Old/New Testament
10 கர்த்தாவே, ஏன் தூரத்தில் தங்கியிருக்கிறீர்?
தொல்லைக்குள்ளான மனிதர்கள் உம்மைக் காண இயலாது.
2 பெருமையும் தீமையும் நிறைந்த ஜனங்கள் தீய திட்டங்களை வகுக்கிறார்கள்.
அவர்கள் ஏழை ஜனங்களைத் துன்புறுத்துகிறார்கள்.
3 தீய ஜனங்கள் தங்களுடைய இச்சைகளைக் குறித்து பெருமை கொள்வார்கள்.
பேராசை மிக்க அந்த ஜனங்கள் தேவனை சபிப்பார்கள். இவ்வகையாக கர்த்தரைத் தாங்கள் வெறுப்பதைத் தீயோர் வெளிக்காட்டுவார்கள்.
4 தீயோர் தேவனைப் பின்பற்றக்கூடாத அளவிற்கு அதிகப் பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் தீய திட்டங்களையே வகுப்பார்கள்.
தேவனே இல்லை என்பது போல அவர்கள் நடந்துகொள்வார்கள்.
5 தீயோர் எப்போதும் கோணலானவற்றையே செய்வார்கள்.
அவர்கள் தேவனுடைய சட்டங்களையும், நல்ல போதகத்தையும் கவனிப்பதில்லை. [a]
தேவனுடைய பகைவர்கள் அவரது போதனைகளை அசட்டை செய்வார்கள்.
6 தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள்.
அவர்கள், “நாம் களிகூருவோம், நமக்குத் தண்டனையில்லை” என்பார்கள்.
7 அந்த ஜனங்கள் எப்போதும் சபிப்பார்கள்.
அவர்கள் பிறரைக் குறித்து எப்போதும் தீமையே பேசுவார்கள். அவர்கள் தீயவற்றையே திட்டமிடுவார்கள்.
8 அந்த ஜனங்கள் மறைவிடங்களில் இருந்து ஜனங்களைப் பிடிக்கக் காத்திருப்பார்கள்.
ஜனங்களைக் காயப்படுத்த மறைந்திருப்பார்கள்.
ஒன்றும் அறியாத ஜனங்களை அவர்கள் கொல்லுவார்கள்.
9 மிருகங்களை உண்பதற்காய் கொல்லக் காத்திருக்கும் சிங்கங்களைப் போலாவார்கள்.
ஏழைகளை அவர்கள் தாக்குவார்கள். தீயோர் விரிக்கும் வலையில் அவர்கள் சிக்குவார்கள்.
10 மீண்டும் மீண்டும் ஏழைகளையும் பிறரையும் துன்புறுத்துவார்கள்.
11 எனவே, “தேவன் எங்களை மறந்தார். என்றென்றும் தேவன் நம்மிடமிருந்து விலகிச் சென்றார்.
நமக்கு ஏற்படும் தீமையை தேவன் பாரார்!”
என்று அந்த ஏழைகள் எண்ணத் தொடங்குவார்கள்.
12 கர்த்தாவே, எழுந்து செயல்படும்!
தேவனே, அத்தீயோரைத் தண்டியும்!
ஏழைகளை மறவாதேயும்!
13 தீயோர் தேவனுக்கு எதிராவார்கள்.
ஏனென்றால் தேவன் தங்களைத் தண்டி யாரென்று எண்ணுவார்கள்.
14 கர்த்தாவே, தீயோர் செய்யும் கொடுமைகளையும் தீமைகளையும் நீர் காண்கிறீர்.
அவற்றைப் பார்த்து ஏதேனும் செய்யும்!
தொல்லைக்குள்ளான ஜனங்கள் உதவி கேட்டு உம்மிடம் வருவார்கள்.
கர்த்தாவே, நீரே அனாதைகளுக்கு உதவுகிறவர்.
எனவே அவர்களுக்கு உதவும்!
15 கர்த்தாவே, தீயோரை அழித்துவிடும்.
16 உமது நாட்டிலிருந்து அவர்களை அகற்றும்.
அப்பொழுது ஆண்டவராகிய நீரே நித்திய ராஜா என்பதை எல்லோரும் உணருவார்கள்.
17 கர்த்தாவே, ஏழை ஜனங்களின் தேவையைக் கேட்டறிந்தீர்.
அவர்கள் ஜெபங்களைக் கேட்டு, அதன்படி செய்யும்.
