Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 46-48

அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்

46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
    தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
எனவே பூமி நடுங்கினாலும்,
    மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
    பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.

உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
    மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
    சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
    கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
    யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.

கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
    அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
    வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
    இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.

10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
    நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.

11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
    யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.

கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்

47 சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள்,
    தேவனை நோக்கி மகிழ்ச்சியால் சத்தமிடுங்கள்.
உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர்.
    பூமியெங்கும் அவர் பேரரசர்.
பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார்.
    அத்தேசங்களை நம் ஆளுகைக்குட்படுத்துகிறார்.
தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந்தெடுத்தார்.
    தான் நேசித்த யாக்கோபிற்காக அந்த அதிசய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார்.

எக்காளமும் கொம்பும் முழங்க,
    கர்த்தர் அவரது சிங்காசனத்தில் ஏறுகிறார்.
தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
    நம் அரசரைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
அகில உலகத்திற்கும் தேவனே அரசர்.
    துதிப் பாடல்களைப் பாடுங்கள்.
பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார்.
    எல்லாத் தேசங்களையும் தேவன் ஆளுகிறார்.
ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத்
    தேசங்களின் தலைவர்கள் சந்திப்பார்கள்.
எல்லாத் தேசங்களின் எல்லாத் தலைவர்களும் தேவனுக்குரியவர்கள்.
    தேவனே எல்லோரிலும் மேன்மையானவர்.

கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்

48 கர்த்தர் மேன்மையானவர்.
    தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர்.
தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது.
    அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும்.
சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை.
    அதுவே பேரரசரின் நகரமாகும்.
அந்நகரத்து அரண்மனைகளில்
    தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார்.
ஒருமுறை, சில அரசர்கள் சந்தித்து,
    இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள்.
அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.
    அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள்.
அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
    அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.
தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால்
    பெருங்கப்பல்களை உடைத்தீர்.
ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம்.
    ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம்.
    தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.

தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம்.
10 தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர்,
    பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர்.
    நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம்.
11 தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது.
    யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன.
12 சீயோனைச் சுற்றி நட.
    நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார்.
13 அந்த உயர்ந்த சுவர்களைப் பார்.
    சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார்.
    வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம்.
14 இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன்.
    அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.

அப்போஸ்தலர் 28

மெலித்தா தீவில் பவுல்

28 நாங்கள் நலமாகக் கரையை அடைந்தபோது அத்தீவு மெலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம். மழை பெய்துகொண்டிருந்தது. குளிர் மிகுதியாக இருந்தது. ஆனால் அங்கு வாழ்ந்த மக்கள் எங்களை அசாதாரணமான அன்புடன் நடத்தினார்கள். அவர்கள் எங்களுக்காகத் தீ மூட்டி எங்களையெல்லாம் வரவேற்றனர். நெருப்பின் பொருட்டு பவுல் விறகுக் குச்சிகளை சேகரித்தான். பவுல் அக்குச்சிகளை நெருப்பில் இட்டுக்கொண்டிருந்தான். விஷப் பாம்பு ஒன்று வெப்பத்தினால் வெளியேறி வந்து பவுலின் கையில் கடித்தது. தீவில் வாழ்ந்த மக்கள் பவுலின் கையில் அப்பாம்பு தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், “இம்மனிதன் ஒரு கொலைக்காரனாக இருக்க வேண்டும். அவன் கடலில் இறக்கவில்லை. ஆனால் தெய்வீக நீதியானது அவன் வாழ்வதை விரும்பவில்லை” என்றனர்.

ஆனால் பவுல் பாம்பைத் தீயினுள் உதறினான். அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. பவுல் சரீரம் வீங்கக் கூடும், அல்லது அவன் இறந்துவிடக்கூடும் என்று மக்கள் எண்ணினர். மக்கள் காத்திருந்து நீண்ட நேரம் பவுலைக் கண்காணித்தனர். ஆனால் அவனுக்கு எந்தத் தீங்கும் நேரவில்லை. எனவே பவுலைக் குறித்த தங்கள் கருத்தை அவர்கள் மாற்றிக்கொண்டனர். அவர்கள் “அவன் ஒரு தேவன்” என்றனர்.

