Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோபு 30-31

30 “ஆனால் இப்போது, என்னைக் காட்டிலும்
இளைஞர்கள் கூட என்னைக் கேலிச்செய்கிறார்கள்.
    அவர்களின் தந்தைகளை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவும் வெட்கப் பட்டிருப்பேன்.
அந்த இளைஞர்களின் தந்தைகள் எனக்கு உதவ முடியாதபடிச் சோர்ந்திருக்கிறார்கள்.
    அவர்கள் வயது முதிர்ந்தவர்கள், அவர்களின் களைத்துப்போன தசைநார்கள் வலிமையும் ஆற்றலுமற்றுக் காணப்படுகின்றன.
அவர்கள் மரித்தவர்களைப் போலிருக்கிறார்கள், அவர்கள் உண்பதற்கு எதுவுமில்லாமல் பட்டினியாயிருக்கிறார்கள்.
    எனவே அவர்கள் பாலைவனத்தின் உலர்ந்த அழுக்கை உண்கிறார்கள்.
அவர்கள் பாலைவனத்திலுள்ள உப்புத் தாவரங்களைப் பறித்தெடுக்கிறார்கள்.
    மரத்தின் வேர்களை அவர்கள் தின்றார்கள்.
அவர்கள் பிற ஜனங்களிடமிருந்து துரத்தப்பட்டார்கள்.
    அவர்கள் கள்ளர் என ஜனங்கள் அவர்களை உரத்தக் குரலில் சத்தமிட்டார்கள்.
அவர்கள் உலர்ந்த ஆற்றுப் படுகைகளிலும்,
    மலைப்பக்கத்துக் குகைளிலும் நிலத்தின் துவாரங்களிலும் வாழவேண்டும்.
அவர்கள் புதர்களில் ஊளையிடுகிறார்கள்.
    முட்புதர்களின் கீழே அவர்கள் ஒதுங்கியிருக்கிறார்கள்.
தங்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட, பெயரற்ற,
    தகுதியில்லாத ஒரு கூட்டம் ஜனங்கள் அவர்கள்!

“இப்போது அந்த மனிதர்களின் மகன்கள் என்னைக் கேலிச் செய்யும் பாடல்களை பாடுகிறார்கள்.
    என் பெயர் அவர்களுக்கு ஒரு கெட்ட வார்த்தை ஆயிற்று.
10 அந்த இளைஞர்கள் என்னை வெறுக்கிறார்கள், அவர்கள் என்னிலிருந்து தூரத்தில் போய் நிற்கிறார்கள்.
    அவர்கள் என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள் என நினைக்கிறார்கள்.
    அவர்கள் என் முகத்தில் உமிழவும் செய்கிறார்கள்!
11 தேவன் என் வில்லின் நாணை அறுத்துப் போட்டு என்னைத் தளர்ச்சியடையச் செய்தார்.
    அந்த இளைஞர்கள் நிறுத்தாது, எனக்கெதிராகத் தங்கள் கோபத்தையெல்லாம் காட்டினார்கள்.
12 அவர்கள் என் வலது பக்கத்தில் தாக்குகிறார்கள்.
    அவர்கள் என் பாதங்களை அகல தள்ளிவிட்டார்கள்.
நான் தாக்கப்படும் நகரத்தைப்போல் இருக்கிறேன்.
    என்னைத் தாக்கி அழிப்பதற்கு அவர்கள் என் சுவர்களுக்கெதிராக அழுக்குகளைக் கட்டுகிறார்கள்.
13 அவர்கள் என் பாதையை கெடுத்தார்கள்.
    அவர்கள் என்னை அழிப்பதில் வெற்றியடைகிறார்கள்.
    அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் தேவையில்லை.
14 அவர்கள் சுவரில் துளையிடுகிறார்கள்.
    அவர்கள் அதன் வழியாக விரைந்து வருகிறார்கள்.
    உடையும் கற்கள் என்மீது விழுகின்றன.
15 நான் பயத்தால் நடுங்குகிறேன்.
    காற்று பொருள்களைப் பறக்கடிப்பதைப்போல அந்த இளைஞர்கள் என் மகிமையைத் துரத்திவிடுகிறார்கள்.
    என் பாதுகாப்பு ஒரு மேகத்தைப்போன்று மறைகிறது.

