகள் எல்லாம் வாடும். அவை பறக்கடிக்கப்படும். ஆற்றின் அருகே உள்ள அகன்ற இடங்களில் உள்ள செடிகளும் வாடிப்போகும்.
8 நைல் நதியில் மீன் பிடிக்கிற மீனவர்கள் அனைவரும் துயரப்படுவார்கள். அவர்கள் அலறுவார்கள். அவர்கள் தங்கள் உணவிற்காக நைல் நதியை நம்பி இருந்தனர். ஆனால் அது வறண்டுபோகும். 9 ஆடை நெய்கிற அனைத்து ஜனங்களும் மிக மிகத் துன்பப்படுவார்கள். அந்த ஜனங்களுக்கு சல்லா துணிகளை நெய்ய சணல் தேவைப்படும். ஆனால் ஆறு வறண்டுபோகும். எனவே சணல் வளராது. 10 தண்ணீரைத் தேக்கி வைக்க அணை கட்டுகிறவர்களுக்கு வேலை இருக்காது. எனவே அவர்கள் துயரமாக இருப்பார்கள்.
11 சோவான் பட்டணத்திலுள்ள தலைவர்கள் மூடர்கள். “பார்வோனின் ஞானமுள்ள ஆலோசனைக்காரர்கள்” தவறான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள். தம்மை ஞானிகள் என்று அந்தத் தலைவர்கள் கூறுகிறார்கள். அரசர்களின் பழைய குடும்பத்திலிருந்து வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தாம் நினைப்பதுபோல அவர்கள் அத்தனை புத்திசாலிகள் அல்ல.
12 எகிப்தே! உனது புத்திசாலிகள் எங்கே? சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எகிப்திற்காக என்ன திட்டமிட்டிருக்கிறார் என்று அந்த புத்திசாலிகள் தெரிந்துகொள்ள வேண்டும். என்ன நிகழும் என்பதை உங்களுக்குச் சொல்லும் ஜனங்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
13 சோவானின் தலைவர்கள் மூடரானார்கள். நோப்பின் தலைவர்கள் பொய்யானவற்றை நம்பினார்கள். எனவே, தலைவர்கள் எகிப்தை தவறான வழியில் நடத்திச்சென்றனர். 14 கர்த்தர் தலைவர்களைக் குழப்பமடைய செய்தார். அவர்கள் அலைந்து திரிந்து எகிப்தை தவறான வழிகளில் நடத்திச் சென்றனர். தலைவர்கள் செய்கிற அனைத்தும் தவறாயின. அவர்கள் குடிகாரர்கள் மயக்கத்தோடு தரையில் உருளுவதுபோலக் கிடந்தனர். 15 அந்தத் தலைவர்களால் செய்ய முடிந்தது எதுவுமில்லை. (இந்தத் தலைவர்கள் “தலைகளாகவும், வால்களாகவும்” இருக்கின்றனர். அவர்கள் “கிளையாகவும் நாணலாகவும்” இருக்கின்றனர்).
16 அந்தக் காலத்தில், எகிப்தியர்கள் அச்சமுள்ள பெண்களைப்போன்றிருப்பார்கள். அவர்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு பயப்படுவார்கள். ஜனங்களைத் தண்டிக்க கர்த்தர் தம் கையைத் தூக்குவார். அவர்கள் அஞ்சுவார்கள். 17 யூதாவின் தேசம் எகிப்தியார்களுக்குப் பயங்கரமான இடமாக இருந்தது. எகிப்திலுள்ள எவனும் யூதாவின் பெயரைக் கேட்டால் நடுங்குவான். இவை நிகழும், ஏனென்றால், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எகிப்திற்கு பயங்கரங்கள் நிகழத் திட்டமிட்டிருக்கிறார். 18 அப்பொழுது, எகிப்தில் ஐந்து நகரங்கள் இருக்கும். அங்குள்ள ஜனங்கள் கானான் மொழியைப் (யூதமொழி) பேசிக்கொண்டிருப்பார்கள். இந்நகரங்களுள் ஒன்று “அழிவின் நகரம்” என்று பெயர் பெறும். சர்வ வல்லமையுள்ள கர்த்தரைப் பின்பற்றுவதாக ஜனங்கள் வாக்களிப்பார்கள். 19 அந்தக் காலத்தில், ஒரு பலிபீடம் எகிப்தின் மத்தியில் கர்த்தருக்காக இருக்கும். எகிப்தின் எல்லையில் கர்த்தருக்கு மகிமை சேர்க்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று இருக்கும். 20 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் வல்லமை மிக்க செயல்களைச் செய்கிறார் என்பதற்கு இது அடையாளமாக இருக்கும். கர்த்தரிடம் உதவி கேட்டு ஜனங்கள் எந்த நேரத்தில் அலறினாலும் கர்த்தர் உதவியை அனுப்புவார். ஜனங்களைக் காப்பாற்றி பாதுகாக்க கர்த்தர் ஒருவனை அனுப்புவார். அந்த ஆள் இந்த ஜனங்களை அவர்களை ஒடுக்கும் மற்ற ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவான்.
21 அந்தக் காலத்தில், எகிப்தின் ஜனங்கள் கர்த்தரைப் பற்றி உண்மையாகத் தெரிந்துகொள்வார்கள். எகிப்தின் ஜனங்கள் தேவனை நேசிப்பார்கள். அந்த ஜனங்கள் தேவனுக்குச் சேவை செய்வார்கள். பல பலிகளைக் கொடுப்பார்கள். அவர்கள் கர்த்தருக்குப் பல வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். அவர்கள் அவ்வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார்கள்.
