Old/New Testament
எலிகூ விவாதத்தில் பங்குக்கொள்கிறான்
32 அப்போது யோபுவின் நண்பர்கள் மூவரும் யோபுவுக்குப் பதில் கூற முயல்வதை விட்டுவிட்டார்கள். தான் உண்மையாகவே களங்கமற்றவன் என யோபு உறுதியாக இருந்ததால், அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டார்கள். 2 ஆனால், அங்கு எலிகூ என்னும் பெயருள்ள ஒரு இளைஞன் இருந்தான். அவன் பரகெயேலின் மகன். அவன் பூசு என்னும் பெயருள்ள ஒரு மனிதனின் சந்ததியில் வந்தவன். எலிகூ ராம் குடும்பத்தினன். எலிகூ யோபுவிடம் மிகுந்தக் கோபமடைந்தான். ஏனெனில், யோபு தானே சரியாக நடந்துக் கொண்டான் எனச் சொல்லிக் கொண்டிருந்தான். தேவனைக் காட்டிலும் தானே நியாயமானவன் என்று யோபு சொல்லிக் கொண்டிருந்தான். 3 யோபுவின் நண்பர்கள் மூவரிடமும் எலிகூ கோபங்கொண்டான். ஏனெனில், யோபுவின் கேள்விகளுக்கு அம்மூவரும் பதில் கூற முடியவில்லை. யோபு தவறு செய்தானென அவர்களால் நிறுவமுடியவில்லை. 4 எலிகூ அங்கிருந்தவர்களில் வயதில் இளையவனாயிருந்தான். அதனால், பிறர் ஒவ்வொருவரும் பேசி முடிக்கும்வரை காத்திருந்தான். அப்போது அவன் பேசத் தொடங்கலாம் என உணர்ந்தான். 5 யோபுவின் மூன்று நண்பர்களும் சொல்வதற்கு இனி ஏதும் இல்லை என அப்போது எலிகூ கண்டான். அதனால் அவன் கோபமடைந்தான். 6 எனவே, அவன் பேசத்தொடங்கினான். அவன்:
“நான் இளைஞன், நீங்கள் முதியவர்கள்.
ஆகவேதான் நான் நினைப்பதை உங்களுக்குச் சொல்ல அஞ்சினேன்.
7 நான் எனக்குள், ‘முதியோர் முதலில் பேச வேண்டும்.
முதியோர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.
எனவே அவர்கள் பல காரியங்களைக் கற்றிருக்கிறார்கள்’ என்று சிந்தித்தேன்.
8 ஆனால் தேவனுடைய ஆவி ஒருவனை ஞான முள்ளவனாக்குகிறது.
சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மூச்சு ஜனங்களைப் புரிய வைக்கிறது.
9 முதியோர் மட்டுமே ஞானவான்கள் அல்லர்.
சரியானதைப் புரிந்துகொள்வோர் முதியோர் மட்டுமல்லர்.
10 “எனவே தயவுசெய்து எனக்குச் செவி கொடுங்கள்!
நான் நினைப்பதை உங்களுக்குச் சொல்வேன்.
11 நீங்கள் பேசும்போது நான் பொறுமையாகக் காத்திருந்தேன்.
யோபுவுக்கு நீங்கள் கூறிய பதில்களைக் கேட்டேன்.
12 நீங்கள் கூறியவற்றை நான் கவனமாகக் கேட்டேன்.
உங்களில் ஒருவரும் யோபுவை குற்றம் கூறவில்லை.
அவனுடைய விவாதத்திற்கு உங்களில் ஒருவரும் பதில் கூறவில்லை.
13 நீங்கள் மூவரும் ஞானத்தைத் கண்டடைந்ததாகக் கூறமுடியாது.
மனிதரல்ல, தேவன் யோபுவின் விவாதங்களுக்குப் பதில் கூறவேண்டும்.
14 யோபு அவனது விவாதங்களை என்னிடம் முன் வைக்கவில்லை.
எனவே நீங்கள் மூவரும் பயன்படுத்திய விவாதங்களை நான் பயன்படுத்தமாட்டேன்.
15 “யோபுவே, இம்மனிதர்கள் தங்கள் விவாதத்தில் தோற்றார்கள்.
அவர்கள் மேலும் கூற எதுவுமில்லை.
அவர்களிடம் வேறு பதில்கள் இல்லை.
16 யோபுவே, இம்மனிதர்கள் உமக்குப் பதில் கூறும்படி நான் காத்திருந்தேன்.
ஆனால் இப்போது அவர்கள் அமைதியாயிருக்கிறார்கள்.