16 “இப்போது என் உயிர் நீங்கும் நிலையில் உள்ளது.
    நான் விரைவில் மடிவேன்.
    துன்பத்தின் நாட்கள் என்னைப் பற்றிக்கொண்டன.
17 என் எலும்புகள் எல்லாம் இரவில் வலிக்கின்றன.
    என்னைக் கடித்துக்குதறும் வேதனை நிற்கவேயில்லை.
18 தேவன் என் மேற்சட்டையின் கழுத்துப் பட்டையைப் பற்றியிழுத்து
    என் ஆடைகளை உருவின்றி சிதைத்தார்.
19 தேவன் என்னைச் சேற்றினுள் தள்ளினார்.
    நான் அழுக்கைப் போன்றும் சாம்பலைப் போன்றும் ஆனேன்.

20 “தேவனே, உம்மிடம் உதவிக்காக வேண்டுகிறேன், ஆனால் நீர் பதிலளிப்பதில்லை.
    நான் எழுந்து நின்று ஜெபம் செய்கிறேன், ஆனால் நீர் என்னிடம் பாராமுகமாயிருக்கிறீர்.
21 தேவனே, நீர் என்னிடம் கொடுமையாக நடந்தீர்.
    என்னைத் தாக்குவதற்கு நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தினீர்.
22 தேவனே, பலத்த காற்று என்னைப் பறக்கடிக்குமாறு செய்தீர்.
    புயலில் நீர் என்னை வெளியே வீசினீர்.
23 நீர் என்னை மரணத்திற்கு வழி நடத்துவீர் என அறிவேன்.
    ஒவ்வொரு மனிதனும் மடிய (மரிக்க) வேண்டும்.

24 “ஆனால், ஏற்கெனவே அழிந்தவனை
    மீண்டும் நிச்சயமாய் ஒருவனும் தாக்கமாட்டான்.
25 தேவனே, தொல்லைகளுள்ள ஜனங்களுக்காக நான் அழுதேன் என்பதை நீர் அறிவீர்.
    ஏழைகளுக்காக என் இருதயம் துயருற்றது என்பதை நீர் அறிவீர்.
26 நான் நல்லவற்றை எதிர்பார்த்தபோது, தீயவை நேர்ந்தன.
    நான் ஒளியைத் தேடியபோது, இருள் வந்தது.
27 நான் உள்ளே கிழிந்துபோனேன், என் துன்பம் நிற்கவில்லை.
    இன்னும் வரப்போகும் துன்பங்கள் மிகுதி.
28 நான் எப்போதும் துக்கமாயிருக்கிறேன், அதனால் நான் எந்த ஆறுதலும் பெறவில்லை.
    நான் சபையில் எழுந்து நின்று, உதவிக்காகக் கூக்குரலிட்டேன்.
29 நான் காட்டு நாய்களைப்போலவும்
    நெருப்புக் கோழிகளைபோலவும் தனித்தவனானேன்.
30 என் தோல் நெருப்பினால் எரிந்து உரிந்து கழன்றுபோகிறது.
    என் உடல் காய்ச்சலால் சுடுகிறது.
31 துக்கமான பாடல்களைப் பாட என் தம்புரு மீட்டப்பட்டுள்ளது.
    துக்கமான அழுகையைப் போன்று என் புல்லாங்குழலின் குரல் ஒலிக்கிறது.

31 “என்னைக் கவர்கின்ற ஒரு கன்னிப் பெண்ணைப் பாராதிருக்கும்படி
    என் கண்களோடு நான் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டேன்.
சர்வ வல்லமையுள்ள தேவன் ஜனங்களுக்கு என்ன செய்கிறார்?
    உயரத்திலுள்ள பரலோகத்தின் வீட்டிலிருந்து எவ்வாறு தேவன் ஜனங்களுக்குத் திரும்பக் கொடுக்கிறார்?
தேவன் தொல்லையையும் அழிவையும் கெட்ட ஜனங்களுக்கு அனுப்புகிறார்.
    தவறு செய்வோர்க்கு அழிவை அனுப்புகிறார்.
நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் அறிகிறார்.
    நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் தேவன் காண்கிறார்.

