Old/New Testament
இஸ்ரவேலர்கள் விட்டிற்குத் திரும்புவார்கள்
14 வருங்காலத்தில், கர்த்தர் மீண்டும் யாக்கோபிடம் தமது அன்பைக் காட்டுவார். கர்த்தர் மீண்டும் இஸ்ரவேல் ஜனங்களைத் தேர்ந்தெடுப்பார். அந்த நேரத்தில், கர்த்தர் அந்த ஜனங்களுக்கு அவர்களின் நாட்டைக் கொடுப்பார். பிறகு யூதரல்லாத ஜனங்கள் யூத ஜனங்களோடு தாங்களாகவே சேர்ந்துகொள்வார்கள். இரண்டு ஜனங்களும் சேர்ந்து ஒரே குடும்பமாக யாக்கோபின் குடும்பமாக ஆவார்கள். 2 அந்த நாடுகள், இஸ்ரவேல் ஜனங்களை மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்குக் கொண்டு செல்லும். மற்ற நாடுகளில் உள்ள அந்த ஆண்களும், பெண்களும் இஸ்ரவேலருக்கு அடிமைகளாக ஆவார்கள். கடந்த காலத்தில் அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களைத் தமது அடிமைகளாக இருக்க வற்புறுத்தினார்கள். ஆனால் இந்தக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நாடுகளைத் தோற்கடித்து, அவர்கள் மேல் ஆட்சி செய்கின்றனர். 3 கர்த்தர் உங்களது கடின வேலைகளை எடுத்துப்போட்டு உங்களுக்கு ஆறுதலைத் தருவார். கடந்த காலத்தில் நீங்கள் அடிமைகளாக இருந்தீர்கள். மனிதர்கள் உங்களைக் கடினமான வேலை செய்யும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் கர்த்தர் உங்கள் கடின வேலைகளை முடிவுக்குக் கொண்டுவருவார்.
பாபிலோனிய அரசனைப்பற்றிய பாடல்
4 அந்த நேரத்தில், பாபிலோன் அரசனைப்பற்றிய இந்தப் பாடலை பாடத் துவங்குங்கள்:
அரசன் நம்மை ஆளும்போது, ஈனமாக ஆண்டான்.
ஆனால் இப்போது அவனது ஆட்சி முடிந்துவிட்டது.
5 கர்த்தர் தீய அரசர்களின் கொடுங்கோலை உடைப்பார்.
கர்த்தர் அவர்களின் அதிகாரத்தை எடுத்துக்கொள்வார்.
6 கோபத்தில் பாபிலோனிய அரசன் ஜனங்களை அடித்தான்.
ஜனங்களை அடிப்பதை அவன் ஒருபோதும் நிறுத்தவில்லை.
அத்தீய அரசன் ஜனங்களைக் கோபத்துடன் ஆண்டான்.
அவன் எப்பொழுதும் ஜனங்களைத் துன்புறுத்துவதை நிறுத்தவில்லை.
7 ஆனால் இப்பொழுது, முழு நாடும் ஓய்வெடுக்கிறது. நாடு அமைதியாக உள்ளது.
இப்பொழுது ஜனங்கள் கொண்டாடத் துவங்குகின்றனர்.
8 நீ தீய அரசனாக இருந்தாய்.
இப்பொழுது நீ முடிந்து போனாய்.
பைன் மரங்களும் கூட மகிழ்ச்சியாய் உள்ளன.
லீபனோனில் உள்ள கேதுரு மரங்களும் மகிழ்ச்சியாய் உள்ளது.
“அரசன் எங்களை வெட்டிச் சாய்த்தான்.
ஆனால் இப்பொழுது அரசனே விழுந்துவிட்டான்.
அவன் இனி ஒருபோதும் நிற்கமாட்டான்” என்று மரங்கள் சொல்கின்றன.
9 மரணத்தின் இடமான பாதாளம் அதிர்கிறது.
ஏனென்றால் நீ வந்துகொண்டிருக்கிறாய்.
உனக்காக பூமியில் இருந்த அனைத்துத் தலைவர்களின் ஆவிகளையும்
பாதாளம் எழுப்பிக்கொண்டிருக்கிறது.