22 எகிப்தின் ஜனங்களை கர்த்தர் தண்டிப்பார். பிறகு, கர்த்தர் அவர்களை மன்னிப்பார். (குணப்படுத்துவார்) அவர்கள் கர்த்தரிடம் திரும்பி வருவார்கள். கர்த்தர் அவர்களது ஜெபங்களைக் கேட்டு அவர்களைக் குணப்படுத்துவார். (மன்னிப்பார்)
23 அந்தக் காலத்தில், எகிப்திலிருந்து அசீரியாவிற்கு ஒரு பெரும் பாதை இருக்கும். பிறகு, ஜனங்கள் அசீரியாவிலிருந்து எகிப்திற்குப்போவார்கள். ஜனங்கள் எகிப்திலிருந்து அசீரியாவிற்குப்போவார்கள். எகிப்து அசீரியாவோடு சேர்ந்து வேலை செய்யும்.
24 அந்தக் காலத்தில், இஸ்ரவேல் அசீரியாவுடனும் எகிப்துடனும் சேர்ந்து உடன்பாடு செய்யும். இது நாட்டுக்கான ஆசீர்வாதமாக விளங்கும். 25 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இந்த நாடுகளை ஆசீர்வதிப்பார். “எகிப்தியரே நீங்கள் என் ஜனங்கள். அசீரியாவே நான் உன்னை உருவாக்கினேன். இஸ்ரவேலே நான் உன்னைச் சொந்தமாக்கினேன். நீங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டீர்கள்!” என்று அவர் சொல்வார்.
17 ஆகையால் முட்டாள்தனமாக உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். பிதா உங்களிடம் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். 18 மதுபான வெறிகொள்ளாதீர்கள். உங்கள் ஆன்மீக வாழ்வை அது அழித்துவிடும். ஆவியால் நிரப்பப்பட்டவர்களாக இருங்கள். 19 சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், பக்திப் பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் கர்த்தருக்காக இசையுடன் பாடுங்கள். 20 பிதாவாகிய தேவனுக்கு எப்போதும் எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துங்கள். அதனைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் செலுத்துங்கள்.
கணவன்களும், மனைவிமார்களும்
21 ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய விருப்பமாய் இருங்கள். கிறிஸ்துவின் மீதுள்ள மரியாதையின் பொருட்டு இதைச் செய்யுங்கள்.
22 மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள். 23 சபைக்குத் தலையாகக் கிறிஸ்து இருக்கிறார். மனைவியின் தலையாக இருப்பது கணவன்தான். சபை கிறிஸ்துவின் சரீரம் போன்றது. சரீரத்தின் இரட்சகராய் கிறிஸ்து இருக்கிறார். 24 கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் சபை உள்ளது. இதைப் போன்றுதான் மனைவிகளாகிய நீங்களும் உள்ளீர்கள். எல்லா வகையிலும் உங்கள் கணவர்களின் அதிகாரத்திற்குள்தான் இருக்கிறீர்கள்.
25 கணவன்மார்களே! கிறிஸ்து சபையை நேசிக்கிறதுபோல நீங்கள் உங்கள் மனைவியரை நேசியுங்கள். கிறிஸ்து சபைக்காகவே இறந்தார். 26 சபையைப் புனிதமாக்கவே அவர் இறந்தார். சரீரத்தைத் தண்ணீரால் கழுவித் தூய்மைப்படுத்துவது போலவே திருவசனத்தைப் பயன்படுத்தி சபையைத் தூய்மை செய்கிறார். 27 கிறிஸ்து இறந்து போனதால் அவர் சபையை அழகுமிக்க மணமகளைப் போன்று ஆக்க, தம்மையே தந்தார். இதனால் சபை புனிதமானதாக, குற்றம் இல்லாததாக, கேடோ, பாவமோ, வேறு தவறுகளோ நடைபெறாத இடமாக ஆக்க விரும்பினார். இதுபோல
28 கணவர்கள் மனைவிமார்களை நேசிக்க வேண்டும். அவர்கள் தம் சொந்த சரீரத்தைப் போன்று மனைவியை நேசிப்பது தன்னையே நேசிப்பது போன்றதாகும். 29 ஏனென்றால் எவன் ஒருவனும் தன் சொந்த சரீரத்தை வெறுக்கமாட்டான். ஒவ்வொருவனும் தம் சரீரத்தை நல்ல உணவு கொடுத்து காப்பாற்றுவான். இதைத்தான் கிறிஸ்துவும் சபைக்காகச் செய்தார். 30 ஏனென்றால் நாம் அவரது உறுப்புக்கள். 31 “ஒரு மனிதன் தனது தந்தையையும் தாயையும் விட்டுவிலகி மனைவியோடு சேர்ந்துகொள்கிறான். இருவரும் ஒருவராகிவிடுகிறார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது [a] 32 நான் கிறிஸ்துவைப் பற்றியும் சபையைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறேன். இதிலுள்ள இரகசியமான உண்மை மிக முக்கியமானது. 33 எனினும் ஒவ்வொருவரும் உங்களை நேசிப்பது போலவே மனைவியை நேசியுங்கள். மனைவியும் கணவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
2008 by World Bible Translation Center