Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நீதிமொழிகள் 8-9

ஞானம் ஒரு நல்ல பெண்

கவனியுங்கள்! ஞானமும், அறிவும்
    கவனிக்கும்படி உங்களை அழைக்கின்றன.
அவை, மலையின் உச்சிமீது நிற்கின்றன.
    சாலையின் பக்கத்தில், பாதைகள் சந்திக்கும் இடத்தில் நிற்கின்றது.
அவை நகர வாசல்களின் அருகில் உள்ளன.
    திறந்த கதவுகளின் வெளியே அவை அழைக்கின்றன.
ஞானம் சொல்கிறதாவது: “ஜனங்களே, உங்களை நோக்கி அழைக்கிறேன்.
    நான் எல்லா ஜனங்களையும் அழைக்கிறேன்.
நீங்கள் முட்டாள்களாக இருந்தால், ஞானவான்களாகக் கற்றுக்கொள்ளுங்கள்.
    முட்டாள் மனிதர்களே, புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
கவனியுங்கள், நான் கற்றுத்தருபவை முக்கியமானவை
    நான் சரியானவற்றையே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனது வார்த்தைகள் உண்மையானவை.
    நான் பொய்யான பாவங்களை வெறுக்கிறேன்.
நான் சொல்வதெல்லாம் சரியானவை.
    என் வார்த்தைகளில் தவறோ பொய்யோ இல்லை.
புரிந்துகொள்ளும் திறமை உடையவர்களுக்கு என் வார்த்தைகள் அனைத்தும் தெளிவானவை.
    அறிவுள்ள ஒருவன் இதனைப் புரிந்துகொள்வான்.
10 எனது ஒழுக்கத்தை ஏற்றுக்கொள், இது வெள்ளியைவிட விலை மதிப்புடையது.
    இது சிறந்த பொன்னைவிட மதிப்பிற்குரியது.
11 ஞானமானது முத்துக்களைவிட மதிப்புமிக்கது.
    ஒருவன் விரும்புகிற அனைத்துப் பொருட்களையும்விட இது மிகவும் மதிப்புடையது”

என்று ஞானம் கூறுகிறது.