அரசர்களை அவர்களின் சிங்காசனத்திலிருந்து
பாதாளம் எழுந்து நிற்கச் செய்துகொண்டிருக்கிறது.
உன் வருகைக்காக அவை தயாராக உள்ளன.
10 இந்த அனைத்துத் தலைவர்களும் உன்னைக் கேலிசெய்வார்கள்.
“இப்பொழுது எங்களைப்போன்று நீயும் மரித்த உடல்.
இப்பொழுது நீ சரியாக எங்களைப்போன்றே இருக்கிறாய்” என்று அவர்கள் சொல்வார்கள்.
11 உங்கள் தற்பெருமை பாதாளத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும்.
உங்கள் சுரவீணைகளிலிருந்து வரும் இசை, உங்கள் பெருமைக்குரிய ஆவியின் வரவைப்பற்றிக் கூறும்.
பூச்சிகள் உங்கள் உடலை உண்ணும்.
பூச்சிகளின்மேல் படுக்கையைப்போல் நீ படுத்திருப்பாய்.
புழுக்கள் உங்கள் உடலைப் போர்வையைப்போல் மூடும்.
12 நீ விடிவெள்ளியைப்போல் இருந்தாய்.
ஆனால், நீ வானத்திலிருந்து விழுந்துவிட்டாய்.
கடந்த காலத்தில், பூமியில் உள்ள எல்லா நாடுகளும், உனக்குமுன் பணிந்திருந்தது.
ஆனால், இப்போது நீ வெட்டித் தள்ளப்பட்டிருக்கிறாய்.
13 நீ எப்பொழுதும் உனக்குள்ளேயே,
“நான் மிக உன்னதமான தேவனைப்போலாவேன்.
நான் வானங்களுக்கு மேலே போவேன்.
நான் எனது சிங்காசனத்தை தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேல் வைப்பேன்.
நான் பரிசுத்தமான மலையான சாபோன் மீது அமர்வேன்.
நான், அந்த மலைமேலே தெய்வங்களைச் சந்திப்பேன்.
14 நான், மேகங்களிலுள்ள பலிபீடத்திற்கு ஏறிப்போவேன்.
நான் மிக உன்னதமான தேவனைப்போல் ஆவேன்” என்று சொன்னாய்.
15 ஆனால் அது நடைபெறவில்லை.
நீ தேவனோடு வானத்துக்குப்போகவில்லை.
நீ மரணத்தின் இடமான பாதாளத்தின் பள்ளத்துக்குத் தள்ளப்பட்டாய்.
16 ஜனங்கள் உன்னைக் கவனிக்கிறார்கள்.
உன்னைப்பற்றி சிந்திக்கிறார்கள்.
நீ ஒரு மரித்துப்போன உடல் என்று ஜனங்கள் பார்க்கின்றனர் ஜனங்கள் சொல்லுகிறார்கள்,
“பூமியிலுள்ள அனைத்து அரசுகளையும் பெரும் பீதிக்கு உள்ளாக்கிய அதே மனிதன் இவன்தானா?
17 இதே மனிதன்தான் நகரங்களை அழித்து,
நாடுகளை வனாந்திரமாகச் செய்தவனா?
இதே மனிதன்தான் போரில் ஜனங்களைச் சிறைப்பிடித்து
அவர்களைத் தங்கள் வீடுகளுக்குப்போகவிடாமல் செய்தவனா?”
18 பூமியில் ஒவ்வொரு அரசனும் மகிமையோடு மரித்திருக்கின்றனர்.
ஒவ்வொரு அரசனும் தனது சொந்தக் கல்லறையை வைத்திருக்கிறான்.
19 ஆனால் தீய அரசனான நீ, உனது கல்லறையிலிருந்து தூக்கி எறியப்பட்டாய்.
நீ மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளையைப்போல் வெட்டித் தூர எறியப்பட்டாய்.
நீ போர்க்களத்தில் விழுந்து மரித்த மனிதனைப்போலிருக்க மற்ற வீரர்கள் மிதித்துக்கொண்டு சென்றனர்.