“நான் பொய்களாலான வாழ்க்கை வாழ்ந்திருந்தால்
    அல்லது நான் பொய் சொல்லவும் ஜனங்களை ஏமாற்றவும் ஓடியிருந்தால்,
அப்போது, தேவன் என்னைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குத் தக்க அளவு கோலைப் பயன்படுத்தட்டும்.
    அப்போது நான் களங்கமற்றவன் என்பதை தேவன் அறிவார்!
நான் சரியான பாதைக்குப் புறம்பே நடந்தால்,
    என் கண்கள் என் இருதயத்தை தீமைக்கு நேரே நடத்தினால்,
    என் கைகளில் பாவத்தின் அழுக்குப் படிந்திருந்தால், அப்போது தேவன் அறிவார்,
அப்போது நான் நட்ட பயிர்களைப் பிறர் உண்ணட்டும்,
    என் பயிர்கள் பிடுங்கப்படட்டும்.

“நான் பெண்களிடம் காம இச்சை (மோகம்) கொண்டிருந்தால்.
    அயலானின் மனைவியோடு தகாத நெறியில் நடக்கும்படி அவன் கதவருகே காத்திருந்தால்.
10 அப்போது, எனது மனைவி மற்றொருவனின் உணவைச் சமைக்கட்டும்,
    பிற மனிதன் அவளோடு படுத்திருக்கட்டும்.
11 ஏனெனில் உடலுறவால் விளையும் பாவம் அவமானத்திற்குரியது.
    அது தண்டனை பெறக்கூடியக் பாவமாகும்.
12 பாலின உறவு சம்மந்தமான பாவம் அனைத்தையும் அழிக்கும்வரை எரியும் நெருப்பைப் போன்றது.
    நான் இதுவரைச் செய்த அனைத்தையும், எனது உடமைகள் யாவற்றையும் அது அழித்துவிடும்!

13 “என் அடிமைகளுக்கு என்னிடம் ஏதோ குறைபாடு ஏற்பட்டபோது
    அவர்களிடம் நியாயமாயிருக்க நான் மறுத்திருந்தால்,
14 நான் தேவனைச் சந்திக்கும்போது என்ன செய்வேன்?
    நான் செய்ததைக் குறித்து தேவன் விளக்கம் கேட்டால் நான் என்ன சொல்வேன்?
15 என் தாயின் கர்ப்பத்தில் தேவன் என்னை உண்டாக்கினார், தேவன் என் அடிமைகளையும் உண்டாக்கினார்,
    நம்முடைய தாயின் கருவில் தேவன் நமக்கு உருவம் கொடுத்தார்.

16 “நான் ஏழைகளுக்கு உதவ ஒருபோதும் மறுத்ததில்லை.
    விதவைகளுக்குத் தேவையானவற்றை நான் எப்போதும் கொடுத்தேன்.
17 நான் உணவைப் பொறுத்தமட்டில் சுய நலம் பாராட்டியதில்லை.
    நான் எப்போதும் அநாதைகளுக்கு உணவளித்தேன்.
18 தந்தையற்ற பிள்ளைகளுக்கு என் வாழ்க்கை முழுவதும், நான் ஒரு தந்தையைப் போன்றிருந்தேன்.
    என் வாழ்க்கை முழுவதும், நான் விதவைகளை ஆதரித்து வந்திருக்கிறேன்.
19 ஆடையில்லாததால் ஜனங்கள் துன்புறுவதைக் கண்டபோதும்,
    மேற்சட்டையில்லாத ஏழையைக் கண்டபோதும்,
20 நான் அவர்களுக்கு எப்போதும் ஆடைகளைக் கொடுத்தேன்.
    என் ஆடுகளின் மயிரைப் பயன்படுத்தி, அவர்கள் குளிர் நீங்கச் செய்தேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடு என்னை ஆசீர்வதித்தார்கள்.
21 வாயிலில் ஒரு அநாதை வந்து உதவி வேண்டி நிற்கும்போது
    நான் என் கைமுட்டியை ஒருபோதும் ஆட்டியதில்லை. [a]
22 நான் எப்போதேனும் அப்படிச் செய்திருந்தால், அப்போது என் கரம் தோளிலிருந்து விழுந்திருக்கும் என நான் நம்புகிறேன்!
    என் கரம் எலும்புக் குழியிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன்!
23 ஆனால் நான் அத்தகைய தீயகாரியங்கள் எதையும் செய்யவில்லை.
    நான் தேவனுடைய தண்டனைக்கு அஞ்சியிருக்கிறேன்.
    அவரது மகத்துவம் என்னை அச்சுறுத்துகிறது.