The Value of Wisdom

12 நான் ஞானம். நான் நல்ல தீர்ப்புகளோடு வாழ்கிறேன்.
    நீ என்னை அறிவாலும் நல்ல தீர்மானங்களாலும் கண்டுக்கொள்ள முடியும்.
13 ஒருவன் கர்த்தரை மதிக்கும்போது அவன் தீயவைகளை வெறுக்கிறான்.
    ஞானமாகிய நான் பெருமையை வெறுக்கிறேன்.
மற்றவர்களைவிட தன்னைப் பெரியவனாக நினைப்பவர்களையும் நான் வெறுக்கிறேன்.
    நான் தீய வழிகளையும், பொய்சொல்லும் வாய்களையும் வெறுக்கிறேன்.
14 ஆனால் ஞானமாகிய நான் ஜனங்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்கும் திறமைகளையும் நல்ல தீர்ப்புகளையும் வழங்குகிறேன்.
    நான் புரிந்துகொள்ளும் வல்லமையும் கொடுக்கிறேன்.
15 அரசர்கள் ஞானமாகிய என்னை ஆட்சிக்குப் பயன்படுத்துவார்கள்.
    ஆளுபவர்கள் என்னை நியாயமான சட்டங்களை ஏற்படுத்தப் பயன்படுத்துவார்கள்.
16 பூமியில் உள்ள ஒவ்வொரு நல்ல ஆட்சியாளனும் என்னைப் பயன்படுத்தி
    தனக்குக் கட்டுப்பட்ட ஜனங்களை ஆளுகிறான்.
17 என்னை நேசிக்கிற ஜனங்களை ஞானமாகிய நான் நேசிக்கிறேன்.
    என்னை கண்டுக்கொள்ள ஜனங்கள் கடுமையாக முயற்சித்தால் அவர்கள் கண்டுக்கொள்வார்கள்.
18 ஞானமாகிய என்னிடமும் கொடுப்பதற்கென்று செல்வமும் மதிப்பும் உள்ளன.
    நான் உண்மையான செல்வத்தையும் வெற்றியையும் தருவேன்.
19 நான் தருகின்ற பொருட்கள் சிறந்த பொன்னைவிட உயர்ந்தவை.
    எனது அன்பளிப்புகள் சுத்தமான வெள்ளியைவிட உயர்ந்தவை.
20 ஞானமாகிய நான் ஜனங்களை நல் வழியிலேயே நடத்திச்செல்வேன்.
    நான் அவர்களைச் சரியான நியாயத்தீர்ப்பின் வழியில் நடத்திச் செல்வேன்.
21 என்னை நேசிக்கின்றவர்களுக்கு நான் செல்வத்தைத் தருவேன்.
    ஆம், அவர்களின் வீட்டைக் களஞ்சியத்தால் நிரப்புவேன்.
22 நீண்டகாலத்துக்கு முன், துவக்கத்தில்
    முதலாவதாக ஞானமாகிய நானே படைக்கப்பட்டேன்.
23 ஞானமாகிய நான் துவக்கத்தில் உருவாக்கப்பட்டேன்.
    உலகம் படைக்கப்படும் முன்னே நான் படைக்கப்பட்டேன்.
24 ஞானமாகிய நான் கடல்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டேன்.
    நான் தண்ணீருக்கு முன்னமே படைக்கப்பட்டேன்.
25 ஞானமாகிய நான் மலைகளுக்கு முன்னமே பிறந்தவள்.
    நான் குன்றுகளுக்கு முன்னமே பிறந்தேன்.
26 கர்த்தர் பூமியைப் படைப்பதற்கு முன்னமே ஞானமாகிய நான் பிறந்தேன்.
    நான் வயல் வெளிகளுக்கு முன்னமே பிறந்தேன். நான் உலகில் முதல் மண் உருவாக்கப்படும் முன்னமே தேவனால் பிறப்பிக்கப்பட்டேன்.
27 கர்த்தர் வானத்தைப் படைக்கும்போது ஞானமாகிய நான் அங்கிருந்தேன்.
    கர்த்தர் கடலின் எல்லைகளை நிலத்தைச்சுற்றி வட்டங்களாக வரைந்தபோதும் ஞானமாகிய நான் அங்கிருந்தேன்.
28 கர்த்தர் வானத்தில் மேகங்களை வைப்பதற்கு முன்னரே நான் பிறப்பிக்கப்பட்டேன்.
    கர்த்தர் கடலில் தண்ணீரை ஊற்றும்போதே நான் அங்கிருந்தேன்.
29 கடல்களில் தண்ணீரின் அளவை கர்த்தர் நிர்ணயித்தபோதே நான் அங்கிருந்தேன்.
    தண்ணீரானது கர்த்தருடைய அனுமதியின்றி உயர்ந்திட முடியாது.
கர்த்தர் உலகத்தின் அஸ்திபாரத்தை உண்டாக்கியபோது நான் அங்கிருந்தேன்.
30 நான் அவரது அருகில் திறமையுள்ள வேலைக்காரனாக இருந்தேன்.
    கர்த்தர் என்னால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அடைந்தார்.
    நான் அவரை எப்பொழுதும் மகிழ்ச்சியோடு சிரிக்கச் செய்தேன்.
31 தான் படைத்த உலகத்தைப் பார்த்து கர்த்தர் மகிழ்ந்தார்.
    அவர் அதிலுள்ள ஜனங்களைப் பார்த்து மகிழ்ந்தார்.
32 “குழந்தைகளே! இப்பொழுது நான் சொல்வதை கவனியுங்கள்.
    நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
    ஆனால் எனது வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
33 எனது போதனைகளைக் கேட்டு ஞானம் பெறுங்கள்.
    அதைக் கவனிக்க மறுக்காதீர்கள்.
34 என்னைக் கவனிக்கிற எவனும் மகிழ்ச்சியாக இருப்பான்.
    அவன் ஒவ்வொரு நாளும் என் வழிகளைக் கவனிப்பான்.
    அவன் என் வழியருகில் காத்திருப்பான்.
35 என்னைக் கண்டுக்கொள்கிறவன் வாழ்வைக் கண்டுக்கொள்கிறான்.
    அவன் கர்த்தரிடமிருந்து நல்லவற்றைப் பெறுவான்.
36 ஆனால் எனக்கு எதிராகப் பாவம் செய்கிறவன் தன்னையே புண்படுத்திக்கொள்கிறான்.
    என்னை வெறுக்கிற அனைவரும் மரணத்தை விரும்புகிறார்கள்.”

ஞானம் தனது வீட்டைக் கட்டி அதில் ஏழு தூண்களையும் அமைத்துக்கொண்டாள். ஞானம் இறைச்சியைச் சமைத்து, திராட்சை ரசத்தைத் தயாரித்து அவைகளை மேஜைமீது வைத்தாள். பிறகு தன் வேலைக்காரர்களை அனுப்பி நகரத்திலிருந்து ஜனங்களை மலைக்கு வந்து தன்னோடு உணவருந்தும்படி அழைத்தாள். அவள், “வாருங்கள், கற்க அவசியமுள்ளவர்களே வாருங்கள்” என்று அழைத்தாள். அறிவில்லாதவர்களையும் அவள் வரவழைத்தாள். “வாருங்கள், ஞானமாகிய உணவை உண்ணுங்கள். நான் தயாரித்த திராட்சைரசத்தைப் பருகுங்கள். உங்கள் பழைய முட்டாள்தனமான வழிகளை விட்டுவிடுங்கள். உங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. புரிந்துகொள்ளுதலின் வழியைப் பின்பற்றுங்கள்” என்றாள்.