இப்பொழுது, நீ மற்ற மரித்த மனிதர்களைப்போலிருக்கிறாய்.
கல்லறைத் துணிகளுக்குள் விழுந்து கிடக்கிறாய்.
20 மற்ற அரசர்கள் பலர் மரித்திருக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் தம் சொந்தக் கல்லறைகளை வைத்துள்ளனர்.
ஆனால், நீ அவர்களோடு சேரமாட்டாய்.
ஏனென்றால், நீ உன் சொந்த நாட்டை அழித்துவிட்டாய்.
நீ உன் சொந்த ஜனங்களைக் கொன்றாய்.
நீ செய்ததுபோல உன் பிள்ளைகள் தொடர்ந்து, அழிவு வேலைகளைச் செய்யமாட்டார்கள். உன் பிள்ளைகள் நிறுத்தப்படுவார்கள்.
21 அவனது பிள்ளைகளைக் கொலை செய்யத் தயாராகுங்கள்.
அவர்களின் தந்தை குற்றவாளி.
அதனால் அவர்களைக் கொல்லுங்கள்.
அவனது பிள்ளைகள் மீண்டும் நாட்டின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.
அவர்கள் மீண்டும் தமது நகரங்களால் உலகத்தை நிரப்பமாட்டார்கள்.
22 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறினார், “அந்த ஜனங்களுக்கு எதிராக நான் நின்று சண்டையிடுவேன். புகழ்பெற்ற நகரமான பாபிலோனை நான் அழிப்பேன். பாபிலோனிலுள்ள அனைத்து ஜனங்களையும் நான் அழிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான் அழிப்பேன்” என்றார்.இவை அனைத்தையும் கர்த்தர் தாமே கூறினார்.
23 கர்த்தர்: “நான் பாபிலோனை மாற்றுவேன். அந்த இடம் ஜனங்களுக்காக இல்லாமல் மிருகங்களுக்குரியதாகும். அந்த இடம் தண்ணீருள்ள பள்ளத்தாக்கு ஆகும். நான் அழிவு என்னும் துடைப்பத்தை எடுத்து பாபிலோனைத் துடைத்துப்போடுவேன்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
தேவன் அசீரியாவையும் தண்டிப்பார்
24 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் ஒரு வாக்குறுதிச் செய்திருக்கிறார். “நான் வாக்குறுதிக் கொடுக்கிறேன். நான் நினைத்தது போலவே இவை அனைத்தும் நிகழும். நான் திட்டமிட்ட வழியிலேயே இவை அனைத்தும் சரியாக நிகழும். 25 எனது நாட்டிலுள்ள அசீரிய அரசனை நான் அழிப்பேன். என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன். அந்த அரசன் எனது ஜனங்களை அவனது அடிமைகளாக்கினான். அவர்களின் பின் கழுத்தின்மேல் நுகத்தடியைப் பூட்டியிருக்கிறான். யூதா ஜனங்களின் கழுத்திலிருந்து அந்தத் தடி நீக்கப்படும். அந்தப் பாரம் விலக்கப்படும். 26 எனது ஜனங்களுக்காக நான் திட்டமிட்டுள்ளது இதுதான். அனைத்து நாடுகளையும் தண்டிக்க எனது புயத்தை பயன்படுத்துவேன்” என்று கர்த்தர் சொன்னார்.
27 கர்த்தர் தனது திட்டத்தைச் செயல்படுத்தும்போது, அதனை எவரும் தடுக்க இயலாது. கர்த்தர் தனது கைகளை உயர்த்தி ஜனங்களைத் தண்டிக்கும்போது எவரும் அவரைத் தடுக்கமுடியாது.
பெலிஸ்தியாவுக்கான தேவனுடைய செய்தி
28 இந்தத் துன்பச்செய்தியானது, ஆகாஸ் அரசன் மரித்த ஆண்டில் கொடுக்கப்பட்டது.