24 “நான் என் செல்வங்களில் நம்பிக்கை வைத்ததில்லை.
    எனக்கு உதவுவதற்காக நான் எப்போதும் தேவனையே நம்பியிருந்தேன்.
    தூய பொன்னிடம், ‘நீயே என் நம்பிக்கை’ என்று நான் கூறியதில்லை,
25 நான் செல்வந்தனாக இருந்தேன்.
    ஆனால் அது என்னைப் பெருமைக்காரனாக்கவில்லை!
நான் மிகுதியான பொருளைச் சம்பாதித்தேன்.
    ஆனால், என்னைச் சந்தோஷப்படுத்தியது அதுவல்ல!
26 நான் ஒளிவிடும் சூரியனையோ, அழகிய சந்திரனையோ
    ஒருபோதும் தொழுதுகொண்டதில்லை.
27 சூரியன் அல்லது சந்திரனை தொழுதுகொள்ளுமளவிற்கு
    நான் ஒருபோதும் மூடனாக இருந்ததில்லை.
28 அதுவும் தண்டிக்கப்படவேண்டிய பாவம் ஆகும்.
    நான் அப்பொருள்களை தொழுதுகொண்டிருந்திருப்பேனாகில் சர்வ வல்லமையுள்ள தேவனிடம் உண்மையற்றவனாவேன்.

29 “என் பகைவர்கள் அழிந்தபோது நான் மகிழ்ச்சியடைந்ததில்லை.
    தீயவை என் பகைவர்களுக்கு நேரிட்டபோது, நான் அவர்களைக் கண்டு நகைத்ததில்லை.
30 என் பகைவர்களை சபிப்பதாலோ, அவர்கள் மரிக்க வேண்டும் என விரும்பியோ
    என் வாய் பாவம் செய்ய நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை.
31 நான் அந்நியருக்கு எப்போதும் உணவளித்தேன் என்பதை
    என் வீட்டிலுள்ளோர் எல்லோரும் அறிவார்கள்.
32 அந்நியர்கள் இரவில் தெருக்களில் தூங்காதபடி
    நான் எப்போதும் அவர்களை வீட்டினுள்ளே வரவேற்றேன்.
33 பிறர் தங்கள் பாவங்களை மறைக்க முயல்கிறார்கள்.
    ஆனால் நான் என் குற்றத்தை மறைத்ததில்லை.
34 ஜனங்கள் என்ன சொல்வார்களோ?
    என்று நான் அஞ்சியதில்லை.
அந்த அச்சம் என்னை அமைதியாயிருக்கச் செய்ததில்லை.
    நான் வெளியே போகாமலிருக்க அது தடையாயிருக்கவில்லை.
    என்னை ஜனங்கள் வெறுப்பதற்கு (ஜனங்களின் வெறுப்புக்கு) நான் அஞ்சவில்லை.

35 “ஓ! யாரேனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்!
    நான் எனது நியாயத்தை விளக்கட்டும்.
சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்குப் பதில் தருவார் என விரும்புகிறேன்.
    நான் செய்தவற்றில் தவறென அவர் நினைப்பதை அவர் எழுதி வைக்கட்டும் என்று நான் விரும்புகிறேன்.
36 அப்போது என் கழுத்தைச் சுற்றிலும் அந்த அடையாளத்தை அணிந்துகொள்வேன்.
    ஒரு கிரீடத்தைப்போன்று அதை என் தலைமேல் வைப்பேன்.
37 தேவன் அதைச் செய்தால்.
    நான் செய்த ஒவ்வொன்றையும் விளக்கிக் கூற முடியும்.
    தலை நிமிர்ந்தபடியே ஒரு தலைவனைப்போன்று நான் தேவனிடம் வர முடியும்.

