Old/New Testament
தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்
16 தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும்.
2 நான் கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நீர் என் ஆண்டவர்,
என்னிடமுள்ள நற்காரியம் ஒவ்வொன்றும் உம்மிடமிருந்து வருகிறது” என்றேன்.
3 பூமியிலுள்ள தன் சீடருக்கு கர்த்தர் அற்புதமானவற்றைச் செய்கிறார்.
அந்த ஜனங்களை உண்மையாய் நேசிப்பதை கர்த்தர் காட்டுகிறார்.
4 பிற தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஓடும் ஜனங்களோ வேதனைக்கு ஆளாவார்கள்.
அவ்விக்கிரகங்களுக்கு அவர்கள் படைக்கும் இரத்த பலிகளில் நான் பங்கு கொள்ளமாட்டேன்.
அவ்விக்கிரகங்களின் பெயர்களையும் கூட நான் கூறமாட்டேன்.
5 என் பங்கும் பாத்திரமும் கர்த்தரிடமிருந்தே வரும்.
கர்த்தாவே, எனக்கு உதவும், என் பங்கை எனக்குத் தாரும்.
6 என் பரம்பரைச் சொத்து அற்புதமானது.
நான் பெற்ற பங்கு மிக அழகானது.
7 எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன்.
இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன.
8 என் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
அவர் என் வலதுபுறத்திலிருப்பதால் நிச்சயமாய் விலகமாட்டேன்.
9 என் இருதயமும் ஆத்துமாவும் மிகவும் மகிழும்.
என் உடலும் பாதுகாப்பாய் வாழும்.
10 ஏனெனில் கர்த்தாவே, என் ஆத்துமாவை மரணத்தின் இடத்தில் இருக்கவிடமாட்டீர்.
உம்மீது நம்பிக்கை வைத்த ஒருவரையும் கல்லறையில் அழுகிப்போக அனுமதிக்கமாட்டீர்.
11 சரியான வழியில் வாழ நீர் எனக்குப் போதிப்பீர்.
கர்த்தாவே, உம்மோடிருப்பதே எனக்குப் பூரண ஆனந்தம் தரும்.
உமது வலதுபுறத்தில் தங்குவதே என்றென்றும் இன்பம் தரும்.
தாவீதின் ஒரு ஜெபம்
17 கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும்.
எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும்.
எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.
2 என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர்.
உம்மால் உண்மையைக் காணமுடியும்.
3 நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர்.
இரவு முழுவதும் என்னோடிருந்தீர்.
என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை.
நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை.
4 உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.
5 உமது வழிமுறைகளை பின்பற்றினேன்.
உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.
6 தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர்.
எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.
7 தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர்.
உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.
8 கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.
9 கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும்.
என்னைத் தாக்க முயல்கிற ஜனங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
10 தங்களைப் பற்றிப் பெருமைபாராட்டுகிற அத்தீயோர் தேவனுக்குச் செவிசாய்க்க முடியாதபடி
பெருமையுடையோராய் இருக்கிறார்கள்.
11 அந்த ஜனங்கள் என்னைத் துரத்தினார்கள்.
இப்போது அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
என்னைத் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
12 பிற விலங்குகளைக் கொன்று சாப்பிடக் காத்திருக்கும் சிங்கத்தைப்போன்று அத்தீயோர் காணப்படுகிறார்கள்.
தாக்கக் காத்திருக்கும் சிங்கத்தைப்போல் மறைந்திருக்கிறார்கள்.
13 கர்த்தாவே, எழுந்து பகைவரிடம் சென்று, அவர்கள் சரணடையச் செய்யும்.
உமது வாளால் அத்தீயோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 கர்த்தாவே, உயிருள்ளோர் வாழும் தேசத்திலிருந்து அத்தீயோரை
உமது வல்லமையால் அப்புறப்படுத்தும்.
கர்த்தாவே, பலர் உம்மிடம் உதவிக்காக வருவார்கள். இவ்வாழ்க்கையில் அதிகம் பலனில்லை.
அவர்களுக்கு அதிக உணவளியும்.
வேண்டுவனவற்றை அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடும்.
அவர்களின் பிள்ளைகளுக்கும் மிகுந்திருக்கும்படியாக அப்பிள்ளைகளுக்குத் திருப்தியாய் உணவளியும்.
15 நான் நீதிக்காக ஜெபிக்கிறேன்.
கர்த்தாவே, உமது முகத்தைக் காண்பேன்.
கர்த்தாவே, உம்மைப் பார்ப்பதால் முழுமையான திருப்திகொள்வேன்.