29 பெல்ஸ்தியா நாடே உன்னை அடித்த அரசன் மரித்துப்போனதால் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய். ஆனால் நீ உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கமாட்டாய். அவனது ஆட்சி முடிந்துவிட்டது என்பது உண்மை. ஆனால் அரசனின் மகன் வந்து ஆட்சி செய்வான். இது, ஒரு பாம்பு அதை விட ஆபத்தான பாம்மைப் பெற்றது போன்றிருக்கும். இந்த புதிய அரசன் விரைவும் ஆபத்தும் கொண்டு பாம்புபோல உங்களுக்கு இருப்பான்.
30 ஆனால் எனது ஏழை ஜனங்கள் பாதுகாப்புடன் உணவு உண்பார்கள். அவர்களின் பிள்ளைகளும் பாதுகாப்பாக இருப்பார்கள். எனது ஏழை ஜனங்கள் படுத்திருந்து பாதுகாப்பை உணர்வார்கள். ஆனால் உனது குடும்பத்தை நான் பட்டினியோடு கொல்வேன். மீதியுள்ள உனது ஜனங்கள் மடிந்துப்போவார்கள்.
31 நகர வாசலருகில் உள்ள ஜனங்களே, கதறுங்கள்!
நகரத்திலுள்ள ஜனங்களே, கதறுங்கள்!
பெலிஸ்தியாவிலுள்ள அனைத்து ஜனங்களும் நடுங்குவார்கள்.
உங்கள் தைரியம் சூடான மெழுகுபோல் உருகிவிடும்.
வடக்கே பாருங்கள்!
அங்கே புழுதி மேகம் இருக்கிறது!
அசீரியாவிலிருந்து படையொன்று வந்துகொண்டிருக்கிறது!
அந்தப் படையிலுள்ள அனைவரும் பலம் கொண்டவர்கள்!
32 அந்தப் படை தம் நாட்டிற்கு தூதுவர்களை அனுப்பும்.
அந்தத் தூதுவர்கள் தம் ஜனங்களிடம், “பெலிஸ்தியா தோற்கடிக்கப்பட்டது.
ஆனால் கர்த்தர் சீயோனைப் பலப்படுத்தினார்.
அவரது ஏழை ஜனங்கள் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று அறிவிப்பார்கள்.
மோவாபிற்கு தேவனுடைய செய்தி
15 இது மோவாயைப்பற்றி துக்கமான செய்தி.
ஒரு இரவு, ஆர், மோவாப் ஆகியவற்றிலிருந்து படைகள் செல்வங்களை எடுத்தனர்.
அந்த இரவில் நகரம் அழிக்கப்பட்டது.
ஒரு இரவு, கீர், மோவாப் ஆகியவற்றிலிருந்து படைகள் செல்வங்களை எடுத்தனர்.
அந்த இரவில் நகரம் அழிக்கப்பட்டது.
2 அரசனது குடும்பத்தினரும் தீபோனின் ஜனங்களும் அழுவதற்குத் தொழுதுகொள்கிற இடங்களுக்குப்போனார்கள்.
மோவாப்பின் ஜனங்கள் நேபோவுக்காகவும் மேதெபாவுக்காகவும் அழுதனர்.
ஜனங்கள் தம் தலைகளையும், தாடிகளையும் மழித்துக்கொண்டு
அவர்கள் துக்கமாக இருப்பதாகக் காட்டினர்.
3 மோவாபின் எல்லா இடங்களிலும் வீட்டுக் கூரைகளிலும், தெருக்களிலும்,
ஜனங்கள் துக்கத்தின் ஆடைகளை அணிந்து அழுதுகொண்டிருந்தனர்.
4 எஸ்போன் மற்றும் எலெயாலே நகர ஜனங்கள் உரத்து அழுதுகொண்டிருந்தனர்.
வெகு தொலைவிலுள்ள யாகாஸ் நகரம் வரை அவர்களின் சத்தங்களை நீ கேட்கலாம்.
படைவீரர்களும்கூட கதறுகிறார்கள்.
அவர்கள் அச்சத்தால் நடுங்கிக்கொண்ருக்கிறார்கள்.
5 மோவாபுக்காக எனது இதயம் துயரத்தோடு அழுகிறது.
ஜனங்கள் பாதுகாப்புக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வெகு தொலைவில் உள்ள சோவாருக்கு ஓடுகிறார்கள்.