அப்பகுதியைச் சுற்றிலும் சில வயல்கள் இருந்தன. தீவின் ஒரு முக்கியமான மனிதனுக்கு அந்த வயல்கள் சொந்தமானவை. அவன் பெயர் புபிலியு. அவன் எங்களைத் தனது வீட்டிற்குள் வரவேற்றான். அவன் எங்களுக்கு நல்லவனாக இருந்தான். நாங்கள் அவனது வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். புபிலியுவின் தந்தை மிகவும் நோயுற்றுப் படுக்கையிலிருந்தார். அவருக்கு காய்ச்சலும் வயிற்றிளைச்சலும் இருந்தது. ஆனால் பவுல் அவனிடம் சென்று அவனுக்காகப் பிரார்த்தனை செய்தான். பவுல் தனது கைகளை அம்மனிதன் மீது வைத்து அவனைக் குணமாக்கினான். இது நடந்த பின் தீவிலுள்ள எல்லா நோயாளிகளும் பவுலிடம் வந்தனர். அவர்களையும் கூடப் பவுல் குணமாக்கினான்.

10-11 தீவின் மக்கள் எங்களுக்குப் பல கௌரவங்களை அளித்தார்கள். (நாங்கள் தீவில் மூன்று மாதம் தங்கினோம்) நாங்கள் புறப்படுவதற்குத் தயாரானபோது எங்களுக்குத் தேவையான பொருட்களை மக்கள் கொடுத்தார்கள்.

பவுல் ரோமுக்குப் போகிறான்

அலெக்ஸாண்டிரியாவிலிருந்து வந்த ஒரு கப்பலில் நாங்கள் ஏறினோம். குளிர் காலத்தில் அக்கப்பல் மெலித்தா தீவில் தங்கியிருந்தது. மிதுனம் [a] என்னும் சின்னம் கப்பலில் முன்புறத்தில் இருந்தது. 12 சிராகூஸ் நகரில் நாங்கள் கப்பலை நிறுத்தினோம். மூன்று நாட்கள் சிராகூஸில் தங்கியிருந்து பின் புறப்பட்டோம். 13 ரேகியு நகருக்கு நாங்கள் வந்தோம். தென்மேற்கிலிருந்து மறுநாள் ஒரு காற்று வீசியது. எனவே நாங்கள் கடலில் பயணமாக முடிந்தது. ஒரு நாள் கழித்து நாங்கள் புத்தேயோலி நகருக்கு வந்தோம். 14 அங்குச் சில சகோதரர்களை நாங்கள் கண்டோம். ஒரு வாரம் தம்மோடு எங்களைத் தங்கியிருக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். இறுதியில் நாங்கள் ரோமை அடைந்தோம். 15 ரோமிலுள்ள விசுவாசிகள் நாங்கள் அங்கிருப்பதை கேள்விப்பட்டனர். அப்பியு சந்தையிலும், மூன்று விடுதிகளிலும் எங்களைச் சந்திக்கும்படியாக அவர்கள் வந்தனர். விசுவாசிகளைக் கண்டபோது பவுல் ஊக்கம் பெற்றான். பவுல் தேவனுக்கு நன்றி கூறினான்.

ரோமில் பவுல்

16 பின்பு நாங்கள் ரோமுக்குச் சென்றோம். ரோமில் பவுல் தனித்துத் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டான். ஒரு வீரன் மட்டும் பவுலைக் காவல் காப்பதற்காக அவனோடு தங்கினான்.

17 மூன்று நாளைக்குப் பின் பவுல், சில மிக முக்கியமான யூதர்களைத் தன்னிடம் வருமாறு சொல்லியனுப்பினான். அவர்கள் எல்லோரும் வந்தபோது பவுல், “எனது யூத சகோதரர்களே, நான் நமது மக்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை, நம் முன்னோர்களின் மரபிற்கு எதிராகவும் எதையும் நான் செய்யவில்லை. ஆனால் என்னை எருசலேமில் சிறைப்பிடித்து ரோமரிடம் ஒப்படைத்தனர். 18 ரோமர்கள் என்னை விசாரித்தார்கள். ஆனால் நான் கொல்லப்படுவதற்கு ஏதுவான எந்தக் காரணத்தையும் என்னிடம் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் என்னை விடுதலை செய்ய விரும்பினர். 19 ஆனால் அங்கிருந்த யூதர்கள் அதை விரும்பவில்லை. எனவே நான் என்னை இராயரிடம் வழக்காடும்படியாக ரோமுக்குக் கொண்டு வருமாறு கேட்க வேண்டியதாயிற்று. ஆனால் எனது மக்கள் தவறிழைத்தார்கள் என்று நான் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கவில்லை. 20 எனவே தான் உங்களைச் சந்தித்து உங்களோடு பேச விரும்பினேன். இஸ்ரவேலரின் நம்பிக்கையை நான் கொண்டிருப்பதால் இவ்விலங்குகளால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்றான்.