18 கர்த்தாவே, பெற்றோரற்ற பிள்ளைகளைக் காப்பாற்றும்.
துயரப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனங்களை மேலும் தொல்லைகளால் வருந்தவிடாதிரும்.
தீயோர் இங்கு வாழாதபடி அவர்களை அச்சுறுத்தும்.
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
11 கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன்.
ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்?
நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள்.
2 தீயோர் வேட்டைக்காரனைப் போன்றோர். இருளில் அவர்கள் ஒளிவார்கள்.
அவர்கள் வில்லை வளைத்து அம்பைக் குறிவைப்பார்கள்.
நல்ல, நேர்மையான இருதயமுள்ள ஜனங்களின் மேல் எய்வார்கள்.
3 நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்?
நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்?
4 கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.
பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருக்கிறார்.
நடப்பவற்றை கர்த்தர் கண்காணிக்கிறார்.
கர்த்தருடைய கண்கள் ஜனங்களை நல்லோரா, தீயோரா எனக் கண்டறியும்.
5 கர்த்தர் நல்லோரைத் தேடுகிறார்.
கர்த்தர் தீயவரையும், கொடியோரையும், வெறுக்கிறார்.
6 தீயோர்மேல் வெப்பமான நிலக்கரியையும், எரியும் கந்தகத்தையும் மழையாய்ப் பொழியச் செய்வார்.
வெப்பமான எரியும் காற்றைமட்டுமே அத்தீயோர் அனுபவிப்பார்கள்.
7 ஆனால் கர்த்தர் நல்லவர்.
நல்லதைச் செய்யும் ஜனங்களை அவர் நேசிக்கிறார்.
நல்லோர் அவருடன் இருப்பார்கள், அவர் முகத்தைக் காண்பார்கள்.
செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
12 கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்.
நல்லோர் மடிந்துபோயினர்.
பூமியிலுள்ள ஜனங்களிடையே உண்மையான நம்பிக்கையுள்ளோர் எவருமில்லை.
2 அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள்.
பொய்களால் அயலானைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
3 பொய் கூறும் நாவை கர்த்தர் அறுத்தெறிவார்.
தங்களையே புகழ்வோரின் நாக்குகளை கர்த்தர் துண்டித்தெறிவார்.
4 அந்த ஜனங்கள், “நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம்.
யாரும் எங்கள் எஜமானராக இயலாது!” என்கிறார்கள்.
5 ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள்.
உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள்.
களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார்.
6 கர்த்தருடைய சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை.
நெருப்பில் உருக்கப்பட்ட வெள்ளியைப்போல் அவை தூய்மையானவை.
ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல் அவை தூய்மையானவை.
7 கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும்.
இப்போதும் எப்போதும் அவர்களைப் பாதுகாப்பீராக.
8 அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள்.
உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள்.
அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை.
எபேசுவில் பவுல்
19 அப்பொல்லோ கொரிந்து நகரில் இருந்தபோது எபேசு நகருக்குச் செல்லும் வழியில் பவுல் சில உள்பகுதிகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். பவுல் எபேசுவில் சீஷர்கள் சிலரைக் கண்டுபிடித்தான். 2 பவுல் அவர்களை நோக்கி, “நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான்.
இந்தச் சீஷர்கள் அவனுக்கு, “நாங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லை” என்றனர்.
3 எனவே பவுல் அவர்களை நோக்கி, “பின் நீங்கள் எத்தகைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான்.
அவர்கள், “யோவான் கற்பித்த ஞானஸ்நானம் அது” என்றார்கள்.
4 பவுல், “மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புவதைக் காட்டுவதற்கு யோவான் அவர்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். அவனுக்குப் பின் வருகிற ஒருவரை நம்பும்படியாக யோவான் மக்களுக்குக் கூறினான். அவர் இயேசுவே” என்றான்.
5 அவர்கள் இதனைக் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். 6 அப்போது பவுல் அவனது கைகளை அவர்கள்மீது வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது வந்தார். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசவும் தீர்க்கதரிசனம் சொல்லவும் ஆரம்பித்தனர். 7 இக்குழுவில் சுமார் பன்னிரண்டு மனிதர்கள் இருந்தனர்.