அவர்கள் எக்லாத் செலிஸ்ஸியாவுக்கு ஓடுகிறார்கள். லூகித்துக்குப்போகும் மலைப்பாதையில் அவர்கள் ஏறிப்போகும்போது அழுகிறார்கள்.
ஓரோனாயீமின் வழியில் அவர்கள் நடந்து செல்லும்போது மிக உரத்து அழுகிறார்கள்.
6 ஆனால் நிம்ரீம் புருக் பாலைவனமாகக் காய்ந்திருக்கிறது.
அனைத்து தாவரங்களும் காய்ந்துள்ளன. எதுவும் பசுமையாக இல்லை.
7 எனவே, ஜனங்கள் தமக்குச் சொந்தமானவற்றைச் சேகரித்துக்கொண்டு மோவாபை விட்டு விலகுகிறார்கள்.
அவர்கள் அவற்றைச் சுமந்துகொண்டு பாப்லர்கிரீக்கின் எல்லையைக் கடக்கின்றனர்.
8 மோவாபின் எல்லா இடங்களிலும் அழுகையைக் கேட்கலாம்.
வெகு தொலைவிலுள்ள எக்லாயிம் வரை ஜனங்கள் அழுதுகொண்டிருந்தனர்.
பெரேலீம் நகரத்தில் ஜனங்கள் அழுதுக்கொண்டிருந்தனர்.
9 தீமோனின் தண்ணீரானது இரத்தத்தால் நிறைந்திருக்கும்.
தீமோனுக்கு மேலும் அதிகக் கேடுகளை நான் (கர்த்தர்) கொண்டுவருவேன்.
மோவாபில் வாழ்கிற சில ஜனங்கள் பகைவரிடமிருந்து தப்பியிருக்கிறார்கள்.
ஆனால் நான் அவர்களை உண்ண சிங்கங்களை அனுப்புவேன்.
16 நீங்கள் நாட்டின் அரசனுக்கு அன்பளிப்பை அனுப்பவேண்டும். நீங்கள் சேலாவிலிருந்து வனாந்தரம் வழியாக சீயோன் மகளின் மலைக்கு (எருசலேம்) ஒரு ஆட்டுக்குட்டியை அனுப்புங்கள்.
2 மோவாபின் பெண்கள் அர்னோன் ஆற்றை கடக்க முயன்றனர்.
அவர்கள் உதவிக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓடுகிறார்கள்.
மரத்திலிருந்து கூடு விழுந்த பிறகு, அதை இழந்த பறவைகளைப்போன்றிருக்கின்றனர்.
3 “எங்களுக்கு உதவுங்கள்!
என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள்!
மதிய வெயிலிலிருந்து நிழலானது எங்களைக் காப்பாற்றுவது போன்று எங்கள் பகைவரிடமிருந்து காப்பாற்றுங்கள்.
நாங்கள் எங்கள் பகைவர்களிடமிருந்து ஓடிக்கொண்டிருக்கிறோம்.
எங்களை ஒளித்து வையுங்கள்.
எங்களை எமது பகைவர்களிடம் ஒப்படைத்துவிடாதீர்கள்
4 மோவாபிலிருந்த ஜனங்கள் தங்கள் வீடுகளிலிருந்து விலக பலவந்தப்படுத்தப்பட்டனர்.
எனவே, அவர்கள் உங்கள் நாட்டில் வாழட்டும்.
அவர்களின் பகைவர்களிடமிருந்து அவர்களை மறைத்துவையுங்கள்”
என்று அவர்கள் சொல்கிறார்கள்.
கொள்ளையானது நிறுத்தப்படும்.
பகைவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.
மற்ற ஜனங்களைக் காயப்படுத்திய மனிதர்கள் இந்த நாட்டிலிருந்து வெளியே போவார்கள்.
5 பிறகு, புதிய அரசர் வருவார்.
அந்த அரசர் தாவீதின் குடும்பத்திலிருந்து வருவார். அவர் உண்மையுள்ளவராக இருப்பார்.
