Old/New Testament
இஸ்ரவேல் தேவனுடைய விசேஷமான தோட்டம்
5 இப்பொழுது, நான் எனது நண்பருக்காக (தேவன்) ஒரு பாடல் பாடுவேன். இப்பாடல் என் நண்பர் திராட்சைத் தோட்டத்தின் (இஸ்ரவேல்) மேல் வைத்த அன்பைப்பற்றியது.
எனது நண்பருக்கு வளமான வெளியில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.
2 எனது நண்பர் அதனைச் சுத்தப்படுத்தினார்.
அதில் சிறந்த திராட்சைக் கொடிகளை நட்டார்.
அதன் நடுவில் ஒரு கோபுரம் அமைத்தார். அதில் நல்ல திராட்சை வளரும் என்று நம்பினார்
ஆனால் அதில் கெட்ட திராட்சைகளே இருந்தன.
3 எனவே தேவன் சொன்னார், “எருசலேமில் வாழும் ஜனங்களே யூதாவில் உள்ள மனிதர்களே
என்னையும் என் திராட்சைத் தோட்டத்தையும் எண்ணிப் பாருங்கள்.
4 எனது திராட்சைத் தோட்டத்திற்காக நான் இன்னும் என்ன செய்ய முடியும்?
என்னால் முடிந்தவற்றை நான் செய்துவிட்டேன்.
நல்ல திராட்சை வளரும் என்று நம்பினேன்.
ஆனால் கெட்ட திராட்சைகளே உள்ளன. ஏன் இவ்வாறு ஆயிற்று?.
5 இப்பொழுது, எனது திராட்சைத் தோட்டத்தில் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வேன்.
நான் முட்புதர்களை விலக்குவேன். அவை வயலைக் காக்கின்றன. அவற்றை எரித்துப்போடுவேன்.
கற்சுவர்களை இடித்துப்போடுவேன்.
அது மிதியுண்டு போகும்.
6 என் திராட்சைத் தோட்டத்தை காலியாக வைப்பேன்.
எவரும் கொடிகளைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். எவரும் தோட்டத்தில் வேலை செய்யமாட்டார்கள். முட்களும், புதர்களும் வளரும்.
தோட்டத்தில் மழைபொழியவேண்டாம் என்று
நான் மேகங்களுக்குக் கட்டளை இடுவேன்”.
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கான திராட்சைத் தோட்டம் என்பது இஸ்ரவேல் நாட்டைக் குறிக்கும். கர்த்தருடைய மனமகிழ்ச்சியின் செடியானது யூதாவின் ஜனங்களே.
கர்த்தர் நியாயத்துக்குக் காத்திருந்தார்.
ஆனால் கொலைகளே நடைபெற்றன.
கர்த்தர் நீதிக்காகக் காத்திருந்தார்.
ஆனால் அழுகைகளே இருந்தன. மோசமாக நடத்தப்பட்வர்கள் முறையிட்டார்கள்.
8 ஜனங்களாகிய நீங்கள் மிக நெருங்கி வாழ்கிறீர்கள். வேறு எவருக்கும் இடமில்லாதபடி உங்கள் வீடுகளை கட்டுங்கள். ஆனால் கர்த்தர் உங்களைத் தண்டிப்பார். உங்களைத் தனித்து வாழும்படி செய்வார். முழு நாட்டில் நீங்கள் மட்டும் தனியாக வாழுவீர்கள்!
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதை என்னிடம் சொன்னார். அவர் அவரிடம், “இப்பொழுது ஏராளமான வீடுகள் உள்ளன. உறுதியாகச் சொல்கிறேன், எல்லா வீடுகளும் அழிக்கப்படும். இப்பொழுது அழகான பெரிய வீடுகள் உள்ளன. ஆனால் அவை காலியாகிப்போகும். 10 அப்போது, பத்து ஏக்கர் அளவுள்ள பெரிய திராட்சைத் தோட்டம் குறைந்த திராட்சை ரசத்தை தரும். பல மூட்டை நிறைந்த விதைகள் சிறிய அளவு தானியங்களையே விளைவிக்கும்.”
11 ஜனங்களாகிய நீங்கள் அதிகாலையில் எழுந்து, மதுபானம் குடிக்கப்போகிறீர்கள். இரவு நெடுநேரம் தூங்காமல் மதுவைக் குடித்து களிக்கிறீர்கள். 12 நீங்கள் மது, சுரமணடலம், தம்புரு, மேளம், நாகசுரம் போன்றவற்றோடு விருந்து கொண்டாடுகிறீர்கள். கர்த்தர் செய்த செயல்களை நீங்கள் பார்ப்பதில்லை. கர்த்தருடைய கைகள் பலவற்றைச் செய்துள்ளன. ஆனால் நீங்கள் அவற்றைக் கவனிக்கவில்லை. அதனால், இவை உங்களுக்குக் கேடு தரும்.