8 பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்று, மிகவும் துணிவாகப் பேசினான். பவுல் மூன்று மாதங்கள் இதைச் செய்தான். அவன் யூதர்களிடம் தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிப் பேசி, அவற்றை யூதர்கள் ஏற்றுக்கொள்ளும்படித் தூண்ட முயற்சித்தான். 9 ஆனால் சில யூதர்கள் பிடிவாதமாக இருந்தனர். அவர்கள் நம்ப மறுத்தனர். இந்த யூதர்கள் தேவனுடைய வழியைக் குறித்துத் தீயவற்றைப் பேசினர். எல்லா மக்களும் இவற்றை கேட்டனர். எனவே பவுல் இந்த யூதரை விட்டு நீங்கி, இயேசுவின் சீஷர்களைத் தன்னோடு அழைத்துச் சென்றான். திறன்னு என்ற ஒருவனின் பள்ளிக்கூடம் இருந்த இடத்திற்குப் பவுல் போனான். பவுல் அங்கிருந்த மக்களுடன் தினமும் கலந்துரையாடினான். 10 பவுல் இதை இரண்டு வருடங்கள் செய்தான். இச்செயலால் ஆசியாவில் வசித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு யூதனும் கிரேக்கனும் தேவனுடைய வார்த்தையைக் கேட்டனர்.
ஸ்கேவாவின் பிள்ளைகள்
11 சில அசாதாரணமான அற்புதங்களைச் செய்வதற்கு தேவன் பவுலைப் பயன்படுத்தினார். 12 பவுல் பயன்படுத்திய துணிகளையும் கைக்குட்டைகளையும் சிலர் எடுத்துச் சென்றனர். இவற்றை மக்கள் நோயாளிகள் மீது வைத்தனர். அவர்கள் இதைச் செய்தபோது, நோயாளிகள் குணமடைந்தார்கள். அசுத்த ஆவிகள் அவர்களைவிட்டு நீங்கிச் சென்றன.
13-14 சில யூதர்களும் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களை விட்டு அசுத்த ஆவிகள் நீங்கும்படியாகச் செய்தனர். ஸ்கேவாவின் ஏழு மகன்களும் இதைச் செய்தனர். (ஸ்கேவா ஒரு தலைமை ஆசாரியன்) கர்த்தர் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி, மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளை வெளியேற்ற இந்த யூதர்கள் முயன்றனர். அவர்கள் எல்லோரும், “பவுல் பேசுகின்ற அதே இயேசுவினால், வெளியேறுமாறு நான் கட்டளையிடுகிறேன்!” என்று கூறினர்.
15 ஆனால் ஒருமுறை ஓர் அசுத்த ஆவி இந்த யூதர்களை நோக்கி, “எனக்கு இயேசுவைத் தெரியும், எனக்குப் பவுலைப் பற்றியும் தெரியும், ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது.
16 மேலும் அசுத்த ஆவி பிடித்த மனிதன், இந்த யூதர்கள் மீது தாவினான். அவர்கள் எல்லோரைக் காட்டிலும் அவன் மிகுந்த பலம் பொருந்தியவனாக இருந்தான். அவன் அவர்களை அடித்து, அவர்களின் ஆடைகளைக் கிழித்துப்போட்டான். அந்த வீட்டிலிருந்து இந்த யூதர்கள் நிர்வாணமாக ஓடிப் போனார்கள்.
17 எபேசுவின் எல்லா ஜனங்களும், யூதரும் கிரேக்கரும் இதனை அறிந்தனர். தேவனிடம் மிகுந்த மரியாதை கொள்ளத் துவங்கினர். கர்த்தராகிய இயேசுவின் பெயரை மக்கள் அதிகமாக மகிமைப்படுத்த ஆரம்பித்தனர்.
18 விசுவாசிகளில் பலர் தாங்கள் செய்த பாவச் செயல்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் துவங்கினார்கள். 19 சில விசுவாசிகள் மந்திரத்தைப் பயன்படுத்தினவர்களாயிருந்தனர். அவர்கள் தங்கள் மந்திர நூல்களைக் கொண்டு வந்து, அவற்றை எல்லோருக்கும் முன்பாக எரித்தனர். அப்புத்தகங்கள் சுமார் ஐம்பதாயிரம் வெள்ளிக் காசுகள் மதிப்புடையனவாக இருந்தன. 20 இவ்வாறே கர்த்தரின் வார்த்தை மிக்க வல்லமை வாய்ந்த வகையில் அதிகமான மக்களைப் பாதிக்க ஆரம்பித்தது. மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் விசுவாசம் வைத்தனர்.
2008 by World Bible Translation Center