அவர் அன்பும் கருணையும் உள்ளவராக இருப்பார்.
அந்த அரசர் சரியாக நியாயந்தீர்ப்பார்.
அவர் சரியாகவும் நல்லதாகவும் உள்ளவற்றையே செய்வார்.
6 மோவாபிலுள்ள ஜனங்கள் பெருமையும் மேட்டிமையும் கொண்டவர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டோம்.
அவர்கள் பிடிவாதமும் தற்பெருமையும் உடையவர்கள்.
அவர்களின் தற்பெருமைகள் வெற்று வார்த்தைகளாக உள்ளன.
7 மோவாப் நாடு முழுவதுமே இந்த அகங்காரத்தால் துன்புறும்.
மோவாபிலுள்ள அனைத்து ஜனங்களும் அலறுவார்கள், ஜனங்கள் துக்கம் அடைவார்கள்.
அவர்கள் கடந்துபோன காலத்தில் தாங்கள் கொண்டிருந்தவற்றின்மேல் ஆவல் கொள்வார்கள்.
அவர்கள் கிராரேசேத் ஊரில் செய்யப்பட்ட அத்தி அப்பங்களை விரும்புவார்கள்.
8 எஸ்போன் வயல்களும் சிப்மா ஊர் திராட்சைத் தோட்டங்களும் வளர முடியவில்லையே என்று வருத்தப்படுவார்கள்.
வெளிநாட்டு அரசர்கள் திராட்சைக் கொடிகளை வெட்டிப்போட்டனர்.
பகைப் படைகள் யாசேர் நகரம் வரையும் வானந்திரத்திலும் பரவி இருக்கின்றன.
அவர்கள் கடல் வரையிலும்கூடப் பரவி இருந்தனர்.
9 “நான் யாசேர் மற்றும் சிப்மா ஜனங்களோடு அழுவேன்,
ஏனென்றால், திராட்சைகள் அழிக்கப்பட்டுவிட்டன.
நான் எஸ்போனே மற்றும் எலெயாலே ஜனங்களோடு அழுவேன்.
ஏனென்றால், அங்கே அறுவடை நடைபெறாது.
கோடைகாலப் பழங்களும் இல்லாமல் போகும்.
மகிழ்ச்சி ஆரவாரங்களும் இல்லாமல் போகும்.
10 கர்மேலில் மகிழ்ச்சியும் பாடலும் இராது.
அறுவடைக் காலத்தில் அனைத்து மகிழ்ச்சியையும் நிறுத்துவேன்.
திராட்சையானது இரசமாக தயாராக உள்ளது.
ஆனால் அவை வீணாகப்போகும்.
11 எனவே நான் மோவாபுக்காக மிகவும் வருத்தமாக இருக்கிறேன்.
நான் கிர்கேரேசுக்காக மிகவும் வருத்தமாக இருக்கிறேன்.
நான் இந்த நகரங்களுக்காக மிக மிக வருத்தமாக இருக்கிறேன்.
12 மோவாபிலுள்ள ஜனங்கள் தொழுதுகொள்ளும் தம் இடங்களுக்குச் செல்வார்கள்.
ஜனங்கள் ஜெபம் செய்ய முயல்வார்கள்.
ஆனால், என்ன நடைபெறும் என்று பார்ப்பார்கள்.
அவர்கள் ஜெபம் செய்யக்கூட முடியாத அளவுக்கு பலவீனமாக இருப்பார்கள்”.
13 பலமுறை, கர்த்தர் மோவாபைப்பற்றிய இச்செய்திகளைச் சொன்னார். 14 இப்பொழுதும் கர்த்தர் கூறுகிறார்: “மூன்று ஆண்டுகளில், (ஒரு கூலிக்காரன் தனது காலத்தை எண்ணுவதுபோன்று) அந்த ஜனங்கள் அனைவரும் அவர்களின் தற்பெருமைக்குரிய பொருட்களும் அழிந்துபோகும். அங்கு சிலரே மீதியாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் பலராக இருக்கமாட்டார்கள்.”