13 கர்த்தர், “என் ஜனங்கள் சிறை பிடிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். ஏனென்றால், அவர்கள் என்னை உண்மையில் அறிந்துகொள்ளவில்லை. இஸ்ரவேலில் வாழ்கின்ற சிலர் இப்பொழுது முக்கியமானவர்களாக உள்ளனர். அவர்கள் தம் எளிமையான வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தாகத்தாலும், பசியாலும் துன்பமடைவார்கள்.
14 பிறகு அவர்கள் மரித்து கல்லறைக்குப்போவார்கள். பாதாளம் மேலும் மேலும் ஜனங்களைப் பெறும். அது அளவில்லாமல் தன் வாயைத் திறந்து வைத்திருக்கும். அனைவரும் பாதாளத்துக்குப்போவார்கள் என்றார்.
15 ஜனங்கள் பணிவுள்ளவர்களாக இருப்பார்கள். அப்பெரியவர்கள் தலை தரையை பார்த்தவாறு, தலை குனிந்து வணங்குவார்கள்.
16 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நீதி வழங்குவார். ஜனங்கள் அவரை உயர்வானவர் என்று அறிந்துகொள்வார்கள். பரிசுத்தமான தேவன் சரியானவற்றை மட்டுமே செய்வார். ஜனங்கள் அவருக்கு மரியாதை செய்வார்கள். 17 தேவன், இஸ்ரவேல் ஜனங்களைத் தம் நாட்டை விட்டு போகும்படி செய்வார். நாடு காலியாக இருக்கும். ஆடுகள் தாம் விரும்பிய இடத்துக்குப்போகும். செல்வந்தர்கள் ஒருகாலத்தில் வைத்திருந்த நிலங்களில் பரதேசிகள் நடந்து திரிவார்கள்.
18 அந்த ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் தம் குற்றங்களையும் பாவங்களையும் வண்டிகளைக் கயிறு கட்டி இழுத்துச் செல்வதுபோன்று இழுத்துத் செல்கிறார்கள். 19 அந்த ஜனங்கள், “தேவன் சீக்கிரமாய் செயல் புரிய விரும்புகிறோம். அவர் திட்டமிட்டபடி செய்துமுடிக்கட்டும். பிறகு, அவை நிறைவேறவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். கர்த்தருடைய விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று விரும்புகிறோம். பின்னரே அவரது திட்டம் என்னவென்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.
20 அந்த ஜனங்கள், நல்லதைக் கெட்டதென்றும் கெட்டதை நல்லது என்றும் கூறுகிறார்கள். அவர்கள் இருளை வெளிச்சம் என்றும் வெளிச்சத்தை இருள் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் இனிப்பைக் கசப்பு என்றும் கசப்பை இனிப்பு என்றும் எண்ணுகிறார்கள். 21 அந்த ஜனங்கள் தங்களை ஞானிகள் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகள் என்று நினைக்கிறார்கள். 22 அவர்கள் மது குடிப்பதிலே புகழ் பெற்றவர்கள். அவர்கள் குடிவகைகளைக் கலப்பதில் பராக்கிரமசாலிகள். 23 நீங்கள் அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்தால், அவர்கள் குற்றவாளிகளை விடுவிப்பார்கள். ஆனால் அவர்கள் நல்லவர்களுக்கு நியாயமாக நீதி வழங்கமாட்டார்கள். 24 அவர்கள் அனைவருக்கும் கேடு ஏற்படும். அவர்களின் சந்ததி முழுமையாக அழிக்கப்படும். அவர்கள் காய்ந்த புல் நெருப்பில் எரிவதுபோன்று அழிவார்கள். அவர்களின் சந்ததி வேர் வாடி, தூசியைப்போல் பறந்துபோகும். அவர்கள் நெருப்பில் எரியும் பூக்களைப்போன்று எரிந்து, காற்றில் சாம்பல் பறப்பது போன்று ஆவார்கள்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய போதனைகளுக்கு அடிபணிய அவர்கள் மறுத்துவிட்டனர். இஸ்ரவேலரின் பரிசுத்தமான தேவனிடமிருந்து வரும் செய்தியை அவர்கள் வெறுத்தனர்.