21 யூதர்கள் பவுலுக்குப் பதிலாக, “நாங்கள் உன்னைக் குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதையும் பெறவில்லை. அங்கிருந்து பயணம் செய்த எந்த யூத சகோதரரும் உன்னைக் குறித்து செய்தி கொண்டுவரவோ, உன்னைப் பற்றித் தவறாக எதையும் கூறவோ இல்லை. 22 நாங்கள் உனது கருத்துக்களை அறிய விரும்புகிறோம். இந்தக் கூட்டத்தினருக்கு (கிறிஸ்தவர்களுக்கு) எதிராக எல்லா இடங்களின் மக்களும் பேசிக்கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம்” என்றனர்.

23 பவுலும் யூதரும் கூட்டத்திற்கு ஒரு நாளைத் தேர்ந்துகொண்டனர். அந்த நாளில் இன்னும் பல யூதர்கள் பவுலை அவனது வீட்டில் சந்தித்தனர். நாள் முழுவதும் பவுல் அவர்களிடம் பேசினான். தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்து பவுல் அவர்களுக்கு விளக்கினான். இயேசுவைக் குறித்த காரியங்களில் அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்ய முயன்றான். மோசேயின் சட்டங்களையும் தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களையும் இதற்குப் பயன்படுத்தினான். 24 சில யூதர்கள் பவுல் கூறியவற்றை நம்பினார்கள். ஆனால் மற்றவர்கள் அதை நம்பவில்லை. 25 அவர்களிடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யூதர்கள் புறப்படுவதற்குத் தயாராக இருந்தனர். ஆனால் பவுல் அவர்களுக்கு வேறொரு செய்தியையும் சொல்லியனுப்பினான்: “பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக உங்கள் முன்னோருக்கு உண்மையைக் கூறினார். அவர்,

26 “‘இம்மக்களிடம் போய் அவர்களுக்குக் கூறு,
நீங்கள் கவனிப்பீர்கள், நீங்கள் கேட்பீர்கள்,
    ஆனால் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
நீங்கள் காண்பீர்கள், நீங்கள் பார்ப்பீர்கள்,
    ஆனால் நீங்கள் பார்ப்பவற்றைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
27 ஆம், இம்மக்களின் இருதயங்கள் கடினப்பட்டுள்ளன.
    இம்மக்களுக்குக் காதுகள் உள்ளன.
    ஆனால் அவர்கள் கேட்பதில்லை.
இம்மக்கள் உண்மையைக் காணவும் மறுக்கிறார்கள்.
    இம்மக்கள் தம் கண்களால் பார்க்காமலும்,
    தம் காதுகளால் கேளாமலும்,
    தம் மனங்களால் புரிந்துகொள்ளாமலும் இருக்கப் போவதாலேயே இது நடந்தது.
அவர்கள் குணமடைவதற்காக என்னை நோக்கித் திரும்பாமல் இருப்பதற்காகவே இது நிகழ்ந்தது’ என்றார். (A)

28 “தேவன் தமது இரட்சிப்பை யூதரல்லாத மக்களுக்கு அனுப்பினார் என்பதை யூதராகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் கவனிப்பார்கள்!” என்றான். 29 [b]

30 அவனது வாடகை வீட்டில் பவுல் இரண்டு ஆண்டுகள் முழுவதும் தங்கியிருந்தான். அவனைச் சந்திக்கும்படியாக வந்த மக்களை வரவேற்றான். 31 பவுல் தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் போதித்தான். கர்த்தர் இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கற்பித்தான். அவன் தைரியசாலியாக இருந்தான். அவன் பேசுவதை நிறுத்த ஒருவரும் முயற்சிக்கவில்லை.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center