38 “மற்றொருவனிடமிருந்து நான் என் நிலத்தைத் (அபகரிக்கவில்லை) திருடவில்லை.
    நிலத்தை திருடியதாக ஒருவனும் என் மீது குற்றம் சாட்ட முடியாது.
39 நிலத்திலிருந்து நான் பெற்ற உணவிற்காக எப்போதும் உழவர்களுக்கு ஊதியம் கொடுத்துள்ளேன்.
    ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்ற நான் ஒருபோதும் முயன்றதில்லை.
40 நான் அத்தீயக்காரியங்களை எப்போதேனும் செய்திருந்தால்
    அப்போது என் வயல்களில் கோதுமை, பார்லி ஆகியவற்றிற்குப் பதிலாக முள்ளும் களைகளும் முளைக்கட்டும்!” என்றான்.

யோபின் வார்த்தைகள் (சொற்கள்) முடிவடைந்தன.

அப்போஸ்தலர் 13:26-52

26 “எனது சகோதரர்களே! ஆபிரகாமின் குடும்பத்து மக்களே! உண்மையான தேவனை வணங்கும் யூதரல்லாதோரே, கவனியுங்கள்! மீட்பைக் குறித்த செய்தி நமக்காக அனுப்பப்பட்டுள்ளது. 27 எருசலேமில் வாழும் யூதர்களும், யூதத் தலைவர்களும் இயேசுவே மீட்பர் என்பதை உணரவில்லை. இயேசுவைக் குறித்து தீர்க்கதரிசிகள் எழுதிய வார்த்தைகள் ஒவ்வொரு ஓய்வுநாளிலும் யூதர்களுக்கு வாசிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. யூதர்கள் இயேசுவைக் குற்றப்படுத்தினார்கள். அவர்கள் இதைச் செய்தபோது தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் நிறைவேறும்படிச் செய்தார்கள். 28 இயேசு இறப்பதற்கான உண்மையான காரணத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவரைக் கொல்லும்படியாக பிலாத்துவைக் கேட்டார்கள்.

29 “கிறிஸ்துவுக்கு ஏற்படும் என வேதவாக்கியங்கள் கூறிய எல்லா தீமைகளையும் அந்த யூதர்கள் செய்தார்கள். பின் அவர்கள் இயேசுவைச் சிலுவையிலிருந்து இறக்கி, அவரை ஒரு கல்லறையில் வைத்தார்கள். 30 ஆனால் தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார்! 31 அதன் பிறகு, கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு இயேசுவோடு வந்திருந்தவர்கள் அவரைப் பல நாட்கள் கண்டார்கள். இவர்களே, இப்போது எல்லா மக்களுக்கும் அவரது சாட்சிகள்.

32 “தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் உங்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறோம். 33 நாம் அவர்களுடைய மக்கள். இந்த வாக்குறுதி நமக்கு உண்மையாகுமாறு தேவன் செய்தார். இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பியபடியால் தேவன் இதைச் செய்தார். சங்கீதம் இரண்டிலும் நாம் இதைப்பற்றி வாசிக்கிறோம்.

“‘நீர் எனது மகன்,
    இன்று நான் உமது தந்தையாகி இருக்கிறேன்.’ (A)

34 தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். இயேசு மீண்டும் கல்லறைக்கு ஒரு போதும் போகமாட்டார். புழுதியாகமாட்டார். எனவே தேவன் சொன்னார்:

“‘நான் தாவீதுக்குச் செய்த தூய உண்மையான வாக்குறுதிகளை உங்களுக்குக் கொடுப்பேன்.’ (B)

35 ஆனால் இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்:

“‘உங்களது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறையில் மக்கிப்போக அனுமதிக்கமாட்டீர்கள்.’ (C)

36 “தேவனுடைய விருப்பத்தை தாவீது உயிரோடிருக்கும் காலத்தில் நிறைவேற்றினான். பின் அவன் இறந்தான். தாவீது அவனது முன்னோரோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனது சரீரமும் கல்லறையில் மக்கிப் போனது. 37 ஆனால் தேவன் மரணத்திலிருந்து எழுப்பினவரோ கல்லறையில் மக்கிப் போகவில்லை. 38-39 சகோதரரே, நாங்கள் உங்களுக்குக் கூறுவது என்னவென்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர் மூலமாக உங்கள் பாவங்களின் மன்னிப்பை நீங்கள் பெற முடியும். மோசேயின் சட்டம் உங்களை உங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்க முடியவில்லை. ஆனால் இயேசுவில் விசுவாசம் வைத்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் இயேசுவின் மூலமாகத் தனது எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான். 40 சில காரியங்கள் நடக்குமென்று தீர்க்கதரிசிகள் கூறினார்கள். எச்சரிக்கையாயிருங்கள்! இக்காரியங்கள் உங்களுக்கு நேராதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். தீர்க்கதரிசிகள்,

41 “‘ஐயம்கொள்ளும் மக்களே, கவனியுங்கள்.
    நீங்கள் வியப்புறக்கூடும்,
    ஆனால் மரித்து அழிவீர்கள்.
ஏனெனில் உங்கள் காலத்தில் நீங்கள் நம்பாத சிலவற்றை நான் செய்வேன்.
சிலர் உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்’” (D)

என்றனர்.