25 எனவே இந்த ஜனங்கள் மீது கர்த்தர் மிகுந்த கோபமாயிருக்கிறார். கர்த்தர் தன் கையை உயர்த்தி அவர்களைத் தண்டிப்பார். மலைகள் கூட அவருக்குப் பயப்படும். மரித்துப்போன உடல்கள் தெருக்களில் குப்பைபோன்று குவியும். ஆனாலும் தேவன் மேலும் கோபமாக இருப்பார். அவரது கை மேலும் உயர்ந்து அவர்களைத் தண்டிக்கும்.
இஸ்ரவேலர்களைத் தண்டிக்க தேவன் படைகளைக் கொண்டுவருவார்
26 பாருங்கள்! தேவன் தூர நாடுகளுக்கு ஒரு அடையாளம் காட்டிவிட்டார். தேவன் ஒரு கொடியை உயர்த்திவிட்டார். அவர் அவர்களைச் சத்தமிட்டு அழைப்பார். அவர்கள் தூர நாடுகளில் இருந்து வந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் விரைவில் நாட்டுக்குள் நுழைவார்கள். அவர்கள் வேகமாக நகருவார்கள். 27 பகைவர்கள் எப்பொழுதும் சோர்ந்து விழுவதில்லை. அவர்கள் தூக்கம் வந்து தூங்குவது இல்லை. அவர்களின் ஆயுதக் கச்சைகள் எப்போதும் தயாராக இருக்கும். அவர்களது பாதரட்சைகளின் கயிறுகள் அவிழ்வது இல்லை. 28 பகைவரின் அம்புகள் கூர்மையானதாக இருக்கும். அவர்களது வில்லுகள் எய்யத் தயாராக இருக்கும். குதிரைகளின் குளம்புகள் பாறையைப்போன்று கடுமையாக இருக்கும். அவர்களின் இரதங்களுக்குப் பின்னே புழுதி மேகங்கள் எழும்பும்.
29 பகைவர்கள் சத்தமிடுவார்கள். அச்சத்தம் சிங்கம் கெர்ச்சிப்பதுபோல் இருக்கும். அது இளஞ் சிங்கத்தின் சத்தம்போல் இருக்கும். பகைவர்கள் தமக்கு எதிராகச் சண்டையிடுபவர்களை பிடித்துக்கொள்வார்கள். ஜனங்கள் போராடி தப்ப முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. 30 ஆகவே, “சிங்கங்களின்” சத்தமானது கடலலைகளின் இரைச்சல் போல் கேட்கும். கைப்பற்றப்பட்ட ஜனங்கள் தரையைப் பார்ப்பார்கள். அதில் இருள் மட்டுமே இருக்கும். கெட்டியான மேகத்தால் வெளிச்சம் கூட இருட்டாகிவிடும்.
தேவன் ஏசாயாவைத் தீர்க்கதரிசியின் ஊழியத்திற்கு அழைக்கிறார்
6 உசியா அரசன் மரித்த ஆண்டிலே, நான் எனது ஆண்டவரைப் பார்த்தேன். அவர் மிகவும் உயரமான ஆச்சரியகரமான சிங்காசனத்தின் மேல் அமர்ந்திருந்தார். அவரது நீண்ட அங்கியானது ஆலயத்தை நிறைத்தது.
2 சேராபீன்கள் [a] கர்த்தரைச் சுற்றி நின்றார்கள். ஒவ்வொரு சேராபீனுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. அவர்கள் இரு சிறகுகளால் தங்கள் முகத்தை மூடிக்கொண்டனர். இன்னும் இரு சிறகுகளால் தம் பாதங்களை மூடிக்கொண்டனர். அவர்கள் இரண்டு சிறகுகளைப் பறப்பதற்குப் பயன்படுத்தினார்கள். 3 ஒருவரை ஒருவர் அழைத்து, அவர்கள்: “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மகா பரிசுத்தமானவர். அவரது மகிமை பூமியை நிரப்பியது” என்றனர். அவர்களின் சத்தம் மிகவும் பலமாக இருந்தது. 4 அவர்களின் சத்தம் கதவின் நிலைகளை அசையப்பண்ணிற்று. பிறகு ஆலயமானது புகையால் நிரம்பியது.
5 நான் மிகவும் பயந்துவிட்டேன், நான்: “ஓ! நான் அழிக்கப்படுவேன். நான் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவன் இல்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களும் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவர்கள் இல்லை. எனினும், நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய நமது அரசரைப் பார்த்தேன்” என்றேன்.