அவர்கள் உம்மோடு விவாதிப்பதை நிறுத்தியிருக்கிறார்கள்.
17 எனவே இப்போது என் பதிலை நான் உமக்குச் சொல்வேன்.
ஆம், நான் நினைப்பதை உமக்குக் கூறுவேன்.
18 நான் சொல்வதற்கு நிரம்ப இருக்கிறது.
நான் அவற்றைக் கொட்டிவிடப் போகிறேன்.
19 திறக்கப்படாத புது திராட்சைரசம் நிரம்பிய புட்டியைப் போலிருக்கிறேன்.
உடைத்துத் திறப்பதற்கு தயாராயிருக்கிற புது திராட்சைரசம் உடைய தோல்பையை போலிருக்கிறேன்.
20 எனவே நான் பேசவேண்டும், அப்போது நான் நலமடைவேன்.
நான் பேசவேண்டும், நான் யோபுவின் விவாதத்திற்குப் பதில் கூறவேண்டும்.
21 பிறரை நடத்துவதைப்போல், நான் யோபுவையும் நடத்தவேண்டும்.
அவனிடம் நல்லவற்றைச் சொல்ல நான் முயலமாட்டேன்.
நான் சொல்ல வேண்டியதைச் சொல்வேன்.
22 நான் ஒருவனை மற்றொருவனைக் காட்டிலும் சிறப்பாக நடத்தமுடியாது.
நான் அவ்வாறு செய்தால், அப்போது தேவன் என்னைத் தண்டிப்பார்!
33 “இப்போது, யோபுவே, என்னைக் கவனித்துக் கேளும்:
நான் சொல்கிறவற்றிற்குச் செவிகொடும்.
2 நான் பேச தயாராயிருக்கிறேன்.
3 என் இருதயம் நேர்மையானது, எனவே நேர்மையான வார்த்தைகளைப் பேசுவேன்.
எனக்குத் தெரிந்தவற்றைக் குறித்து நான் உண்மையாக பேசுவேன்.
4 தேவனுடைய ஆவி என்னை உண்டாக்கிற்று.
என் உயிர் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து வந்தது.
5 யோபுவே, நான் சொல்வதைக் கேளும், முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்.
உனது பதிலைத் தயாராக வைத்திரும், அப்போது நீ என்னோடு விவாதிக்க முடியும்.
6 தேவனுக்கு முன்பாக நீயும் நானும் சமமானவர்களே.
தேவன் மண்ணைப் பயன்படுத்தி நம்மிருவரையும் உண்டாக்கினார்.
7 யோபுவே, எனக்கு அஞ்சாமல் இரும்.
நான் உன்னிடம் கடினமாயிருக்கமாட்டேன்.
8 “ஆனால் யோபுவே, நீ சொன்னதை நான் கேட்டேன்.
9 நீ, ‘நான் பரிசுத்தமானவன் நான் களங்கமற்றவன்.
நான் தவறேதும் செய்யவில்லை.
நான் குற்றமற்றவன்.
10 நான் தவறேதும் செய்யவில்லை.
ஆனால் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார்.
தேவன் என்னை ஒரு பகைவனைப்போல் நடத்தினார்.
11 தேவன் என் கால்களில் விலங்கிட்டார்.
நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் கண்ணோக்குகிறார்’ என்று சொன்னாய்.
12 “ஆனால் யோபுவே, நீ இவ்விஷயத்தில் தவறியிருக்கிறாய்.
நீ தவறு செய்கிறாய் என்பதை நான் நிரூபிப்பேன்.
ஏனெனில் தேவன் எல்லா மனிதர்களையும்விட அதிகமாக அறிந்திருக்கிறார்.
13 யோபுவே, நீ தேவனோடு விவாதிக்கிறாய்.
தேவன் எல்லாவற்றையும் உனக்கு விளக்கவேண்டுமென நீ நினைக்கிறாய்.
14 தேவன் தாம் செய்கிற எல்லாவற்றையும் விளக்கலாம்.
வெவ்வேறு வகைகளில் தேவன் பேசலாம், ஆனால் ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
15-16 தேவன் கனவில் ஜனங்களோடு பேசலாம், அல்லது இரவில் அவர்கள் ஆழ்ந்த நித்திரைக் கொள்ளும்போது தரிசனம் தந்து பேசலாம்,
அவர்கள் தேவனுடைய எச்சரிக்கையைக் கேட்கும்போது மிகவும் அச்சம்கொள்ளலாம்.
17 ஜனங்கள் தவறு செய்வதை நிறுத்தவும்
பெருமைகொள்வதை விடவும் தேவன் எச்சரிக்கை செய்கிறார்.