மக்கதோனியா, கிரீஸில் பவுல்
20 தொல்லை நீங்கியபோது பவுல் சீஷர்களைத் தன்னை வந்து பார்க்குமாறு அழைத்தான். அவன் அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறி,பின் விடை பெற்றான். பவுல் மக்கதோனியா நாட்டிற்குத் தன் பயணத்தைத் துவக்கினான். 2 மக்கதோனியாவிற்குச் சென்ற வழியில் பல இடங்களில் தங்கி சீஷர்களை பலப்படுத்துவதற்குப் பல காரியங்களை அவர்களுக்குக் கூறினான். பின் பவுல் கிரீசை அடைந்தான். 3 அவன் அங்கு மூன்று மாதங்கள் தங்கினான். அவன் சிரியாவுக்குக் கடற்பயணம் செய்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். ஆனால் சில யூதர்கள் அவனுக்கெதிராகத் திட்டம் வகுத்துக்கொண்டிருந்தனர். எனவே பவுல் மக்கதோனியா வழியாக சிரியாவுக்குத் திரும்பிப் போக முடிவு செய்தான். 4 சில மனிதர்கள் அவனோடிருந்தனர். அவர்கள் பெரேயா நகரத்தைச் சேர்ந்த சோபத்தர், தெசலோனிக்கா நகரத்தின் அரிஸ்தர்க்கு மற்றும் செக்குந்து, தெர்பெ நகரின் காயு, தீமோத்தேயு, ஆசியாவின் இரண்டு மனிதர்களான தீகிக்குவும், துரோப்பீமும் ஆவர். 5 பவுலுக்கு முன்னரே இம்மனிதர்கள் சென்றனர். துரோவா நகரில் அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர். 6 புளிப்பில்லாத அப்பத்தின் பண்டிகைக்குப் பிறகு நாங்கள் பிலிப்பி நகரத்திலிருந்து கடற் பயணமாகச் சென்றோம். ஐந்து நாட்களுக்குப் பிறகு துரோவாவில் இம்மனிதர்களை நாங்கள் சந்தித்தோம். அங்கு ஏழு நாட்கள் தங்கினோம்.
துரோவாவில் பவுல்
7 கர்த்தரின் திருவிருந்தை [a] உண்பதற்காக நாங்கள் அனைவரும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு அன்று கூடினோம். பவுல் கூட்டத்தில் பேசினான். மறுநாள் அங்கிருந்து செல்லத் திட்டமிட்டான். நள்ளிரவு வரைக்கும் பவுல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். 8 நாங்கள் எல்லோரும் மாடியிலுள்ள அறையில் கூடியிருந்தோம். அறையில் பல விளக்குகள் ஒளி வீசிக்கொண்டிருந்தன. 9 ஐத்தீகு என்னப்பட்ட இளைஞன் ஜன்னலில் அமர்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தான். ஐத்தீகு மிக, மிக தூக்க கலக்கமுற்றான். கடைசியில் அவன் தூங்கி, ஜன்னலிலிருந்து விழுந்தான். மூன்றாம் மாடியிலிருந்து அவன் கீழே விழுந்தான். மக்கள் சென்று அவனைத் தூக்கியபோது அவன் இறந்து விட்டிருந்தான்.
10 பவுல் ஐத்தீகுவிடம் இறங்கிச் சென்றான். அவன் முழங்காலிட்டு ஐத்தீகுவை கட்டித் தழுவினான். பவுல் பிற விசுவாசிகளை நோக்கி, “கவலைப்படாதீர்கள். அவன் இப்போது உயிரோடிருக்கிறான்” என்றான். 11 பவுல் மீண்டும் மாடிக்குச் சென்றான். அவன் அவர்களோடு அப்பத்தைப் பிட்டு உண்டான். பவுல் அவர்களோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசி முடித்தபோது அதிகாலைப் பொழுதாகியிருந்தது. பின் பவுல் புறப்பட்டுப் போனான். 12 மக்கள் இளைஞனை வீட்டிற்குள் எடுத்துச்சென்றனர். அவன் உயிரோடிருந்தான். மக்கள் மிகவும் ஆறுதல் அடைந்தனர்.
மிலேத்துவுக்குப் பயணம்
13 ஆசோ நகருக்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். நாங்கள் பவுலுக்கு முன்பாகவே முதலாவதாக அங்கு சென்றோம். ஆசோவில் பவுல் எங்களைச் சந்தித்து அங்குள்ள கப்பலில் எங்களோடு சேர்ந்துகொள்ளத் திட்டமிட்டான். பவுல் ஆசோவிற்கு நிலத்தின் வழியாகப் பயணம் செய்ய விரும்பியதால் இவ்வாறு செய்யும்படி எங்களுக்குக் கூறினான். 14 பின்னர் பவுலை நாங்கள் ஆசோவில் சந்தித்தோம். அங்கு அவன் எங்களோடு கப்பலின்மேல் வந்தான். நாங்கள் எல்லோரும் மித்திலேனே நகருக்குச் சென்றோம். 15 மறுநாள் நாங்கள் மித்திலேனேயிலிருந்து கடற்பயணமானோம். கீயுதீவின் அருகேயுள்ள ஓரிடத்திற்கு வந்தோம். மறுநாள் சாமோஸ் தீவிற்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். ஒரு நாள் கழித்து, மிலேத்து நகரத்திற்கு வந்தோம். 16 எபேசுவில் தங்கவேண்டாமென்று பவுல் ஏற்கெனவே முடிவெடுத்திருந்தான். ஆசியாவில் நீண்ட காலம் தங்க அவன் விரும்பவில்லை. முடிந்தால் பெந்தெகோஸ்து [b] நாளில் எருசலேமில் இருக்க விரும்பியதால் அவன் அவசரப்பட்டுக்கொண்டிருந்தான்.
2008 by World Bible Translation Center