6 பலிபீடத்தின்மேல் நெருப்பு இருந்தது. ஒரு சேராபீன் பலிபீடத்திலிருந்து தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்தான். அவன் என்னிடத்தில் நெருப்புத்தழலோடு பறந்து வந்தான். 7 அந்த தனது நெருப்புத் தழலால் என் வாயைத் தொட்டான். பிறகு அவன், “பார் இது உன் உதடுகளைத் தொட்டதால் உன் தீய செயல்கள் எல்லாம் மறைந்தன. உனது பாவங்கள் துடைக்கப்பட்டன” என்றான்.
8 பிறகு நான் என் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டேன். கர்த்தர், “நான் யாரை அனுப்புவேன்? நமக்காக யார் போவார்?” என்று சொன்னார்.
எனவே நான், “நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்றேன்.
9 பிறகு கர்த்தர் சொன்னார்: “போ, இதனை ஜனங்களிடம் சொல்: ‘கவனமாகக் கேளுங்கள்! ஆனால் புரிந்துகொள்ளாமல் இருங்கள்! கவனமாகப் பாருங்கள். ஆனால் அறிந்துகொள்ளாமல் இருங்கள்!’ 10 ஜனங்களைக் குழப்பமடைய செய். ஜனங்கள் தாங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் புரிந்துகொள்ளாதபடிக்குச் செய். நீ அவ்வாறு செய்யாவிட்டால், ஜனங்கள் தங்கள் காதால் கேட்பவற்றையும் புரிந்துகொள்வார்கள். அவர்கள் மனதில் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். இவற்றை அவர்கள் செய்தால், பிறகு அந்த ஜனங்கள் என்னிடம் திரும்பி வந்து குணமாவார்கள்” என்றார்.
11 பிறகு நான், “ஆண்டவரே, நான் எவ்வளவு காலம் இதனைச் செய்ய வேண்டும்?” எனக் கேட்டேன்.
அதற்கு கர்த்தர், “நகரங்கள் அழிந்துபோகும்வரை இதனைச் செய். ஜனங்கள் போகும்வரை செய். வீடுகளில் எவரும் வாழாத நிலைவரும்வரை செய். பூமி அழிந்து காலியாகும்வரை செய்”, என்றார்.
12 கர்த்தர் அந்த ஜனங்களை வெகு தூரத்திற்குப்போகச்செய்வார். நாட்டில் காலியான இடங்கள் அதிகமாக இருக்கும். 13 ஆனால் பத்தில் ஒரு பாகமான ஜனங்கள் மட்டும் இந்நாட்டில் வாழ அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அழிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் கர்த்தரிடம் திரும்பி வருவார்கள். இவர்கள் கர்வாலிமரம் போன்றவர்கள். இது வெட்டுண்டு போனபிறகு அடிமரம் மட்டும் நிற்கும் இந்த அடிமரம் (மீதியான ஜனங்கள்) மகா விசேஷித்த ஒரு வித்தாக இருக்கும்.
1 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவது, தேவனுடைய விருப்பத்துக்கிணங்க நான் ஒரு அப்போஸ்தலனாயிருக்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து எபேசுவிலே வாழும் மக்களுக்காக இந்நிருபம் எழுதப்பட்டது.
2 பிதாவாகிய தேவனிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்.
கிறிஸ்துவில் ஆவியானவரின் ஆசீர்வாதம்
3 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். பரலோகத்தில் அவர் கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசிகளையும் நமக்குத் தந்துள்ளார். 4 உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே தேவன் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்தெடுத்து உள்ளார். தமக்கு முன்பாக நாம் அன்பில் தூய்மையானவர்களும், குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்காகவே நம்மை அவர் தேர்ந்தெடுத்தார். 5 உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே, நம்மைத் தம் பிள்ளைகளாய் கிறிஸ்து மூலமாகத் தேர்ந்தெடுக்க தேவன் முடிவு செய்துவிட்டார். தேவன் செய்ய விரும்பியதும் அதுவே ஆகும். அதுவே அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 6 அவரது வியக்கத்தக்க கருணை அவருக்கு மகிமை உண்டாக்கியது. அவர் தன் கிருபையால் நமக்கு இலவசமாய் அதைத் தான் நேசிக்கிற மகனான இயேசு மூலமாக நமக்குத் தந்தார்.