18 மரணத்தின் இடத்திற்குப் போகாதபடி அவர்களைக் காப்பதற்காக தேவன் ஜனங்களை எச்சரிக்கிறார்.
ஒருவன் அழியாதபடி காப்பதற்கு தேவன் அவ்வாறு செய்கிறார்.
19 “அல்லது ஒருவன் படுக்கையில் கிடந்து தேவனுடைய தண்டனையை அனுபவிக்கும்போது ஒருவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்கக்கூடும்.
வேதனையால் அம்மனிதனை தேவன் எச்சரிக்கிறார்.
எலும்பெல்லாம் நொறுங்கும்படி அம்மனிதன் நோவை அனுபவிக்கிறான்.
20 அப்போது அம்மனிதன் உண்ணமுடியாது.
மிகச் சிறந்த உணவையும் வெறுக்கும்படி அவன் மிகுந்த நோவை அனுபவிக்கிறான்.
21 அவன் மிகவும் மெலிந்து எலும்புகள் வெளித் தோன்றும்வரை
அவன் உடம்பு மெலிந்து போகும்.
22 அம்மனிதன் மரணத்தின் இடத்திற்கு அருகே இருக்கிறான்.
அவன் வாழ்க்கை மரணத்திற்கு அருகாமையில் உள்ளது.
23 தேவனிடம் ஆயிரக்கணக்காக தூதர்கள் இருப்பார்கள்.
அத்தூதர்களுள் ஒருவன் அம்மனிதனைக் கண்ணோக்கிக் கொண்டிருக்கலாம். அந்த தூதன் அம்மனிதனுக்காகப் பரிந்துபேசி அவன் செய்த நற்செயல்களை எடுத்துரைக்கலாம்.
24 அந்த தூதன் அம்மனிதனிடம் இரக்கம் காட்டலாம்.
அத்தூதன் தேவனிடம், ‘மரணத்தின் இடத்திலிருந்து அம்மனிதனைக் காப்பாற்றும்.
அவன் பாவத்திற்குப் பரிகாரமாக நான் ஒரு வழியைக் கண்டு பிடித்திருக்கிறேன்’ எனலாம்.
25 அப்போது அம்மனிதனின் உடல் மீண்டும் இளமையும், வலிமையும் பெறும்.
அவன் இளமையிலிருந்தாற்போன்று இருப்பான்.
26 தேவனிடம் ஜெபிப்பான், தேவன் அவனுடைய ஜெபத்திற்குப் பதில் தருவார்.
அம்மனிதன் களிப்பால் ஆரவாரித்து, தேவனைத் தொழுதுகொள்வான்.
அப்போது அம்மனிதன் மீண்டும் நல்வாழ்க்கை வாழ்வான்.
27 அப்போது அம்மனிதன் ஜனங்களிடம் அறிக்கையிடுவான்.
அவன், ‘நான் பாவம் செய்தேன்.
நான் நல்லதைக் கெட்டதாக்கினேன்.
ஆனால் தேவன் என்னைத் தண்டிக்க வேண்டிய அளவு தண்டிக்கவில்லை.
28 மரணத்தின் இடத்திற்குப் போகாதபடி, தேவன் என் ஆத்துமாவைக் காப்பாற்றினார்.
இப்போது மீண்டும் என் வாழ்க்கையை நான் அனுபவிக்க முடியும்’ என்பான்.
29 “அம்மனிதனுக்காக மீண்டும், மீண்டும் தேவன் எல்லாவற்றையும் செய்கிறார்.
30 ஏனென்றால், அம்மனிதனை எச்சரித்து, அவனது ஆத்துமாவை மரணத்தின் இடத்திலிருந்து காப்பதால்
அம்மனிதன் வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதற்காக இதைச் செய்கிறார்.
31 “யோபுவே, என்னை கவனியும்.
நான் கூறுவதைக் கேளும்.
அமைதியாக இரும், என்னை பேசவிடும்.
32 ஆனால் யோபுவே, நீர் என்னோடு கருத்து வேறுபாடு கொள்ளவிரும்பினால், அப்போது நீர் பேசத் தொடங்கும்.
உமது விவாதத்தைக் கூறும், ஏனெனில், நான் உம்மைத் திருத்த விரும்புகிறேன்.
33 ஆனால் யோபுவே, நீர் கூற எதுவுமில்லையெனில், நான் சொல்வதைக் கேளும்.
அமைதியாக இரும், உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான்.