5 நீங்கள் தேவனால் நேசிக்கப்படுகிற அவரது பிள்ளைகள். எனவே தேவனைப் போல ஆக முயலுங்கள். 2 அன்புக்குரிய ஒரு வாழ்க்கையை வாழுங்கள். கிறிஸ்து நம்மை நேசித்தது போலவே மற்றவர்களை நேசியுங்கள். கிறிஸ்து தம்மையே நமக்கு ஒப்புக்கொடுத்துவிட்டார். இனிய நறுமணம் உடைய காணிக்கையாகவும், பலியாகவும் தேவனுக்குத் தம்மைத் தந்தார்.
3 ஆனால் உங்களிடையே மோகத்திற்குறிய பாவங்கள் இருக்கக்கூடாது. உங்களிடம் எவ்வகையான தீய செயல்களும், பொருளாசையும் இருக்கக்கூடாது. ஏனென்றால் இவை தேவனுடைய புனிதமான மக்களுக்கு ஏற்றதல்ல. 4 நீங்கள் வம்பு பேசக்கூடாது. முட்டாள்தனங்களும், பரியாசங்களும் பேசக்கூடாது. இவை உங்களுக்குப் பொருத்தமானவை அல்ல. நீங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும். 5 பாலியல் பாவங்கள் செய்பவனும், தீயசெயல் புரிபவனும், தனக்கு மேலும் மேலும் வேண்டும் என ஆசைப்படும் சுயநலக்காரனுமான விக்கிரக வணக்கம் செய்பவனும் தேவனுடையதும், கிறிஸ்துவுடையதுமாகிய இராஜ்யத்தில் இடம் பெறுவதில்லை. இதைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
6 உங்களிடம் உண்மை இல்லாதவற்றைச் சொல்லி உங்களை எவரும் முட்டாளாக ஆக்கிவிட அனுமதிக்காதீர்கள். கீழ்ப்படியாதவர்கள் மீது தேவனைக் கோபம் கொள்ள அத்தீய செயல்கள் செய்கிறது. 7 எனவே அவர்களோடு இத்தகைய தீய செயல்களைச் செய்யாதீர்கள். 8 கடந்த காலத்தில் நீங்கள் இருளில் இருந்தீர்கள். இப்பொழுது தேவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளைப் போன்று நடக்கவேண்டும். 9 வெளிச்சமானது எல்லாவகையான நன்மைகளையும், சரியான வாழ்க்கையையும், உண்மையையும் கொண்டு வரும். 10 தேவனுக்கு விருப்பமானது எது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். 11 இருட்டில் வாழ்பவர்கள் செய்கின்ற பாவங்களை எல்லாம் நீங்கள் செய்யாதீர்கள். அவற்றைச் செய்வதால் உங்களுக்கு நன்மை வருவதில்லை. இருட்டில் செய்யப்படுபவை எல்லாம் தவறானவை என்பதை எடுத்துக்காட்ட நீங்கள் நற்செயல்களைச் செய்யுங்கள். 12 அவர்கள் இருட்டில் இரகசியமாகச் செய்பவற்றைக் குறிப்பிடுவது கூட வெட்கப்படத்தக்கது ஆகும். 13 அவற்றை நாம் தவறானவை என்று காட்டும்பொழுது அவற்றை எளிதாகப் பார்ப்பதற்கு வெளிச்சம் உதவும். 14 எளிதாகப் பார்ப்பதுபோல் இருக்கிற எல்லாப் பொருள்களும் தமக்குள் வெளிச்சமுடையதாகிவிடும். அதனால்தான் நாம் கூறுகிறோம்.
“தூங்குகிறவர்களே எழும்புங்கள்,
மரணத்திலிருந்து எழும்புங்கள்.
கிறிஸ்து உங்கள் மீது பிரகாசமாயிருப்பார்.”
15 எனவே எப்படி வாழ்வது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். ஞானம் இல்லாதவர்கள் வாழ்வது போன்று வாழாதீர்கள். ஞானத்தோடு வாழுங்கள். 16 நீங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நற்செயல்களைச் செய்யுங்கள். ஏனென்றால் நாம் கெட்ட காலங்களில் வாழ்கிறோம்.
2008 by World Bible Translation Center