42 பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தை விட்டுச் செல்லும்பொழுது, அடுத்த ஓய்வு நாளில் மீண்டும் வந்து இவற்றைக் குறித்து இன்னும் பல விஷயங்களை அவர்களுக்குச் சொல்லுமாறு மக்கள் கூறினார்கள். 43 இக்கூட்டத்திற்குப் பின், அந்த இடத்திலிருந்து யூதர்கள் பலர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். யூதர்களோடு யூத மதத்திற்கு மாறிய பலரும் இருந்தார்கள். இவர்களும் உண்மையான தேவனை வணங்கினார்கள். பவுலும் பர்னபாவும் தேவனுடைய கிருபையில் தொடர்ந்து நம்பிக்கை வைக்குமாறு அவர்களை உற்சாகமூட்டினார்கள்.

44 அடுத்த ஓய்வு நாளில் அநேகமாக நகரத்தின் எல்லா மக்களும் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படியாக ஒருமித்துக் கூடினார்கள். 45 யூதர்கள் அந்த எல்லா மக்களையும் அங்கே கண்டார்கள். அது அவர்களுக்கு மிகுந்த பொறாமையை ஏற்படுத்தியது. எனவே, அவர்கள் வெகு தீமையான சில காரியங்களைக் கூறி பவுல் கூறிய வார்த்தைகளுக்கு எதிராக விவாதித்தார்கள். 46 ஆனால் பவுலும் பர்னபாவும் மிகவும் துணிச்சலாகப் பேசினார்கள். அவர்கள், “யூதர்களாகிய உங்களுக்கு முதலில் தேவனுடைய செய்தியை நாங்கள் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள். நீங்கள் உங்களை இழக்கப்பட்டவர்களாக நித்தியமான வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறீர்கள்! எனவே நாங்கள் இப்போது வேறு தேசங்களின் மக்களிடம் செல்வோம்! 47 இதைத் தான் நாங்கள் செய்யும்படியாக ஆண்டவர் எங்களிடம் சொல்லியிருக்கிறார். கர்த்தர் கூறினார்:

“‘இரட்சிப்பின் பாதையை உலகின் எல்லா மக்களுக்கும் நீங்கள்
    காட்டும் பொருட்டு உங்களை வேறு தேசங்களுக்கு ஒளியாக்கினேன்.’” (E)

48 பவுல் இவ்வாறு கூறியதை யூதரல்லாத மக்கள் கேட்டபோது அவர்கள் மகிழ்ச்சிகொண்டனர். அவர்கள் கர்த்தரின் செய்திக்கு மதிப்பளித்தனர். பல மக்கள் செய்தியை நம்பினர். இவர்கள் நித்தியமான வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாவர்.

49 எனவே கர்த்தரின் செய்தி நாடு முழுவதும் சொல்லப்பட்டது. 50 ஆனால் யூதர்கள் சில முக்கியமான பக்தியுள்ள பெண்களையும், நகரத் தலைவர்களையும் சினமடையும்படியாகவும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிராகவும் நகரத்திலிருந்து கிளப்பி விட்டனர். இந்த மக்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிரான செயல்களைச் செய்து அவர்களை ஊரை விட்டு வெளியேறும்படிச் செய்தனர். 51 எனவே பவுலும் பர்னபாவும் தங்கள் பாதங்களிலிருந்து தூசியை உதறினர். பின் அவர்கள் அந்த இடத்தை விட்டு இக்கோனியா நகருக்கு வந்தார்கள். 52 ஆனால் அந்தியோகியாவிலுள்ள இயேசுவின் சீஷர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து பரிசுத்த ஆவியால் நிரம்பினர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center