இக்கோனியத்தில் ஊழியம்
14 பவுலும் பர்னபாவும் இக்கோனியம் நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். (இதைத் தான் அவர்கள் ஒவ்வொரு நகரத்திலும் செய்தனர்) அவர்கள் அங்குள்ள மக்களிடம் பேசினர். பவுலும் பர்னபாவும் பேசின விதத்தில் பல யூதர்களும், கிரேக்கர்களும் அவர்கள் கூறியதை முழுமையாக நம்பினர். 2 ஆனால் மனந்திரும்பாத யூதர்கள், யூதரல்லாத சகோதரரைக் குறித்துத் தீமையானவற்றை எண்ணும்படியாகச் செய்தனர்.
3 எனவே பவுலும் பர்னபாவும் இக்கோனியத்தில் நீண்ட காலம் தங்கினர். கர்த்தருக்காகத் துணிவோடு பேசினர். தேவனுடைய கிருபையைக் குறித்து பவுலும், பர்னபாவும் பேசினர். அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதற்கு அப்போஸ்தலர்களுக்கு உதவி செய்து அவர்கள் கூறியதை உண்மையென்று தேவன் நிரூபித்தார். 4 ஆனால் நகர மக்களில் சிலர் யூதர்கள் கூறியதை ஒப்புக்கொண்டனர். நகரத்தின் மற்ற மக்களோ பவுலையும் பர்னபாவையும் நம்பினர். எனவே நகரம் பிரிவுபட்டது.
5 சில யூதரல்லாத மக்களும், சில யூதர்களும் அவர்களின் யூத அதிகாரிகளும் பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்த முயன்றனர். இந்த மக்கள் அவர்களைக் கற்களால் எறிந்துகொல்ல எண்ணினர். 6 பவுலும் பர்னபாவும் இதை அறிந்தபோது, நகரிலிருந்து சென்றனர். அவர்கள் லிஸ்தீராவுக்கும், தெர்பைக்கும் லிக்கோனியாவின் நகரங்களுக்கும், அந்த நகரங்களைச் சூழ்ந்த கிராமப்புறப் பகுதிகளுக்கும் சென்றனர். 7 அவர்கள் அங்கும் கூட நற்செய்தியைக் கூறினர்.
லிஸ்திரா, தெர்பை நகர ஊழியம்
8 பாதங்களில் ஊனமுற்ற மனிதன் ஒருவன் லிஸ்தீராவில் இருந்தான். அவன் பிறவியிலேயே ஊனமுற்றவன். 9 அவன் அங்கு உட்கார்ந்துகொண்டு பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். பவுல் அவனைப் பார்த்தான். தேவன் அவனைக் குணப்படுத்த முடியும் என்பதை அம்மனிதன் நம்பியதைப் பவுல் கண்டான். 10 எனவே பவுல் உரக்க, “எழுந்து உன் கால்களால் நில்” என்றான். அம்மனிதன் குதித்தெழுந்து சுற்றிலும் நடக்க ஆரம்பித்தான்.
11 பவுல் செய்ததை மக்கள் கூட்டத்தினர் கண்டபோது, அவர்கள் லிக்கோனிய மொழியில் சத்தமிட்டனர். அவர்கள், “தேவர்கள் மனிதரைப்போன்று மாறியுள்ளனர்! அவர்கள் நம்மிடம் இறங்கி வந்துள்ளனர்!” என்றனர். 12 மக்கள் பர்னபாவை “சீயெஸ்” என அழைக்கத் தொடங்கினர். பவுல் முக்கிய பேச்சாளராக இருந்ததால், அவர்கள் பவுலை “ஹெர்ம்ஸ்” என்றழைத்தனர். 13 சீயஸின் தேவாலயம் நகரத்தினருகில் இருந்தது. தேவாலயத்தின் பூசாரி சில காளைகளையும் மாலைகளையும் நகரக் கதவுகளுக்கருகே கொண்டுவந்தான். பவுலையும் பர்னபாவையும் வழிபடுவதற்கு பூசாரிகளும் மக்களும் பலி செலுத்த விரும்பினர்.
14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் மக்கள் செய்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்டதும் அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்தனர். [a] பின் அவர்கள் கூட்டத்தினர் மத்தியில் ஓடி, அவர்களிடம் உரத்த குரலில், 15 “மனிதரே ஏன் இவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் தேவர்கள் அல்ல. உங்களைப்போன்ற மனிதர்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் உங்களைப்போலவே உண்டு. உங்களுக்கு நற்செய்தியைச் சொல்ல நாங்கள் வந்தோம். பயனற்ற இந்தக் காரியங்களை விட்டுவிலகும்படியாக நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையான ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்புங்கள். அவரே வானம், பூமி, கடல், அவற்றிலுள்ள பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர்.