பெருமை கொண்டவனிடம் சென்று அவன் வழிகள் தவறானவை என்று நீ சொல்ல முயற்சித்தால், அவன் உன்னிடமே குற்றம் கண்டுபிடித்து இழிவாகப் பேசுவான். அவன் தேவனுடைய ஞானத்தையும் கேலிச் செய்வான். ஒரு கெட்டவனிடம் அவன் தவறானவன் என்று நீ சொன்னால் அவன் உன்னையும் கேலிச் செய்வான். எனவே ஒருவன் மற்றவர்களைவிட தான் மேலானவன் என எண்ணிக்கொண்டிருந்தால், அவன் வழிகள் தவறானவை என்று அவனிடம் சொல்லவேண்டாம். இதற்காக அவன் உன்னை வெறுப்பான். ஆனால் நீ ஒரு புத்திசாலிக்கு உதவி செய்தால் அவன் உன்னை மதித்துப் போற்றுவான். நீ அறிவாளிக்குப் போதித்தால் அவன் மேலும் ஞானத்தைப் பெறுகிறான். நீ நல்லவனுக்குப் போதித்தால் அவன் மேலும் கற்றுக்கொள்வான்.

10 கர்த்தரை மதிப்பதுதான் ஞானம் பெறுவதற்கான முதல் படியாகும். கர்த்தரைப்பற்றிய அறிவைப் பெறுவதுதான் அறிவைப் பெறுவதற்கான முதல் படியாகும். 11 நீ ஞானம் உடையவனாக இருந்தால், உன் ஆயுள் காலம் நீண்டதாக இருக்கும். 12 நீ ஞானம் உடையவனாக ஆனால் உனது சொந்த நன்மைக்கு நீ ஞானம் உடையவனாகிறாய். ஆனால் நீ வீண்பெருமை கொண்டவனாகி மற்றவர்களைக் கேலி செய்தால், உனது துன்பங்களுக்கு நீயே பொறுப்பாளி ஆகிறாய்.

Foolishness—the Other Woman

13 ஒரு முட்டாள் சத்தமாகப் பேசும் தீய பெண்ணைப் போன்றவன். அவளுக்கு அறிவில்லை. 14 அவள் தன் வீட்டுக் கதவருகில் உட்கார்ந்திருப்பாள். நகரத்து மலை மீது இருக்கை போட்டு அமர்ந்திருப்பாள். 15 அவ்வழியாக ஜனங்கள் போகும்போது அவள் அவர்களை அழைக்கிறாள். அவர்களுக்கு அவளைப்பற்றி எந்த ஆர்வமும் இல்லாவிட்டாலும் அவள், 16 “கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் எல்லாரும் வாருங்கள்” என்பாள். அவள் முட்டாள் ஜனங்களையும் அழைக்கிறாள். 17 ஆனால் முட்டாள்தனமாகிய அந்தப் பெண், “நீங்கள் தண்ணீரைத் திருடினால் அது உங்கள் சொந்தத் தண்ணீரைவிடச் சுவையானதாக இருக்கும். நீங்கள் ரொட்டியைத் திருடினால், அது நீங்களாக சமைத்த ரொட்டியைவிடச் சுவையானதாக இருக்கும்” என்பாள். 18 அவள் வீடு முழுவதும் கெட்ட ஆவிகளால் நிறைந்திருக்கும் என்று முட்டாள்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவள் அவர்களை மரணத்தின் ஆழமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வாள்.

2 கொரி 3

புதிய உடன்படிக்கை

நாங்கள் மீண்டும் எங்களைப்பற்றியே பெருமையாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டோமா? மற்றவர்களைப் போன்று எனக்கோ அல்லது என்னிடமிருந்தோ அறிமுக நிருபங்கள் தேவையா? எங்கள் நிருபம் நீங்கள் தான். எங்கள் இதயங்களில் நீங்கள் எழுதப்பட்டிருக்கிறீர்கள். அனைவராலும் அறியப்படுகிறவர்களாகவும், வாசிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கிறீர்கள். கிறிஸ்துவிடமிருந்து எங்கள் மூலம் அனுப்பிய நிருபம் நீங்கள் தான் என்று காட்டிவிட்டீர்கள். இந்நிருபம் மையால் எழுதப்படவில்லை. ஜீவனுள்ள தேவனுடைய ஆவியால் எழுதப்பட்டுள்ளது. இது கற்பலகையின் [a] மீது எழுதப்படவில்லை. மனித இதயங்களின் மீது எழுதப்பட்டுள்ளது.

கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு முன்னால் உறுதியாக நம்புவதால் எங்களால் இவற்றைச் சொல்ல முடிகிறது. எங்களால் நல்லதாக எதனையும் செய்ய முடியும் என்று நாங்கள் கருதுவதாக அர்த்தம் இல்லை. செய்யவேண்டிய எல்லாக் காரியங்களுக்குமான வல்லமையை எங்களுக்குத் தருபவர் தேவனே ஆவார். புது உடன்படிக்கை ஊழியராக இருக்கும்படி அவரே எங்களைத் தகுதியுள்ளவர் ஆக்கினார். இந்தப் புதிய ஒப்பந்தம் வெறும் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தமாய் இராமல் ஆவிக்குரியதாக இருக்கிறது. எழுத்துப் பூர்வமான சட்டம் மரணத்தைக் கொண்டு வருகிறது. ஆவியோ வாழ்வைத் தருகிறது.

புதிய உடன்படிக்கையும் மகிமையும்

மரணத்துக்கு வழி வகுக்கும் சேவைக்குரிய பிரமாணங்கள் கற்களில் எழுதப்பட்டன. அது தேவனுடைய மகிமையோடு வந்தது. அதனால் மோசேயின் முகம் ஒளி பெற்றது. அந்த ஒளி இஸ்ரவேல் மக்களைப் பார்க்க இயலாதபடி செய்தது. அந்த மகிமை பிறகு மறைந்துபோனது. எனவே ஆவிக்குரிய சேவை நிச்சயமாக மிகுந்த மகிமையுடையதாக இருக்கும். மக்களை நியாயம் தீர்க்கிற சேவைகள் மகிமையுடையதாக இருக்கும்போது தேவனுக்கும் மனிதனுக்குமிடையே சீரான உறவுக்கு உதவும் சேவைகளும் மிகுந்த மகிமை உடையதாக இருக்கும். 10 பழைய சேவைகளும் மகிமைக்குரியதே. எனினும் புதிய சேவைகளால் வரும் மகிமையோடு ஒப்பிடும்போது அதன் பெருமை அழிந்துபோகிறது. 11 மறைந்து போகிறவை மகிமையுடையதாகக் கருதப்படுமானால் என்றென்றும் நிலைத்து இருப்பவை மிகுந்த மகிமையுடையதே.

12 எங்களுக்கு இந்த நம்பிக்கை இருப்பதால் நாங்கள் தைரியமாக இருக்கிறோம். 13 நாங்கள் மோசேயைப் போன்றில்லை. அவர் தன் முகத்தை முக்காடிட்டு மூடி மறைத்துக்கொண்டார். அவரது முகத்தை இஸ்ரவேல் மக்களால் பார்க்க முடியவில்லை. அந்த வெளிச்சமும் மறைந்து போயிற்று. அவர்கள் அதன் மறைவைப் பார்ப்பதை மோசே விரும்பவில்லை. 14 ஆனால் அவர்கள் மனமும் அடைத்திருந்தது. அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுதும் கூட அந்த முக்காடு அவர்கள் பழைய ஏற்பாட்டைப் புரிந்துகொள்ள முடியாதபடி செய்கின்றது. அந்த முக்காடு கிறிஸ்துவால்தான் விலக்கப்படுகிறது. 15 ஆனாலும் கூட இன்று, மக்கள் மோசேயின் சட்டத்தை வாசிக்கும்போது அவர்களின் மனம் மூடிக்கொண்டிருக்கிறது. 16 ஆனால் எவனொருவன் மாற்றம் பெற்று, கர்த்தரைப் பின்பற்றுகிறானோ அவனுக்கு அந்த முக்காடு விலக்கப்படுகிறது. 17 கர்த்தரே ஆவியாய் இருக்கிறார். எங்கெல்லாம் அந்த ஆவியானவர் உள்ளாரோ அங்கெல்லாம் விடுதலை உண்டு. 18 நமது முகங்கள் மூடப்பட்டில்லை. நாமெல்லாரும் தேவனுடைய மகிமையைக் காட்டுகிறோம். நாம் அவரைப்போன்று மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நம்முள் எழும் இம்மாற்றம் மேலும் மேலும் மகிமையைத் தருகிறது. இம்மகிமை ஆவியாக இருக்கிற கர்த்தரிடமிருந்து வருகிறது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center