7 கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் விடுதலை பெற்றோம். தேவனின் வளமான இரக்கத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. 8 தேவன் அவரது இரக்கத்தை முழுமையாகவும் இலவசமாகவும் தந்தார். 9 தேவன் முழு ஞானத்தோடும், பலத்தோடும் அவரது இரகசியத் திட்டத்தை நாம் அறியச் செய்தார். 10 சரியான நேரம் வரும்போது தனது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தேவன் ஏற்கெனவே செய்த முடிவு. பரலோகத்திலும், பூமியிலும் உள்ள அனைத்து பொருள்களும் ஒன்று கூடி கிறிஸ்துவின் கீழ் இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய திட்டம்.
11 நாம் கிறிஸ்துவுக்குள் தேவனின் மக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேவன் நம்மைத் தேர்ந்தெடுப்பது பற்றி ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் அதுதான் அவர் விருப்பம். அவரது விருப்பத்திற்கும், முடிவுக்கும் ஏற்றவாறு அவர் எல்லாவற்றையும் சரிசெய்துகொள்வார். 12 கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்தவர்களில் நாமே முதல் மக்கள். நாம் தேவனின் மகிமைக்குப் புகழ் சேர்ப்போம் என்பதனால் தேர்ந்தெடுக்கப்பட்டோம். 13 இந்தப் பெருமை உங்களையும் சேரும். நீங்களும் உங்கள் இரட்சிப்புக்காக உண்மையான நற்செய்தியைக் கேட்டீர்கள். நீங்கள் நற்செய்தியைக் கேட்டதால் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்தீர்கள். தேவன் தந்த அவரது வாக்குறுதிப்படி பரிசுத்த ஆவியால் கிறிஸ்துவில் உங்களுக்கு அடையாளக் குறியிடப்பட்டீர்கள். 14 தேவன் தம் மக்களுக்கு வாக்களித்தபடி நாம் பெறுவோம் என்பதற்கு பரிசுத்த ஆவியானவரே உத்தரவாதமாய் உள்ளார். தேவனைச் சேர்ந்தவர்களுக்கு இது முழு விடுதலை தரும். தேவனின் மகிமைக்குப் புகழ்ச்சியைத் தேடித் தருவது தான் இவை எல்லாவற்றின் நோக்கமாக இருக்கும்.
பவுலின் பிரார்த்தனை
15-16 அதனால்தான் எனது பிரார்த்தனைகளில் உங்களை நினைத்துக்கொண்டு உங்களுக்காக எப்போதும் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், தேவனின் மக்களின் மேலுள்ள உங்கள் அன்பையும் குறித்து நான் கேள்விப்பட்டதில் இருந்து நான் இதனை எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். 17 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும், பிதாவுமானவரிடம் எப்போதும் நான் பிரார்த்தனை செய்கிறேன். அதில் தேவனை அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தரவேண்டும் என வேண்டுகிறேன்.
18 உங்கள் இதயத்தில் மிகப் பெரிய புரிந்துகொள்ளுதல் ஏற்பட வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். பிறகு தேவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருப்பது விசுவாசத்தோடு தொடர்புடையது என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை வேண்டும். தம் தூய்மையான மக்களுக்குக் கொடுப்பதற்காகத் தந்த ஆசீர்வாதங்கள் மிகப் பெரியதும், புகழுடையதும் என்பதை நீங்கள் உணர வேண்டும். 19 தேவனுடைய வல்லமை மிக உயர்ந்தது, அளக்க இயலாதது என்றும் தேவன் மேல் நம்பிக்கையுள்ள நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வல்லமை இறந்துபோன இயேசுவைத் தேவன் உயிர்த்தெழும்பும்படி செய்தது. 20 தேவன் இயேசு கிறிஸ்துவைத் தனது வலது பக்கத்தில் அமர வைத்தார். 21 ஆள்வோர்களையும், அதிகாரிகளையும், அரசர்களையும்விட கிறிஸ்துவை மேலானவராக தேவன் செய்தார். இந்த உலகத்திலும் அடுத்த உலகத்திலும் வல்லமையுள்ள அனைத்தையும் விட கிறிஸ்து வல்லமை மிக்கவர். 22 தேவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் வைத்துவிட்டார். திருச்சபையில் உள்ள அனைத்துக்கும் அவரையே தலைவராக ஆக்கிவிட்டார். 23 திருச் சபை என்பது கிறிஸ்துவின் சரீரம். சபையானது கிறிஸ்துவினால் நிரப்பப்பட்டுள்ளது. அவர் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பத்தக்கவர்.
2008 by World Bible Translation Center