16 “முன்பு எல்லா தேசங்களும் அவை விரும்பியவற்றைச் செய்வதற்கு தேவன் அனுமதித்தார். 17 ஆனால் அதே சமயம் தேவன் உண்மையானவர் என்பதை நிறுவும் காரியங்களையே தேவன் செய்தார். அவர் உங்களுக்கு நல்லவற்றையே செய்கிறார். அவர் வானிலிருந்து உங்களுக்கு மழையைத் தருகிறார். அவர் தக்க காலங்களில் உங்களுக்கு நல்ல அறுவடையைக் கொடுக்கிறார். அவர் மிகுதியான உணவை உங்களுக்குத் தருகிறார். அவர் உங்கள் இருதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறார்” என்றனர்.
18 பவுலும் பர்னபாவும் மக்களுக்கு இவற்றைக் கூறினர். ஆனாலும் அவர்களை வழிபடுவதற்காக அவர்கள் இட்ட பலியை அநேகமாக பவுலும் பர்னபாவும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
19 பின் அந்தியோகியாவிலிருந்தும், இக்கோனியத்திலிருந்தும் சில யூதர்கள் வந்தனர். அவர்கள் பவுலை எதிர்க்கும்படியாக மக்களை ஏவினர். எனவே மக்கள் பவுலின்மீது கற்களை வீசி, அவன் இறந்துவிட்டானென்று நினைத்து அவனை ஊருக்குப் புறம்பே இழுத்து வந்தனர். 20 இயேசுவின் சீஷர்கள் பவுலைச் சுற்றிலும் கூடினர். பின் அவன் எழுந்து ஊருக்குள் மீண்டும் சென்றான். மறுநாள் அவனும் பர்னபாவும் புறப்பட்டு தெர்பை நகரத்துக்குச் சென்றனர்.
அந்தியோகியாவுக்குத் திரும்புதல்
21 பவுலும் பர்னபாவும் தெர்பை நகரத்திலும் நற்செய்தியைக் கூறினர். பல மக்கள் இயேசுவின் சீஷராயினர். லிஸ்திரா, இக்கோனியம், அந்தியோகியா நகரங்களுக்குப் பவுலும் பர்னபாவும் திரும்பினர். 22 அந்நகரங்களில் இயேசுவின் சீஷர்களை பவுலும் பர்னபாவும் வலிமைமிக்கவர்களாக ஆக்கினர். நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு அவர்கள் உதவினர். பவுலும் பர்னபாவும், “தேவனுடைய இராஜ்யத்துக்குள் செல்லும் நம் பாதையில் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்” என்றனர். 23 பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்களை அமர்த்தினார்கள். அவர்கள் உபவாசமிருந்து அம்மூப்பர்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர். அம்மூப்பர்கள் கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைத்த மனிதராயிருந்தார்கள். எனவே பவுலும் பர்னபாவும் கர்த்தரின் பாதுகாப்பில் அவர்களை விட்டனர்.
24 பவுலும் பர்னபாவும் பிசிதியா நாட்டின் வழியாகச் சென்றனர். பின் அவர்கள் பம்பிலியா நாட்டிற்கு வந்தனர். 25 அவர்கள் பெர்காவில் தேவனுடைய செய்தியைக் கூறினார்கள். பின் அவர்கள் அத்தாலியா நகரத்திற்குச் சென்றனர்.
26 அங்கிருந்து பவுலும் பர்னபாவும் சிரியாவிலுள்ள அந்தியோகியாவிற்குக் கடல் வழியாகப் பயணமாயினர். இந்நகரில்தான் விசுவாசிகள் அவர்களை தேவனுடைய கண்காணிப்பில் ஆட்படுத்தி இவ்வேலை செய்ய அனுப்பியிருந்தனர். இப்போது அவர்கள் தங்கள் வேலையை முடித்திருந்தனர்.
27 பவுலும் பர்னபாவும் வந்துசேர்ந்தபோது அவர்கள் சபையைக் கூட்டினர். தேவன் அவர்களோடு செய்த எல்லாக் காரியங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் அவர்களுக்குக் கூறினர். அவர்கள், “வேறு தேசங்களின் மக்களும் நம்பும்படிக்கு தேவன் ஒரு வாசலைத் திறந்தார்” என்றார்கள். 28 கிறிஸ்துவின் சீஷர்களோடு பவுலும் பர்னபாவும் நீண்டகாலம் அங்கேயே தங்கினர்.
2008 by World Bible Translation Center